தொகுப்பு

Archive for the ‘நண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு’ Category

நண்டு(Crab) – நண்டு வறுவல் – கேரளா நண்டு குழம்பு


இன்று நம்ம வீட்லே நண்டு கறிங்க. நான் ஒரு நண்டுப் பிரியன். குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களுக்கு நண்டினை உடைத்து, சதையை தனியாக எடுத்து கொடுத்து, அதை அவர்கள் சாப்பிடுவதை(கண்ணில் நீர் வர,வர)பார்த்து மகிழ்வது ஒரு தனி சுகம். தான். இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் வந்தது தான் இப் பதிவு.

எப்படி சமைப்பது என்பது பற்றியும் இரண்டு குறிப்புகள் இணைத்துள்ளேன். சைவப் பிரியர்கள் மன்னிக்க.. சாப்பிடவில்லையென்றாலும் நண்டைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே! பயப்படாமல் வாங்க! நண்டு கடித்து விடாமல் பார்த்துக் கொள்கிறேன்.

உலகின் கடல் நீரிலும் தரையிலும் உயிர் வாழும் நண்டுகளின் ரகத்தை அளவிட முடியாது என்கிறார் ஒரு கடல் வாழ் உயிரின அறிஞர். அத்தனை ரகங்கள் பல ஆயிரங்களைத் தாண்டும் என்கிறார்கள். அமெரிக்காவைச் சுற்றியிருக்கும் கடல்களில்  மாத்திரம் ஆறாயிரத்திற்கும் கூடுதலான ரக நண்டுகள் வாழ்கின்றன.

உலக மக்களால் உண்ணப்படும் எல்லா வகைக் கடல் உணவுகளில் நண்டுகள் இருபது (20) விகிதமாக இருக்கின்றன. உலக மக்களால் வருடம் ஒன்றுக்கு உண்ணப்படும் நண்டுகளின் எடை ஒன்றரை மில்லியன் தொன் என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

நண்டுத் தசை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உலக சுகாதார நிறுவனத்தின்  செய்தி. அதில் புரதம் மிகச் செறிவாக இருக்கிறது. மேலும் பொட்டாசியம், துத்த நாதம் (சின்க்) ஒமேகா அமிலங்கள் என்பனவும் இருக்கின்றன. நிறை உணவாக நண்டுத் தசை கருதப்படுகிறது.

நண்டு ஒரு ஏற்றுமதித் பொருள். பதனிடப்பட்ட நண்டு பல நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுகின்றன. மிகக் கூடுதலான நண்டை ஏற்றுமதி செய்யும் நாடு அமெரிக்கா. அடுத்ததாகச் சீனா, கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ருஸ்சியா என்பனவும் ஏற்றுமதி செய்கின்றன.

நண்டு மனித உணவாக மாத்திரமல்லச் செல்லப் பிராணியாகவும் பயன்படுகிறது. நண்டுகளால் நீந்த முடியும். தரையில் பக்கவாட்டாக நடக்கவும் ஓடவும் முடியும். அத்தோடு நிலத்தில் தனது பருமனுக்குப் பொருத்தமான குழி தோண்டி அதில் வாழவும் முடியும்.

அவை நீரில் வாழும் போது மீனைப் போல் சுவாசிக்கின்றன. தரையில் வாழும் நண்டுகள் தரைவாழ் உயிரினங்களைப் போல் காற்றைச் சுவாசிக்கின்றன. மிகக் கூடுதலான நண்டுகள் நீரில் தான் வாழ்கின்றன.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவை தரையில் வாழ்கின்றன. வானத்தில் ஒரு நட்சத்திரக் கூட்டம் நண்டின் பெயரால் அழைக்கப்படுகிறது. கடகம் என்றால் நண்டு என்று பொருள். பன்னிரு ராசிகளில் ஒன்றாகக் கடக ராசி இடம் பெறுகிறது.  புற்று நோயை ஆங்கிலத்தில் கான்சர்  (Cancer) என்பார்கள்.

இலத்தீன் மொழியில் கான்சர் என்றால் நண்டு என்று பொருள். இலத்தினிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த போது கான்சர் என்ற சொல் நண்டு என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது.

நண்டுகள் பொதுவாக தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன.

நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக் கொருமுறை மேலோடுகள் களன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் கூட்டுக்கண்கள் இரண்டைக் கொண்டவை.

பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைக் கொண்டுள்ளன.

நண்டின் காலை மாத்திரம் சுவைத்து உண்பதற்காகச் சில நண்டு வகைகள் விற்பனையாகின்றன. நண்டு உணவாக்கப்படும் போது அதனுடைய உடற் சதை மாத்திரம் முதலிடம் பிடிக்கிறது. பத்துக் கால்களில் பெரியதான முன்பக்க இரண்டு கால்களும் சதைப் பிடிப்பாகவும் ருசியாகவும் இருக்கின்றன. இவை இரண்டாம் இடத்தைப் பிடிக்கின்றன.

ஆனால் இந்தக் கால்களுக்காக மாத்திரம் கடலில் பிடிக்கப்படும் நண்டின் பெயர் (Stone Crab) இதைத் தமிழல் பாறை நண்டு எனலாம். தமிழீழக் கடலிலோ, இந்து மாகடலிலோ இதைக் காணமுடியாது. அத்திலாந்திக் மாகாடலின் மேற்கில் அமெரிக்கப் புளொரிடா மாநிலத்திற்குரிய கடலில் இந்த வகை நண்டைக் காணலாம்.

அமெரிக்கர்கள் இந்த நண்டை விரும்பி உண்பார்கள் இந்த நண்டின் உடல் மிகச் சிறியது. கால்கள் மிகப் பெரியவை. கால்கள் மிகப் பலமானவை. சிப்பி போன்றவற்றை இந்த நண்டு காலால் உடைத்துத் தின்பதால் கால்களுக்குப் பலம் தேவைப்படுகிறது. சிப்பிகள் (Oyster) தான் இந்த நண்டின் பிரதான உணவு.

பாறை நாண்டின் இரண்டு கால்களில் ஒன்று அடுத்ததிலும் பார்க்க மிகப் பெரியது. இது சிப்பி ஓட்டை உடைப்பதற்கு உதவுவதால் உடைப்பான் (Crusher) என்றும் இரையைப் பிடித்து வைத்திருப்பதற்கு அடுத்தது உதவுவதால் பிடிப்பான் (Pincer) என்றும் அழைக்கப்படுகின்றன.

நல்ல வளர்ச்சி அடைந்த பாறை நண்டின் எடை ஒரு கிலோ அளவு இருக்கும். இது கடல் வாழ் உயிரினம். பெயர்தான் பாறை நண்டு. மற்றும் படி அதற்கும் பாறைக்கும் தொடர்பு இல்லை.

உலகின் மிக நீளமான நண்டுக் காலின் நீளம் 12 அடி 6 அங்குலம். இந்த அதிசய நண்டு ஜப்பான் தீவுகளைச் சுற்றியுள்ள கடலில் காணப்படுகிறது, இதன் பெயர் ‘ஜப்பான் ஸ்பைடர் கிராப்” (Japan Spider Crab) ஸ்பைடர் என்றால் சிலந்தி என்று அர்த்தம். ஆகையால் இந்த நண்டைச் சிலந்தி நண்டு என்று அழைக்கலாம் இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை.நண்டுக் குடும்பத்தில் மிக நீளமான கால்களை உடைய ரகம் என்று இது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கால்கள் இரண்டும் மிக நீளமாக வளர்கின்றன. 12 அடி 6 அங்குலம் (3.8 மீற்றர்) வரை நீள்கின்றது. ஆண் நண்டின் கால்கள் பெண் நண்டின் கால்களிலும் பார்க்கக் கூடுதல் நீளமானது.

நண்டு வறுவல்

தேவையான பொருள்கள்:

வெங்காயம் – 3

தக்காளி – 3

இஞ்சி, பூண்டு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

தனியா தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

செய்முறை:

நண்டை கால்கள் தனியாகவும், உடல் பாகம் தனியாகவும் எடுத்து விட்டு சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

ஒரு வெங்காயம் மிளகு, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவேண்டும்.

எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது போடவும்.

வதங்கியதும் தக்காளி மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், அரைத்து

வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்கி நண்டுகளை போட்டு மசாலா

கலந்து வரும்படி கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.

நண்டு வெந்து கிரேவியாக வரும் போது இறக்கவும்.

கேரளா நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:

நண்டு – 1/2 கிலோ

சின்ன வெங்காயம் – 1/4 கிலோ

தக்காளி- 100

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

பச்ச மிளகாய் – 2

மஞ்சள்த்தூள் – 1/2 ஸ்பூன்

தனி மிளகாய்த்தூள் – 3ஸ்பூன்

தனியாத்தூள் – 1/2 ஸ்பூன்

சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்

பெருஞ்சீரகத்தூள் -1/2ஸ்பூன்

பட்டை -1

கிராம்பு -1

ஏலக்காய் – 1

தயிர் – 1/2கப்

கறிவேப்பிலை

அரைத்த தேங்காய் விழுது – 3ஸ்பூன் அல்லது தேங்காய் பால் -1/2 கப்

உப்பு – தேவைக்கு

தேங்காய் எண்ணெய் – தேவைக்கு

முதலில் நண்டை சுத்தமாக அலசி வைக்கவும். அதில் மிளாய்த்தூள்,மஞ்சள்த்தூள்,தனியாத்தூள், சீரகத்தூள்,பெருஞ்சிரகத்தூள், சிறிது தயிர், சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு போட்டு விரவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

காடாயில் நன்றாக எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கிராம்பு,பட்டை,ஏலக்காய் போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட், பச்சமிளகாய், கறிவேப்பிலை, தக்களி சேர்த்து நன்றாக வதக்கவும்

பிறகு விரவி வைத்த நண்டு கலவையினை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த தேங்காய் விழுதினை சிறிது தண்ணீர் சேர்த்து இதில் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். விருப்பபட்டால் மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

நன்றி:-என் இனிய இல்லம்.blogs

நன்றி:-http://en-iniyaillam.blogspot.com/