தொகுப்பு

Posts Tagged ‘இஸ்லாம்’

மன்னிக்க மாட்டார்களா எனும் சிந்தனை மேலானது. – அதிரை ஏ.எம்.ஃபாரூக்


 
கடந்த கட்டுரையில் இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கற்றுத்தந்த இறைவனிடம் பாதுகாப்புக் கோரும் வாசகமாகிய ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம், என்ற வாசகத்தை மொழிந்து விட்டு அதற்கடுத்து எதிராளியை மன்னித்து விடுவோம் என்ற நல்லமுடிவை மேற்கொண்டு விட்டு இறுதியாக அவருக்கு ஸலாம் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும் என்ற மூன்று உயர் பண்புகளை பின் பற்றினால் அவரிடமிருந்தும் அவருடைய மேற்காணும் நற்செயல்கள் மூலம் எதிராளியிடமிருந்தும் கோபம் முற்றாக விலகி விடுவதுடன் ஷைத்தானின் தீய சூழ்ச்சி முறியடிக்கப்பட்டு விடும் என்பதைப்  பார்த்தோம்.
 
அனைத்து விஷயங்களிலும் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவனாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளக் காரணத்தால் தான் எது சரி, எது தவறு என்பதை பிரித்து அறிந்து சூழ்நிலைக்கொப்ப காரியங்களின் வீரியங்களுக்கு ஏற்றவாறு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உணர்வுகளை அடக்கி ஆள்வதற்காக அருள்மறைக் குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான்.
 
 
அவற்றில் ஒன்று தான் கோபம் ஏற்பட்டு இரு தரப்பார் சச்சரவில் ஈடுபடும்பொழுது காட்டுக் கூச்சல் இடுவதாகும். ( இதை இதற்கு முந்தைய நான்காவது தொடரில் சுட்டிக்காட்டினோம் அதன் சுருக்கம்.) …’அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே ஏன்?’ என்று கேட்டு விட்டு ‘அவ்விருவரின் விவகாரம் என்ன?’ என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இந்த அறியாமைக் கால அழைப்பை விட்டு விடுங்கள். இது அருவருப்பானது” என்று கூறினார்கள்… புகாரி 3518. ஜாபிர்(ரலி) கூறினார்.
 
குரல் வளையிலிருந்து அதிகமான சப்தம் வெளிப்படுவதையே இஸ்லாம் தடுத்திருக்கிறது அதை அஞ்ஞானப் பழக்கம் என்று இடித்துரைக்கிறதென்றால் கோபத்தின் வாயிலாக கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் செய்வதையும் ஒருவருக்கொருவர் காறி உமிழ்ந்து கொள்வதையும் சட்டையைப் பிடித்துக் கொண்டு மல்லுக்கு நிற்பதையும் இஸ்லாம் அனுமதிக்குமா ? சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம். இதனால் தான் கோபத்தை மென்று விழுங்கி விடுங்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறினான்.
 
அருள்மறைக் குர்ஆனின் அழகிய உபதேசங்களைப் பின்பற்றி அருள்மறைக் குர்ஆனாகவே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அண்ணல் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களிடத்தில் ஒருவர் எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டபொழுது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள் என்று மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வலியுருத்திக் கூறிய  சம்பவமும் உண்டு.
 
 
 
இதே தாய் தந்தை, மூத்த சகோதர, சகோதரி, மூத்த வயதையுடைய தூரத்து உறவினர்கள், மார்க்க அறிஞர்கள் நம்மிடம் கோபம் கொண்டால் அல்லது கோபம் எற்படுவது போன்று நடந்து கொண்டால் அவர்களின் விஷயத்தில் மன்னித்து விட்டேன் என்ற எண்ணம் நமக்கு வரக் கூடாது அவர்களை நாம் மன்னிக்க முடியாது அவர்களே நம்மை மன்னிக்கத் தகுதியானவர்கள்.
 
இது போன்றத் தருணங்களில் நாமே நம்மை கட்டுப் படுத்திக் கொள்ள முன் வர வேண்டும் கோபத்தை மென்று விழுங்குவதுடன் இச்சம்பவத்திற்காக அவர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்களா ? இப்பிரச்சனை முடிந்து விடாதா ? என்ற எண்ணமே உதயமாக வேண்டும் இந்த நற்சிந்தனையே முன்னதை விட உயர்வானதாகும் அத்துடன் அங்கிருந்து இடம் பெயர்ந்து தனி இடத்தில் போய் சற்று அமர்ந்து விட வேண்டும்.
 
 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு ஒரு செய்தியை சொல்லி விட்டால் கண்டிப்பாக அதில் நன்மை இருக்கும் என்பதை அறிந்து வைத்திருந்த அவர்களின் ஆருயிர் தோழர்கள் அதை சிறிதளவும் மாற்றமில்லாமல் பின்பற்றி வந்தார்கள். அவர்களின் கூற்று நடைமுறைக்கேற்றது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் அதனடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இம்மை, மறுமை நற்பேருகளை தேடிக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்.
 
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்திய செய்தி அறிந்து அங்குக் குழுமி இருந்த மக்களிடம் அண்ணல் அவர்கள் இறக்க வில்லை என்றும் இறந்து விட்டதாகக் கூறியவர்களிடம் கடும் கோபம் கொண்டும் பேசிக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களைப் பார்த்து அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறிய முதல் வார்த்தை நீங்கள் முதலில் உட்காருங்கள் என்பது தான் அதற்கு அவர்கள் மறுக்கவே மீண்டும், மீண்டும் உட்காருங்கள் என்றுக் கூறி விட்டே அண்ணல் அவர்கள் இறந்து விட்டார்களா ? இல்லையா ? என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மக்களை தெளிவுப் படுத்தினார்கள் இதில் கடும் கோபத்தில் இருந்த உமர் (ரலி) அவர்களும் தெளிவு பெற்றார்கள்.
 
(நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூபக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர்(ரலி) ‘உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்” (திருக்குர்ஆன் 3:144) என்றார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூபக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். 1242. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
 
கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறிய உபதேசத்தை உள்ளத்தில் ஏற்றி வைத்திருந்த அபூபக்ர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடாமல் அண்ணல் அவர்களின் உபதேசததைக் கூறி அமரச் சொல்லி விட்டு அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கூறி உமர்(ரலி) அவர்களின் கோபத்தை கட்டுப்படுத்தி விட்டு சிந்திக்கத் தூண்டினார்கள்.
 
 
 
 
அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

தராவீஹ் துஆ – TARAWEEH DUA


தராவீஹ் தொழுகைக்கு பிறகு ஓத வேண்டிய துஆ

tarawih_dua_Arabi.jpg

tarawih_dua_Tamil.jpg

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ٭ اَللّٰهُمَّ اجْعَلْنَا بِالْاِيْمَانِ كَامِلِيْنَ وَلِفَرَائِضِكَ مُؤَدِّيْنَ وَلِلصَّلٰوةِ حَافِظِيْنَ، وَلِلزَّكٰوةِ فَاعِلِيْنَ ، وَلِمَا عِنْدَكَ طَالِبِيْنَ ، وَلِعَفْوِكَ رَاجِيْنَ ، وَبِالْهُدٰى مُتَمَسِّكِيْنَ ، وَعَنِ اللَّغْوِ مُغْرِضِيْنَ، وَفِي الدُّنْيَا زَاهِدِيْنَ ، وَفِى الْاٰخِرَةِ رَاغِيْنَ ، وَبِالْقَضَآءِ رَاضِيْنَ وَلِنِّعْمَاءِ شَاكِرِيْنَ ، وَعَلىَ الْبَلَآءِ صَابِرِيْنَ، وَتَحْتَ لِوَآءِ حَبِيْبِكَ وَنَبِيِّكَ وَصَفِيِّكَ وَرَسُوْلِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيٰمَةِ لاَئِذِيْنَ ، وَاِلَى الْحَوْضِ وَارِدِيْنَ ، وَمِنْ سُنْدُسٍ وَاٍسْتَبْرَقٍ مُتَلاَبِسِيْنَ ، وَمِنْ طَعَامِ الْجَنَّةِ اٰكِلِيْنَ ، وَمِنْ لَبَنٍ وَعَسَلٍ مُصَفًّى شَارِبِيْنَ ، بِاَكْوَابِ وَاَبَارِيْقَ وَكَأْسٍ مِنْ مَعِيْنٍ مَعَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِيْنَ ٭ اَللّٰهُمَّ  اَجْعَلْنَا فِى هَذٰالشَّهْرِ الشَّرِيْفِ مِنَ السُّعَدَآءِ الْمَقْبُوْلِيْنَ وَلاَ تَجْعَلْنَا يَااللهُ يَا اَللهُ يَااَللهُ مِنَ الْاَشْقِيَآءِ الْمَرْدُوْدِيْنَ ٭ اَللّٰهُمَّ وَاِنَّ لَكَ فِيْ كُلِّ لَيْلَةٍ مِنْ لَيَالِيْ شَهْرِ رَمَضَانَ عُتَقَآءَ وَطُلَقَآءَ وَاُمَنَاءَ وَخُلَصَاءَ فَاجْعَلْنَا يَارَبَّنَا مِنْ عُتَقَآئِكَ وَطُلَقَآئِكَ وَاُمَنَائِكَ وَخُلَصَآئِكَ مِنَ النَّارِ وَالْعَفْوَ عِنْدَ الْحِسَابِ ٭ وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيَّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ 

 

பணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்


தொழில் புரட்சியால் தோன்றிய தொழிற்சாலைகளில் தொழிற்சாலை தோன்றிய பகுதிகளில் பிறரைத் தொழுதறியாது உழுது உண்டு உயர்வாய் வாழ்ந்த பழங்குடி மக்களை அடிமைகளாக ஆக்கி அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி தேய்ந்து மாயும்வரை வேலை செய்ய வைத்து கோலூன்றி கொழுத்த கோடீஸ்வர முதலாளிகளின் கொட்டத்தை அடக்க கொதித்து எழுந்து போராடி தொழிலாளர் உரிமை பெற உயிர் நீத்த உத்தம தொழிலாளர்களை நித்தமும் நினைவில் நிறுத்தி பெற்ற உரிமைகளை உலகமய ஏகபோக முதலாளிகள் பறித்திடாது காக்க தொழிலாளர்கள் உறுதி ஏற்கும் ஏற்புடைய நாளே மே முதல் நாளாம்

தொழிலாளர் நாள்.

ஜக்கரியா நபி ஒரு சுவரைக் கட்டி கொண்டு இருந்தார்கள். பகல் உணவு வந்தது. சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில் நபி அவர்களைப் பார்க்க சிலர் வந்தனர். வந்தவர்கள்

கேட்குமுன்னரே ஜக்கரியா நபி கூலி வேலை செய்வதாகவும் கூலிக்கு வந்த உணவை உண்டு முடித்ததால் பகிர்ந்து கொள்ள இயலாததையும் இயம்பினார்கள். உழைத்து உண்டு உழைத்து பிழைக்க வழி காட்டினார்கள் ஜக்கரியா நபி அவர்கள்.

கையிலிருந்த சாட்டை கை நழுவி கீழே விழுந்தால் அதைக் குனிந்து எடுப்பது கௌரவ குறைவு என்று எண்ணி இறுமாந்திருந்த அரபி நாட்டவரை உழைத்து உண்ணவைத்து உழைப்பின் பெருமையை உணர வைத்தார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள். கூலிக்கு ஒருவரை அமர்ந்து அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பவனுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் அறிவிப்பதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எண்ணத்தில் பதித்ததைப் பகர்கிறார்

அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி. உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு வந்த மா நபி (ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி)நூல் – முஸ்ஸிம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கையால் எந்த பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்தது இல்லை என்று

இயம்புகிறார் ஆயிஷா (ரலி) நூல்- முஸ்லிம்.

திருக்கையில் மாவரைப்பது வீட்டைக் கூட்டி பெருக்கி சுத்தப்படுத்துவது துணிகளைத் துவைப்பது தோல் பையில் நீர் கொணர்வது முதலிய வேலைகளை பாச நபி (ஸல்) அவர்களின் நேச மகள் பாத்திமா (ரலி) பணிப்பெண்ணுடன் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பணி பெண்ணை மட்டும் வேலை வாங்காது அவர்களும் அதே வேலையை முறை வைத்து செய்வார்கள். தோல் பையின் கனத்தால் பாத்திமா (ரலி) அவர்களின் உடம்பில் தழும்பு ஏற்படும்.

பாத்திமா (ரலி) அவர்கள் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வரும்பொழுது பணி பெண்ணுக்குத் தனியாக ஏதாவது வாங்கி வந்து கொடுப்பார்கள். பணிபெண்ணின் வேலையில் தவறு கண்டால் பணியாளைச் சுடுசொற்களால் கடுஞ்சொற்களால் கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டர்கள். வேலையை விளக்கிச் சொல்லி துலக்கமாய் செய்யத் தூண்டுவார்கள்.

கிழிந்த ஆடைகளைத் தைப்பது முதுமையான மாமியாருக்கு உதவி செய்வது தணியாத அன்புடன் கணவருக்குப் பணிவிடை புரிவது முதலிட வேலைகளைப் பாத்திமா (ரலி) அவர்கள் மட்டுமே செய்வார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்க மாட்டார்கள். அவர்களை நாடிவரும் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பார்கள். நீதி போதனை செய்வார்கள்.

அக்காலத்தில் அரபியாவில் பலர் எழுத்துத் தொழிலை விரும்பிச் செய்தார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் என்பவரைச் சந்தித்த இமாம் அஹ்மது பின் ஹன்பல், “” நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் – எழுதிக் கொண்டிருக்கிறேன் பெரியோர்களின் பேருரைகளை எழுத்தோவியங்களை எடுத்து எழுதி நகல் எடுக்கிறேன். இது என் தொழில். அஹ்மத் பின் ஹன்பல் -தூய தொழில் தூய வருவாய். நான் தொழில் செய்ய நாடினால் இத்தொழிலையே மேற்கொள்வேன். “”

எடுத்து எழுதும் பொழுது நீங்கள் நடு நிலையில் நின்று உள்ளது உள்ளபடியே எழுத வேண்டும். கூட்டல் குறைத்தல் கூடாது. இந்த உள்ள உறுதியோடு எழுத வேண்டும்”.

இப்படித்தான் பணியாளரைப் பாராட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த  உரையாடல்.

அப்பாசிய கலீபா மன்சூரின் அரசவையில் செவ்வனே செயலாற்றிய ஓர் ஊழியர் ஒட்டுபோட்ட சட்டை அணிந்து இருப்பதைக் கண்ட அரசர் நல்லாடை அணியாத

காரணத்தைக் கேட்டார். அந்த ஊழியரின் இறந்த தந்தை பாக்கி வைத்த கடனை அடைப்பதாகவும் தந்தையின் இரண்டாவது மனைவியான சிற்றன்னையையும்

சிற்றன்னையின் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் ஊதியத்தின் பெரும்பகுதி செலவாகி விடுகிறது. அதனால் அந்த ஊழியர் சொந்தச் செலவைச் சுருக்கிக்கொள்வதை அறிந்த அரசர் அந்த ஊழியருக்கு ஆயிரம் பொற்காசுகளை வழங்கி உழைப்பிற்கு உயர்வான மதிப்பளித்தார்.

அலாவுத்தீனின் மகன் ஷம்ஸ் தப்ரேஸ் பெரிய அறிஞர். ரோமில் அவரிடம் பல அறிஞர்கள் சீடர்களாக இருந்து சீரான கல்வி கற்றனர். ஷம்ஸ் தப்ரேஸ் மாணவர்களிடம் எவ்வூதியமும் பெறவில்லை. அவர்கள் இடையணி தயாரித்து விற்று வாழ்ந்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைப்படி கருணை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் பணியாளர்களைப் பாசத்தோடு நேசித்து போஷித்து போற்றி தொழிலாளி உயர

உற்றுழி உதவுவோம். உலகம் உய்யும்.

 

நன்றி:- தினமணி 11/10/2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

பிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா


ஆண், பெண் உறவு என்பது உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைகிறது. இதனால்தான் அல்லாஹ் அனைத்தையும் ஜோடி ஜோடியாகப் படைத்தான் அத்தோடு ஆண்களை பெண்களுக்கு ஆடையாகவும்ஆக்கினோம் என்றும் கூறுகிறான். அதோடு யார் திருமணம் செய்கிறாரோ அவர் மார்க்கத்தில் அரைவாசியை பூர்த்தி செய்துவிட்டார் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இவ்வாறான சிறப்புக்களையும் தார்பரியங்களையும் கொண்டதாகவே இந்த திருமண பந்தம் காணப்படுகிறது. ஆனால் இன்று இந்நிலைcouple-pillows மாறி குடும்ப உறவு என்பது கேளிக்கையாகிவிட்டது. சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் பிரிந்துசெல்கிறார்கள் இதற்கான காரணம் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் ஆனால் ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையே பெண்களும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் இவற்றை ஆண்கள் நிறைவேற்றும்போது திருமணபந்தம் மனக்கசப்பின்றி சிறப்பாக தொடர்ந்து செல்லும். 

1. தான் மனைவியை விரும்புவதாக ஒவ்வொரு நாளும் கூறல்:

ஒவ்வொரு மனைவியும் தான் கணவனால் நேசிக்கப்படுகிறேனா என்பதை அறிந்து கொள்ளவே விரும்புவாள் எனவே இதனை கணவன் புரிந்து கொண்டு அவளை விரும்புவதாகக் கூறி அவளது மனதை ஆறுதல் படுத்தவேண்டும்.

2. புரிந்து கொள்ளலும், மன்னித்தலும்:

தவறு செய்யாதவர்கள் எவரும் இல்லை மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்ற ரீதியில் அவள் விடுகின்ற பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும் ஏனெனில் மன்னித்தல் என்ற அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.

3. நல்ல முறையில் பேசுதல்:

காலம் செல்லச் செல்ல குறைந்து போகும் அம்சமான கணவனுக்கும் மனைவிக்கும் இடையான பேச்சு தொடர்பை குறைந்து விடக்கூடாது. மாறாக அவர்களோடு உங்களது பிள்ளைகள், காலநிலை, வீட்டு விவகாரம் செலவினங்கள் பற்றி பேசுங்கள். பேச்சு தொடர்பு குறைகின்ற போது மணவாழ்க்கை சிக்கலில் முடிவடையும்.

4. மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் நேரம் செலவழித்தல்:

நீங்கள் செலவழிக்கின்ற நேரத்திலே மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்ற நேரமே அதிகம் நன்மைபயக்கக் கூடியது.

5. இல்லை என்று கூறுவதைவிட அதிகமாக ஆம் என்று கூறுதல்:

வழமையாக நீங்கள் எதிராக நடத்தலானது (Negative) அவர்களை உங்களை விட்டும் தூரமாக்கி விடக்கூடும் இல்லை என்று சொல்வதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள் நீங்கள் ஆம் என்று சொல்வதானது எந்தளவிற்கு உறவை பலப்படுத்துகிறது என்பதை நீங்கள் அறியும் போது நீங்களே ஆச்சரியமடைவீர்கள்.

6. பேச்சுக்களை செவிமடுத்தல்:

நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்ற வகையில் அவர்களின் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இடமளிக்க வேண்டும் உங்கள் மனைவியர் அவர்கள் கூறுகின்றவற்றை நீங்கள் காதுகளால் கேட்க வேண்டுமென எதிர்பார்ப்பதில்லை மாறாக இதயத்தால் செவிமடுக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பர்.

7. அன்பு:

அவர்களோடு அன்பாக நடந்துகொள்ள வேண்டும் சில மணமக்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதே சிறந்த திருமண உறவுக்கான பிரதான வழிமுறை என்பதை அறியாதிருக்கிறார்கள்.

8. வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளல்:

கணவனும் மனைவியும் சண்டையிட்டு பிரிந்து செல்வதற்கான பிரதான காரணம் வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற பிரச்சினையாகும் பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட சுமையல்ல. அவள் அதை எதிர்ப்பார்க்காவிடினும் நீங்கள் அறிந்து உதவ வேண்டும்.

9. ஒருநாள் விடுமுறை அளித்தல்:

ஒரு மாதத்தில் பலமுறைகள் விடுமுறை அளியுங்கள் அதாவது அந்நாளில் அவள் வீட்டுக்கு பிள்ளைகளுக்கு உங்களுக்கு என்ன நடக்கிறது என்ற எந்தக் கவலையும் இன்றி ஓய்வாக இருக்க அனுமதியுங்கள் இவ்வாறான ஒருநாளை பெறுவதானாது அவர்களுக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் அவசியமானதாக அமைகிறது.

 10. உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் உங்களுக்காக நீங்கள் கவனம் செலுத்தல்:

பல ஆண்கள் தங்களின் ஆரோக்கிய வாழ்வில் கவனமற்றவர்களாக இருக்கிறார்கள் இது வாழ்விற்கு சிறந்ததல்ல. ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது ஆரோக்கியமான உங்கள் குடும்ப வாழ்விற்கு அவசியமானதாகும்.

நன்றி:-  உம்மு ஆனிஷா. 

நன்றி:-  சுவனப்பாதை மாத இதழ். 

காலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க


Hadith_Bismilla1

திடீர் சோதனைகள் அணுகாதிருக்க

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். யாரேனும் ஒருவர்

بِسْـمِ اللهِ الَّذِيْ لاَ يَضُـرُّ مَعَ اسْمِـهِ شَيْءٌ فِي الْأًرْضِ وَلاَ فِي السَّمـَاءِ وَهُـوَ السَّمِـيْعُ الْعَلِـيْمُ

பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்.

“யாருடைய பெயர் (கூறுவதால்) வானம், பூமியிலுள்ளவை எந்தப் பொருளும் இடையூறு இழைக்க முடியாதோ அந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன். அவன் யாவற்றையும் கேட்பவன், அறிபவன்.”

என்று மாலையில் மூன்று முறை கூறினால் அவரைக் காலை வரை திடீர் சோதனைகள் அணுகாது. இவ்வாறே காலையில் கூறினால் அவரை மாலை வரை திடீர் சோதனைகள் அணுகாது. நூல்:- அபூதாவூத் 5090

وعنْ عُثْمَانَ بْنِ عَفَانَ رضيَ اللَّه عنهُ قالَ : قالَ رَسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَا مِنْ عَبْدٍ يَقُولُ في صَبَاحِ كلِّ يَوْمٍ ومَسَاءٍ كلِّ لَيْلَةٍ : بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَع اسْمِهِ شيء في الأرضِ ولا في السماءِ وَهُوَ السَّمِيعُ الْعلِيمُ ، ثلاثَ مَرَّاتٍ ، إِلاَّ لَمْ يَضُرَّهُ شَيءٌ » رواه أبو داود والتِّرمذي

தொழுகையின் சிறப்புக்கள்


இஸ்லாத்தை தழுவியபின் முதற்கடமை தொழுகையாகும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும்.

Salat_Positions_and_Prayers

அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடை களுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும்.

இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் நோயாளியாக இருக்கும் போதும் கூட தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.

தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள். முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு தொழுகைதான். தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களை விட்டும் மனிதனைத் தடுக்கின்றது. ஒரு தொழுகை மற்றொரு தொழுகைக்கு மத்தியிலுள்ள சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது. மறுமையில் தொழுகையைப் பற்றித்தான் முதலாவதாக விசாரிக்கப்படும். தொழுகையை பேணித் தொழுதவருக்கு அது மறுமையில் பிரகாசமாகவும் ஒளியாகவும் வரும். தொழுகையை பேணித் தொழாதவன் மறுமையில் அல்லாஹ்வின் எதிரிகளான ஃபிர்அவ்ன், ஹாமான், உபை பின் கலப் ஆகியோருடன் இருப்பான். தொழுகையை முறையாகப் பேணியவர்கள் நிச்சயமாக ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார்கள். மனஅமைதியை பெற்று விட்டார்கள்.

தொழுகையைப் பற்றி அல்குர்ஆன் மற்றும் ஹதீதுகளில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9

தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள்   அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72

எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 7:170

‘நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை’. அல்குர்ஆன் 74:42,43

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக.இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78

உங்கள் குழந்தைகள் ஏழு வயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு. நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு, அம்ருஇப்னு ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) நூல் : அஹ்மத்

சிறந்த அமல்: அமல்களில் சிறந்தது எது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்: (பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

கூட்டுத் தொழுகையின் சிறப்பு: ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அல்லாஹு) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்கு மேலானதாகும்.’ (ஸஹீஹுல் புகாரி)

தொழுகையை விட்டவனின் நிலை: நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள்: திர்மிதி, அபுதாவூத், அஹமத், இப்னுமாஜா

இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றனர். அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும், உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பாளர் : அபூ{ஹரைரா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், ‘இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!’ என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

‘எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ‘எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.’ பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.’ (ஸஹீஹ் முஸ்லிம்)

உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், ‘நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!’ என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: ‘நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்’ என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!’ என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரை விட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: ‘இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.’ (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தொடர்புடைய ஆக்கங்கள்

பிரிவுகள்:கட்டுரைகள், தொழுகை குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அரிய நீதி – மு.அ. அபுல் அமீன்

பிப்ரவரி 16, 2014 1 மறுமொழி

அரசனின் நிதி, ஆள்வோருக்கு உரியதன்று. ஆளப்படும் மக்களுடையது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சி இது.

தாவூது நபி பனூ இஸ்ரவேலர்களின் அரசர். அவர்கள் மாறுவேடம் பூண்டு மக்களை சந்தித்து அரசரைப் பற்றி மக்களிடம் விசாரித்து மக்கள் கூறும் குறைகளைக் களைந்து நிறைவாய் ஆட்சி செய்தார்கள்.

ஒருநாள் மனித உருவில் உலாவிய மலக்கு (வானவர்) ஒருவரை சந்தித்த தாவூது நபி வழக்கம் போல் அரசரைப் பற்றி அபிப்ராயம் கேட்டார்கள்.

“நற்குணமுடைய அரசரிடம் அரசுப் பணத்தில் வாழும் அற்ப குணம் உள்ளது. அதனை மாற்றிக் கொண்டால் மன்னர் மாட்சியுடைவர்” என்று அந்த வானவர் சாட்சி சொன்னார்.

இதையடுத்து தாவூது நபி தொழில் ஒன்றைக் கற்றிட அருளுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். உள்ளம் உருகிய வேண்டுதலை ஏற்ற இறைவன் உருக்குச் சட்டை உருவாக்கி பொருளைப் பெருக்கி வாழும் பெருந்தொழிலை தாவூது நபிக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

இந்நிகழ்ச்சியை இறைமறை குர்ஆனின் 34-11வது வசனம்,

“பெரிய அங்கிகள் செய்வீராக. இன்னும் துவாரத்தில் அளவாக்கி வைப்பீராக. இன்னும் நற்செயல்களைச் செய்வீராக. நான் நீங்கள் செய்வதைப் பார்க்கிறேன்” என்று அல்லாஹ் தாவூது நபிக்கு நவின்றதைக் கூறுகிறது.

உருக்குச் சட்டை தயாரித்த தாவூது நபி ஒரு நாளைக்கு ஒரு சட்டையை நான்காயிரம் திர்ஹத்திற்கு விற்று இரண்டாயிரம் திர்ஹத்தை குடும்பத்திற்கு செலவிட்டு இரண்டாயிரம் திர்ஹத்தை தானம் செய்வார்கள். குர்ஆன் வசனத்தில் வர்ணித்தபடி உருக்குச் சட்டையின் வளையங்கள் ஒரே அளவாக இருந்தன.

தாவூது நபி இறந்தபொழுது அவர்களிடம் ஆயிரம் உருக்குச் சட்டைகள் இருந்தன என்று லுபாபு என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.

அரசுப் பணத்தை ஆடம்பரமாக அனாவசியமாய் செலவிடும் ஆட்சியாளர்கள் அறிய வேண்டிய அரிய நீதி இது.

நன்றி:- தினமணி 13 February 2014 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- கௌதிய்யா சங்கம், மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

மகனுக்கு புகன்ற நீதி – மு.அ. அபுல்அமீன் நாகூர்


justice

ஹழ்ரத் லுக்மானுல் ஹக்கீம் என்ற பெரியாரிடம் அவரின் மகன் அன்உம், “ஒருவரும் பாராது, அறியாது, தெரியாது ரகசியமாகச் செய்யும் குற்றத்தை அல்லாஹ் எப்படி அறிவான்” என்று கேட்டார்.

லுக்மான் மகனுக்குப் புகன்ற நீதியை திருக்குர்ஆனில்

QURAN 31-16

31-16 ஆவது ஆயத்தில் காணலாம். “மகனே! நிச்சயமாக அது கடுகினும் சிறிதாயினும் அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.

 கற்பாறைக்குள், வானத்தில், பூமியின் பாதாளத்தில் கடுகினும் சிறிய தவறைச் செய்தாலும் நுட்பமானதை அறியும் திட்பமுடை அல்லாஹ் அம்பலத்திற்குக் கொண்டு வந்துவிடுவான். இதயங்களில் உள்ள ரகசியங்களையும் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களையும் அறியும் நுண்ணறிவுடையவன் அல்லாஹ் என்பதை உணர்ந்தால் மறைவாகக் குற்றம் செய்து இறைவனிடமிருந்து தப்பிக்கலாம் என்று எந்த மனிதனும் நினைக்க மாட்டான்; குற்றத்தில் திளைக்க மாட்டான்; குறையின்றி நிறைவாக வாழ்வான் என்று மகனுக்கு நல்லுரை புகன்றார் லுக்மான்.

நன்றி:-   தி இந்து  December 26, 2013 

the_hindu_tamil_logo

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- கௌதிய்யா சங்கம், மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

சுவர்க்கத்தின் வாரிசுகள் – மு.அ. அபுல்அமீன் நாகூர்


அந்த விசுவாசிகள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்” என்று திருக்குர்ஆனின் 23-1வது வசனம் கூறும் உறுதியான வெற்றி பெற்ற அந்த விசுவாசிகள் யார்?

இக்கேள்விக்குரிய விடையை அடுத்து வரும் வசனங்கள் விளக்குகின்றன. “”எவர்கள் தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் (23-2)”

தொழுகையை வழக்கமான நிகழ்வாக தொழுதோம் என்று தொழாமல் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான், என்ற உள்ளுணர்வோடு தொழுபவர்.

“எவர்கள் தங்கள் தொழுகையை (விடாமல்) பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-9)”

தொழுகைக்குரிய நேரத்தில் தவறாமல் தாமதிக்காமல் முறையோடு தொழுபவர்கள்.

“எவர்கள் வீணானவற்றை புறக்கணிக்கிறார்களோ அவர்கள்(23-3)”

எதற்கும் உதவாத வீண் பேச்சு பயனற்ற செயல்களைச் செய்து வீண் பொழுது போக்காமல் ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கமுடன் செயல்படுபவர்கள்.

“‘எவர்கள் ஜகாத்தை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள்(23-4)”

கடமையாக்கப்பட்ட ஏழை வரியாம் ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து இணக்கமான சமுதாய சமத்துவத்திற்கு வழி வகுப்பவர்கள்.

“எவர்கள் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-5)” இழுக்குண்டாக்கும் இழி செயல்களைச் செய்யாது ஒழுக்கம் பேணி உடலின் எந்த அங்கமும் பங்கப்படும் பாவ  காரியங்களில் பங்கு கொள்ளாது காத்துக் கொள்பவர்கள். கண்களால் தீயதைப் பார்ப்பது காதுகளால் தீயதைக் கேட்பது, பிற உறுப்புகளைத் தீயதைத் தீண்டாது பாதுகாப்பவர்கள்.

23-6வது வசனப்படி மனைவியோடு இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்பவர்கள்.

23-7வது வசனப்படி இல்லறத்திற்குப் புறம்பானதைத் தேடி வரம்பு மீறாதவர்கள்.

“எவர்கள் தங்களின் அமானிதங்களையும் உறுதி மொழிகளையும் பேணுகிறார்களோ அவர்கள் (23-8)’. பிறர் அவரிடம் ஒப்படைக்கும் பொருட்களைப் பொறுப்புடன் பாதுகாத்துக் கொடுத்தவர்,  கேட்கும்பொழுது கொடுத்தபடி திரும்பக் கொடுப்பவர். ஒருவரிடம் வாக்குறுதி செய்ததை உண்மையாக, உறுதியாக நிறைவேற்றுபவர்கள். அவ்வாறே அல்லாஹ்விற்கு இணை வைக்காது வணங்கும்  ஈமானின் ஒப்பந்தத்தை தவறாது நடைமுறைப்படுத்துபவர்கள்.

“அவர்கள்தான் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள்

(23-10)”

முன்னர் கூறப்பட்டவற்றை முறையாக செய்தவர்கள் சுவர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் என்று உறுதியளிப்பதோடு “”அவர்கள் பிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கத்தை சொந்தமாக்கிக்கொண்டு அதில் நிரந்தரமாக  இருப்பார்கள்” என்று 23-11வது வசனம் அவர்கள் அங்கே நிரந்தரமாய் நிலைத்திருப்பதை நிச்சயப்படுத்துகிறது. மேலும் “‘எவருடைய (நன்மைகளில்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம்  வெற்றி பெற்றவர்கள் (23-102)” என்று உலகில் வாழும் காலத்தில் நன்மையைச் செய்தவர்களே அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் என்று மீண்டும் நன்மை செய்யும் நற்பலனைப் போதிக்கிறது.

‘எனக்கு பத்து ஆபத்துகள் அருளப்பட்டன. அவற்றின்படி நடப்பவர் சுவர்க்கம் புகுவார்” என்று எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி மேற்குறிப்பிட்ட பத்து ஆயத்துகளை ஓதிக் காட்டியதை  இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள் எடுத்துரைத்து எல்லோரும் ஏற்று நடக்க அறிவுறுத்தினார்கள்.

நாமும் இவ்வாயத்துகளில் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளைப் பேணி இறையருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 24 OCT 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

கலீபாவும் கஜானாவும் – மு.அ. அபுல்அமீன் நாகூர்

நவம்பர் 6, 2013 1 மறுமொழி

கலீபா உமர்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் ஊதிய மின்றி கலீபா உத்யோகம் பார்த்தார்கள். கலீபா பணிச்சுமை, வருவாய் தேடும் வாய்ப்பைக் குறைத்த பொழுது குடும்ப செலவிற்கு ஒருநாளைக்கு இரண்டு  திர்ஹங்கள் பெற்றார்கள்.

சலிக்காத மாவில் ஜைத்தூண் எண்ணெயில் சுட்ட சாதாரண ரொட்டியே அவர்களின் குடும்ப உணவு. கலீபாவை காண வருவோர் அவ்வுணவை சாப்பிட சிரமப்படுவர். ஒருமுறை கலீபா உமர்(ரலி) அவர்கள்  உணவு உண்ணும் பொழுது அஜர்பைஜானின் ஆளுனர் ஹழ்ரத் உத்பா இப்னு பர்கத் (ரலி) அவர்கள் கலீபாவை காண வந்தார். கலீபா, ஆளுநருடன் உணவைப் பகிர்ந்துகொண்டார். ஒரு கவளம் வாயிலிட்ட  ஆளுநர் அல்லல்பட்டு அதோடு உண்பதை நிறுத்தினார். கலீபா காரணம் கேட்டவுடன் “”சலிக்காத மாவை ஜைத்தூண் எண்ணெயில் சுட்டு எப்படி சாப்பிட முடிகிறது? மாவைச் சலித்து மணமுள்ள  எண்ணெயில் சமைத்து சாப்பிடக் கூடாதா?” என்று வினவினார்.

“”சலித்த மாவையும் தரமான எண்ணெயையும் எல்லா மக்களும் உண்ணும்பொழுது நானும் உண்ணலாம். அந்நிலை வரும் வரை ஏழைகள் எதை உண்கிறார்களோ அதையே நானும் உண்பேன்.  மறுமையின் அச்சம் இல்லாது இருந்தால் என் வீட்டில் உயர்ந்த உணவுகளை சமைப்பேன்”

கலீபாவின் பதிலைக் கேட்டு ஆளுநரின் கண்கள் கலங்கின. உமர்(ரலி) அவர்கள் கலீபா ஆன பிறகு சலித்த மாவில் ரொட்டி தயாரித்து உண்டதே இல்லை என்று உரைக்கிறார் ஹழ்ரத் யஸôர் இப்னு  நுமைர்(ரலி) அவர்கள்.

அஜர்பைஜான் திரும்பிய ஆளுநர் கலீபாவிற்கு அன்பளிப்பு அனுப்பினார். பொதுநிதி பைத்துல்மாலுக்குப் பொருள் வந்திருப்பதாக பிரித்த கலீபா அதில் அஜர்பைஜானில் தயாரிக்கப்படும் நெய்யுடன் கலந்த  பேரீத்தங்கனி பாத்திரங்களில் இருப்பதைக் கண்டார். ஒன்றை எடுத்து வாயிலிட்ட கலீபா அதன் சுவை மிகுதியை உணர்ந்து, “”அஜர்பைஜானின் அத்தனை மக்களும் அதை சாப்பிடுகிறார்களா?” என்று  கேட்டார். இல்லை என்ற பதில் வந்ததும் பொருள் கொண்டு வந்தவர்களைத் திரும்ப எடுத்துச் செல்ல பணித்தார். கலீபாவின் கடுமையான எச்சரிக்கை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

“”நெய்யில் பொரித்த பேரீத்தங்கனி உங்களுடைய சொந்த உழைப்பால் உங்களுக்குக் கிடைத்ததா? உங்களின் பெற்றோர் விட்டுச் சென்று உங்களுக்குக் கிடைத்த உடமைகளிலிருந்து நீங்கள் பெற்றதா?  அப்படியாயின் அதை நீங்கள் உண்ணலாம். இல்லையேல் எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் எளிய உணவையே நீங்கள் உண்ண வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது”.

மகன் ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உயர்ந்த குதிரை ஒன்றை விற்பனை செய்வதைப் பார்த்த கலீபா உமர்(ரலி) அவர்கள் அக்குதிரையை வாங்கியது, வளர்த்தது பற்றி விசாரித்தார்கள்.  அப்துல்லாஹ்(ரலி) அவர்களின் சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட அந்தக் குதிரை அரசு நிலத்தில் மேய்ந்தது என்றறிந்து, அரசு உணவைத் தின்ற அக்குதிரை அரசுக்குச் சொந்தம் என்று கூறி குதிரையை  அரசிடம் ஒப்படைக்கச் செய்தார்.

கஜானாவில் உள்ள பொது நிதி பொது மக்களுடையதே. ஆளும் அதிபதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்குஉரியதல்ல என்பதை செயல்படுத்திய செம்மல் உமர்(ரலி) அவர்களின் ஆட்சி மிகவும் மதிக்கத்தக்கது.

நன்றி:- தினமணி 18 OCT 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.