தொகுப்பு

Archive for the ‘சூடு பிடிக்கும் சூரிய சக்தி’ Category

சூடு பிடிக்கும் சூரிய சக்தி


எத்தனை புதிய மின்திட்டங்கள் வந்தாலும் இந்தியாவில் மின்தட்டுப்பாடு என்பது இன்னும் அதிகமாகவே இருக்கிறது. மழை குறைந்ததால் நீர்மின்சார உற்பத்திக்கு வழியில்லை. அணு மின்நிலையத்தின் மூலம் மின்சாரம் தயார் செய்ய நிறைய செலவாகும். தவிர, ஆபத்தும் உண்டு. நிலக்கரியைப் பயன்படுத்துவதால் பூமி சூடாகிறது என்கிறார்கள். இப்படி மின் உற்பத்தி செய்யும் வழிகளில் பல்வேறு பிரச்னைகள் இருக்க, சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு வழிமுறையாக இருக்கிறது சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வது.

சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் இந்தியாவில் இப்போதுதான் மெதுவாகச் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும். இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஜெர்மனி சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300 நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம்!

இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு.

உலகளவில் இந்தியா மற்றும் சீனாவில்தான் சூரிய சக்திக்கான சந்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அபரிமிதமாக இருக்கும் என ‘யூரோப்பியன் போட்டோவால்டெக் இண்டஸ்ட்ரி’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதிக அளவிலான சந்தை வாய்ப்பு மற்றும் கவர்ச்சி கரமான திட்டங்களை உருவாக்குவதிலும் இந்தியா முன்னிலை வகிக்கும் என அந்த அமைப்பு கூறியுள்ளது. சூரியசக்திக்கான உலகளாவிய சந்தை 2010-ல் 15.5 ஜிகாவாட்-லிருந்து 2014-ல் இரண்டு மடங்காக (30 ஜிகாவாட்) அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இதன் சந்தை மதிப்பு இனி மிகப் பிரகாச மாக இருக்குமென கூறப்படுகிறது.

அரசின் சலுகைகள்

சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க அரசு பல்வேறு சலுகைகள் அளித்து வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தயாரிப்புச் செலவு 40% குறைந்துள்ளது. சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க 5 சதவிகிதத் துக்கும் குறைவான வட்டிக்கு கடன் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியன் ரினீவபிள் எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சி (indian renewable development agency) வங்கிகளுக்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டிக்கு நிதியுதவி அளிக் கிறது. மானியங்களுடன் கூடிய கடனையும் வழங்க உள்ளது. லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபர் தீவுகள், லடாக் மற்றும் எல்லைப் பகுதிகளில் சூரியசக்தியை அதிகளவில் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யத் தேவையான சாதனங்களை இறக்குமதி செய்ய சுங்கவரி மற்றும் கலால் வரியிலிருந்து விலக்கு அளிக்கிறது.

‘ஜவஹர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன்’ திட்டத்தின் மூலம் 2013-ல் 1,100 மெகாவாட், 2022-ல் 20,000 மெகாவாட் மின்சாரத்தையும் சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்ய நிர்ணயித்துள்ளது. இதனால் மிகப் பெரிய தொழில் வாய்ப்பு இந்தத் துறையில் உள்ளது. மின் உற்பத்தி தவிர, மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான கருவிகளைத் தயாரிப்பது, நிர்வகிப்பது, நிறுவுவது, இதர சேவைகள் என பல வகையில் பிஸினஸ் வாய்ப்புகள் இதில் குவிந்துள்ளது.

சூரியசக்தி மின்நிலையம் ஆரம்பிக்க அரசின் பங்களிப்பு எந்த வகையில் இருக்கும் என்பதை அறிய ‘தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்ஸி’யின் காற்றாலை மற்றும் சூரிய சக்தியின் துணைப் பொது மேலாளர் டியூக் கிறிஸ்டோபர் டேனியலைச் சந்தித்தோம்.

”ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில்தான் சூரியசக்தி அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் இங்கு சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. போட்டோவோல்டிக் மற்றும் சோலார் தெர்மல் பிளான்ட் ஆகிய இரண்டு வகையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். இதில் போட்டோவோல்டிக் முறையில் தயாரிக்க சூரிய அனல்மின் உற்பத்தி முறையைவிட சற்று அதிகம் செலவாகும். இந்த முறையில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 17 கோடி ரூபாய் வரை செலவாகும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்சார வாரியம் வாங்கிக் கொள்ளும். அதற்கான ஒப்பந்தத்தை மின்சார வாரியத்துடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு யூனிட் மின்சாரத்தை 18.45 ரூபாய்க்கு வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையம் வலியுறுத்துகிறது.

கிரிஸ்டலின், மோனோ கிரிஸ்டலின் டெக்னாலஜி, தின் டெக்னாலஜி என பல திட்டங்கள் இருக்கின்றன. இதில் கிரிஸ்டலின் மற்றும் மோனோ டெக் னாலஜியில் இந்திய முதலீட்டாளர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். தின் டெக்னாலஜியில் வெளிநாட்டவர்களும் முதலீடு செய்யலாம். தெர்மல் பவர் பிளான்ட் மூலம் உற்பத்தியாகும் மின்சா ரத்தை மின்சார வாரியம் குறைந்த விலைக்கே வாங்குகிறது. ஆனால் சூரியசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறது. இதற்குக் காரணம் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க நிறைய செலவாவதே.

ஒரு மெகாவாட் சோலார் பிளான்ட் நிறுவுவதற்கு ஐந்து ஹெக்டேர் நிலம் தேவை. இந்த மின்நிலையத்தை தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்ஸியில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு இந்தியன் ரினீவபிள் டெவலப்மென்ட் ஏஜென்ஸியில் பதிவு செய்து ஒப்புதல் பெறவேண்டும். எனவே முதலீட்டைத் திரட்டுவதுதான் கடினம். கஷ்டப்பட்டுத் தொழிலைத் தொடங்கிவிட்டால் 7-8 வருடங்களில் போட்ட பணத்தை எடுத்துவிடலாம்.

வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். இது பற்றி சோலார் தயாரிப்புகளை இந்தியாவில் 25 வருடங்களுக்கும் மேலாக தயாரித்துவரும் நிறுவனமான சோல்கார் நிறுவனத்தின் பொது மேலாளர் ஜெகதீஷ் பாபுவிடம் பேசினோம்.

நிறுவனங்கள் மட்டுமே தற்போது சூரியசக்தியைப் பயன்படுத்துகின்றன. வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம்.

கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது சோலார் சக்திக்கான சந்தை அதிகரித்துள்ளது. மக்களிடையே சோலார் சாதனங்களின் விலை அதிகமாக இருக்கும் என்று எண்ணம் இருக்கிறது. ஆனால் அரசு மானிய விலையில் தருவதால் இதன் விலை குறைந்துள்ளது. மேலும் எங்களைப் போன்ற நிறுவனங்கள் இன்னும் பல சலுகைகளைக் கொடுத்து மக்களிடையே இந்த சாதனங்களைக் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். ஃபேன், விளக்கு, தெரு விளக்கு, வாட்டர் ஹீட்டர் என பல சாதனங்களை சூரிய சக்தியைப் பயன்படுத்தி உபயோகிக்கலாம். சோலார் சாதனங்களை வாங்கு வதற்கான முதலீடு மட்டும்தான் செலவு பிடிக்கிற விஷயமாகும். ஒருமுறை முதலீடு செய்துவிட்டால் மாதம்தோறும் கரன்ட் பில் செலவு மிச்சம். மக்கள் இதன் பயன்பாட்டை உணர்ந்து சோலார் சாதனங்களை உபயோகிக்க முன்வர வேண்டும்” என்றார்.

மத்திய அரசைப் போலவே தமிழக அரசும் சோலார் சக்தியின் பயன்பாட்டை மக்களிடையே கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தால் இருளில் தவிக்கும் தமிழகம் நிச்சயம் பிரகாசிக்கும்.

– பானுமதி அருணாசலம், படங்கள்: வீ.நாகமணி.

நன்றி:- நா.வி