தொகுப்பு

Archive for the ‘அருள் தரும் விளைநிலம்’ Category

அருள் தரும் விளைநிலம்! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்விற்காக நன்றான செயல்களை நாளும் செய்து நாடியோருக்கு நல்லுதவிகள் புரிந்து அல்லாஹ்வின் நல்லருளை அறுவடை செய்யும் விளைநிலம் என்று விவரிக்கிறது இஸ்லாம்.

arabsமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறுமையில் தீயோருக்கு ஏற்படும் தீவினைகள் பற்றி பேசியதைக் கேட்ட பெருமானாரின் தோழர்கள்  இதயங்கள் இளகி அழுதனர். அதன்பின் பத்து தோழர்கள் ஹழ்ரத் உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களின் வீட்டில் கூடி கருத்து பரிமாறி பொருத்தமில்லா முடிவை முன் வைத்தனர். அம்முடிவு “”அவர்கள் அனைவரும் இல்லறத்தை விடுத்து துறவறம் பூண வேண்டும். கம்பள உடைகளையே அணிய வேண்டும். பகல் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இரவில் விரிப்பில் படுத்து உறங்கக் கூடாது. விழித்திருந்து வணங்க வேண்டும். மாமிசம், கொழுப்பு பொருட்களை உண்ணக் கூடாது. நறுமணம் பூசக் கூடாது. நமக்கென ஓரிடம் கூடாது. பூமியில் பரதேசிகளாய் சஞ்சரிக்க வேண்டும்” என்பதாகும்.

இம்முடிவைக் கேள்வியுற்ற மாண்புடைய மாநபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களின் வீட்டிற்கு விசாரிக்க சென்ற பொழுது அவர் வீட்டில் இல்லை.

பின்னர் பெருமான் நபி (ஸல்) அவர்கள் வந்து சென்றதை அறிந்த உஸ்மானும் பத்து தோழர்களும் நபிகள் (ஸல்) அவர்கள் வீட்டிற்கு விரைந்தனர்.

எம்பெருமானார் அவர்கள் பத்து தோழர்களின் மொத்த முடிவைப் பற்றி விசாரித்த பொழுது அல்லாஹ்வின் அருளை நாடியே அவ்வாறு முடிவு செய்ததாக அவர்கள் அறிவித்தனர்.  அவ்வாறு வாழ அல்லாஹ் ஏவவில்லை என்று எடுத்துரைத்த ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் “”இல்லறத்தை நல்லறமாக்கி இனிய மக்களை ஈன்று வளர்த்து நானிலத்தில் நல்வாழ்வு வாழ்ந்து நாயகன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற வேண்டும். காலமெல்லாம் நோன்பு நோற்றல் கூடாது. கடமையான நோன்பைக் கட்டாயம் மேற்கொள்ளுங்கள்.  வசதி, வாய்ப்புகளுக்கு ஏற்ப உபரி நோன்புகளை நோற்கலாம். உபரி நோன்புகளைத் தொடராக நோற்க வேண்டாம்.  இடைவெளி இருக்க வேண்டும். நானும் நபில் (உபரி) நோன்புகளை நோற்கிறேன். நோற்காத நாட்களும் உண்டு” என்றார்கள்.

“”இரவில் விழித்திருந்து வணங்குங்கள். அப்பால் தூங்குங்கள்.  இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டாம். நானும் இரவில் நின்று தொழுகிறேன். நித்திரை கொள்கிறேன். அனுமதிக்கப்பட்ட மாமிசம், கொழுப்பு பொருட்களை உண்கிறேன். நறுமணம் பூசுகிறேன். இல்லற வாழ்வையும் வாழ்கிறேன். இதுவே என் நடைமுறை. என்னைப் பின்பற்றுங்கள்” என்றும் அவர்களுக்கு அருளுரை புரிந்தார்கள்.

இல்லறத்திலிருந்து இறை கட்டளைகளை நிறைவேற்றி வரம்பு மீறாது வாழ வேண்டும் என்று திருக்குர்ஆனின்  5வது அத்தியாயத்தின் 87,88வது வசனங்கள் அறிவிக்கின்றன. “”விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்தவற்றில் மணமானவற்றை நீங்கள் ஆகாதவைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுகிறவர்களை நேசிக்கமாட்டான்”.

“”அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து  மணம் பொருந்திய ஆகுமானதைப் புசியுங்கள். மேலும் நீங்கள் எவனை விசுவாசங் கொண்டிருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்விற்கும் பயந்து கொள்ளுங்கள்”.

நாமும் குர்ஆன் நவிலும் முறையில் நந்நபி வாழ்ந்து காட்டிய வழியில் உலகில் உரிமையானதை உதறித் தள்ளாது உரிய முறையில் துய்த்து உண்மையாய் வாழ்ந்து தூயோன் அல்லாஹ்வின் நேயமான அருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 08 Feb 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.