இல்லம் > கட்டுரைகள் > ஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி!

ஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி!


நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வித்தியாசமின்றி, நடுத்தர வயதைத் தாண்டியவர்களில் பலருக்கும் இன்று உயர் ரத்த அழுத்தம் (Hypertension) காணப்படுகிறது. ரத்த அழுத்தம், 140/90 என்ற அளவினைக் கடக்கும்போது, அதை உயர் ரத்த அழுத்தப் பிரச்னை என்கிறோம். இந்தப் பிரச்னையைப் பற்றி விரிவாகப் பேசிய, சென்னை, பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் திருநாராயணன், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகளைப் பற்றியும் கூறுகிறார். இவை அனைத்துமே, ரத்த அழுத்தத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நேரடி உணவுகள். இவற்றைச் செய்து வழங்கியிருக்கிறார் பாரம்பரிய சமையல் கலை நிபுணர் சுந்தரவல்லி.

கருப்பரிசி, சிவப்பரிசி தோசை

தேவையானவை: கருப்பரிசி (பச்சரிசி), சிவப்பரிசி (புழுங்கலரிசி) – தலா ஒரு கப், உளுந்து, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு, தேங்காய்த் துருவல் – ஒரு டீஸ்பூன் (வேண்டுமெனில்), தக்காளி – மூன்று, சீரகம், மிளகுத் தூள் – தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் – தேவையான அளவு, இந்துப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:அரிசி, பருப்புகள், வெந்தயம் அனைத்தையும் களைந்து தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், அதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, இந்துப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் மற்ற பொருட்களைச் சேர்த்து, மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு, மிதமான தீயில் இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.


வெள்ளைப் பூசணி, பச்சைப் பட்டாணிக் கூட்டு

தேவையானவை: வெள்ளைப் பூசணி – ஒரு சிறு துண்டு, பச்சைப் பட்டாணி – அரை கப், தேங்காய்த் துருவல், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், சிறிய பச்சைமிளகாய் – ஒன்று,  கறிவேப்பிலை – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பூசணியைத் தோல், விதை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர்விட்டு ஒரு கொதிக்கு வேகவைக்கவும். பச்சைப் பட்டாணியையும் வேகவைத்துக்ªகாள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து வேகவைத்த காய்கறிகளுடன் கலந்து, உப்பு சேர்க்கவும். கடைசியாக ஒரு கடாயில் அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுத் தாளித்து, காய்கறிக் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.


முருங்கைக் கீரைக் கூட்டு

தேவையானவை: முருங்கைக் கீரை – ஒரு கப், பாசிப் பருப்பு – கால் கப், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: முருங்கைக் கீரையை ஆய்ந்துகொள்ளவும். பாசிப் பருப்புடன், கீரை சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, கீரைக் கூட்டில் கலந்து, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.


பச்சை மிளகு ஊறுகாய்

தேவையானவை: பச்சை மிளகு – 100 கிராம், எலுமிச்சம் பழம் – நான்கு, இந்துப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: எலுமிச்சம் பழங்களை விதை நீக்கிச் சாறு எடுக்கவும். பச்சை மிளகை சிறு சிறு கொத்தாக நறுக்கி, காம்புடன் அலசித் துடைத்துக்கொள்ளவும். பிறகு அதில் எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்த்து மூன்று நாள் ஊறவிடவும். ஊறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்துப் பரிமாறவும்.


கொள்ளு ரசம்

தேவையானவை: கொள்ளு – அரை கப், புளி – சிறு எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு, ரசப்பொடி – ஒரு டீஸ்பூன். தாளிக்க: நெய் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை.

செய்முறை: கொள்ளை அரை மணி நேரம் ஊறவைத்து, நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். வேகவைத்த பிறகு, தண்ணீரைத் தனியே வடித்து விடவும். வெந்த கொள்ளை, சுண்டலாகத் தாளித்து உண்ணலாம். புளியைத் தேவையான தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். அதில் ரசப்பொடி, உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். பிறகு கொள்ளு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து நுரை கட்டி வரும்போது, நெய்யில் தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.


தவிர்க்க வேண்டியவை:

அதிக உப்பு சேர்ந்த பொருட்கள், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பிஸ்கட், அதிகப் புளிப்பு, உப்பு, காரம் மிகுந்த உணவுகள், துரித உணவுகள், இனிப்பு வகைகள் போன்றவை, உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி, ரத்தக் குழாயைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்த்தல் நலம்.

சேர்க்க வேண்டியவை:

பழங்கள், காய்கறிகளில் சோடியம் சத்துக்குப் பதிலாக பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால், சர்க்கரை நோய் இல்லாத, உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, வாழைப் பழம் நன்மை தரும். கீரை வகைகள் பெரும்பாலும் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரை, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை ஆகியவை சோடியத்துக்கு மாற்றாக அமைந்து உடலில் நீர் கோத்துக்கொள்வதைத் தவிர்த்து, ரத்த அழுத்தத்தை ஓரளவுக்குக் குறைக்கும். உப்புக்கு மாற்றாக, இந்துப்பு பயன்படுத்தலாம். குறைந்த அளவு போட்டாலே, அது உப்பின் சுவையைத் தந்துவிடும். சிறுநீரை எளிதாக வெளியேற்றக்கூடிய வாழைத்தண்டு, முள்ளங்கி, வெள்ளைப் பூசணியை வாரம் ஒருமுறையாவது, உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்களில் குறைந்த அளவில் நல்லெண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், மிகக் குறைந்த அளவில் நெய் சேர்த்துக்கொள்வது தவறு இல்லை. சீஸ், வெண்ணெய், டால்டா போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். எப்போதாவது ஒரு நாள் சிறிய அளவில் முறுக்கு, தேன்குழல், காரச்சேவு முதலிய நொறுக்குத் தீனிகளைச் சிறிதளவு  எடுத்துக்கொள்ளலாம். வாதுமை, முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்ற பருப்பு வகைகளை எண்ணெய், நெய்யில் பொரிக்காமல் உப்பு சேர்க்காமல் நான்கு, ஐந்து சாப்பிடலாம்.

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s