தொகுப்பு

Archive for the ‘பகுதி-14 டாக்டரிடம் கேளுங்கள்’ Category

பகுதி-14 டாக்டரிடம் கேளுங்கள்

செப்ரெம்பர் 23, 2010 பின்னூட்டமொன்றை இடுக

‘கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!’

”எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. முதல் தடவை கருத்தரித்தபோது, மூன்றாம் மாதத்தில் எதிர்பாராதவிதமாக கலைந்து போனது. உடனடியாக டாக்டரிடம் சென்று டி.என்.சி. செய்து கொண்டேன். அதற்குப் பின் கருத்தரிக்கவே இல்லை. 150 செ.மீ. உயரம், 77 கிலோ எடை என்று இருக்கிறேன். இப்படி கனத்த சரீரத்துடன் இருப்பதுதான் கருத்தரிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்குமோ என்று தோணுகிறது. தெளிவுபடுத்துங்களேன்…”

டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:

“உங்களின் பிரச்னைக்கு, அதிகப்படியான பருமனே காரணமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஓவர் வெயிட்டின் காரணமாக ‘அவ்யலேஷன்’ (Ovulation) எனப்படும் சினைமுட்டை சீராக உருவாகும் சுழற்சி, தடைபட வாய்ப்புள்ளது. உங்கள் உயரத்துக்கு, நீங்கள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய எடை 50 கிலோதான். எனவே, டயட் மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். முன்னதாக, ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று, நீங்கள் கருவுறாமல் இருப்பதற்கான காரணம் இதுதானா என்பதை உறுதி செய்தபின், அவர் வழிகாட்டுதல்களின் கீழ் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

கருத்தரிக்காமல் இருப்பதற்கு… ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், பி.சி.ஓ. என்று வேறு காரணங்கள் கண்டறியப்பட்டால் அதற்கான முறையான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.

குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்… கருவுறாததற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்று நினைத்துக் கொண்டு உங்களுக்கு மட்டுமே சோதனைகளை செய்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. உங்கள் கணவருக்கும் தேவையான பரிசோதனைகள் செய்து, அவரிடம் ஏதேனும் குறைபாடுள்ளதா என்பதையும் கண்டறிந்து, தேவையெனில் அவரை சிகிச்சை எடுத்துக் கொள்ளச் செய்யுங்கள்.”

குழந்தைகளின் குடலை நஞ்சாக்கும் ‘கரகர மொறுமொறு’!

“கிண்டர் கார்டன் செல்லும் நான்கு வயது மகன், அடிக்கடி வயிற்றுவலி என்று அரற்றுகிறான். சமயங்களில் சாப்பிட்டதுமே வாயில் எடுத்து விடுகிறான். மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து பார்த்தபோது எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார். குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள்… ப்ளீஸ்!”

டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:

“இந்த வயது குழந்தைகள்… அழுக்குப் படிந்த வெளியிடங்களில் கைகளை வைத்து விளையாடுவது, மூக்கினுள் வைப்பது, பின்புறத்தில் வைப்பது, பிறகு.. அதே விரலை வாயில் வைப்பது என இஷ்டத்துக்கு நடந்து கொள்வார்கள். இதெல்லாம் பல்வேறு கிருமித் தொற்றுகளுக்குக் காரணமாகிவிடும். அதுதான் வயிற்றுவலிக்கும் வாந்திக்கும் காரணமாகி விடுகிறது. ஒரு குழந்தைக்கு இருக்கும் தொற்றுகள், அதோடு பழகும் மற்ற குழந்தைகளுக்கும் எளிதில் தொற்றிவிடும்.

இவற்றைத் தவிர்க்க குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சுத்தம், சுகாதாரத்தை பயிற்றுவிக்க வேண்டும். கைவசம் கைக்குட்டை வைத்திருத்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், கண்ட இடங்களில் கை வைக்காதிருத்தல், பாத்ரூம் சென்று வந்ததும் கை, கால் கழுவுதல் போன்ற பழக்கங்களை, வழக்கமாக்க வேண்டும்.

நமது கவனத்தையும் மீறி, வெளியிடங்களில் உள்ள சுகாதாரமற்ற உணவுகளைக் குழந்தைகள் சாப்பிடுவதாலும் வயிற்றில் பல கிருமிகள் ஏற்படலாம். மசாலாவும் காரமும் கலந்து பல்வேறு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ‘கரகர மொறுமொறு’ பதார்த்தங்களாலும், ஃபாஸ்ட் ஃபுட் என்ற பெயரில் சிக்கலான உணவு கூறுகளை நாமே வாங்கித் தருவதாலும் குழந்தைகளின் பிஞ்சு குடல், நஞ்சு சேருமிடமாகிறது. எனவே, ‘ஸ்நாக்ஸ்’ என்ற பெயரில் குப்பை உணவுகளை தருவதற்கு பதில்… காய்கறிகள், பழங்கள், சாலட், பருப்பு உணவுகள் போன்றவற்றை தந்து பழக்க வேண்டும்.

இவை தவிர, மனோரீதியான சில விஷயங்களும்கூட வயிற்றுவலிக்கு காரணமாக அமைகின்றன. இவை உடல் ரீதியான மருத்துவ பரிசோதனைகளில் பிடிபடாது.

ஐந்து வயது வரை விளையாட்டு, பாட்டு, நடனம் இவற்றின் மூலமாக கற்றல், கற்பித்தல் இருக்க வேண்டும். அதிகப்படியான எழுத்து பயிற்சியோ, ஹோம் வொர்க் என்ற பெயரில் வீட்டிலும் அதிகப்படியான பாட திணிப்போ அவர்களை மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். எனவே, இவற்றில் இருந்து தப்பிக்க அவர்களாகவே ‘வயிற்றுவலி’, ‘தலைவலி’ என்று காரணம் சொல்வார்கள். எனவே, உங்கள் குழந்தையின் பாடச் சுமைகளில் இருந்து அவனை விடுவிடுத்துப் பாருங்கள்… அவன் கூறும் ‘வயிற்றுவலி’ சரியாகிறதா என்று பார்க்கலாம்!

தவிர, குடற்புழுக்கள், குடல்வால் அழற்சி, வயிற்றுப்புண், சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் பிரச்னைகளும் குழந்தைகளின் வயிற்றுவலிக்கு காரணமாக இருக்கும். எனவே, அவற்றை மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்!”

நன்றி:- டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:

நன்றி:-டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்