தொகுப்பு

Archive for மே 9, 2010

ஊனம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும்
ஞானமற்ற மனிதா…!
நீயும் ஒரு நாளில் நிலத்தில்
சாயும் வேளையில்
உயிரும் போய்விடும்;
பெயரும் போய்விடும்..!
உடல் முழுதும் செயலற்று
கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே
கிடைக்கும்….

வேதத்தைக் காணாத கண்கள்;
ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்;
உள்ளத்தால் ஊனமுற்றவைகளே..

அகம்பாவம் நிறைந்ததால்,
அகம்- பாவத்தில் உறைந்ததால்;
சுகம் தேடும் உள்ளமே- சுவனத்து
சுகம் தேடவேயில்லையே…!!

கருவறையே உலகமென்று
கருதியே சயனித்திருந்தாய்,
ஓருலகில் வந்து உதிப்பாயென்று
ஒருபோதும் நினைக்காதது போலவே;
மறு உலகம் உண்டென்பதை
மறந்து விட்டாய் மனமே..!

இரணமும்; மரணமும்
இரகசியமாய்த் தான்
இறைவனும் வைத்து விட்டான்;
இரண்டையும் நோக்கியே
இரவும் பகலும் பயணிக்கின்றோம்……

இரணத்தின் முடிவு;
மரணத்தின் துவக்கம்

சென்ற நிமிடம்-
நின்று பேசியவர்கள்
சென்ற இடம் எங்கே?
சென்று பார்த்து வா;
நின்று விடும் கற்பனைகள் மெதுவா(க)

ஒன்றுமே யில்லாதிருந்த உன்னை
நன்றாக உருவமமைத்த இறைவனே
ஒன்றுமே யில்லாமல் உருக்குலைத்து- மீண்டும்
ஒன்று சேர்க்கும் நாளில் எழுப்புவான்
உண்மை இதுவென்று உணராத உள்ளமே
உண்மையிலே “ஊனமுற்றவை”………

ஏதாவது செய்ய – யாசர் அரஃபாத்


வலி சொல்ல வந்த இடத்தில்
வரிக்கு என்ன விதிமுறை
என்றாவது மாறுமா என் தலைமுறை!

கல்லாத கல்வியால்
கடல்கடந்து நாங்கள்;
சொத்தோடு சோகத்தையும்
சுமந்துக் கொண்டு வருடாவருடம்
எங்கள் வீட்டிற்கு!!

துக்கம் என்
தொண்டையை அறுக்க;
தோள்கொடுக்க எவருமுண்டோ என
இயக்கங்களை நான் நோக்க;
இல்லாதது கல்லாமை மட்டுமல்ல;
ஒடிந்துப் போன ஒற்றுமையும்தான்
எனப் புரிந்துக் கொள்வதற்க்குள்
புதுப் புது இயக்கங்கள்!!

எல்லோரும் நினைக்கிறார்கள் ஏதாவது செய்ய;
எல்லோரும் நினைக்கிறார்கள் தாம் மட்டும் செய்ய!!

அனைத்தயும் செய்து அட்டைப்படம் ஜொலிக்கும்;
எடுத்துக் காட்டி இன்னொன்று காழ்ப்புணர்ச்சியைக் காட்டும்!!

மார்தட்டிச் சொல்வோம் மார்க்கம் ஒன்று;
மாலையிலே ”மைக்”கைப் பிடித்து மல்யுத்தம் உண்டு!

இனியாவது
கசப்புகளைக் காலாவதியாக்கி
கரம் கோர்ப்போம்
பகைத் தீர்ப்போம்!

உரமாகுவோம் தீனுக்காக;
உரையாட வேண்டாம் தீனிக்காக;
பக்கங்கள் நிரம்பிவிட்டன வீணுக்காக;
வெறுப்பால் வெற்றிப் பெறப்போவது யாருக்காக!!

ஒட்டியிருப்பது உதடுகளில் நம்
சகோதரனின் கறி;
இயக்கம் என்ற பெயரால் ஏன் இந்த வெறி!

வியப்பால் பார்க்கும் உலகமகா மார்க்கம்
நமக்குள் மட்டும் ஏன் இவ்வளவு தர்க்கம்!

வழிக்காட்டுவோம்
வருங்கால தலைமுறைக்கு;
விட்டுவிட்டால்
வீதியில்தான் நிற்ப்போம்!

நன்றி:–யாசர் அரஃபாத்