தொகுப்பு

Archive for the ‘பகுதி-08 கிராமத்து கைமணம்’ Category

பகுதி-08 கிராமத்து கைமணம் பூண்டு கஞ்சி, மரவள்ளிக் கிழங்கு கார பணியாரம், உளுந்து களி


நாவுக்கு ருசியா இருந்தா போதும். அது உடம்புக்கு எந்தளவுக்கு நல்லதுங்கறதப் பத்தியெல்லாம் அப்புறம் பார்த்துக் கலாம்கிறது உணவு விஷயத்துல நகரத்துவாசிகளோட எண்ணம். அங்கதான் வித்தியாசப்படுது கிராமத்து கைமணம். இதுல எல்லாமே நாக்கை வசியப் படுத்தற அளவுக்கு சுவையாவும் இருக்கும். அதேசமயம் உடல்நலனுக்கு நண்பனாவும் இருக்கும். இங்கே நான் விவரிக்கப்போற களி, கஞ்சியெல்லாம்கூட அதுக்கு உதாரணங்கள்தான்!

பூண்டு கஞ்சி

அரை கப் அரிசி குருணை, ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப் பயறு, 1 டீஸ்பூன் வெந்தயம்… இவை எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்துக் கழுவி வைங்க. பத்து பல் பூண்டை பொடியா நறுக்குங்க.

அஞ்சு கப் தண்ணியைக் காய வைங்க. தண்ணி நல்லா கொதிச்சதும் அதுல பூண்டு, அரிசி பருப்பு கலவையப் போட்டு, மிதமான தீயில வேகவைங்க. குழைய வெந்ததும், ஒரு கப் கெட்டியான தேங்காய்ப் பாலை ஊத்தி, தேவையான உப்பு போட்டுக் கலக்கி உடனே இறக்கிடுங்க.

கமகமனு மணம் பரப்பி, ருசியா இருக்கற இந்த பூண்டு கஞ்சி, வயித்துப் புண்ணுக்கு அருமருந்து!

மரவள்ளிக் கிழங்கு கார பணியாரம்

அரை கிலோ மரவள்ளிக் கிழங்கை எடுத்து பட்டை, தோலை நீக்கிட்டு மண் போகக் கழுவி துருவுங்க. சின்னதா ஒரு முழு தேங்காயை எடுத்து துருவி வைங்க. 1 டீஸ்பூன் சோம்பு, 8 மிளகாய் வற்றல் ரெண்டையும் ஒண்ணாச் சேர்த்து கொஞ்சமா தண்ணி விட்டு அரைங்க. நைஸானதும், துருவி வெச்சிருக்கற தேங்காயைச் சேர்த்து அரைச்சு, கடைசில துருவின கிழங்கு, தேவையான உப்பு போட்டு ரெண்டு சுத்து சுத்தி எடுத்து, இட்லி மாவுப் பதத்துக்கு கரைச்சு வைங்க.

குழிப் பணியாரக் கல்ல காயவெச்சு ஒவ்வொரு குழிலயும் கொஞ்சம் கொஞ்சமா எண்ணெய ஊத்தி காய்ஞ்சதும், மரவள்ளிக் கிழங்கு மாவை எடுத்து குழியோட முக்கால் பாகத்துக்கு ஊத்துங்க. ரெண்டு பக்கமும் திருப்பிவிட்டு வேக வெச்செடுங்க. இதுக்கு தேங்காய் சட்னி, கார சட்னியை தொட்டுக்கிட்டா பிரமாதமா இருக்கும்.

உளுந்து களி

அரை கப் உளுந்தை எடுத்து சிவந்து வாசனை வர்ற வரைக்கும் வறுத்தெடுத்து, ஆறினதும் மெஷின்ல கொடுத்து நைஸா அரைங்க. முக்கால் கப் வெல்லத்தைப் பொடிச்சு, அரை கப் தண்ணிவிட்டு சூடாக்குங்க. வெல்லம் கரைஞ்சதும், வடிகட்டி ஆற வைங்க.

வடை சட்டில அரை கப் நெய், இல்லேனா… அரை கப் நல்லெண்ணெயைக் காயவெச்சு, உளுந்து மாவைப் போட்டு தீயை மிதமா வெச்சு வறுங்க. மணம் வர வறுபட்டதும், அதுல வெல்லக் கரைசலை ஊத்தி கைவிடாம அஞ்சு நிமிஷத்துக்கு கிளறி இறக்குங்க.

நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறி சாப்பிட்டா இந்தக் களி உடம்பு நலத்துக்கு நல்லது. நெய் சேர்த்துகிட்டா ருசி கூடுதலா இருக்கும்.

எலும்புக்கு, முக்கியமா… இடுப்பு எலும்புக்கு உரமா இருக்கும் இந்த உளுந்துகளி. கிராமத்துப் பக்கம்,வயசுக்கு வந்த பொண்ணுங்களுக்கு உடம்புக்கு வலு கிடைக்கணும் கிறதுக்காகவே இந்த பலகாரத்தை கட்டாயம் கொடுப்பாங்க. அந்த காலகட்டத்துல உடம்புல சேர்ற இந்த ஊட்டமான உணவால, பிரசவ சமயத்துல சிரமமில்லாம இருக்குமாம்.

வாசகியர் சாய்ஸ்…

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த சரஸ்வதி, இந்த திடீர் போளி குறிப்பை அனுப்பியிருக்கிறார்.

கால் கப் ரவை, 2 டீஸ்பூன் கசகசா… இவை இரண்டையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுங்கள். 200 கிராம் கோதுமை மாவு, கால் கப் அரிசி மாவு இவற்றுடன் வறுத்த ரவை கலவையையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து வையுங்கள். 250 கிராம் வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்குங்கள். கரைந்ததும் வடிகட்டி, அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். அதில் ஒரு மூடி தேங்காய் துருவல், ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள், கலந்து வைத்துள்ள மாவு அனைத்தையும் கொட்டிக் கிளறுங்கள். கெட்டியாக திரண்டு வரும்போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய்விட்டுக் கிளறி இறக்கி, ஆற வையுங்கள்.

வாழை இலையில் சிறிதளவு எண்ணெய் தடவி, ஆறிய மாவை அதில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வைத்து மெல்லிசாகத் தட்டி தோசைக் கல்லில் போடுங்கள். சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வைத்தெடுத்தால், தித்திக்கும் போளி ரெடி!

இந்தக் குறிப்பை தேர்ந்தெடுத்த ரேவதி சண்முகத்தின் காமெண்ட்…

‘‘பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு!’’

சந்திப்பு: கீர்த்தனா    படங்கள்: உசேன்

நன்றி:- சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை