தொகுப்பு

Archive for மே 18, 2010

நீ தந்து அருள்வாயே! – அஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை.


என்னைத்தான் படைத்தவனே! என்றென்றும் நிலைப்பவனே!

என் தேவை நானுரைப்பேன் நீ தந்து அருள்வாயே!

உருவில்லா உள்ளமையே உன்னை நான் உணர்ந்து கொள்ளும்

உள்ளம் தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

நாள் தோரும் நபிமீது நல்ஸலவாத்தை நான் நவிலும்

நாவைத்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

வாழும் காலமெல்லாம் வான்மறையை வாசிக்கின்ற

வாய்ப்பைத்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

ஈகைகுணம் மிகைத்திருக்கும் இக்லாஸில் நிலைத்து நிற்கும்

ஈமானை வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

அறிந்திடவே உன்னை நான் அறியவேண்டும் என்னை நான்

அறிவைத்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

அறிவார்ந்த சான்றோர்கள் ஆன்மீக வலிமார்கள்

அருகாமை வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

நன்மை செய்ய தூண்டுகின்ற நலமே செய்ய நாடுகின்ற

நன்பனைத்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

கன்னியரை கண்டவுடன் கண்கள் கவிழ்ந்து கொள்ளுகின்ற

கற்பைத்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

பணம் காசு குவிந்தாலும் பாரட்டு வந்தாலும்

பணிவைத்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

பொல்லாத பழிச்சொல்லும் பொதியாக சமைந்தாலும்

பொறுமைதான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

துன்பங்கள் துய்த்தபோதும் துவளாமல் இருக்கும் வண்ணம்

துணிவைத்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

இனைவைக்கும் என் நண்பன் இஸ்லாத்தில் இணைந்துகொள்ள

இசைவைத்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

இன்பம் துன்பம் இரண்டிலுமே இணைந்தேதான் வாழும்வண்ணம்

இல்லாளை வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

கண் மனைவி மக்களையே கண்டு குளிர்ச்சி அடைந்து கொள்ள

கருணைதான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

வாக்கப்பட்டு வந்தவளும் வாஞ்சையுடன் வாழ்த்துகின்ற

வாழ்க்கைதான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

மலக்குல் மவ்த்தை வரவேற்கும் மறையும் எந்தன் துணையிருக்கும்

மரணம்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

மண்ணறையின் காலமெல்லாம் மாப்பிள்ளைபோல் நானுறங்க

மன்னிப்பைத்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

நிகழும் மஹ்ஷரிலே நிந்தன் அர்ஷின் அடியினிலே

நிழலைத்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

தாஹாநபி அள்ளித்தரும் தடாகத்தில் நீரருந்தி

தாகம் தீர வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

சுவையான உணவும் வரும் சுத்தமான பானம் வரும்

சுவனம்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

சொக்கவைக்கும் ஹூருல்ஈன்கல் சொந்தமாக கொள்ளும்

சொர்க்கம்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

உலகஆசை துறக்க வேண்டும் உன்னில் நான் இறக்கவேண்டும்

உண்ணைத்தான் வேண்டுகிறேன் நீ தந்து அருள்வாயே!

நன்றி- அஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை.