தொகுப்பு

Archive for the ‘நல்ல பாடம்’ Category

நல்ல பாடம் – மு.அ. அபுல்அமீன் நாகூர்

செப்ரெம்பர் 25, 2013 1 மறுமொழி

கசடறக் கற்று, கற்றபடி நிற்றலில் வெற்றி உண்டு என்று நிரூபித்தவர் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள். ஒரு நாள் இமாம் அவர்கள் வெளியில் செல்கையில் அவர்களிடம் பொதுக் கல்வி பயின்று உயர் கல்வி பெறவிருந்த மாணவர், மனிதர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பையை கொட்டுவதைக் கண்டார்கள்.LITT

அந்த மாணவரை அழைத்து, “”பொதுச் சொத்தை அபகரிக்கும் உனக்கு உயர்கல்வி கற்றுத் தருவது எனக்குக் கடமையல்ல” என்று கண்டித்து சொன்னார்கள்.

மாணவர், ஆசிரியர் சொன்னதன் பொருள் புரியாது விழித்து நின்றார். அவரை வீதி ஓரத்தில் நிற்க வைத்த இமாம் அவர்கள் “”அசுத்தங்களை வெறுத்து விடுங்கள் என்ற திருக்குர்ஆனின் 74-5வது வசனத்தை மறந்துவிட்டீரா? வெறுத்து விடும் அசுத்தங்களை மனிதர்கள் நடமாடும் சாலையில் கொட்டுவது பொறுத்துக்கொள்ளக் கூடியதா?” என்று கேட்டார். மாணவர் மலைத்து நின்றார்.

இமாம் தொடர்ந்தார்கள், “”செல்லும் வழியில் தீமை பயக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது நன்மை பயக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் அபூபர்ஸத் (ரலி) அவர்களிடம் ஏவியதை முஸ்லிம் நூலில் படித்ததைப் பறிகொடுத்து விட்டீரா? நீர் படித்து என்ன பயன்?”. மாணவர் மௌனமாய் நின்றார்.

LITTT“எவரேனும் ஒரு சாண் அளவு நிலத்தை அபகரிப்பாராயின் அவனுடைய கழுத்தில் அல்லாஹ் (மறுமை நாளில்) ஏழடுக்கு பூமியை வளையமிடுவான்’ என்ற ஏந்தல் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை புகாரி, முஸ்லிம் நூல்கள் அபூஸல்மா இப்னு அப்திற்றஹ்மான் (ரலி) அவர்களின் அறிவிப்பாகக் கூறுவதை அறியாமல் செய்யும் அறிவிலியா? அறிந்தும் அடாவடியாய் செய்யும் அநியாயக்காரரா?”.

“நீர் கொட்டிய குப்பையால், பொது மக்களுக்குப் பொதுவான பாதையில் ஒரு பகுதி மனிதர்கள் நடமுடியாதபடி பயனற்றுப் போகிறது. பொதுப் பாதையை பொது சொத்தை இவ்வாறு பயனிழக்கச் செய்வது அந்தச் சொத்தை அபகரிப்பதற்கு ஒப்பாகும்?”.

-இமாம் அவர்களின் விளக்கத்தால் தெளிவு பெற்ற மாணவர் கொட்டிய குப்பையை அள்ளி எடுத்து மக்கள் நடமாடாத பகுதியில் கொட்டினார்.

பள்ளியில் நடத்திய பாடத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் இந்நிகழ்ச்சி இக்காலத்திலும் தெருவில் குப்பையைக் கொட்டுவோருக்கும், கட்டிடம் கட்ட மணல், செங்கல், கருங்கல், ஜல்லிகளை சாலையில் கொட்டி வைத்து கான்கிரீட் கலவை போடுவோருக்கும், தப்பென்று தெரிந்தும் பொது சொத்துக்களை, பிறரின் சொத்துக்களை அடியோடு அபகரித்து நிலப்பறிப்பு மோசடியில் ஈடுபடுவோருக்கும் சூடுகொடுக்கும் நல்ல பாடம்.

நன்றி:- தினமணி 19 SEP 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.