தொகுப்பு

Archive for the ‘பகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்’ Category

பகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள் – கோபிநாத்


வெளிநாடுகளில் உணவகங்களிலோ, பல்பொருள் அங்காடிகளிலோ நிறைய மாணவர்கள் பகுதி நேரப் பணியாளர்களாக வேலை செய்வதைப் பார்க்க முடியும். கார் கழுவுவது, பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, உணவு பரிமாறுதல், கணக்கர் பணி என்று ஏதாவது ஒரு வேலை.

இவர்களிடம் இல்லாத காசா? எதற்காக இந்த இளம் வயதில் இப்படி வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றும். வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட வயது வந்த பிறகு, அவரவர் செலவுக்கு அவர்களேசம்பாதித்துக் கொள்ள வேண்டும். அப்பா, அம்மா பணம் தர மாட்டார்கள் என்றுகேள்விப்பட்டு இருக்கிறோம்.

நமக்குத்தான் இப்படிப்பட்ட எண்ண ஓட்டங்கள் மனதில் சுழலுமே ஒழிய, அந்த மாணவர்கள் ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் அந்தப் பணிகளைச் செய்வார்கள். நானும் எனது நண்பரும் ஒரு முறை ஓர் உணவகத்துக்குச் சென்றபோது, பகுதி நேரப் பணியாளர்களாக நிறைய மாணவர்கள் வேலை செய்வதைப் பார்த்தோம். ‘நம்ம பொழப்பு பரவாயில்லடா நண்பா… இவங்க சின்ன வயசிலயே இப்படிப் பணம் சம்பாதிக்க வேண்டி இருக்கே’ என்று ஆற்றாமையோடு சொன்னான்.

வெளிநாட்டில் இதுபோல் பகுதி நேரப் பணி செய்யும் இந்திய மாணவர்கள் நிறையப் பேரைப் பார்க்க முடியும். ஒரு பக்கம் படித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் சம்பாதித்துக்கொண்டு இருப்பார்கள். பகுதி நேரப் பணி செய்யும் குணம் உள்ளூர்ச் சூழலிலும் இப்போது அதிகரித்து வருகிறது என்பது உண்மை.

வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் அடுக்கி, லாரியில் ஏற்றி இன்னோர் இடத்துக்குக் கொண்டுசேர்க்கும் பணியைச் செய்வதற்காக நான்கு இளைஞர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசியபோதுதான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். ஓய்வு நேரங்களில் இதுபோன்ற வேலைகள் செய்து பணத் தட்டுப்பாட்டைச் சரிசெய்துகொள்வதாகச் சொன்னார்கள். அந்த நிறுவனத்தை நடத்துவதே கல்லூரி மாணவர்கள்தான்.

படிக்கிற மாணவர்கள், கௌரவம் பார்க்காமல் சுமை தூக்குவது போன்ற வேலைகளைச் செய்வதைப் பார்க்கிறபோது கொஞ்சம் புதிதாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. இதுபோன்ற இளைஞர்கள்பற்றி விசாரிக்க ஆரம்பித்தபோது நிறையத் தகவல்கள் கிடைத்தன. ஏ.சி. பொருத்துபவருக்கு உதவியாளர், இரவு நேர ஆட்டோ டிரைவர், விடுமுறை நாட்களில் கணக்கு எழுதிக் கொடுப்பது. மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக்கொடுப்பது எனப் பல்வேறு விதமான பகுதி நேரப் பணிகள் இங்கும் நடந்துகொண்டு இருக் கின்றன.

இப்படிப் படிக்கிறபோதே வேலை செய்வது, வெளி நாடுகளில் ஒரு கலாசாரமாகவும் வாழ்க்கை முறை யாகவும் மாறி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். நமது இத்தகைய வேலைகள் பணத் தட்டுப்பாடுகளைச் சரிசெய்யவும், கைச் செலவுக்குத் தேவைப்படும் பணத்தைச் சம்பாதிக்கவுமே மேற் கொள்ளப்படுகிறது. அப்பா, அம்மாவின் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது பாராட்டுக்கு உரியது. ஆனால், தேவை கருதி நடக்கும் இந்தப் பணிகளை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டியது காலத்தின் அவசிய மாகி இருக்கிறது.

படிப்பதே ஒரு வேலையைப் பெறுவதற்குத்தான் என்கிற மனோபாவத்தில் இருந்து, வெளியே வந்து சுயமாகச் செயல்படவும் வகுப்பு அறைகளுக்கு அப்பால் இருக்கும் வாழ்க்கையின் அனுபவங்களை உணரவும் இந்தப் பகுதிப் நேர பணிகள் நிச்சயம் பயன்படும். வெகுஜன மக்களின் குணாதிசயங்கள் என்ன? விதவிதமான மனிதர்களின் தேவைகள் என்ன என்பதை விளங்கிக்கொள்ளவும் உதவும்.

பாடப் புத்தகங்களில் சொல்லித்தரப்படாத அல்லது சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாத பல்வேறு வாழ்க்கைச் சூத்திரங்களை இந்தப் பகுதி நேரப் பணிகள் சொல்லித் தரும்.

பணத்தைச் சம்பாதிக்கச் சொல்லித் தரும் நம் சமூகம், பெரும் பாலான நேரங்களில் அதைக் கையாள்வது குறித்து, தெளிவாகச் சொல்வது இல்லை. அப்பாவின் பணத்தைச் செலவழிப்பதில் இருக்கிற சுகமும், தான் சம்பாதித்த பணத்தைச் செலவு செய்வதில் இருக்கிற சுதந்திரமும் வேறுவேறானவை.

சுயமாகச் சம்பாதித்து அதைக் கையாள ஆரம்பிக்கிறபோது, ஓர் இளைஞன் தன் வாழ்வின் மிக முக்கியமான அம்சத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறான். அந்த அவசியமான அனுபவத்தை ஒரு சமூக ஆசிரியராக நின்று, பகுதி நேரப் பணிகள் சொல்லிக்கொடுக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட வயது வரை சந்தோஷமாகச் சுற்றித் திரிந்துவிட்டு, வேலையில் சேர்ந்த பிறகு, ‘பொறுப்பான பிள்ளையாக’ மாற வேண்டும் என்கிற மனோபாவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபாகவே மாறிப்போய் இருக்கிறது.

கொஞ்ச காலம் வரை படிக்கிற இயந்திரமாகவும் பிறகு, சம்பாதிக்கிற இயந்திரமாகவும் இளைஞர்களின் வாழ்க்கைச் சூழல் அமைந்துவிட்டதற்கு அதுவே காரணம்.

இந்த மூச்சுப் பிடிக்கிற பயணத்தில் 1,000 ரூபாயைச் சம்பாதிக்க ஒரு சராசரி இந்தியன் எவ்வளவு உழைக்க வேண்டும்… எவ்வளவு தியாகம் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பகுதி நேரப் பணிகள் உணர்த்துகின்றன.

எப்போதும் கண்டுகொள்ளாமல் விடப்படும் சராசரி இந்தியப் பிரஜையின் கஷ்டங்களைக் கவனிக்கவும், அதைவிட மேலாகப் படிக்க வேண்டிய வயதில் புத்தகங்களைத் தொலைத்துவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களாக ஓடிக்கொண்டு இருக்கும் சமகால இந்தியாவை உணரவும் இந்தப் பகுதி நேரப் பணிகள் அவசியம்.

நமது சூழலில் வாழ்க்கையின் காயங்களையும் அதற்கு மருந்து போட வழி இல்லாமல் தவிக் கும் மனிதர்களையும் இந்திய இளைஞனுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக் கிறது. அந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதன் வாயிலாகவும், வாய்ப்பாகவும்கூட இந்தப் பகுதி நேரப் பணிகள் அமையலாம்.

ஓர் உணவகத்தில் பில் போட்டுக் கொடுக்கும் பகுதி நேரப் பணி செய்யும் ஓர் இளைஞன், கொல்லைப்புறத்தில் சாக்கடைக்கு அருகே அமர்ந்து, எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய பாத்திரத்தை ஒருவர் கழுவிக்கொண்டு இருப்பதைக் கவனிக்காமலா போவான்? ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் பகுதி நேரப் பணியில் இருக்கும் ஒரு கல்லூரி மாணவன், தன் தங்கையின் வயதில் இருக்கும் சிறுமி அற்ப சம்பளத்துக்குத் தன் உழைப்பைக் கொட்டிக்கொடுக்கும் சூழலை அறிந்துகொள்ளாமலா போவான்.

படித்து முடித்து வேலையில் இருக்கும்போதும் இவை எல்லாம் கண்ணில்படுமே என்று கேள்வி வரலாம். அந்தச் சூழ்நிலையில், சம்பாதிப்பதற்காக வேலை பார்க்கும் இயந்திரமாகத்தான் இந்திய இளைஞன் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறான். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் குறித்த பார்வைகள் அந்தக் காலகட்டத்தில் பலம் இல்லாததாகவே இருக்கின்றன.

பணத்துக்காக மட்டுமின்றி; வாழ்க்கைபற்றிய புரிதலுக்காகவும், சமூகத்தின் யதார்த்தங்களை அணுகவும், சுயத்தை மேம்படுத்தவும் பகுதி நேரப் பணிகளில் ஈடுபடுங்கள். குறைந்தபட்சம் கௌரவமான வேலை – கௌரவக் குறைச்சலான வேலை என்று தரம் பிரித்துவைத்திருக்கும் பார்வையாவது மாறும்.

இன்றும் தமிழ்ச் சமூகத்தின் நிறையப் பிரிவுகளில் படிக்கும்போதே ஒரு வேலையில் இருந்து அதன் நீக்கு போக்குகளை அறிந்துகொள்ளச் சொல்கிற வழக்கம் உண்டு.

பாக்கெட் மணிக்காகவும், பணத் தட்டுப்பாட்டுக் காகவும் மட்டும் அல்லாது, பணம் இருக்கிறவர்களும் பகுதி நேரப் பணிகளில் கவனம் செலுத்துவது சமூகத்தின் மீதான இளைஞர்களின் கவனிப்பை இன்னும் அழுத்தமாக்கும்.

கிளம்புங்கள்…

எல்லாத் தெருக்களின் மூலைகளிலும் எதிர்கால இந்தியா என்னைக் கவனிக்குமா என்று ஏக்கத்தோடு பலர் காத்திருக்கிறார்கள்

நன்றி:- கோபிநாத்

நன்றி:- ஆ.வி

!