தொகுப்பு

Archive for the ‘எங்கும் எதிலும் தமிழ்’ Category

எங்கும் எதிலும் தமிழ் – ப.திருமாவேலன்


ளிர்த்தது முதலே கொண்டாடப்படுகிறது. தாய் மொழியை உயிருக்கு நிகராக மன்னர்கள் மதித்ததும், தமிழ்ப் புலவர்களுக்குத் தங்களது முரசுக் கட்டிலையே தானமாகத் தந்ததும், மொழிக்கு ஒரு பாதிப்பு வரப்போகிறது என்று உணர்ந்த உடனே இளைஞர்கள் தீ மூட்டிக் கரிக்கட்டையாக ஆனதும், நம் மொழியை அறிந்த வேற்று நாட்டு மொழிஅறிஞர்கள் வியந்து பேசும் செய்திகளாக இன்று வரை இருக்கின்றன. அதை இன்னொரு முறைசொல்லிப் பார்க்கவே கோவையில் நடக்கிறது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!

மாநாட்டின் தொடர்ச்சியாக தமிழ் தழைக்கச் செய்தாக வேண்டியவை குறித்து தமிழ் ஆர்வலர்களிடம் பேசியபோது, அவர்கள் சொல்லிய எட்டு ஆலோசனைகள் எட்டுத் திசையெங்கும் தமிழை உயிர்ப்பிக்கும் கருத்துக்களாக அமைந்து இருந்தன!

பள்ளியில்…

குழந்தைகளுக்கு மட்டுமல்ல; தமிழுக்கும் பள்ளிகள்தான் நாற்றங்காலாக இருந்திருக்க வேண்டும். வீட்டை அடுத்து பள்ளிகளில்தான் குழந்தைகள் அதிகம் தங்களது நேரத்தைச் செலவழிக்கின்றன. அந்தப் பொழுதில் தமிழ் இதமானதாக அறிமுகப்படுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளும் தமிழ் வழியில்தான் நடத்தப்பட வேண்டும் என்பது சரியான கோரிக்கையாக இருந்தாலும், அது இன் றைய நிலையில் நடைமுறைச் சாத்தியமானதாக இல்லை. கல்வியில் தனியார்மயம் பாதிக்கும் மேல் ஆன பிறகு, அப்படிப்பட்ட பள்ளிகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் கடிவாளம் அரசுக்கும் இல்லை. எனவே, முழுமையாகத் தமிழ் வழி என்பது முடியா விட்டாலும், தமிழை மொழி அளவிலாவது முதல் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரையிலும் கட்டா யப் பாடமாக அனைத்துப் பள்ளிகளிலும் சொல்லித் தரும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் நான்காம் வகுப்பில்தான் தமிழைப் படிக்க முடியும். ஆனால், அங்கு நுழைந்ததும் இந்தியைப் படிக்கலாம். மாநில அரசு இதற்கான சிறப்புச் சட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும்!

கல்லூரியில்…

உயர் கல்வியைத் தமிழில் கற்றுத்தருவதற்கான காரியங்களை காங்கிரஸ் ஆட்சி செய்தது. உயர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அனைத்துமே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால், தமிழ் வழியில் படிக்க மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லி, அந்தப் புத்தகங்கள் காலப்போக்கில் முடக்கப்பட்டன. அதன் பிறகு, அந்தத் திட்டமே செயல்படுத்த முடியாமல் போனது. இன்று, மீண்டும் தமிழ் வழியில் உயர் கல்வி என்ற முழக்கம் தொடங்கிய நிலையில், பொறியியல் படிப்பு இந்தக் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 கல்லூரிகளில் கட்டுமானப் பொறியியல், இயந்திரப் பொறியியல் ஆகிய பாடங்களைத் தமிழில் படிக்கலாம். உயர் கல்வி படித்த அத்தனை பேரும் அமெரிக்காவுக்குப் போகப்போவது இல்லை. ஆண்டுக்கு 500 பேர்வெளி நாடு செல்வதற்காக மொத்தப் பேரும் ஆங்கில வழியைப் பிடித்துத் தொங்க வேண்டுமா என்று தமிழ் ஆர்வலர்கள் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது. எனவே, அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஒரு பிரிவாவது தமிழ் வழியில் படிப்பு முறையை உருவாக்கலாம்!

தெருவில்…

‘தமிழ்நாட்டுத் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்பது பாரதிதாசனின் வருத்தம். முடி வெட்டும் கடை ஆரம்பித்து ஐந்து நட்சத்திர உணவு விடுதி வரை அனைத்துக் கட்டடங் களின் பெயரும் ஆங்கிலத்தில்தான் அலங்கரிக் கின்றன. தமிழில்தான் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். மலேசியாவில், இலங்கையில், சிங்கப் பூரில் இருக்கும் அளவுக்குக்கூட தமிழகத்தில் பெயர்ப் பலகைகள் வைக்கப்படுவது இல்லை. சென்னையில் கட்டாயமாக தமிழில்தான் பலகை வைக்கவேண்டும் என்று மாநகராட்சி சொன்ன பிறகும் நிலைமை மாறவில்லை. மிகப் பெரிய உணவகம் ஒன்று தனது பெயரை ஒரு விரல் அளவு ‘பெரிதாக’எழுதி வைத்திருக்கிறது. தமிழக அரசு தரும் மிகச் சிறு சலுகையைக்கூடத் தயக்கம் இல்லாமல் பெறத் துடிக்கும் இந்த வணிக நிறுவனங்கள், அரசாங்கம் சொல்லும் உத்தரவை அலட்சியமாகவே கருதிச் செயல்படுகின்றன. ஒப்புக்குத் தமிழ் எழுதும் எண்ணத்தைச் சட்டத்தின் மூலமாக மட்டுமே கறாராக மாற்ற முடியும்!

நீதிமன்றத்தில்…

ஆங்கிலேயர்களால் அவர்களது நிர்வாக வசதிக்காக ஆங்கிலத்திலேயே உருவாக்கப்பட்ட நீதிமன்ற நடைமுறைகளில் தமிழைக் கொண்டுவரக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 348-ன்படி மாநில ஆட்சி மொழிகளும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக இருக்கலாம். இதன் அடிப்படையில்தான் நான்கு மாநில உயர்நீதிமன்றங்க ளில் வழக்காடு மொழியாக இந்தி இருக்கிறது. இதைத் தமிழக அரசும் ஏற்றுக்கொண்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகளும்ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், மத்திய அரசாங்கத்தில் இருந்து உடன்பாடான பதில் வரவில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இதை ஏற்கவில்லை என்று மத்திய அரசு தகவல் அனுப்பியது. இந்திக்குச் சாத்தியமான விதிமுறைகள் தமிழுக்கு மட்டும் இடம் தர மறுப்பது ஏன் என்றுதான் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தினமும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் தொடர்புடைய விவாதம் இன்னொரு மொழியில் நடப்பது சமூக அநீதியாக அமைந்துள்ளது!

கோயிலில்…

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. ஆனால், கோயில்களில் தமிழ் குடியேற முடியவில்லை. தெரிகிறதோ இல்லையோ, தவறாக இருந்தாலும் சில ஸ்லோகங்களைச் சொல்வதில் இருக்கிற மரியாதை, சுத்தமாகச் சொல்லப்படும் திருவாசகத்துக்குக் கிடைப்பது இல்லை. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சுமார் 36 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. துறையின் கட்டுப்பாட்டில் வராமல் ஒரு லட்சம் கோயில்கள் இருக்கலாம். ‘இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ என்று எல்லாக் கோயில்களிலும் விளம்பரம் வைத்திருப்பார்கள். ஆனால், அப்படிச் செய்யப்படுவது இல்லை. ‘யாராவது பக்தர்கள் கேட்டால் தமிழ் அர்ச்சனை செய்வோம்” என்று பதில் தருவார்கள்.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் தமிழ்க் குடிமகன் அமைச்சராக இருந்தபோது, விநாயகர் போற்றி, திருமால் போற்றி, சிவன் போற்றி, அம்மன் போற்றி எனப் பாடல் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. சிவன் கோயில்களில் இதற்கென ஓதுவார்கள் உண்டு. மற்ற கோயில்களில் தமிழ்ப் புலவர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆனால், அவர்களுக்கு முறையான வேலைகள் இல்லை. கோயில்களைத் தமிழ்மயப்படுத்தினால்தான் சுந்தரர்களும் ஆழ்வார்களும் அங்கே இருந்து முளைப்பார்கள்!

மருத்துவத்தில்…

எந்த நோயாக இருந்தாலும், சுக்கு – மிளகு – திப்பிலியில் குணப்படுத்திக்கொண்ட நாம், இன்று சாதாரணக் காய்ச்சலுக்கும் மருத்துவமனைகளில் அடைக்கலம் ஆக வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால், நம் மூலிகைகளில் சிலவற்றைக் கடத் திக் கொண்டுபோய்த்தான்பெரும் பாலான ஆங்கில மருந்துகள்செய் யப்படுகின்றன. “சித்த மருத்துவத்தின் நீட்சிதான் தமிழ் மருத்துவம் என்பது. அந்தத் துறையைத் தமிழக அரசு வளப்படுத்த வேண்டும். தமிழ் மருந்துகளின் விலை அதிகமாக இருக்கிறது. அதைக் குறைக்க வேண்டும். சில குறிப்பிட்ட நிறுவனங்கள்தான் இம்மருந்துகளைத் தயாரிக்கின் றன. அதையும் பரவலாக்க வேண்டும்” என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன்.

தமிழ்நாட்டில் ஆறு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளும், நான்கு தனியார் கல்லூரிகளும் இருக்கின்றன. ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மூன்று மருத்துவர்கள் இருந்தால், ஒருவர் சித்த மருத்துவராக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இன்று 1,500 மையங்களில் 700 மருத்துவர்கள்தான் இருக்கிறார் கள். இந்தக் காலி இடங்களை நிரப்புவதிலும் தமிழ் மருந்துகளின் விலையைக் குறைப்பதிலும் அக் கறை காட்டி தமிழ் மருத்துவத்தை வளர்க்கலாம்!

இசையில்…

தமிழ் வளர்க்கத் தமிழிசை முழங்க வேண்டும். குழந்தைவயிற் றில் இருக்கும்போது நலுங்கு, பிறந்ததும் தாலாட்டு, சிறுவனாக இருக்கும்போது நிலாப் பாட்டு, இளைஞராக வளரும்போது வீரப் பாட்டும் காதல் பாட்டும், திருமணத்தின்போது மங்கலப் பாட்டு, மறைவின்போது ஒப்பாரி… எனத் தமிழனின் வாழ்க்கை முறையே இசையாலும் பாட்டாலும் ஆனது. ஆனால், இசை நிகழ்வுகளில் தமிழ்ப் பாட்டுகள் பாட மறுக்கப் பட்டபோது, தமிழிசை இயக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பமானது. கர்நாடக சங்கீதம், தெலுங்கு கீர்த்தனைகள் மட்டுமே அந்தக் காலத்தில் மேடைகளில் இசைக்கப்பட்டது. யாராவது ஓரி ருவர் துக்கடா மாதிரி தமிழ்ப் பாட்டைப் பாடுவார்கள். தொடர் முழக்கங்களின் மூலமாக தமிழ்ப் பாட்டுகள் பாடியாக வேண்டிய சூழல் எழுந்தது.
அருணகிரி நாதர், முத்துத் தாண்டவர் தொடங்கி பாரதியார் வரை பலரும் பாடிய தமிழ்ப்பாடல் கள் மேடைகளில் இசைக்கப் பட்டன. ஆனாலும், இன்னமும் முழுமையான தமிழிசை மேடை கள் ‘சங்கீத சீஸன்’களில் வர வில்லை. பாடுபவர், கேட்பவர் அனைவரும் தமிழ் அறிந்த மக்களாக இருக்கும்போது, அர்த்தம் புரியாத மொழியில் இசை எதற்கு என்று தமிழ் ஆர்வலர்கள்கேட்கும் போது, ‘இசைக்கு மொழி கிடை யாது’ என்று பதில் அளிக்கப்படு கிறது.
இசைக்கு மொழி கிடையாதுதான். ஆனால், இசையில் மொழி புறக்கணிக்கப்படக் கூடாது!

ஆட்சியில்…

சுமார் 54 ஆண்டுகளுக்கு முன்னால் நம் மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழி ஆனது. அதற்கான சட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டுவந்தது. ஆண்டுக்கு ஒரு துறையை எடுத்துக்கொண்டு தமிழை ஆட்சி மொழி ஆக்கினால் கூட முழுமை அடைந்து 30ஆண்டு கள் ஆகியிருக்கும். ஆனால், இன்று பிறப்பிக்கப்படும் ஆணைகள், அதிகாரிகள் தங்களுக்குள் அனுப்பிக்கொள்ளும் உத்தரவுகள், சுற்றறிக்கைகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. அரசு அலுவலர்கள் அனைவரும் கோப்புகளில் தமிழில்தான் கையெழுத்து இட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஓர் உத்தரவு போடப்பட்டது. இன்று எத்தனை பேர் அதைப் பின்பற்றுகிறார்கள். தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தைச் சரிவரநிறை வேற்றாத அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நட வடிக்கை எடுக்கவும் அரசாணை உள்ளது. வட இந்திய அதிகாரிகள் அதிகமாக இங்கு வேலையில் இருப்பதால், அதை அமல்படுத்துவதில் சிரமம் உள்ளதாகக் காரணம் சொல்லப்படுகிறது. தமிழைத் தாய் மொழியாகக்கொண்டு இராத அதிகாரிகள் இங்கு வந்தால், அவர்களுக்கு 54 வாரங்கள் மொழிப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அரசு ஆணை உள்ளது. அவர்களில் அக்கறை உள்ள பலரும் சில மாதங்களில் பேசவும் படிக்கவும்கற்றுக்கொள்கிறார்கள் என்பதே உண்மை.

‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்பது பழமொழி. செம்மொழி மாநாடு இதை அடியட்டி அமைந்தால் நல்லது!

நன்றி:- ப.திருமாவேலன்

நன்றி:- ஆ.வி