தொகுப்பு

Archive for ஜூன், 2010

பகுதி-1 கனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்

ஜூன் 30, 2010 1 மறுமொழி

`பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று ஆத்திச்சூடியில் பாடி இருக்கிறார் தமிழ் மூதாட்டி அவ்வையார். அந்த அளவுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு வலியுறுத்தி இருந்தார்.

எந்த ஒரு மாணவரின் கல்வி கற்கும் ஆசையும் பணம் இல்லை என்பதால் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் மாணவர்கள் கல்விக்கடன் வசதி திட்டம். வங்கிகள் மூலம் மாணவர்கள் கடன் பெற்று அதன் மூலம் தங்களது கல்வி அறிவைப்பெறும் இந்த திட்டம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் மூலம் குறைந்த வருமானம் உள்ள பெற்றோர்களால் கூட தங்களது பிள்ளைகளுக்கு உயர் கல்வி அளிக்க முடிகிறது. உயர் கல்வி என்பது வாழ்க்கையில் நாம் செய்யும் சிறந்த முதலீடு ஆகும். மேலும் கல்விக்கட்டணங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில் சாதாரண குடும்பத்தினர் மட்டுமின்றி நடுத்தர குடும்பத்தினரும் தங்களது குழந்தைகளின் உயர்கல்விக்காக கல்விக்கடன் பெற வங்கிகளை அணுகும் நிலை உருவாகி இருக்கிறது.

இளைஞர்களின் கனவான உயர்கல்வியைப்பெற உதவி செய்யும் வங்கிகள் வழங்கும் கடன் திட்டம் குறித்தும், அந்த கடனை பெறுவதற்கு தேவையான தகுதிகள் எவை என்பது குறித்தும் இந்த மினித்தொடரில் காண்போம்.

கல்விக்கடன் திட்டத்தை மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி இந்திய வங்கிகள் கூட்டமைப்பு 2004 ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டது. இந்தக்கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம், தகுதியான, படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு, உயர் கல்வி பயில தேவையான பண உதவியை கடனாக வழங்கி, இந்தியா அல்லது வெளிநாட்டில் கல்வியை தொடர வழிவகை செய்வது ஆகும்.

வங்கிகள் வழங்கும் கல்விக்கடன் குறித்த பொதுவான தகவல்கள் வருமாறு:-

1) கல்விக்கடன் யாருக்கு கிடைக்கும்?….

* இந்தியராக இருக்க வேண்டும்.

* எந்தக்கல்லூரியில் சேர்ந்து படிக்க இருக்கிறாரோ அந்தக்கல்லூரியின் சேர்க்கை அனுமதி கடிதம் (அட்மிஷன்) பெற்றிருக்க வேண்டும்.

* பொறியியல், மருத்துவம், நிதி நிர்வாகம் உள்பட அனைத்து வித பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு கல்விக்கடன் அளிக்கப்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டயம் (டிப்ளமோ) படிப்புக்கும் கல்விக்கடன் அளிக்கப்படும்.

* எந்தக்கல்வி நிலையத்தில் சேர இருக்கிறீர்களோ அந்தக்கல்வி நிறுவனம் அரசு அங்கீகாரம் அல்லது அரசு அனுமதி பெற்றதாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு மாணவர் என்ஜினீயரிங் கல்வியில் சேரப்போகிறார் என்றால் அவர் தேர்ந்து எடுத்துள்ள கல்லூரி ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி அமைப்பின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இதுபோல ஒவ்வொரு கல்வியும் சம்பந்தப்பட்ட அரசு அமைப்பு அல்லது பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே வங்கிக்கடன் கிடைக்கும்.

* மாணவர் தான் சேரப்போகும் படிப்பிற்கு முந்தைய படிப்பில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். அதாவது என்ஜினீயரிங் படிப்பில் ஒரு மாணவர் சேருவதாக இருந்தால் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எடையைக் குறைக்கப் போராட்டமா?


நீங்கள், கவனமாக உணவு உண்டாலும், உடற்பயிற்சிக் கூடத்தில் மணிக்கணக்கில் செலவிட்டாலும் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா?

உங்களின் எடை ஒருகட்டத்துக்கு மேல் குறையாமல் நின்று விட்டதா? அதற்கு, நீங்கள் இதுவரை அறியாத ஓர் உள்காரணம் இருக்கலாம். எதனால் எடை கூடுகிறது என்று தெரியாத சில நிலைகளுக்கான காரணங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்…

`ஹைப்போதைராய்டிசம்’:

`ஹைப்போதைராய்டிசம்’ என்றால், உங்கள் உடல், மிகக் குறைவான அளவு தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது என்று அர்த்தம். நல்ல உடற்செயலியலுக்கு தைராய்டு ஹார்மோன் அவசியம். “உங்கள் உடம்பு, குறைவான தைராய்டு ஹார்மோனை சுரந்தால், உங்களின் அடிப்படையான செயல் விகிதமும் குறையும்.

அந்நிலையில் நீங்கள் என்ன சாப்பிட்டாலும் அது கூடுதல் கலோரிகளாகி எடை கூடும்” என்கிறார்கள். `ஹைப்போதைராய்டிசத்துக்கு’ மரபணு ரீதியானது உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வழக்கமாக இதற்கான சிகிச்சையில் ஒரு `டோஸ்’ தைராய்டு ஹார்மோன் அளிப்பது அடங்கும்.

`இன்சுலின்’ எதிர்ப்பு:

இன்சுலினை உடம்பால் கிரகிக்க முடியாமையும், அதைக் கொண்டு குளுக்கோஸை சிதைக்க முடியாமையும் `இன்சுலின்’ எதிர்ப்புக்குக் காரணமாகின்றன. அதாவது உங்கள் உடலில் அதிகமான குளுக்கோஸ் சேர்ந்து, எடை அதிகரிப்புக்குக் காரணமாகிறது. “ரத்த சர்க்கரை அளவைக் கீழே கொண்டு வருவதற்கு இயல்பான ஒருவருக்கு 10 `யூனிட்கள்’ இன்சுலின் தேவை என்றால், இன்சுலின் எதிர்ப்பு உடைய ஒருவருக்கு 30 முதல் 40 யூனிட்கள் இன்சுலின் தேவை.

மற்றொரு வேடிக்கையான முரண்பாடு, இன்சுலின் எதிர்ப்புக்கு ஒரு முக்கியக் காரணம், அதிக எடை. வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்புதான் இன்சுலின் எதிர்ப்புக்கு ஒரு முக்கியக் காரணமாகிறது. எனவே, பெருத்த தொந்தி அல்லது இடுப்பு அளவு 90 செ.மீ.க்கு மேல் இருப்பவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஒரு கெட்ட செய்தி: பெரும்பாலான இந்தியர்கள் இன்சுலின் எதிர்ப்பை அடையும் தன்மையுடன் இருக்கிறார்கள்.

ஒரு நல்ல செய்தி: உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் பெரும்பாலானவர்களால் இதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

அடிப்படை உடற்செயலியல் விகிதம்:

அடிப்படை உடற்செயலியல் விகிதம் (`பேசல் மெட்டபாலிக் ரேட்’- `பி.எம்.ஆர்’) என்பது உங்கள் உடல் ஓய்வில் இருக்கும்போது எவ்வளவு கலோரிகள் செலவழிக்கப்படுகின்றன என்கின்ற அளவாகும். உங்கள் உடம்பில் என்ன வேகத்தில் உணவு செரித்துக் கிரகிக்கப்படுகிறது என்று நிர்ணயிப்பது பி.எம்.ஆர். ஆகும். எனவே பி.எம்.ஆர். அளவு குறைவாக இருந்தால் விரைவாக எடை கூடும், கூடுதல் எடையைக் குறைப்பதும் கடினமாகும். சிலருக்கு உடற்செயலியல் விகிதம் மரபு ரீதியாகவே குறைவாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களின் உடற் செயலியல் விகிதத்தைக் கூட்டிக்கொள்ள அன்றாடம் உடற்பயிற்சி செய்வது அவசியம். `நீங்கள் அதிகாலையில் நடைப் பயிற்சி செய்வதால் அதிக கலோரிகளை எரிக்காமல் இருக்கலாம், ஆனால் அந்த சுறுசுறுப்பின் தாக்கம் நாள் முழுவதும் இருக்கும்’ என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி:-தினத்தந்தி

அழகில் வருதே, அசத்தல் வருவாய்!-ஆர்.ரெங்கராஜ் பி.செந்தில்நாயகம்வீட்டு உள் அலங்காரத் தொழிலில் இருக்கும் கோதண்டராமன் தம்பதி!

ள் பாதி, ஆடை பாதி என்பார்கள்… அலங்காரம் எத்தனை முக்கியமானது என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் பழமொழி! இது ஆளுக்கு மட்டுமல்ல… வீட்டுக்கும் பொருந்தும்.

வீட்டுக்குள் நுழையும்போதே, விருந்தினர்கள் நம்முடைய குணத்தைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு மனிதர்களின் நுட்பமான உணர்வுகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது வீட்டு அலங்காரம். தங்கள் ரசனையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இருப்பதால், எல்லோருமே இப்போது வீட்டின் உள்அலங்காரத்தில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். அதனால், இன்டீரியர் டெக்கரேஷன் என்பது இப்போது நல்ல வரவேற்புள்ள தொழிலாக இருக்கிறது.

கொஞ்சம் கலை ரசனையும், ஆட்களை வைத்து மேற்பார்வை செய்யும் திறமையும் இருந்தால் போதும்… நீங்களும் இந்தத் தொழிலில் சிறப்பாகப் பிரகாசிக்கமுடியும்.

பல போட்டியாளர்கள் இருக்கிறார்களே என்பதைப்பற்றிக் கவலை வேண்டியதில்லை. இதில் கவனிக்க வேண்டியதே வாடிக்கையாளர்களின் திருப்தி, திருப்தி, திருப்தி… மனதுக்குப் பிடித்த வகையில் அழகான பொருட்ளையும் நம்பிக்கையான சர்வீஸையும் ஒருவருக்குக் கொடுத்தால் போதும். அவரே உங்கள் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவார். தரமும் நேர்த்தியும்தான் இத் தொழிலின் தாரகமந்திரம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

வாடிக்கையாளர் யார்?

புது வீடு வாங்குபவர்கள் மட்டுமல்ல… வீட்டை புதுப்பிப்பவர்கள், அழகுபடுத்த நினைப்பவர்கள், அலுவலகங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்கள், பள்ளிக்கூடங்கள், நகைக்கடைகள், ஆஸ்பத்திரிகள் என எல்லையில்லாமல் பரந்து விரிந்து கிடக்கின்றன உங்கள் வாடிக்கையாளர் வட்டம்! தொழில் அதிபர்கள் முதல் தனியார், அரசு அதிகாரிகள் வரை அனைவரும் இதில் அடங்குவர்.

எவ்வளவு முதலீடு தேவைப்படும்?

உங்கள் கற்பனைத்திறனும் கடின உழைப்பும்தான் முதல் முதலீடு. அத்துடன் பொருட்கள் கிடைக்கும் இடம், விலை, போன்றவற்றைத் தெரிந்தும், சாம்பிள்களை(கேட்லாக்)கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும். மொத்த வியாபாரம் செய்பவர்களுடன் நன்கு பழகிக்கொள்வது உபயோகமாக இருக்கும். மற்றபடி பெரிய அளவில் அலுவலகமோ, இடவசதியோ தேவையில்லை. உங்களைத் தொடர்புகொள்ள ஒரு தொலைபேசி எண் இருந்தால் போதும். அதோடு, ஒரு ஆர்டரின்போது முதலில் பொருட்கள் வாங்க சில ஆயிரங்களைக் கையில் வைத்துக்கொண்டால் நல்லது.

என்ன மாதிரியான வேலை இது?

வீட்டை அழகுபடுத்துவதுதான் அடிப்படையான தேவை என்றாலும் இதில் பலவகைகள் இருக்கின்றன. வீட்டுச் சுவர்களுக்கு ஏற்ற வண்ணங்களில் பெயின்ட் அடிப்பது, அதற்கு ஏற்றமாதிரி திரைச் சீலைகள், கட்டில், சோபா விரிப்புகள் போன்றவற்றைத் தைத்துக்கொடுப்பது, அறைக்கு அழகுசேர்க்கும் விதமாக பூ ஜாடிகள், அலங்கார சுவர் ஓவியங்கள், சின்னச் சின்ன ஸ்டாண்ட்கள் போன்றவற்றை அமைத்துக்கொடுப்பது, முக்கியமாக மிகவும் பயனுள்ள வகையில் சமையலறையை உருவாக்கிக்கொடுப்பது என்று எல்லாமே இன்டீரியர் டிஸைனிங்தான்.

மேற்கூரைகளுக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கொண்டு டிஸைன் அமைப்பது போன்ற பெரிய வேலைகளை ஆரம்பத்தில் செய்யவேண்டாம். கொஞ்சம் அனுபவம் கிடைத்தபிறகு அதைத் தொடுவது நல்லது.

சுவர்களுக்கான வண்ணத்தைப் பொறுத்த வரையில், எப்போதுமே வெளிர் நிறங்களையே தேர்வு செய்யுங்கள். அடத்தியான வண்ணங்கள் அறையை இருட்டாகக் காட்டும். இப்போது வெளிப்புறச் சுவர்களுக்கு அடர்த்தியான வண்ணங்களைப் பயன்படுத்துவது ஃபேஷனாகி வருகிறது. வாடிக்கையாளரின் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப வண்ணம் பூசிக் கொடுக்கவேண்டும்.

அதேபோல, விதவிதமான பெயின்ட்கள் இருக்கின்றன. வாடிக்கையாளரின் பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில் வண்ணம் பூசிக்கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கான பெட்ரூம் என்றால், வண்ணப் பூச்சுடன் சேர்த்து கார்ட்டூன் உருவங்கள், விலங்குகள் படம் போட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொடுக்கலாம். குழந்தைகள் பயன்படுத்தும் பாத்ரூமிலும் கார்ட்டூன் உருவங்கள் கொண்ட டைல்ஸ்களைப் பதித்துக்கொடுக்கலாம்.

இந்த சுவர் வண்ணங்களுக்கு ஏற்ற நிறங்களில் கதவு, ஜன்னல் களுக்கான திரைச் சீலைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை யும் அமைக்கவேண்டும். துணிகள் விற்கும் கடைகளிலேயே இதற்கென டெய்லர்கள் இருக்கிறார்கள். கதவு, ஜன்னல் திரைக்கான துணிகள் பல விதங்களிலும் பல விலைகளிலும் கிடைக்கின்றன.

படுக்கை அறை விரிப்புகள், தலையணை உறை களுக்கான கலரை சுவரின் வண்ணத்தை விட சற்று திக்கான கலரில் தேர்ந்தெடுக்கவேண்டும். குழந்தை களுக்கான அறையில் உள்ள மெத்தைக்கும், தலையணைக்கும் கார்ட்டூன், பொம்மைகள் உள்ளவாறு செலக்ட் பண்ணவேண்டும். ஃபர்னிச்சர் இன்டீரியர் என்பதும் இதேபோல தனிதுறைதான்.

எப்படி வேலை வாங்குவது?

மேற்சொன்ன வேலைகள் அனைத்துக்கும் தின சம்பளத்துக்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதனால், தனியாக வேலையாட்களை வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதேசமயம், ஆரம்பத்தில் அவர்களை நேரடியாக வைத்து வேலை வாங்குவதும் கடினம். எனவே தின சம்பளம் எவ்வளவு என ஒன்றுக்கு நாலு இடத்தில் விசாரித்து, அதன் அடிப்படையில் வேலையை கான்ட்ராக்ட்டாக அந்தத்துறையில் அனுபவம் பெற்றவர்களிடம் ஒப்படைத்து விடுவது மிகவும் நல்லது. அவர்கள் வேலை செய்யும்போதே வேலைத்திறன் மற்றும் சிக்கல்களை அறிந்துகொண்டு பிறகு நேரடியாக ஆட்களை அமர்த்தி வேலை வாங்கலாம்.

அதேபோல, வாடிக்கையாளரிடம் டிஸைனிங் பற்றித் தெளிவாகப் பேசிக்கொள்ளவேண்டும். தேவைப்பட் டால், அட்வான்ஸ் மற்றும் பணம் தரும் விவரம் மற்றும் வேலை குறித்து அக்ரிமென்ட் கூட போட்டுக் கொள்ளலாம். அது இரு தரப்பினருக்கும் நல்லது. பில்டிங் இன்ஜினீயர்கள் தொடர்பும் இதில் பெரிய அளவில் உதவும்.

லாப விகிதம்

இன்டீரியர் வேலை என்பது வாடிக்கை யாளரின் குணத்தைப் பொறுத்தது. ஒருவர் 50,000 ரூபாய்க்கு வேலை கொடுக்கலாம், இன்னொருவர் ஒரு லட்ச ரூபாய்க்கும் ஆர்டர் கொடுக்கலாம். ஆர்டர் தொகையில், 15 முதல் 20% லாபம் வைத்துக்கொண்டால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய சுமையாகத் தெரியாது. பலரும் தேடி வருவார்கள்.

பெரிய அளவில் பண முதலீடு இல்லாமலே சிறப்பாகச் செய்ய ஒரு தொழில் காத்திருக் கிறது. செய்ய நீங்கள் ரெடியா..!

நன்றி:- ஆர்.ரெங்கராஜ் பி.செந்தில்நாயகம்

நன்றி:- நா.வி

இ-வேஸ்ட் லாபம் – பானுமதி அருணாசலம்

ஜூன் 29, 2010 1 மறுமொழி

அதிகம் போட்டியில் லாத புதிய தொழில் ஒன்றைச் செய்ய நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் இ-வேஸ்ட் பிஸினஸை தாரா ளமாகப் பரிசீலிக்கலாம். கம்ப்யூட்டர், டிவி, வி.சி.ஆர்., ஸ்டீரியோ, ஜெராக்ஸ், பேக்ஸ் மெஷின்கள் போன்ற சாதனங்கள் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்தால் அதைத்தான் இ-வேஸ்ட் என்று சொல்கி றோம். இந்த இ-வேஸ்ட்களை வாங்கி அதை மறுசுழற்சி செய்யும் பிஸினஸ்தான் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களில் உள்ள பிரின்டட் சர்க்கியூட் போர்ட்டில் (பி.சி.பி.) அலுமினியம், தாமிரம், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களினால் கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். இதனை மறுசுழற்சி செய்து பயன் படுத்துவதன் மூலம் நல்ல லாபம் சம் பாதிக்க முடியும். ஒரு கிராம் தங்கத்தை பூமியிலிருந்து எடுக்க, 10 டன் மண்ணைத் தோண்டவேண்டும். ஆனால் 10 டன் இ-வேஸ்ட் பொருட்களிலிருந்து 100 கிராம் தங்கத்தை மறுசுழற்சி மூலம் பெற முடியும்.

நம்நாட்டைப் பொறுத்த வரை கோட்டிங் செய்யப்பட்டிருக்கும் உலோகங்களைப் பிரித்தெடுக்கும் வசதி இன்னும் வரவில்லை. அதற்கான இயந்திரம் மட்டுமே 10 கோடி ரூபாய் ஆகிறது. அதனால் பி.சி.பி-ஐ பிரித்தெடுத்து அப்படியே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அங்குள்ள நிறுவனங்கள் அதிலிருந்து உலோகங்களைத் தனியாகப் பிரித்தெடுத்துக் கொள்கின்றன. இந்தியாவில் மின்சா தனங்களில் உள்ள பி.சி.பி. தவிர மற்ற பாகங்களில் உள்ள உலோகங்களைப் பிரித்தெடுத்து மறுசுழற்சிக்குப் பயன்படுத்துகிறார்கள். உலகளவில் ஒரு நபர் ஓர் ஆண்டுக்கு சுமார் 4 கிலோ இ-வேஸ்ட்களை உருவாக்கு கிறார். இந்தியாவில் 2010-ல் மட்டும் 8 லட்சம் டன் இ-வேஸ்ட் கிடைக்கும் எனவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது 12 லட்சம் டன்னாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


முதலீடு

சுமார் ஒரு கோடி ரூபாய்.

ஆள்பலம்

இருபது நபர்கள்.

இடம்

2 முதல் 2.5 ஏக்கர் வரை நிலம்.

இயந்திரம்

உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்குப் பயன் படுத்தப்படும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும். இதன் விலை கிட்டத்தட்ட ஒரு கோடியை எட்டும்.

வாகனம்

நான்கு சக்கர வாகனங்கள் – இரண்டு.

லாபம்

30-40 சதவிகிதம்.

ப்ளஸ்

அதிகம் போட்டியில்லாத, புதிய தொழில்.

மைனஸ்

அதிக முதலீடு; அனுபவம் பெற முடியாத புதிய தொழில், அரசு கட்டுப்பாடுகள்.

”வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது!”

இ-வேஸ்ட் தொழில் குறித்து எர்த்சென்ஸ் ரீசைக்கிள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஜான் ராபர்ட், விற்பனை மற்றும் செயல்பாடு துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோரிடம் பேசினோம். அவர்கள் சொன்னதிலிருந்து…

”வெளிநாடுகளில் இ-வேஸ்ட்களை வீட்டுக்கு வந்து எடுத்துச் செல்வார்கள். அதற்காக அந்த நிறுவனத்துக்கு நாம்தான் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் மக்கள் இ-வேஸ்ட்களை குப்பைத்தொட்டியிலும் காயலான் கடைகளிலும் போடுகின்றனர். இது குறித்து மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு வரவில்லை. இ-வேஸ்ட் பொருட்களை ரீசைக்கிள் செய்யும் யூனிட்டை மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகுந்த சோதனை செய்து அனுமதி கொடுத்தபின்பே தொடங்கமுடியும். யூனிட் தொடங்கப்படும் இடத்தைச் சுற்றியுள்ள நீர், நிலம், உயிரினங்களுக்கு ஏதாவது ஆபத்து நேருமா என்பதை ஆய்வு செய்தபிறகே அவர்கள் அனுமதி கொடுப்பார்கள். இந்த பிஸினஸில் நேரடியாக இறங்கி பெரியளவில் செய்ய முடியாதவர்கள் வீடு, அலுவலகம், கம்பெனிகளில் கிடைக்கும் இ-வேஸ்ட் பொருட்களை வாங்கி, எங்களைப் போன்ற நிறுவனங்களிடம் விற்கலாம். மொத்தத்தில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் அற்புதமான தொழில் இது.”

நன்றி:- பானுமதி அருணாசலம்

நன்றி:- நா.வி

தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்


முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.

இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

‘இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்”. (அல்குர்ஆன்: 24:37)

”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)

1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம்.

7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான‌ ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.


*அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:*

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும்  காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.

இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.

ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.

நன்றி:- சத்தியப்பாதை

தகவல்:-ஹாஜா முஹம்மத்

பொறியியல் கல்வியின் வீழ்ச்சி


பொறியியல் கல்வியின் வீழ்ச்சி

பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான தகுதி மதிப் பெண்களைக் குறைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐந்து சதவிகிதம் மதிப்பெண்கள் இப்போது குறைக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவில் வரும் மாணவர்கள் இதுவரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான 55 சதவிகித தகுதி மதிப்பெண்கள், இப்போது 50-தாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50-ல் இருந்து 45 ஆகவும், மிகவும் பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கு 45-ல் இருந்து 40 ஆகவும், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு அது 35 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் காலியாகக்கிடந்தன. அதையட்டி, மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும் என்று பொறியியல் கல்லூரிகளின் உரிமையாளர்கள், அரசை வலியுறுத்தினர். அதை ஏற்றுத்தான் இப்போது அரசாங்கம் இந்த நடவடிக் கையை எடுத்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், மாணவர்களைவிடவும், பொறியியல் கல்லூரிகள் இந்த அறிவிப்பால் அதிகமாகப் பயனடையும் என்பதுதான் உண்மை!

இந்தியாவில் அதிகமான பொறியியல் கல்லூரிகளைக்கொண்ட மாநிலம் தமிழகம்தான். சுயநிதி பொறியியல் கல்லூரிகளைத் திறக்கலாம் என்று சொல்லப் பட்டதில் இருந்து ஆண்டுதோறும் 50, 100 என புதிய புதிய பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு வருகின்றன. தற்போது, அரசு பொறியியல் கல்லூரிகள் ஆறு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மூன்று, அண்ணா பல்கலைக் கழகத்தோடு இணைந்த 16, தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் 431, என ஆக மொத்தம் 456 கல்லூரிகள் இருக்கின்றன. பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கை 356. பணம் உள்ளவர்கள் முதலீடு செய்வதற்கான லாபகரமான தொழிலாகப் பொறியியல் கல்வி மாறிவிட்டது. இந்தக் கல்லூரிகளை நடத்துபவர்களில் பெரும்பாலோர் கல்வியோடு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதவர்கள். இவர்களுக்கு லாபம் ஒன்றுதான் குறிக்கோள்.

இப்போது, மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பது ஓரளவுக்கு உண்மைதான். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாண வர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேராமல் போவ தற்கு மதிப்பெண் மட்டுமே காரணம் அல்ல. வேறு பல காரணங்களும் இருக்கின்றன. கட்டணம் என்பதுதான் மிக முக்கியமான காரணம்.

பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், பெரும்பாலான கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள தொகையைவிட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார் சொல்லப்படும்போது, அதைப்பற்றி ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அரசுத் தரப்பில் சொல்லப்படும். இது ஒரு வசதியான பதில். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற மனஉறுதி இருந்தால், நிச்சயமாக அதிகக் கட்டணம் வசூலிப்பதை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியும். கடந்த ஆண்டுகூட சில கல்லூரிகளில் அரசாங்கம் ரெய்டு நடத்தியது. ஆனால், அதன் விளைவுகள் என்ன என்பது யாருக்குமே தெரியாது!

பல பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவது இல்லை. என்றபோதிலும் மாணவர்கள் சேரவில்லை. கவுன்சிலிங் மூலம் ஒரு மாணவர்கூட சேராமல்போன கல்லூரிகள் பல இருக்கின்றன. அதற்குக் காரணம், தகுதி மதிப்பெண் அதிகமாக இருக்கிறது என்பதல்ல. கட்டணம் அதிகமாக வசூலிக்கிறார்கள் என்பதையும் தாண்டி, அந்தக் கல்லூரிகள் சேர்ந்து படிப்பதற்கு தகுதி அற்றவையாக இருக்கின்றன.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான மதிப்பெண்களை அவர்களே தீர்மானித்துக் கொள் கிறார்கள். அப்படி இருக்கும்போது, இங்கு மட்டும் மதிப்பெண்களை குறைத்தால் என்ன தவறு என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் என்ற பெயரில் நடக்கும் பல கல்வி நிலையங்கள், எந்த அளவுக்கு மோசமாக இருக்கின்றன என்பதுபற்றி மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையே வெளிப்படையாகக் கூறியுள்ளது. ‘பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்திலேயே அரசாங்கத்தின் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பலவற்றையும் பட்டியலிட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பல பல்கலைக்கழகங்கள் அந்தப் பட்டியலில் இருந்தன. ஆனால் அது என்ன ஆனது? அந்த வழக்கின் நிலை என்ன?

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை முறைப்படுத்தி அரசாங்கத்தின் மேற்பார்வைக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதுதான் இன்று பலருக்கும் இருக்கும் கருத்து. ஆனால், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் சீரழிவை உதாரணமாகக் காட்டி, எல்லாக் கல்வி நிறுவனங்களையும் அவற்றின் நிலைமைக்குக் கொண்டுபோவோம் என்று சொல்வது எந்த விதத்தில் சரி? அந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை மதிப்பெண்களை முறைப்படுத்துவதற்கு பதிலாக, அதே அளவுக்கு மற்ற கல்லூரிகளிலும் மதிப்பெண்களைக் குறைத்திருப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நம் மாநிலத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிற அதே நேரத்தில், பொறியியல் கல்வியின் தரம் வெகுவேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதைக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு இது தொடர்பாக சில ஆய்வுகள் நமது பொறியியல் கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகள், பொறியியல் கல்வியின் தரம் மிக மோசமாக இருக்கிறது என்பதைப் புள்ளி விவரங்களோடு வெளிப்படுத்தின.

2005-ம் ஆண்டு நாஸ்கோம் மற்றும் மெக்கின்சி ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து இந்தியாவின் பொறியியல் கல்லூரிகளைப்பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. அதில், பொறியியல் கல்வி படிக்கும் மாணவர்களில் 25 சதவிகித மாணவர்களே வேலை பெறுவதற்குத் தகுதியானவர்களாக உள்ளனர் என்று கண்டறியப்பட்டது. அதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அரசாங்கம் செயல்பட்டிருந்தால், இப்போது நிலைமை ஓரளவுக்காவது மாறியிருக்கும். ஆனால், மத்திய அரசோ, மாநில அரசுகளோ, அதைப் பற்றி எந்த விதத்திலும் கவலைப்படவில்லை. மாறாக, பொறியியல் கல்வி மேலும் மேலும் சீரழிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு ‘பர்ப்பிள்லீஃப்’ என்ற நிறுவனம், இந்திய அளவில் உள்ள 150 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களைப் பரிசோதித்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பொறியியல் கல்லூரிகளும் அடக்கம். 1,000 மாணவர்கள் சோதிக்கப்பட்டார்கள். இந்த ஆய்வின் முடிவில், பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுள் வெறும் ஆறு சதவிகிதத்தினர் மட்டும்தான் வேலை பெறத் தகுதி உள்ளவர்களாக இருக்கின்றனர் என்ற உண்மையை அது வெளிப்படுத்தியது. 2005-ம் ஆண்டு 25 சதவிகிதமாக இருந்தது, 2009-ல் ஆறு சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதைத் தடுப்பது எப்படி என அரசாங் கங்கள் கொஞ்சம்கூட அக்கறை காட்டா மல் இருக்கின்றன என்பதுதான் வேதனை.

பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதற்குக் காரணம் தகுதி மதிப்பெண்கள் அல்ல. மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது, அதன் கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கின்றன? அதில் தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என் பதை எல்லாம் பார்த்துத்தான் தேர்ந்து எடுக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 50 கல்லூரிகளில் இடம்பிடிக்கக் கடுமையான போட்டி நிலவுகிறது. அங்கு 10 லட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்துக்கூட மாணவர்கள் சேர்வதற்கு போட்டி போடுகின்றனர். காரணம், அந்தக் கல்லூரிகள் தரமான பொறியியல் கல்வியை வழங்குகின்றன. இதனால்தான், கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவதற்கு இந்தக் கல்லூரிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் வருகின்றன. இவற்றில் இறுதி ஆண்டு படிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலோர் படிக்கும்போதே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்தக் கல்லூரிகளுக்கு போட்டி நிலவுகிறது.

தங்கள் ஊருக்கு அருகில் இருந்தாலும் தகுதியற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு முன்வருவதில்லை. தொலைவைப்பற்றி, கட்டணத்தைப்பற்றி கவலைப்படாமல் நல்ல கல்வி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில்தான் மாணவர்களும் பெற்றோர்களும் இருக்கின்றனர்.

பொறியியல் கல்லுரிகளில் இருக்கின்ற மிகப் பெரிய பிரச்னை, தகுதியான ஆசிரியர்கள் இல்லா ததுதான். இப்போது, ஒரே நிர்வாகத்தினர் பல பொறியியல் கல்லூரிகளை நடத்துகின்றனர்.அவர்கள் ஒரே ஆசிரியர்களைத் தாங்கள் நடத்தும்பல்வேறு கல்லூரிகளிலும் காட்டி, அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலையும், ஆய்வு செய்ய வருகிற அதிகாரிகளையும் ஏமாற்றுகிறார்கள். தற்போதுள்ள பொறியியல் கல்லூரி களில், பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருக்க வேண்டிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை. அங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் தகுதியானவர்களாக இருப்பது இல்லை. பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களில் திறமையானவர்கள் எல்லாம் பல்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு வேலைக்குப் போய்விடுகிறார்கள் என்பதால், எந்த வேலையும் கிடைக்காத மாணவர்கள்தான் பெரும்பாலும் ஆசிரியப் பணிக்கு வருகிறார்கள். அது மட்டுமின்றி, தனியார் பொறியியல் கல்லூரிகளில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளைப்போலவே ஐந்தாயிரம், ஆறாயிரம் என்றுதான் ஆசிரியர்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது. அந்த சம்பளத்துக்கு நல்ல ஆசிரியர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இப்படியான ஆசிரியர்களிடம் பொறியியல் கல்வியைப் படிக்கும் மாணவர்களின் கதி எப்படி இருக்கும்? விதிகளில் சொல் லப்பட்டு இருப்பதுபோன்ற கட்டமைப்பு வசதிகளும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் இருப்பது இல்லை. சோதனைக்கூடங்கள், போதுமான அளவில் இல்லை. வகுப்பறைகளும்கூட சரியாக இருப்பது இல்லை. இவற்றைப் பார்த்துதான் மாணவர்கள் அந்தக் கல்லூரிகளுக்கு வர மறுக்கிறார்கள்.

நம்முடைய பொறியியல் கல்வியின் பாடமுறையும்கூட போதுமானதாக இல்லை என்பது கல்வி இயலாளர்களின் கருத்து. பொறியியல் கல்வி மிகவும் குறுகியப் பார்வைகொண்ட பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குவதாகத்தான் உள்ளது. மாணவர்கள் இடையே ஆய்வு மனோ பாவத்தைத் தூண்டுவதாக இல்லை. இது பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் இருக்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி மையங் களுக்கும்கூட பொருந்தக்கூடியதுதான். உலக அளவில் மிகச் சிறந்த 500 கல்வி நிறுவனங்களை சர்வதேச அளவில் பட்டியலிட்டுள்ளனர். அதில், 57 நிறுவனங்கள் சீனாவைச் சேர்ந்தவை. இந்தியாவோடு எந்த விதத்திலும் ஒப்பிட முடியாத மிகச் சிறிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த 21 கல்வி நிறுவனங்கள், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் வெறும் நான்கு மட்டும்தான் அந்தப் பட்டியலில் உள்ளன. அந்த அளவுக்கு நமது உயர் கல்வி தரமற்றதாக இருக்கிறது.

ப்ளஸ் டூ தேர்வில் தாராளமாகவே மதிப்பெண் போடு கிறார்கள். அதனால்தான், தேர்ச்சி சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. அப்படி இருக்கும்போது, தொழிற்கல்விக்கு தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தேவையற்ற ஒன்று. இது, தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரி முதலாளிகளுக்கு மட்டும்தான் பயன்படும். இப்படியான காரியங்களைச் செய்வதைவிடுத்து, பொறியியல் கல்வியின் தரத்தைச் சீர்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் காசைக் கொட்டிக் கொடுத்து பொறியியல் பயிலும் மாணவர்கள் நல்ல வேலைக்குப் போக முடியும். இல்லாவிட்டால், மற்ற பட்டதாரிகளைப்போலவே பொறியியல் பட்டதாரிகளும் வேலை இல்லாமல் தெருவில் திரியும் நிலைதான் ஏற்படும்!

நன்றி:-

நன்றி:- ஜூ.வி

எங்கும் எதிலும் தமிழ் – ப.திருமாவேலன்


ளிர்த்தது முதலே கொண்டாடப்படுகிறது. தாய் மொழியை உயிருக்கு நிகராக மன்னர்கள் மதித்ததும், தமிழ்ப் புலவர்களுக்குத் தங்களது முரசுக் கட்டிலையே தானமாகத் தந்ததும், மொழிக்கு ஒரு பாதிப்பு வரப்போகிறது என்று உணர்ந்த உடனே இளைஞர்கள் தீ மூட்டிக் கரிக்கட்டையாக ஆனதும், நம் மொழியை அறிந்த வேற்று நாட்டு மொழிஅறிஞர்கள் வியந்து பேசும் செய்திகளாக இன்று வரை இருக்கின்றன. அதை இன்னொரு முறைசொல்லிப் பார்க்கவே கோவையில் நடக்கிறது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!

மாநாட்டின் தொடர்ச்சியாக தமிழ் தழைக்கச் செய்தாக வேண்டியவை குறித்து தமிழ் ஆர்வலர்களிடம் பேசியபோது, அவர்கள் சொல்லிய எட்டு ஆலோசனைகள் எட்டுத் திசையெங்கும் தமிழை உயிர்ப்பிக்கும் கருத்துக்களாக அமைந்து இருந்தன!

பள்ளியில்…

குழந்தைகளுக்கு மட்டுமல்ல; தமிழுக்கும் பள்ளிகள்தான் நாற்றங்காலாக இருந்திருக்க வேண்டும். வீட்டை அடுத்து பள்ளிகளில்தான் குழந்தைகள் அதிகம் தங்களது நேரத்தைச் செலவழிக்கின்றன. அந்தப் பொழுதில் தமிழ் இதமானதாக அறிமுகப்படுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளும் தமிழ் வழியில்தான் நடத்தப்பட வேண்டும் என்பது சரியான கோரிக்கையாக இருந்தாலும், அது இன் றைய நிலையில் நடைமுறைச் சாத்தியமானதாக இல்லை. கல்வியில் தனியார்மயம் பாதிக்கும் மேல் ஆன பிறகு, அப்படிப்பட்ட பள்ளிகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் கடிவாளம் அரசுக்கும் இல்லை. எனவே, முழுமையாகத் தமிழ் வழி என்பது முடியா விட்டாலும், தமிழை மொழி அளவிலாவது முதல் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரையிலும் கட்டா யப் பாடமாக அனைத்துப் பள்ளிகளிலும் சொல்லித் தரும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் நான்காம் வகுப்பில்தான் தமிழைப் படிக்க முடியும். ஆனால், அங்கு நுழைந்ததும் இந்தியைப் படிக்கலாம். மாநில அரசு இதற்கான சிறப்புச் சட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும்!

கல்லூரியில்…

உயர் கல்வியைத் தமிழில் கற்றுத்தருவதற்கான காரியங்களை காங்கிரஸ் ஆட்சி செய்தது. உயர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அனைத்துமே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால், தமிழ் வழியில் படிக்க மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லி, அந்தப் புத்தகங்கள் காலப்போக்கில் முடக்கப்பட்டன. அதன் பிறகு, அந்தத் திட்டமே செயல்படுத்த முடியாமல் போனது. இன்று, மீண்டும் தமிழ் வழியில் உயர் கல்வி என்ற முழக்கம் தொடங்கிய நிலையில், பொறியியல் படிப்பு இந்தக் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 கல்லூரிகளில் கட்டுமானப் பொறியியல், இயந்திரப் பொறியியல் ஆகிய பாடங்களைத் தமிழில் படிக்கலாம். உயர் கல்வி படித்த அத்தனை பேரும் அமெரிக்காவுக்குப் போகப்போவது இல்லை. ஆண்டுக்கு 500 பேர்வெளி நாடு செல்வதற்காக மொத்தப் பேரும் ஆங்கில வழியைப் பிடித்துத் தொங்க வேண்டுமா என்று தமிழ் ஆர்வலர்கள் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது. எனவே, அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஒரு பிரிவாவது தமிழ் வழியில் படிப்பு முறையை உருவாக்கலாம்!

தெருவில்…

‘தமிழ்நாட்டுத் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்பது பாரதிதாசனின் வருத்தம். முடி வெட்டும் கடை ஆரம்பித்து ஐந்து நட்சத்திர உணவு விடுதி வரை அனைத்துக் கட்டடங் களின் பெயரும் ஆங்கிலத்தில்தான் அலங்கரிக் கின்றன. தமிழில்தான் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். மலேசியாவில், இலங்கையில், சிங்கப் பூரில் இருக்கும் அளவுக்குக்கூட தமிழகத்தில் பெயர்ப் பலகைகள் வைக்கப்படுவது இல்லை. சென்னையில் கட்டாயமாக தமிழில்தான் பலகை வைக்கவேண்டும் என்று மாநகராட்சி சொன்ன பிறகும் நிலைமை மாறவில்லை. மிகப் பெரிய உணவகம் ஒன்று தனது பெயரை ஒரு விரல் அளவு ‘பெரிதாக’எழுதி வைத்திருக்கிறது. தமிழக அரசு தரும் மிகச் சிறு சலுகையைக்கூடத் தயக்கம் இல்லாமல் பெறத் துடிக்கும் இந்த வணிக நிறுவனங்கள், அரசாங்கம் சொல்லும் உத்தரவை அலட்சியமாகவே கருதிச் செயல்படுகின்றன. ஒப்புக்குத் தமிழ் எழுதும் எண்ணத்தைச் சட்டத்தின் மூலமாக மட்டுமே கறாராக மாற்ற முடியும்!

நீதிமன்றத்தில்…

ஆங்கிலேயர்களால் அவர்களது நிர்வாக வசதிக்காக ஆங்கிலத்திலேயே உருவாக்கப்பட்ட நீதிமன்ற நடைமுறைகளில் தமிழைக் கொண்டுவரக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 348-ன்படி மாநில ஆட்சி மொழிகளும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக இருக்கலாம். இதன் அடிப்படையில்தான் நான்கு மாநில உயர்நீதிமன்றங்க ளில் வழக்காடு மொழியாக இந்தி இருக்கிறது. இதைத் தமிழக அரசும் ஏற்றுக்கொண்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகளும்ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், மத்திய அரசாங்கத்தில் இருந்து உடன்பாடான பதில் வரவில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இதை ஏற்கவில்லை என்று மத்திய அரசு தகவல் அனுப்பியது. இந்திக்குச் சாத்தியமான விதிமுறைகள் தமிழுக்கு மட்டும் இடம் தர மறுப்பது ஏன் என்றுதான் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தினமும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் தொடர்புடைய விவாதம் இன்னொரு மொழியில் நடப்பது சமூக அநீதியாக அமைந்துள்ளது!

கோயிலில்…

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. ஆனால், கோயில்களில் தமிழ் குடியேற முடியவில்லை. தெரிகிறதோ இல்லையோ, தவறாக இருந்தாலும் சில ஸ்லோகங்களைச் சொல்வதில் இருக்கிற மரியாதை, சுத்தமாகச் சொல்லப்படும் திருவாசகத்துக்குக் கிடைப்பது இல்லை. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சுமார் 36 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. துறையின் கட்டுப்பாட்டில் வராமல் ஒரு லட்சம் கோயில்கள் இருக்கலாம். ‘இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ என்று எல்லாக் கோயில்களிலும் விளம்பரம் வைத்திருப்பார்கள். ஆனால், அப்படிச் செய்யப்படுவது இல்லை. ‘யாராவது பக்தர்கள் கேட்டால் தமிழ் அர்ச்சனை செய்வோம்” என்று பதில் தருவார்கள்.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் தமிழ்க் குடிமகன் அமைச்சராக இருந்தபோது, விநாயகர் போற்றி, திருமால் போற்றி, சிவன் போற்றி, அம்மன் போற்றி எனப் பாடல் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. சிவன் கோயில்களில் இதற்கென ஓதுவார்கள் உண்டு. மற்ற கோயில்களில் தமிழ்ப் புலவர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆனால், அவர்களுக்கு முறையான வேலைகள் இல்லை. கோயில்களைத் தமிழ்மயப்படுத்தினால்தான் சுந்தரர்களும் ஆழ்வார்களும் அங்கே இருந்து முளைப்பார்கள்!

மருத்துவத்தில்…

எந்த நோயாக இருந்தாலும், சுக்கு – மிளகு – திப்பிலியில் குணப்படுத்திக்கொண்ட நாம், இன்று சாதாரணக் காய்ச்சலுக்கும் மருத்துவமனைகளில் அடைக்கலம் ஆக வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால், நம் மூலிகைகளில் சிலவற்றைக் கடத் திக் கொண்டுபோய்த்தான்பெரும் பாலான ஆங்கில மருந்துகள்செய் யப்படுகின்றன. “சித்த மருத்துவத்தின் நீட்சிதான் தமிழ் மருத்துவம் என்பது. அந்தத் துறையைத் தமிழக அரசு வளப்படுத்த வேண்டும். தமிழ் மருந்துகளின் விலை அதிகமாக இருக்கிறது. அதைக் குறைக்க வேண்டும். சில குறிப்பிட்ட நிறுவனங்கள்தான் இம்மருந்துகளைத் தயாரிக்கின் றன. அதையும் பரவலாக்க வேண்டும்” என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன்.

தமிழ்நாட்டில் ஆறு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளும், நான்கு தனியார் கல்லூரிகளும் இருக்கின்றன. ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மூன்று மருத்துவர்கள் இருந்தால், ஒருவர் சித்த மருத்துவராக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இன்று 1,500 மையங்களில் 700 மருத்துவர்கள்தான் இருக்கிறார் கள். இந்தக் காலி இடங்களை நிரப்புவதிலும் தமிழ் மருந்துகளின் விலையைக் குறைப்பதிலும் அக் கறை காட்டி தமிழ் மருத்துவத்தை வளர்க்கலாம்!

இசையில்…

தமிழ் வளர்க்கத் தமிழிசை முழங்க வேண்டும். குழந்தைவயிற் றில் இருக்கும்போது நலுங்கு, பிறந்ததும் தாலாட்டு, சிறுவனாக இருக்கும்போது நிலாப் பாட்டு, இளைஞராக வளரும்போது வீரப் பாட்டும் காதல் பாட்டும், திருமணத்தின்போது மங்கலப் பாட்டு, மறைவின்போது ஒப்பாரி… எனத் தமிழனின் வாழ்க்கை முறையே இசையாலும் பாட்டாலும் ஆனது. ஆனால், இசை நிகழ்வுகளில் தமிழ்ப் பாட்டுகள் பாட மறுக்கப் பட்டபோது, தமிழிசை இயக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பமானது. கர்நாடக சங்கீதம், தெலுங்கு கீர்த்தனைகள் மட்டுமே அந்தக் காலத்தில் மேடைகளில் இசைக்கப்பட்டது. யாராவது ஓரி ருவர் துக்கடா மாதிரி தமிழ்ப் பாட்டைப் பாடுவார்கள். தொடர் முழக்கங்களின் மூலமாக தமிழ்ப் பாட்டுகள் பாடியாக வேண்டிய சூழல் எழுந்தது.
அருணகிரி நாதர், முத்துத் தாண்டவர் தொடங்கி பாரதியார் வரை பலரும் பாடிய தமிழ்ப்பாடல் கள் மேடைகளில் இசைக்கப் பட்டன. ஆனாலும், இன்னமும் முழுமையான தமிழிசை மேடை கள் ‘சங்கீத சீஸன்’களில் வர வில்லை. பாடுபவர், கேட்பவர் அனைவரும் தமிழ் அறிந்த மக்களாக இருக்கும்போது, அர்த்தம் புரியாத மொழியில் இசை எதற்கு என்று தமிழ் ஆர்வலர்கள்கேட்கும் போது, ‘இசைக்கு மொழி கிடை யாது’ என்று பதில் அளிக்கப்படு கிறது.
இசைக்கு மொழி கிடையாதுதான். ஆனால், இசையில் மொழி புறக்கணிக்கப்படக் கூடாது!

ஆட்சியில்…

சுமார் 54 ஆண்டுகளுக்கு முன்னால் நம் மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழி ஆனது. அதற்கான சட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டுவந்தது. ஆண்டுக்கு ஒரு துறையை எடுத்துக்கொண்டு தமிழை ஆட்சி மொழி ஆக்கினால் கூட முழுமை அடைந்து 30ஆண்டு கள் ஆகியிருக்கும். ஆனால், இன்று பிறப்பிக்கப்படும் ஆணைகள், அதிகாரிகள் தங்களுக்குள் அனுப்பிக்கொள்ளும் உத்தரவுகள், சுற்றறிக்கைகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. அரசு அலுவலர்கள் அனைவரும் கோப்புகளில் தமிழில்தான் கையெழுத்து இட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஓர் உத்தரவு போடப்பட்டது. இன்று எத்தனை பேர் அதைப் பின்பற்றுகிறார்கள். தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தைச் சரிவரநிறை வேற்றாத அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நட வடிக்கை எடுக்கவும் அரசாணை உள்ளது. வட இந்திய அதிகாரிகள் அதிகமாக இங்கு வேலையில் இருப்பதால், அதை அமல்படுத்துவதில் சிரமம் உள்ளதாகக் காரணம் சொல்லப்படுகிறது. தமிழைத் தாய் மொழியாகக்கொண்டு இராத அதிகாரிகள் இங்கு வந்தால், அவர்களுக்கு 54 வாரங்கள் மொழிப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அரசு ஆணை உள்ளது. அவர்களில் அக்கறை உள்ள பலரும் சில மாதங்களில் பேசவும் படிக்கவும்கற்றுக்கொள்கிறார்கள் என்பதே உண்மை.

‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்பது பழமொழி. செம்மொழி மாநாடு இதை அடியட்டி அமைந்தால் நல்லது!

நன்றி:- ப.திருமாவேலன்

நன்றி:- ஆ.வி

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள் – பொடுகு வெரிகோஸ் வெயின்ஸ்


பொல்லாத பொடுகுக்கு என்னதான் தீர்வு?“கல்லூரியில் படிக்கும் என் மகன் பொடுகுத் தொல்லையால் மிகவும் அவதியுறுகிறான். வீட்டு மருந்துகள், பொடுகு எதிர்ப்பு ஷாம்புகள் எதுவுமே பலன் அளிக்கவில்லை. பொடுகு, தொற்றக்கூடியது என்பதால், கல்லூரியில் பலர் தன்னிடமிருந்து ஒதுங்குவதாக வருந்துகிறான். இதற்கு தீர்வு என்ன?”

டாக்டர் க.உதயசங்கர், தோல்நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி


“நீங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, தலையை பாதிக்கும் ‘சோரியாசிஸ்’ வகையை தவறுதலாக ‘பொடுகு’ என்று சுயமருத்துவம் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பல அடுக்குகள் கொண்ட தோலின் மேற்பகுதி உரிவது வழக்கம்தான். ஆனால், அது மிக அதிகமாக இருந்தால் ‘சோரியாஸ்’ பாதிப்பு என அடையாளம் கொள்ளலாம். பரம்பரை, சுற்றுச்சூழல் போன்றவைதான் சோரியாசிசுக்கான பொதுவான காரணிகள். ரத்த அழுத்தம், மலேரியா, மனநல சிகிச்சை போன்றவற்றுக்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் அது ஏற்படலாம். குறிப்பாக டீன்-ஏஜில் உள்ளவர்களுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சோரியாஸ் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து, அதற்கான சிகிச்சையைப் பெறலாம். பொதுவாக தோல் நோய் நிபுணர் பரிந்துரைக்கும் பிரத்யேக ஷாம்புவை தலையில் 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வைத்து குளித்து வந்தாலே விரைவில் சோரியாஸிஸ் கட்டுக்குள் வரும். இரவில் தடவிக்கொள்ளும் லோஷன்களையும் பயன்படுத்தலாம். அரிப்பு அதிகமிருந்தால் கட்டுப்படுத்த மாத்திரைகள் இருக்கின்றன.

உங்கள் மகனின் பிரச்னை பொடுகுதான் என மருத்துவரால் அடையாளம் காணப்பட்டால், அதை நிவர்த்திக்கும் எளிய மருந்துகள் இருக்கின்றன. குறிப்பாக, பருவ வயதினருக்கு எண்ணெய் சுரப்பிகள் ஓவர் டைம் வேலை செய்வதால், தலையின் மேற்பகுதியிலிருக்கும் ‘ஈஸ்ட்’டுடன் இந்த எண்ணெய் சுரப்புகள் சேர்ந்து, பொடுகைத் தோற்றுவிக்கின்றன. இதற்கு டாக்டர் பரிந்துரைக்கும் பொடுகு எதிர்ப்பு ஷாம்புகளை குறைந்தது வாரம் இருமுறை தலை குளியலுக்கு உபயோகித்து வந்தாலே கட்டுக்குள் வந்துவிடும்.

சோரியாசிஸ் தொற்றக்கூடியது அல்ல. ஆனால், பொடுகு சுலபத்தில் தொற்றக்கூடியது. எனவே, பொடுகு விடுபடும் வரை… சீப்பு, துண்டு போன்றவற்றை தனித்தனியாக பயன்படுத்துவதே நல்லது.”

“நாற்பது வயதாகும் எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. ஆனால், கட்டுக்குள்தான் இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக கால் ஆடுசதையில் நரம்புகள் முடிச்சு முடிச்சாக தோன்றி பயமுறுத்துகின்றன. ஆரம்பத்தில் வலி ஏதும் இல்லாது பார்வைக்கு மட்டுமே உறுத்தலாக தெரிந்த இந்த முடிச்சுகள், இப்போது லேசான விறுவிறு வலியுடன் தென்படுகின்றன. டெக்ஸ்டைல்ஸ் பணிச்சூழலில் நான் நின்றபடியே இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். இந்த முடிச்சுகள் ஆபத்தானவையா… மரபு சார்ந்தவையா… இவற்றிலிருந்து குணம் பெறுவது எப்படி?”

டாக்டர் கே.ராஜாசிதம்பரம், பொது அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சி:

“அதை, பெரும்பாலானவர்கள் நரம்பு முடிச்சுகள் என்றே நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அதெல்லாம் ரத்த நாள முடிச்சுகள். மருத்துவ வழக்கில் இதை ‘வெரிகோஸ் வெயின்ஸ்’ (Varicose Veins) என்கிறார்கள்.

இதயத்துக்கு அருகில் இருக்கும் அவயங்கள் மற்றும் இதயத்துக்கு மேலிருக்கும் உடல் பாகங்களில் இருந்து இதயத்துக்கு ரத்தம் வந்து சேர்வது சுலபமாக நடக்கும். ஆனால், இடுப்புக்கு கீழே உள்ள ரத்த நாளங்கள் புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட வேண்டியிருப்பதால், இதுபோன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஆக்ஸிஜன் தேவையான அளவு கிடைக்காத கால் தசைகள், தங்கள் இயல்பான இறுக்கம் குறைந்து தொய்வடையும்போது இந்த ரத்தநாள முடிச்சுகள் தோன்றுகின்றன.

வாழ்க்கை மற்றும் வேலைச்சூழல்தான் இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக, நீண்ட நேரம் நின்றபடியே வேலை பார்ப்பவர்களுக்கும், படுத்தபடுக்கையாக இருப்பவர்களுக்கும், ‘ஒபிசிட்டி’ எனப்படும் அதீத உடல்பருமன் உள்ளவர்களுக்கும், வயிற்றில் ஏதேனும் கட்டி இருப்பவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ரத்தநாள முடிச்சுகள் உருவாகக்கூடும்.

இந்த முடிச்சுகள் கண்ணுக்குத் தெரியாத ஆரம்ப நிலையிலேயே காலில் சற்று பிடித்து இழுப்பது போன்ற அறிகுறிகளை காட்டும். முடிச்சுகள் புலனாகும்போது, தோலின் தன்மையும் நிறமும் மாறும். நாளாக, அரிப்பும் ரணமும் வரலாம். மருத்துவர் ‘டாப்ளர்’ ஸ்கேன் மூலம் உங்களது பாதிப்பின் தீவிரத்தை அடையாளம் காண்பார். கட்டிகள் தொடர்பான ஐயத்துக்கு வயிற்றையும் ஸ்கேன் பார்த்துவிடுவது நல்லது. பாதிப்பு ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், ‘க்ரீப் பாண்டேஜை’ மூன்று மாதத்துக்கு அணியும்படி அறிவுறுத்தப்படுவார்கள். இரவு படுக்கும்போது, கால்களை உயரமான இடத்தில் வைப்பது நல்லது. அதற்கு, தலையணைகளை பயன்படுத்தலாம்.

நாள்பட்ட தீவிர பாதிப்புள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி. ஏனெனில்… இந்த முடிச்சுகள் தோற்ற உறுத்தல் மட்டுமல்ல, காலின் திறன் மற்றும் காயம் ஏற்பட்டால் சுலபத்தில் ஆறாதது என பொது உடல்நலக் கோளாறுகளையும் தந்துவிடும். அதிலும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு கூடுதல் ஆபத்து. மேல்தொடையில் செய்யப்படும் சிறு ஆபரேஷன் மூலம் விடிவைப் பெற முடியும். தோற்றப் பொலிவுக்காக கால் தசையில் இருக்கும் முடிச்சுகளையும் அகற்றிக் கொள்ளலாம்.

ரத்த நாள முடிச்சுகளுக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்ற போதும், உரிய தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் இதைத் தவிர்த்துவிடலாம். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதும், மிகை உடல் பருமன் வராது தற்காத்துக்கொள்வதும் அவசியம். முக்கியமாக நீண்ட நேரம் நின்றவாறான பணிச்சூழலில் இருப்பவர்கள் அவ்வப்போது உட்கார்வதும் கால்களை மடிப்பதும் அவசியம்.”

நன்றி:-
டாக்டர் க.உதயசங்கர், தோல்நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி

டாக்டர் கே.ராஜாசிதம்பரம், பொது அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சி:


நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள் – கோபிநாத்


வெளிநாடுகளில் உணவகங்களிலோ, பல்பொருள் அங்காடிகளிலோ நிறைய மாணவர்கள் பகுதி நேரப் பணியாளர்களாக வேலை செய்வதைப் பார்க்க முடியும். கார் கழுவுவது, பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, உணவு பரிமாறுதல், கணக்கர் பணி என்று ஏதாவது ஒரு வேலை.

இவர்களிடம் இல்லாத காசா? எதற்காக இந்த இளம் வயதில் இப்படி வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றும். வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட வயது வந்த பிறகு, அவரவர் செலவுக்கு அவர்களேசம்பாதித்துக் கொள்ள வேண்டும். அப்பா, அம்மா பணம் தர மாட்டார்கள் என்றுகேள்விப்பட்டு இருக்கிறோம்.

நமக்குத்தான் இப்படிப்பட்ட எண்ண ஓட்டங்கள் மனதில் சுழலுமே ஒழிய, அந்த மாணவர்கள் ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் அந்தப் பணிகளைச் செய்வார்கள். நானும் எனது நண்பரும் ஒரு முறை ஓர் உணவகத்துக்குச் சென்றபோது, பகுதி நேரப் பணியாளர்களாக நிறைய மாணவர்கள் வேலை செய்வதைப் பார்த்தோம். ‘நம்ம பொழப்பு பரவாயில்லடா நண்பா… இவங்க சின்ன வயசிலயே இப்படிப் பணம் சம்பாதிக்க வேண்டி இருக்கே’ என்று ஆற்றாமையோடு சொன்னான்.

வெளிநாட்டில் இதுபோல் பகுதி நேரப் பணி செய்யும் இந்திய மாணவர்கள் நிறையப் பேரைப் பார்க்க முடியும். ஒரு பக்கம் படித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் சம்பாதித்துக்கொண்டு இருப்பார்கள். பகுதி நேரப் பணி செய்யும் குணம் உள்ளூர்ச் சூழலிலும் இப்போது அதிகரித்து வருகிறது என்பது உண்மை.

வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் அடுக்கி, லாரியில் ஏற்றி இன்னோர் இடத்துக்குக் கொண்டுசேர்க்கும் பணியைச் செய்வதற்காக நான்கு இளைஞர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசியபோதுதான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். ஓய்வு நேரங்களில் இதுபோன்ற வேலைகள் செய்து பணத் தட்டுப்பாட்டைச் சரிசெய்துகொள்வதாகச் சொன்னார்கள். அந்த நிறுவனத்தை நடத்துவதே கல்லூரி மாணவர்கள்தான்.

படிக்கிற மாணவர்கள், கௌரவம் பார்க்காமல் சுமை தூக்குவது போன்ற வேலைகளைச் செய்வதைப் பார்க்கிறபோது கொஞ்சம் புதிதாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. இதுபோன்ற இளைஞர்கள்பற்றி விசாரிக்க ஆரம்பித்தபோது நிறையத் தகவல்கள் கிடைத்தன. ஏ.சி. பொருத்துபவருக்கு உதவியாளர், இரவு நேர ஆட்டோ டிரைவர், விடுமுறை நாட்களில் கணக்கு எழுதிக் கொடுப்பது. மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக்கொடுப்பது எனப் பல்வேறு விதமான பகுதி நேரப் பணிகள் இங்கும் நடந்துகொண்டு இருக் கின்றன.

இப்படிப் படிக்கிறபோதே வேலை செய்வது, வெளி நாடுகளில் ஒரு கலாசாரமாகவும் வாழ்க்கை முறை யாகவும் மாறி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். நமது இத்தகைய வேலைகள் பணத் தட்டுப்பாடுகளைச் சரிசெய்யவும், கைச் செலவுக்குத் தேவைப்படும் பணத்தைச் சம்பாதிக்கவுமே மேற் கொள்ளப்படுகிறது. அப்பா, அம்மாவின் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது பாராட்டுக்கு உரியது. ஆனால், தேவை கருதி நடக்கும் இந்தப் பணிகளை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டியது காலத்தின் அவசிய மாகி இருக்கிறது.

படிப்பதே ஒரு வேலையைப் பெறுவதற்குத்தான் என்கிற மனோபாவத்தில் இருந்து, வெளியே வந்து சுயமாகச் செயல்படவும் வகுப்பு அறைகளுக்கு அப்பால் இருக்கும் வாழ்க்கையின் அனுபவங்களை உணரவும் இந்தப் பகுதிப் நேர பணிகள் நிச்சயம் பயன்படும். வெகுஜன மக்களின் குணாதிசயங்கள் என்ன? விதவிதமான மனிதர்களின் தேவைகள் என்ன என்பதை விளங்கிக்கொள்ளவும் உதவும்.

பாடப் புத்தகங்களில் சொல்லித்தரப்படாத அல்லது சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாத பல்வேறு வாழ்க்கைச் சூத்திரங்களை இந்தப் பகுதி நேரப் பணிகள் சொல்லித் தரும்.

பணத்தைச் சம்பாதிக்கச் சொல்லித் தரும் நம் சமூகம், பெரும் பாலான நேரங்களில் அதைக் கையாள்வது குறித்து, தெளிவாகச் சொல்வது இல்லை. அப்பாவின் பணத்தைச் செலவழிப்பதில் இருக்கிற சுகமும், தான் சம்பாதித்த பணத்தைச் செலவு செய்வதில் இருக்கிற சுதந்திரமும் வேறுவேறானவை.

சுயமாகச் சம்பாதித்து அதைக் கையாள ஆரம்பிக்கிறபோது, ஓர் இளைஞன் தன் வாழ்வின் மிக முக்கியமான அம்சத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறான். அந்த அவசியமான அனுபவத்தை ஒரு சமூக ஆசிரியராக நின்று, பகுதி நேரப் பணிகள் சொல்லிக்கொடுக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட வயது வரை சந்தோஷமாகச் சுற்றித் திரிந்துவிட்டு, வேலையில் சேர்ந்த பிறகு, ‘பொறுப்பான பிள்ளையாக’ மாற வேண்டும் என்கிற மனோபாவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபாகவே மாறிப்போய் இருக்கிறது.

கொஞ்ச காலம் வரை படிக்கிற இயந்திரமாகவும் பிறகு, சம்பாதிக்கிற இயந்திரமாகவும் இளைஞர்களின் வாழ்க்கைச் சூழல் அமைந்துவிட்டதற்கு அதுவே காரணம்.

இந்த மூச்சுப் பிடிக்கிற பயணத்தில் 1,000 ரூபாயைச் சம்பாதிக்க ஒரு சராசரி இந்தியன் எவ்வளவு உழைக்க வேண்டும்… எவ்வளவு தியாகம் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பகுதி நேரப் பணிகள் உணர்த்துகின்றன.

எப்போதும் கண்டுகொள்ளாமல் விடப்படும் சராசரி இந்தியப் பிரஜையின் கஷ்டங்களைக் கவனிக்கவும், அதைவிட மேலாகப் படிக்க வேண்டிய வயதில் புத்தகங்களைத் தொலைத்துவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களாக ஓடிக்கொண்டு இருக்கும் சமகால இந்தியாவை உணரவும் இந்தப் பகுதி நேரப் பணிகள் அவசியம்.

நமது சூழலில் வாழ்க்கையின் காயங்களையும் அதற்கு மருந்து போட வழி இல்லாமல் தவிக் கும் மனிதர்களையும் இந்திய இளைஞனுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக் கிறது. அந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதன் வாயிலாகவும், வாய்ப்பாகவும்கூட இந்தப் பகுதி நேரப் பணிகள் அமையலாம்.

ஓர் உணவகத்தில் பில் போட்டுக் கொடுக்கும் பகுதி நேரப் பணி செய்யும் ஓர் இளைஞன், கொல்லைப்புறத்தில் சாக்கடைக்கு அருகே அமர்ந்து, எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய பாத்திரத்தை ஒருவர் கழுவிக்கொண்டு இருப்பதைக் கவனிக்காமலா போவான்? ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் பகுதி நேரப் பணியில் இருக்கும் ஒரு கல்லூரி மாணவன், தன் தங்கையின் வயதில் இருக்கும் சிறுமி அற்ப சம்பளத்துக்குத் தன் உழைப்பைக் கொட்டிக்கொடுக்கும் சூழலை அறிந்துகொள்ளாமலா போவான்.

படித்து முடித்து வேலையில் இருக்கும்போதும் இவை எல்லாம் கண்ணில்படுமே என்று கேள்வி வரலாம். அந்தச் சூழ்நிலையில், சம்பாதிப்பதற்காக வேலை பார்க்கும் இயந்திரமாகத்தான் இந்திய இளைஞன் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறான். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் குறித்த பார்வைகள் அந்தக் காலகட்டத்தில் பலம் இல்லாததாகவே இருக்கின்றன.

பணத்துக்காக மட்டுமின்றி; வாழ்க்கைபற்றிய புரிதலுக்காகவும், சமூகத்தின் யதார்த்தங்களை அணுகவும், சுயத்தை மேம்படுத்தவும் பகுதி நேரப் பணிகளில் ஈடுபடுங்கள். குறைந்தபட்சம் கௌரவமான வேலை – கௌரவக் குறைச்சலான வேலை என்று தரம் பிரித்துவைத்திருக்கும் பார்வையாவது மாறும்.

இன்றும் தமிழ்ச் சமூகத்தின் நிறையப் பிரிவுகளில் படிக்கும்போதே ஒரு வேலையில் இருந்து அதன் நீக்கு போக்குகளை அறிந்துகொள்ளச் சொல்கிற வழக்கம் உண்டு.

பாக்கெட் மணிக்காகவும், பணத் தட்டுப்பாட்டுக் காகவும் மட்டும் அல்லாது, பணம் இருக்கிறவர்களும் பகுதி நேரப் பணிகளில் கவனம் செலுத்துவது சமூகத்தின் மீதான இளைஞர்களின் கவனிப்பை இன்னும் அழுத்தமாக்கும்.

கிளம்புங்கள்…

எல்லாத் தெருக்களின் மூலைகளிலும் எதிர்கால இந்தியா என்னைக் கவனிக்குமா என்று ஏக்கத்தோடு பலர் காத்திருக்கிறார்கள்

நன்றி:- கோபிநாத்

நன்றி:- ஆ.வி

!

30 வகை எண்ணெய் இல்லாத சமையல் – சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்

ஜூன் 24, 2010 1 மறுமொழி

”எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!” என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது, உணவில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் எண்ணெய்!

எண்ணெய் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தியே விதம்விதமான சமையல் இருக்கத்தான் செய்தது. எள்ளு தாத்தா-எள்ளு பாட்டியிடம் (உயிரோடு இருந்தால்) கேட்டுப் பாருங்கள்… பல தலைமுறைகளாக தாங்கள் சப்புக்கொட்டி, ரசித்து, ருசித்து சாப்பிட்டு, நோய் நொடியில்லாமல் வலம் வந்த அந்த ரகசியத்தைச் சொல்வார்கள்!

அப்போதெல்லாம், பண்டிகைகளுக்கு மட்டுமே எண்ணெய் என்பது வீடுகளை எட்டிப் பார்க்கும். இன்றைக்கோ… தோசை, பூரி, வடை என்று பொழுதுவிடிந்தால்… பொழுதுபோனால், எண்ணெயோடுதான் வாழ்க்கை! விளைவு… கொலஸ்ட்ரால், பிளட் பிரஷர், சர்க்கரை என டாக்டரிடம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அவர் சொல்கிற முதல் வார்த்தையே “சாப்பாட்டுல எண்ணெயைக் குறைச்சுடுங்க” என்பதுதான்.

”எண்ணெய் இல்லாமல் சமைக்க முடியுமா?” என்று அலறாதீர்கள். இங்கே, பிரபல ‘சமையல் கலை நிபுணர்’ ரேவதி சண்முகம் உங்களுக்கு பரிமாறிஇருக்கும் 30 வகை சமையலுமே ‘ஆயில் ஃப்ரீ’தான்! கூடவே அவர் சொல்லும் ஓர் எச்சரிக்கைக் குறிப்பு …

“இந்த வகை சமையலுக்காக தாளிக்கறப்ப, அடுப்பை மிதமான தீயில வச்சுருக்கணும். அப்பதான் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு மாதிரியான பொருட்கள் கருகாம பொரிஞ்சு வரும்.”

எண்ணெய் செலவுக்கு மட்டுமல்ல… மருத்துவச் செலவுக்கும் குட்பை சொல்வோமா?!

டயட் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், ஏதேனும் ஒரு வகை காய் (நறுக்கியது) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – 1, தக்காளி – 2, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும். வெந்த பருப்புடன் நறுக்கிய காய், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி… 2 விசில் வந்ததும் இறக்கவும்.

வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் நன்கு பொரிய விட்டு, சாம்பாரில் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால்… டயட் சாம்பார் ரெடி!

வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், வாழைத்தண்டு (மீடியம் சைஸ்) – ஒன்று, வெங்காயம் (நறுக்கிக் கொள்ளவும்) – 1, பச்சை மிளகாய் – 3, காய்ச்சிய பால் – கால் கப், சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய வாழைத்தண்டு, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் திறந்து, அதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு, நசுக்கிய பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, பால் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

உசிலி

தேவையானவை: கடலைப்பருப்பு – முக்கால் கப், துவரம்பருப்பு – கால் கப், பச்சை மிளகாய் – 3, பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், ஏதாவது ஒரு வகை காய் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் கலந்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு, தண்ணீரை வடித்து, அவற்றுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, இட்லி பாத்திரத்தில் போட்டு 10-15 நிமிடம் வேக வைத்து, இறக்கவும். ஆறியதும், அந்த உருண்டைகளை, சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒருமுறை சுற்றி எடுத்தால்… உதிராக வரும். நறுக்கிய காய்கறியுடன் உப்பு சேர்த்து (தேவைப்பட்டால்), குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். உதிர்த்த பருப்புடன் வேக வைத்த காய்கறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறவும். வெறும் கடாயில், கடுகு பொரித்து சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

கீரை மசியல்

தேவையானவை: அரைக்கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 5, பச்சை மிளகாய் – 1, பூண்டு – 5 பல், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும். ஆய்ந்த கீரையுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், திறந்து நன்கு மசித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால், வேக வைத்த பாசிப்பருப்பு கொஞ்சம் சேர்த்துக் கலந்தும் பரிமாறலாம்.

இதேபோல் முளைக்கீரை, சிறுகீரையிலும் செய்யலாம்.

பருப்பு ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், புளிக் கரைசல் – கால் கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

பொடிக்க: மிளகு, சீரகம் – தலா ஒன்றரை டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 3 பல்.

செய்முறை: பாத்திரத்தில் துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர், புளிக் கரைசல், பெருங்காயத்தூள், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து… கொதிக்க விடவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு பொடிக்கவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து கடுகு, வெந்தயம் சேர்த்து சிவக்கப் பொரித்து, துவரம்பருப்புத் தண்ணீர் கரைசலில் சேர்க்கவும். ஒரு கொதி வரும்போது, பொடித்த பொடியையும் சேர்க்கவும். கூடவே, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கிப் பரிமாற வும்.

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: வாழைக்காய் – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

பொடிக்க: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வாழைக்காயை இரண்டாக நறுக்கி, வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் இறக்கவும். ஆற வைத்து, தோல் நீக்கி, துருவிக் கொள்ளவும். வெறும் கடாயில் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். மிதமான தீயில் கடாயை வைத்து கடுகு போட்டு பொரித்து, கறிவேப்பிலை சேர்த்து… துருவிய வாழைக்காயை சேர்த்துக் கிளறவும். பொடித்த பொடி, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எண்ணெய் சேர்க்காததால், அடுப்பை ‘சிம்’மிலேயே வைத்து சமைக்கவும். விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

அவல் தோசை

தேவையானவை: பச்சரிசி – ஒன்றரை கப், புழுங்கல் அரிசி, அவல் – தலா அரை கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைக்கவும். அவலை தனியாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், எல்லாவற்றையும் ஒன்றாக்கி, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்க விடவும். புளித்ததும், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து, ஒரு கரண்டி மாவு விட்டு, ஊத்தப்பம் போல் வார்த்து மூடியால் மூடவும். வெந்ததும், திருப்பிப் போடாமல் அப்படியே எடுக்க… அவல் தோசை ரெடி! இதேபோல் ஒவ்வொரு அவல் தோசையையும் தயார் செய்யவும்.

இளந்தோசை

தேவையானவை: இட்லி மாவு – ஒரு கப், தண்ணீர் – சிறிதளவு.

செய்முறை: இட்லி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, தோசை மாவை விட்டு, மெல்லிய தோசையாக வார்க்கவும். பிறகு, மூடியால் மூடி வைத்து ஒரு நிமிடம் வேக விட்டு எடுக்கவும். இதேபோல், ஒவ்வொரு தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

இந்த தோசைகள், வெள்ளை நிறம் மாறாமல் மிக மெல்லியதாக இருக்கும்.

பொடி இட்லி

தேவையானவை: இட்லி மாவு – 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி – 3 டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: இட்லி மாவில், மினி இட்லிகளை தயார் செய்து கொள்ளவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து, கடுகு போட்டு பொரிக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும். இட்லி மிளகாய்ப் பொடியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு… தண்ணீர் விட்டுக் குழைத்து, மினி இட்லிகளைப் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். பொரித்த கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

தயிர் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, புளிக்காத தயிர் – ஒரு கப், வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1, புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன், சாட் மசாலா, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும். பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும். பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு ஸலைஸால் மூடவும். இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து கொள்ளவும். தயிருடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்.

மல்டி வெஜிடபிள் குழம்பு

தேவையானவை: நறுக்கிய பரங்கிக்காய், கத்திரிக்காய், அவரை, காராமணி, மொச்சை, வாழை, முருங்கைக்காய் கலவை – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு – கால் கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 8 பல், புளி – 50 கிராம், தக்காளி – 4, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன், வெந்த யம் – அரை டீஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயம், பூண்டை தோலுரித்து, நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டவும். பிறகு புளிக் கரைசலை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்த தும், தோல் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, நறுக்கிய காய்கறி கலவையைச் சேர்த் துக் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து… காய் வேகும் வரை கொதிக்க விடவும்.

வெறும் கடாயில் கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து வறுத்து, குழம்பில் சேர்க்கவும். வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

வெஜ் சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – 3 டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, சர்க்கரை – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும், பொடியாக நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்க்கவும். காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து இறக்கி… சூடாகப் பரிமாறவும்.

மசாலா சென்னா

தேவையானவை: வெள்ளை சென்னா – ஒரு கப், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, சாட் மசாலா – ஒரு டீஸ்பூன், மாங்காய்த்தூள் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சென்னாவை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சென்னாவுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், மூடியைத் திறந்து, தண்ணீரை வடிக்கவும். கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலக்க… மசாலா சென்னா தயார்!

செட்டிநாட்டு பருப்புத் துவையல்

தேவையானவை: துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – கால் கப், காய்ந்த மிளகாய் – 2, புளி – கொட்டைப்பாக்களவு, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில், பருப்பை பொன்நிறமாக வறுக்கவும். பிறகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், புளி, தேங்காய் துருவல். உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாகவும், கரகரப்பாகவும் அரைக்கவும். கடைசி யாக, பூண்டு சேர்த்து ஒருமுறை சுற்றி எடுக்க… செட்டிநாட்டு பருப்புத் துவையல் ரெடி!

பருப்பு சாதம்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 8 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதித்ததும், கழுவிய துவரம்பருப்பு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும். பிறகு, அரிசி, தோலுரித்து நசுக்கிய பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து குழைய வேக வைத்து இறக்கவும்.

இதற்கு மோர்க்குழம்பு, பொடிமாஸ் சிறந்த சைட் டிஷ்.

கலவைக்காய் குருமா

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் கலவை – 2 கப், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் – கால் கப், பாதாம் – 10, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பூண்டு – 2 பல், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா ஒன்று.

செய்முறை: நறுக்கிய காய்கறிகளுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு கடாயில் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வதக்கி இறக்கவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து… வேக வைத்த காய்கறி கலவையுடன் சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து ஒருமுறை கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும்.

காய்கறி போளி

தேவையானவை: கேரட் துருவல் – கால் கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் (கலந்தது) – கால் கப், கோதுமை மாவு – ஒன்றரை கப், பால் – அரை கப், பட்டை – 2 துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத் திரத்தில் கேரட், முள்ளங்கி, முட்டை கோஸ் துருவலுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து… அந்தக் கலவையை அழுத்தி வைக்கவும். 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து, மசித்த உருளைக் கிழங்கு, பட்டை, சோம்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்த மல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கோதுமை மாவுடன் பால், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து… உருட்டிக் கிண்ணம் போல் செய்து, அதனுள் காய்கறி கலவையை வைத்து மூடவும். அதனை சப்பாத்திக் கல்லில் இட்டு, சற்று கனமாகத் தேய்க்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தேய்த்து தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக்கல்லில் போட்டு, மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

பனீர் டிக்கா

தேவையானவை: பனீர் – 200 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த வெந்தயக்கீரை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பனீரை, மீடியம் சைஸ் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அதனுடன், கொடுத்துள்ள மற்ற பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலந்து… 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து, 4-5 பனீர் கலவை துண்டுகளைப் போட்டு, இருபுறமும் திருப்பி எடுக்க… பனீர் டிக்கா ரெடி!

பாலக் பனீர்

தேவையானவை: பாலக் கீரை (அ) பசலைக் கீரை, வெந்தயக் கீரை – தலா ஒரு கட்டு, பனீர் – 200 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரைகளை ஆய்ந்து, அலசிக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், தோலுரித்த பூண்டு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும், உப்பு சேர்த்துக் கலந்து நன்கு மசித்துக் கொள்ளவும். நறுக்கிய பனீர் துண்டுகளைச் சேர்த்து ஒருமுறை லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

காலிஃப்ளவர் மசாலா

தேவையானவை: காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், அரைத்த தேங்காய் விழுது – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து, அதில் நறுக்கிய காலிஃப்ளவரை நன்கு கழுவவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய காலிஃப்ளவர், நறுக்கிய வெங்காயம், தக்காளியை கடாயில் சேர்த்து வேகவிடவும். சில நிமிடங்கள் கழித்து, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சோம்புத்தூள், தேங்காய் விழுது, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கிளறவும். கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

மினி ரவா இட்லி

தேவையானவை: ரவை, புளிக்காத தயிர் – தலா ஒரு கப், சேமியா – 1 டேபிள்ஸ்பூன், ஃப்ரூட் சால்ட், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், இஞ்சி விழுது – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கடுகு சேர்த்து பொரிக்கவும். பிறகு உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, ரவை சேர்த்து சிவக்க வறுத்தெடுக்கவும். ஆறியதும், ஃப்ரூட் சால்ட் நீங்கலாக மற்றவற்றை எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அந்த ரவைக் கலவையில் தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இட்லி பானையில் தண்ணீர் விட்டு, சூடாகும் நேரத்தில், ரவை மாவில் ஃப்ரூட் சால்ட் சேர்த்து அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் விட, அது பொங்கி வரும். மாவை மீண்டும் நன்கு கலந்து, மினி இட்லிகளாக சுட்டெடுக்கவும்.

முட்டைகோஸ் ரொட்டி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், காய்ச்சிய பால் – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன்.

ஸ்டஃப் செய்வதற்கு: முட்டைகோஸ் துருவல் – அரை கப், வெங்காயத் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பசலைக் கீரை – தலா கால் கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசையவும். முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து கொள்ளவும். அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள… காய்கறி பூரணம் ரெடி!

பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து… அதனுள் பூரணம் வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொரு ரொட்டியையும் தயார் செய்யவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் இட்டு சற்று கனமாகத் தேய்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து தேய்த்த ரொட்டியை சுட்டெடுக்கவும்.

கிரீன் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய்ப் பால் – ஒரு கப். உப்பு – தேவையான அளவு

அரைக்க: நறுக்கிய கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 1.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட் களை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை, தேங்காய் பாலில் கரைத்து வடிகட்டவும். அந்தப் பாலை அடுப்பில் வைத்து சூடாக்க… நுரை கட்டி வரும். அப்போது அரிசி மாவைக் கொட்டி, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கிளறி இறக்கவும். அதிலிருந்து, கொஞ்சம் மாவு எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி… ஆவியில் வேக வைக்க, கொழுக்கட்டை ரெடி!

வாழைத்தண்டு கோசம்பரி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரை கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, குடமிளகாய், கொத்தமல்லி – தலா கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், வேக வைத்த சென்னா (அ) ஸ்வீட் கார்ன் – அரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், மாதுளம் முத்துக்கள் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வாழைத்தண்டை 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். ஆறியதும், கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

எளியமையான இந்த ரெசிபி, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.

பேங்கன் கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், கத்திரிக்காய் – 5, உருளைக்கிழங்கு, வெங்காயம் – தலா 1, தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, சோம்பு – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், மிளகாய்த்தூள், கீறிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும். இவை எல்லாம் ஒன்றாகக் கலந்து நன்கு வெந்ததும், புளிக் கரைசல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு, வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

தால் இட்லி

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல், கேரட் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மூன்று வகை பருப்புகள், புழுங்கல் அரிசி எல்லாவற்றையும் ஒன்றாக்கி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக இட்லி மாவு பதத்தில் அரைக்கவும். அரைத்த மாவுடன், தேங்காய் துருவல், கேரட் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை, இட்லித் தட்டுகளில் விட்டு இட்லிகளாக வேக வைத்து, சூடாகப் பரிமாறவும்.

இதற்கு கார சட்னி சிறந்த காம்பினேஷன்.

இட்லி சாம்பார்

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

அரைக்க: உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளியை பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். வெறும் கடாயில் மிதமான தீயில், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, ஆறியதும் அரைக்கவும். அரைத்த விழுதை, பருப்புக் கலவையுடன் சேர்த்துக் கலந்து நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து… ஒரு கொதி வந்ததும் இறக்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

மோர்க்குழம்பு

தேவையானவை: புளிப்பில்லாத தயிர் – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, வெந்தயம், ஓமம் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தயிரை நன்கு கடைந்து, கொஞ்சம் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கரைக்கவும். வெறும் கடாயில், கடுகு, வெந்தயம், ஓமம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, மோர்கலவையை சேர்த்து.. கிளறியவாறே இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

ஏதாவது காய்கள் சேர்ப்பதாக இருந்தால் தனியே வேக வைத்து சேர்க்கவும்.

மல்டி பருப்பு சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், ஏதாவது ஒரு காய் (நறுக்கியது) – ஒரு கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, தக்காளி – 2, வெங்காயம் – 1, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – கால் டீஸ்பூன், பெருங்காயம் – தேவையான அளவு, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: தனியா – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும்… துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதி பதத்தில் வெந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறி சேர்த்துக் குழைய வேகவிடவும். பிறகு, புளிக் கரைசல் விட்டுக் கலந்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும். பெருங்காயம், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

இந்த சாம்பார்… சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது.

பாசிப்பருப்பு டோக்ளா

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் – கால் கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் கடலை மாவு, தயிர், பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், உப்பு, கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவில்… ஃப்ரூட் சால்ட் சேர்த்து, அதன் மேல் கால் கப் தண்ணீர் விட, உடனே அது பொங்கி வரும். அதன் பிறகு, மாவை நன்கு கலக்கவும். இட்லித்தட்டில், ஒரு சொட்டு எண்ணெய் விட்டுத் தடவி, அதில் மாவை விட்டு வேகவைத்து இறக்கவும்.

ஆறியதும், துண்டுகளாக நறுக்கி, தேங்காய் சட்னி, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

நன்றி:- சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை