தொகுப்பு

Archive for the ‘பதவி உதவுவதற்கே!’ Category

பதவி உதவுவதற்கே! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


“”பிறர் துன்பம் நீங்க உதவுவோருக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் ஏற்படாமல் அல்லாஹ் காப்பாற்றுகிறான். ஒருவன் மற்றவர்களுக்கு உதவும் காலம் வரை அல்லாஹ்வும் அவனுக்கு உதவுவான்” – முஸ்லீம் நூலில் காணப்படும் ஹழ்ரத் அபூஹுரைரா(ரலி) அறிவித்த நபிகள் நாயகத்தின் நன்மொழிக்கேற்ப நபிகளாரின் தோழர்கள் பிறர் துயர் துடைக்க ஓடோடிச் சென்று உதவினர்.

 

இஸ்லாமிய ஆட்சி அமைந்த பிறகு பதவிகளில் அமர்ந்தவர்கள், “பதவி படாடோபமாய் வாழ்வதற்கல்ல; பதவி உதவுவதற்கே. உதவி தேடுவோருக்கு உற்றுழி உதவுவதற்கே’ என்று உத்தம நபி வாழ்ந்து காட்டிய சத்திய வழியில் நித்தமும் தொண்டாற்றி, தொல்லுலகு போற்ற வாழ்ந்தார்கள் வள்ளல் நபியை உள்ளன்போடு நேசித்த உயரிய சஹபாக்கள் எனப்படும் நபித்தோழர்கள்.

 

நபிகள் நாயகத்தின் நற்றோழர் அபூபக்கர்(ரலி) அவர்கள், நடந்துசெல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுமிகளின் ஆடுகளை மேயவிட்டும், ஆடுகளிலிருந்து பால் கறந்தும் கொடுத்தார்கள்.

 

மதீனா எல்லையில் பார்வை இழந்த மூதாட்டி ஒருவர் வாழ்ந்தார். அந்த மூதாட்டிக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய விரும்பிய உமர்(ரலி) அவர்கள் அங்கே சென்றார். அப்போது அம்மூதாட்டியின் தேவைகள் அனைத்தையும் உமர்(ரலி) அவர்களுக்கு முன்னரே ஒருவர் வந்து வழக்கமாக செய்வதை அறிந்தார். ஏவல் செய்யும் அவர் யாரென அறியும் ஆவலால் உந்தப்பட்டு ஒருநாள் முன்னரே சென்று ஒளிந்திருந்து பார்த்தார்.

 

அவ்வாறு உதவி செய்பவர் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள் என்றறிந்து அதிர்ந்தார். அண்ணல் நபி வழியை வழுவாது செயல்படும் அபூபக்கர்(ரலி) அவர்களையும் பின்பற்றி நடக்க அன்றே உறுதிபூண்டார். அவ்வாறே அவரின் ஆட்சியிலும் நடந்தார்.

 

அமீருல் முஃமினின் முதல் கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் காட்டிய வழியில் நாமும் சென்று அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 03-August-2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பிரிவுகள்:பதவி, பதவி உதவுவதற்கே! குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,