தொகுப்பு

Archive for the ‘பகுதி-15 டாக்டரிடம் கேளுங்கள்’ Category

பகுதி-15 டாக்டரிடம் கேளுங்கள்

ஒக்ரோபர் 12, 2010 2 பின்னூட்டங்கள்

ஓய்வுக்குப் பின் வரும் உளைச்சல்… உஷார் உஷார்!’
“என் அப்பா, கௌரவமான அரசு உயர் பதவியில் 36 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இது நாள் வரை உடல் நலப் பிரச்னைகள் பற்றி அலட்டிக் கொள்ளாதவர், இப்போது ‘அது பண்ணுகிறது… இது படுத்துகிறது’ என்று களேபரம் செய்கிறார். ஏராளமான டெஸ்டுகளுக்குப் பிறகு, ‘உடல்நல பாதிப்பு ஒன்றுமில்லை’ என்று தெரிந்தபோதும், நம்ப மறுக்கிறார். என்ன பிரச்னை அவருக்கு?”

டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:

“வருடக்கணக்கில் பதவி, அந்தஸ்து, மரியாதை என்றே வளைய வந்தவர்கள், அதை இழக்கும்போது ஏற்படும் இயல்பான மனநல பாதிப்புதான் இது. ஓல்ட் ஏஜ் டிப்ரஷன் (Old Age Depression) எனப்படும் இந்த வயதானோரின் மனக்கவலை, அவர்களை பீடித்த அல்லது அப்படி அவர்களாக கற்பித்துக் கொள்ளும் வெறுமையிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்களால் உணரப்படுகிறது.

இதுவே… மத்திம வயதுடையவர்கள் தங்களது உடல் அவயங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பீதியைக் கிளப்பி, அவற்றைத் தீர்மானமாக நம்பும் மனநல பாதிப்பை, சொமோட்டோபோஃர்ம் டிஸ்ஆர்டர் (Somatoform Disorder) என்கிறோம்.

நம்முடைய கலாசாரத்தில் மனநலப் பிரச்னைகளை உள்ளது உள்ளபடியே சொல்லும் வழக்கம் ஏனோ கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை உடல் நலப் பிரச்னைகளாகவே அடையாளம் காண்பார்கள். அதீத மனக்கவலை, சிறிய வேலைக்குக்கூட களைப்பு, எதிலும் ஈடுபாடற்ற போக்கு, கவனக்குறைவு, தூக்கமின்மை, பசியின்மை, தன்னம்பிக்கையின்மை எனத் தொடரும் இவர்களது பாதிப்புகளின் உச்சமாக தற்கொலை முயற்சியும்கூட இருக்கும். இவர்களுக்கு ‘சைக்கோ தெரபி’ எனப்படும் மனநல சிகிச்சைதான் ஒரே வழி.

மரபுசார் காரணங்கள், தனிப்பட்ட ஆளுமை சார்புள்ள காரணங்கள், மூளையில் உள்ள முக்கிய ரசாயனங்களில் ஏற்படும் சீரற்ற மாற்றங்கள் என பல அடிப்படையான விஷயங்களோடு சம்மந்தப்பட்டவரின் குடும்பச் சூழல், உண்மையான உடல்நிலை இவற்றையும் பரிசீலித்து மனநல மருத்துவர் சிகிச்சை அளிப்பார். நான்கு முதல் எட்டு வாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் கிடைக்கும். இதற்கு குடும்பத்தாரின் பொறுமையான அணுகுமுறை அவசியம்.

சிகிச்சைக்குப் பின்னர்… இசை கேட்பது, வளர்ப்பு பிராணிகள், நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, தனக்குப் பிடித்த பகுதி நேர பணியைச் செய்வது, விரும்பிய பயணங்களை மேற்கொள்வது, பயனுள்ள பொழுதுபோக்கு, பொதுநலன் சார்ந்த சேவைகள் உள்ளிட்ட தன் மதிப்பை உயர்த்தும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம். மனநலத்தை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பது, புதிதாக எதையேனும் கற்பது, பிறருக்கு சொல்லித் தருவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

பொதுவாக, ஓய்வுக் காலத்தை நிதி ரீதியாக எதிர்கொள்ள இளம்வயதிலிருந்தே சேமிப்பதுபோல, மனரீதியாகவும் தயாராகும் பக்குவம் இருப்பின்… இம்மாதிரி பிரச்னை எழ வாய்ப்பிருக்காது!”

‘அடுப்பங்கரை புகை, நெடிகூட ஆஸ்துமாவுக்கு அழைப்பு வைக்கலாம்!’

“நற்பத்திரண்டு வயதாகும் எனக்கு வருடத்தின் மற்ற நாட்களில் வரும் சாதாரண சளிப் பிரச்னை, மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டும் விபரீதமாகி விடுகிறது. இந்தக் காலத்தில் சளி தீர எந்த மருத்துவம் எடுத்துக் கொண்டாலும் அது உள்ளுக்குள் சளியை இறுகச் செய்து, சதா செருமல் மற்றும் இருமல் மூலமாக வெளியேறுகிறது. இது சாதாரணமானதா… இல்லை, விபரீதமானதா?”

டாக்டர் மஞ்சு, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

“உங்களது அறிகுறிகள் ஆஸ்துமாவை அடையாளம் காட்டுகின்றன. ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவர்கள் பாதிப்பின் காலத்தைப் பொறுத்து, ஒரு வருடத்தின் சீதோஷண மாற்றம் (Seasonal Variation), ஒரு நாளின் சீதோஷண மாற்றம் (Diurnal Variation) என்று இரண்டு வகையில் அடங்குவார்கள். உங்களுடையது முதலாவதாகும். ஆஸ்துமாவின் பிற அறிகுறிகளான மூச்சிரைப்பு மற்றும் மூச்சுக்குழாய் அடைப்பினால் வரும் விசில் சத்தம், நெஞ்சு இறுக்கம் ஆகியவை உங்களுக்கு இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிலருக்கு சிறுவயதில் ஆஸ்துமா இருந்து இடையில் அடையாளம் காட்டாது இருந்து பின்னாளில் தீவிரமாக வெளிப்படுவதும் உண்டு. கர்ப்பக் காலத்தின்போது சர்க்கரை நோய் பாதிப்பது போல ஆஸ்துமாவும் பாதிப்பதுண்டு. சிலருக்கு பின்னாளிலும் அது சாவகாசமாக வளர்வதும் உண்டு. ஆஸ்துமாவை உறுதி செய்ய பி.எஃப்.டி. (PFT-Pulmonary Function Test) எனப்படும் நுரையீரல் செயல்பாட்டைக் கண்டு உணரும் பரிசோதனை மூலம் தெளிவு பெறலாம்.

அடையாளம் காணப்பட்ட ஆஸ்துமாவை குணப்படுத்துவதும் எளிது. மாத்திரைகள், இன்ஹேலர்கள், ஐ.வி. எனப்படும் நரம்பூசிகள், மூச்சை சீராக்கும் நெபுலைஸர்கள் போன்றவை நடைமுறையில் உதவுகின்றன. பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து சிகிச்சை காலத்தை தொடர வேண்டும்.

ஆஸ்துமா தவிர்த்தும், நுரையீரல் பாதிப்புக்கான பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. சி.ஓ.பி.டி. (COPD-Chronic Obstructive Pulmonary Disease) எனப்படும் மூச்சுக்குழாய் அடைப்பு நோய் இவற்றில் முக்கியமானது.

இவை மட்டுமல்லாது புகை பிடித்தலும் நுரையீரலை இரையாக்கும் பாதிப்புகளில் முதன்மையானது. சதா புகைவிடும் கணவரால் ‘பாஸிவ் ஸ்மோக்கிங்’ என்ற வகையில் மனைவி, குழந்தைகள் நுரையீரல் பாதிக்கப்படும் அபாயமுண்டு. அடுப்பங்கரை புகை மற்றும் நெடியும்கூட நாள் போக்கில் பெண்களின் நுரையீரல் திறனைப் பாதிக்கும்.

எனவே… அடுத்த சளி, இருமல் வரை காத்திராது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்!”

நன்றி:- டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:

நன்றி:-டாக்டர் மஞ்சு, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்