தொகுப்பு

Archive for the ‘பகுதி-07 கிராமத்து கைமணம்’ Category

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை


நவரத்தின குருமா

சாதம், சப்பாத்தி போன்றவற்றுக்கு தோதான இந்த குருமா செய்ய கற்றுத்தருகிறார் மதுரை வாசகி மீனா.

பட்டாணி, வெள்ளை கொண்டைக் கடலை, பாசிப் பயறு, மொச்சை, காராமணி, பட்டர் பீன்ஸ், அல்லது டபுள் பீன்ஸ்… இவை அனைத்தையும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து, ஒரு இரவு முழுக்க ஊற வையுங்கள். பிறகு, இவற்றுடன் ஒரு கைப்பிடி பாசிப் பருப்பு சேர்த்து வேக வையுங்கள்.

ஒரு மூடி தேங்காய், ஒரு ஸ்பூன் சீரகம், 4 மிளகாய் வற்றல்… இவற்றை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைத்து, வெந்திருக்கும் பயறு கலவையோடு கலக்குங்கள். இந்தக் கலவை கொதித்ததும் 4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி இறக்குங்கள்.

ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து, சிறிதளவு மல்லித்தழை, கறிவேப்பிலையைத் தாளித்து, அதைக் கலவையில் கொட்டிக் கிளறி இறக்குங்கள். நவரத்ன குரும்ம்….மா ரெடி.

இந்தக் குறிப்பைத் தேர்ந்தெடுத்த ரேவதி சண்முகம் செய்து, ருசித்துப் பார்த்துச் சொன்னது…

‘‘டேஸ்ட் சூப்பர்! ஆனா, இத்தனை பயறு வகைகள் இருக்கறதால வாயு கோளாறு உண்டாகலாம். அதனால, கடைசியா தாளிக்கறப்ப, ரெண்டு பல் பூண்டையும் நசுக்கி சேர்த்துடுங்க…’’

கருப்பட்டி ஆப்பம்

ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் புழுங்கல் அரிசி, ஒரு கப் உளுந்து, அரை டீஸ்பூன் வெந்தயம், ஒரு டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி… இது எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து ஊறவெச்சு, ஊறினதும் கால் கப் தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸா அரைச்செடுங்க. அதுல ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கரைச்சு வைங்க. இதை ஒரு ராத்திரி முழுக்க புளிக்க வைக்கணும். காலைல ஆட்டி வைக்கறதா இருந்தா ஆறுலேர்ந்து எட்டு மணி நேரம் வரைக்கும் புளிக்க விடணும்.

புளிச்சதும், ரெண்டு கப் கருப்பட்டியை எடுத்து அதுல கால் கப் தண்ணிவிட்டு அடுப்புல வெச்சு காய்ச்சுங்க. கருப்பட்டி முழுசா கரைஞ்சதும் அதை வடிகட்டி, சூடா இருக்கும்போதே மாவுல ஊத்திக் கலக்குங்க. கலக்கும்போது கால் டீஸ்பூன் ஆப்பச் சோடாவையும் சேர்த்துக்குங்க. இந்த மாவை குழிவான தோசைக்கல்… இல்லேன்னா, அகலமான வடை சட்டில ஊத்தி ஆப்பமா சுட்டெடுங்க.

இந்த ஆப்பத்துக்கு தொட்டுக்க எதுவுமே வேண்டாம். சும்மா சாப்பிடவே அவ்வளவு சுவையா இருக்கும். பிரியப்பட்டா தேங்காய்ப் பூவோட சர்க்கரையை (இல்லேன்னா வெல்லம்) கலந்து தொட்டுக்கலாம்.

ஜவ்வரிசி பொரி

ஒரு கப் ஜவ்வரிசியை சுத்தம் பண்ணி அதை கொஞ்சம் கொஞ்சமா எண்ணெய்ல போட்டு பொரிச்செடுங்க. ஒரு கைப்பிடி அளவுக்கு கறிவேப்பிலை யையும் எண்ணெய்ல மொறுமொறுப்பா பொரிச்செடுங்க. ஜவ்வரிசில எண்ணெய் நல்லா வடிஞ்சதும், அதோட வறுத்து தோல் நீக்கின வேர்க்கடலை கால் கப், பொட்டுக் கடலை கால் கப், அரை டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை… எல்லாத் தையும் சேர்த்து கலந்தா சுவையான, மொறுமொறு ஜவ்வரிசி பொரி தயார்.

எல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க இதை. இந்தப் பொரியையே இன்னும் சத்துள்ளதா, இன்னும் சுவையா மாத்தணும்னா பாதாம், முந்திரி ரெண்டையும் சேர்த்து கால் கப் அளவுக்கு எடுத்து, இளஞ்சிவப்பா எண்ணெய்ல வறுத்து ஜவ்வரிசியோட கலந்துக்குங்க.

நீர் கொழுக்கட்டை

ஒரு கப் பச்சரிசி மாவுல தேவையான உப்பு சேர்த்து, கொதிக்க வெச்ச தண்ணிய கொஞ்சம் கொஞ்சமாக ஊத்தி, கெட்டியா பிசைஞ்சுக்கோங்க. நாலு கப் தண்ணிய ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க வைங்க. பிசைஞ்சு வெச்சிருக்கற மாவை சுண்டைக்காய் அளவு உருண்டைகளா உருட்டி, கொதிக்கற தண்ணில போட்டு வேகவிடணும். முதல்ல பத்து உருண்டைகளைப் போடுங்க. தண்ணி கொதி அடங்கும். அது மறுபடியும் கொதிக்க ஆரம்பிச்சதும் இன்னும் பத்து உருண்டைகளைப் போடணும். தீ மிதமா எரியணும்.

பத்தே நிமிஷத்துல இந்த உருண்டைங்க வெந்துடும். அப்புறமா கால் டீஸ்பூன் சீரகத்தை உள்ளங்கைல வெச்சு நல்லா கசக்கி, கொதிக்கற தண்ணில போடுங்க. ரெண்டு ஆர்க்கு கறிவேப்பிலைய சின்னச் சின்னதா கிள்ளி அதோட சேருங்க. கடைசியா அரை கப் தேங்காய்ப் பாலை ஊத்தி அடுப்பை அணைச்சுடுங்க. தண்ணி கலவையோட சேர்த்து அந்த கொழுக்கட்டைங்கள சாப்பிட்டா… அட, அட! அந்த ருசிக்கு ஈடு இணையே இல்லை. இதுல தேங்காய்ப் பால் வேண்டாம்னு நெனைக்கறவங்க அதுக்குப் பதிலா பசும்பால் சேர்த்துக்கலாம். அதுவும் தனி ருசியா இருக்கும்.

சந்திப்பு: கீர்த்தனா

படங்கள்: உசேன்

நன்றி:- சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பகுதி-08 கிராமத்து கைமணம் பூண்டு கஞ்சி, மரவள்ளிக் கிழங்கு கார பணியாரம், உளுந்து களி