தொகுப்பு

Archive for மே 25, 2010

தண்ணீர் நிறைய குடிங்க – பேரா சோ.மோகனா


இப்ப கோடைக் காலம் என்பதால் நமக்கு அதிக தாகம் எடுக்கும். ஏன் மழைக் காலத்தை விட கோடையில் அதிக தாகம் எடுக்கிறது? வியர்ப்பதால் என்று சொல்லுவீர்கள்! ஆனால், தாகத்தைத் தூண்டுவதன் முதல் காரணி யார் தெரியுமா? சிறுநீரகம்தான். ஆம் சுட்டீஸ்! உடலின் நீர் மேலாண்மையைச் செய்வது சிறுநீரகம் என்றால் ஆச்சர்யம்தானே.

பொதுவாக நம் உடலிலிருந்து சிறுநீர், வியர்வை, கண்ணீர் மற்றும் மலத்தின் வழியாக நீரும், உப்புக்களும் வெளி யேறுகின்றன. கோடைக் காலத்தில் வியர்க்காமலேயே உடலிலிருந்து நீர் ஆவியாகிவிடுகிறது. குறைவான மற்றும் அடர்த்தியான சிறுநீர் வெளியேறுகிறது. சிறுநீர் வெளியேற்றப்படும் நேர இடைவெளியும் அதிகம். இது ஏன்..?! சிறுநீரகம் நம் உடலின் முக்கிய உறுப்பு! இரத்தத்தை சுத்தம் செய்வது, உடலில் கழிவுப் பொருட் களை வெளியேற்றுவது, உடம்பில் எவ்வளவு நீர் எவ்வளவு உப்பு, எவ்வளவு எலக்ட்ரோலைட் வேண்டும் என்பது போன்ற ஏராளமான பணிகளைச் செய்கிறது. உங்கள் உடம்பின் நீர் மேலாண்மையாளரான சிறுநீரகம் மட்டும் கொஞ்சம் தகராறு செய்தால் நமக்கெல்லாம் படா பேஜாருதான்!

மண்ணீரல், கணையத்துக்கு அருகில் முதுகெலும்பை ஒட்டி அவரைவிதை அளவுக்கு ஜோடியாக கம்பீரமாய் அமைந் துள்ளது.

பொதுவாக அனைத்து பாலூட்டிகளுக்கும் இது கருஞ்சிவப்பு நிறத்துடன்தான் இருக்கும். இது நம் உடலின் எடையில் 0.5% தான். ஆனால், இதயம் சுரக்கும் இரத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு சிறுநீரகத்துக்கே உடனடியாக வருகிறது. சிறுநீரகம் 10 செ.மீ நீளம். 6 செ.மீ அகலம், 4 செ.மீ கனமும் உள்ள ஒரு சதைக் கொத்து. இதில் இரத்தமும் நரம்பும் மட்டுமே உள்ளது. இதன் எடை 100 கிராம். நாம் உயிர் வாழ ஒரு சிறுநீரகம் மட்டும் போதும்.மற்றது ஸ்பேர்தான். ஆனால், இது ஸ்டிரைக் செய்தால் நாம் அம்பேல்தான்.

ஒவ்வொரு சிறுநீரகத்துக்கு உள்ளேயும் சுமார் 250 – 1000 நெப்ரான்கள் உள்ளன. இவைகள் தான் சிறுநீர் வடிகட்டிகள். இவை ஒவ்வொன்றின் உள்ளேயும் ஏராளமான இரத்த தந்துகி முடிச்சுக்கள் காணப்படுகின்றன. ஒரு நெப்ரானின் அளவு 500 மி.மீ மட்டுமே! இவைகளின் மொத்தப் பரப்பு சுமார் 5-8 மீ. நம் உடலின் மொத்தப் பரப்பை விட 4-5 மடங்கு அதிகம். ஆனால், இந்த நெப்ரான்களில் உள்ள நூல் போன்ற குழாய்களை நீட்டினால் அதன் நீளம் சுமார் 70-100மீ தூரம் வரை போகும். ‘என்ன சும்மா டுமீல் விடுறீங்க’ என்று சொல்கிறீர்களா… அப்படி ஏதும் இல்லையப்பா, அதுதான் உண்மை.

நெப்ரான்களுக்கு உள்ளே மேருல்லஸ் என்ற இரத்தத் தந்துகிகளின் முடிச்சு உள்ளது. சிறுநீரகத்துக்குச் செல்லும் இரத்தத்திலிருந்து உடலின் கழிவுப்பொருள் உப்பு, குளுகோஸ், அமினோ அமிலம், கொழுப்பு நீர், ஹார்மோன்கள், நச்சுப்பொருட்கள் மற்றும் நீங்கள் உட்கொண்ட மருந்துகளின் மிச்ச சொச்சங்கள் போன்றவற்றை வடிகட்டிப் பிரித்து எடுப்பது இதுதான். இதன் செயல்பாடு மிகவும் ஆச்சரியமானது. இங்கே ஒரு நிமிடத்துக்கு சுமார் 1 லிட்டர் இரத்தம் வருகிறது. 5 நிமிடத்துக்குள் உடலின் அவ்வளவு இரத்தமும் இங்கே வந்து வடிகட்டப்பட்டு இதயத்துக்கு அனுப்பப்படுகிறது.

ஒரு நாளில் இந்த நெப்ரான்கள் சுமார் 180 லிட்டர் திரவத்தை வடிகட்டுகின்றன. ஆனால், சிறுநீரகம் வருவது சுமார் 1-15 லிட்டர் மட்டுமே. மற்ற 178.5 லிட்டர் மீண்டும் உடலுக்குள் உட்கிரகிக்கப் படுகிறது. அதாவது, 99% நீர் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்துப் பொருட் களும் உட்கிரகிக்கப் படுகின்றன. ஒரு நிமிடத்தில் 3 லிட்டர் சிறுநீர் சேகரிக்கப்படுகிறது.

நீர்… என்னென்ன செய்தாலும் உயிர் காக்கவே!

சிறுநீரகம் 24 மணி நேரத்தில் 1,300 கிராம் சோடியம் குளோரைடு என்ற சாதாரண உப்பு, 400 கிராம் சோடியம் பை கார்பனேட், 180 கிராம் குளுகோஸ் மற்றும் பிற வேதிப் பொருட்களை வடிகட்டுகிறது. வடிகட்டும் திரவத்திலுள்ள சோடியத்தை எஞ்சியோடென்சின் 2 என்ற ஹார்மோன் கட்டுப்படுத்து கிறது. இங்கு வடிகட்டும் திரவத்தில் இருந்து 97% சோடியம் நீக்கப்படுகிறது. கடைசியில் உள்ள 3% தான் உடலின் நீர்த்தேவையை சமனப்படுத்துகிறது. கோடைக்காலத்தில் உடலில் இருக்கும் நீரானது வியர்வை, சிறுநீர் ஆகிய பல்வேறு வகையில் விரைவில் வெளியேறுகிறது. அதனால், உடலில் இருக்க வேண்டிய நீரை சமப்படுத்த அதிக தாகம் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் நமது தசைகள் சுருங்கிவிடுவதால் தாகம் எடுப்பது குறைகிறது. கோடைகாலத்தில் இது எதிர் மாறாக செயல்பட்டு உடனே நீரைக் குடிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நாம் கோடைக் காலங்களில் எவ்வளவு நீரைக் குடித்தாலும் நல்லதுதான். தேவையற்ற நீரை உடலே வெளியேற்றிவிடும்.

வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் வந்த உடனே தண்ணீரைக் குடிக்காமல் நமது உடல் வீட்டின் உள் வெப்ப நிலைக்கு சமநிலை அடைந்ததும் நீரைக் குடிக்க வேண்டும். அப்போதுதான் வேறு ஏதும் பிரச்னைகள் ஏற்படாது. அதிக நீர் குடியுங்கள்… சிறுநீரகத்தின் வேலையை எளிதாக்குங்கள்.

தண்ணீரை கொதிக்க வைத்து பின்பு குளிர வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. எனவே, சுட்டீஸ்… கோடையை சமாளிக்க நிறைய தண்ணீர் குடியுங்கள்.

நன்றி:- பேரா சோ.மோகனா

நன்றி:- சு.வி