தொகுப்பு

Archive for the ‘பொருளியல்’ Category

வாழ்க்கைத் துணையுடன் இணைந்து திட்டமிடுங்கள்


இரண்டு வருடங்களுக்கு முன் பெங்களூருவில் இருந்து முப்பது வயது பெண்மணி ஒருவர் என்னை சந்தித்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை அவர் இருந்தது அமெரிக்காவில். அவர் கணவருக்கு அங்கே ஐ.டி. கம்பெனியில் வேலை. இரு குழந்தைகள். குதூகலமாகத்தான் போய்க்கொண்டிருந்தது அவர் குடும்பம்.

திடீரென அவர் கணவர் இறந்துபோக, அந்தப் பெண்மணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கணவர் சம்பாதித்தப் பணம் எந்த வங்கியில் உள்ளது, யாரிடம் எவ்வளவு பணம் தந்திருக்கிறார், இன்ஷூரன்ஸ் ஏதாவது உள்ளதா… இந்த மாதிரி எந்த கேள்வியையும் அந்தப் பெண்மணி தன் கணவரிடம் கேட்டதில்லையாம். அவருக்குத் தெரிந்ததெல்லாம், பெங்களூருவில் தன் கணவர் வாங்கிய ஒரு வீடு மட்டுமே.

ஒரே நாளில் அவருக்கு உலகமே தலைகீழாக மாறிப்போனது. ஆறுதல் சொல்லக்கூட பக்கத்தில் யாருமில்லை. உடன் வேலை பார்த்த அன்பர்கள் அனைவரும் கூடி அவருக்கு முறைப்படி கிடைக்கவேண்டியதை எல்லாம் கிடைக்கச் செய்தனர். அவற்றில் முக்கியமானது, வேலை செய்த நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் டாலர் பணம் டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் கிடைத்தது.

அந்தப் பணத்தை ஆதாரமாக வைத்துதான் இந்தியா விற்கு குடிபெயர்ந்து, இன்று தனது குழந்தைகளுடன் ஒரு புதிய வாழ்வை நடத்தி வருகிறார் அந்தப் பெண்மணி. தன் குடும்ப நிதி நிர்வாகத்தைப் பற்றி ஆரம்பம் தொட்டு அக்கறை எடுத்துக்கொள்ளாததே தான் செய்த பெரிய தவறு என்று சொல்லி வருத்தப்பட்டார் அந்தப் பெண்.

இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். கும்பகோணத்தில் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண்மணி ஒருவர். அவருக்குத் திருமணமாகி, சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவந்த அவர் கணவருடன் செட்டிலாகி விட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கொடிய விபத்தில் அவரது கணவர் திடீரென இறந்துவிட, அவருக்கு இன்ஷூரன்ஸ் செட்டில்மென்ட் தொகையாக 50 லட்சம் ரூபாய் கிடைத்தது.

அந்தப் பெண்மணிக்கு இந்தப் பணம்தான் வாழ்வாதாரம். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்கப் புறப்பட்ட அந்தப் பெண்ணுக்கு திடீரென்று குழப்பம். தனக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கிடைத்த பணம் பாவப் பணம். தன் கணவன் இறந்ததினால்தானே கிடைத்தது? அந்தப் பாவப் பணம் தனக்கு வேண்டவேவேண்டாம் என்று முடிவு செய்து, தனது சொந்தபந்தங்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டார்.

இப்போது வேறு எந்த ஆதரவும் இல்லாமல், ஒரு சிறிய வேலை செய்துகொண்டு தனது வாழ்வை நடத்தி வருகிறார். நிதி சார்ந்த விஷயங்களை அவர் சரியாகப் புரிந்துகொண்டிருந்தால், அந்த இன்ஷூரன்ஸ் பணத்தைப் பாவப்பணம் என்று அவர் நினைத்திருக்கவே மாட்டார்.

ஆக, எதிர்கால வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க நீங்கள் என்ன திட்டம் போட்டாலும், அதை உங்கள் வாழ்க்கைத் துணையுடன் (கணவன்/மனைவி) சேர்ந்து செய்தால், பிற்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்ப் பதற்கும், உங்களது வாழ்க்கைத் துணை தனது சொந்தக்காலில் நிற்பதற்கும் ஒவ்வொரு கணவன் – மனைவி கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்களை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.  

1. கணவன் – மனைவி இருவருக்கும் பான் கார்டு, தேர்தல் ஆணைய அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

2. ஒவ்வொரு வங்கி அல்லது நிதி சார்ந்த கணக்கையும் கணவன் – மனைவி இருவரின் பெயரிலும், அதேசமயத்தில் எந்த ஒரு நபர் வேண்டுமானாலும் ‘ஆபரேட்’ செய்யும்படி அமைத்துக்கொள்ளுங்கள். வருமான வரி அல்லது வேறு காரணங்களுக்காக தனித்தனியாக வங்கி மற்றும் நிதி சார்ந்த கணக்குகளை வைத்துக்கொண்டால், ஒருவர் மற்றொருவரை நாமினியாக தேர்வு செய்துகொள்ளலாம். ஒருவர் கணக்கை மற்றொருவர் பார்க்கும்படி இருப்பதும் முக்கியம்.  யூஸர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டை தயவு செய்து உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்துகொள்வது அவசியம்.  

3. உங்கள் வாழ்க்கைத் துணை, ஹவுஸ் ஒய்ஃப் அல்லது ஹவுஸ் ஹஸ்பென்ட் என்றால், அவரை வங்கிக் கணக்குகள் போன்ற நிதி சார்ந்த செயல்களைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள். வங்கிக்குச் சென்று காசோலையை டெபாசிட் செய்வது, ஏ.டி.எம்.-க்கு சென்று பணத்தை எடுத்து வருவது போன்ற வேலைகளைச் செய்ய ஊக்குவியுங்கள்!

4. இன்றைய இன்டர்நெட் உலகில், கணக்குகளுக்கு பேப்பர் ஸ்டேட்மென்ட் வாங்குவது பாவம் என்றாகிவிட்டது. ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது, நமது வாழ்க்கைத் துணை எங்கு, எதில் கணக்கு வைத்திருக்கிறார் என்பது தெரியவேண்டும். அதற்கெல்லாம் ஆரம்பம் வங்கிக் கணக்கு தான். ஆகவே, வங்கி கணக்கிற்கு பேப்பர் ஸ்டேட்மென்ட் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

5. ஒவ்வொரு நிதி சார்ந்த முடிவுகளையும் கணவன் – மனைவி என இருவரும் சேர்ந்து எடுங்கள் – அது வீட்டுக் கடனாக இருக்கட்டும் அல்லது டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆகட்டும், இருவரும் இணைந்தே செய்யுங்கள்.

6. சிலர் சொந்தபந்தங்களுக்கு / நண்பர் களுக்கு எழுத்துமூலமாக அல்லாமல், வெறும் வாய்வார்த்தையாகப் பேசி கடன் தருவார்கள். அப்படி ஏதேனும் தந்தால், அதை ஒரு டயரியில் தேதிவாரியாக எழுதி வைத்துவிடுவது அவசியம். பிராமிஸரி நோட்டின் அடிப்படையில் கடன் ஏதேனும் தந்திருந்தாலோ, வாங்கியிருந்தாலோ அவற்றிற்கு நகல் எடுத்து ஃபைலில் வையுங்கள்.

7. மியூச்சுவல் ஃபண்ட்/ பங்குகள்/ ஆர்.டி/ டெபாசிட் போன்ற முதலீடுகளை இருவர் பெயரிலும் தனித்தனியாகவோ (50:50) அல்லது ஜாயின்டாகவோ வைத்துக்கொள்ளுங்கள். அந்த முதலீடு பற்றிய ஆவணங்களை ஃபைல் செய்வதோடு, உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் தெரிவியுங்கள்.  

8. உங்களது நிதி ஆலோசகர், ஆடிட்டர், வங்கி மேலாளர் மற்றும் நிதி சம்பந்தமான தொடர்புகளின் முகவரி மற்றும் எண்களை வாழ்க்கைத் துணைக்கு தெரிவியுங்கள்.

9. வங்கி, இ-மெயில் மற்றும் பிற ஆன்லைன் சேவைகளுக்கு உண்டான யூஸர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை இணையதள முகவரியோடு சேர்த்து ஒரு மைக்ரோசாஃப்ட் வேர்டு அல்லது எக்ஸெல் டாக்குமென்டில் பதிவு செய்துவையுங்கள். அந்த டாக்குமென்டை உங்களுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கைத் துணை மட்டும் பார்க்கிற மாதிரியான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

10. உங்கள் முதலீடு, இன்ஷூரன்ஸ், வங்கி மற்றும் நிதி சார்ந்த அனைத்து பேப்பர் டாக்குமென்டுகளை யும் ஒரே ஃபைலில் வைத்திருப்பதுபோல, கம்ப்யூட்டரிலும் ஒரே ஃபோல்டரில் போட்டு வையுங்கள். இதை உங்கள் வாழ்க்கைத் துணைக்கு தெரியப்படுத்துவதோடு, அதை அடிக்கடி உபயோகிக்க ஊக்குவியுங்கள்.

11. இருவரும் தனித்தனியாக கிரெடிட் கார்டு வைத்துக்கொள்வது நல்லது. இருவருக்கும் சிபிலில் கிரெடிட் ஸ்கோர் தனித்தனியாக பதிவாகும். அன்றாட வாழ்க்கையில் நீங்கள் கடன் வாங்கச் செல்லும்போது இது மிக உதவியாக இருக்கும். மேலும், எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது, உங்களது பார்ட்னருக்கு இது நிச்சயம் உதவும்.

12. வீடு வாங்கும்போது இருவரும் ஜாயின்டாக வாங்குவது நல்லது. இருவரும் தனித்தனியே வரிச் சலுகை (டாக்ஸ் கிரெடிட்) பெறலாம். தவிர, உங்கள் வாழ்க்கைத் துணைக்கு வீடு பற்றிய அறிவும் கிடைக்கும்.

ஆக மொத்தத்தில், கணவனும் மனைவியும் இணைந்து செய்யும் நிதி தொடர்பான விஷயங்களை செய்யும்போது அது சரியான முதலீடாக அமைவதோடு, ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் எப்போதும் பயன்படும்!

நன்றி:

நன்றி:- நாணயம் விகடன்

பிரிவுகள்:துணையுடன் இணைந்து திட்டமிடுங்கள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

கிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க – இரா.ரூபாவதி

மார்ச் 17, 2013 1 மறுமொழி

3டி பாதுகாப்பு!

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். மும்பையைச் சேர்ந்தவர் பிரதாப் காயன். இவர் பெட்ரோலிய கம்பெனி ஒன்றின் மூத்த அதிகாரி. இவர் மும்பையில் இருக்க, இவரது கிரெடிட் கார்டு மூலம் அமெரிக்காவில் 200 டாலருக்குப் பொருட்கள் வாங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தகவல் எஸ்.எம்.எஸ். ஆக வந்தது ஓர் அதிகாலை நேரத்தில். எஸ்.எம்.எஸ்.ஸைக் கண்டு அதிர்ந்தார் பிரதாப் காயன். கிரெடிட் கார்டு தன் கையில் இருக்க, வேறு யார் அதை பயன்படுத்த முடியும் என்கிற யோசனை அவருக்கு.

வேகவேகமாக கார்டை பிளாக் செய்ததால் 200 டாலருடன் தப்பித்தார் அவர். ஆனால், உடனடியாக நடவடிக்கை எடுக்காத பலர் லட்சக்கணக்கில் ரூபாயை இழந்திருக்கிறார்கள். ஒருவர், இருவரல்ல, இந்தியா முழுக்க  பலரது கிரெடிட் கார்டுகளிலிருந்து கடந்த இரு மாதங்களாக 30 கோடி ரூபாய்க்கு மேல் இப்படி பணம் பறிபோயிருக்கிறது.

கிரெடிட் கார்டு விவரங்களை திருடுபவர்கள் எளிதில் அதனைக்கொண்டு ஏதாவது ஒரு பொருளை வாங்கிவிட முடியும். இதை தடுக்க ரகசிய பின் எண்ணை பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கிரெடிட் கார்டு கம்பெனிகள் மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம், இந்த பின் எண் பல அயல்நாடுகளில் கட்டாயமாக்கப்படாததால் நம் கார்டு மோசடி பேர்வழிகளால் அயல்நாடுகளிலேயே அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை பாதுகாப்பாகப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என கிரெடிட் கார்டு வழங்கிவரும் வங்கி அதிகாரிகளிடம் பேசினோம்.

”கிரெடிட் கார்டை இரண்டு விதமாகப் பயன்படுத்த முடியும். ஒன்று, ஷாப்பிங் மால், பல்பொருள் அங்காடி, ஓட்டல் போன்ற இடங்களில் கார்டை பயன்படுத்தும்போது. ஓட்டலில் சாப்பிட சென்றால் கார்டை தந்துவிட்டு, நாம் உட்கார்ந்திருப்போம். அந்தச் சமயத்தில் நம் கிரெடிட் கார்டு பற்றிய அடிப்படை தகவல்கள் அனைத்தும் திருடு போக வாய்ப்பு இருக்கிறது.

இன்னொன்று, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போதும், பொருட்களை வாங்கும் போதும் நமது கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருடு போக வாய்ப்புண்டு. ஆன்லைனில் பொருள் வாங்க நம் கிரெடிட் கார்டு நம்பர், சி.வி.வி. நம்பர் (card verification Value),பின் நம்பர் ஆகியவற்றை தந்தால்போதும். இப்போதுள்ள வேகமான வாழ்க்கைமுறையில் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்க பலருக்கும் நேரம் இல்லை. இதனால்தான் ஆன்லைனில் பொருட்களை அதிகமாக வாங்குகிறார்கள். தவிர, கடைகளைவிட அதிகமான தள்ளுபடி, வீட்டிற்கே டெலிவரி ஆவது என பல கவர்ச்சி கரமான விஷயங்கள் அதில் இருக்கின்றன. விலை மலிவாகக் கிடைப்பதால் அதிகம் தெரியாத இணையதளங்கள் மூலமும் பலர் பொருட்களை வாங்குகிறார்கள். இந்தச் சமயத்தில் நம் கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் சி.வி.வி. எண் ஆகியவை திருடு போக வாய்ப்பிருக்கிறது” என்றார்கள்.

நம்முடைய கிரெடிட் கார்டை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே நம் பிரச்னைகள் தீரும். இதற்கு என்ன செய்யலாம் என கிரெடிட் கார்டு சேவை வழங்கும் பல்வேறு நிறுவனங்களுடன் பேசினோம். அவர்கள் பல டிப்ஸ்களைத் தந்தார்கள்.

”கிரெடிட் கார்டு பத்திரமாக இருப்பதற்காக, வங்கிகள் ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கிரெடிட் கார்டை தற்போது வழங்கி வருகிறது. இதன் மூலம் உங்கள் கார்டு தொலைந்தால் அது எந்த இடத்தில் உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். இந்த கார்டு செயற்கைகோளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.  போலி கார்டுகளையும் உருவாக்குவது கடினம். ஏனெனில், இந்த சிப் கார்டு நான்கு துண்டுகளாக இருக்கும். நான்கையும் இணைத்தால் மட்டும்தான் கார்டு செயல்படும். ஒவ்வொரு சிப் கார்டும் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கார்டை வாங்க கட்டணங்கள் உண்டு. இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். குறைந்தபட்ச 500 ரூபாயிலிருந்து கட்டணங்கள் இருக்கும்.

ஆன்லைனில் அதிக பரிவர்த்தனை செய்பவர்களுக்காகவே 3டி முறையில் பாதுகாப்பு வசதியை இப்போது அறிமுகப் படுத்தியுள்ளன. இதில் வங்கி முதலில் ஒரு பாஸ்வேர்டை தரும். இந்த பாஸ்வேர்டை பயன்படுத்திய உடனே செயல் இழந்துவிடும். இதன்பிறகு உங்களின் பாஸ்வேர்டை நீங்களே உருவாக்கிக்கொள்ளவேண்டும். இதில் உங்களின் வழக்கமான கார்டு நம்பர், சி.வி.வி. எண், பின் நம்பர் ஆகிய தகவல்களை கொடுத்தபின் ஆறு கேள்விகளைக் கேட்கும். இது முழுவதும் உங்களின் தனிப்பட்ட தகவல்களாகவும், வித்தியாசமான கேள்வியாகவும் இருக்கும். அதாவது, உங்களின் அப்பாவுடன் பிறந்தவர் கள் எத்தனை பேர், உங்களின் அலுவலகம் எத்தனையாவது மாடியில் உள்ளது என்கிற மாதிரியான கேள்விகளை கேட்கும். இதற்கடுத்து ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு முறையும் இதில் ஏதாவது இரண்டு கேள்விகள் வரும். அதற்கு பதிலளித்தால்தான் பரிவர்த்தனையைத் தொடர முடியும்.

மேலும், இந்தத் தகவல்களை யாரும் திருட முடியாது. இந்தத் தகவல் கோடிங் முறையில் மற்றவர்கள் படிக்க முடியாத முறையில் பதிவாகும். அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் பரிவர்த்தனையில் பணத்தைச் செலுத்தவேண்டும் எனில், அதை அந்த கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்றுதான் செலுத்த முடியும். தவிர, ஆர்.பி.ஐ.யின் அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்ய முடியும்.

முறையான வங்கியின் இணையதளங்கள் அனைத்தும் Https என்றுதான் ஆரம்பிக்கும். ஆனால், போலியான இணையதளங்கள் http என ஆரம்பிக்கும். இதைக் கவனித்தாலே போதும் மோசடி நிறுவனங்களை நிமிட நேரத்தில் ஒதுக்கிவிடலாம்.

கிரெடிட் கார்டை வாங்கும்போதே அதை பின் நம்பருடன் வங்கிகளில் கேட்டு வாங்கலாம். இதற்கு கட்டணம் கிடையாது. ஆனால் சிக்கல் என்னவென்றால், பின் நம்பரை தவறாகப் பதிவு செய்தால் கார்டை வங்கி பிளாக் செய்துவிடும். முதல்முறை என்றால் கார்டை ரிலீஸ் செய்வார்கள். அடிக்கடி இப்படி நடந்தால் புது கார்டுதான் வாங்கவேண்டியிருக்கும். இதற்கு தனிக் கட்டணம் தரவேண்டும்” என்றார்கள்.

இனியாவது கிரெடிட் கார்டை பத்திரமாகப் பயன்படுத்துவீர்கள்தானே?

நன்றி:  இரா.ரூபாவதி

நன்றி:- நாணயம் விகடன்

எஸ்டேட் பிளானிங் – தெளிவா இருக்கும்போதே இதைச் செஞ்சுடுங்க! – எஸ்.ராஜசேகரன்


மேலை நாடுகளில் எஸ்டேட் பிளானிங் என்பது பிரபலம். நம் நாட்டில் இப்போதுதான் இது பற்றிய விழிப்பு உணர்வு படிப்படியாக ஏற்பட்டு வருகிறது. அது என்ன எஸ்டேட் பிளானிங்?

எஸ்டேட் பிளானிங் என்பது ஒருவரது மறைவுக்குப் பின்னால் அவருக்குச் சொந்தமான சொத்தை எந்தப் பிரச்னையும் வராமல் வாரிசுகள் அனுபவிக்க முன்கூட்டியே தெளிவாக முடிவெடுத்து அதற்கான ஆவணத்தை எழுதி வைப்பதாகும். எல்லோருக்கும் சட்டென புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், உயில் எழுதி வைப்பது.

பொருளாதார வளர்ச்சியின் காரணமாகவும், சமூக மாற்றங்களின் காரணமாகவும், இன்றைக்கு கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, தனிநபர் குடும்பமாக மாறி வருகிறது. இந்நிலையில், நாம் அரும்பாடுபட்டுச் சம்பாதித்த சொத்தை சரியாகத் திட்டமிட்டு, முன்

எச்சரிக்கையோடு நாம் விரும்பும் வாரிசுகளுக்கு முறையாக பகிர்ந்து அளிப்பதன் மூலம் அந்த சொத்தை இன்னும் அதிக வளர்ச்சி அடைய வைக்க முடியும். அதற்கு கட்டாயம் தேவை இந்த எஸ்டேட் பிளானிங்.  

மேலும், ஒருவரது சொத்து யாருக்குப் பயன்பட வேண்டும் என்று நினைக்கிறோமோ, அவருக்கே போய்சேர வழி செய்து தருவதும் எஸ்டேட் பிளானிங்கில் முக்கியமான அம்சம். இதனால் நாம் விரும்பும் நபர் எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளாமல் அந்த சொத்தை நிம்மதியாக அனுபவிக்க வழி செய்கிறது.

உயில்!

எஸ்டேட் பிளானிங் என்பதில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது ‘வில்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற உயில். உயில் என்பது அசையும், அசையா சொத்தை, தான் விரும்பியவாறு முறையாக எழுதிக் கொடுக்கும் ஆவணமாகும். இவ்வாறு எழுதும் ஆவணம் சட்டத்திற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். இப்படி வாரிசுகளுக்கு சொத்தை எழுதிக் கொடுக்கும் முறை உலகில் ரோமானிய காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வழக்கமாக நடந்து வருகிறது.

உயில் எழுதி வைத்தால் சொத்துகள் வாரிசுகளுக்குக் கிடைக்குமா என கேள்வி கேட்பவர்கள் இன்னும்கூட அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஏன் உயில் எழுதி வைக்க வேண்டும் என்பதற்கு இரு முக்கிய சம்பவங்களைச் சொல்கிறேன்.

ஒருவர் தன் மறைவுக்குப் பிறகு சொத்து அனைத்தும் துணைவியாருக்குச் சேர வேண்டும் என்று விரும்பினால் அவர் உயில் எழுதி வைத்தால்தான் முழுமையாகச் சேருமே தவிர, இயல்பாக போய் சேர வாய்ப்பில்லை. உயில் எழுதவில்லை என்கிறபட்சத்தில் பிள்ளைகள் பிரித்துக்கொண்டு மனைவிக்கு கொடுக்காமல்கூட விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகள் பொறுப்பாக இல்லை; மனைவி பொறுப்பாக பார்த்துக்கொள்வார்; அவர்களுக்குப் பிறகு பிள்ளைகளுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்று நினைக்கிறபட்சத்தில் உயில் எழுதுவது கட்டாயம்.

உயில் எழுதும்போது ஒரு நபருக்கு உள்ள இரண்டு குழந்தைகளில் ஒன்று ஊனமாகவோ இருந்தால், அந்தக் குழந்தைக்கு அதிகமான சொத்தை விருப்பம்போல் எழுதி வைக்கலாம். அப்படி இல்லை என்றால் சட்டம் இரு குழந்தைகளுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்க நேரிடும். ஆகவே, உயில் எழுதுவது அவசியம்.

இந்தியாவில் கிராமத்து மக்களைவிட நகரத்தில் வசிப்பவர்கள் உயில் எழுதி வைக்கும் பழக்கம் இல்லாததால் அவதிப்பட நேரிடுகிறது. இதற்கு காரணம், சொத்தை பிரித்தால் சொந்தம், உறவு பிரிந்துவிடுமோ அல்லது சண்டை வருமோ என்ற மனக் குழப்பம்தான். இதனால், உயில் எழுதாமலே இறந்துவிடும் நிலையில், சொத்து உள்ளவர் இறந்தபிறகு வாரிசுகளுக்கு மனஉளைச்சல், சகோதர – சகோதரிகளுக்குள் சண்டை என அவதிப்பட வேண்டியுள்ளது. அது மட்டுமின்றி கோர்ட்டுக்கு போய், பல வருடங்கள் அலைந்து கடைசியில் மனக்கசப்பே மிஞ்சுகிறது. இதனைத் தவிர்க்க ஒரே வழி, சிரமம் பாராமல் உயில் எழுதி வைத்துவிடுவதுதான்.

உயில் வகைகள்!

தனிநபர் உயில்:

தனிநபர் யாருடைய ஆலோசனையும் இல்லாமல், தானே சிந்தித்து சுயமாக முடிவெடுத்து எழுதுவது தனிநபர் உயில்.

கூட்டு உயில்:

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பலரும் சேர்ந்து முடிவு செய்து ஆவணத்தை முறைப்படி தயாரித்து எழுதும் உயில், கூட்டு உயில். இது சட்டத்திற்கு உட்பட்டு அமைதல் வேண்டும். மேலும் எழுதி வைத்தவர் இறந்தபிறகு நடுநிலையாகச் செயல்படுபவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் ஆன ஒருவரை நியமனம் செய்தல் வேண்டும். இல்லாவிட்டால் சேர்ந்து எழுதிவைத்த அனைவரும் இறந்தபிறகுதான் நியமனதாரர் செயல்பட முடியும்.

உயில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து எழுதியிருந்தால் கணவனோ அல்லது மனைவியோ இறக்க நேரிட்டுவிட்டால், உயிரோடு இருக்கும் கணவர் அல்லது மனைவி, உயில் தொடர்பான புரோபேட் (ஜீக்ஷீஷீதீணீtமீ) கோர்ட்டில் உயிலை சமர்பிக்க வேண்டும். புரோபேட் கோர்ட்டில் உயிலின்படி, நியமனதாரர் மூலமாகச் சொத்து பகிர்ந்து அளிக்கப்படும்.

பரஸ்பர உயில்:

பரஸ்பர உயில் என்பது இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து தயாரித்த உயில் ஆவணம். இதில் ஏதேனும் மாற்றி அமைக்க விரும்பினால் எழுதிய அனைவருடைய ஒப்புதல் பெற்றபிறகே திருத்தம் செய்ய இயலும். இவ்வாறு எழுதிய உயில், முக்கியமாக சொத்தில் சம பங்கு உரிமம் உள்ளவரால் உருவாக்கப்படுவதாகும்.

நிபந்தனை உயில்:

உயில் எழுதுபவர் சில நிபந்தனைகளை குறிப்பிட்டு எழுதுவது நிபந்தனை உயில். அப்படி நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் அந்த உயில் சட்டத்தின் முன் செல்லாது.

நகல் உயில்:

உயில் எழுதிய நபர் அசல் பிரதியை பாதுகாப்பாக தன்னிடமும் நகல் பிரதியை நியமனதாரரிடம் கொடுத்து வைப்பது நகல் உயில். உயில் எழுதுபவர் உயிலின் பாதுகாப்புக் கருதி அசலும் நகலும் ஒரே மாதிரி இருக்குமாறு உருவாக்கியிருத்தல் மிக அவசியம். ஏனெனில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அசல் உயில் பிரதி தவறிவிட நேர்ந்தால், நகலை வைத்து திரும்பவும் புதிதாக வேறு உயில், வேறு மாதிரி உருவாக்கிவிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் அத்தனை ஆவணப் பக்கங்களிலும் முறையாக கையப்பம் இடுவது அவசியம்.

கன்கரன்ட் உயில்!

ஒருவருக்கு வெவ்வேறு ஊர்களில் சொத்து இருக்குமானால் தனித் தனியாக குறிப்பிட்டு தனித்தனியே எழுதி வைக்கும் உயிலை கன்கரன்ட் உயில் என்பர். அப்படி எழுதின உயிலின் சொத்தினை ஒன்றை ஒன்று சம்பந்தபடுத்தாமல் இருப்பது அவசியம்.

லிவ்விங் உயில்:

இயற்கைக்கு மாறுபட்ட அல்லது நீண்ட நாள் குணமாக்க முடியாத நோயாளியாக இருந்து இறக்கும் தருவாயில் அவர் வாயால் சொல்ல சொல்ல, மருத்துவர் எழுதக்கூடிய ஆவணமாகும். அவ்வாறு எழுதப்படும் உயில் இந்திய சட்டத்திற்கு உட்படுவதில்லை. மேலும், இது கோர்ட்டிலும் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதால் உடல் நலம் பாதிக்கும் அறிகுறி இருக்கும்போதே உயில் எழுதிவிடுவது அவசியம்.

ஹலோகிராப் உயில்:

உயில் எழுதும் நபர், அவரே கைப்பட எழுதுவது ஹலோகிராப் உயில். முக்கியமாக, சொற்களும் / உள்கருத்து / உண்மை நிலையை கூறுவதாக இந்த உயில் இருப்பது அவசியம். குழப்பத்தைத் தவிர்க்க, புரியும்படியும் மற்றவர்கள் படிக்கும் வகையிலும் இருப்பது நல்லது.

வாய்மொழி உயில்:

இத்தகைய உயில் ஒரு தனிநபர் நாட்டுக்காக போரிலோ/ விமான விபத்திலோ/ கப்பல் விபத்திலோ இறக்க நேரிடலாம்; அப்படி இறக்கும் தருவாயில் சக ஊழியரிடம் எடுத்துரைக்கும் பேச்சின் மூலமாகவோ, எழுத்து மூலமாகமோ கூறியதை முறையாக எடுத்துரைக்கப்பட்டு அதன்படி செயல்படுத்தப்படும். இப்படி எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் காரணத்தினால் மேற்கண்டபடி உயில் எழுதலாம்.

பதிய வேண்டுமா?

உயிலில் அசையும் சொத்தாக இருந்தாலும் அசையா சொத்தாக இருந்தாலும் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டிய அவசியமில்லை. பதிவு செய்தாலும் செய்யாவிட்டாலும் உயில் செல்லுபடியாகும். ஒருவர் உயிலை பதிவுசெய்ய விரும்பினால் எழுதியவரும் சாட்சியாளரும் சொத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம். உயில் பத்திரத்தாளில் இருக்க வேண்டியது அவசியம். இது பதிவாளர் அலுவலகத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்படும்.

மாற்றி எழுதினால்…?

ஒருவர் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவரே மாற்றி எழுத முடியும். அவ்வாறு திருத்தி எழுதும்போது எழுதுபவர், சாட்சியாளர், நியமனதாரர் கையப்பம் இடுதல் வேண்டும்.

தான் சேர்த்த சொத்தினை பகிர்ந்து அளிப்பதை சுமையாக கருதாமல் அதையே தனி மனிதனின் தலையாய கடமை என்று உணர்ந்து, சுய நினைவோடு இருக்கும்போதே உயில் எழுதி வைத்துவிட்டால், பிற்பாடு ஏற்பட இருக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முடிவு கட்டிவிடலாம்!

நன்றி:  எஸ்.ராஜசேகரன்

நன்றி:- நாணயம் விகடன்

பிரிவுகள்:எஸ்டேட் பிளானிங் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள் !

ஜனவரி 20, 2013 1 மறுமொழி

ந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும் அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்தான் பெற்றோரின் மிகப் பெரிய சொத்து. பெற்றோரின் கடைசிக் காலத்துக்கு அவர்கள் பெற்ற குழந்தைகளையே பலரும் நம்பி இருக்கின்றனர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தந்தால்தான் அவர்களும் நன்றாக இருப்பார்கள்: பெற்றோர்களையும் நல்லபடியாகப் பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகப் பணத்தைச் சேமிப்பதில் நம்மவர்களுக்கு இணையாக உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் அதன் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைப்பதாக இருந்தாலும் சரி, சின்னதாக தங்க நகை வாங்கி வைப்பதாக இருந்தாலும் சரி நம்மவர் களுக்கு இணை நம்மவர்களே.

குழந்தைகள் பெயரில்..!

குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக நிறைய சேமிக்கவேண்டும் என்கிற எண்ணம் நமக்கு  இருந்தாலும், அதற்கான சரியான முதலீட்டு வழிமுறைகளை நாம் தேர்வு செய்கிறோமா என்பது மிகப் பெரிய கேள்வி. அதிக லாபம் தரக்கூடிய, அதே நேரத்தில் நம் குழந்தைகளுக்கு மிகச் சரியாக பயன்தரக்கூடிய திட்டங்களில் நாம் முதலீடு செய்கிறோமா என்றால், இல்லை என்பதே பலரது பதிலாக இருக்கும். முதலீட்டுக்கு உதவும் ஏஜென்ட்கள் சிபாரிசு செய்யும் திட்டங்களை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு  வாங்கி விடுகிறோம்.  

ஏஜென்ட்கள் சொல்லும் திட்டங்களை நாம் மறுக்காமல் வாங்குவதற்கு பல ஃபண்ட் நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் ஒரு சிம்பிளான டெக்னிக்கைப் பின்பற்றுகின்றன. அதாவது, புதிதாக ஆரம்பிக்கும் சில திட்டங்களின் பெயரோடு ‘சைல்டு/சில்ட்ரன்’ என்கிற வார்த்தையைச் சேர்த்துக்கொண்டுவிடுகின்றன.  ‘சில்ட்ரன் எஜுகேஷன் ஃபண்ட்’ எனவும் ‘சில்ட்ரன் இன்ஷூரன்ஸ் பாலிசி’ என்றும் புதிய திட்டங்களுக்கு பெயர் வைப்பதன் மூலம், நம்மை எளிதில் ஏமாற்றி ஃபண்டுகளையும் பாலிசிகளையும் வாங்க வைக்கின்றன. ஃபண்டிலோ அல்லது பாலிசியிலோ ‘சைல்டு/சில்ட்ரன்’ என்கிற வார்த்தை இருப்பதினாலேயே அது குழந்தைகளுக்கு ஏற்ற பாலிசி என்று சொல்லிவிட முடியாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ‘சைல்டு’ என்கிற வார்த்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நம் குழந்தையின் எதிர்காலத்துக்கு எந்த வகையில் ஏற்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே அதில் பணத்தைப் போட ஆரம்பிக்கவேண்டும்.

இன்ஷூரன்ஸ் முதலீடல்ல!

குழந்தை பிறந்தவுடன் ஒரு தகப்பன் என்பவன் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் இருப்பான். அவனுக்குள் மகிழ்ச்சியும் பொறுப்புணர்வும் பல மடங்கு அதிகமாக இருக்கும். இந்தச் சமயத்தில் அந்த தகப்பனால் ஒரு சரியான இன்ஷூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்ய முடியுமா என்பது சந்தேகமே. வங்கியில் வேலை பார்க்கும் குமாருக்கும் அப்படித்தான் நடந்தது. குமாருக்கு குழந்தை பிறந்தவுடனே அவருடைய இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் அவரை அணுகி ‘சைல்டு இன்ஷூரன்ஸ் பிளான்’ ஒன்றை வழங்கினார். தன் குழந்தைக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற மனநிலையில் இருந்த குமார் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை உடனே வாங்கினார்.

ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு அந்த பாலிசியின் டாக்குமென்ட்களை படித்த போதுதான், அது குழந்தையின் 18 வயது வரையிலான சேமிப்புடன் கூடிய ஆயுள் காப்பீடு பாலிசி என்று தெரிந்தது. பாலிசி முதிர்வின்போதுதான் முதிர்வுத் தொகை வழங்கப்படும் என்றும் அதில் சொல்லி இருந்தார்கள். குழந்தையின் எதிர்கால கல்வித் தேவை என்ற ஒரே விஷயத்துக்காக குமார் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து விட்டார்.

ஆனால், அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின்படி, குழந்தையின் 18 வயது வரை குமார் தொடர்ந்து பிரீமியம் செலுத்தவேண்டும். பாலிசி முதிர்வின்போது பாலிசித் தொகையுடன் (sum assured) சேர்த்து போனஸ் தொகையும் வழங்கப்படும். அதேசமயம், 18 வயதிற்குள் குழந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமானால், பாலிசித் தொகை மற்றும் அந்தக் காலம்வரை அறிவிக்கப்பட்ட போனஸ்களும் சேர்த்து குமாருக்கு (Nominee/policy holder) வழங்கப்படும்.

குடும்பச் செலவு, எதிர்காலத் தேவைகள் மற்றும் பாலிசி பிரீமியம் தொகை முதலியன குமாரின் வருமானத்தையே நம்பி உள்ளன. குழந்தை வளரும் பருவத்தில் குமாருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், பிரீமியம் கட்டுவது தடைபட்டு பாலிசி லேப்ஸ் ஆகும் வாய்ப்பு அதிகம். அப்படி பாலிசி லேப்ஸ் ஆகிவிட்டால் குழந்தையின் எதிர்காலத் தேவைக்கு எந்த பணமும் கிடைக்காது. அப்படி இருக்க, அந்தக் குழந்தைக்கு எப்படி ஒளிமயமான எதிர்காலம் அமையும்?

டேர்ம் பிளான் பெஸ்ட்!  

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், தன் குழந்தைக்கு குமார் எடுத்த பாலிசி பொருத்த மானதல்ல என்று தெரியவரும். குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டுமெனில், நாம் முதலில் கவனிக்கவேண்டியது, குழந்தையின் தகப்பனுக்குப் போதிய அளவு ஆயுள் காப்பீடு இருக்கிறதா என்பதே. போதுமான அளவு ஆயுள் காப்பீடு இல்லையெனில், வேறு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுப்பதைவிட ‘டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி’ எடுப்பதே சரியான முடிவாக இருக்கும்.

நாம் எடுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி நீண்டகால அளவுக்கு நமக்கு காப்பீடு அளிப்பவையாக இருக்கவேண்டும். உதாரணமாக, 30 வயதில் இருக்கும் பெற்றோர் 20 முதல் 25 ஆண்டுகளுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கவேண்டும். குழந்தையின் அப்பா இளம் வயதில் இருக்கும்போதே இந்த பாலிசியை எடுத்தால் குறைவான பிரீமியம் தொகையில் நீண்டகாலத்திற்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

அடுத்து நாம் கவனிக்கவேண்டியது, குழந்தை வளரும் பருவத்தில் நமது குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் முக்கியமாக குழந்தைக்கும், தேவையான அளவு ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். இதற்கு ஃபேமிலி ஃப்ளோட்டர்

(Family Floater) பாலிசி நமக்கு கைகொடுக்கும். மேலும், இன்று நாம் வேலை செய்யும் நிறுவனங்கள் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் நமக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸை அளிக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் குரூப் இன்ஷூரன்ஸ் திட்டத்தின் விதிமுறைகள்படி, நமது குழந்தையையும் அதில் இணைக்கவேண்டும். இது குழந்தைக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்க வழி செய்யும்.

  இன்றே, இப்போதே..!

குழந்தை பிறந்தவுடன், நமது மனதில் அது ஒரு இன்ஜினீயராக, மருத்துவராக வரவேண்டும் என்று கனவு காண்போம். இன்றையச் சூழலில் நான்கு வருடம் இன்ஜினீயரிங் கோர்ஸ், கேப்பிடேஷன் ஃபீஸ் இல்லாமல், ஆறு லட்சம் ரூபாய் தேவை. குழந்தை தற்போது பிறந்திருக்குமானால், இந்தப் படிப்புக்கான செலவு 17 வருடங்களுக்குப் பின் 7% பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் 19 லட்சம் ரூபாயாக இருக்கும். இதற்கான சேமிப்பை நாம் இன்றே, இப்போதே தொடங்கிவிடுவது நல்லது.

இரண்டாவது, முதுகலைப் படிப்புக்கு (Post Graduation)சேமிப்பது. இந்தச் செலவு குழந்தையின் 20 அல்லது 21 வயதுகளில் வரலாம். அன்றைய தேதியில் முதுகலைப் படிப்பு இரண்டு ஆண்டு படிக்க அதிகபட்சம் 23 லட்சம் ரூபாய் செலவாகும். இன்னும் சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். உள்ளூரில் படிப்பதாக இருந்தாலும் வெளிநாட்டில் படிப்பதாக இருந்தாலும், வங்கியில் கல்விக் கடன் வாங்குவதே  எதிர்காலத்தில் சாத்தியமான விஷயம்.

அடுத்து, மகன்/மகளின் திருமணச் செலவு. இன்று பலரும் திருமணத்தை ‘கிராண்ட்’-ஆக செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். விளைவு, ஓய்வுக்காலத்துக்கான பி.எஃப்.-லிருந்து பணத்தை எடுக்கவேண்டியச் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற நெருக்கடிகளைத் தவிர்க்க,  குழந்தை பிறந்ததும் திருமணத்துக்கு என தனியாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க ஆரம்பித்துவிட வேண்டும். 23 வயதில் இத்தகைய செலவு வரும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது கல்யாணத்துக்கு 10 லட்சம் ரூபாய் தேவை எனில், 22 வருடங்களுக்குப் பிறகு 47.40 லட்சம் ரூபாய் தேவையாக இருக்கும்.

படிப்பு, திருமணம் போக, குழந்தைகளுக்குத் தேவையான சைக்கிள், 18 வயதில் ஒரு மோட்டார் பைக், செல்போன் போன்றவற்றை பரிசாக அளித்து உற்சாகப்படுத்தவும் சேமிப்பின் ஒரு  பகுதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எப்படி சேமிப்பது?

நாம் வாங்கும் சம்பளத்தில் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும். அது குழந்தை களுக்காக இருக்கவேண்டும் என்றானால் அதைவிட சந்தோஷம் பெற்றோர்களுக்கு வேறென்ன வேண்டும்?  உதாரணத்திற்கு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 25-வது வயதில் 25,000 ரூபாய் சம்பாதிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்செய்யவேண்டிய முதலீட்டு நடைமுறைகளை இனி பார்ப்போம்.

25 வயதில்  ஒருவருக்கு குழந்தை பிறப்பதாக கணக்கில்கொள்வோம். குழந்தை பிறந்தபிறகு, 0-5 வருடங்களுக்கு மாதம் 3,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். பணவீக்கம் ஆண்டுக்கு 7% உயர்கிறது எனில், அதற்கேற்ப ஒருவரது சம்பளமும் ஆண்டுக்கு 7% அதிகரிக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்.  

6-10 வயது வரை செய்துவரும் முதலீட்டுடன் 3,000 ரூபாயைச் சேர்த்து மாதம் 6,000 ரூபாயை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். குழந்தையின் பத்தாவது வயதில் ஒரு சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்றாலும் இந்த முதலீட்டிலிருந்தே தேவையான தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.  

குழந்தைகளின் 11-15 வயது வரை மாதம் 10,000 ரூபாயை ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். 16-23 வயது வரை மாதம் 15,000 ரூபாயை முதலீடு செய்யவேண்டும். இந்தச் சேமிப்பை குழந்தையின் படிப்பு (இதில் வெளிநாட்டு மேற்படிப்பு அடங்காது!) மற்றும் திருமணச் செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்குத் தேவையான முதலீட்டு விவரங்கள்  சேமிப்புத் திட்ட அட்டவணையில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. இந்த முதலீடு ஒரு குழந்தைக்கே.  இரண்டு குழந்தைகள் என்பவர்களுக்கு வருடா வருடம் உயரும் வருமானத்திலிருந்து தேவைக்கு தக்கபடி முதலீட்டையும் உயர்த்திக்கொள்வது அவசியம்.

இனி என்ன யோசனை, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இதுவரை சேமிக்கத் தொடங்காதவர்கள் உடனே அதில் இறங்க வேண்டியதுதானே!  

நன்றி: தொகுப்பு: செ.கார்த்திகேயன், படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.

நன்றி:- நாணயம் விகடன்

பெஸ்ட் ரிட்டையர்மென்ட் பிளான்… நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு… சொக்கலிங்கம் பழனியப்பன்

ஜனவரி 13, 2013 1 மறுமொழி

கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை பெரும்பாலான பெற்றோருக்கு அவர்களுடைய குழந்தைகள்தான் ஓய்வுக்கால முதலீடாக இருந்தார்கள். ஆனால், இன்றோ அந்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. இந்தக் காலத்து இளைஞர்கள் கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்தவுடனேயே கை நிறைய பணத்தைப் பார்க்கிறார்கள்.  பெற்றோர்களை விட்டு தூரத்தில் இருக்கும் நகரங்களுக்குச் சென்று வசிக்கிறார்கள். சிறிய குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும், இன்றைய பொருளாதாரத்தில் குடும்பம் என்று உண்டானவுடன் செலவுகள் பல வகைகளில் அதிகமாகிவிடுகிறது. கல்விக் கடன், வீட்டுக் கடன், கார் கடன், குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, சுற்றுலா, வீட்டுச் செலவு என இந்த செலவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போக, அந்தப் பட்டியலில் கடைசியில் இடம் பெறுபவர் களாக இருக்கிறார்கள் பெற்றோர்கள்.

ஆக, இன்றையப் பொருளாதாரச் சூழ்நிலையில், நமது ஓய்வுக்காலத்திற்கு நாம் யாரையும் நம்ப முடியாது – நம் குழந்தைகள் உட்பட. நமது ஓய்வுக்காலத்தில் நாம் தலைநிமிர்ந்து வாழ விரும்பினால், நம் கையில் பணம் இருந்தால்தானே நல்லது? ஓய்வுக்காலத்திற்கு முதலீடு அவசியம் என்கிறபட்சத்தில், எந்த வகையான முதலீடு சிறந்தது என்று பார்ப்பதுதானே உத்தமம்?

சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு உறுதியாகக் கிடைக்கும் ஒரு விஷயமாக இருந்தது பென்ஷன். ஆனால், இப்போது அங்குகூட நிலைமை மாறிவிட்டது. அரசாங்கம் அந்தப் பொறுப்பில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டுவிட்டது. பி.எஃப்.ஆர்.டி.ஏ. (பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி) என்ற அமைப்பை ஏற்படுத்தி, அரசு ஊழியர்களை நியூ பென்ஷன் ஸ்கீம் (என்.பி.எஸ்.) என்ற திட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டது. இன்றைய தினத்தில் என்.பி.எஸ்-ல் ஒவ்வொரு இந்திய குடிமகனும் சேர்ந்து முதலீடு செய்யலாம். என்.பி.எஸ். பற்றி விரிவாகப் பார்க்கும்முன் வேறு என்னென்ன திட்டங்கள் ஓய்வுக்காலத்திற்கு உள்ளன என்று பார்த்துவிடுவோம். பொதுவாக கீழ்க்கண்ட திட்டங்கள் இன்றைய தினத்தில் நமது ஓய்வுக்கால ஊதியத்திற்கு முதலீடு செய்ய ஏதுவாக உள்ளன:

1. அரசாங்க பழைய பென்ஷன்,

2. என்.பி.எஸ்.,

3. பி.பி.எஃப். (பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்),

4. இ.பி.எஃப். (எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட்),

5. இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் திட்டங்கள்,

6. நமக்கு நாமே சொந்தமாக முதலீடு செய்து கொள்ளும் பென்ஷன் திட்டங்கள்.

இனி, இத்திட்டங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகக் கீழே காண்போம்.

பழைய பென்ஷன் திட்டம்!

நாம் ஏற்கெனவே சொன்னபடி, புதிதாகச் சேரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் (ராணுவம் தவிர) மற்றும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கும் அரசின் பழைய பென்ஷன் திட்டம் செல்லாது. ஜனவரி 01, 2004 முதல் புதிதாகச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் என்.பி.எஸ். திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். எனவே, 2004 ஆண்டுக்கு முன்பு அரசு வேலையில் சேர்ந்தவர்களுக்கும் மற்றும் ராணுவத்தில் வேலையில் செய்பவர்களுக்கும்தான் மட்டுமே இத்திட்டம். ஒரு சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இன்னும் இந்தப் பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ளன.

என்.பி.எஸ். (நியூ பென்ஷன் ஸ்கீம்)

அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் (ராணுவம் தவிர) 2004 முதல் இந்த என்.பி.எஸ். திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களும் (தமிழ்நாடு உட்பட) இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை நிர்வகிக்க பென்ஷன் ஃபண்ட் மேனேஜர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கும் இத்திட்டம் 2009-ல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும்பாலான வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலம் இத்திட்டத்தில் மக்கள் சேர்ந்துகொள்ளலாம்.

இதில் டயர்-1, டயர்-2 என இருவகை கணக்குகள் உள்ளன. டயர்-1-ல் போடும் பணம் ஓய்வுக்காலத்தில்தான் எடுக்க முடியும். டயர்-2-வில் போடும் பணத்தை இடையில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை என்.பி.எஸ். திட்டத்தின்கீழ் கொண்டு வந்துள்ளன.

சிறிய அளவில் தங்கள் ஓய்வுக்காலத்திற்காக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காக, என்.பி.எஸ். லைட் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கும் அதிலிருந்து வரும் வருமானத்திற்கும் வருமான வரிவிலக்கு உண்டு. ஆனால், மெச்சூரிட்டி தொகைக்கு வரி உண்டு. இது இனிவரும் காலங்களில் மாறலாம்.

இத்திட்டம் பொதுமக்களிடையே பல்வேறு காரணங்களினால் இன்னும் பிரபலமாகவில்லை. இனிவரும் காலங்களில் அரசாங்கம் கொண்டு வரும் சீர்திருத்தங்களைப் பொறுத்து இத்திட்டம் பொதுமக்களிடையே பிரபலம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஓய்வுக்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர் களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. ஏனென்றால் 60 வயதிற்கு முன்பு இத்திட்டத்தில் (டயர்-1 அக்கவுன்ட்) இருந்து வெளியேற நினைப்பவர்கள், குறைந்தபட்சமாக 80 சதவிகிதத் தொகையை ஆனுயூட்டியாக மாற்றிக்கொள்ள வேண்டும். மீதி 20 சதவிகிதத்தை மொத்தமாக எடுத்துவிடலாம். 60-70 வயதில் வெளியேறுபவர்கள் 40 சதவிகிதத்தை ஆனுயூட்டியாக மாற்றிக்கொள்ள வேண்டும். 70 வயதிற்கு மேல் அக்கவுன்ட் குளோஸ் செய்யப்பட்டு, மொத்த பணமும் திருப்பித் தரப்படும்.  

இத்தொகையை நிர்வகிப்பதற்கு மிகக் குறைந்த பணமே செலவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதலீடு செய்வதற்கு உச்சபட்ச தொகை ஏதுமில்லை. குறைந்தபட்ச தொகை ஆண்டிற்கு ரூ.6,000 மட்டுமே.

ஆனால், இதில் சில அசௌகரியங்களும் உண்டு. என்.பி.எஸ்.-ல் உள்ள ஃபண்டுகளின் செயல்பாடு பரவலாக ஆய்வு செய்யப்படவில்லை. மேலும், இந்த ஃபண்டுகள், பி.எஃப். அல்லது பி.பி.எஃப். போல இவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும் என்று கேரன்டியாக சொல்லமுடியாது. அதே நேரத்தில் அதீதமான ரிட்டர்னைத் தருவதற்கும் வாய்ப்பில்லை. தவிர, பணத்தை வெளியில் எடுக்கும்போது கட்டாயமாக ஓர் ஆனுயூட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆனுயூட்டியைவிட சொந்தமாக முதலீடு செய்பவர்களுக்கு அதிக ரிட்டர்னில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. மேலும், இத்திட்டத்தில் சிறு முதலீட்டாளர்களுக்கு செலவின சதவிகிதமும் சற்று அதிகமாக உள்ளது. கட்டாய முதலீட்டாளர்களுக்கு இத்திட்டம் ஒரு நல்ல உபகரணமாகும்.

இத்திட்டத்தில் சேரும் ஒவ்வொருவருக்கும் பிரான் (பெர்மனென்ட் ரிட்டையர்மென்ட் அக்கவுன்ட் நம்பர்) நம்பர் வழங்கப்படும். அவர் இந்தியாவில் எங்கு வேலை பார்த்தாலும் இந்த நம்பர் ஒன்றே! ஆகவே, வேலை காரணமாக அடிக்கடி நகரத்தை மாற்றுகிறவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தற்போது நாம் செய்யும் முதலீட்டை நிர்வகித்துத் தர ஏழு ஃபண்ட் மேனேஜர்கள் (எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., யூ.டி.ஐ., ஐ.டி.எஃப்.சி., கோட்டக், ரிலையன்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.) உள்ளனர்.

இதில் ஃபண்ட் மேனேஜரை பொறுக்கிக் கொள்வது நமது ஆப்ஷனாகும். ஒரு ஃபண்ட் மேனேஜரில் இருந்து இன்னொரு ஃபண்ட் மேனேஜருக்கும் மாற்றிக்கொள்ளலாம். நமது அக்கவுன்டை பராமரிப்பதற்காக ஃபண்ட் மேனேஜருக்கும், சென்ட்ரல் ரெக்கார்டு கீப்பிங் ஏஜென்சிக்கும் (சி.ஆர்.ஏ.) நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அக்கட்டணங்கள் யூனிட்டை ரத்து செய்வதன் மூலம் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. ஆனால், இக்கட்டணங்கள் மிக மிகக் குறைவே; மேலும், இக்கட்டணங்கள் பி.எஃப்.ஆர்.டி.ஏ-வால் தீர்மானிக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 18; அதிகபட்ச வயது 60 ஆகும். இந்திய குடிமக்கள் மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

என்.பி.எஸ்-ல் ஸ்வலம்பன் திட்டத்தை 2010-11-ல் மத்திய அரசாங்கம் வெளியிட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.1,000 முதல் 12,000-த்திற்குள் முதலீடு செய்பவர்களுக்கு வருடத்திற்கு ரூ.1,000-த்தை அந்த ஆண்டும், அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்கும் திட்டத்தில் சேருவதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் வழங்குகிறது. 2012-13-ல் கணக்கு தொடங்கியவர்களுக்கும் இந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகிறது.

பொருளாதார ரீதியாக வசதி குறைவானவர் களுக்காக என்.பி.எஸ். லைட் என்ற திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் செலவினங்கள் இன்னும் குறைவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர்கள் ‘அக்ரிகேட்டர்கள்’ (நலிவடைந்த பிரிவு மக்களை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளர்) மூலம் சேரவேண்டும். இதில் சேருபவர்களுக்கு ஸ்வலம்பன் திட்டத்தைப் போலவே, மத்திய அரசாங்கம் வருடத்திற்கு ரூ.1,000 மானியமாக 2016-17 வரை வழங்குகிறது.

இத்திட்டம் மூன்று வகையான முதலீடுகளை ஒவ்வொருவருக்கும் தருகிறது. பங்கு சார்ந்த குறியீட்டு முதலீடுகள், கடன் சார்ந்த அரசாங்கப் பத்திர முதலீடுகள், கடன் சார்ந்த கார்ப்பரேட் பத்திர முதலீடுகள் என்பவைதான் அந்த மூன்றும்.

பங்கு சார்ந்த முதலீட்டில் அதிகபட்சமாக ஒருவர் 50 சதவிகிதம்தான் முதலீடு செய்ய முடியும். அதேசமயத்தில், கடன் சார்ந்த இரண்டு வகையான முதலீட்டிலும் 100 சதவிகிதம்கூட செய்யலாம். எதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆட்டோ சாய்ஸ் ஆப்ஷன். வயதைப் பொறுத்து திட்டத்திற்கான சதவிகிதம் ஆட்டோமெட்டிக்காக நிர்ணயிக்கப்படும்.

எனக்கு ரிஸ்க் எடுப்பது பிடிக்காது. பங்கு சார்ந்த முதலீடே எனக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள், இத்திட்டத்தில் முழுக்க முழுக்க அரசாங்க பாண்டு அல்லது கார்ப்பரேட் பாண்டு அல்லது இரண்டிலும் கலந்து முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் 50 சதவிகிதத்தைப் பங்கு சார்ந்த முதலீட்டிலும், மீதியை கடன் சார்ந்த திட்டத்திலும் முதலீடு செய்யலாம்.  

பி.பி.எஃப். (பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்)

பி.பி.எஃப். மக்கள் பரவலாக அறிந்த ஒன்று. பொதுமக்களுக்காக மத்திய அரசாங்கம் செயல் படுத்தும் திட்டமாகும். பல பொதுத்துறை வங்கிகள் மூலமும், ஓரிரு தனியார் வங்கிகள் மூலமும் மற்றும் அஞ்சலகங்கள் மூலமும் இத்திட்டத்தில் மக்கள் கணக்கை துவக்கிக்கொள்ளலாம்.

இது 15 வருட திட்டமாகும். அதற்கு மேலும் கணக்கைத் தொடரலாம்.

இந்தக் கணக்கைத் துவக்குவது எளிது. தற்போது ஆண்டுக்கு 8.8 சதவிகித வட்டி கேரன்டி-ஆக தரப்படுகிறது. போடும் பணம், அதிலிருந்து வரும் வட்டி மற்றும் வெளியே எடுக்கும் பணம் என
அனைத்திற்கும் வரி விலக்கு உண்டு. ஒருவரின் பி.பி.எஃப். அக்கவுன்டை கோர்ட்கூட அட்டாச் செய்ய முடியாது. ஒவ்வொருவரும் ஒரு அக்கவுன்ட்தான் வைத்துக்கொள்ள முடியும். ஆண்டிற்கு உச்சபட்சமாக

ரூ.1 லட்சமும், குறைந்தபட்சமாக ரூ.500-ம் முதலீடு செய்யவேண்டும். மாதத்திற்கு ஒருமுறைதான் முதலீடு செய்ய முடியும்.

இப்படி பல வசதிகள் கொண்ட இத்திட்டம் ஒவ்வொருவரின் ஓய்வுக்கால முதலீட்டுக் கூடையில் அவசியம் இடம் பெறவேண்டும். இதற்குமேல் தேவைப்படும் முதலீட்டை பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம். ஓய்வுக்காலத்தில் ஒருவர் இத்திட்டத்தில், வரிச் சலுகைக்காக முதலீடும் செய்யலாம்; அதேசமயத்தில், டாக்ஸ் ஃப்ரீயாக, திட்டம் துவங்கி 15 வருடம் ஆகியிருக்கும்பட்சத்தில், பணத்தை எடுத்துக்கொள்ளவும் செய்யலாம்.

நன்றி:-சொக்கலிங்கம் பழனியப்பன்.

நன்றி:- நாணயம் விகடன்

பிரிவுகள்:பெஸ்ட் ரிட்டையர்மென்ட் பிளான் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

தங்க நகைச் சீட்டு – பானுமதி அருணாசலம்


தங்க நகைச் சீட்டு கட்டாத ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் தேடிக் கண்டுபிடிப்பது கடினமான வேலை. மாதச் சம்பளம் 5,000 ரூபாயோ, 50,000 ரூபாயோ அக்கம்பக்கம் இருக்கும் நகைக் கடையில் நகைச் சீட்டு போட்டு தங்கம் வாங்க நினைக்காத பெண்களே இல்லை.

 

 

ங்க முதலீட்டில் பலப்பல திட்டங்கள் வந்தபிறகும், பெண்களுக்கு நகைச் சீட்டின் மீது இருக்கும் மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. யாரும் எளிதாகப் புரிந்துகொண்டு ஈஸியாக பணத்தைக் கட்ட முடியும் என்பதால் தங்க நகைச் சீட்டுகளுக்கு இருக்கும் மவுசு அதிகம்.   

கடந்த சில ஆண்டுகளாக தங்கம் ‘ஜிவ்’வென ஏறுவதைப் பார்த்த பெண்கள், தங்கம் விலை இன்னும் அதிகரிக்குமோ என்ற பயத்தில் தங்கக் காசுகளாக வாங்கி வருகின்றனர். பெண்கள் இப்படி ஆர்வமாக வந்து வாங்குவதைப் புரிந்து கொண்ட நகைக் கடைகளும் புதுப்புது தங்க நகை சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.  

இன்றைக்கு தமிழகம் முழுக்க உள்ள தங்க நகைச் சேமிப்புத் திட்டங்களை மூன்று வகையாக பிரித்துவிடலாம். பழைய திட்டம், புது திட்டம், லேட்டஸ்ட் திட்டம் என தற்போது நகைச் சீட்டில் மூன்று வகையான திட்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்று திட்டங்களில் எதில் பணத்தைப் போடுவது லாபகரமாக இருக்கும் என்பதை அறிய களத்தில் இறங்கி, விரிவாக விசாரித்தோம். எது பெஸ்ட் என்பதைச் சொல்லும் முன்பு மூன்று தங்க நகைத் திட்டங்களையும் பார்த்து விடுவோம்.  

பழைய திட்டம்!

மாதம் 1,000 ரூபாய் வீதம் பணம் கட்டினால், பதினைந்தாவது மாதத்தில் நாம் 15,000 கட்டியிருப்போம். இதற்கு போனஸாக ஆயிரம் ரூபாய் சேர்த்து 16,000 ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக ஐந்நூறு ரூபாய்க்கு கிஃப்ட் பொருள் அல்லது அந்த தொகைக்கும் சேர்த்து நகையாக வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தை தமிழகம் முழுக்க இருக்கும் சிறிய, பெரிய நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. இந்த திட்டங்களின் கீழ் நகை வாங்குபவர்களுக்கு செய்கூலி, சேதாரம், மதிப்புகூட்டு வரி போன்றவைகளில் சலுகைகள் தருவதாக நகைக் கடைகள் விளம்பரம் செய்கின்றன. ஆனால், இந்த திட்டம் முடியும்போது நகைகளாகவோ அல்லது காசுகளாகவோதான் வாங்க முடியும்.

புதிய திட்டம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்க விலை எப்போதாவது ஒருமுறைதான் அதிகளவில் மாற்றம் காணும். ஆனால், இப்போது தினம் தினம் மாறுவதோடு, அந்த மாற்றம் பற்றிய செய்தி அடுத்த நிமிடமே டி.வி.-யிலும் இன்டெர்நெட்டிலும் வந்துவிடுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 2011-ம் ஆண்டில் மக்கள் அதிகளவில் வாங்கியது தங்க காசுகள்தான் என்று தெரிய வந்துள்ளது. தங்கம் விலை தாறுமாறாக ஏறுவதால் பின்வரும் நாட்களில் நகை வாங்க முடியாமல் போகுமோ என்கிற பயத்தில்தான் மக்கள் இப்படி காயின்களாக வாங்கி சேமித்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் நகைக் கடை வியாபாரிகள். இதனால் புதிதாக ஒரு சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இந்த புதிய திட்டத்தின்படி தங்கத்தின் விலை குறையும் அன்று கடைக்குச் சென்று பணத்தைக் கட்டி தங்கத்தை ‘ரிசர்வ்’ செய்து கொள்ளலாம். அதாவது, இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் கட்டலாம். மொத்தம் பதினைந்து மாதங்கள் கட்ட வேண்டும். உதாரணமாக, 2012 ஜனவரி மாதம் தொடங்கினால் 2013 மார்ச்சில் முடியும். இதில் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியிலிருந்து 31-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் அந்த மாதத்திற்கான தவணையை கட்டிக் கொள்ளலாம்.

இதில் கூடுதல் வசதி என்னவெனில், ஆயிரம் ரூபாய்தான் கட்ட வேண்டும் என்றில்லை. அந்த மாதத்தில் உங்களிடம் அதிக பணமிருந்தாலோ, இல்லை தங்கம் விலை குறைந்ததால் அதிகமான பணத்தை நீங்கள் கட்ட நினைத்தாலோ தாராளமாக கட்டலாம். இந்த கூடுதல் தொகை என்பது ஆயிரங்களின் பெருக்கமாகவே இருக்கும். இதற்கான தங்கம் உங்களுக்கு அன்றைய விலைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.

சில கடைகளில் இத்திட்டத்தின் முடிவில் தங்க நகைகள் மட்டுமே வாங்க முடியும்; காயின்களாக வாங்க முடியாது என்கின்றனர். சில கடைகளில் தங்க காயின்களும் வாங்கிக் கொள்ளலாம் என்கின்றனர். இது கடைக்கு கடை மாறுபடுகிறது. முதல் மாதம் கட்டும் தொகையில் 50% பதினைந்தாவது மாத முடிவில் இருக்கும் அன்றைய விலைக்கு நிகரான தங்கம் போனஸாக கொடுக்கப்படுகிறது. பதினைந்தாவது மாத முடிவில் நீங்கள் மொத்தம் கட்டியிருக்கும் பணத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தங்கம் மற்றும் போனஸ் தங்கம் ஆகியவற்றிற்கு என மொத்தமாக நகை வாங்கிக் கொள்ளலாம். சேதாரம், செய்கூலி, வாட் உள்ளிட்டவை உண்டு.

லேட்டஸ்ட் திட்டம்!

குறிப்பிட்ட மாதங்களுக்கு என இருக்கும் இந்த திட்டத்தில் மாதம் குறைந்தபட்ச தொகையாக கட்டும் தொகையைவிட கூடுதலாகவோ, குறைவாகவோ கட்டிக் கொள்ளலாம். அதாவது, 2,000 ரூபாய் மாதம் கட்டும் திட்டத்தில் சேர்ந்தால், அடுத்த மாதத்தில் 5,000 ரூபாய் கட்டிக் கொள்ளலாம். அதற்கு அடுத்த மாதம் 500 ரூபாய்கூட கட்டிக் கொள்ளலாம். உங்களின் விருப்பம்போல் பணத்தின் இருப்பை பொறுத்து கட்டிக் கொள்ளலாம். திட்டம் நிறைவடையும் மாதத்தில் கூடுதலாக போனஸ் தொகையும் வழங்கப்படும்.


எது பெஸ்ட்?

மேற்சொன்ன இந்த மூன்று திட்டங்களுக்கும் மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தாலும், இதில் எது பெஸ்ட் என்பதுதான் முக்கியமான விஷயம். பழைய திட்டத்தின்படி 2010, செப்டம்பர் மாதம் சீட்டு ஆரம்பித்து மாதம் 1,000 ரூபாய் கட்டிவந்தால் நவம்பர் 2011-ல் சீட்டு முடியும். ஆனால் டிசம்பர் மாதம் தான் நகை வாங்க முடியும் என்பதால் அந்த மாதத்தில் (20-ம் தேதி 2,590) ஒரு கிராம் தங்கத்தின் விலைப்படி 6.33 கிராம் வாங்கலாம்.

இதுவே புதிய திட்டத்தின்படி செப்டம்பர் 2010-ல் சீட்டு போட்டு 2011 நவம்பர் மாதத்தில் முடித்திருந்தால் அந்த மாதங்களில் தங்கத்தின் அதிகவிலையோ அல்லது குறைந்த விலையோ எப்படி நீங்கள் பணம் கட்டியிருந்தாலும் சுமார் 7 கிராம் தங்கம் வாங்கலாம். இது பழைய திட்டத்தைவிட பத்து சதவிகிதம் அதிகம். லேட்டஸ்ட் திட்டத்திலும் இதே அளவு வாங்க முடியும். இன்னும் தங்கத்தின் விலை நிலவரங்களை எஃப்.எம்., டி.வி., இன்டெர்நெட் என பல வகைகளில் உடனே தெரிந்து கொள்ள முடியும் என்பதால், விலை குறையும் நாளை பார்த்து பணத்தைக் கட்டினால் இன்னும் கூடுதலாக தங்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் எது பெஸ்ட் என்று சொல்லிவிட்டோம். பாரம்பரியம், நம்பிக்கை, நாணயம் கொண்ட நகைக் கடைகள் நடத்தும் திட்டங்களில் சேர்ந்து பலன் அடைய வேண்டியது நீங்கள்தான்!

 

நன்றி:- பானுமதி அருணாசலம்

நன்றி:- நாணயம் விகடன்

மியூச்சுவல் ஃபண்ட் Mutual Fund பரஸ்பர நிதி முதலீடு லாபகரமானதா? சொக்கலிங்கம் (ப்ரகலா) & நிதி ஆலோசகர் கெளசிக்

போண்டி ஆக்கும் போலிகள்!ரசியல் பண்ண மூன்று நபர்கள் தேவை என்றால், போலிகள் அரங்கேற இரண்டு நபர்களே போதுமானது! இரண்டு நபர்களுக்கு இடையே மூன்றாவதாக ஒருவர் வரும்போதுதான் அரசியல் வருகிறது. ஆனால், இரண்டாவதாக ஒருவர் வந்தாலே போலி அங்கே வந்துவிடும்! அந்த அளவுக்கு அரசியலைவிட பவர்ஃபுல்லானது போலி!

 

இது எத்தர்களின் காலம்… போலிகளைக் கண்டு மயங்கி பணத்தை பறிகொடுப்பவர்கள் ஏராளம். எல்லா துறையிலும் நீக்கமற வியாபித்து இருக்கும் இந்த போலிகளை ஓரளவாவது அடையாளம் காட்டும் முயற்சியே இக்கட்டுரை.

‘முயல் பிடிக்கும் நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரிந்துவிடும்’ என்பது போல, நாம் குறிப்பிட்டிருக்கும் சில அடையாளங்கள் தெரிந்தாலே, போலியாக இருக்கலாம் என்ற எச்சரிக்கையோடு அவர்களை அல்லது அவற்றை அணுகுங்கள். பாடுபட்டுச் சேர்த்த பணத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!


பணம் பத்திரம்!

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை போலி நிதி நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு, முதலுக்கே மோசம் போய், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைகிறவர்கள் இன்றும் பலர். இந்த போலி நிதி நிறுவனங்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி..? இதோ சில ‘நச்’ வழிகள்..!

வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட ஆர்.பி.ஐ-யிடம் அனுமதி வாங்கியிருக்கிறதா என்று அவசியம் பாருங்கள்.

பதிவு செய்யப்பட்ட லிமிடெட் நிறுவனம் என்பது போன்ற விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒரு நிறுவனத்தை கம்பெனியாக பதிவு செய்வதற்கும், நிதி நிறுவனமாகப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

சீட்டு கம்பெனி எனில், சீட்டு ஃபண்ட் சட்டப்படி அந்தந்த மாநில அரசின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டதா என பாருங்கள்.

சில நிறுவனங்கள் தவணை முறையில் பணம் செலுத்தச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் நிலம் கொடுப் பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடியும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரியாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பார்கள்.

மார்க்கெட்டில் இருக்கும் வட்டி நிலவரத்தைவிட, மிக அதிகப்படியான வட்டி தருவதாகச் சொன்னால் உறுதியாகச் சொல்லி விடலாம் அந்த நிறுவனம் போலியானது என்று!

குறிப்பாக பெண்களை மையப்படுத்தி, அவர்களைக் கவரும் வகைகளில் திட்டங்கள் இருந்தால் கவனம் தேவை.

சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களைக் கொண்டு அலுவலகம் திறப்பது, அவர்கள் கையால் பத்திரங்கள் கொடுப்பது போன்றவைகள் உங்களை திசை திருப்பும் வேலைகளில் ஒன்றாகும்.

அவசரப்படுத்தி முதலீடு செய்ய வைப்பது, ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் பணம் போட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்தவர் என யாராவது இரண்டு நபர்களை அறிமுகம் செய்துவைப்பது போன்ற வையும் தில்லாலங்கடிக்கான அறிகுறிகளே!

பானுமதி அருணாசலம்.


நல்லவரா, கெட்டவரா?

ரியல் எஸ்டேட்டில் மட்டுமல்ல, பங்குச் சந்தையிலும் போலி புரோக்கர்கள் குவிந்து கிடக்கிறார்கள். அவர்களை எப்படி இனம் கண்டுகொள்வது?

சூப்பர் டிப்ஸ்கள் இதோ…

போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள்.

ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவணங்கள் என வியாபார ரீதியாகக் கொடுக்க வேண்டிய எதையுமே உங்களுக்குத் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற்றையும் துண்டுக் காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள்.

டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட்ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலில் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தியாசப்படும்.

கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பணம் மட்டுமே கேட்பார்கள்.

காசோலை வாங்கும்போது வெவ்வேறு பெயரிலோ தனிமனிதரின் பெயரிலோ வாங்குவார்கள்.

உங்கள் கணக்கிற்கு யாருடைய கணக்கில் இருந்து காசோலை கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள்.

இத்தனை லாபம் நிச்சயம்; பத்திரத்தில்கூட எழுதித் தருகிறோம் என்கிற போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.

ஆள் பிடித்து தந்தால் கமிஷன் தருவதாகவும் ஆசை காட்டுவார்கள்.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என அனைத்து சந்தைகளிலும் வியாபாரம் செய்கிறேன் என்று பச்சைப் பொய் சொல்வார்கள்.

செ.கார்த்திகேயன்.


பார்த்து வாங்குங்க!

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை நிலத்தின் மீதுள்ள உரிமைகள் போலியானதாக இருக்கும், புரோக்கர்களில் சிலர் போலிகளாக இருப்பார்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சில போலியாக இருக்கும்… இப்படி பல போலிகளை எதிர்கொள்ளவேண்டிய துறை இது. அதனால் அதிக கவனம் தேவைப்படும்.

மனை அல்லது வீட்டை வாங்கும்போது மிகக் குறைந்த காலகட்டத்துக்குள்ளாகவே பலமுறை சொத்து கைமாறியிருக் கிறதா என பாருங்கள். அப்படி இருந்தால் உஷாராகி, தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உரிமையாளரைச் சந்தித்து உண்மையில் அவர் சொத்து விற்றாரா அல்லது பாகப் பிரிவினை செய்து தந்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

தாய் பத்திரம் அல்லது கிரயப் பத்திரம் தொலைந்துவிட்டது என்று சொன்னால் கூடுதலாக உஷாராகுங்கள்.

வீட்டை நேரில் பார்க்காமல் வாங்காதீர்கள். அதில் யாராவது குடியி ருந்தால் அவர்களிடம் நீங்கள் வீட்டை வாங்கும் விஷயத்தைச் சொல்லுங்கள். சில இடங்களில் வீட்டின் உரிமையாளரிடம் வாடகைக்கு ஆள் கூட்டி வருவதாகச் சொல்லி வீட்டைக் காட்டி, போலிபத்திரம் மூலம் வீட்டை விற்கும் வேலையும் நடந்து வருகிறது!

புரோக்கர்கள் அவசரப்படுத்தினால் ஒரு முறைக்கு நூறு முறை விசாரியுங்கள்.

சொத்தின் உரிமையாளரை கண்ணில் காட்டாமலே விலை பேசிக் கொண்டிருந்தால் அந்த புரோக்கரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

புரோக்கர் நல்லவர்தானா என்பதை அறிய அப்பகுதி சார் பதிவாளர் அலுவலக பணியாளர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரிந்துவிடும்.

சி.சரவணன்


காந்தி கணக்கு!

நல்ல நோட்டுகளே நாணிக் கோணும் அளவுக்கு பக்காவாக தயாராகின்றன போலி ரூபாய் நோட்டுகள். நாட்டையே ஆட்டம் காண வைக்கும் இந்த போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க ஒரே வழி நல்ல நோட்டுக்களை பற்றி தெரிந்துகொள்வதுதான்…

வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றிடத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல நேர்க்கோடுகளும் இருக்கும்.

பூ அடையாளம்: வாட்டர் மார்க் பகுதியின் வலதுபக்கத்தில் முன்னும் பின்னும் பூ இதழ்கள் போல இருக்கும் இந்த அடையாளத்தை சாய்த்து பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும்.

அடையாளக் குறியீடு: ரூபாய் நோட்டுகளின் மதிப்புக் கேற்றவாறு தொட்டு உணரும் வண்ணம் இந்த குறியீடு இருக்கும்.

20 ரூபாய் – செவ்வகம், 50 ரூபாய் – சதுரம், 100 ரூபாய் – முக்கோணம், 500 ரூபாய் – வட்டம், 1000 ரூபாய் – டைமண்ட். 10 ரூபாய் நோட்டுக்கு மட்டும் இந்தக் குறியீடு இருக்காது.

கம்பி இழை: ரூபாயின் நடுவில் விட்டுவிட்டு இருக்கும் கம்பி இழையைத் தூக்கிப் பார்த்தால் அதில் ஆர்.பி.ஐ. என்று ஆங்கிலத்திலும், பாரத் என்று இந்தியிலும் நோட்டின் முன்பக்கத்தில் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும், 45 டிகிரி சாய்த்து பார்த்தால் நீல நிறமாகவும் இது இருக்கும்.

மறைந்திருக்கும் மதிப்பு: மகாத்மா காந்தியின் வலது பக்கத்தில் இருக்கும் செவ்வகப் பட்டையினுள் ரூபாயின் மதிப்பு அச்சிட பட்டிருக்கும். இது 45 டிகிரி கோணத்தில் சாய்த்து பார்க்கும் போது தெரியும்.

மாறும் நிறம்: நடுவில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ரூபாயின் நிறம் சாய்த்து பார்க்கையில் பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறும்.

அசல் நோட்டுகளை தொட்டு உணரும்படி மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் வங்கியின் பெயர், கவர்னர் கையப்பம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அடையாள குறியீடு போன்றவை மேலெழுந்து பிரின்ட் ஆகியிருக்கும்.

நீரை.மகேந்திரன்.


அதுதான்; ஆனா அது இல்லை..!

பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கையை உருவாக்க முன்னணி நிறுவனங்கள் கோடி கோடியாகச் செலவு செய்கின்றன. ஆனால், நயா பைசா செலவு செய்யாமல் அப்படியே காப்பி அடித்து, கல்லா கட்டும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் அசந்தாலும் நம் கண்ணை ஏமாற்றிவிடும் போலி பிராண்டுகளைக் கண்டுபிடிக்க சில வழிகள்…

புகழ் பெற்ற பிராண்டுகளின் பெயரை கண்டுபிடிக்க முடியாதபடி லேசாக மாற்றி இருப்பார்கள். அல்லது பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ  கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு வேறு ஒரு பெயரைச் சேர்த்திருப்பார்கள். எனவே, ஒரிஜினல் பிராண்டின் எழுத்துக் களை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

லோகோவை காப்பி யடித்து சில மாற்றங்களை செய்திருப்பார்கள். இதனால் நமக்கு எது ஒரிஜினல், எது போலி என்கிற குழப்பம் வரும்.

புகழ்பெற்ற பிராண்டு களின் பெயரை சம்பந்தமில்லாத வேறு ஏதாவது பொருட்களுக்கு வைத்து அள்ளி விடுவார்கள். உதாரணமாக சோனி என்ற பெயரில் ஷேவிங் கிரீம் வரும்!

சில பிராண்டட் பொருட்கள் குறிப்பிட்ட  சில இடங்களில் மட்டுமோ அல்லது தனி விற்பனை மையங் களில் மட்டுமோதான் கிடைக்கும். ஆனால், போலி பொருட்கள் எந்த கடையில் வேண்டுமானாலும் கிடைக்கும்.

துணி வகைகளில் ஒரிஜினல் பிராண்டில் காணக்கூடிய நேர்த்தி, வடிவம், மிருதுதன்மை மற்றும் கலர்கள் போலி பிராண்டுகளில் இருக்காது.

சில பிராண்டட் பொருட்கள் குறிப்பிட்ட கலர் அல்லது குறிப்பிட்ட வாசனைகளில் மட்டுமே கிடைக்கும்.

சில பிராண்டட் பொருட்களுக்கு விற்பனைக்கு பிறகான சேவை மற்றும் வாரண்டி, கியாரண்டி போன்ற உத்தரவாதங்கள் இருக்கும். போலிகளுக்கு இந்த உத்தரவாதங்கள் இருக்காது.

நீரை.மகேந்திரன்

நன்றி:- சி.சரவணன், பானுமதி அருணாசலம், நீரை.மகேந்திரன், செ.கார்த்திகேயன்.

நன்றி:- நா.வி

அதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்! – சி.சரவணன்‘நேற்று போல் இன்று இல்லை; இன்று போல் நாளை இல்லை’ கதையாக தினம் ஒரு முகம் காட்டிவருகிறது சந்தை…. இந்தச் சூழ்நிலையில் பங்குகளை எப்படி வாங்குவது என்று கைபிசைந்து நிற்கிறார்கள் சிறு முதலீட்டாளர்கள். அதற்காக கடலில் அலை ஓய்ந்த பிறகு குளிக்கலாம் என்று இருந்துவிட முடியுமா என்ன! அப்படி என்றால் இந்நிலையில் என்ன செய்யலாம் என்று பங்குச் சந்தை நிபுணரான லெட்சுமண ராமனிடம் கேட்டோம்…

.வங்கி வட்டியாவது வேண்டாமா!

.”சந்தையின் போக்கு தடுமாற்றமாக இருக்கும்போது நாம் செய்யப் போகும் முதலீடு ஆஹா ஓஹோ லாபங்களை அள்ளிக் கொடுக்காவிட்டாலும், குறைந்தபட்சம் வங்கி வட்டி அளவுக்காவது தந்தால்தானே நல்லது? அதிக டிவிடெண்ட் தரக்கூடிய பங்குகளில் முதலீடு செய்தால் அப்படி ஒரு வருமானத்தை நிச்சயமாகப் பெறலாம். கணிசமான டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனப் பங்குகளைக் கண்டறிந்து முதலீடு செய்தால் போதும்; லாபத்துக்கு லாபமும் வரும், முதலீட்டுக்கும் மோசம் வராது” என்றவர், அது குறித்து மேலும் விளக்கினார்…

.ஒரு போர்ட்ஃபோலியோவே உருவாக்கலாம்!


.”முதலீடு செய்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அது டிவிடெண்ட் வழங்குவதற்கு முன்பாக அதில் முதலீடு செய்துவிட வேண்டும். டிவிடெண்ட் கைக்கு கிடைத்த பிறகு அந்தப் பங்கின் விலை சிறிது குறையும். பிறகு படிப்படியாக ஏறத் தொடங்கும். அதிக விலைக்கு வரும்போது விற்று லாபம் பார்க்கலாம். .பொதுவாக முழு நிதி ஆண்டு முடிந்த பிறகு நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்கத் தொடங்கும். அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகளைக் கண்டறிந்து செப்டம்பர், அக்டோபர் வரை அவற்றில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். டிவிடெண்ட் தொகை எவ்வளவாக இருந்தாலும் வரி கிடையாது என்பதால் முழு லாபமும் கைக்கு வந்துவிடும். பங்கின் விலை அதிகரித்தால் அதில் தனி லாபம் இருக்கிறது.

.நடப்பு ஆண்டில் இந்திய பங்குச் சந்தையின் குறியீடு 15% குறைந்திருக்கிறது. அதேநேரத்தில், பல தனிப்பட்ட பங்குகளின் விலை 30-40% விலை இறங்கி இருக்கின்றன. பங்கின் விலை கணிசமாக இறங்கி இருப்பதால் டிவிடெண்ட் யீல்டு கவர்ச்சிகரமானதாக இருக்கும். இதை வைத்துதான் பங்கை வாங்கும் முடிவை எடுக்க வேண்டும். பொது வாக டிவிடெண்ட் யீல்டு மூன்றுக்கு மேல் இருந்தால் வாங்கலாம். இது போன்ற பங்குகளை சந்தை இறங்கி இருக்கும் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிச் சேர்த்தால் ஒரு நல்ல ஷேர் போர்ட்ஃபோலியோவை கூட உருவாக்க முடியும்” என்றவர், டிவிடெண்டுக்காக பங்குகளை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களையும் விளக்கிச் சொன்னார்.

.வலுவான பங்காகப் பாருங்கள்…

.”ஒரு நிறுவனம், சிறப்பு டிவிடெண்ட் கொடுக்கும்போது வாங்காமல் இருப்பது நல்லது. காரணம், பங்கின் விலை ஏறிய வேகத்தில் இறங்கும் அபாயம் இருக்கிறது. உதாரணத்துக்கு, 2010 டிசம்பர் 31-ம் தேதி, நெல்காஸ்ட் நிறுவனப் பங்கின் விலை 95 ரூபாயாக இருந்தது. சிறப்பு டிவிடெண்ட்டாக 12 ரூபாய் அறிவிக்கப்பட்டதும் பங்கின் விலை 120 ரூபாய்க்கு அதிகரித்தது. டிவிடெண்ட் முதலீட்டாளர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்தபோது பங்கு விலை 125 ரூபாயாக ஆக உயர்ந்திருந்தது. பிறகு விலை 110 ரூபாய்க்கு குறைந்து, டிவிடெண்ட் அறிவிப்புக்கு முந்தைய விலையான 95 ரூபாய்க்கு வந்து விட்டது. இந்தப் பங்குகளை 120 ரூபாய்க்கு வாங்கியவர்களுக்கு, பங்கு ஒன்றுக்கு 25 ரூபாய் நஷ்டமாகி விட்டது.

.இது போன்ற நேரங்களில் டிவிடெண்டுக்கு ஆசைப்பட்டு வாங்கிய பங்கை நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே, டிவிடெண்டுக்காக பங்குகளை வாங்கினால், அடிப்படையில் வலுவாக இருக்கும் நிறுவனங்களாகப் பார்த்து வாங்க வேண்டும். மேலும் அது சார்ந்த துறை குறித்தும் அலசிப் பார்த்தே வாங்க வேண்டும்.

.எந்தப் பங்குகள் வேண்டாம்…

.டிவிடெண்ட் என்பது ஒரு நிறுவனத்தின் கடந்த கால செயல்பாட்டின் மூலம் கிடைத்த லாபத்திலிருந்து கொடுக்கப்படுவதாகும். ஆனால் பங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்ததாகும். முக்கியமாக சந்தை எதிர்காலத்தில் நடக்கும் விஷயத்தை இப்போதே பிரதிபலிக்கத் தொடங்கி விடும் என்பதை மறந்துவிடக் கூடாது. தற்போதைய நிலையில் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்த ஆர்.பி.ஐ. வட்டியை மேலும் அதிகரிக்கும் என்பதால் ஆட்டோ, ரியல் எஸ்டேட், வங்கி போன்ற துறைகளைச் சார்ந்த பங்குகளை டிவிடெண்டுக்காக மட்டும் வாங்கக் கூடாது. அதே போல், எண்ணெய் நிறுவனப் பங்குகளை வாங்கும் போது கச்சா எண்ணெய் விலையைப் பார்த்து வாங்க வேண்டும். மேலும், நிறுவனம் வழங்கி வரும் டிவிடெண்ட் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறதா என்பதையும் கவனித்து வாங்குவது நல்லது. டிவிடெண்ட் அறிவிப்பு வந்தவுடன் பங்கின் விலை மிகவும் அதிகரித்தால் அதனை துரத்தி வாங்கக் கூடாது. பங்கின் விலை 52 வார குறைந்தபட்ச விலை அருகிலேயே அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தால் வாங்கலாம்.

.அதிக டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனத்துக்கு எதிர்கால திட்டம் எதுவும் இல்லை என்ற கருத்து இருக்கிறது. இதை அறிந்து கொள்ள ‘டிவிடெண்ட் கவர்’ என்ற விகிதம் உதவும். இந்த விகிதம் அதிகமாக இருந்தால், அந்த நிறுவனம் லாபம் அனைத்தையும் டிவிடெண்டாகக் கொடுக்காமல் லாபத்தில் ஒரு பகுதியை எதிர்கால திட்டங்கள், சேமிப்புத் தொகையாக வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். இது மாதிரியான பங்குகளை டிவிடெண்டுக்காக வாங்கி, நீண்ட கால முதலீடாக வைத்துக் கொள்ளலாம்.

.முந்தைய வருடங்களில் டிவிடெண்ட் அறிவிப்பு எப்போது வந்தது, புக் குளோஸர் தேதி எது என்பதைக் கவனித்து அதற்கு ஏற்ப பங்குகளை வாங்கி லாபம் பார்க்கலாம். மிக முக்கியமாக டிவிடெண்ட் ரெக்கார்ட் தேதி, புக் குளோஸர் தேதியை தெரிந்து வைத்துக் கொண்டு, அந்தத் தேதிகளுக்கு முன்னரே விலை மாற்றத்தை ஆராய்ந்து வாங்கினால் கூடுதல் லாபம் சம்பாதிக்க முடியும். பொதுவாக, இந்தத் தேதிகள் நெருங்க நெருங்க பங்கின் விலை அதிகரிக்கத் தொடங்கும். அடுத்து டிவிடெண்ட் கொடுக்கும் தேதி அன்று பங்கு உங்கள் பெயரில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் டிவிடெண்ட் உங்களுக்கு கிடைக்கும்” என்ற லெட்சுமண ராமன் நாணயம் விகடன் வாசகர்கள் முதலீடு செய்து லாபம் பார்க்க அதிக டிவிடெண்ட் வழங்கி வரும் பத்து பங்குகளையும் அடையாளம் காட்டினார்.

.பஜாஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்

.இதன் முந்தைய பெயர் பஜாஜ் ஆட்டோ. வங்கி சாராத நிறுவனமாக பஜாஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் இயங்கி வருகிறது.

.பால்மர் லாறி அண்ட் கோ.

.பல்துறை நிறுவனமான இது உற்பத்தி மற்றும் சேவை துறையில் இருக்கிறது. பொதுத் துறை நிறுவனமான இது பேக்கேஜிங், கிரீஸ், சிறப்பு வகை ரசாயனங்கள், சரக்குப் போக்குவரத்து என பலவற்றில் பரந்து விரிந்திருக்கிறது.

.
கார்ப்பரேஷன் வங்கி

.பொதுத்துறை வங்கி. 100 ஆண்டுகளைக் கடந்த இதன் மொத்த வணிகம் 1,67,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. கிராமப் புறங்களில் தீவிரமாக வங்கிச் சேவையைக் கொண்டு சேர்த்து வருவதற்காக அண்மையில் விருது பெற்றிருக்கிறது.

.ஹெச்.இ.ஜி.

.உருக்கு உற்பத்தியில் பயன்படும் கிராபைட் எலெக்ட்ரோட்களை தயாரித்து வருகிறது. மேலும், வெல்டிங் பணிகளையும் மேற் கொண்டு வருகிறது. ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழைப் பெற்றுள்ள இந்த நிறுவனம், தன்னுடைய தயாரிப்பில் சுமார் 80 சதவிகிதத்தை 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

.பொதுத்துறை ஆயில் நிறுவனமான இது, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய் சந்தைப்படுத்துதல், ஆயில் எடுத்துச் செல்லும் குழாய்கள் பராமரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. 2009-10-ம் ஆண்டில் இதன் நிகர லாபம் 10,221 கோடி ரூபாய்.

.ஜே.கே சிமென்ட்

.சிமென்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனம். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் இந்நிறுவனம், வட இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலும், தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.

.
எஸ்.ஆர்.எஃப்.

.பல்துறை நிறுவனமான இது நைலான் தயாரிப்பில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். தாய்லாந்து, தென்ஆப்ரிக்கா, துபாய் போன்ற நாடுகளிலும் இயங்கி வருகிறது.

.டூரிஸம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

.அரசுத் துறை சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம். இதன் பங்கு மூலதனத்தில் பொதுத் துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் பங்குகள் குறிப் பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது.

.மங்களம் சிமென்ட்

.பி.கே. பிர்லா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனம். கடந்த 33 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிறுவனம் அண்மையில் ராஜஸ்தானில் ஆண்டுக்கு 7 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி திறன் கொண்ட ஜெர்மன் தொழில்நுட்பத்திலான ஆலையை அமைத்துள்ளது.

.நவபாரத் வென்ச்சர்ஸ்

.மின் உற்பத்தி, சுரங்கம், சர்க்கரை போன்ற வணிகத்தில் ஈடுபட்டு வரும் பல்துறை நிறுவனம். சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை விருதுகளை இதற்கு சி.ஐ.ஐ. வழங்கிச் சிறப்பித்துள்ளது. தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்காவி லும் இயங்கி வருகிறது.


நன்றி:- சி.சரவணன்

நன்றி:- நா.வி

கடல் கடக்கும் கறுப்புப் பணம்!இப்போது இந்தியர்கள் அதிகமாக உச்சரிக்கும் வார்த்தைகள் இரண்டே இரண்டுதான். ஒன்று 2-ஜி. இன்னொன்று கறுப்புப் பணம். 2-ஜி விவகாரமாவது ஓரளவுக்கு புரிந்துவிடுகிறது. ஆனால் இந்த கறுப்புப்பண விவகாரம்தான் தலை சுற்ற வைக்கிறது. எப்படி உருவாகிறது இந்த கறுப்புப் பணம்? அது எப்படி கடல் தாண்டிச் சென்றுவிடுகிறது? கடலுக்கு அப்பால் அந்தப் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் அந்த வங்கி அந்தப் பணத்தை என்ன செய்யும்? லாக்கரில் வைத்திருக்குமா அல்லது எதிலாவது முதலீடு செய்யுமா? முதலீடு செய்திருந்து அதில் லாபம் வந்தால் அந்த லாபத்திலிருந்து பங்கு கொடுப்பார்களா? அந்த லாபத்தை இங்கே இருந்து பெற்றுக்கொள்ள முடியுமா? இப்படி பல கேள்விகள் சாதாரண மக்கள் மனதில். இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விளக்கமாகப் பதில் சொன்னார் பிரபல ஆடிட்டரான எம்.ஆர். வெங்கடேஷ்.

”கறுப்புப் பணத்தின் ரிஷிமூலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்தியாவின் வரி வரலாற்றை கொஞ்சம் பார்க்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் தொழிற் துறைகளுக்கு விதிக்கப்பட்ட வரி அதிகமாகவே இருந்தது. சில சமயங்களில் 60 முதல் 80 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டுதான் லாபம் சம்பாதித்தன. அப்படிச் சம்பாதிக்கும் லாபத்தில் பெரும்பகுதியை அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டும் என்றால் யார்தான் கட்டுவார்கள்? லாபத்தைக் கணக்கில் காட்டினால்தானே வரி கட்ட வேண்டும்? பாதியை மட்டும் கணக்கில் காட்டி வரியைக் கட்டிவிட்டு, மீதியை அப்படியே வெளிநாட்டுக்குக் கொண்டு போனால் என்ன? இப்படி ஒரு யோசனை 40 ஆண்டுகளுக்கு முன்பே சில பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வர, பல ஆயிரம் கோடி ரூபாயை சத்தமில்லாமல் இங்கிருந்து சுவிட்ஸர்லாந்துக்குக் கொண்டு சென்று அங்குள்ள வங்கியில் போட்டுவிட்டன!

இன்று சிவப்பு!


ஆனால், 1990-க்குப் பிறகு தாராளமயமாக்கல் வந்ததைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதனால் வரி ஏய்ப்புக்காக பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லாமல் போனது. என்றாலும், வெளிநாட்டுக்குச் செல்லும் பணத்தின் அளவு மட்டும் குறையவில்லை. ஏன்?
தாராளமயமாக்கத்தின் விளைவாக வெளிநாட்டு முதலீடு இந்தியாவுக்கு எக்கச்சக்கமாக வர ஆரம்பித்தது. இதனால் தொழிற்துறை வளர்ச்சி புதிய வேகமெடுத்தது. இந்த தொழில் பெருக்கத்தின் காரணமாக அரசியல்வாதிகள் லஞ்சம் பெறுவதும் ஊழல் செய்வதும் அதிகரித்தது. பல விஷயங்கள் சட்டத்துக்கு உட்பட்டும் சில விஷயங்கள் சட்டத்தை ஏமாற்றியும் நடந்தன. கள்ளக்கடத்தல் பெருகியது. முக்கியமாக, போதைப் பொருட்கள் கடத்தலில் பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்க ஆரம்பித்தது.

ஊழலிலும் கள்ளக் கடத்தலிலும் சேர்த்த பணத்தை அர சாங்கத்துக்கு கணக்கு காட்ட முடியாது. கணக்கில் காட்டாத பணத்தை கையில் வைத்திருக்கவும் முடியாது. பின் என்னதான் செய்வது? 40 ஆண்டுகளுக்கு முன்பு வரி ஏய்ப்பு செய்ய தொழில் நிறுவனங்கள் கடைப்பிடித்த அதே வழியை அரசியல்வாதிகளும் கடத்தல் பிரமுகர்களும் பின்பற்றினார்கள். தங்கள் பணத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று சுவிஸ் வங்கிகளில் போட்டார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்குப் போனது வெறும் வரி ஏய்ப்பு  குற்றத்தை மட்டுமே செய்த பணம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாட்டுக்குப் போன பணம் லஞ்சம், ஊழல், போதை போன்ற பல பாவங்களைச் செய்ததன் மூலமாக உருவான பணம். அதனால்தான் அதை ‘சிவப்புப் பணம்’ என்றும் ‘குருதிப் பணம்’ என்றும் சொல்கிறார்கள்.


பணம் போனது எப்படி?

வெளிநாட்டுக்குப் பணம் போனது, வெளிநாட்டுக்குப் பணம் போனது என்கிறீர்களே, எப்படிப் போனது என்று நீங்கள் கேட்கலாம். இங்குள்ள ஒரு வங்கியில் 500 அல்லது 1,000 கோடி ரூபாயைக் கட்டி, அதை சுவிஸ் வங்கியில் கொண்டு போய் சேர்க்க முடியாது. அப்படிச் செய்தால் அரசாங்கத்துக்குத் தெரிந்துவிடுமே! பெட்டியில் பணத்தை நிரப்பி விமானம் மூலம் கொண்டு போனார்களா என்றால் அதுவும் இல்லை. காரணம், விமானத்தில் ஓரளவுக்கு மேல் பணத்தைக்  கொண்டு போக முடியாது. கப்பலில் போதைப் பொருட்களைக் கடத்துகிற மாதிரி பணத்தைக் கடத்தவும் முடியாது. வழியில் யாராவது கொள்ளை அடித்தால் அத்தனையும் போய்விடும். புயல் வந்தாலும் நாசமாகிவிடும். பிறகு எப்படித்தான் பணத்தைக் கொண்டு போனார்கள்?

ஹவாலா வங்கி!

இங்குதான் ஹவாலா என்கிற விஷயம் வருகிறது. ஹவாலாவைப் புரிந்து கொள்ள ஒரு வங்கி எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் இருக்கும் ஒரு வங்கியில் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள். ஒரு வாரம் கழித்து டெல்லிக்குப் போய் அதே வங்கியின் கிளையில் ஒரு லட்ச ரூபாயை எடுக்கிறீர்கள். சென்னையில் நீங்கள் போட்ட பணம் வேறு; டெல்லியில் நீங்கள் எடுத்த பணம் வேறு. சென்னை வங்கியில் நீங்கள் பணத்தைப் போட்டிருக்கிறீர்கள் என்பதை வங்கிக் கணக்கு எடுத்துச் சொல்லவும், டெல்லியில் உள்ள வங்கி உங்களுக்கு மறுக்காமல் பணம் தருகிறது. ஹவாலாவும் ஏறக்குறைய இதே மாதிரிதான் செயல்படுகிறது. அரசாங்கத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பணத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல ஒரே வழி ஹவாலாதான்.

இங்கும் அங்கும்!
உங்கள் கையிலிருக்கும் 100 கோடி ரூபாய் பணத்தை இங்குள்ள ஒரு ஹவாலா புள்ளியிடம் கொடுக்கிறீர்கள். அவர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, வெளிநாட்டில் இருக்கும் தனது நண்பரிடம் சொல்லி, சுவிஸ் வங்கியில் உங்கள் பெயருக்கு ஒரு ரகசிய கணக்கை ஆரம்பித்து, அதில் போடச் சொல்வார். அவரும் 100 கோடி ரூபாயை அதில் போட்டுவிடுவார்.

சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் இன்னொரு வருக்கு வேறுவிதமான பிரச்னை. அவர் கையில் இருக்கும் 100 கோடி ரூபாயை மறைத்து வைக்க விரும்புகிறார். அங்குள்ள ஹவாலா பேர்வழியிடம் அவர் அந்தப் பணத்தைக் கொடுக்க, அது இங்கே கச்சிதமாக வந்து சேர்ந்துவிடுகிறது. ஏறக்குறைய ஒரு வங்கி போலவே பக்காவாகச் செயல்படும் இந்த ஹவாலா நெட்வொர்க்கில் சேர உறுப்பினராக வேண்டியதில்லை; பணம்  கொடுத்தால் ரசீது கொடுக்கமாட்டார்கள். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் எல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது இந்த ஹவாலா பிஸினஸ்.


பணம், பணத்தை சம்பாதிக்கும்!

வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணம் அப்படியே சும்மா கிடக்காது. செயல்படாத மனிதனாலும் பணத்தாலும் எந்தப் பயனும் இல்லை. எனவே, சுவிஸ் வங்கியிலிருக்கும் பணம் மொரீஷியஸ் போனவுடன், துணிகளைச் சலவை செய்கிற மாதிரி அதுவும் சலவை செய்யப்பட்டு, அனைத்து அழுக்குகளும் (பாவங்கள்) கழுவப்பட்டு, மீண்டும் நம் நாட்டுக்கு வெள்ளையும் சொள்ளையுமாக வந்து சேர்கிறது. பங்குச் சந்தை, தொழில் வளர்ச்சி என பல துறைகளுக்குள் முதலீடா கிறது. இப்படி முதலீடாகும் பணம் கொழுத்த லாபத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் மொரிஷீயஸ் வழியாக சுவிஸ் வங்கிக்கே போய்விடுகிறது. ஒருவேளை அந்தப் பணம் சுவிஸ் வங்கியில் அப்படியே கிடந்தாலும் அதற்கு நிச்சயம் வட்டி கிடைக்கும். 100 கோடி ரூபாய்க்கு 2% ஆண்டு வட்டி என்றாலும் மாதத்துக்கு சுமார் 16 லட்சம் வட்டி கிடைக்குமே!

70 லட்சம் கோடி!

இப்படி வெளி நாட்டு வங்கிகளில் சேர்ந்திருக்கும் பணம் எவ்வளவு என்பதற்கு சரி யான புள்ளிவிவரம் நம்மிடம் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கு சொல்கிறார்கள். ஆனால், மிக மிகக் குறைத்து மதிப்பிட்டாலும் இரண்டு லட்சம் கோடி ரூபாயாவது நிச்சயமாக இருக்கும் என்பது என் கணிப்பு. இது ஒன்றும் சாதாரண பணமல்ல. 1850 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் பிரிட்டிஷ்காரர்கள் நம்மை சுரண்டிக் கொண்டு போன செல்வத்தின் அளவு சுமார் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர். கிட்டத்தட்ட ஒரு நூறு ஆண்டு காலம் இதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவின் நம் அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமாக எடுத்துச் சென்றிருக்கும் பணம் கிட்டத்தட்ட 1.4 ட்ரில்லியன் டாலர் (நம் மதிப்பில் சுமார் 70 லட்சம் கோடி ரூபாய்!).

இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் காரர்களையே விஞ்சிவிட்டோம் என்பது நமக்குக் கிடைத்த அவமானத்துக்குரிய பெருமை!


பயன்படாத பணம்!

அரசியல்வாதிகளும் கள்ளக்கடத்தல் பேர்வழிகளும் இங்கிருந்து பணத்தைக் கொண்டு போய் வெளிநாட்டில் முடக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. காரணம், இப்படிச் சேர்த்த பணத்தை நாமோ, நம் வாரிசுகளோ அனுபவிக்க முடியாது. சுவிஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்தவர், தன் வாரிசுகளிடம் அந்த விஷயத்தைச் சொல்லாமல் இறந்தால், அந்தப் பணம் அப்படியே போய்விடும். ஒருவேளை வாரிசுகளுக்குத் தெரிந்தாலும் அவர்களும் அரசின் கண்களில் சிக்காமல் அந்தப் பணத்தை பயன்படுத்துகிற அளவுக்கு செயல்படும் கில்லாடிகளாக இருக்க வேண்டும். ஆக, நமக்கும், நம் சந்ததிக்கும் பயன்படாத பணத்துக்கு மனிதர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா என்பதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் கிடக்கும் இந்த கறுப்பு – சிவப்புப் பணம் நம் அரசாங்கத் துக்கும் மக்களுக்கும் சேர வேண்டியது. அதை நம் நாட்டுக்கே கொண்டு வரவேண்டும் என பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், நம் அரசியல்வாதிகளோ ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, அந்தப் பணத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். ‘கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலைக் கொடுங்கள்’ என பொத்தாம் பொதுவாக சுவிஸ் வங்கியிடம் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். 100 பேர் கொண்ட பட்டியலைத் தயார் செய்து, ‘இவர்களின் பணம் உங்கள் வங்கியில் இருக்கிறதா?’ என்று கேட்டால், நிச்சயம் பதில் சொல்வார்கள். அமெரிக்க அரசாங்கம் அங்கு கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை இப்படித்தான் பிடித்தது. அமெரிக்காவுக்குத் தேவையான தகவல்களை சுவிஸ் வங்கி கொடுக்கும் போது நாம் கேட்டால் கொடுக்காதா என்ன? வெளிநாடுகளில் கிடக்கும் பணத்தை இங்கு கொண்டு வர சில சட்டதிட்டங்கள் தடையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இதெல்லாம் சால்ஜாப்புதான். மக்கள் நலனுக்காக இந்தச் சட்டங்களை மாற்றுவது தவிர வேறு வழியில்லை என்றால் மாற்றிவிடவேண்டியதுதானே?

வெளிநாடுகளில் இருக்கும் பணத்தை திரும்பக் கொண்டு வந்தால் மட்டும் போதாது. இனிமேலும் ஹவாலா மூலம் நம் பணம் வெளிநாடுகளுக்குப் போகாதபடிக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு முதலில் நாம் ஊழலை ஒழிக்க வேண்டும். இது நடக்கிற காரியமா என்று நீங்கள் நினைக்கலாம். மக்கள் மனம் வைத்தால் நிச்சயம் நடக்கும்.”

நன்றி:- ஏ.ஆர்.குமார்

நன்றி:- நா.வி