தொகுப்பு

Archive for the ‘அதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்’ Category

அதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்! – சி.சரவணன்



‘நேற்று போல் இன்று இல்லை; இன்று போல் நாளை இல்லை’ கதையாக தினம் ஒரு முகம் காட்டிவருகிறது சந்தை…. இந்தச் சூழ்நிலையில் பங்குகளை எப்படி வாங்குவது என்று கைபிசைந்து நிற்கிறார்கள் சிறு முதலீட்டாளர்கள். அதற்காக கடலில் அலை ஓய்ந்த பிறகு குளிக்கலாம் என்று இருந்துவிட முடியுமா என்ன! அப்படி என்றால் இந்நிலையில் என்ன செய்யலாம் என்று பங்குச் சந்தை நிபுணரான லெட்சுமண ராமனிடம் கேட்டோம்…

.வங்கி வட்டியாவது வேண்டாமா!

.”சந்தையின் போக்கு தடுமாற்றமாக இருக்கும்போது நாம் செய்யப் போகும் முதலீடு ஆஹா ஓஹோ லாபங்களை அள்ளிக் கொடுக்காவிட்டாலும், குறைந்தபட்சம் வங்கி வட்டி அளவுக்காவது தந்தால்தானே நல்லது? அதிக டிவிடெண்ட் தரக்கூடிய பங்குகளில் முதலீடு செய்தால் அப்படி ஒரு வருமானத்தை நிச்சயமாகப் பெறலாம். கணிசமான டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனப் பங்குகளைக் கண்டறிந்து முதலீடு செய்தால் போதும்; லாபத்துக்கு லாபமும் வரும், முதலீட்டுக்கும் மோசம் வராது” என்றவர், அது குறித்து மேலும் விளக்கினார்…

.ஒரு போர்ட்ஃபோலியோவே உருவாக்கலாம்!


.”முதலீடு செய்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அது டிவிடெண்ட் வழங்குவதற்கு முன்பாக அதில் முதலீடு செய்துவிட வேண்டும். டிவிடெண்ட் கைக்கு கிடைத்த பிறகு அந்தப் பங்கின் விலை சிறிது குறையும். பிறகு படிப்படியாக ஏறத் தொடங்கும். அதிக விலைக்கு வரும்போது விற்று லாபம் பார்க்கலாம். .பொதுவாக முழு நிதி ஆண்டு முடிந்த பிறகு நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்கத் தொடங்கும். அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகளைக் கண்டறிந்து செப்டம்பர், அக்டோபர் வரை அவற்றில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். டிவிடெண்ட் தொகை எவ்வளவாக இருந்தாலும் வரி கிடையாது என்பதால் முழு லாபமும் கைக்கு வந்துவிடும். பங்கின் விலை அதிகரித்தால் அதில் தனி லாபம் இருக்கிறது.

.நடப்பு ஆண்டில் இந்திய பங்குச் சந்தையின் குறியீடு 15% குறைந்திருக்கிறது. அதேநேரத்தில், பல தனிப்பட்ட பங்குகளின் விலை 30-40% விலை இறங்கி இருக்கின்றன. பங்கின் விலை கணிசமாக இறங்கி இருப்பதால் டிவிடெண்ட் யீல்டு கவர்ச்சிகரமானதாக இருக்கும். இதை வைத்துதான் பங்கை வாங்கும் முடிவை எடுக்க வேண்டும். பொது வாக டிவிடெண்ட் யீல்டு மூன்றுக்கு மேல் இருந்தால் வாங்கலாம். இது போன்ற பங்குகளை சந்தை இறங்கி இருக்கும் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிச் சேர்த்தால் ஒரு நல்ல ஷேர் போர்ட்ஃபோலியோவை கூட உருவாக்க முடியும்” என்றவர், டிவிடெண்டுக்காக பங்குகளை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களையும் விளக்கிச் சொன்னார்.

.வலுவான பங்காகப் பாருங்கள்…

.”ஒரு நிறுவனம், சிறப்பு டிவிடெண்ட் கொடுக்கும்போது வாங்காமல் இருப்பது நல்லது. காரணம், பங்கின் விலை ஏறிய வேகத்தில் இறங்கும் அபாயம் இருக்கிறது. உதாரணத்துக்கு, 2010 டிசம்பர் 31-ம் தேதி, நெல்காஸ்ட் நிறுவனப் பங்கின் விலை 95 ரூபாயாக இருந்தது. சிறப்பு டிவிடெண்ட்டாக 12 ரூபாய் அறிவிக்கப்பட்டதும் பங்கின் விலை 120 ரூபாய்க்கு அதிகரித்தது. டிவிடெண்ட் முதலீட்டாளர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்தபோது பங்கு விலை 125 ரூபாயாக ஆக உயர்ந்திருந்தது. பிறகு விலை 110 ரூபாய்க்கு குறைந்து, டிவிடெண்ட் அறிவிப்புக்கு முந்தைய விலையான 95 ரூபாய்க்கு வந்து விட்டது. இந்தப் பங்குகளை 120 ரூபாய்க்கு வாங்கியவர்களுக்கு, பங்கு ஒன்றுக்கு 25 ரூபாய் நஷ்டமாகி விட்டது.

.இது போன்ற நேரங்களில் டிவிடெண்டுக்கு ஆசைப்பட்டு வாங்கிய பங்கை நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே, டிவிடெண்டுக்காக பங்குகளை வாங்கினால், அடிப்படையில் வலுவாக இருக்கும் நிறுவனங்களாகப் பார்த்து வாங்க வேண்டும். மேலும் அது சார்ந்த துறை குறித்தும் அலசிப் பார்த்தே வாங்க வேண்டும்.

.எந்தப் பங்குகள் வேண்டாம்…

.டிவிடெண்ட் என்பது ஒரு நிறுவனத்தின் கடந்த கால செயல்பாட்டின் மூலம் கிடைத்த லாபத்திலிருந்து கொடுக்கப்படுவதாகும். ஆனால் பங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்ததாகும். முக்கியமாக சந்தை எதிர்காலத்தில் நடக்கும் விஷயத்தை இப்போதே பிரதிபலிக்கத் தொடங்கி விடும் என்பதை மறந்துவிடக் கூடாது. தற்போதைய நிலையில் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்த ஆர்.பி.ஐ. வட்டியை மேலும் அதிகரிக்கும் என்பதால் ஆட்டோ, ரியல் எஸ்டேட், வங்கி போன்ற துறைகளைச் சார்ந்த பங்குகளை டிவிடெண்டுக்காக மட்டும் வாங்கக் கூடாது. அதே போல், எண்ணெய் நிறுவனப் பங்குகளை வாங்கும் போது கச்சா எண்ணெய் விலையைப் பார்த்து வாங்க வேண்டும். மேலும், நிறுவனம் வழங்கி வரும் டிவிடெண்ட் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறதா என்பதையும் கவனித்து வாங்குவது நல்லது. டிவிடெண்ட் அறிவிப்பு வந்தவுடன் பங்கின் விலை மிகவும் அதிகரித்தால் அதனை துரத்தி வாங்கக் கூடாது. பங்கின் விலை 52 வார குறைந்தபட்ச விலை அருகிலேயே அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தால் வாங்கலாம்.

.அதிக டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனத்துக்கு எதிர்கால திட்டம் எதுவும் இல்லை என்ற கருத்து இருக்கிறது. இதை அறிந்து கொள்ள ‘டிவிடெண்ட் கவர்’ என்ற விகிதம் உதவும். இந்த விகிதம் அதிகமாக இருந்தால், அந்த நிறுவனம் லாபம் அனைத்தையும் டிவிடெண்டாகக் கொடுக்காமல் லாபத்தில் ஒரு பகுதியை எதிர்கால திட்டங்கள், சேமிப்புத் தொகையாக வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். இது மாதிரியான பங்குகளை டிவிடெண்டுக்காக வாங்கி, நீண்ட கால முதலீடாக வைத்துக் கொள்ளலாம்.

.முந்தைய வருடங்களில் டிவிடெண்ட் அறிவிப்பு எப்போது வந்தது, புக் குளோஸர் தேதி எது என்பதைக் கவனித்து அதற்கு ஏற்ப பங்குகளை வாங்கி லாபம் பார்க்கலாம். மிக முக்கியமாக டிவிடெண்ட் ரெக்கார்ட் தேதி, புக் குளோஸர் தேதியை தெரிந்து வைத்துக் கொண்டு, அந்தத் தேதிகளுக்கு முன்னரே விலை மாற்றத்தை ஆராய்ந்து வாங்கினால் கூடுதல் லாபம் சம்பாதிக்க முடியும். பொதுவாக, இந்தத் தேதிகள் நெருங்க நெருங்க பங்கின் விலை அதிகரிக்கத் தொடங்கும். அடுத்து டிவிடெண்ட் கொடுக்கும் தேதி அன்று பங்கு உங்கள் பெயரில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் டிவிடெண்ட் உங்களுக்கு கிடைக்கும்” என்ற லெட்சுமண ராமன் நாணயம் விகடன் வாசகர்கள் முதலீடு செய்து லாபம் பார்க்க அதிக டிவிடெண்ட் வழங்கி வரும் பத்து பங்குகளையும் அடையாளம் காட்டினார்.

.பஜாஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்

.இதன் முந்தைய பெயர் பஜாஜ் ஆட்டோ. வங்கி சாராத நிறுவனமாக பஜாஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் இயங்கி வருகிறது.

.பால்மர் லாறி அண்ட் கோ.

.பல்துறை நிறுவனமான இது உற்பத்தி மற்றும் சேவை துறையில் இருக்கிறது. பொதுத் துறை நிறுவனமான இது பேக்கேஜிங், கிரீஸ், சிறப்பு வகை ரசாயனங்கள், சரக்குப் போக்குவரத்து என பலவற்றில் பரந்து விரிந்திருக்கிறது.

.
கார்ப்பரேஷன் வங்கி

.பொதுத்துறை வங்கி. 100 ஆண்டுகளைக் கடந்த இதன் மொத்த வணிகம் 1,67,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. கிராமப் புறங்களில் தீவிரமாக வங்கிச் சேவையைக் கொண்டு சேர்த்து வருவதற்காக அண்மையில் விருது பெற்றிருக்கிறது.

.ஹெச்.இ.ஜி.

.உருக்கு உற்பத்தியில் பயன்படும் கிராபைட் எலெக்ட்ரோட்களை தயாரித்து வருகிறது. மேலும், வெல்டிங் பணிகளையும் மேற் கொண்டு வருகிறது. ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழைப் பெற்றுள்ள இந்த நிறுவனம், தன்னுடைய தயாரிப்பில் சுமார் 80 சதவிகிதத்தை 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

.பொதுத்துறை ஆயில் நிறுவனமான இது, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய் சந்தைப்படுத்துதல், ஆயில் எடுத்துச் செல்லும் குழாய்கள் பராமரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. 2009-10-ம் ஆண்டில் இதன் நிகர லாபம் 10,221 கோடி ரூபாய்.

.ஜே.கே சிமென்ட்

.சிமென்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனம். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் இந்நிறுவனம், வட இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலும், தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.

.
எஸ்.ஆர்.எஃப்.

.பல்துறை நிறுவனமான இது நைலான் தயாரிப்பில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். தாய்லாந்து, தென்ஆப்ரிக்கா, துபாய் போன்ற நாடுகளிலும் இயங்கி வருகிறது.

.டூரிஸம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

.அரசுத் துறை சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம். இதன் பங்கு மூலதனத்தில் பொதுத் துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் பங்குகள் குறிப் பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது.

.மங்களம் சிமென்ட்

.பி.கே. பிர்லா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனம். கடந்த 33 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிறுவனம் அண்மையில் ராஜஸ்தானில் ஆண்டுக்கு 7 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி திறன் கொண்ட ஜெர்மன் தொழில்நுட்பத்திலான ஆலையை அமைத்துள்ளது.

.நவபாரத் வென்ச்சர்ஸ்

.மின் உற்பத்தி, சுரங்கம், சர்க்கரை போன்ற வணிகத்தில் ஈடுபட்டு வரும் பல்துறை நிறுவனம். சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை விருதுகளை இதற்கு சி.ஐ.ஐ. வழங்கிச் சிறப்பித்துள்ளது. தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்காவி லும் இயங்கி வருகிறது.


நன்றி:- சி.சரவணன்

நன்றி:- நா.வி