தொகுப்பு

Archive for the ‘கைபேசி’ Category

உங்களிடம் செல்போன் (Mobile Phone) இருந்தால் அவசியம் இதை படியுங்கள் – முஹம்மத் ஆஷிக்


இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட – அதிவேக வளர்ச்சியுற்ற – அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் ‘கைபேசி’ உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன் Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.

ஒரு Caller தன் செல்ஃபோனில் ஒரு Receiver-ஐ அழைக்கும்போது அவரின் செல்ஃபோனிலிருந்து வெளியாகும் மின்காந்தப்புலன் (Electro Magnetic Field)  அருகிலிருக்கும் மொபைல் (Base Station – 1) டவருக்கு செல்கிறது. அங்கிருந்து சிக்னல், Switching Center-க்கு செல்கிறது. இங்கே அழைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவரின் விபரங்கள் சேமிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து சிக்னல் அழைக்கப்படுபவரின் அருகே இருக்கும் செல்ஃபோன் (Base Station  – 2) டவருக்கு செல்கிறது. இதிலிருந்து புறப்படும் மின்காந்தப்புலன் Receiver-ன் செல்ஃபோனில் உள்ள ஆன்டென்னா மூலம் உட்கிரகிக்கப்படும் போது செல்ஃபோனில் ரிங் டோன் கத்துகிறது. அழைக்கப்படுபவர் வந்த அழைப்பை ‘ஓகே’ செய்யும்போது இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது.

பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. இவ்வாறு பேசும்போது செல்ஃபோனின் ஆன்டென்னா விலிருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கும் மின்காந்த அலைகள் எல்லா பக்கமும் தெறிக்கின்றன. அதில் கிட்டத்தட்ட பாதி ஆளவு அலைக்கதிர்கள் பேசுபர்களின் தலைக்கு உள்ளும் ஊடுறுவுகின்றன..! இந்த செல்ஃபோனின் மின்காந்த அலைக்கதிர்வீச்சின் அளவு, ஒரு மைக்ரோ வேவ் ஓவனின் அலைக்கதிர்வீச்சுக்கு ஏறக்குறைய இணையானது..! ஆக, விஷயம் அவ்வளவு விபரீதமானது..!
  1. உங்கள்  செல்ஃபோனின் கையேடு ( user’s manual) மூலம்.
  2. செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் இந்த தளம் மூலமாக.
  3. செல்ஃபோனின் FCC ID Number-ஐ என்டர் செய்து  இந்த தளம் மூலமாக.
தொடர்ந்து இதேபோல ‘அணைத்த கையும் காதுமாய் ‘ செல்ஃபோன் மூலம் நீண்டநேரம் பேசினால்..? பெரியவர்கள் மண்டைஓடு கனமானது. குழந்தைகளின் மண்டைஓடு மெல்லியது. இதனால், பெரியவர்களை விட குழந்தைகள் இக்கதிர்வீச்சினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, 5-வயது குழந்தைக்கு 75% பாதிப்பும் 10-வயது குழந்தைக்கு 50%-ம், பெரியவர்களுக்கு 25% பாதிப்பும் ஏற்படுகிறதாம்.
ஆக, இதே போல தினம் தினம் பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் என சூடாகும் மூளை செல்களில் உள்ள புரோட்டீன் சிதைய, கடைசியில் Brain Tumor-ல் அல்லது சில சமயம் Brain Cancer-ல்கொண்டு போய் விடுகிறதாம்..!இப்படி ஒரு சாரார் மிக தீர்க்கமாக ஆதாரங்களுடன் பரிசோதித்து சொல்ல, ‘அந்த அளவுக்கெல்லாம்… அப்படியெல்லாம்… ஒன்றும் ஆகாது’ என்று இன்னொரு சாரார்… (செல்ஃபோன் நிறுவனங்கள் சார்பாக…?) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு..? சில வருடங்கள் கழித்து “ஆமாமாம்… அந்த சாரார் சொன்னதே சரி”-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி..? அதோ கதி அல்லவா ..!

இதற்கு சரியான வழி, நீங்கள் செல்ஃபோன் வாங்கும்போது ‘ear phone’ என்று ஒரு அம்சம் பெட்டியுடன் சேர்த்து கொடுத்திருப்பார்களே..!? ம்ம்ம்… அதுதான்..! அதை தேடி எடுங்கள்..! ஒரு சில நிமிடங்களுக்கு மேலே பேசுவதாயின் கண்டிப்பாய் அதை இனி காதில் மாட்டிக் கொள்ளுங்கள்..! என்னது…? அதை காணவில்லையா…? சரி…வேறொன்று டூப்பிளிகேட்டாவது வாங்குங்கள் சகோ..!   ஆரோக்கியம் முக்கியம் அல்லவா..?
 அதுவரை என்ன செய்யலாம்…? அவசரத்துக்கு, இனி பேசும் போது செல்ஃபோனை காதுக்கும் வாய்க்கும் கிடைமட்டமாக பிடித்து, அதன்மூலம் ஆன்டேன்னாவிலிருந்து வெளியேறும் அலைக்கதிர்வீச்சு கூடுமானவரை தலைக்குள்ளே  செல்லாதவாறு பிடித்து பேசுங்கள்.  அப்புறம் ‘Speaker Phone’ என்று ஒரு அம்சம் உள்ளதே..! அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்..? அணைத்த கையும் காதுமாய் செல்ஃபோனில் பேசாமால் ‘Speaker Phone’ உபயோகித்தும் பேசலாமே..! 

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்?

பிப்ரவரி 17, 2011 2 பின்னூட்டங்கள்


இதோ, அதோ என்று இத்தனை நாளும் போக்குக் காட்டி வந்த 3ஜி போன் சேவை இப்போது வந்தேவிட்டது. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல், வோடபோன் என நான்கு நிறுவனங்களும் 3ஜி தொலைபேசி வசதியைக் கொடுக்க ஆரம்பிக்க, லட்சக்கணக்கானவர்கள் அதை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இருப்பினும் பலபேர்களுக்கு அந்த சேவையால் கிடைக்கும் நன்மைகள், என்னென்ன ஸ்கீம்கள் இருக்கின்றன என்பது போன்ற விஷயங்களில் இன்னும் குழப்பம்தான் இருக்கிறது.

அது என்ன 3ஜி?
இதுநாள் வரை இருக்கின்ற வசதிகளை வைத்து தொலைபேசி மூலம் பேச முடியும், சுமாரான வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும். அவ்வளவுதான்! இந்தத் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான் 3ஜி டெக்னாலஜி.  இந்தத் தொழில்நுட்பம் உங்கள் செல்போனில் இருக்கும்பட்சத்தில் வீடியோ கால், நேரடித் தொலைக்காட்சி, இன்டர்நெட், ஃபேக்ஸ், என சகல வசதிகளையும் அனுபவிக்க முடியும். அதுமட்டுமல்ல, பவர்பாயின்ட் மாதிரியான ஃபைல்களைக்கூட அதிவேகமாக டவுன்லோடு செய்யமுடியும். ஆடியோ மற்றும் வீடியோவுடன் கூடிய மல்டி மீடியா போன்ற சேவைகளும் கிடைக்கும். சொடுக்குப் போடும் நேரத்தில் அத்தனையும் நடந்துவிட வேண்டும் என்று மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அதற்கு உறுதுணை யாக வந்திருப்பதுதான் 3ஜி. இதன் மூலம் உடனடித் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், சமூகத் தொடர்புகள் போன்ற வழக்கமான வசதிகளுடன் ஆன்லைனில் சினிமா, விமானம், ரயில் போன்றவற்றுக்கான டிக்கெட்களைப் பெறுவதில் ஆரம்பித்து, கிராமப் பகுதிகளில் விவசாயம் தொடர்பான தகவல்களைப் பெறுவது, உடல் நலம், கல்வி தொடர்பான செய்தி களைப் பெறுவது வரை சேவைகள் விரிந்துகொண்டே போகிறது.

>வீடியோகாலிங்!

செல்போனில் பேசும்போது உங்களுக்கு எதிர்முனையில் பேசுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் ஸ்கிரீன் மூலம் தெரிவதே வீடியோகாலிங். நேரில் பேசுவதைப் போன்ற உணர்வை இது ஏற்படுத்தும். இந்த வசதியைப் பெற இரண்டு தரப்பிலும் 3ஜி கனெக்ஷன் மற்றும் 3ஜி செல்போன் தேவை.

மொபைல் கேமிங்!

மல்டிபிளேயர் மற்றும் ஹெச்.டி. கேமிங் போன்றவற்றை உங்கள் மொபைலிலேயே பெறலாம். 3ஜி-யில் கேம்ஸ் விளையாடுவது வேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும். ஹெச்.டி. கேமிங் மூலம் உலகத்தில் எங்கிருந்தாலும் மற்றவருடன் விளையாடலாம்.

2ஜி-க்கும் 3ஜி-க்கும் உள்ள வித்தியாசம்!

மேம்பட்ட குரல் தரம் மற்றும் தெளிவு, அதிவேக பிராட்பேண்ட் கனெக்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் 2ஜி-யைவிட 3ஜி-யில் சிறப்பாக இருக்கும்.

2ஜி-யில் மல்டிமீடியா அப்ளிகேஷன்ஸ் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே சப்போர்ட் செய்யும். 3ஜி-யில் இந்த வசதி அதிகளவில் சப்போர்ட் செய்யும்.

2ஜி-யில் ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா அனுப்ப முடியாது. ஆனால் 3ஜி-யில் அது சாத்தியம்.

2ஜி-யில் 9-13 கிலோ பைட்ஸ் மட்டுமே இருப்பதால் நேரடித் தொலைக்காட்சி பார்க்கும்போது படம் தெளிவாகத் தெரியாது. நெட் வசதியும் குறைவான வேகத்தில் இருக்கும். ஆனால் 3ஜி-யில் 384 கிலோ பைட்ஸ் வரை இருப்பதால் இந்த சிக்கல்கள் எதுவும் இருக்காது.

3ஜி-யின் நன்மைகள்!

அதிகப்படியான பாண்ட்வித் மற்றும் பாதுகாப்பு.

பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் போன்ற 3ஜி சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது.

அதிகமான மல்டி மீடியா சேவைகள்

ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும் சேவை.

3ஜி-யின் பாதகங்கள்!

அனைத்து வகையான மொபைல் போன்களிலும் இந்த வசதியைப் பெற முடியாது. 3ஜி வசதி பெறக்கூடிய பிரத்யேக மொபைல் போன்களைத்தான் பயன்படுத்த முடியும். இதன் விலை கொஞ்சம் அதிகமாக யிருக்கும்.

3ஜி உரிமம் பெற நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்திருப்பதால் இதன் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்க முடியாது.

அதிகப்படியாக கிலோ பைட்ஸ் பயன்படுத்தப்படுவதால் மொபைல் போனுக்கான பேட்டரி அதிகளவில் செலவாகும்.

மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படக்கூடும்.

3ஜி சேவைக்கு தமிழக மக்களிடம் இருக்கும் வரவேற்பு பற்றி பி.எஸ்.என்.எல். அமைப்பின் முதன்மை பொது மேலாளர் சுப்ரமணியனிடம் பேசினோம்.

”இந்தியா முழுவதும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் 3ஜி இணைப்பை வழங்க உரிமம் பெற்றுள்ளன. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு என இரண்டு திட்டங்கள் மூலமும் 3ஜி வசதியைப் பெறலாம். இதில் பயன்படுத்தப்படும் டேட்டா கார்டை இந்தியா முழுவதும் ஒரே கட்டணத்தில் வாங்கிப் பயன்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் பலப்பல. 3ஜி போனை வைத்துக் கொண்டு எந்த ஊருக்கு வேண்டுமானாலும் காரோட்டிக் கொண்டு போகலாம். போகும்போது வழி தெரியவில்லை என்றால் உங்கள் மொபைல் போனில் தெரியும் மேப்பை வைத்துக் கொண்டே ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம். மக்கள் 3ஜி போனை வாங்கியவுடன் ஆர்வத்துடன் வீடியோகால் பேசுகிறார்கள். பலருக்கும் இது புதுவிதமான அனுபவமாக இருக்கிறது. இதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு என்பது இன்னொரு சிறப்பு. மேலும் அலுவலகம், கடைகள் போன்ற இடங்களில் ஒரு வெப் கேமிராவை வைத்துவிட்டு உங்கள் 3ஜி மொபைலுடன் இணைத்துவிட்டால் நீங்கள் எங்கிருந்தாலும் அங்கு நடக்கும் விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

அடுத்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கேரளா மற்றும் தமிழ்நாடு சி.இ.ஓ. ராஜீவ் ராஜகோபால் கூறுகையில், ”இப்போதைக்கு சென்னை மற்றும் கோவையில் மட்டும் கடந்த மாதம் 27 முதல் 3ஜி சேவையைத் தொடங்கி இருக்கிறோம். தற்போதுள்ள சிம்கார்டுகளைப் பயன்படுத்தியே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சேவையைப் பெறலாம். லேப்டாப் பயன்படுத்துகிறவர்களுக்கு 3ஜி சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். நிலையான கட்டணம், பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணம் என பல வகையான திட்டங்களையும் கூடிய விரைவில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தப் போகிறோம்” என்றார்.

என்ன, நீங்கள் தயாரா?


படங்கள் : எம்.உசேன்

நன்றி:- பானுமதி அருணாசலம்

நன்றி:- நா.வி

செல்போன் நோய்கள் தருமா?



நவீன விஞ்ஞான அற்புதங்களில் ஒன்று செல் போன் என்றழைக்கப்படும் அலை பேசி. ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருக்கும் மனிதரைத் தொடர்பு கொண்டு பேச முடிவது என்பது விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றமே. இங்கு இடைவெளிகள் பெரிய பிரச்னையே அல்ல. உலகத்தில் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் பேச முடியும், பயணம் செய்து கொண்டே பேச முடியும் என்பதெல்லாம் அவசரத் தேவைக்கு உடனடியாக பேச நினைப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் விஷயங்கள். 

ஏழை, செல்வந்தன் என்ற வித்தியாசம் இல்லாமல் இன்று எல்லோரும் செல் போன் வைத்திருக்கிறார்கள் சிலர் சதா நேரமும் செல் போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்கள் கைகள் காதுகளில் ஒட்டிக் கொண்டு விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இருக்கும். அந்த அளவு செல் போன் நம் தினசரி வாழ்க்கையில் நம்முடன் இணைந்த அம்சமாகி விட்டது.

இந்த நிலையில் செல் போன் சம்பந்தமாக உலகமெங்கும் நடந்து வரும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன என்றே சொல்ல வேண்டும். அந்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

ஸ்வீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நரம்பியல் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஓல்லெ ஜோஜன்சன் (Dr. Olle Johansson) செல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அதிகமாக செல் போனை உபயோகிப்பவர்கள் மூளை சம்பந்தமான நோய்கள், மரபணுக்களுக்கு சேதாரம், உறக்க சம்பந்தமான பிரச்னைகள், மனத்தை ஒருமைப் படுத்துதல் முடியாமை போன்றவற்றால் பாதிக்கப் படுகிறார்கள் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்.

கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா மருத்துவக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மூளை விஞ்ஞானியான ரோஸ் அடே (Ross Adey) செல் போனில் இருந்து வெளிப்படும் நுண்ணிய அலைகள் கேன்சர் உட்பட பல நோய்களை உருவாக்க வல்லது என்று கூறுகிறார். உலக சுகாதார நிறுவனம் (WHO) 13 நாடுகளில் நடத்திய ஒரு ஆராய்ச்சி நீண்ட காலம் அதிகமாக செல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளைக்கட்டி நோய் வர அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறி உள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த லென்னார்ட் ஹார்டெல் (Lennart Hardell) என்ற பேராசிரியர் கதிரியக்க ஆராய்ச்சி தொண்டு நிறுவனம் லண்டன் ராயல் சொசைட்டியில் ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் 20 வயதுக்கு முன்பே செல் போனை பயன்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒருவித கான்சர் நோய் வர மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் டென்மார்க் நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் கருத்தரித்த பெண்கள் அதிகமாக செல் போன் உபயோகிப்பது பிறக்கும் குழந்தைகளின் மரபணுக்களில் கோளாறை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பல் வேறு நாடுகளில் இப்படி செல் போன் உபயோகப்படுத்தும் போது வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் உருவாகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறப்பட்டதை மறுத்து அமெரிக்காவைச் சேர்ந்த செல் போன் கம்பெனிகள் 28 மில்லியன் டாலர்கள் செலவில் டாக்டர் ஜார்ஜ் கார்லோ (Dr George Carlo) என்ற விஞ்ஞானியிடம் முழுமையான ஒரு ஆராய்ச்சி செய்யுமாறு பணித்தனர். துவக்கத்தில் அந்த விஞ்ஞானியும் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறினாலும் தொடர்ந்த ஆராய்ச்சிகளில் செல் போனில் வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் வர வாய்ப்பு இருப்பதை ஒத்துக் கொண்டு அதைக் குறித்து ஒரு புத்தகமும் எழுதினார். தங்களுக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துகளை அந்த கம்பெனிகள் எதிர்த்து அவர் மீது அவதூறுப் பிரசாரத்தை மேற்கொண்டாலும் அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு விஞ்ஞானியே வேறுபட்ட கருத்தை வெளியிட்டது ஒரு ஆணித்தரமான உண்மையாக பலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் செல் போன் இன்றைய மனிதனின் அத்தியாவசியத் தேவையாகி விட்ட சூழ்நிலையில் அதை அறவே ஒதுக்கி விட முடியாத நிலையில் அனைவரும் இருக்கிறோம். அதே நேரத்தில் இந்த நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளும் நம்மை பயமுறுத்துவதாக இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. எனவே செல் போனைப் பயன்படுத்தவும் வேண்டும், நோய்களால் பாதிக்கப்படவும் கூடாது என்று நினைப்பவர்களுக்கு சில ஆலோசனைகள் –

1) செல் போனில் மணிக்கணக்கில் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிருங்கள். உங்கள் பேச்சு சுருக்கமாகவும், தேவையின் பொருட்டாகவுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நேரில் பார்க்கும் போது பேசுவது போல எல்லா முக்கியமல்லாத விஷயங்களையும் செல் போனில் பேசுவதைத் தவிர்க்கவும். குறைவான செலவு தான் ஆகிறது என்ற எண்ணத்தில் அதிகமாக நீண்ட காலம் பயன்படுத்தினால் பல மடங்கு செலவை மருத்துவத்திற்கு பிற்காலத்தில் செய்ய நேரிடும். அளவாகவும், சுருக்கமாகவும், தேவையுள்ள சமயத்தில் மட்டும் செல் போனைப் பயன்படுத்துவதே மிகுந்த பாதுகாப்பும் பயன்பாடும்.

2) குழந்தைகள் மற்றும் சிறு வயதினரை செல் போனை மிகுந்த அவசியமல்லாமல் உபயோகப் படுத்த விடாதீர்கள். அவர்கள் மண்டை ஓடு லேசாக இருப்பதால் அந்தக் கதிரியக்க பாதிப்புகள் அவர்கள் மூளையை ஆழமாக பாதிக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. எனவே அவர்கள் கையில் செல் போனைத் தராதீர்கள்.

3) செல் போனை பேண்ட் பாக்கெட்களிலோ, பெல்டுகளிலோ வைத்துக் கொள்ளும் இளைஞர்களின் விந்து எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைவதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. மனித உடலில் கீழ் பகுதி மேல் பகுதியை விட அதிகமாக செல் போனின் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். எனவே அணைத்து வைக்காத செல் போனை அந்த இடங்களில் இளைஞர்கள் வைப்பதை தவிர்ப்பது நல்லது.

4) சிக்னல் குறைவாக இருக்கும் போது பேசுவது வலிமையாக கதிரியக்கம் வெளிப்படுவதால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே அந்த சமயங்களில் பேசுவதைத் தவிருங்கள்.

5) மூடிய வாகனங்களுக்கு உள்ளே இருந்து பேசும் போதும் இணைப்பை ஏற்படுத்த செல் போன்கள் அதிக சக்தியை செலவிட வேண்டியிருக்கும் என்பதால் கூடுமான வரை அதனைத் தவிர்ப்பது நல்லது.

6) நம் உடல் செல் போனின் கதிரியக்க சக்தியை எந்த அளவு உள்ளிழுத்துக் கொள்கிறது என்பதை அளவிட SAR என்ற அளவீடு செல் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. புதிய செல் போன்களின் இயக்கக் குறிப்பேடுகளிலும், கம்பெனி இணைய தளங்களில் அந்த வகை செல் போன் கருவி குறித்த குறிப்புகளிலும் அந்த SAR அளவீட்டை இப்போது தர ஆரம்பித்திருக்கிறார்கள். குறைவான SAR அளவீடு உள்ள செல் போன் சாதனங்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

7) காது கேட்கும் சாதனம் அணிந்திருப்பவர்கள் செல் போனை பயன்படுத்துவது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது போல மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு அறையினுள்ளும் செல் போன் உபயோகிப்பது அங்குள்ள நோயாளிகளின் உடல்நிலையை அதிகம் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கர்ப்பவதிகளும் செல் போனை கூடுமான அளவு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

8) முடிந்த சமயங்களில் எல்லாம் தரை வழி தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை தாருங்கள்.

அளவான, குறைந்த, புத்திசாலித்தனமான பயன்பாட்டால் மட்டுமே நாம் செல் போன் மூலம் நோய்களை நீக்கிய உண்மையான பயனை அடைய முடியும் என்பதை நாம் என்றும் நினைவில் வைத்திருப்பதுடன் இந்த உண்மையை நாம் அக்கறை வைத்திருக்கும் நபர்களுக்கும் அறிவுறுத்துவோமாக!

நன்றி:– என்.கணேசன், ஈழநேசன்

நன்றி:-http://enganeshan.blogspot.com/2011/01/blog-post_28.html

செல்போன் கோபுரங்கள் உஷார்


`விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார் – உன்போல் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.’

மனிதனுக்காக மனிதன் கண்டுபிடித்த பொருட்களிலேயே தற்போது மிக மிக அதிக உபயோகத்தில் இருப்பது செல்போன் என்றால் மிகையில்லை. குறிப்பாக இந்தியர்களை பொறுத்தவரை, இந்த கூற்று 100 சதவீதம் உண்மை. இதில் சந்தேகம் வேண்டாம்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 117 கோடி. இது, இந்த ஆண்டு கணக்கெடுப்பு நிலவரம்.

இதில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 31 சதவீதம். சுமார் 36 கோடி. ஆனால், செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 70 கோடி!

இப்போது சொல்லுங்கள். செல்போன் அடிமையாகவே இந்தியர்கள் மாறி விட்டனர் என்பது எந்த அளவுக்கு நிதர்சனமான உண்மை அல்லவா?.

அதே நேரத்தில், தனிப்பட்ட கழிவறை வசதி கொண்ட மக்களின் எண்ணிக்கை 36 கோடி மட்டுமே. சுமார் 65 கோடி பேர் (மக்கள் தொகையில் 50 சதவீதம்) திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சுகாதார விஷயத்தில் இந்த அளவுக்கு படு கேவலமா

க இருக்கும் இந்தியர்கள், செல்போன் பயன்படுத்துவதில் மட்டும் முன்னேறிய நாடுகளை விட முன்னேறி விட்டனர்.

இத்தகைய அதீத ஆர்வம் காரணமாக, நாடு முழுவதும் செல்போன் நிறுவனங்கள் பெருகி விட்டன. அதற்கு ஏற்றாற்போல செல்போன் கோபுரங்களும் மூலை முடுக்கெல்லாம் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன.

விண்ணோக்கி நிமிர்ந்து நிற்கும் அந்த செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

செல்போன்களில் பேசுவதற்கு தேவையான சமிக்ஞைகளை (சிக்னல்) இந்த கோபுரங்கள் தான் அளிக்கின்றன. இதற்காக, அந்த கோபுரங்களில் இருந்து மின்காந்த அலைகள் மற்றும் கதிரியக்கம் வெளிப்படுகிறது.

செல்போன் கோபுரம் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரையிலும் இந்த கதிரியக்கத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

இதன் காரணமாகவே, அதிகாலையில் மனதை மயக்கும் வண்ணம் கீதம் இசைக்கும் சிட்டுக்குருவிகளை, கிராமங்களில் கூட இப்போது காண முடிவதில்லை.

அது மட்டுமல்ல காகம், மைனா போன்ற பறவைகளும் அரிய வகை இனங்களாக மாறிக் கொண்டு இருக் கின்றன.

மின் கம்பங்கள் மற்றும் தொலைபேசி கம்பங்களில் கூடு கட்டி உயிர் வாழும் இந்த அப்பாவி உயிரினங்கள் அனைத்தும் செல்போன் கோபுரங்களை கண்டால் மட்டும் காத தூரம் ஓடுகின்றன.

நகர்ப்புறம் மட்டும் அல்லாமல், கிராமப்புறங்களிலும் எங்கு பார்த்தாலும் செல்போன் கோபுரங்கள் பெருகி இருப்பதால், இந்த பறவை இனங்கள் காணாமலேயே போய் விட்டன. பாடப்புத்தகங்களில் மட்டுமே பார்க்க வேண்டிய அரிய இனமாக மாறிக்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து, பல எச்சரிக்கை தகவல்கள் வெளியான போதிலும் யாருமே கண்டு கொண்டதாக தெரியவில்லை. அமாவாசைதோறும் காகத்துக்கு சாதம் வைப்பதோடு கடமை முடிந்து விட்டதாக அனைவரும் கருதுகின்றனர்.

முந்தைய எச்சரிக்கையை யாருமே கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவாக, பறவைகளிடம் இருந்து மனிதர்களை நோக்கி ஒரு அபாயம் திரும்பிக்கொண்டு இருக்கிறது.

ஆம். செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சினால் மனிதர்களின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சர்வதேச அளவில் ஆய்வுகள் எச்சரிக்கை மணி ஒலிக்கின்றன.

இந்தியாவில் அமைக்கப்படும் செல்போன் கோபுரங்கள் அனைத்துமே, `அணு அல்லாத கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கமிஷன்’ அளித்துள்ள பரிந்துரைப்படியே அமைக்கப்படுகின்றன. ஆனால், இந்த கமிஷனானது கதிரியக்க அளவு மற்றும் வெப்ப கதிரியக்கம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு விதிமுறைகளை வகுக்கிறது.

`மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும், மரபணு ரீதியாகவும் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்த கமிஷன் கருத்தில் கொள்ளுவதில்லை என்றும் அதன் இணைய தளத்திலேயே அது பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது’ என்றும் சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கம்பியில்லா தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த டாக்டர் பி.ஆர்.கவுண்டன் தெரிவிக்கிறார்.

அதே நேரத்தில், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வளையத்துக்குள்ளேயே தொடர்ந்து வசித்து வருபவர்களுக்கு புற்றுநோய், மரபணு (டி.என்.ஏ.) சேதம், தொற்று நோய் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள எதிர்ப்பு சக்தி குறைதல், மலட்டுத் தன்மை போன்ற பல்வேறு அபாயங்கள் ஏற்படும் என மும்பை ஐ.ஐ.டி.யை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பாக, சர்வதேச அளவிலான ஆதாரங்களை அள்ளி வீசும் அவர்கள், `செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனநல குறைபாடு ஏற்படும்’ என்ற அதிர்ச்சி வெடியையும் கொளுத்திப்போடுகின்றனர். அதற்கு ஆதாரமாக, மேற்கு டெல்லியில் ஓராண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட பாப்லா சாய்கா என்ற 21 வயது மாணவனை சுட்டிக்காட்டுகின்றனர்.

`மிகவும் புத்திசாலியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்த தனது மகன், மேற்கு டெல்லியில் உள்ள அந்த குறிப்பிட்ட வீட்டில் வாடகைக்கு குடி புகுந்த பிறகு தான் மாறுபாடு அடைந்தான். மூன்று மாடி கொண்ட அந்த வீட்டின் மேல் தளத்தில் அவன் குடியிருந்தான். வீட்டுக்குள் செல்லும்போதெல்லாம், அளவுக்கு அதிகமான மன நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறான்’ என்கிறார், அந்த மாணவனின் தந்தை. அவர் ஒரு என்ஜினீயரும் கூட.

சரி. அந்த வீட்டில் அப்படி என்னதான் இருந்தது. வேறொன்றுமில்லை. மூன்று மாடிகளை கொண்ட அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது!

`செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பிரச்சினையின் தீவிரத்தை இந்தியர்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. மிக அடர்த்தியான அறியாமை இருளிலேயே இந்தியர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாகவே, இதுதொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகள் சர்வதேச அளவில் வெளியாகி உள்ளன. ஆனால், அவை அனைத்தும் கடினமான ஜமுக்காளத்தை போட்டு மூடப்பட்டு விட்டன’.

– இப்படி குமுறுகிறார்கள், செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு செய்து வரும் இந்திய ஆராய்ச்சியாளர்கள்.

அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `செல்போன் கோபுரங்களால் உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. ஏனெனில், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க அலைகளின் நீளம் குறைவு. அதனால், அதிக பாதிப்பு கிடையாது. ஆனால், தொடர்ச்சியாக அந்த கதிரியக்க அலைகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலோ, உடலில் அதிக அளவுக்கு கதிரியக்க அலைகள் தாக்கினாலோ பாதிப்பு ஏற்படக்கூடும்’ என்று தெரிவித் துள்ளது.

ஆனால், இவை அனைத்தையும் செல்போன் நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுக்கின்றன.

செல்போன் நிறுவனங்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் ராஜன் மாத்யூஸ், “இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே கற்பனையானவை. சர்வதேச அளவிலான 15 ஆய்வு அறிக்கைகளை அரசிடம் நாங்கள் சமர்ப்பித்து இருக்கிறோம். நாங்களே சுயமாகவும் இந்தியாவில் ஆய்வு மேற்கொண்டோம். எதிலுமே இதுபோன்ற விளைவுகள் குறித்து கண்டறியப்படவில்லை” என்றார்.

இதுபோல பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “செல்போன் கோபுரங்களால் உடல்நல குறைவு ஏற்படும் என்பது மன ரீதியிலான அச்ச உணர்வு. இதில், அறிவியல் பூர்வமான உண்மை எதுவும் கிடையாது. இத்தகைய தகவல்களால், ஊரகப்பகுதிகளில் எங்களுடைய நெட்வொர்க்கை விரிவு படுத்தும்போது ஏராளமான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

மத்திய அரசும் கூட, `செல்போன் கோபுர கதிரியக்க வீச்சினால் உடல்நலக் குறைவு ஏற்படுவது குறித்த எந்தவித மருத்துவ அறிக்கையும் இல்லை’ என பாராளுமன்றத்திலேயே அறிவித்தது.

இரு தரப்பினரும் தங்கள் கருத்துகளில் உறுதியாக நிற்கின்றனர். ஆனால், `அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்’ என்பது நமது முன்னோரின் முதுமொழி.

எனவே, செல்போன்கள் மற்றும் செல்போன் கோபுரங்களை பொறுத்தவரை அளவோடு பயன்படுத்திக்கொண்டு எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது.

இல்லாவிட்டால், கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பாடல் வரிகள் உண்மையாகி விடும்.

அபாயத்தை தவிர்ப்பது எப்படி?

செல்போன் கோபுரங்களை நிறுவுவதில் இந்தியாவை பொறுத்தவரை மிகவும் அபாயகரமான நிலை நீடிக்கிறது. இந்தியாவில் மட்டுமே, செல்போன் கோபுரங்களை அவுட்சோர்சிங் முறையில் கொடுக்கும் அவலம் இருக்கிறது. இதன் காரணமாக, ஒரே செல்போன் கோபுரத்தை 2 அல்லது 3 செல்போன் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்கின்றன. எனவே, கதிரியக்க வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கிறது. உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு நடைமுறை கிடையாது.

இந்தியா முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் உள்ளன. அதே நேரத்தில், நகர்ப்புற பகுதிகளில் மிகவும் நெருக்கமாக இவை அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, 70 கோடி செல்போன் இணைப்புகள் உள்ள நிலையில் மாதந்தோறும் புதிதாக ஒன்றரை கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தியா முழுவதும் செல்போன் கோபுரங்களை அமைப்பதில் ரிலையன்ஸ், இந்துஸ் டவர்ஸ், ஜி.டி.எல் ஆகிய நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி,
பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகே செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், சர்வதேச வழிகாட்டு விதி முறைகளின் படி, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த அளவுக்கு கடுமையான விதிமுறைகள் இருந்தாலும் செல்போன் கோபுரங்களின் அபாயம் என்பது `தலைக்கு மேல் அமர்ந்திருக்கும் எமன்’ என்பதே உண்மை.

ஏனெனில், இந்த வழிகாட்டுதல்கள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனால், மிக அதிக அளவிலான கதிரியக்க வீச்சுக்கு இந்தியா ஆளாகி இருக்கிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டுமானால், மிகக் குறைந்த அளவே கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சிறிய வகை ஆன்டெனாக்களை நிறுவலாம். 2 மீட்டர் உயரமுடைய ஆன்டெனாக்களை, குறைந்தபட்சம் 30 மீ. சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம். மேலும், விதிமுறை மீறல்களையும் முறையாகவும், கடுமையாகவும் கண்காணிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் எல்லாம் மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுவதில்லை. அத்தகைய நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்றலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவசியமின்றி அதிகமாக செல்போன்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். மிகவும் குறைவான அளவில், தேவையான தகவல்களை பரிமாற மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் குறுஞ்செய்திகளை பயன்படுத்தலாம். சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும் சிறந்தது.

நன்றி:-தினத்தந்தி

கமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்


நவீன கண்டுபிடிப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து ஓஹோ என்று வளர்ந்து சென்று ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல்’ மனிதன் உலகத்தை தன் உள்ளங்கைக்குள் வைத்திருக்கின்றான் என்று கூறுகின்ற அளவிற்கு மனிதன் நவீன கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்துக்கொண்டே செல்கின்றான். பல மணி நேரம் சிரமப்பட்டு செய்துமுடிக்கும் வேலைகளை ஒரு சில நிமிடங்களில் செய்துமுடிக்குமளவுக்கு இன்றைய நவீனம் வளர்ந்திருக்கின்றது.

இஸ்லாம் மார்க்கத்தை எத்திவைப்பதற்கு இன்றைய நவீன கண்டுபிடிப்புக்கள் மிகப்பெரும் வசதி வாய்ப்புக்களை அமைத்துத் தந்திருக்கின்றது என்பதை அதிகமான முஸ்லிம்கள் உணராமல், இக்கண்டுபிடிபபுக்களை தவறான வழியில் துஷ்பிரோயம் செய்கின்றார்கள் என்பது மன வேதனைக்குரியதாகும். இன்றைய நவீன கண்டுபிடிப்புக்களில் மக்கள் மத்தியில் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும், அதிகமான வசதிகளை உள்ளடக்கியதாகவும், எங்கே வேண்டுமானாலும் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும் கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொலைவிலுள்ளவர்களுடன் இருந்த இடத்தில் இருந்துகொண்டே தொடர்பு கொண்டு, தங்களுடைய வேலைகளை இலகுவாக மக்கள் முடித்துக்கொள்வதற்காக மனிதன் தொலைபேசியைக் கண்டுபிடித்தான். பின்னர், அதனை மக்களுக்கு இன்னும் இலேசாக எங்கே வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடியவாறு கைக்குள்ளடக்கியதாக கண்டுபிடித்தான். நவீனம் வளர்ந்துகொண்டே செல்கின்றபோது டீவி, ரேடியோ, கொம்பியூட்டர், கமரா இன்னும் இதுபோன்றவற்றை உள்ளடக்கியதாகவும் கையடக்கத் தொலைபேசிகளை மனிதன் உருவாக்கினான்.

இதுபோன்ற சகல வசதிகளையும் உள்ளடக்கிய கையடக்கத்தொலைபேசிகள் அதிகமான இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் தவறான வழிமுறையில் பயன்படுத்தப்படுகின்றன. வாலிபர்கள் வீதியோரங்களில் நின்றுகொண்டு வீதியில் செல்லும் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் கமரா போன்கள் மூலமாக படம்பிடித்து, மோசமான வேலைகளை செய்து பெண்களின் வாழ்க்கைகளில் விளையாடுவதைப் பார்க்கின்றோம். அதுபோன்று இன்னும் சில ஆண்களும் பெண்களும் விளையாட்டு என்று நினைத்து செய்யும் காரியங்கள் கடைசியில் கைசேதத்தில் கொண்டு சென்றுவிடுவதைப் பார்க்கின்றோம். கமரா போன்களால் எத்தனையோ விபரீதங்கள் நடைபெறுகின்றன.

அவைகளில் ஒரு சில உண்மைச் சம்பவங்களை இவ்விடத்தில் எடுத்துக்காட்டினால் பொருத்தமாக இருக்கும். இலங்கையில் உள்ள கம்பஹா எனும் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெறுகின்றது. ஒரு இளம் பெண் தனக்கு பெற்றோர் வாங்கிக்கொடுத்த கமரா வசதியுள்ள கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி ஒரு நாள் தன் பெற்றோர் இல்லரத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சியை வீடியோ எடுத்து பாடசாலைக்குச் சென்று தன்னுடைய நண்பிகளுக்கு காட்டி ரசித்திருக்கின்றாள்.

அதுபோன்று தமிழ் பேசும் மாணவர்கள் கல்விகற்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை எதேர்ச்சியாக ஒரு வீடியோக் காட்சிமூலம் பார்த்து ஆவேசமடைந்த ஒரு நபர் கூறும்பொழுது, எதேர்ச்சியாக எனது நண்பனின் Pen Drive விலிருந்து Bathroom Snap என்று பெயரிடப்பட்ட வீடியோ காட்சியொன்றை பார்க்க நேர்ந்தது. அதைப் பார்த்ததிலிருந்து என்னுள் இருந்த நிம்மதியை நான் இழந்துவிட்டேன். எமது நாட்டில் இருக்கும், அதுவும் தமிழ் பேசும் மாணவர்கள் அதிகம் இருக்கும் பல்கலைக்கழகமொன்றின் கழிவறையில் எடுக்கப்பட்ட காட்சிகள் அவை. குறித்த ஒரு நேரகாலப்பகுதிக்குள் கழிவறைக்கு வந்துபோன சுமார் 5-6 வரையிலான பெண் மாணவிகள் கழிவறையைப் பயன்படுத்தும்போது மறைந்திருந்து படம்பிடிக்கப்பட்டுள்ளார்கள். இந்தக் காட்சியையும், இன்னும் அவ்வளாகத்தினுள் நடந்த ஒரு சில காட்சிகளையும் பார்த்து ஆவேசமடைந்தேன். தெரிந்துகொண்டும் தவறுகளில் மூழ்கும் பெண் மாணவிகள் ஒரு புறமிருக்க, அப்பாவி மாணவிகள் இவ்வாறான படப்பிடிப்புக்குட்படுகின்றார்கள் என்பது மனதை உருக்கும் செய்தியாகும். எனது அபிப்பிராயம் என்னவென்றால், சகல பெண் மாணவிகளுக்கும் இவ்வாறான ஒரு நிலை கமரா போன்களால் காத்திருக்கின்றது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

மேலே உள்ள இரண்டு சம்பவங்களும் கமரா போன்களால் ஏற்பட்டவைகளாகும். இன்னும் இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் உலகில் நடைபெறுகின்றன. கமரா போன்களால் ஏற்பட்ட இவ்விரண்டு சம்பவங்களையும் மக்களின் விழிப்புணர்வுக்காக சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

பெற்றோர்களே! இஸ்லாம் மார்க்கம் சில பொறுப்புக்களை உங்களுக்கு வழங்கியிருக்கின்றது. அந்தப் பொறுப்புப்பற்றி நீங்கள் மறுமையில் விசாரிக்கப்படவுள்ளீர்கள். உங்களுடைய பிள்ளைகள் கல்வியில் சிறந்த நிலையில் வரவேண்டும் என்பதற்காக எத்தனையோ காரியங்களைச் செய்கின்றீர்கள். ஆனால் அவர்கள் இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு ஒழுக்கமுள்ளவர்களாக வாழவேண்டும் என்று நினைத்து உங்கள் பிள்ளைகள் என்ன செய்தாலும், எங்கே சென்றாலும், யாருடன் கதைத்தாலும், கணனி, கையடக்கத் தொலைபேசி போன்றவற்றை வாங்கிக் கொடுத்தால் அதனை எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்றும் முழு அவதானத்துடன் இருக்கின்றீர்களா!

மேலே எடுத்துக்காட்டிய சம்பவங்கள் உங்களுக்கும் நடைபெறாது என்பது என்ன உறுதி! விழிப்பாக இருங்கள். ‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-2409)

வாலிபர்களே! யுவதிகளே! அனைவரையம் வழிகேட்டில் கொண்டு செல்லக்கூடிய வயதில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நமது இளம் பருவத்தை அல்லாஹ்வும், நபிகள் நாயகம் அவர்களும் சொன்னபிரகாரம் வாழ்ந்து வெற்றிபெறவேண்டும்.

ஷைத்தான் அல்லாஹ்விடத்தில் ‘உன்னை விசுவாசங்கொண்டவர்களுக்கு தீயதை அழகாகக் காட்டி வழிகெடுப்பேன்’ என்று சவால் விட்டு வந்திருக்கின்றான்.  அல்லாஹ்வை விசுவாசங்கொண்ட நாம் ஷைத்தானுக்குக் கட்டுப்படாதவர்களாக வாழவேண்டும்.

மேலே உள்ள சம்பவங்கள் நமக்கு ஒரு படிப்பிணையாக இருக்கவேண்டும். அல்லாஹ்வின் பிடி கடினமானது. அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! தவறான பாதையில் சென்றுவிடாமல் விழிப்பாக இருந்துகொள்ளுங்கள்!

நன்றி:- நிக்றாஸ் பின் சுல்தான்


செல்லிடைப் பேசி, செல்போன், மொபைல்


இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. உலக அளவிலான ஓர் ஆய்வு அதை உறுதிபடுத்துகிறது. பலர், தங்கள் செல்போனை இழப்பதைவிட பர்ஸை இழக்கவும் தயார் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட, சந்தை ஆய்வு நிறுவனமான `சைனோவேட்’, இன்று வாழ்க்கைக்கான `ரிமோட் கண்ட்ரோலாக’ செல்போன் உள்ளது என்று தெரிவித்துள்ளது. தற்போது செல்போன் எல்லா இடங்களிலும் காணபடும் ஒன்றாக ஆகிவிட்டது, ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன் வைத்திருப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் கனடா, டென்மார்க், பிரான்ஸ், மலேசியா, ஆலந்து, பிலிபைன்ஸ், ரஷியா, சிங்கப்பூர், தைவான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் பதில் கூறினர். அவர்களில் முக்கால்வாசி பேர், தங்களுடன் எப்போதும் செல்போனை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனர். குறிப்பாக ரஷியர்களும் சிங்கப்பூர்காரர்களும் செல்போனை பிரிவதே இல்லை என்ற தகவல் ஆச்சரியமானது.

சிங்கப்பூர்காரர்களிடமும் தைவான் மக்களிடமும் இந்த ஆய்வை மேற்கொண்டபோது அந்த நாட்டு மக்களில் நான்கில் ஒருவர், தங்கள் பர்ஸை விட செல்போன் தொலைந்தால்தான் அதிகக் கவலைபடுவோம் என்று தெரிவித்துள்ளனர். முன்றில் இரண்டு பங்கினர், தாங்கள் செல்போனுடன்தான் படுக்கைக்கு போவதாகவும், அதை `ஸ்விட்ச் ஆப்’ செய்வதே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். `ஸ்விட்ச் ஆப்’ செய்ய நினைத்தாலும், தாங்கள் ஏதாவது முக்கியமான அழைப்பை `மிஸ்’ செய்துவிடுவோமோ என்ற பயத்தில் அணைப்பதில்லை என்று கூறிள்ளனர்.

“சில நேரங்களில் செல்போன் நேரடியாக பார்த்து பேசுவதை விடச் சிறந்ததாக உள்ளது. அவை எங்களின் வாழ்க்கைக்கான தொடர்புகள் ஆகும்” என்று தைவானைச் சேர்ந்த சைனோவெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜென்னி சாங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செல்போனை பயன்படுத்துவோரில் ஏறக்குறைய பாதி பேர், தாங்கள் விரும்புபவரை தங்கள் ஆசை வலையில் விழ வைக்க எஸ்.எம்.எஸ்.-ஐ பயன்படுத்துவதாகக் கூறிள்ளனர். `டேட்டிங்’குக்கான ஒப்புதலை பெற பலர் செல்போனை பயன்படுத்துவதாகவும், அதே அளவு எண்ணிக்கையிலானோர் தங்கள் காதலை முறித்துக்கொள்ள செல்போனை உபயோகிப்பதாகவும ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

செல்போன்கள் அவற்றின் பிரதான உபயோகமான பேசுவது, குறுந்தகவல் அனுப்புவது தவிர, அதிகமாக பயன்படுத்தபடுவது அலாரம் வைக்க, படம் பிடிக்க மற்றும் `கேம்ஸ்’ விளையாட ஆகும். மின்னஞ்சல் மற்றும் இணைய வசதியை பொறுத்தவரை 17 சதவீதம் பேர் தங்கள் செல்போன்களில் அதை பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர். இவ்விஷயத்தில் முன்னணியில் இருப்பவர்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு மக்கள். பத்தில் ஒருவர், செல்போன் வழியாகத் தினமும் சமுக நட்பு இணையதளங்களான `பேஸ்புக்’, `மைஸ்பேஸ்’ ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

“செல்போன்களில் வசதிகள் பெருக பெருக, பல தொழில்களும் பெரும் சவாலை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கின்றன. அதேநேரம், செல்போன் தயாரிப்பாளர்களுக்கும், செல்போன் சேவை அளிப்பவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன” என்கிறார், சைனோவெட் நிறுவனத்தின் சர்வதேச ஊடகத் தலைவர் ஸ்டீவ் கார்ட்டன்.

செல்போன்களில் வசதிகள் அதிகரித்தாலும், அதை பயன்படுத்துவோரில் 37 சதவீதம் பேர் தங்கள் செல்போனில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தத் தெரியாது என்று கூறிள்ளனர்.

நீங்களும் செல்போன் உபயோகிப்பவராகத்தான் இருப்பீர்கள்.

ஒரு நாளாவது செல்போனை `ஆப்’ செய்து ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு இருந்து பாருங்கள். நிச்சயம் உங்களால் முடியவே முடியாது. பளிச் பளிச் என்று அவ்வபோது வந்து விழும் எஸ்.எம்.எஸ். தகவல்களை படித்த உங்கள் கண்களுக்கும்… அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்த கஞ்ச நபர்களை செல்லமாக திட்டித் தீர்த்த உங்கள் உதடுகளுக்கும்… அது என்னவோ போல் இருக்கும்.

அதுவும், காதலர்கள் என்றால்… அவர்களால் செல்போனை பிரிந்து ஒரு மணிநேரம்கூட இருக்க முடியாது. சிலநேரங்களில் அன்பு மழையை கொட்டிக்கொண்டும், பலநேரங்களில் கிளுகிளுப்பை சேர்த்துக் கொண்டும் வந்து சேரும் எஸ்.எம்.எஸ்.களை பார்த்து, படித்து, ரசித்து பழக்கபட்டவர்கள், செல்போன் இல்லை என்றால் திண்டாடித்தான் போவார்கள்.

சிலர் இருக்கிறார்கள்… ஏ.டி.எம். கார்டு பாஸ் வேர்டு முதல் கேர்ள் பிரெண்ட் அட்ரஸ் வரை எல்லாவற்றைம் தங்கள் மொபைலில் பதிவு செய்து வைத்திருப்பார்கள்.

இவர்களால் தகவல் களஞ்சியமாக மாறிபோன செல் `மிஸ்’ ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? தலையே வெடித்து விடும்போல் இருக்குமா இல்லையா?

இதாவது பரவாயில்லை. இன்னும் சிலரோ, தங்களது படுக்கையறை அந்தரங்கங்களைக்கூட செல்போனில் படம் பிடித்து பதிவு செய்து வைத்துக்கொண்டு அவ்வபோது பார்த்து ரசிக்கிறார்கள். இந்த அந்தரங்க காட்சிகளைக் கொண்ட செல்போன் `மிஸ்’ ஆகி, அந்த காட்சிகள் உலகம் முழுவதும் உலா வந்துவிட்டால்… மானம் போய் விட்டால்…
இதை தவிர்க்க என்ன செய்யலாம்?

“இப்போதெல்லாம் மாமனாரிடம் தலை தீபாவளி, தலை பொங்கலுக்கு எந்த மருமகனும் காரோ, பைக்கோ எதிர்பார்பதில்லை. மார்க்கெட்டில் புதிதாக வந்து இறங்கியிருக்கும் செல்போனையே கேட்டு `டிமாண்ட்’ செய்கிறார்கள்.

விதவிதமான செல்போன்களின் வருகையால் இன்றைய காதலர்களுக்குத்தான் கொண்டாட்டம். கிளாசைக்கூட கவனிக்காமல் எங்கோ இருக்கும் காதலனுக்கு மெஸேஜ் அனுப்புவதும், எங்கோ இருக்கும் முகம் தெரியாத ரகசிய சிநேகிதிக்கு மெஸேஜ் அனுப்பிக் கொண்டிருபதும் இன்றைய பேஷனாகி போய்விட்டது. தன்னை மறந்து, உலகத்தை மறந்து, மொட்டை மாடியில் நடந்தபடியே மணிக்கணக்காக செல்போன் முலமாக பேசி இன்றைய காதலர்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி, எல்லாவற்றுக்கும் காரணமான செல்போன் தொலைந்துபோய்விட்டால்…? சொல்லும்போதே தலை சுற்றுகிறதே… ஒருவர் அவரது செல்போன் தொலைந்துபோய்விட்டது தெரிய வந்தால் பாதி பைத்தியக்காரனாகி விடுவார். எங்கே வெச்சோம்? அதன்பிறகு எங்கே போச்சு? என்று மீண்டும் மீண்டும் யோசிப்பார். குட்டி போட்ட பூனையாக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவார். நேரம் ஆக ஆக எரிச்சல் வரும்… கோபம் வரும்… உச்சக்கட்ட டென்ஷனுக்கு சென்று விடுவார். முக்கியமான தொடர்புகள் எல்லாம் போச்சே என்று மனிதர் புலம்ப ஆரம்பித்துவிடுவார். அவரது நம்பருக்கு அவரே தொடர்பு கொள்ள, `நீங்கள் தொடர்பு கொண்ட நம்பர் சுவிட்ச் ஆப் செய்யபட்டுள்ளது’ என்று பதில் வரும். அதிலேயே அவர் நொந்துபோய் விடுவார்.

என்னதான் புது மொபைல் பின்னர் வாங்கி உபயோகித்தாலும், கொஞ்ச நாட்களுக்காவது முதலில் பயன்படுத்திய மொபைலின் புராணத்தையே பாடிக் கொண்டிருபார். நமது வாழ்க்கையில் முதல்ல நடக்கும் எந்தவொரு விஷயத்தையும் மறக்க முடியாது இல்லியா..?”

இது ஒருபுறம் இருக்க… பாய் பிரெண்ட்களை விட செல்போன் மீதுதான் இன்றைய பெண்களுக்கு காதல்-மோகம் அதிகம் என்று கூறி திகைக்க வைக்கிறது ஆஸ்திரேலியாவில் நடத்தபட்ட ஒரு ஆய்வு.

பாய் பிரெண்ட்களை பிரிவதால் ஏற்படும் சோகத்தைவிட, மொபைல் `மிஸ்’ ஆனால் ஏற்படும் சோகமே அதிகம் என்று, அந்த ஆய்வில் கலந்துகொண்ட பெண்கள் கூறி, ஆய்வாளர்களையே திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள்.

இந்த உலகிலேயே உங்களுக்கு பிடித்தமானது எது? என்ற கேள்விக்கு, தங்களது அம்மாதான் என்று கருத்து தெரிவித்துள்ள பெரும்பாலான பெண்கள், இரண்டாவது இடத்தை தங்களது புகைபடங்களுக்கும், முன்றாவது இடத்தை மொபைல் போனுக்கும் கொடுத்திருக்கிறார்கள். தங்களது கேர்ள் பிரெண்டுக்கு நான்காவது இடத்தை அளித்துள்ள அவர்கள், பாய் பிரெண்ட்களுக்கு அதற்கு அடுத்த இடத்தையே கொடுத்து சப்பு கொட்டியுள்ளனர்.

செல்போன் பயன்படுத்துவதைக் காட்டிலும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பது இன்னும் முக்கியமான விஷயம்.

நன்றி:- இணைய நண்பர்