தொகுப்பு

Archive for the ‘உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்’ Category

உண்ணுங்கள் பருகுங்கள் எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள்

திசெம்பர் 22, 2011 1 மறுமொழி

A LESSON FOR EVERY CITIZEN OF THE WORLD

பணம் உன்னுடையது, ஆனால் உணவு பொதுச்சொத்து!


உலகின் வளர்ந்த நாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கிறது ஜெர்மனி! பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற உலகப் புகழ்பெற்ற கார்கள் இங்குதான் தயாராகின்றன. ஸீமன்ஸ் போன்ற கம்பெனிகள் உலகப் புகழ் பெற்றவை. அணு ரியாக்டருக்கு வேண்டிய பம்புகள் இங்குள்ள ஒரு சின்ன ஊரில் தயாராகின்றன. இப்படிப் பல துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ள நாட்டில் மக்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நினைப்போம்? நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், ஒரு சின்ன டூர் என்னை அந்த நாட்டிற்கு இட்டுச் செல்லும் வரையில்!

நான் ஹாம்பர்க் சென்றபோது அங்கு ஹாம்பர்க்கில் வேலை செய்யும் சக ஊழியர்கள் எனக்கு ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் ஹோட்டலுக்குள் நுழைந்தபோது நிறைய மேஜைகள் காலியாக இருந்தன. ஒரு மேஜையில் ஓர் இளம் ஜோடி. அவர்களுக்கெதிரில் ஒன்றிரண்டே உணவு ஐட்டங்கள். இரண்டு கிளாஸ் கூல் ட்ரிங்க்ஸ். இவ்வளவு சிம்பிள் சூழ்நிலையில் ரொமாண்டிக் ஆக இருக்க முடியுமா? இந்தப் பெண் இந்தக் கஞ்ச பிரபுவை கத்திரிக்கோல் போட்டு விடுவாளா என்றெல்லாம் யோசித்தேன்.

இன்னொரு மேஜையில் சில வயதான பெண்மணிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்டர் செய்த உணவுகளை சர்வரைக் கொண்டு பரிமாறச் செய்தனர். உணவைப் பகிர்ந்து கொண்டு துளியும் மிச்சம் வைக்காமல் உண்டனர். நாங்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தவில்லை. எங்களுக்கு நல்ல பசி. அதனால் நிறைய உணவு ஆர்டர் செய்திருந்தோம். அவற்றை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

கூட்டம் அதிகம் இல்லாததால் உணவு சீக்கிரமே கொண்டு வரப்பட்டது. எங்களுக்கு இன்னும் நிறை வேலைகள் இருந்ததால் விரைவாகச் சாப்பிட்டு முடித்தோம். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உணவு மீந்து போயிருந்தது. நாங்கள் ரெஸ்டாரெண்டை விட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கையில் எங்களை யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது. மூதாட்டிகள் ஹோட்டல் முதலாளியிடம் புகார் செய்து கொண்டிருந்தனர். நாங்கள் அத்தனை உணவை வீணாக்கியதை அவர்கள் கண்டித்துக் கொண்டிருந்தனர் என்று முதலாளி ஆங்கிலத்தில் சொன்னபோது தெரிந்தது.

எங்களுக்கு அவர்கள் தலையீடு அதிகப் பிரசங்கித்தனமாகப் பட்டது. நாங்கள் பணம் கொடுத்து வாங்கிய உணவை என்ன செய்கிறோம் என்பது எங்கள் விருப்பம். நீங்கள் தலையிட வேண்டாம் என்று என் கூட வந்த நண்பர் சொன்னார். மூதாட்டிகளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவர்களில் ஒருவர் தன் கைப்பேசியில் ஏதோ ஒரு எண்ணைச் சுழற்றினார்.

சிறிய நேரத்தில் சீருடையணிந்த ஒரு ஆபிசர் – இவர் சோஷியல் செக்யூரிடி சர்வீஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் – வந்தார். விஷயம் என்னவென்று அறிந்ததும் என் நண்பருக்கு ஐம்பது மார்க் அபராதம் விதித்து, சீட்டு கொடுத்தார்.

நாங்கள் அனைவரும் மவுனம் சாதித்தோம். நண்பர் 50 மார்க் நோட்டைக் கொடுத்துவிட்டுத் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கோரினார்.

ஆபீசர் கடுமையான குரலில் சொன்னார். “உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவே ஆர்டர் செய்யுங்கள். பணம் உங்களுடையதுதான், சந்தேகமில்லை, ஆனால் இயற்கை வளங்கள் பொதுச் சொத்து. உலகில் நிறைய பேர் அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றனர். உணவை வீணாக்க உங்களுக்கு உரிமையில்லை.’ எங்கள் முகம் சிவந்துவிட்டது. அவர் சொல்வதன் நியாயம் எங்கள் மனதிற்குப் புரிந்தது. வளர்ந்த, பணக்கார நாட்டவரான அவர்களின் பொறுப்புணர்வுக்கு நாங்கள் வெட்கித் தலை குனிந்தோம்.

நம் நாடு பணக்கார நாடல்ல, ஆயினும் நாம் விழாக்கள், விசேஷங்களில் மற்றவர்களை விருந்துக்கு அழைத்தால் அதிக அளவில் உணவு தயாரிக்கிறோம். இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தது. என் நண்பர் அபராதம் கட்டிய ரசீதை போட்டோ காப்பிகள் எடுத்து ஆளுக்கொரு பிரதி கொடுத்தார். நாங்கள் அனைவரும் அதை வீட்டுச் சுவரில் ஓட்டி வைத்துத் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனி என்றும் எதையும் வீணாக்க மாட்டோம்.

– திருந்தியவர்

நன்றி:-http://www.nidur.info/

நன்றி:-http://seasonsnidur.wordpress.com/