தொகுப்பு

Archive for the ‘அயலாரிடம் அன்பு’ Category

அயலாரிடம் அன்பு! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


அண்டை வீட்டார் உறவினராக இருப்பினும் உறவில்லாதவராக இருப்பினும் முஸ்லிமாக இருப்பினும் முஸ்லிம் அல்லாதவராக இருப்பினும் அண்டை வீட்டாருடன் நல்லுறவும் நட்பும் சகோதரத்துவமும் பேணி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உற்றுழி உதவ வேண்டும்” என்றுரைத்து, உரைத்தபடி உண்மையாய் வாழ்ந்து காட்டியவர்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள்.

சாதாரணமாக சில பெண்கள் சிறிய பொருட்களைக்கூட அண்டை அயலாருக்குக் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். அதனால்தான் நபிகள் நாயகம்,

“”பெண்களே! அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதை அற்பமாகக் கருத வேண்டாம். அது ஆட்டின் குளம்பாயினும் சரியே”

என்று பெண்களுக்கு போதித்த நீதி, புகாரி நூலில் உள்ளது. ஆட்டின் குளம்பு என்பது சிறியது; மதிப்பற்றது என்றாலும் அதனையும் அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். “”அண்டை வீட்டார் பசித்திருக்க தாம் மட்டும் உண்பவர் உண்மையான முஸ்லிமல்ல” என்பதும் நாயக நன்மொழி.

இதனையொட்டியே ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கும் பொழுது, முதலில் அண்டை வீட்டு யூதருக்கு அன்பளிப்பு செய்வார்கள்.

“”அல்லாஹ்வின் பார்வையில் தோழமையில் சிறந்தவர், தம் தோழர்களிடம் சிறந்து விளங்குபவர், சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே” என்ற நபிகளாரின் நன்மொழி திர்மிதி நூலில் காணப்படுகிறது.

“”அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்து நிம்மதியைக் கெடுப்பவன் சுவனம் புக மாட்டான்” என்ற நீதி முஸ்லிம் நூலில் பதியப்பட்டுள்ளது.

இமாம் அபூஹனீபா(ரஹ்) இஸ்லாமிய சமய அறிஞர். அவருடைய மறுபக்க வீட்டில் வாழும் யூதரின் வீட்டில் கொட்டப்படும் நீர், இமாம் அவர்களின் வீட்டு வாயிலில் விழுந்து தேங்கி சேறும் சகதியுமாகி விடும்.

இமாம் அபூஹனீபா அவர்கள் இரவே கொட்டும் நீரைப் பாத்திரத்தில் பிடித்து அப்புறப்படுத்துவதை வழக்கமாக செய்தார். ஒரு நாளிரவு இதனைக் கண்ட யூதர் “”ஒரு வேலையாளை வைத்து கழிவு நீரை அகற்றாமல், வேலையாள் கூலியை மிச்சப்படுத்தி இவ்வேலையை நீங்களே செய்கிறீர்களா?” என்று கேலி செய்தார். இமாம் அவர்கள் எங்கிருந்து நீர் கொட்டுகிறது என்பதைக் கவனிக்குமாறு யூதரிடம் வேண்டினார்கள். அவரின் வீட்டிலிருந்து கழிவு நீர் கொட்டுவதையறிந்த யூதர் மனம் வருந்தி திருந்தி இமாம் பொருந்தும் மாணவராய் அவரின் மதரசாவில் சேர்ந்தார்.

وَاعْبُدُوا اللَّـهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّـهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
“”அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அந்நிய அண்மை வீட்டாருக்கும் அன்பும் நன்றியும் செய்யுங்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-36வது வசனப்படி நாமும் அண்டை அயலாரிடம் அன்பு பாராட்டி சுமுக உறவைப் பேணிக் காப்போம். ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உத்தம நபிகள் வாழ்ந்து காட்டிய சத்திய நெறியில் வாழ்ந்து மறுமையிலும் சுவனத்தல் சுக வாழ்வு வாழ்வோம்.

நன்றி:- தினமணி 04 Oct 2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பிரிவுகள்:அயலாரிடம் அன்பு, அயலாரிடம் அன்பு! குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,