பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்


‘கர்ப்பிணிக்கு அடிக்கடி ஸ்கேன் செய்வது ஆபத்தானதா?’

“தலைப்பிரசவத்தை எதிர் நோக்கியிருக்கும் மருமகளுக்கு மாதாமாதம் செக்கப் செல்லும்போதெல்லாம் வயிற்றை ஸ்கேன் செய்கிறார் மருத்துவர். ‘அடிக்கடி ஸ்கேன் செய்தால் வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஆகாது, காது கேட்கும் திறன், இதயத்தின் செயல்பாடு உள்ளிட்ட உள்ளுறுப்பு செயல்பாடுகள் பாதிக்கப்படும்’ என்று சிலர் எச்சரிக்கிறார்கள். தெளிவுபடுத்துங்களேன்…”

டாக்டர் டி.கதிரவன், ஸ்கேன் சிறப்பு மருத்துவர், பெரம்பலூர்:

“பொதுவாக, கர்ப்பம் தரித்ததிலிருந்து டெலிவரி வரை நான்கு ஸ்கேன் பரிசோதனைகள் போதுமானது. ஆறாவது வாரத்தில் (ஒன்றரை மாதம்) மேற்கொள்ளப்படும் முதலாவது ஸ்கேன், கருத்தரிப்பை உறுதி செய்யவும், தரித்த கர்ப்பம் கர்ப்பப்பைக்கு உள்ளா, வெளியிலா என்று அறியவும், கருவின் துடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் உதவும்.

இரண்டாவது ஸ்கேன் 11 – 14 வாரங்களுக் கிடையே (மூன்று – மூன்றரை மாதங்கள்) மேற்கொள்ளப் படுகிறது. குரோமோசோம் கோளாறினால் மூளைவளர்ச்சி குன்றி உருவாகும் ‘டவுண் சின்ட்ரோம்’ பாதிப்பு இருப்பின், இந்த ஸ்கேனில் கண்டறியப்படும்.

வாரங்களுக்கிடையே (நாலரை மாதங்கள் – ஆறு மாதங்கள்) செய்யப்படும் மூன்றாவது ஸ்கேனில் தண்டுவடம், இதயக்கோளாறு, தாய்-சேய் இடையேயான சீரான ரத்த ஓட்டம் போன்றவற்றை தெளிவுபடுத்திக் கொள்வார் மருத்துவர்.நான்காவது ஸ்கேன் 36-வது வாரத்தில் (ஒன்பதாவது மாதம்) செய்யப்படுகிறது. குழந்தையின் பொசிஷன், தாய்-சேய் இணைப்புத் திசுவான பிளசான்டாவின் நிலை, பனிக்குட நீரளவு, குழந்தையின் வேறுபட்ட அசைவுகள் இவற்றை ஆராய உதவுவதோடு டெலிவரி தினத்தையும், நார்மலா அல்லது சிசேரியனா என்பதையும் முடிவு செய்யவும் பேருதவியாக இருக்கும்.

கருவுற்ற தாய்க்கு பி.பி., சுகர் போன்ற பிரச்னைகள் இருப்பின், மாதாமாதம் ஸ்கேன் பார்த்தாக வேண்டும் (உங்கள் மருமகள், இந்த வகையில் இருக்கலாம்). ஏனெனில், தாயின் இந்த இரண்டு கோளாறுகள் காரணமாக… பனிக்குடத்தில் நீர் வற்றுவது, சேய் வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். இவற்றைக் கண்காணித்து சரியான மருத்துவத்தை பரிந்துரைக்க மாதம்தோறும் ஸ்கேன் அவசியமாகிறது.

ஸ்கேன் செய்வதால் காது பாதிக்கும், இதயம் பாதிக்கும் என்பதெல்லாம் செவிவழியாக சொல்லப்படுவதே தவிர, எந்த வகையிலும் நிரூபணமானதில்லை. எனினும், ஸ்கேன் பரிசோதனையில் சில கவனக்குறிப்புகளை மனதில் கொள்வது நல்லது. எந்தச் சூழ்நிலையிலும் உங்களது டாக்டரின் பரிந்துரை அன்றி நீங்களாக ஸ்கேன் பரிசோதனைக்கு முயலக்கூடாது. அல்ட்ரா சவுண்ட், சி.டி., எம்.ஆர்.ஐ., நியூக்ளியர் என பலவகையான ஸ்கேன்கள் மருத்துவ பரிசோதனையில் இருந்தாலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மட்டுமே கர்ப்பவதிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அல்ட்ரா சவுண்ட்டிலேயே நுணுக்கமாக மேற்கொள்ளப்படும் ‘டாப்ளர்’ பரிசோதனைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதேபோல, எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் போன்றவை கர்ப்பவதிகள் தவிர்க்க வேண்டியவையாகும்.

கர்ப்பிணி பெண்ணுக்கு… தலைவலி, வலிப்பு, நுரையீரல் மற்றும் இதயத்தில் கோளாறு, வயிற்றில் கல், எலும்பு பிரச்னை என வேறுவிதமான கோளாறுகள் இருந்து, அவற்றுக்காக பலவகைப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி வரலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், கர்ப்பத்தை பாதிக்காத வகையில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளும் பொருட்டு கர்ப்பம் பற்றிய எல்லா தகவல்களையும் மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பிப்பது நல்லது. ஒருவேளை, சம்பந்தப்பட்டவர் உடலில் உலோகத்துண்டுகள் ஏற்கெனவே பொருத்தப் பட்டிருப்பின், அது குறித்தான விவரங்களையும் சொல்லிவிடவேண்டும். கர்ப்பிணி பெண்கள் இந்த விஷயத்தில் படுகவனமாக இருப்பது அவசியம்.”

பிள்ளையைப் பிடித்தாட்டும் ‘பிங்க்’ நிற மோகம்… தப்பிக்க என்ன வழி?’

“எட்டு வயதாகும் என் மகளுக்கு சிறு வயது முதலே பிங்க் நிறம் என்றால் உயிர். தான் உடுத்தும் உடை, விளையாடும் பொருட்கள், சுற்றுப்புறம் என அனைத்தும் பிங்க் நிறத்தில் இருந்தால் அவள் திருப்தியடைந்ததால், நாங்களும் அதை ஊக்குவித்தோம். ஆனால், அவளின் இந்த ஆசை வளர்ந்து இப்போது அவள் ‘பிங்க் மோகம்’ என்ற நிலையில் இருக்கிறாள். உதாரணத்துக்கு, பிங்க் நிற ஆடை அணிந்தவர்களையே நண்பர்களாக தேர்ந்தெடுக்கிறாள். அவள் மட்டுமல்லாது வீட்டிலிருக்கும் அனைவருமே பிங்க் நிறத்தில் உடுத்த வேண்டும் என்பதுடன், சுவர் வண்ணம், வீட்டுப் பொருட்கள் என அனைத்துமே பிங்க்-ஆக இருக்க வேண்டும் என அடம் பிடிக்கிறாள். இந்த பிங்க் மாயையில் இருந்து அவளை எப்படி மீட்பது?

டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:

நம் எல்லோருக்குமே குறிப்பிட்ட எண்ணங்கள், விருப்பங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதும், அது செயலாக பரிணமிக்க முயல்வதும் இயல்புதான். ஆனால், அதுவே நம்முடைய, நம் சமூகத்துக்கான, தொழில் சார்ந்த கடமைகளை சரியாக செய்ய முடியாத வகையில் நம்மை ஆக்கிரமிக்கும்போது, அது ‘எண்ண சுழற்சி’ நோயாகிறது

அடிக்கடி கை கழுவுவது, பார்க்கும்போதெல்லாம் ஜன்னல் கம்பிகளை எண்ணுவது போன்றவை இதற்கு உதாரணங்கள். இப்படி மீண்டும் மீண்டும் தோன்றும் எண்ணங்கள் ஆரம்பத்தில் சந்தோஷத்தை தந்தாலும், நாளடைவில் கசந்துபோய் அதிலிருந்து விடுபட முனைந்தாலும் முடியாது தவிர்ப்பார்கள். அநேகமாக உங்கள் குழந்தையும் இந்த ‘எண்ண சுழற்சி’ நோயின் பிடியில் இருக்கலாம்.

குழந்தையின் சந்தோஷத்துக்காக இதுவரை பிங்க் நிறத்தை ஊக்குவித்தது போதும். இனி, அந்த வலையிலிருந்து அவள் மீள்வதற்கான முயற்சிகளை எடுங்கள். குழந்தையுடன் உடனடியாக ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள். அவர் உரிய கவுன்சிலிங் கொடுப்பார். பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து சிட்டிங்குகள் தேவைப்படும். குழந்தைக்கு மாத்திரைகள் இன்றி பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உதவியோடு, அதன் பிங்க் மோகத்தை படிப்படியாக குறைத்து, குணப்படுத்திவிடலாம். இரண்டு அல்லது மூன்று மாதத்தில் குழந்தை பிங்க் நிறத்தின் பிடியிலிருந்து விடுபட்டுவிடுவாள்.”

டாக்டர் டி.கதிரவன், ஸ்கேன் சிறப்பு மருத்துவர், பெரம்பலூர்:

டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:


நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக