இல்லம் > கட்டுரைகள், காக்க காக்க... இளமை காக்க! > காக்க காக்க… இளமை காக்க!

காக்க காக்க… இளமை காக்க!


ங்களுடைய உண்மையான வயதைக் காட்டிலும் குறைவான வயது உடையவர்களாகத் தோற்றம் அளிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்! ஆனால், நடைமுறையில் பலரும் தங்கள் உண்மையான வயதைக்காட்டிலும் கூடுதலான வயதுடைய தோற்றத்தில் இருப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இளமையான தோற்றத்தோடு இருப்பது கடினமா என்ன? இளமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? வழிகள் என்ன? சித்த மருத்துவர் வேலாயுதம், அழகியல் நிபுணர் கீதா அசோக் மற்றும் யோகா பயிற்சியாளர் அகிலா ஆகியோர் அளித்த ‘யூத்ஃபுல்’ டிப்ஸ்களின் தொகுப்பு இங்கே…

உணவும் இளமையும்!
காலம் முழுவதும் இளமையோடு இருப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், இளமைத் தோற்றத்தை நீட்டித்துக்கொள்ள சில வழிகள் இருக்கின்றன. உண்ணும் உணவுக்கும் இளமையான தோற்றத்துக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய்கள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதிக அளவில் காய்கறி, கீரைகள், பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். சமச்சீரான உணவுப் பழக்கம் தோற்றத்தில் இளமையைப் பெருமளவு தக்கவைக்கும்.

தவிர்க்க வேண்டியவை!
காபி, டீ ஆகிய பானங்களைக் குறையுங்கள். கோலா போன்ற குளிர்பானங்கள், மதுவைத் தவிர்த்துவிடுங்கள். புகை, மதுப் பழக்கத்தினால் சருமம் மிக விரைவில் முதுமைத் தன்மை அடைந்துவிடும். இதற்குப் பதில், ஆன்டிஆக்சிடென்ட்ஸ் அதிகம் உள்ள உணவைத் தினமும் எடுத்துக் கொள்ளலாம். கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது. இதைத் தினமும் சர்க்கரை, பால் சேர்க்காமல் குடிக்க வேண்டும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொய்யா, ஸ்ட்ராபெரி, அவகோடா (பட்டர் ப்ரூட்) இதில் ஏதேனும் ஒன்றைத் தினமும் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி!
ஒரு நாளைக்குக் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவையும் கூட நல்ல உடற்பயிற்சியே. ஆரோக்கியத்துக்காக உடற்பயிற்சியே கதி என்று இருப்பதும் கூடாது. உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருங்கள். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்ற எலும்பு – மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.

இடைவேளை தேவை!

கை நிறையச் சம்பளம் வாங்கும் பல இளைஞர்களைக் கவனித்துப்பாருங்கள். கண்ணாடி அணிந்திருப்பார்கள். காரணம், காலநேரம் இல்லாமல் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக்கொண்டே வேலை செய்வதால்தான். இடைவெளி விடாமல் தொடர்ந்து புத்தகம் படிப்பதும் கண்ணாடியின் துணை தேடச் செய்யும். அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுத்தால் கண்ணாடி அணிவதைத் தள்ளிப்போடலாம். உள்ளங்கையால் கண்களை மூடிக்கொண்டு, ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுங்கள். இதனால், கண்களுக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். செடி, கொடி, இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதன் மூலம் கண்கள் குளிச்சி அடையும். கூலிங் கிளாஸ் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது தூசி விழித்திரையைப் பாதிக்கக்கூடும்.

கண்களைச் சுற்றிக் கருவளையம் அது தருவதோ முதுமைத் தோற்றம்!
கண்களைச் சுற்றி உள்ள தோலில் இருக்கும் ஹீமோகுளோபி¬னைச் சில என்ஸைம்கள் சிதைக்கும்போது, சிவப்பு நிறம் போய்க் கருவளையங்கள் உருவாகின்றன. நிறையத் தண்ணீர் குடியுங்கள். குறைந்தது 8 மணி நேரம் தூங்குங்கள். உரிய மருத்துவரின் பரிந்துரையின்பேரில் குறிப்பிட்ட ஜெல்களைத் தடவுங்கள். 60% வரை கருவளையங்கள் காணாமல் போகும். இந்த ஜெல்கள் தோலில் உள்ள எலாஸ்டின் மற்றும் கோலாஜென் ஆகிய வேதிப்பொருட்களின் உருவாக்கத்தை அதிகரித்துக் கருவளையங்கள் தோன்றுவதைத் தடுக்கும். இளமைத் தோற்றத்தையும் கொடுக்கும்.

தோலில் சுருக்கமா? வருத்தம் வேண்டாம்!
வயது அதிகரிக்கும்போது நம் உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய ஆரம்பிக்கும். அதனால், நம் உடலில் இருக்கும் கோலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய இரண்டும் தளர ஆரம்பிக்கும். தோலில் இதனால் சுருக்கம் ஏற்படும். தினசரி இரண்டரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். தோலுக்கு நீர்ச்சத்தை அளித்து சுருக்கம் இல்லாமல் இது பார்த்துக்கொள்ளும். தேவையற்ற பொருட்களை உடலில் இருந்து கழுவி விரட்டும் ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. (சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், டாக்டரின் ஆலோசனைப் பெற்று தண்ணீர் அருந்த வேண்டும்.) வைட்டமின் சி, இ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், கெரட்டினாய்ட்ஸ் உள்ள பழங்களைச் சாப்பிடுவது தோல் இளமையாக இருக்க உதவும்.

நேரடி வெயில் தோலைச் சுருக்கும்!
நேரடியான சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால் தோலில் நீர் வற்றும். சுருக்கங்கள் தோன்றும். வெளியே செல்லும்போது முழுக்கைச் சட்டை, தொப்பி அணிந்து செல்லுங்கள். நண்பகலில் வெளியே சுற்றுவதைத் தவிருங்கள். அப்படியே வெளியே செல்லவேண்டி இருந்தால், அரை மணி நேரத்துக்கு முன்பு சன்ஸ்க்ரீன் க்ரீம் போட்டுக்கொள்ளுங்கள். இந்த க்ரீம்களின் எஸ்.பி.எஃப். அளவு 30-க்கு மேல் இருக்க வேண்டும். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை தொடர்ந்து இந்த க்ரீம் போட்டுக்கொண்டால் சூரியக் கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!
இரவில் நெடுநேரம் விழிக்க வேண்டாம். குறைந்தது 8 மணி நேரம், குறுக்கீடு இல்லாத நிம்மதியான தூக்கம் மறுநாள் முழுக்க உங்களைப் புத்துணர்ச்சியில் ஆழ்த்துவதைக் கண்கூடாக உணரலாம். முகமும் பளிச்சென்று இருக்கும்.

வசீகரிக்கும் இளமை!
சிறிது சர்க்கரையை ஆலிவ் எண்ணெயில் குழைத்துத் தோலில் பூசுங்கள். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்தும். சருமம் வழவழப்பாகும். தோல் பளபளப்பாக இருக்க நல்ல ரத்த ஓட்டம் தேவை. அதற்கு அதிகமான ஆக்சிஜன் வேண்டும். அதிக அளவு ஆக்சிஜனைச் சீரான உடற்பயிற்சி தரும். உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும். சிரிக்கும்போது முகத்தில் கூடுதல் ரத்தம் பாய்கிறது. பல தசைகள் வேலை செய்கின்றன. உற்சாகம் சூழ்கிறது. விளைவு, இளமை அதிக காலம் உங்கள் உடலில் குத்தகை கொள்ளும்!

தியானம் பழகு!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனதின் அமைதி முகத்தில் எதிரொலிக்கும். மனதுக்கு மட்டும் அல்ல, தியானம் செய்வதும் உடலுக்குப் பொலிவூட்டும். இரவு படுக்கச் செல்லும் முன் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி மனதை ஒருமுகப்படுத்திவிட்டுத் தூங்கச் செல்லுங்கள்.

விடியும் வரை நல்ல உறக்கம் நிச்சயம். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது உற்சாக இளமைக்கு வரவேற்பு கொடுக்கும். தியானம் செய்யும்போது பல வேதியியல் மாற்றங்கள் நடந்து உடலைத் லேசாக்கும். இதனால் இதயத் துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம், மூளையின் செயல்பாடு அனைத்தும் சீராகின்றன. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் தியானம் செய்தாலேபோதும், மருத்துவ ரீதியாகப் பல நல்ல பலன்கள் கிடைக்கும். தியானம் செய்ய விரும்புகிறவர்கள் முறையாக ஆசிரியர் ஒருவரிடம் கற்றுக்கொண்டு செய்வதே சரியாக இருக்கும்.

இளமையாக எண்ணுங்கள்!
இளமையாக இருப்பதாகவே எப்போதும் எண்ணிக்கொள்ளுங்கள். தெளிவான சிந்தனை, ஆரோக்கியமான செயல்பாடுகள் போன்றவை உங்கள் ஆயுளை நீடிப்பது மட்டும் அல்ல… உடல் பொலிவையும் கூட்டும்.

இதயம் காப்போம்!
நீண்ட நேரம் கம்ப்யூட்டர், டி.வி. முன்பு அமர்ந்து இருக்காதீர்கள். டி.வி. பார்க்கும்போதோ அல்லது கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போதோ சுவாரஸ்யத்தில் அதிகக் கொழுப்பு உள்ள நொறுக்குத் தீனிகளைப் பலர் சாப்பிடுவது உண்டு. ஆனால், அந்தக் கொழுப்பை எரிக்கும் அளவுக்குத் துடிப்பான உடல் உழைப்பு ஏதும் இல்லாத சூழலில் இதயம் பலவீனப்படும். எனவே, அதிக நேரம் தொலைக்காட்சிப் பெட்டி முன்பு அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பதே முதுமையைத் தள்ளிப்போடுவதற்கான வழி.

முடி கொட்டாமல் இருந்தால் முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும்!
தினந்தோறும் தலையில் எண்ணெய் தேய்க்கும்போது மஸாஜ் செய்துகொள்ளுங்கள். ரத்த ஓட்டம் சீராக இருந்தால் முடியின் வேர்க்கால்களும் உறுதியாக இருக்கும். முடி அதிகம் கொட்டாது. வழுக்கை நெருங்காது. வசீகர இளமை எப்போதும் இருக்கும். தரமான ஷாம்பூகள், சோப்புகள் முடி கொட்டுவதைத் தவிர்க்கும்.

மூளைக்குப் பயிற்சி!

உடல் எந்த அளவுக்கு இளமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே அளவுக்கு நம்முடைய மூளையும் இருக்க வேண்டும் என்பது அவசியம். உடலை ‘சிக்’கென வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வதுபோல, மனதுக்கும் மூளைக்கும் கூடப் பயிற்சிகள் உள்ளன. சுடோகு, குறுக்கெழுத்துப் புதிர்ப் போட்டிகள் போன்றவற்றில் மனதைச் செலுத்தலாம். நினைவாற்றலை அதிகரிக்க உதவும் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்துசெய்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டே இருங்கள். நேர்மறையான சிந்தனையுடன் இருங்கள்.
ஆண் அல்லது பெண் இருவருக்கும் வயதாவதற்கான முதல் அறிகுறி தாடை மற்றும் கழுத்தில் தெரியும். தடித்த தலையணை பயன்படுத்துவோர்க்கு விரைவில் கழுத்தில் தொய்வு ஏற்பட்டுவிடும். தலையணையைத் தவிர்ப்பது அல்லது மெல்லிய தலையணையைப் பயன்படுத்துவதன்மூலம் இத்தகைய தொய்வுப் பிரச்னையை 10 வருடமாவது தள்ளிப்போடலாம்.
காலையில் பல் விளக்கும்போது கடைசிவாய் தண்ணீரை வெளியே கொப்பளித்துவிடாமல், கன்னம் நன்றாக உப்பும்படியாக வைத்து சிறிது நேரம் அந்த நிலையிலே இருக்கவும். அதன் பின் துப்பினால் உடலில் உள்ள நச்சுத்தன்மை (டாக்சின்) வெளியேறிவிடும். உடல் சூடு தணியும். கன்னம் தொய்வு அடையாமல் இருக்க இந்தப் பயிற்சி உதவும்.
உடலுக்கு மட்டும்தான் வயது, மனதுக்குக் கிடையாது. எனவே, வாழ்க்கையை இனிமையாகக் கொண்டாடுங்கள்.

லதானந்த், உமா ஷக்தி
படம்: எஸ்.நாகராஜ்
நன்றி:- டாக்டர் விகடன்.

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக