தொகுப்பு

Archive for the ‘வரதட்சணையை ஒழித்து விட்டோம்’ Category

வரதட்சணையை ஒழித்து விட்டோம்! – சுபாஷிணி


ஒரு கிராமத்து பெண்களின் வெற்றி முழக்கம்!

ரில் காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த வரதட்சணை கொடுமையை வேரறுத்ததோடு, மீண்டும் அது தலையெடுக்காத வகையில் சட்டதிட்டங்களை வகுத்து, ஊர்ப்பெரியவர்கள் அனுமதியோடு அதை அமல்படுத்தியிருக்கிறார்கள் ஒரு கிராமத்துப் பெண்கள்!

பெரம்பலூர் மாவட்டம், வெள்ளாற்றங்கரையில் இருக்கிறது லெப்பைக்குடிக்காடு. ஏரியாவாசிகள் இதை ‘சின்ன துபாய்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். அந்தளவுக்குச் செழிப்போடு இருக்கும் ஊரில் 95 சதவிகிதத்தினர் முஸ்லிம் மக்கள்தான்!

ஊரில் நுழைந்தாலே சென்ட் வாசனை மணக்கிறது. வீட்டுக்கு ஒருவராவது வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார்கள். இந்த ஊர் முஸ்லிம் சகோதரிகள்தான் ஒன்றிணைந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த அதிரடிச் சட்டத்தைப் போட்டிருக்கிறார்கள்.

சாதனைக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, ‘‘எப்படிச் சாதித் தீர்கள்?’’ என்ற நமது பிரமிப்பையே அவர்கள் முன் கேள்வி யாக வைத்தோம். ‘‘எங்கள் ஊர் போலவே எல்லாஊரிலும் வரதட்சணைக்கு எதிரான விடியல் பிறக்கட்டும்!’’ என்று உற்சாகத்துடன் ஆரம்பித்துவைத்தார், ஓய்வுபெற்ற நல்லாசிரியரான மொஹமது நிஸா பேகம். இவர், ஊரில் 200 பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘ஃபாத்திமா ரஃபி பெண்கள் நற்பணி மன்ற’த்தை வழிநடத்தி வருகிறார்.

ஊர்ப்பெண்களின் சாதனை சரிதத்தை கி.மு. | கி.பி. போல, வ.மு. | வ.பி. என (அதாங்க… வரதட்சணை ஒழிப்புக்கு முன், பின்) பார்ப்போம்.

வ.மு. கணக்கைப் பெண்கள் விவரித்துக்கொண்டே வர, ஒவ்வொரு வரிக்கும் ‘அட!’ போட வேண்டியதாயிற்று. அப்படியொரு ‘மடா’ கணக்கு அவர்களின் வரதட்சணை படலத்தில்! ஐந்து வாரிசுகளுக்கு திருமணம் நடத்திய அனுபவசாலியான ரஹமத்துன்னிசா அவ்வப்போது திருத்தம் சொல்ல, பெண்களின் கச்சேரி களைகட்டியது.

‘‘இங்கே பெண் பார்த்தல் என்ற துவக்க விருந்தோடு வரதட்சணை வைபவம் தொடங்கிவிடும். பெண் பார்த் ததும் சின்ன நிச்சயம் (நிச்சயதார்த்தம்) நடக்கும்.இதில் 4 மடா (ஒரு மடா =4 மரக்காணி) பிரியாணி மாப்பிள்ளை வீட்டுக்குப் போக வேண்டும். இதில்லாமல், அங்கிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட வருவார்கள். அடுத்ததாகப் பெரிய நிச்சயதார்த்தம். பத்து மடா பிரியாணி யோடு எல்லா ஸ்வீட்டி லும் வகைக்கொன்றாகத் தட்டுக்கு நாலு கிலோ வீதம் மூன்று தட்டுகள், பழம், பூ வகைகள், வத்தல் 20 அன்னக்கூடை, அப்பளம் 5 கிலோ, இடியாப்பம் மாவு 20 மரக்காணி, முட்டை 150, பால் என்று அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகும்.

இதில் ஏதேனும் தவறினாலோ, குறைந்தாலோ… அதற்கு ஈடான ரொக்கத்தை வைத்துவிட வேண்டும்.

அடுத்து, வரதட்சணை பேசுவார்கள்! ரொக்கம் ஒரு லட்சத்திலிருந்து மூணு லட்சம் வரை. பவுன் முப்பதில் தொடங்கி, நூறுக்கும் மேலே போகும்! இதற்குப் பிறகுதான் நிக்காஹ் (திருமணம்) நடைபெறும்.

இதில் பிரியாணி 20 மடா, இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சைடு டிஷ்ஷாக சிக்கன், மேலும் ஸ்வீட் வகைகள் உண்டு. பிற்பாடு நடைபெறும் பெண் அழைப்பிற்கு, பிரியாணி கணக்கு 6 மடா போட்டுக் கொள்ளுங்கள்!’’

திடீரென மூத்த பெண்மணி ஒருவரிடமிருந்து முணுமுணுப்பு. ‘‘நம்மூர் வரதட்சணை கேட்டை இப்படி ‘மடா, மடா’வா பட்டியல் போட்டுச் சொல்றீங்களே… நமக்குத் தானே இழுக்கு?’’ என்ற அவரது புலம்பலை இடைமறித்த இளம்பெண்கள்,

‘‘பெரியம்மா, இதுக்கு முன்னாடி எத்தனை சிரமம் இருந்ததுனு சொன்னாத்தான், இப்ப எவ்வளவு நிம்மதியா இருக்கோம்னு வித்தியாசம் தெரியவரும்!’’ என்று கையமர்த்திவிட்டுத் தொடர்ந்தனர்.

‘‘நிக்காஹ் முடிந்த பின்பும் வேற ரூபத்துல வரதட்சணை வந்து நிற்கும். பெரும்பாலான மாப்பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் என்பதால், ஃபாரீனிலிருந்து முதல்முறை வரவேற்கவும் வழியனுப்பவும் பெண் வீட்டார்தான் செலவு செய்யணும்.

பெண் கருவுற்றதும் வளைகாப்புக்குப் பத்திலிருந்து இருபது பவுன் வரை வைத்தாக ணும். ஒன்பதாவது மாதம்6 மடா பிரியாணியோடு உபசரிப்பும் பெண் வீட்டார் பொறுப்பு. குழந்தை பிறந்ததும் நாற்பதாம் நாள் தாய்|சேய்அழைப் பின்போது, 6 மடா பிரியாணியோடு தாய்க்குப் பட்டுப்புடவை, சேய்க்கு மூன்றிலிருந்து பத்து பவுன் செலவு உண்டு.

பிறந்தது பையன் என்றால், ஆறு வயதில் கத்தனா (சுன்னத்) விசேஷத்தில் மூணு பவுனோடு 6 மடா பிரியாணி தயார்செய்ய வேண்டும். இதுவே பெண் எனில்,காதுகுத்தின் போது இன்னும் அதிகம் செலவாகும். இந்தச் செலவுகள், அடுத்த குழந்தைக்கும் தொடரும்!’’ என்று பெருமூச்சை ரிலீஸ் செய்தார்கள்.

பெண்கள் நற்பணி மன்றத்தின் செயலாளரான மெஹருன்னிசா, ‘‘‘ஒரு பெண் மகர் (மணக்கொடை) தொகையாக எதைக் கேட்கிறாளோ, அதை மணமகன் கொடுத்துத்தான் நிக்காஹ் செய்யணும்’ என்று எங்கள் குரான் சொல்கிறது. எங்கள் ஊரும் இருபது வருடங்கள் முன்பு குரான் வாசகப்படிதான் இருந்தது. படிப்படியாக வரதட்சணைப் பேய் தலையெடுத்ததும் எத்தனையோ குடும்பங்கள் நொடித்துப் போய்விட்டன. நன்கு படித்த, அழகான, மார்க்கக் கல்வி பெற்ற எத்தனையோ இளம்பெண்களுக்கு, வரதட்சணைப் பந்தயத்தில் போட்டி போட முடியாத ஒரே காரணத்தினாலேயே திருமணம் தள்ளிப்போனது!’’ என்றார் வெதும்பலாக.

அடுத்து, ஊர்ப்பெண்கள் ஒன்றுகூடி சாதித்த வரதட்சணை வதைபடலத்தின் வியூகத்தை விளக்கினார் மொஹமது நிஸா பேகம்.

‘‘ஒருநாள், நற்பணி மன்ற அலுவலகத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, வரதட்சணை பற்றிப் பேச்சு வந்தது. வரதட்சணையால் தங்கள் குடும்பம் பட்ட அவஸ்தைகளை ஒவ்வொருவரும் குமுறலாக வெளிப்படுத்த, ‘வரதட்சணைக்கு நாமே ஏன் ஒரு முடிவு கட்டக் கூடாது?’ என்று கேள்வி எழுந்தது. உடனே, வரதட்சணை எந்தெந்த ரூபத்திலெல்லாம் தலையெடுக்கிறது, அதற்கான வாய்ப்புகளை எப்படி ஒழிப்பது என்றெல்லாம் அலசி, பட்டியல் போட்டு, ஜமாத் கவனத்துக்குக் கொண்டுபோனோம்!’’ என்றார்.

இந்த தீர்மானங்கள் ஊரின் சட்டதிட்டமாக அறிவிக்கப்பட்ட விவரத்தைச் சொன்னார் பேரூராட்சித் தலைவரான அப்துல் அஜீஸ்.

‘‘எங்கள் ஊரில் யாரும் வரதட்சணை கேட்டுக் கொடுமைப் படுத்தியதாக ஒரு சம்பவமும் இல்லை. இங்கு வரதட்சணை ஒரு கெளரவப் பிரச்னை மட்டுமே! ஆனால், செல்வாக்கான மாப்பிள்ளையை ஈர்க்க அதிகம் செலவிடும் போக்கை வளரவிட்டால், இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் விபரீதத்துக்கு வழிவகுக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, வரதட்சணை என்பது எங்கள் இஸ்லாத்துக்கு எதிரானது. எனவே, பெண்களின் யோசனைகளை எழுத்து வடிவில், ஊரின் இரண்டு ஜமாத்தினர் பார்வைக்குக் கொண்டு சென்றோம். இரண்டு ஜமாத்தும் ஊர்ப் பெரியவர்களைக் கலந்தபின், ‘லெப்பைக்குடிக்காட்டில் வரதட்சணை ஒழிக்கப்பட்டு விட்டது’ என்ற பகிரங்க அறிவிப்போடு, திருமண சட்ட விதிகளை நூலாக அச்சிட்டு, வீட்டுக்கு வீடு விநியோகித்தோம். வெளியூரிலிருந்து பெண் எடுக்க | கொடுக்க வருபவர்களையும் ‘இதை முதலில் படியுங்கள்’ என்கிறோம். திட்டம் போட்டது, சட்டம் வகுத்தது மட்டுமல்லாமல் எங்கள் நிக்காஹ் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த பெண்கள் ரொம்பவும் விழிப்போடு தொடர்ந்து ஊரைக் கவனித்தபடி இருக்கிறார்கள்!’’ என்று பெருமிதத்தோடு சொன்னார்.

இனி, வ.பி|க்கு வருவோம்.

‘‘பெண்கள் கூடித் தயாரித்திருக்கும் திருமண சட்ட விதிகள் புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?’’ என்று கேட்டதும், புத்தகத்தைக் கையில் தந்து, கோரஸாக அதன் ஹைலைட்டையும் சொன்னார்கள்.

பெண் பார்த்தல், சின்ன நிச்சயம், பெரிய நிச்சயம் என்ற போர்வையில் பெண் வீட்டாரிடமிருந்து பணம் கறப்பதற்கு இனி தடை விதிக்கப்படுகிறது. சிம்பிளாக டீ, பிஸ்கெட்டுடன் ஒரே நிச்சயம்தான்!

பணம், பொருள், நகை, வீட்டுமனை, விசா, கடன் எந்தப் பெயரிலும் வேறெந்த ரூபத்திலும் வரதட்சணை வாங்கக்கூடாது. தேனிலவு செல்லவும் பெண் வீட்டாரிடம் பணம் கேட்கக்கூடாது.

வளைகாப்பு, குழந்தை பிறப்பு, குழந்தை அழைப்பு, பெயர் சூட்டுதல், முடியெடுத்தல், காதணி விழா, சுன்னத் செய்தல் என எந்தக் காரியங்களின் பெயராலும் பெரிய அளவில் விருந்து உபசாரமோ அல்லது அதற்கு ஈடாகப் பணமோ பெண் வீட்டாரிடம் பெறக்கூடாது.

இந்தச் சட்ட விதிகள் வெளியூரிலிருந்து சம்பந்தம் கொள்வோருக்கும் பொருந்தும்.

ஆஹா… வரதட்சணைக்கு எதிராக லெப்பைக்குடிக்காடு சகோதரிகள் கெளம்பிட்டாங்க!

அப்ப… நீங்க..?!