தொகுப்பு

Archive for the ‘இஸ்லாமிய வங்கி Part-03’ Category

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்


முதரபா (Mudarabah) என்பது கடன் இல்லை, சமூக நோக்கு கொண்ட உதவி என்று சொன்னோமே, அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

எந்த நேர்மையான தொழிலுக்கும் நிதியும் உழைப்பும் அவசியம். நிதியை மேல்படியில் மெத்தை போட்டு உட்கார்த்தி, உழைப்பை வாசலில் கூனிக் குறுகி நிற்கவைப்பது அநீதி. ஆக, ஒருவர் தொழில் திறமையையும் உழைப்பையும் மூலதனமாகப் போட, இன்னொருவர் பணத்தை மூலதனமாக முடக்கவேண்டும்.

நஷ்டம் வரலாம் என்ற சவாலை எதிர்பார்த்து உழைப்பாளரின் திறமையில் நம்பிக்கை வைத்து பண முதலீடு செய்வதாலேயே முதலாளிக்கு லாபத்தில் பங்குபெற கன கம்பீரமான உரிமை ஏற்படுகிறது.

உழைப்பு சரிவர இருந்தும், லாபம் வராமல் போனால், உழைப்பாளி பண நஷ்டத்துக்குப்  பொறுப்பாக மாட்டார். முதலாளி தொழிலில் முதலீடு செய்த பணம் நஷ்டத் தொகையின் அளவுக்குக் குறைக்கப்படும். உழைப்பாளி பெற உரிமை உள்ள, ஆனால் கிடைக்காமல் போன உழைப்பின் ஊதியம் இந்தப் பண நஷ்டத்துக்கு ஈடாகும்.

ஏன் வழமையான கடன் வழங்குதல்–வாங்குதல் உறவை விட முதரபா மேலானது என்பதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

1)    தொழில் தொடங்கும் முன்பே முதலாளியும் உழைப்பாளியும் லாபம் வரும்போது எந்த விகிதத்தில் அதைப் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். இந்த லாபப் பிரிவினை, பண முதல் தரும் வருமானத்தை (return on capital) அடிப்படையாகக் கொண்டதில்லை. முழுக்க முழுக்கத் தொழிலில் கிட்டும் லாபத்தைச் சார்ந்தது (profit sharing agreement).

‘நான் இவ்வளவு பணம் தருவேன். நீங்கள் இவ்வளவு உழைப்பீர்கள். நிர்வகிப்பீர்கள். தொழில் முன்னேற்றம், பிரச்சனைகள் பற்றி என்னோடு தகவல் பகிர்ந்து கொள்வீர்கள். நான் அதிகம் பணம் உதவவேண்டி வந்தாலோ, நீங்கள் இன்னும் திறமையாக, இன்னும் கடுமையாக உழைக்கவேண்டி வந்தாலோ, மனமுவந்து அதைச் செய்வோம்’ என்று அந்த ஒப்பந்தம் தெளிவாக்கும்.

முதலீடு செய்பவருக்கு நிர்வாகத்தில் குறுக்கிட உரிமை இல்லை. அதேபோல் தேவையில்லாமல், பணம் கொடுங்க என்று விடாப்பிடியாக அதிக நிதி கேட்டு நச்சரிக்க மற்றவருக்கு உரிமை இல்லை.

2)    இப்படி ஒருவருக்கு ஒருவர் இணக்கமான அக்கறையோடும் முழு முனைப்போடும் தேவையான நிதி அடிப்படையோடும் நடக்கும் தொழிலில் நஷ்டம் வந்தால் இருவருமே பாகுபாடு இன்றி வெவ்வேறு வடிவத்தில் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்கிறார்கள். இழப்பையும் கடந்து முன்சென்று ஒப்பந்தப்படி வெற்றி கண்டு லாபத்தைப் பங்கு வைப்பது என்ற லட்சியம் தொடர சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.

நேர்மையான உழைப்புக்கும், பொறுப்பான நிதியுதவிக்கும், திறமையான நிர்வாகத்துக்கும், தர்ம நியாயத்துக்கு உட்பட்ட தொழில் நடப்புக்கும் கிடைக்கும் வெகுமதியே லாபம். அந்த லாபத்துக்கு வானமே எல்லை. அதைப் பங்கு வைக்கும் விகிதத்தையும் ஷரியா இவ்வளவு என்று கட்டுப்படுத்தவில்லை.

3)    முதரபா ஒப்பந்தத்தை இருவரில் எவர் மீறினாலும்,  இஸ்லாமிய வங்கிச் சட்டத்தின் கண்களில் ஒரே மாதிரி நடத்தப்படுகிறார். அவர் மற்றவருக்குத் தரவேண்டிய நஷ்ட ஈடு விவரமும் ஒப்பந்தத்தில் இருக்கும்.

உழைக்கவேண்டியவர் உழைக்காமல் அல்லது தவறாகச் செயல்பட்டு நஷ்டத்தை உண்டாக்கினால், முதல் போட்டவருக்கு அவர் முடக்கிய தொகையை கேள்வி கேட்காமல் இவர் கொடுத்துவிடவேண்டும்.

முதலாளி திடீரென்று பண உதவியை நிறுத்தினாலோ, ஒப்பந்ததுக்கு மாறாக, போட்ட பணத்தை உடனே திரும்பக் கேட்டாலோ, அல்லது ஒப்பந்தப்படி பணம் தர மறுத்தாலோ நஷ்டம் ஏற்படலாம். அப்போது அந்த உழைப்பாளி இதே தொழிலை வேறு யாருடனாவது ஒப்பந்தம் செய்துகொண்டு வெற்றிகரமாக நடத்தி இருந்தால் குறைந்தபட்சமாக என்ன லாபம் பெற்றிருப்பாரோ அதை நிதியாளர் கட்டாயம் செலுத்தியாகவேண்டும்.

நிதியை முதலீடு செய்பவர் ராப்-உல்-மால் ( rabb-ul-maal.) என்று அழைக்கப்படுவார். உழைப்பை முதலீடு செய்கிறவர் முதரிப் (mudarib) எனப்படுகிறார்.

முதரபாவில் இரண்டு வகை உண்டு. நிதி கொடுக்கிற தொழில் பங்காளியான ராப்-உல்-மால், அந்த நிதியைப் பயன்படுத்தி எந்தத் தொழில் செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம். உழைக்கும் பங்காளி முதரிப் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். நிபந்தனையோடு கூடிய முதரபா என்ற பொருள் தரும் ‘அல்-முதரபா அல்-முகய்யதா’ (al-mudarabah al-muqayyadah) எனப்படும் இது.

நிதியாளர் எந்தத் தொழில் என்று நிபந்தனை விதிக்காதபோது, உழைக்கும் பங்காளி அந்த முதலை நிதி மூலதனமாக வைத்து விரும்பிய தொழிலில் ஈடுபடலாம். இது நிபந்தனையற்ற முதரபா – ‘அல்-முதரபா அல்-முதலகா’ (al-mudarabah al-mutalaqah) எனப்படும்.

இரண்டு பங்காளிகளில் யார் விரும்பினாலும் மேலே தொடராமல் முதரபாவை விலக்கிக்கொள்ளலாம். ஒப்பந்த முறிவுக்கான முன்னறிவிப்புக் காலம், வழிமுறை இரண்டும் ஒப்பந்தத்திலேயே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். அதைக் கடைப்பிடித்து முதரபாவிலிருந்து விலகிக்கொள்ளத் தடை ஏதும் இல்லை.

எத்தனை வருடம் முதரபா செயல்படலாம் என்று ஒப்பந்தத்திலேயே இருப்பதும் உண்டு. அதற்குப்பிறகு தானாகவே ஒப்பந்தம் ரத்தாகிவிடும். இது ஒரு பிரிவு இஸ்லாமிய வங்கியியல் அறிஞர்களின் கருத்து. அப்படி அதிக பட்சக் காலத்தை நிர்ணயிக்க முடியாது என்று இன்னொரு பகுதியினர் கருதுகிறார்கள். இருவரும் ஒன்றுபடுவது ஒரு விஷயத்தில் – முதரபாவுக்கு குறைந்தபட்ச நடப்புக் காலம் என்று எதையும் நிர்ணயம் செய்ய முடியாது.

இஸ்லாமிய வங்கியியலில் முதரபா இரண்டு கட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக, வங்கியில் பணம் போடுகிற வாடிக்கையாளர்கள் (depositor customers) செலுத்திய பணம் வங்கியின் முதலீட்டுக் கணக்கில் (Investment Account) வரவாகிறது. இந்த முதலீடு ஈட்டும் லாபத்தில் பங்குபெற அந்த வாடிக்கையாளர்கள் உடன்படுகிறார்கள். முதலீட்டு நிதியைத் திறமையாக நிர்வகிக்கும் ஒரு நிர்வாகியாக (Manager of funds) வங்கி செயல்படுகிறது.

முதரபாவின் இரண்டாவது கட்டம் வங்கியின் தொழில்முனைவர்களான வாடிக்கையாளர்கள் (Entrepreneurial customers) பங்குபெறுவது. தொழில் தெரியாமல் ஆர்வக் கோளாறு காரணமாக வெற்று உற்சாகத்தோடு   இப்படியானவர்களில் சிலர் நிதி உதவிக்காக வந்து நிற்கலாம். வங்கி, இவர்களை ஜாக்கிரதையாக அலசி ஆராய்ந்து, வேண்டுமென்றால் நிராகரித்து, ‘தொழில் கத்துக்கிட்டு வாங்கப்பா’ என்று அனுப்பி விடும்.

நிதித்துறை பரிபாஷையில் வட்டியை மூலதனத்தின் விலை (cost of capital) என்பார்கள். இந்த வட்டி சர்வதேச, உள்நாட்டுப் பணச்சந்தை (money market) நிலவரங்களால் தீர்மானிக்கப்படுகிறது.

வழமையான தொழில் கடன் வழங்கும் வங்கி, அந்தத் தொழிலில் என்ன லாபம் வந்தாலும் இப்படிச் சந்தை நிர்ணயித்த அடிப்படையில் வட்டியை வசூலித்து வருமானம் ஈட்டுகிறது. பெரும்பாலும் அது நிலையான வட்டி விகிதத்தில் (fixed interest rate) இருக்கும். ‘மிதக்கும் வட்டி’யை (floating interest rate) சாவகாசமாகப் பார்ப்போம்.

வட்டியை விலக்கிய இஸ்லாமிய வங்கியோ, முதரபா ஒப்பந்தம்மூலம் தகுதியான தொழில் முனைவர்களுக்கு நிதி உதவி செய்து, லாபத்தில் கணிசமான பங்கை அவர்களின் முழு ஒப்புதலோடு பெற்றுக்கொள்கிறது. வட்டி மூலம் பெறக்கூடிய வருமானத்தைவிட இது அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

முதரபா போல் முக்கியமான இன்னொரு நிதி, உழைப்பு முதலீட்டு முறையான முஷாரகா (Musharakah). இது என்ன என்று அடுத்து அறிமுகப்படுத்திக் கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

நன்றி:- இரா. முருகன்

நன்றி:-http://www.tamilpaper.net/?category_name=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

நன்றி:- http://onameen.blogspot.com/

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்