தொகுப்பு

Archive for the ‘ஒற்றுமையாய்வாழ்வோம்’ Category

ஒற்றுமையாய் வாழ்வோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய நெறியைப் போதிக்கும் முன்னர் அரேபியாவில் நிலவிய அடிமை முறை இஸ்லாமிய ஆரம்ப காலத்திலும் தொடர்ந்தது. இஸ்லாம் முழுமையாக பரவியதும் அடிமை முறை அகன்றது.

குற்றங்களைக் களைய, குறை நீக்க, இறை மன்னிப்பு பெற, அடிமையை விடுதலை செய்ய குர்ஆன் கூறுகிறது. “”விடுதலையை விரும்பிய அடிமைகளை விடுவிப்போர் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட இறையச்சம் உடையோர்” என்று திருக்குர்ஆனின் 2-177வது வசனமும், “”ஒருவர் வாக்குறுதியளித்து மீறினால் அக்குற்றம் நீங்க ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்” என்று திருக்குர்ஆனின் 5-89வது வசனமும் தெரிவிக்கின்றன.

குர்ஆனையே வாழ்க்கை நெறியாக வாழ்ந்த வள்ளல் நபி அவர்களும் அவர்களின் தோழர்களும் பல அடிமைகளை விடுவித்த, விடுதலை பெற்றுத் தந்த நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.

ஜீமஹ் இனத்தைச் சேர்ந்த உமையாவிடம் அடிமையாய் இருந்தார் நீக்ரோ பிலால். ஜீமஹ் கூட்டம் பிலாலை கசையால் அடித்தும் கால்களால் உதைத்தும் வதைத்துக் கொண்டிருந்த பொழுது அவ்வழியில் வந்தார் அபூபக்கர் (ரலி) அவர்கள். பிலால் படும் வேதனையைக் கண்டு அவரை விடுதலை செய்ய உமையாவிடம் வேண்டினார் அபூபக்கர் (ரலி) அவர்கள். உமையா பெருந்தொகையைக் கேட்டார். பேரம் பேசாமல் அபூபக்கர் (ரலி) அவர்கள் உமையா கேட்ட 10 தங்க நாணயங்களைக் கொடுத்து பிலாலை விடுதலை செய்தார்.

முன்னரே இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பிலால் அண்ணல் நபியின் ஆணையை ஏற்று முதன் முதலில் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் ஒருவரானார். மதீனாவில் அண்ணல் நபியின் அருகிலேயே இருந்தார்.தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதலில் முழங்கியவர் பிலால் (ரலி). மதீனாவில் புகழ்பெற்ற மஸ்ஜிதுன் நபவியில் ஐந்து வேளை தொழுகைகளுக்கும் பாங்கு சொல்லும் பாக்கியம் பெற்றவர் பிலால் (ரலி). அதனால்தான் இன்றும் பள்ளி வாசல்களில் பாங்கு சொல்பவருக்கு பிலால் என்று பெயர்.

மக்காவை வெற்றி கொண்டு அண்ணல் நபியுடன் கஃபாவில் நுழைந்த மூன்று தோழர்களில் பிலால் (ரலி) அவர்களும் ஒருவர்.

விடுதலை பெற்ற அடிமை என்று வேற்றுமை பாராட்டாது, இனத்தால் நீக்ரோ என்ற இன பாகுபாடு இன்றி, கருப்பர் என்ற நிற வேற்றுமை காட்டாது பிலால் (ரலி) அவர்களை பெருமைப்படுத்திய பெருமானார் வழியைப் பின்பற்றுவோம். எவ்வேற்றுமையும் இன்றி எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் என்று ஒற்றுமையாய் வாழ்வோம். வாழ்வில் வெற்றியும் பெறுவோம்.


நன்றி:- தினமணி 01_June-2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

சாட்சி!