டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-03


‘‘எல்லாருக்குமே ‘ஹேர் டை’ சரிப்பட்டு வரும் என்று சொல்ல முடியாது.. சிலருக்கு அலர்ஜியை உண்டாக் கும் என்கிறாள் தோழி. இது உண்மையா? ஹெர்பல் ‘ஹேர் டை’களில்கூட கெமிக்கல் கலக்கிறார்களாமே? ஹேர் டை உபயோகிக்கலாமா, கூடாதா? தெளிவுபடுத்துங்கள் ப்ளீஸ்…’’

டாக்டர் நடராஜன், தோல் சிறப்பு நிபுணர், சென்னை:

‘‘கண்ணுக்கு மையிடுவது மட்டுமல்ல, கூந்தலுக்குச் சாயம் பூசுவதும் காப்பிய காலத் திலேயே இருந்திருக்கிறது. அப்போது, வீட்டில் தயாரித்த இயற்கையான சாயங்களையே உபயோகித்திருக்கிறார்கள். ஆனால், இப்போது யாருக்கும் அப்படி சாயம் தயாரிக்க தெரிவதில்லை. அதற்கு நேரமும் இல்லை.

இயற்கை, கெமிக்கல், அக்ரிலிக் என்று மூன்று வகையான ‘ஹேர் டை’கள் கடைகளில் கிடைக்கின்றன. மருதாணி முதல் வகையைச் சேர்ந்தது. அலர்ஜி போன்ற தொல்லைகள் தராதது. ஆனால், இதைப் பயன் படுத்தினால் தலைமுடி சிவப்பாக மாறிவிடுவதால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும். கெமிக்கல் மற்றும் அக்ரிலிக் ‘ஹேர் டை’களில் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. சிலருக்கு டை அடித்துக் கொண்டு வெயிலில் போனால், முகம், கண், புருவம் எல்லாம் வீங்கிப் போய்விடும். தலை அரிக்கும். கொப்புளம் வரும்.

இப்படி அலர்ஜி ஏற்பட்டால், ஒன்றும் செய்ய முடியாது. அந்த ப்ராண்டைத் தவிர்த்து வேறு ப்ராண்ட் மாற்ற வேண்டியதுதான். அலர்ஜி ஆனால்தான் மாற்ற வேண்டுமே தவிர, விளம்பரங்களில் மயங்கி அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு சிலர், ‘முப்பது வருஷமா இதே ப்ராண்டைத்தான் உபயோகிக்கிறேன் டாக்டர்… திடீர்னு இப்போ அலர்ஜி ஆகுது’ என்று வருவார்கள். ‘நீங்கள் ப்ராண்டை மாற்றவில்லை. ஆனால், வியாபாரத்துக்காக, அந்த கம்பெனி, அதில் சேர்க்கிற பொருள்களை மாற்றியிருக்கிறது’ என்பேன்.
நடராஜன்

ஆம்! முப்பது வருஷத்துக்கு முன்பிருந்த கம்பெனிகள் இப்போ தும் இருக்கின்றன. ஆனால், பேஸ்ட்டிலிருந்து சோப்பு வரை அன்று இருந்த அதே தரத்திலும் அதே உட்பொருள்களுடனும்தான் இருக்கின்றனவா என்றால், இல்லை. அப்புறம், அலர்ஜி ஆகாமல் என்ன செய்யும்? ஹெர்பல் ‘ஹேர் டை’கள் கெமிக்கலைவிட கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், இவையும் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். ஏனெனில், நிறத்துக்காகச் சில கம்பெனிகள் கெமிக்கல் கலக்கின்றன.

அதற்காக, ‘ஹேர் டை’ உபயோகிக்கவே கூடாது என்றில்லை. உபயோகிக்கலாம். ஆனால், அளவாக உபயோகிக்க வேண்டும். ‘ஹேர் டை’ போடுவதற்கான கால இடைவெளியை முடிந்த அளவுக்குத் தள்ளிப் போடலாம். எந்த ‘ஹேர் டை’ வாங்கினாலும் அதிலிருந்து ஒரு துளி எடுத்து, காதின் பின்புறம் வைத்து, இரண்டு மணி நேரம் விட்டு, ஏதேனும் அரிப்பு, கொப்புளம், தடிப்பு வருகிறதா என்று பார்த்து ஒரு பிரச்னையும் இல்லையெனில், உபயோகிக்கலாம் (எல்லா ‘ஹேர் டை’ பாக்கெட்களிலும் பொடி எழுத்துக்களில் இந்தக் குறிப்பைப் போட்டிருப்பார்கள்!).

இளம்வயதில் இளநரை ஏற்பட்டு டை போடுகிறவர்கள் எனில் பரவாயில்லை. சற்றே வயதானவர்கள் அடிக்கடி டை போட்டு, வம்பை விலைகொடுத்து வாங்கவேண்டாம். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, நரை முடிக்கென்று சிறப்பு மரியாதை இருக்கிறது என்பது என் கருத்து…’’
_______________________________________________________

‘‘என் வயது 48. காது இரைச்சல், காது மந்தம் என்று ஈ.என்.டி. டாக்டரிடம் போனேன். எக்ஸ்-ரே பார்த்த டாக்டர், ‘செவியின் பின்புறம் எலும்பு வளர்ந்துள்ளது. பரம்பரை வியாதிதான் இந்த செவிட்டுத்தன்மை. ஆபரேஷன் செய்யவேண்டும்’ என்றார். இது என் மகளையும் பாதிக்குமா? மருந்து, மாத்திரை, காது சொட்டு மருந்து மூலம் குணப்படுத்த முடியாதா? காது கேட்கும் கருவி உபயோகப்படாதா? என் வயதுக்கு அதை நான் பொருத்த முடியுமா? ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும்? மூளை நரம்பு இதனால் பாதிக்கப்படுமா? இதிலேயே இன்னொரு பிரச்னை… நேருக்குநேர் உட்கார்ந்து பேசினால் காதில் விழுகிறது. பக்கவாட்டில் உட்கார்ந்து பேசினால்தான் விழுவதில்லை!’’

டாக்டர் கே.ஆர். கண்ணப்பன், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், மதுரை:

‘‘உங்களுடைய காது இரைச்சல், காது மந்தத்துக்குக் காரணம் ‘ஓடோஸ்க்ளிரோசிஸ்’ (Otosclerosis) என்கிற பிரச்னையாக இருக்கும். நடுச்செவியில் உள்ள ஸ்டேப்ஸ் என்கிற எலும்பின் அசைவுத்தன்மை நின்றுவிடுவதுதான் இந்தப் பிரச்னை. இதற்குக் காரணம், இந்த எலும்பின் முக்கியப் பகுதியைச் சுற்றிலும் எலும்பு வளர்ந்து, அடைத்துவிடுவதுதான். காது நுண் அறுவை சிகிச்சை செய்வதுதான் இதற்கான நிரந்தரத் தீர்வு. இந்த சர்ஜரியைச் செய்யும்போதே காது நன்றாகக் கேட்கத் துவங்கிவிடும். எலும்பு மறுபடியும் வளராது.

நோயின் தன்மையைப் பொறுத்தே இதற்கான ஆபரேஷன் செலவை நிர்ணயம் செய்ய முடியும். ஆபரேஷனுக்காக, மருத்துவ மனையில் மூன்று நாட்கள் வரை தங்கவேண்டி வரும். இதனால் மூளை நரம்பு பாதிக்காது. இது பரம்பரை வியாதி என்பதால், உங்கள் மகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

காதுக்குக் கருவி பொருத்து வது ஒலியைப் பெருக்கிக் கொடுக்குமே தவிர, நோய்க்கு குணம் தராது (காதுக்குக் கருவியை எந்த வயதிலும் பொருத்தலாம்). மாத்திரைகளும் நோயின் தாக்கத்தை ஓரளவு குறைக்குமேயொழிய முழுமையான தீர்வு தராது.

நேரில் உட்கார்ந்து பேசும்போது காது கேட்பதற்கும் பக்கவாட்டில் பேசினால் கேட்காமல் போவதற்கும் காரணம் உங்கள் காதல்ல. நேரில் உட்கார்ந்து பேசுகிறவரின் வாயசைவை வைத்து, நீங்கள் அவர் பேசுவதை அனுமானிக்கிறீர்கள். அதுவே பக்கவாட்டில் எனில், முடிவதில்லை!’’
____________________________________________________________________________________________

‘‘என் வயது 20. எனக்கு முடி ரொம்பவும் கொட்டுகிறது. பொடுகு இருக்கிறது. முன்புறமும் காதின் அருகிலும் ரொம்ப கொட்டுகிறது. நான் தற்சமயம் இரண்டு வகை பொடுகு ஸ்பெஷல் ஷாம்புகளைக் கலந்து போடுகிறேன். இதுதவிர, வாரத்துக்கு ஒரு தடவை நல்லெண்ணெய் தடவி, ஒரு குறிப்பிட்ட பிராண்ட் சீயக்காய் போட்டுக் குளிக்கிறேன். இருந்தும் முடி கொட்டுவது குறையவில்லை. அழகு நிலையத்துக்குப் போனபோது ஹென்னா போடச் சொன்னார்கள். ஹென்னா போட்டால் முடி கொட்டாதா? ஹென்னா போட்டால், என்ன ஷாம்பு போட வேண்டும்? நெல்லிக்காய் கலந்ததென்று விற்கப்படுகிற ஹேர் ஆயில் உபயோகிக்கலாமா? இது செப்டிக் ஆகுமா? என் கவலையைப் போக்க, வழி சொல்லுங்கள்…’’

டாக்டர் சி.முருகன், தோல் நோய் சிகிச்சை நிபுணர், மதுரை:

‘‘ரத்தசோகை, தைராய்டு பிரச்னை, மனஅழுத்தம், பொடுகு, தண்ணீரின் தன்மை, கர்ப்பகாலம், அதிகப்படியான மாத்திரைகளைச் சாப்பிடுவது, ஹார்மோன் ஏற்ற இறக்கம் போன்றவை முடி கொட்டுவதற்கான பொதுவான காரணங்கள். இதில் ஏதாவது ஒன்றுகூட உங்களின் முடி உதிர்வதற்குக் காரணமாக இருக்கும். நீங்கள் குறிப்பாக முன்மண்டையிலும் காதின் பின்புறத்திலும் அதிகமாக முடி கொட்டுவதாகக் குறிப்பிட்டிருப்பதால், அந்த இடங்களில் வெளிப்புறத்தில் ஏதேனும் புண் அல்லது அலர்ஜி இருக்க வாய்ப்புண்டு.

தோல் நோய் சிறப்பு மருத்துவரிடம் காண்பித்து, நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை எடுக்க வேண்டும். மற்றபடி, முடி உதிர்வது என்பது எல்லோருக்கும் நிகழ்வதுதான். சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் ஐம்பது முடிகள்வரை உதிரும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின் றன. அதேபோல், இயற்கையாகவே புதுமுடியும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

உங்களுக்கு பொடுகு இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தீர்கள். பொடுகு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள, வாரத்தில் இருமுறை கட்டாயமாக தலைக்கு குளிக்க வேண்டும். ஏதேனும் ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்பு (Anti dandruff shampoo) உபயோகிக்கலாம். ஷாம்பு போட்டபின் தலையை மிக நன்றாக தண்ணீர்விட்டு அலசுவது முக்கியம். இத்துடன் தினமும் சாதாரண தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதே போதுமானது.

பல ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களை நீங்கள் மாறி மாறி உபயோகிப்பது, உங்களின் குழப்பமான மனநிலையைக் காட்டுகிறது. மறந்து விடாதீர்கள். மன அழுத்தமும் முடி உதிர்வதற்கான காரணம்தான்! தவிர, ஷாம்புகளை மாற்றிக் கொண்டே இருப்பதும் வெவ்வேறு ஷாம்புகளை கலந்து உபயோகிப்பதும்கூட தவறுதான்.

ஹென்னா போடுவது பற்றிக் கேட்டிருந்தீர்கள். மருதாணி நல்ல ஹேர் கண்டிஷனர். கடைகளில் கேசத்துக்கான ஹென்னா பவுடர் என்று கேட்டால் கிடைக்கிறது. அதிலேயே உபயோகிப்பதற்கான முறையும் விளக்கப்பட்டிருக்கிறது. அதைப் பின்பற்றலாம். தலையில், ஏற்கெனவே ஏதாவது புண் அல்லது அலர்ஜி இருந்தால், ஹென்னாவைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், ஹென்னா பவுடரில் ஏதேனும் கெமிக்கல் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

என்னதான் நாம் வெளிப்புறத்தைப் பராமரித்தாலும், உடலின் உள் ஆரோக்கியமும் முக்கியமானது. சத்துள்ள உணவு வகைகளைச் சாப் பிடுங்கள். இரும்புச் சத்து, மற்றும் கால்சியம் அதிகமுள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் அருந்துவதையும் பேரீச்சம்பழம் சாப்பிடுவதையும் தினசரி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.’’

__________________________________________________________________________________________________

‘‘எனக்குத் திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. என் வயது 31. நார்மல் டெலிவரியில் மகள் பிறந்தாள். பிரசவம் ஆகி 45 நாட்கள் கழித்து, காப்பர்|டி போட்டுக் கொண்டேன். சிறிது காலம் கழித்து, ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அதை எடுத்துவிட்டேன். வேறெந்த கர்ப்பத் தடையையும் உபயோகிக்கவில்லை. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியும் கருத்தரிக்கவே இல்லை. டாக்டரிடம் காண்பித்ததில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொன்னார். 8, 9 மாதம் காத்திருந்தும் பலனின்றி வேறொரு டாக்டரிடம் காண்பித்ததில் லேப்ராஸ்கோபிக் செய்யவேண்டும் என்றார். ஆனால், நான் செய்யவில்லை. எனக்கு கரு உருவாகாததற்கு என்ன காரணம்? காப்பர்-டி போட்டதால் இன்ஃபெக்ஷன் ஆகியிருக்குமா? மாதவிலக்கு சிலசமயம் தள்ளிப் போகிறது.’’


டாக்டர் பூங்கோதை செந்தில், மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:

‘‘முதல் குழந்தை பிறந்த பிறகு, இரண்டாவது குழந்தை பிறக்காமல் இருப்பதை ‘செகண்டரி இன்ஃபெர்டி லிட்டி’ என்று கூறுவோம். உங்களுக் கும்கூட இந்தப் பிரச்னையாகத்தான் இருக்கும். காப்பர்-டி உபயோகித்தது, இன்ஃபெக்ஷன் ஆனது உள்ளிட்ட பல இதற்குக் காரணமாக அமையும்.

முதல் குழந்தையே பிறக்காமல் இருப்பவர்களுக்கு உரிய காரணங்களும் இந்தப் பிரச்னைக்குப் பொருந்தும். அதாவது முதல் குழந்தை பிறந்த பிறகு, உங்கள் கணவருக்கு ஏதாவது குறை ஏற்பட்டிருக்கலாம். அதற்கு முப்பது சதவிகித வாய்ப்பு உள்ளது. அதனால், தகுந்த மருத்துவரை அணுகி, உங்கள் கணவரின் உடல்நிலையைப் பரிசோதித்து, குறையிருந்தால் சிகிச்சை எடுப்பது அவசியம். நீங்களும் லேப்ராஸ்கோபிக் அறுவைசிகிச்சை செய்து பார்க்கலாம். இதனால், எந்தப் பிரச்னையும் வராது. பயப்பட வேண்டாம். இதன் மூலம், கருத்தரிக்காததற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருந்தாலும் தெரியவரும். அதன்பின் மகப்பேறு மருத்துவரை அணுகி, தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி, மாத விலக்கு தள்ளிப்போவது பற்றிக் கவலைப்பட வேண்டாம்.’’

********************************************************************

நன்றி:-டாக்டர் நடராஜன், தோல் சிறப்பு நிபுணர், சென்னை:
நன்றி:-டாக்டர் சி.முருகன், தோல் நோய் சிகிச்சை நிபுணர், மதுரை:
நன்றி:-டாக்டர் பூங்கோதை செந்தில், மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:

நன்றி:- அ.வி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-01

டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-02

டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-03

#########################################################

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s