தொகுப்பு

Posts Tagged ‘30 வகை’

30 வகை சைவ பிரியாணி!


கமகமக்கும் மணத்துடன், நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டி, ‘இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டு சாப்பிட வைக்கும் உணவு வகைகளில் பிரியாணிக்கு தனி இடம் உண்டு. ‘இன்னிக்கு ஸ்பெஷல் அயிட்டம் பண்ணப் போறேன்’ என்றாலே,  ‘பிரியாணிதானே?’ என்று வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கேட்கும் அளவுக்கு சுவையால் அனைவரையும் கட்டிப்போடும் பிரியாணியில் 30 வகைகளை அள்ளித் தந்து அசத்துகிறார் சமையல் கலை நிபுணர் கலைச்செல்வி சொக்கலிங்கம்.

”பனீர் பிரியாணி, காளான் பிரியாணி, மண்சட்டி பிரியாணி, மசாலா ஜூஸ் பிரியாணி என்று வித்தியாசமான, வகை வகையான பிரியாணிகளை செய்து காட்டியுள்ளேன். செய்து பரிமாறுங்கள்… குடும்பத்தினரால் கொண்டாடப்படுவீர்கள்” என்று உறுதி கூறும் கலைச்செல்வியின் ரெசிபிகளை, கலைநயம் பொங்க அலங்கரித்திருக்கிறர் ‘செஃப்’ ரஜினி. 


நட்ஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பாதாம், முந்திரி – தலா 50 கிராம், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 10 பல், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் 2 டீஸ்பூன். சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, கிராம்பு, ஏலாக்காய் – தலா 2.

ராய்தா செய்ய: வெங்காயம் – 2, தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று, வெள்ளரிக்காய் – சிறு துண்டு, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், இஞ்சி – சிறிதளவு, தயிர் – ஒரு கப், கடுகு, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன்,  நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நன்கு வதங்கியபின் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் விட்டு கலந்து, தண்ணீர் கொதித்தபின் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் பாதாம், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து சேர்த்து இறக்கவும். ராய்தாவுடன் பரிமாறவும்.

ராய்தா செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி, உப்பு போட்டு பிசிறி, தனியாக வைக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கவும். தேங்காய், இஞ்சி இரண்டை யும் சேர்த்து அரைக்கவும். பிசிறி வைத்த வெங்காயத்தை பிழிந்து கொள்ளவும். இதனுடன் தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், தேங்காய் – இஞ்சி விழுது சேர்த்து, எல்லாவற்றையும் தயிருடன் சேர்த்துக் கலக்கவும். எண்ணெ யில் கடுகு தாளித்து இதனு டன் சேர்க்கவும்.

இந்த ராய்தா, எல்லா பிரியாணிகளுக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.


புதினா பிரியாணி

தேவையானவை: பசுமதி அரிசி – 250 கிராம்,  வெங்காயம் – ஒன்று, தேங்காய்ப் பால் – அரை கப், தயிர் – 2 டீஸ்பூன், உரித்த பச்சைப் பட்டாணி – கால் கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு –  தேவையான அளவு.

அரைக்க: புதினா – 2 கைப்பிடி அளவு, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 3, பட்டை – 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல்.

செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் மிதந்து வரும் வரை வதக்கி, தேங்காய்ப் பால், தயிர் சேர்த்து வதக்கவும். பிறகு, பட்டாணி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, கொதித்தும் ஊற வைத்த அரிசி சேர்த்து, வெந்ததும் இறக்கி பரிமாறவும்.


காளான் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், காளான் – 10, வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பட்டை – 2 துண்டு, பூண்டு – 10 பல், கிராம்பு – 2, மிளகு, மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், ஏலக்காய் – 2.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, காளான், உப்பு, புதினா, கொத்தமல்லி எல்லாம் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். அதன்பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ஊற வைத்த அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


பட்டாணி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, தயிர் – 3 டீஸ்பூன், பச்சைப் பட்டாணி – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், பட்டை – 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்த விழுது சேர்த்து, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், பச்சைப் பட்டாணி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். ஊற வைத்த அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


தக்காளி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், சீரகம் – அரை டீஸ்பூன், நாட்டுத்தக்காளி – 5, பச்சை மிளகாய் – ஒன்று, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் குக்கரை வைத்து… எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகத் தொக்காக வதக்கி கொத்தமல்லி சேர்க்கவும். பின்னர் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரிசியை சேர்த்து மூடி, ஒரு விசில் விட்டு 5 நிமிடம் சிறிய தீயில் வைத்து இறக்கிப் பரிமாறவும்.


வெங்காய பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்கா யம் – 2 (பொடியாக நறுக்க வும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 10 பல்.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன் னிறமாக வதக்கி, உப்பு,      மஞ்சள்தூள் சேர்க்கவும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும், அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


தேங்காய்  தக்காளி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, நாட்டுத்தக்காளி – 4, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: மிளகாய்த்தூள், சோம்பு – தலா அரை டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து மேலும் நன்கு வதக்கவும். பின்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


மசாலா தக்காளி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம்,  வெங்காயம் – ஒன்று, நாட்டுத்தக்காளி – 4, பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லி, புதினா – ஒரு கைப்பிடி அளவு, தயிர் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 10 பல், பட்டை – 2 துண்டு, ஏலக்காய், கிராம்பு – தலா 2.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய்,  உப்பு, கொத்தமல்லி, புதினா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்


புழுங்கலரிசி பிரியாணி

தேவையானவை: புழுங்கலரிசி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், தேங்காய் – ஒரு துண்டு, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, பட்டை, ஏலக்காய், கிராம்பு – தலா 2, சின்ன வெங்காயம் – 8, நாட்டுத்தக்காளி – 2,  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சைப் பட்டாணி  – கால் கப், பிரியாணி இலை – ஒன்று, நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரிசியை, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய், புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், ஏலக்காய், இஞ்சி, பூண்டு… இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அம்மியில் அரைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து பிரியாணி இலை தாளித்து, வெங்காயம், தக்காளியை வதக்கி, அரைத்த விழுதுகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தனித்தனியாக போட்டு வதக்கவும். பச்சைப் பட்டாணியை சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும், எல்லாம் நன்றாக வதக்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்துக் கிளறி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் கழித்து இறக்கினால்…  புழுங்கல் அரிசி பிரியாணி ரெடி.


அவசர பிரியாணி

தேவையானவை: பிரியாணி அரிசி – கால் கிலோ, இஞ்சி – சிறிய துண்டு (நறுக்கவும்), பூண்டு – 8 பல் (நசுக்கி வைக்கவும்), பச்சை மிளகாய் – 4  (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி, புதினா – ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் – தலா 2, தயிர் – 2 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில், பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி… பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கி… தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தயிர் சேர்த்து மேலும் வதக்கவும். அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அரிசியைப் போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.


காய்கறி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ் எல்லாம் சேர்த்து – ஒரு கப், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன், வெங்காயம்,  பச்சை மிளகாய் – தலா ஒன்று, தக்காளி – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தயிர் – 4 டீஸ்பூன், புதினா – கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு. எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்த மல்லி  சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


கொண்டைக்கடலை பிரியாணி

தேவையானவை: பச்சரிசி அல்லது சீரகசம்பா அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன், ஊற வைத்து, வேக வைத்த கொண்டைக்கடலை – அரை கப், பிரியாணி இலை, பட்டை – தலா ஒன்று, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி. காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, கொண்டைக்கடலை சேர்க்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.


கத்திரிக்காய் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம்,   வெங்காயம் – ஒன்று, கத்திரிக்காய் – 3 (சுமாரான அளவு, கசப்பில்லாதது), தக்காளி – 3, மிளகாய்த்தூள் – ஒன்றே கால் டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புதினா – கறிவேப்பிலை – கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி… மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும் (அல்லது தோசைக்கல்லில் போட்டு வறுத்தெடுக்கவும் செய்யலாம்). அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி… நறுக்கிய தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது, தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும். இதில் அரை வேக்காடாக வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி, அதில் பாதியை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, பாத்திரத்தில் உள்ள கலவையில் கத்திரிக்காயை பரப்பி, எடுத்து வைத்துள்ள சாதத்தை அதன்மேல் பரப்பி, அதன்மேல் நெய் ஊற்றி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் சிறு தீயில் வைத்து இறக்கி, கிளறி பரிமாறவும்.


மசாலா ஜூஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தயிர் – 3 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன்,  நெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.

அரைக்க: தக்காளி – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 10 பல், பட்டை – ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு – தலா ஒன்று, புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2.

செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்து, கெட்டியாக வடிகட்டி, சாறு எடுக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி… அரைத்து வடிகட்டி எடுத்த சாற்றை ஊற்றி, நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, தயிர் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர் அரிசியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.


சீரக சாதம்

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், நெய் – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியோடு, தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். நெய்யில் சீரகம் தாளித்து சாதத்தோடு சேர்த்துக் கிளறவும்.

இதை தனியாக சாப்பிட முடியாது. எனவே, காய்கறி குருமா, கடலைக்குழம்பு போன்றவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்.


பிரெட் புலாவ்

தேவையானவை: சீரகசம்பா அரிசி – 250 கிராம், தேங்காய்ப் பால் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, தயிர் – 2 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தலா ஒன்று, பிரெட் துண்டுகள் – அரை கப் (எண்ணெயில் பொரித்தது), எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும்… பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தயிர், உப்பு, தேங்காய் பால் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். இதனுடன் வறுத்த பிரெட் துண்டுகளை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


வெந்தயக்கீரை சாதம்

தேவையானவை: பிரியாணி அரிசி – 250 கிராம், வெந்தயக்கீரை – 2 கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 3, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், புதினா – அரை கைப்பிடி அளவு, கொத்தமல்லி – அரை கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 5, தேங்காய்ப் பால் – அரை கப், வெங்காயம் – ஒன்று, பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, தயிர் – 3 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தனியாத்தூள், புதினா, கொத்தமல்லி, மஞ்சள்தூள், சின்ன வெங்காயம் ஆகியவற்றை நசுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, நசுக்கி வைத்துள்ளவற்றையும் சேர்த்து, கீரையை சேர்த்து வதக்கவும். இதனுடன் தயிர், உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்ப் பால் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


மொச்சை பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், பச்சை மொச்சை – கால் கப் (ஊற வைத்து, தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்), வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தலா ஒன்று, சோம்பு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு ஆகியவற்றையும் தனியாக ஊற வைக்கவும். வெங்காயம் ஒன்றை அடுப்பில் சுட்டு பின் தோல் நீக்கி அதனோடு தனியாத்தூள், பாதியளவு புதினா, கொத்தமல்லி, ஒரு பச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்த சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து… மொச்சை சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள், அரைத்த வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி, மீதமுள்ள 2 பச்சை மிளகாய், மீதமுள்ள புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.


பனீர் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், பனீர் – 150 கிராம் (துண்டுகளாக்கவும்), வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, இஞ்சி, பூண்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சைப் பட்டாணி – கால் கப், தயிர் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி… இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கி, தயிர், உப்பு, பனீர் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியைச் சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும்.


கோவா பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, கோவா – 50 கிராம் (இனிப்பு இல்லாதது), பச்சைப் பட்டாணி – கால் கப், தயிர்- 3 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை கிராம்பு, ஏலக்காய் விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய்  – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். பச்சைப் பட்டாணி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சேர்த்து தயிர் சேர்த்துக் கிளறவும். இதனுடன் கோவா சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி… கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.

குறிப்பு: கோவாவை சிறிது வதக்கினால் போதுமானது. இல்லையென்றால், அடிபிடித்து விடும். கோவா வேண்டாம் என்றால் கெட்டியான தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.


குட்டீஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், நெய் – 3 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், ஒரு பச்சை மிளகாயுடன் புதினா, கொத்தமல்லி, தேங்காய் சேர்த்து அரைத்த விழுது – ஒரு கரண்டி, கேரட் – ஒன்று, பட்டாணி – கால் கப் (நசுக்கி வைக்கவும்), பீட்ரூட் – பாதி அளவு, வெங் காயம், தக்காளி – தலா ஒன்று, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட், பீட் ரூட்டை  துருவிக் கொள்    ளவும். வெங்காயம்,    தக்காளியை பொடியாக நறுக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய் – தேங்காய் மசாலா, கேரட், பீட்ரூட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.


தேங்காய்ப் பால் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம்,  தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், தயிர் – 3 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – ஒன்று, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு – தலா ஒன்று, புதினா – ஒரு  கைப்பிடி அளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது, புதினா சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் தயிர், உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்ப் பால் சேர்க்கவும். இதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


நெய் சாதம்

தேவையானவை: சீரகசம்பா அரிசி – 250 கிராம், நெய் – 4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, புதினா – சிறிதளவு, வெங்காயம் – ஒன்று, பிரியாணி இலை – ஒன்று, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, பூண்டு, புதினா, வெங்காயம்… எல்லாவற்றையும் மிகவும் பொடியாக நறுக்கி தனியே வைக்கவும். அரிசியை உப்பு சேர்த்து முக்கால்  வேக்காடு பதத்தில் சாதம் வடித்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, பிரியாணி இலை தாளித்து, பொடியாக நறுக்கியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி, வேக வைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தை மூடி ஐந்து நிமிடம் கழித்து இறக்கி, மீதி நெய்யை ஊற்றி கிளறி பரிமாறவும்.


மண்சட்டி பிரியாணி

தேவையானவை: பச்சரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 3 (நன்றாக பழுத்தது), பிரியாணி இலை – ஒன்று, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – ஒன்று, பட்டை, ஏலம், கிராம்பு – தலா ஒன்று.

செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத் துக் கொள்ளவும். அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதை சேர்க்கவும். பிறகு புதினா, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.


நவதானிய பிரியாணி

தேவையானவை: பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, நவதானியம் – ஒரு கப் (வறுத்து, ஊற வைத்தது, வேக வைத்தது), தக்காளி – 2, தேங்காய்ப் பால் – கால் கப், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், ஏலக்காய் – ஒன்று, பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 6.

செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின் வேக வைத்த நவதானியம், தேங்காய்ப் பால் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.


கோலா உருண்டை பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி – 250 கிராம், தக்காளி – 3, வெங்காயம் – ஒன்று, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், புதினா – கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, தயிர் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

கோலா உருண்டைக்கு: துருவிய பன்னீர் – கால் கப், பொட்டுக்கடலை மாவு – 4 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோலா உருண்டை செய்ய கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன் றாகப் பிசைந்து, சிறிய உருண்டை களாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, தயிர் சேர்த்து… புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். சாப்பிடும்போது பொரித்த கோலா உருண்டைகளைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.


முட்டைகோஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், முட்டைகோஸ் – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது –  ஒரு டீஸ்பூன், தயிர் – 3 டீஸ்பூன்,  தேங்காய்ப் பால் – அரை கப், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, முட்டைகோஸ் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து வதக்கி, தயிர், தேங்காய்ப் பால் சேர்க்கவும். இதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் பாத்திரத்தை மூடி, சிறு தீயில் சிறிது நேரம் வைத்து இறக்கி, பரிமாறவும்.


தனியா பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், தனியா – 150 கிராம், காய்ந்த மிளகாய் – 4 , இஞ்சி – பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 3, பட்டை கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, உருளைக்கிழங்கு – 100 கிராம், தேங்காய்ப் பால் – அரை கப், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தனியாவை வறுத்து, குக்கரில் 2 தம்ளர் தண்ணீரில் நன்றாக வேக வைத்து, வடிகட்டி, ஒன்றரை கப் தண்ணீராக எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை விழுதாக அரைக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கு, சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் மிளகாய் விழுதையும் உப்பையும் சேர்த்து வதக்கி… தேங்காய்ப் பால், தனியா தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.


மொகல் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, தயிர் – 3 டீஸ்பூன், புதினா – கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – ஒன்று, ஏலக்காய் – 3, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, காய்கறி கலவை – அரை கப், கேசரி பவுடர் – சிறிதளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து… நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, புதினா, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், காய்கறி, தயிர், உப்பு சேர்த்து தொக்காக வரும் வரை நன்கு வதக்கி, சிறு தீயில் வைக்கவும் (தீயை அணைக்கக் கூடாது).

இன்னொரு அடுப்பில் அரிசியை அரை வேக்காடாக வேக வைத்து வடித்து உடனே சூடாக அடுப்பில் உள்ள தொக்கில் சேர்த்து நன்றாகக் கிளறி, மூடி போட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு கேசரி பவுடர் கரைத்து ஊற்றி, கிளறி இறக்கவும்.


உருளைக்கிழங்கு பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், உருளைக்கிழங்கு – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி, பூண்டு, பட்டை கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், தயிர் – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு,  நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி… உருளைக்கிழங்கையும், வெங்காயத்தையும் தனித்தனியாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி… பொரித்த வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து… தயிர், உப்பு, உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் தேவையான தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்துக் கிளறி, வேக வைத்து இறக்கவும்.

நன்றி:- சமையல் கலை நிபுணர் உஷாதேவி

நன்றி:- அவள் விகடன்

30 வகை குளுகுளு உணவுகள்


30 வகை குளுகுளு உணவுகள்

கத்தரி வெயில் கதகளி ஆடும் கால கட்டம் இது. கூடவே, இந்த சீஸனுக்கே உரித்தான அசௌகரியங்களான நாவறட்சி, நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவை வாட்டியெடுக்கும். இவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவும் வகையில், 30 வகை ‘குளுகுளு’ உணவுகளை, சுவையாக தயாரித்து இங்கே வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.

”உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, பூசணி, கேழ்வரகு, எலுமிச்சை, மோர் போன்ற பொருட்களைக் கொண்டு, பல்வேறு உணவு வகைகளை பார்த்துப் பார்த்து செய்து கொடுத்திருக்கிறேன். இவற்றைப்  பயன்படுத்தினால், கோடையின் உக்கிரத்தை நீங்கள் அதிக சிரமமின்றி கடந்து செல்ல உதவிகரமாக இருக்கும்” என்று ஆருயிர் தோழியாக, அக்கறை ததும்ப கூறுகிறார் தீபா.

பூசணி கூலர்

தேவையானவை: வெள்ளை பூசணி – ஒரு துண்டு, பனங்கற்கண்டு – தேவைக்கேற்ப,

செய்முறை: வெள்ளை பூசணியின் தோலை நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக்கவும். பிறகு, அதை வேக வைத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் நைஸாக அரைத்து, வடிகட்டவும். பனங்கற்கண்டு கலந்து பருகவும்.

நீர்கடுப்பை நீக்கும் பானம் இது! ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்றும் பருகலாம்.


சின்ன வெங்காயம் துவட்டல்

தேவையானவை: சின்ன வெங்காயம் – ஒரு கப், மிளகு – சீரகத்தூள் – 2 டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். கடாயில் நெய்யை காயவிட்டு… நறுக்கிய வெங்காயம், மிளகு – சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, கீழே இறக்கவும்.

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.


தேங்காய்  வெல்ல பால்

தேவையானவை: தேங்காய் துருவல் – ஒரு கப், பொடித்த வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பால் – கால் கப்

செய்முறை:  பாலைக் காய்ச்சி கொள்ளவும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, அதனுடன் பால், தேங்காய்ப் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்த பின்பு இறக்கி பரிமாறவும்.

இதை தோசை, இட்லி, ஆபத்துடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அல்லது,  அப்படியே பருகலாம். தேங்காய்ப் பால் வயிறு, வாய் புண்களை ஆற்ற வல்லது!


ஜவ்வரிசி பகாளாபாத்

தேவையானவை: ஜவ்வரிசி – அரை கப், தயிர் – ஒரு கப், காய்ச்சி ஆற வைத்த பால் – அரை கப், இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 3, கடுகு, பெருங்காயத்தூள் – தாளிக்க தேவையான அளவு, கேரட் துருவல் – 4 டீஸ்பூன்,  கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதை வேக வைத்து, தயிருடன் கலக்கவும். அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். பின்னர் கடாயில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, அதை ஜவ்வரிசி கலவை மீது கொட்டி அலங்கரித்து, கலர்ஃபுல்லாக பரிமாறவும்.


மேங்கோ கப்

தேவையானவை: மாம்பழம் – ஒன்று, தயிர், பால், சர்க்கரை – தேவைக்கேற்ப.

செய்முறை: பாலைக் காய்ச்சி ஆற வைத்து சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மாம்பழத்தை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக்கவும். ஒரு சிறிய கப்பில் சிறிதளவு  தயிர், காய்ச்சி வைத்திருக்கும் பால் சேர்த்து, மேலே சிறிதளவு மாம்பழ துண்டுகளை சேர்த்துக் கலக்கவும். இதே போல் சில கப்புகளில் செய்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும்.

இது… இனிப்பும், புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும்.


பச்சைப் பயறு கீர்

தேவையானவை: பச்சைப் பயறு – ஒரு கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், பால் – ஒன்றரை கப், முந்திரி, பாதாம் – தலா 10.

செய்முறை: பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும். ஆறிய பின்னர், வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி அதனுடன் கலக்கவும். முந்திரி, பாதாம் பருப்புகளை பாலில் ஊற வைத்து அரைத்து, வேக வைத்த பயறுடன் கலக்கவும். இதனை அடுப்பில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கினால்… பச்சைப் பயறு கீர் ரெடி!

பச்சைப் பயறு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.


சம்மர் ரைஸ்

தேவையானவை: சாதம் – ஒரு கப், கறிவேப்பிலை – ஒரு கப், மிளகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – இரண்டு டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுக்கவும். மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். ஆறிய பின்பு பருப்புகளுடன் கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். சூடான சாதத்துடன் நெய், உப்பு, சிறிதளவு அரைத்த பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட… உடல் குளிர்ச்சி பெறும்.


லெமன் பானகம்

தேவையானவை: எலுமிச்சம் பழம் – ஒன்று, புதினா – சிறிதளவு, சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,  பொடித்த வெல்லம் – தேவைக்கேற்ப.

செய்முறை:  வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, ஆறவைக்கவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்தால்… லெமன் பானகம் ரெடி! இதனை பரிமாறும்போது சுத்தம் செய்த புதினா இலைகளை மேலே தூவிக் கொடுத்தால்… சுவை கூடும்.

கோடையில் ஏற்படும் அதீத தாகத்தை தணிக்கும் இந்த பானகம்.


பாசிப்பருப்பு துவையல்

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய்  – 4, தேங்காய் துருவல் – அரை கப், பெருங்காயத்தூள், கடுகு – தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு… பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை காயவிட்டு, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்த்தால்… பாசிப்பருப்பு துவையல் தயார்.

இந்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.


கீரைச் சாறு

தேவையானவை:மணத்தக்காளி கீரை – ஒரு கப், மோர் – ஒரு கப்,  மிளகுத்தூள். சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  மணத்தக்காளி கீரையை கழுவி சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் மோர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துப் பருகலாம்.

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு கோடையில் இது அருமருந்து!


முளைப்பயறு ட்ரீட்

தேவையானவை:முளைகட்டிய பயறு – ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  முளைப்பயறை ஆவியில் வேகவைக்கவும் (குக்கரிலும் வேகவிடலாம்). இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்தால்… முளைப்பயறு ட்ரீட் ரெடி!

இதை மாலை நேர சிற்றுண்டியாக அனைத்து வயதினரும் சம்மரில் சாப்பிடலாம்.


நீராகாரம்

தேவையானவை: சாதம் – ஒரு கப், மோர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைக்கவும். மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் மோர், உப்பு சேர்த்துப் பருகவும்,

நீராகாரம் உடல் சூட்டை தணிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது.


தேங்காய்ப் பால் ரசம்

தேவையானவை: தேங்காய்ப் பால் – ஒரு கப், புளி – நெல்லிகாய் அளவு, தக்காளி – ஒன்று, பூண்டு – 4 பல், மிளகு – சீரகப் பொடி – ஒரு டீஸ்பூன், கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 4, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளியைக் கரைத்து உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் தேங்காய்ப் பாலை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால்… ரசம் தயார். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தட்டிய பூண்டு பல் சேர்த்து தாளித்து… கொதிக்கவிட்டு இறக்கி வைத்த ரசத்துடன் சேர்க்கவும். மேலே மிளகு – சீரகப்பொடி, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


அரிசி  மோர் கஞ்சி

தேவையானவை: புழுங்கலரிசி – ஒரு கப், மோர் – இரண்டு கப், சின்ன வெங்காயம் – 5, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ரவை போல உடைக்கவும். இதை தண்ணீருடன் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து ஆறவிடவும். பின்பு இதனுடன் உப்பு, மோர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து சாப்பிடவும்.


ராகி மோர்க்களி

தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், புளித்த மோர் – ஒன்றரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, மோர் மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகு மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து… கடுகு, உளுத்தம்பருப்பு, மோர் மிளகாய் தாளிக்கவும். இதில் கரைத்த கேழ்வரகு மாவை ஊற்றி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து கிளறவும். நன்கு வெந்து பளபளவென வந்த பின்பு இறக்கி… சிறிய கிண்ணங்களில் பரிமாறவும்.


ஃப்ரூட் லஸ்ஸி

தேவையானவை: தயிர் – ஒரு கப், மாதுளை முத்துக்கள் – ஒரு கப், சர்க்கரை – 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் – 4

செய்முறை: மாதுளை முத்துக்களை அரைத்து தயிருடன் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். பருகும்போது இதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரை வர அடித்து, குளிர வைத்து பருகவும்.


பூசணி இட்லி

தேவையானவை: இட்லி மாவு, பூசணி துண்டுகள் – தலா ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பூசணியை சிறிய துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை இட்லி மாவுடன் கலக்கவும். இந்த மாவை இட்லிகளாக வார்த்து எடுக்கவும்.

வெயிலுக்கு ஏற்ற காலைச் சிற்றுண்டி இந்த பூசணி இட்லி! இதற்கு கிரீன் சட்னி தொட்டுக் கொள்ளலாம்.


முளைகட்டிய வெந்தய களி

தேவையானவை: புழுங்கல் அரிசி – 50 கிராம், முளைகட்டிய வெந்தயம் – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 4 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். முளைகட்டிய வெந்தயத்தை ஆவியில் வேகவிடவும். பின்பு பொடித்த அரிசியுடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அரிசி – வெந்தய விழுதைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து களி போல கிளறி சாப்பிடவும்.

உடல் சூட்டை தணிக்கும் களி இது! உடல் நலம் காக்க, இதை தினமும் சிறிதளவு  சாப்பிடலாமே!


பூசணி பொரியல்

தேவையானவை: வெள்ளை பூசணிக் கீற்று – ஒன்று, மிளகு – 4, காய்ந்த மிளகாய் – 2, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு, புளி – கொட்டைப்பாக்கு அளவு, சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை பூசணியை சிறு சிறு துண்டுகளாக்கி மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். ஆறிய பின் பொடிக்கவும். வெந்த பூசணிக்காயுடன் புளிக் கரைசல், உப்பு, வறுத்த அரைத்த பொடி சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை காய விட்டு, சீரகம் தாளித்து, வேக வைத்த கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.


முளைப்பயறு தோசை

தேவையானவை: முளைகட்டிய பயறு – அரை கப், தோசை மாவு – ஒரு கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முளைக்கட்டிய பயறுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை தோசை மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை சற்று கனமான சிறிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

இந்த தோசை மிகவும் சத்துமிக்கது.


ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக்

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், தேங்காய்ப் பால் – தலா ஒரு கப்.

செய்முறை: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமுடன் தேங்காய்ப் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து நுரையுடன் பரிமாறவும். விரும்பினால் ஸ்ட்ரா பெர்ரி பழத் துண்டுகளை மேலே சேர்த்து பருகலாம்.

தேங்காய்ப் பால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.


வெள்ளரி மோர் கூட்டு

தேவையானவை: வெள்ளரிப் பிஞ்சு துண்டுகள் – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு – தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் – 4, கெட்டி மோர் – ஒரு கப், தேங்காய் துருவல் – 5 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெள்ளரி துண்டுகளை தண்ணீர் விட்டு வேக வைத்து உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மோருடன் கலக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து… கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.


அவல் ஃப்ரூட் சாலட்

தேவையானவை: அவல் – ஒரு கப், பச்சை திராட்சை – 10, வாழைப்பழம் – ஒன்று, பேரீச்சம் பழம் – 10, பப்பாளி – ஒரு துண்டு, மாதுளை முத்துக்கள் – கால் கப்.

செய்முறை: வாழைப்பழம், பப்பாளி, பேரீச்சம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அதனுடன் மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்துக் கலக்கவும். அவலை 5 நிமிடம் ஊற வைத்து அலசி, பழக் கலவையுடன் கலந்து பரிமாறவும்.


புளி பானகம்

தேவையானவை: புளி – நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் – தேவைக்கேற்ப, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும். புளியை ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி கொதிக்கவிட்டு, வெல்லக் கரைசல், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

நீர் கடுப்பு ஏற்படும்போது கிராமப்புறங்களில் இந்த பானகத்தை பருகுவார்கள். இது சோர்வை நீக்க வல்லது.


முள்ளங்கி ராய்தா

தேவையானவை: முள்ளங்கி – ஒன்று, இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, தயிர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கியை தோல் சீவி துருவவும். கொத்தமல்லி தழையுடன், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி சேர்த்து நைஸாக அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து உப்பு, அரைத்து வைத்த விழுது, துருவிய முள்ளங்கி சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு… கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முள்ளங்கி – தயிர் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.


மிக்ஸ்டு வெஜ் ஜூஸ்

தேவையானவை: கேரட், வெள்ளரிப் பிஞ்சு – தலா ஒன்று, மோர் – தேவையான அளவு, மிளகு – 4, புதினா – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  கேரட், வெள்ளரியை சுத்தம் செய்து… புதினா, மிளகு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை மோருடன் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துப் பருகவும்.

இந்த ஜூஸ் வெயில் நேரத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது.


பசுமை சட்னி

தேவையானவை: கொத்தமல்லித் தழை – ஒரு கப், புதினா இலைகள் – அரை கப், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லித் தழை, புதினா இலைகளை சுத்தம் செய்து பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்தால்… பசுமை சட்னி தயார்.

வதக்காமல் அப்படியே அரைப்பதால் சத்துகள் வீணாகாது! இது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.


தர்பூஸ் டிரிங்

தேவையானவை: தர்பூசணி துண்டுகள், தேங்காய்ப் பால் – தலா ஒரு கப், சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணி துண்டுகளை அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். தேங்காய்ப் பாலுடன்  தர்பூசணி ஜூஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.

இதை அப்படியே பருகலாம். அல்லது, குளிர வைத்தும் பருகலாம்.


கேரட் ஜூஸ்

தேவையானவை: கேரட், எலுமிச்சம் பழம் – தலா ஒன்று, சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை கழுவி சுத்தம் செய்து தோல் சீவாமல் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து கலந்து பருகவும்.

இது விட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் ‘சி’ நிறைந்த பானம்!


லெமன்  ஜிஞ்சர் டிரிங்க்

தேவையானவை: எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – 2 கப், துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம், தேன் – தேவையான அளவு.

செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து இஞ்சி, வெல்லம் சேர்த்து, அரை கப்பாக குறுகிய பின்பு இறக்கி வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து பருக… கோடையில் வரும் பித்தத்தை தவிர்க்கலாம்.

தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: ‘செஃப்’ ரஜினி

உடல் எடையை குறைக்க வேண்டுமா?… அப்போ சூப் குடிங்க பாஸ்!…


ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை.

எனவே, நம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் மற்றும் எடையை குறைக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவு முறை உள்ளது – அது தான் சூப்! சூப்களை உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் அதிகபட்ச கலோரிகள் கூடுவதை புத்திசாலித்தனமாக தவிர்க்க முடியும்.

வெள்ளை பீன்ஸ் சூப்

குறைவான சர்க்கரை, கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த சுவைமிக்க பானம் எடையையும் குறைக்கும். நல்ல சுவையும், எளிதில் தயாரிக்கக் கூடியதாகவம் மற்றும் நிறைய புரதங்களை கொண்டிருப்பதும் இந்த சூப்பின் சிறப்பாகும்.

ப்ராக்கோலி சூப்

உங்களுக்கு ப்ராக்கோலியை பிடிக்காவிட்டாலும் கூட, எடை குறைப்பில் அதன் பலன்கள் அபரிமிதமானவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 100 கிராம் ப்ராக்கோலியில் 1.2 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. ஆனால் நிறைய நார்ச்சத்தும், அவசியமான பிற ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன.

பரங்கிக்காய் சூப்

பரங்கிக்காய் சூப் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை உங்களால் வேகமாக குறைக்க முடியும். கொழுப்பும், சர்க்கரையும் குறைவாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான புரதங்களும், நார்ச்சத்தும் நிரம்பியிருக்கும் பானமாக இது உள்ளது.

கைக்குத்தல் அரிசியுடன் சிக்கன் சூப்

வேகமாக எடையைக் குறைக்க உதவும் சூப்களில் ஒன்றான இதில், குறைவான அளவு சோடியமும், அதிக அளவு புரதங்களும் உள்ளன. 100 கிராம் பழுப்பு அரிசி சிக்கன் சூப்பில் 0.7 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது.

உருளைக்கிழங்கு சூப்

இந்த சூப்பை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதுடன், எடையையும் உங்களால் குறைக்க முடியும். இந்த பானத்துடன் பல்வகை தானியங்களையும் சேர்த்துக் கொண்டு, குறைவான கொழுப்புடைய பண்டமாக சாப்பிடலாம்.

கேரட் சூப்

சுவைமிக்க கேரட் சூப்பில் கொத்தமல்லியை போட்டு குடிக்கும் போது அது குறைவான சர்க்கரையை கொண்டிருக்கும். 100 கிராம் அளவிற்கு இந்த சூப் உணவை சாப்பிடுபவர்களுக்கு 1.2 கிராம் அளவிற்கே கொழுப்புச் சத்து கிடைக்கும்.

பட்டாணி சூப்

நீங்கள் தினந்தோறும் பட்டாணியுடன், உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சேர்த்து சூப்பாக குடித்து வந்தால் உடலின் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க முடியும். புரதங்கள் நிரம்பியதாகவும், குறைவான கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் கொண்டதாகவும் இருக்கும் பட்டாணி சூப் ஆரோக்கியமான தேர்வாகவே இருக்கும்.

காளான் சூப்

100 கிராம் உணவில் 1.2 கிராம் அளவிற்கே கொழுப்பைத் தரும் குணம் கொண்ட காளான் சூப் எடையை குறைக்க தேர்ந்தெடுக்க வேண்டிய மிகச்சிறந்த சூப்களில் ஒன்றாகும். இது உடலுக்குத் தேவையான புரதங்களை கொடுப்பதுடன், தேவையற்ற எடையையும் திறமையுடன் குறைக்கிறது.

பருப்பு சூப்

மிகவும் ஆரோக்கியமானதாகவும், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பியதாகவும் உள்ள பருப்பு சூப் நீங்கள் எடையைக் குறைக்க தேர்ந்தெடுக்க வேண்டிய சரியான சூப் ஆகும். 100 கிராமில் 0.8 கிராம் அளவிற்கே கொழுப்பு உள்ள உணவாக இது உள்ளது.

தக்காளி சூப்

எளிமையாக தயாரிக்கவும் மற்றும் சுவையாக இருக்கவும் கூடிய தக்காளி சூப்பினால் எடையைக் குறைக்க முடியும் என்பது ஆச்சரியமான விஷயமாக தோன்றுகிறதா? இந்த சூப் உங்களுக்குத் தேவையான பொட்டாசியம், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகிறது. குறைவான கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டிருக்கும் இந்த சூப்பில் வைட்டமின் சி உள்ளது.

விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி

பிரிவுகள்:கட்டுரைகள், சூப் குடிங்க, மருத்துவம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

30 வகை சூப் – சமையல் கலை நிபுணர் உஷாதேவி


மழைக் காலம்… குளிர் காலம்… என்று வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால்தான் திருப்தி! அது, முழுக்க முழுக்க நம் உடலுக்கு நன்மை தருவதாக இருந்தால்… டூ இன் ஒன் மகிழ்ச்சிதானே! இதோ… சுண்டியிழுக்கும் சுவை ப்ளஸ் ஆரோக்கிய குணம் இரண்டும் கொண்ட 30 வகை சூப்கள் இங்கே அணிவகுக்கின்றன.

”பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், நீங்கள் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்” என்று உத்தரவாதம் தருகிறார் ‘சமையல் கலை நிபுணர்’ உஷாதேவி. அவருடைய ரெசிபிகளை அழகு மிளிர அலங்கரிக்கிறார் செஃப் ரஜினி.

 


ஃபிரெஞ்சு ஆனியன் சூப்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 4, வெண்ணெய் – 50 கிராம், வெள்ளை வெங்காயம் – 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் – 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர், சர்க்கரை – சிறிதளவு,  உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.

செய்முறை: ‘மைக்ரோவேவ் அவன்’-ஐ ‘ப்ரி-ஹீட்’  செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து, பொன்னிறமாக ஆகும் வரை மேலும் வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து,  கெட்டியானவுடன் இறக்கவும். வறுத்த பிரெட் துண்டுகளை கப்பில் வைத்து, அதன் மேல் சூப் ஊற்றி, மிளகுத்தூள், சிறிதளவு துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.

குறிப்பு: ‘மைக்ரோ அவன்’ இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம்.

காய்கறி வேகவைத்த தண்ணீர் தயாரிக்க: வெங்காயம், செலரி, கேரட், டர்னிப், தக்காளி – தலா ஒன்று ( பெரிதாக நறுக்கவும்), பூண்டு – 2 பல் (தட்டவும்), பிரிஞ்சி இலை – ஒன்று, தைம் இலை – ஒரு டீஸ்பூன், பாஸில் இலை – ஒரு டீஸ்பூன், மிளகு – 3 டீஸ்பூன், லவங்கம் – 2, பட்டை – ஒன்று, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை போட்டு முதலில் அதிக தீயில் 5 – 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பிறகு மிதமான தீயில் 30-45 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும். 


வெண்டைக்காய் சூப்

தேவையானவை: வெண்டைக்காய் – 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் – ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.

தேவைப்பட்டால் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்க்கலாம் (நன்கு சூடாக இருக்கும்போதுதான் முட்டையைச் சேர்க்க வேண்டும்).


காய்கறி சூப்

தேவையானவை: பீன்ஸ் – 10, கேரட் – ஒன்று, கோஸ் – 50 கிராம், வெங்காயம் – ஒன்று, பூண்டு – ஒரு பல், வெண்ணெய், மைதா மாவு (அ) சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பால்  – ஒரு சிறிய கப், நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி,  பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, காய்கறிகள் வெந்தவுடன் சோள மாவு (அ) மைதா மாவை பாலில் கரைத்து சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து, இறக்கி பரிமாறவும்.


பாதாம் சூப்

தேவையானவை: பாதாம் – 50 கிராம், வெங்காயம் – ஒன்று,  செலரி, பாஸில் இலை – சிறிதளவு, காய்கறி வேகவைத்த தண்ணீர் – அரை லிட்டர், பால் – ஒரு கப், பாதாம் – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும்.  ஒரு பாத்திரத்தில், உரித்த பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும். வெந்தவுடன் இறக்கி, மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். இதனை அடுப்பில் வைத்து, மிக சிறு தீயில் சிறிது நேரம் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும். இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே வறுத்த பாதாமை நறுக்கி சேர்த்துப் பரிமாறவும்.


காளான் கிரீம் சூப்

தேவையானவை: காளான் – ஒரு பாக்கெட், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய பூண்டு – 2 பல், பிரிஞ்சி இலை – ஒன்று, தைம் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)  – சிறிதளவு, வெள்ளை மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, வொயிட் சாஸ் – 100 மில்லி, வெண்ணெய் – உப்பு – தேவையான அளவு.

வொயிட் சாஸ்  செய்வதற்கு:  வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், மைதா – 3 டேபிள்ஸ்பூன், பால் – அரை லிட்டர், உப்பு – சிறிதளவு.

செய்முறை: அடி கனமான கடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் மைதாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். பின் அடுப்பை அணைத்து, பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கட்டியில்லாமல் கரைத்து மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். இதில் சிறிதளவு உப்பு போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால்… வொயிட் சாஸ் ரெடி.

வேறொரு காடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். நன்கு வதங்கும்போது பூண்டு, பிரிஞ்சி இலை, தைம் இலை சேர்த்து வதக்கி, நறுக்கிய காளானை சேர்த்து வேகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து கொதி வந்தவுடன்… வொயிட் சாஸ்,  உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, பரிமாறவும்.


மூங்கில் ரைஸ் வெஜ் சூப்

தேவையானவை: மூங்கில் ரைஸ் (‘காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) – ஒரு கப், கேரட் – ஒன்று (நறுக்கவும்), வேக வைத்த பட்டாணி – ஒரு கப், பீன்ஸ் – 5 (நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 2 பல், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை  – ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: மூங்கில் ரைஸில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.

கடாயில் வெண்ணெயை காயவைத்து… பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு  கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் ரைஸை  சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.


பானிபூரி சூப்

தேவையானவை: சிறு பூரி – 10 (டிபார்ட்மென்ட் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்), உருளைக்கிழங்கு – 100 கிராம் (வேக வைத்து எடுத்து வைக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி அளவு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது), பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன்,  வேக வைத்த பருப்புத் தண்ணீர் – 2 கப், புளிக் கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன்,  எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,  பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு – 2 டீஸ்பூன்,  பூண்டு – ஒரு பல், க்ரீம், ஓமப்பொடி – சிறிதளவு,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்புத் தண்ணீர், புளிக் கரைசல், வெல்லம், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, அதில் அரைத்த புதினா விழுதை சேர்க்கவும். இதனுடன் கறுப்பு உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் வேக வைத்த உருளைகிழங்கை நறுக்கிப் போட்டு அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து,  பூரியை நொறுகிப் போட்டு, ரெடி செய்த சூப்பை ஊற்றி, மேலே சிறிது கிரீம் மற்றும் ஓமப்பொடி தூவி பரிமாறவும்.


எலுமிச்சை சூப்

தேவையானவை: எலுமிச்சம் பழம் – 3 (சாறு எடுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர், பச்சை மிளகாய் – காரத்துக்கேற்ப, இஞ்சி – சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக  இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.


மின்ஸ்டோன் சூப்

தேவையானவை: கேரட் – ஒன்று, பீன்ஸ் – 5, கோஸ் – 100 கிராம், வெங்காயம் – 2, பிரிஞ்சி இலை – ஒன்று, செலரி, தைம் இலை, பாஸில் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), துருவிய சீஸ் – சிறிதளவு, டர்னிப் – ஒன்று, தக்காளி – 3, பூண்டு – 2 பல், ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பாஸ்தா – ஒரு கப் (வேக வைத்தது), உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தக்காளியை தோலுரித்து, மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை நன்கு வறுக்கவும். அதனுடன் தைம் இலை, பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், டர்னிப் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி, வெந்தவுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். வேக வைத்த காய்கறி தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, பாஸில் இலை, வேக வைத்த பாஸ்தா சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி, அதன் மேல் துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.


மிளகு சூப்

தேவையானவை: துவரம்பருப்பு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, உருளைக்கிழங்கு – ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), ஆப்பிள் – அரை துண்டு (சதுரமாக வெட்டவும்), தேங்காய் துருவல் – அரை கப் (பால் எடுக்கவும்), பூண்டு – 3 பல், கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் – தலா 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

கறிப்பொடிக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, மிளகு – 2 டீஸ்பூன், கொத்தமல்லி – 3 டீஸ்பூன், மஞ்சள் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 10, சோம்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை: கறிப்பொடிக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து  பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலையை போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் கறிப்பொடி சேர்த்து, துவரம்பருப்பை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

இது, சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.


ஹாட் அண்ட் சோர் சூப்

தேவையானவை: கேரட் – ஒன்று, பீன்ஸ் – 5, கோஸ் – 100 கிராம், வெங்காயம், பிரிஞ்சி இலை –  தலா ஒன்று, வினிகர் – கால் கப், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 12, அஜினமோட்டோ – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயில் பாதி அளவு எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியவுடன் சிறிதளவு வினிகர், கெட்சப் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். மீதம் உள்ள மிளகாயை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடித்த மிளகாயை போட்டு அடுப்பை அணைத்து விடவும். ஒன்றன்பின் ஒன்றாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். இதில் மீதமுள்ள வினிகர், அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், காய்கறி தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், அஜினமோட்டோ சேர்த்து கொதிக்க வைக்கவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்து கட்டி விழாமல் கொதிக்கவிடவும். இறக்கும்போது மறுபடியும் அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி… மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் ஒரு முட்டையை அடித்து கலக்கி இதில் சேர்த்துக் கிளறி பரிமாறலாம்.


ஆஸ்பரகஸ் சூப்

தேவையானவை: ஆஸ்பரகஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – அரை டின், கிரீம் – ஒரு கப், மைதா மாவு, வெண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி,  உருகியதும் மைதா மாவை சேர்த்து நன்கு கலக்கி, உப்பு, ஆஸ்பரகஸ் சேர்த்து, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர்  விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். பரிமாறும்போது கிரீம் சேர்க்கவும்.


உருளைக்கிழங்கு சூப்

தேவையானவை: வேக வைத்து, தோலுரித்த உருளைக்கிழங்கு – ஒரு கப் வெண்ணெய், மைதா மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கிரீம், சீஸ், பால் – தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி, மைதா மாவை சிறிது சிறிதாக தூவி வறுத்து அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டியில்லாமல் கிண்டி மறுபடியும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். (சூப் கெட்டியாக இருந்தால் காய்கறி வேக வைத்த தண்ணீரை  சேர்த்துக் கொள்ளலாம்). இதில் உப்பு, மிளகுத்தூள், சீஸ் சேர்த்து, சீஸ் உருகும் வரை வைத்திருந்து இறக்கி, கிரீமுடன் பரிமாறவும்.

குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிது எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சேர்த்தும் சூப் செய்யலாம்.


ஆவகாடோ  கார்ன் சூப்

தேவையானவை: ஆவகாடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)   – ஒன்று, உதிர்த்த ஸ்வீட் கார்ன்  – ஒரு கப், பூண்டு – 2 பல், காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு,

செய்முறை: ஆவகாடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும். மிக்ஸியில்… ஆவகாடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதில் அரைத்த ஆவகாடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து… அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி… பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.

குறிப்பு: ஆவகாடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப் பை சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும்.


தக்காளி சூப்

தேவையானவை: தக்காளி –  கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், பால், நறுக்கிய கொத்தமல்லி தழை – தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி… அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி, மற்றொரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி – வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி… உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.


தக்காளி கிரீம் சூப்

தேவையானவை: தக்காளி – 3, வெங்காயம் – ஒன்று, செலரி – சிறிதளவு, நறுக்கிய குடமிளகாய் – சிறிதளவு, பூண்டு – ஒரு பல், பாஸில் இலை, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மைதா – 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், கிரீம், பிரெட் துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு வெண்ணெயை போட்டு, உருகியதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, செலரி, குடமிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பாஸில் இலை, மிளகுத்தூள் சேர்த்து, கொதி வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுக்கவும்.

மற்றொரு கடாயில் மீதமுள்ள வெண்ணெயை போட்டு, உருகியதும் மைதா சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, வடிகட்டி வைத்துள்ள சாறுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி, கிரீம் மற்றும் வறுத்த பிரெட் துண்டு சேர்த்துப் பரிமாறவும்.


மேன்சௌ சூப்

தேவையானவை: பீன்ஸ் – 5, கேரட், வெங்காயம், குடமிளகாய் – தலா ஒன்று, கோஸ் – 100 கிராம், பேபி கார்ன் – 2, வெங்காயத்தாள் – சிறிதளவு, வினிகர், தக்காளி சாஸ், சோள மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – காரத்துகேற்ப, அஜினமோட்டோ – சிறிதளவு, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், சில்லி பேஸ்ட் – காரத்துக்கேற்ப, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி,  நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். காய்கறிகள் பாதி வெந்தவுடன் அதில் சில்லி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி,  சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ஒரு கிண்ணத்தில் சோள மாவு, சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், அஜினமோட்டோ, உப்பு, மிளகுதூள் சேர்த்துக் கலந்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறி, நன்கு கொதித்தவுடன் இறக்கி… மேலே வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

குறிப்பு: சில்லி பேஸ்ட் தயாரிக்க… வெங்காயம் ஒன்று, பூண்டு ஒரு பல், தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த காய்ந்த மிளகாய் ஐந்து, புளி நெல்லிக் காய் அளவு எடுத்து… தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.


புரூக்கோலி  கிரீம் சூப்

தேவையானவை: புரூக்கோலி – ஒரு கப், காய்கறி வேக வைத்த தண்ணீர் – 4 கப், வெண்ணெய், மைதா – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்),  தைம் இலை – சிறிதளவு, கிரீம் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, துருவிய சீஸ் – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் தைம் இலை சேர்த்து, நன்கு வதங்கியவுடன் மைதா சேர்த்து வறுக்கவும். பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு புரூக்கோலி சேர்த்து வேகவிடவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும். வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி… கிரீம், துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.


பப்பாளி  இஞ்சி சூப்

தேவையானவை: பப்பாளி பழம்- சிறியது (பாதி), இஞ்சி – ஒரு சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை, கிரீம் – சிறிதளவு. உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி… வெங்காயம், இஞ்சி, மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும்  சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி… சூப் கப்பில் ஊற்றவும். அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.


க்ளியர் சூப்

தேவையானவை: வெங்காயம், கேரட் – தலா ஒன்று, செலரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – சிறிதளவு, முட்டை – ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி – பூண்டு – ஒரு டீஸ்பூன், வினிகர் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முட்டையை உடைத்து வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில்  காய்கறி வேக வைத்த தண்ணீர், நறுக்கிய வெங்காயம், கேரட், இஞ்சி – பூண்டு, முட்டை – வினிகர் கலவை, உப்பு எல்லாம் சேர்த்து, அடுப்பை அதிக தீயில் வைத்து கரண்டியால் கிளறாமல் கொதிக்க வைத்து… பிறகு மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். காய்கறி, முட்டை வெந்து மேலே வரும்போது இறக்கி, சூப் கப்பில் ஊற்றி பரிமாறவும். விருப்பப்பட்டால் வடிகட்டியும் பரிமாறலாம்.


திடீர் சூப்

தேவையானவை: கேரட் – ஒன்று, பீன்ஸ் – 5, கோஸ் – 50 கிராம், நறுக்கிய பூண்டு – இஞ்சி – 2 டீஸ்பூன், வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்),  செலரி – ஒன்று, புரூக்கோலி – சிறிதளவு, சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் ஆலிவ் ஆயில், கொத்தமல்லி தழை – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை காயவைத்து… நறுக்கிய பூண்டு – இஞ்சியை வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், செலரி, புரூக்கோலி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும். தேவைப்பட்டால் சோள மா¬வை கரைத்து ஊற்றி கெட்டியாக்கி இறக்கி, கொத்தமல்லி தழை  தூவி பரிமாறவும்.


முளைகட்டிய நவதானிய சூப்

தேவையானவை: முளைகட்டிய பயறுகள் (டிபார்ட்மென்ட் கடைகளில் எல்லாம் சேர்ந்த பாக்கெட்டாக கிடைக்கும்) – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பூண்டு – 2 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – காரத்துக்கேற்ப, கொத்தமல்லி தழை – தேவையான அளவு,  எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒரு கப், புளிக்காத கெட்டி தயிர் – அரை கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க  விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


பருப்பு சூப்

தேவையானவை: வேக வைத்த பருப்பு – ஒரு கப், மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப,  பூண்டு – 2 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, பிரெட் ஸ்லைஸ் – 2 ( ‘கட்’ செய்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்), பனீர் – 50 கிராம் (எண்ணெய் பொரித்தெடுக்கவும்), உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப் பதத்துக்கு வந்தவுடன் அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறும்போது நறுக்கிய கொத்த மல்லி தழை, பொரித்த பனீர், வறுத்த பிரெட் சேர்க்கவும்.


பட்டாணி சூப்

தேவையானவை: பச்சைப் பட்டாணி – கால் கிலோ, வெங்காயம் – ஒன்று, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், காய்கறி வேக வைத்த தண்ணீர், கிரீம், பால் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சைப் பட்டாணி, வெங்காயம் காய்கறி வேக வைத்த  தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். மீண்டும்  சிறிது தண்ணீர் சேர்த்து, சோள மாவை பாலில் கரைத்து ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, மிளகுத்தூள், கரம்மசலாத்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, சூப் கப்பில் ஊற்றி, மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும். 


சிம்பிள் சூப்

தேவையானவை: காய்கறிகளின் தோல், காம்பு, தண்டு (கழுவிக் கொள்ளவும்), பேரிக்காய் தோல் – தேவையான அளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,  பூண்டு – 2 பல், நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, வொயிட் சாஸ் – 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயை விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயதாள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய காய்கறி தோல், தண்டு, இலை, பேரிக்காய் தோல்களை கழுவி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வொயிட் சாஸ்,  உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி… கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


ஸ்வீட் கார்ன் சூப்

தேவையானவை: காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், நறுக்கிய கேரட் – 2 டீஸ்பூன், கோஸ் – 50 கிராம், உதிர்த்த ஸ்வீட் கார்ன்  – 3 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் – தலா 2 (நறுக்கிக் கொள்ளவும்), சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் – அரை டீஸ்பூன், அஜினமோட்டோ – கால் டீஸ்பூன், வெங்காயத்தாள் – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் காய்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கொதிக்க விடவும், பாதி வெந்தவுடன்… உப்பு, மிளகுத்தூள், வினிகர், அஜினமோட்டோ சேர்த்து, சோள மாவை தண்ணீரில் கரைத்து  கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கெட்டியாக வரும்போது இறக்கி, கிண்ணத்தில் ஊற்றி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.


டோஃபு  பாலக் சூப்

தேவையானவை: பாலக் கீரை – ஒரு கப், டோஃபு (சோயா பனீர்) – 100 கிராம், வெங்காயம் – ஒன்று, செலரி – சிறிதளவு,  கோஸ் – 100 கிராம், நறுக்கிய இஞ்சி – பூண்டு – ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் (அ) வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காடாயில் எண்ணெய் (அ) வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய கோஸ், செலரி, இஞ்சி – பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பாலக் மற்றும் டோஃபு சேர்க்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


பூண்டு சூப்

தேவையானவை: முழுப்பூண்டு – 2 (தோலுரிக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), தண்ணீர் – அரை லிட்டர், மைதா – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் – ஒரு கப், கிரீம் அல்லது கெட்டித் தயிர் – சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்       தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மைதாவையும் சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி,  தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, கிரீம் (அ) தயிர் சேர்த்துப் பரிமாறவும்.


வெஜிடபிள்  நூடுல்ஸ் சூப்

தேவையானவை: நறுக்கிய காய்கறிகள் (எல்லாம் சேர்த்து வேக வைத்தது), நூடுல்ஸ் – தலா ஒரு கப் (வேக வைக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் – 4 கப், வெங்காயம் – ஒன்று, மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பூண்டு – ஒரு பல்,  வெங்காயத்தாள் – ஒன்று (நறுக்கியது), நறுக்கிய கொத்தமல்லி தழை  – சிறிதளவு, வெண்ணெய், சோள மாவு – தலா ஒரு  டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயை போட்டு, உருகியதும் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, அதனுடன் நறுக்கிய  வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி… காய்கறி வேக வைத்த தண்ணீரை  ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். தேவைப்பட்டால் அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்கவிடவும். இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி, கப்பில் ஊற்றி… கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.


பீட்ரூட் சூப்

தேவையானவை: பீட்ரூட் துருவல் – ஒரு கப் , கேரட் துருவல் – அரை கப் , வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் – ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.

செய்முறை: காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி,  தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டி…  உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் கிரீம் சேர்த்துப் பரிமாறலாம்.

நன்றி:- சமையல் கலை நிபுணர் உஷாதேவி

நன்றி:- அவள் விகடன்

பிரிவுகள்:30 வகை சூப் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

30 வகை சுண்டல்-புட்டு சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்


சுண்டல், புட்டு என்று அசத்தியிருக்கும் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன், ”விதம்விதமான… அதேசமயம், சத்து நிறைந்த சுண்டல், புட்டுகள் இவை. இதையெல்லாம் தினம் ஒன்றாக சமைத்துக் கொடுத்து… குட்டீஸ்களை மட்டுமல்ல… பெரூஸ்களையும் நீங்கள் குஷிப்படுத்தலாம்” என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார்.

தொடரட்டும் இந்த உற்சாகம்… உங்கள் இல்லங்களிலும்!

சம்பா கோதுமை சுண்டல்

தேவையானவை: சம்பா கோதுமை – அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சம்பா கோதுமையை முதல் நாள் இரவே நன்றாகக் களைந்து ஊற வைக்கவும். மறுநாள், குக்கரில் உப்பு சேர்த்து வேக விட்டு, தண்ணீரை வடித்துவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பிறகு, வேக வைத்த சம்பா கோதுமையை அதில் போட்டுக் கிளறவும். கடைசியாக எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.

சிவப்பரிசி புட்டு

தேவையானவை: கைக்குத்தல் அரிசி மாவு – ஒரு கப், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பூரா சர்க்கரை (பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும்) – கால் கப், கொப்பரை துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை.

செய்முறை: மாவில் மிதமான சுடுநீரைத் தெளித்துப் பிசிறி, வெள்ளைத் துணியில் மூட்டை கட்டி, ஆவியில் வேக வைக்கவும். 10 நிமிடம் கழித்து எடுத்து, ஒரு தட்டில் ஆறவிட்டு, கைகளால் நன்றாக தேய்த்து விடவும். இந்த மாவில் கொப்பரைத் துருவல், பூரா சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், நெய் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.

பூரா சர்க்கரை கிடைக்கவில்லையெனில் சாதா சர்க்கரையிலும் இந்த புட்டை செய்யலாம்.

நட்ஸ் சுண்டல்

தேவையானவை: முந்திரித் துண்டுகள், பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா, பனீர் துண்டுகள் – தலா கால் கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… மிளகாயைக் கிள்ளிப் போடவும். காரம் எண்ணெயில் இறங்கியதும், மிளகாயைத் தனியே எடுத்து விடவும். அந்த எண்ணெயில் பனீர் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பிறகு, வறுத்து வைத்துள்ள நட்ஸ்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

மிளகாய் காரத்துக்குப் பதிலாக மிளகுத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

சீரகசம்பா புட்டு

தேவையானவை: சீரக சம்பா அரிசி – ஒரு கப், சர்க்கரை – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: அரிசியை வெறும் கடாயில் சிறிது சிறிதாகப் போட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவை போல் பொடித்துக் கொள்ளவும். இதில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசிறி ஆவியில் வேக வைக்கவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு, 2 கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, வேக வைத்த அரிசி ரவை, நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரித் துண்டுகளை அதில் போட்டுக் கலக்கினால்… சீரகசம்பா புட்டு தயார்!

பழ இனிப்பு சுண்டல்

தேவையானவை: பச்சைப் பயறு – அரை கப், ஆப்பிள் துண்டுகள் – கால் கப், தேன் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பயறை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும். இதனுடன் ஆப்பிள் துண்டுகள், தேன், மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.

கேழ்வரகு மாவு புட்டு

தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், சர்க்கரை – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு, மிதமான தீயில் வறுத்து, தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவிடவும். பிறகு, நன்றாக கைகளால் தேய்த்து கட்டியில்லாமல் சலிக்கவும். அந்த மாவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு, நெய், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.

நேஷனல் சுண்டல்

தேவையானவை: வெள்ளை சோயா பீன்ஸ், பச்சைப் பட்டாணி – தலா அரை கப், சிவப்பு ராஜ்மா – கால் கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸ், ராஜ்மா இரண்டையும் முந்தைய நாள் இரவே தனித்தனியாக ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இரண்டையும் ஒன்றாக வேக விடவும். பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பச்சைப் பட்டாணியை போட்டு மிதமான தீயில் வதக்கவும். அதிலேயே சோயா பீன்ஸ், ராஜ்மா, அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு ஆகியவற்றை வரிசையாகச் சேர்த்து வதக்கினால், மூவண்ணக் கொடி நிறத்தில்… நேஷனல் சுண்டல் தயார்.

பருப்பு ரவை புட்டு

தேவையானவை: துவரம்பருப்பு – முக்கால் கப், வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கீறிய தேங்காய் பல், உப்பு – சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பை சிறு ரவை போல் பொடித்து கடாயில் கொட்டி, மிதமான தீயில் வறுக்கவும். இதில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கலந்து ஆவியில் வேக வைத்து எடுத்து, உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, தூசு தும்பு இல்லாமல் வடிகட்டி, பாதியாகக் காய்ச்சவும். கீறிய தேங்காய் பல், ஏலக்காய்த்தூள், வேக வைத்து உதிர்த்த துவரம்பருப்பு ரவை ஆகியவற்றை அதில் சேர்த்து, நெய்யை விட்டு நன்றாகக் கலந்து வைக்க… பருப்பு ரவை புட்டு ரெடி!

சேனை சுண்டல்

தேவையானவை: சிறிய துண்டுகளாக நறுக்கிய சேனை – ஒரு கப், புளி – கொட்டை பாக்களவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: புளியை 2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, சேனைத் துண்டுகளை போட்டு வேகவிடவும். முக்கால் பதத்தில் வெந்ததும், வடிதட்டில் கொட்டி, தண்ணீரை வடிய விடவும். இந்த சேனைத் துண்டுகளை எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.

“இதென்ன… ‘[பொரியலை’ப் போய் ‘சுண்டல்’ங்கிறாங்களே” என்கிறீர்களா? நவராத்திரி சமயத்தில் இதை ‘சுண்டல்’ என்றே விநியோகிப்பார்கள்.

புழுங்கலரிசி புட்டு

தேவையானவை: புழுங்கலரிசி – ஒன்றரை கப், வெல்லம் – அரை கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: புழுங்கலரிசியை சிறிது சிறிதாக கடாயில் போட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசான சூட்டில் தண்ணீர் விட்டு தளர்வாகக் கலந்து, துணியில் போட்டு மூட்டை கட்டி, ஆவியில் வேகவிடவும். துவரம்பருப்பை முக்கால் பதத்துக்கு வேக வைத்து, கைகளால் கட்டியில்லாமல் மசிக்கவும். கடாயில் வெல்லத்தைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்ததும் தூசு, தும்பு இல்லாமல் வடிகட்டவும். இதைத் திரும்பவும் கொதிக்க வைத்து, கெட்டிப் பாகாகக் காய்ச்சி, மசித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு, பொடித்து வேக வைத்துள்ள புழுங்கல் அரிசி மாவு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறவும். முந்திரி, தேங்காய் துண்டுகளை நெய்யில் வறுத்து, அதில் கொட்டிக் கிளறவும். புழுங்கலரிசி புட்டு தயார்!

இது, இரண்டு நாட்களானாலும் கெடாமல் இருக்கும்.

நாட்டு சோள சுண்டல்

தேவையானவை: நாட்டு சோளம் – அரை கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோளத்தை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு, தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். வேக வைத்த சோளத்தை அதில் சேர்த்து, சிறிது உப்பு போட்டு, பொடித்த மசாலாவை சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

பழ புட்டு

தேவையானவை: அரிசி – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், நேந்திரம் பழம் – 2, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பத்து நிமிடம் நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக அரைக்கவும். இதில் கொதிநீர் விட்டு, உப்பு போட்டுப் பிசிறி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பிறகு, புட்டுக் குழாயில் அழுத்தமாக அடைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். நேந்திரம் பழத்தைப் பொடியாக நறுக்கி, இந்தப் புட்டுடன் கலந்து சாப்பிடவும்.

ஜவ்வரிசி சுண்டல்

தேவையானவை: நைலான் (பெரிய) ஜவ்வரிசி – ஒரு கப், வறுத்த – வேர்க்கடலை – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் – சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை 24 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, ஊறிய ஜவ்வரிசி, உப்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, கிளறி எடுக்கவும். விருப்பப்பட்டால் சிறிது காராபூந்தி சேர்த்துக் கொள்ளலாம்.

சிவப்பு அவல் புட்டு

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், அச்சு வெல்லம் – கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: அவலை நெய்யில் நன்றாக வறுக்கவும். அச்சு வெல்லத்தைத் தூளாக்கி, அவலுடன் சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை சுற்றி எடுக்கவும்.

விருப்பப்பட்டால், முந்திரியை வறுத்துச் சேர்க்கலாம்.

காராமணி மசாலா சுண்டல்

தேவையானவை: காராமணி – ஒரு கப், துருவிய கேரட், துருவிய மாங்காய் – தலா கால் கப், அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது – ஒரு டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காராமணியை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வைத்து குழையாமல் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, சீரகம் தாளித்து துருவிய கேரட், மாங்காய், போட்டு வதக்கி, வேக வைத்த காராமணி, அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது, சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தை தூவி எடுக்கவும்.

காரசார புட்டு

தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, தனியா – 2 டீஸ்பூன், புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு, தனியா, புளி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதை, வெள்ளைத் துணியில் மூட்டைக் கட்டி, ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். வேக வைத்து உதிர்த்த கலவையை அதில் சேர்த்துக் கிளறி இறக்கினால் காரசார புட்டு தயார்.

ராஜ்மா இனிப்பு சுண்டல்

தேவையானவை: ராஜ்மா – ஒரு கப், சர்க்கரை சேர்த்த கோவா – கால் கப், கொப்பரை துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து, குக்கரில் வேக விடவும். கடாயில் நெய் விட்டு, வேக வைத்த ராஜ்மா, கோவா, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கொப்பரைத் துருவலைத் தூவி இறக்கவும்.

சாக்லேட் சுண்டல்

தேவையானவை: நான்கு மணி நேரம் ஊற வைத்து, முக்கால் பதத்தில் வேக வைத்த ஏதேனும் ஒரு வகைப் பயறு – ஒரு கப், சாக்லேட் பவுடர், பால் பவுடர் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், வறுத்த கசகசா – 2 டீஸ்பூன், வறுத்த பாதாம், முந்திரி – சிறிதளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு, அதில் சாக்லேட் பவுடரை சேர்க்கவும். லேசாக உருகியதும்… வேக வைத்த தானியத்தை அதில் சேர்க்கவும். இரண்டும் நன்றாக கலந்து வரும்போது, பால் பவுடர் சேர்த்துக் கிளறவும். கடைசியாக… வறுத்த கசகசா, பாதாம், முந்திரி சேர்த்துக் கலந்து இறக்கவும்.

கருப்பட்டி புட்டு

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், கருப்பட்டி – கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, முந்திரி துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: பச்சரிசியை சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள்சேர்த்து தண்ணீர் விட்டுக் கலந்து, ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். கருப்பட்டியை கடாயில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கி… தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து, வேக வைத்த பச்சரிசி மாவை அதில் போட்டு நன்றாகக் கலந்து, முந்திரி துண்டு களைத் தூவி பரிமாறவும்.

சிக்கி முக்கி சுண்டல்

தேவையானவை: வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, வறுத்த எள், ஒன்றிரண்டாகப் பொடித்த பொட்டுக்கடலை, கோதுமை மாவு, வறுத்த ரவை – தலா கால் கப், கடுகு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கோதுமை மாவு, எள், வேர்க்கடலைப் பொடி, ரவை, பொட்டுக்கடலைப் பொடி, மிளகுத்தூள், உப்பு ஆகியற்றை அதில் சேர்த்து… ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கெட்டியாகக் கிளறவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உருட்டி வைத்துள்ள கலவையைப் போட்டு நன்றாக வறுபடும் அளவுக்குக் கிளறி இறக்கினால்… சிக்கிமுக்கி சுண்டல் தயார்.

மாவு மசாலா சுண்டல்

தேவையானவை: கடலை மாவு, ராகி மாவு, பயத்தம் மாவு – தலா கால் கப், பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு – அரை கப், கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டுக் கொதித்ததும்… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள மாவுகளை ஒன்றாகக் கலந்து, அதில் போட்டுக் கிளறி இறக்கவும். இந்த மாவை மெல்லிய நீள உருளை வடிவில் உருட்டி ஆவியில் வேகவிடவும். ஒவ்வொன்றாக எடுத்து, சிறு பட்டன் வடிவில் வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… தேங்காய் துருவல் சேர்த்து, மாவு பட்டன்களைப் போட்டு வதக்கி, எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சோள ரவை புட்டு

தேவையானவை: சோள ரவை – முக்கால் கப், சர்க்கரை – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய், தேங்காய் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி – சிறிதளவு.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சோள ரவையை சிவக்க வறுத்து, கொதிக்கும் நீரை விட்டு பிசிறி மூடி வைக்கவும். சிறிது நேரம் ஊறியதும் நன்றாகத் தேய்த்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து வைக்கவும். சர்க்கரையைப் பாகாகக் காய்ச்சி, அதில் நெய் சேர்த்து, கலந்து வைத்துள்ள ரவையைப் போட்டுக் கிளறி, வறுத்த முந்திரியைச் சேர்த்தால்… சோள ரவை புட்டு ரெடி!

ஓட்ஸ் புட்டு

தேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், சர்க்கரை – கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, முந்திரித் துண்டுகள் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: நெய்யில் ஓட்ஸ்ஸை போட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்து, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து மேலும் இரண்டு முறை சுற்றி எடுக்கவும். சிறிது நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்து தூவவும்.

ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய அசத்தல் புட்டு இது.

சோயா நக்கெட் சுண்டல்

தேவையானவை: சோயா உருண்டைகள் – 10, கறுப்பு உளுந்து – அரை கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: உளுந்தை 4 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடிக்கவும். சோயா உருண்டைகளை கொதிநீரில் போட்டு, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, பொடித்த சோயாவை சேர்க்கவும். வேக வைத்த உளுந்து, பொடித்து வைத்திருக்கும் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றையும் அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குயிக் எனர்ஜி சுண்டல்

தேவையானவை: பச்சை பயறு – அரை கப், துருவிய நெல்லிக்காய் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பப்பாளி, வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி – சிறிதளவு, துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, புதினா, காய்ந்த மிளகாய் (பொடித்தது) – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை பயறை முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும். அதனுடன் துருவிய நெல்லிக்காய், நறுக்கிய பப்பாளி, வெள்ளரி, தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கலக்கினால்… குயிக் எனர்ஜி சுண்டல் ரெடி!

கிரீன் சுண்டல்

தேவையானவை: பச்சைநிற கொண்டைக் கடலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு கப், பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை – கால் கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், சீஸ் – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைநிற கொண்டைக் கடலையை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக விடவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, கீரையை சேர்த்து, பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும். வேக வைத்த கடலையை அதில் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறி, துருவிய சீஸ் தூவி இறக்கவும்.

மிக்சட் புட்டு

தேவையானவை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கேழ்வரகு, கம்பு, சோளம், நாட்டு சோளம், புழுங்கல் அரிசி எல்லாவற்றையும் தனித்தனியே வறுத்து சேர்த்த கலவை – ஒரு கப், வெல்லம் – மாவின் அளவில் மூன்றில் ஒரு பங்கு, தேங்காய் துருவல் – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு, முந்திரி – சிறிதளவு.

செய்முறை: அரிசி உள்ளிட்ட அனைத்து தானியங்களையும் மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு போட்டு, கொதி தண்ணீர் விட்டு கலந்து ஆவியில் வேக விடவும். வெல்லத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், வேக வைத்த மாவு ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து, அதில் சேர்த்தால் மிக்சட் புட்டு ரெடி!

உக்காரை

தேவையானவை: கடலைப்பருப்பு, பாசிபருப்பு – தலா கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: பருப்புகளை அரை மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஆவியில் வேக வைத்து, ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, பாகாகக் காய்ச்சவும். இதில் ஏலக்காய்த்தூள், நெய், தேங்காய் துருவல், உதிர்த்த பருப்புக் கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுவையான உக்காரை தயார்!

கம்பு மாவு புட்டு

தேவையானவை: கம்பு மாவு – அரை கப், வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: கம்பு மாவுடன் உப்பு சேர்த்து கொதிக்கும் நீரை விட்டு நன்றாக பிசிறி, துணியில் மூட்டைகட்டி ஆவியில் வேகவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு பாகு பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், நெய், வேக வைத்த மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

வெஜிடபிள் புட்டு

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (அ) வாழைக்காய் – 2, வெல்லம் – கால் கப், நெய் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (அ) வாழைக்காயை முக்கால் பதத்தில் வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். அதில் நெய், உப்பு, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மசித்த கிழங்கு சேர்த்து நன்றாகக் கலக்க… வெஜிடபிள் புட்டு தயார்.

தொகுப்பு: ரேவதி, படங்கள்: வீ.நாகமணி

நன்றி:- சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பிரிவுகள்:30 வகை சுண்டல்-புட்டு குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

30 வகை சப்பாத்தி – சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்


”இன்னிக்கு, ஸ்கூலுக்கு சப்பாத்திதான் வெச்சிவிட்டிருக்கேன். மிச்சம் வைக்காம சாப்பிடணும். புரிஞ்சுதா?”

”போம்மா, எப்பப் பார்த்தாலும் அதே சப்பாத்திதானா. நான் சாப்பிட மாட்டேன்..?”

வீட்டுக்கு வீடு ஒலிக்கும் இந்த ‘டிஷ்யூம்… டிஷ்யூம்’… இத்தோடு விடைபெறப் போகிறது.

 

பின்னே..! புதினா, வெந்தயக்கீரை, கம்பு, சோளம், காய்கறி, ட்ரைஃப்ரூட் என்று 30 வகையான சப்பாத்திகளை ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன் பரிமாறும்போது, இனி என்ன கவலை!

”பச்சைக் குழந்தையில ஆரம்பிச்சு, பாட்டிங்க வரைக்கும் சப்பாத்தி சாப்பிடலாம். அதுவும் ஒபிஸிட்டி, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ஹார்ட் பிராப்ளம்னு பாதிக்கப்பட்டவங்களுக்கு வரப்பிரசாதம் சப்பாத்திதான்” என்று சொல்லும் சாந்தி விஜயகிருஷ்ணன்,

”கோதுமையை தவிட்டோட அரைச்சு, சப்பாத்தி செய்தா, சத்து வீணாகாம உடம்புல சேர்ந்துடும். மாவை தண்ணி விட்டுப் பிசைஞ்சதும், மெல்லிசான துணியால நாலு மணி நேரத்துக்கு மூடி வெச்சுட்டா, சப்பாத்தி மிருதுவா இருக்கும். அவசரமா செய்யணும்னா… மிதமான சுடுநீர் இல்லனா, வெதுவெதுப்பான பாலை விட்டு தளர்வா பிசைஞ்சுகிட்டா போதும்” என்று டிப்ஸும் கொடுக்கிறார்.

பிறகென்ன… ஜமாயுங்க!

ஸ்வீட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சர்க்கரை, நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: கோதுமை மாவில் உப்பு, பால், தண்ணீர் சேர்த்து, மாவை கெட்டியாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவு கலவையில் சிறிது எடுத்து சிறிய வட்டமாக தேய்க்கவும். அதன் மேல்புறம் நெய் தடவி, பொடித்த சர்க்கரையைத் தூவி நான்காக மடித்து, மாவு தொட்டு மீண்டும் தேய்த்து, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்

மிக்ஸட் வெஜ் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – இரண்டு கப், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப்,  துருவிய குடமிளகாய், துருவிய வெங்காயம் – தலா இரண்டு டீஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும்.

வாழைக்காய் கார சப்பாத்தி

தேவையானவை: வாழைக்காய் – 1, கோதுமை மாவு – ஒரு கப், எலுமிச்சைச் சாறு – இரண்டு டீஸ்பூன், தனியா – இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் வேக வைத்து, பிறகு தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் உப்பு, மசித்த வாழைக்காய், பொடித்த தனியா – மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது மாவை எடுத்து மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

மிளகு சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், மிளகு – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முக்கால் டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அதை கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

மசாலா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய், விரலி மஞ்சள் – தலா 1, காய்ந்த மிளகாய் – 2, துருவிய வெங்காயம் – முக்கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கடாயில் முக்கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். இவற்றுடன் விரலி மஞ்சளை சேர்த்துப் பொடித்து, கோதுமை மாவுடன் கலக்கவும். உப்பு, துருவிய வெங்காயம் சேர்க்கவும். இதை தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்,

ட்ரை ஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், முந்திரி, பாதாம் பிஸ்தா சேர்ந்த கலவை – முக்கால் கப், பேரீச்சை துண்டுகள் – 5, உலர்ந்த திராட்சை – 10, நெய் – தேவையான அளவு.

செய்முறை: பாதாம், முந்திரி, பிஸ்தா கலவையை நைஸாக பொடித்துக் கொள்ளவும், பேரீச்சை, திராட்சையை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கோதுமை மாவில், பொடித்த பொடி, அரைத்த விழுது சேர்த்து, சிறிது நெய் விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது பால் சேர்த்துக் கலக்கலாம். பிசைந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் தடவி சுட்டெடுக்கவும்.

புதினா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா – கால் கப், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, இஞ்சி, புதினா, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

கடலை மாவு சப்பாத்தி

தேவையானவை: கடலை மாவு – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், ஓமம், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், நெய், ஆம்சூர் பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவுடன் கோதுமை மாவு, ஓமம், கரம் மசாலாத்தூள், நெய், ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இதை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

க்ரீன் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில் கோதுமை மாவைப் போட்டு, தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

வெந்தயக்கீரை சப்பாத்தி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, கோதுமை மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற விடவும். இதில் கோதுமை மாவைப் போட்டு தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

முள்ளங்கி சப்பாத்தி

தேவையானவை: துருவிய முள்ளங்கி – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், சோள மாவு – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துருவிய முள்ளங்கியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், உப்பு சேர்த்து, கோதுமை மாவு, சோள மாவைப் போட்டு (தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்), கெட்டியாகப் பிசையவும்.

மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

பயறு சப்பாத்தி

தேவையானவை: ஊற வைத்த பயறு – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 2,  சீரகத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஊற வைத்த பயறுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, சீரகத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

முந்திரி கார சப்பாத்தி

தேவையானவை: முந்திரி – 15, கசகசா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கோதுமை மாவு – ஒரு கப், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்திரியுடன் கசகசா, காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். கோதுமை மாவுடன், பொடித்த முந்திரி கலவை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இதை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

எள் சப்பாத்தி

தேவையானவை: வெள்ளை எள், மைதா மாவு – தலா கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், தனியா – 2 டீஸ்பூன், மிளகு, சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும். தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப் பொடிக்கவும். கோதுமை மாவுடன் மைதா மாவு, வறுத்து பொடித்த பொடி, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

தேங்காய் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை – சிறிதளவு,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, தடிமனான சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

வேர்க்கடலை சப்பாத்தி

தேவையானவை: வேர்க்கடலை – கால் கப்,  கோதுமை மாவு – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் – தலா 4, சிறிய மாங்காய் துண்டு – 1, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், மாங்காய் துண்டு, இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை கோதுமை மாவுடன் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

உருளைக்கிழங்கு சப்பாத்தி

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு – 1, கோதுமை மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள்  – கால் டீஸ்பூன்,  பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, துருவிய பனீர் – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, துருவிக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், வெங்காயம், பனீர், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ரெட் சப்பாத்தி

தேவையானவை: பழுத்த தக்காளி – 2, கோதுமை மாவு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயை கொதி நீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மிளகாயுடன் தக்காளி, உப்பு சேர்த்து அரைத்து, கோதுமை மாவை சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

பேபிகார்ன் சப்பாத்தி

தேவையானவை: துருவிய பேபிகார்ன் – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துருவிய பேபிகார்னுடன், குடமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, கோதுமை மாவு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

தால் சப்பாத்தி

தேவையானவை: பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல், தனியாத்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக வைக்கவும். ஆறியதும் பருப்பை எடுத்து மசித்து… பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேங்காய் துருவல், கோதுமை மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

மக்காச்சோள சப்பாத்தி

தேவையானவை: மக்காச்சோள மாவு, கோதுமை மாவு – தலா அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, சீரகத்தூள் – கால் டீஸ்பூன், சாட் மாசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மக்காச்சோள மாவுடன் கோதுமை மாவு, உப்பு, கொத்தமல்லி, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

அரிசி சப்பாத்தி

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன், கோதுமை மாவு, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, தேங்காய் எண்ணெய் விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது பிசைந்த மாவைப் போட்டு, குழவியால் தேய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக தட்டி, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

பிரெட் சப்பாத்தி

தேவையானவை: பிரெட் துண்டுகள் – 2, கோதுமை மாவு – ஒரு கப், துருவிய பனீர் – கால் கப், பால் – சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தாள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து… துருவிய பனீர், வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கோதுமை மாவு சேர்த்துக் கலந்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ஷவ்வரிசி சப்பாத்தி

தேவையானவை: மாவு ஜவ்வரிசி – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் துகள்கள் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை 8 மணி நேரம் ஊற வைத்து, கோதுமை மாவு, வேர்க்கடலைப் பொடி, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் துகள்கள், உப்பு, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ரவை சப்பாத்தி

தேவையானவை: ரவை – அரை கப், கோதுமை மாவு – அரை கப், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், புதினா – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ரவையில் கொதிக்கும் தண்ணீர் விட்டு… இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கோதுமை மாவு, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

சீரக சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், சீரகம் – 2 டீஸ்பூன், தயிர் – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன், கோதுமை மாவு, சீரகம், உப்பு, தயிர் சேர்த்து… எலுமிச்சைச் சாறை விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.  காரம் தேவைப்பட்டால் துருவிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.

கம்பு சப்பாத்தி

தேவையானவை: கம்பு மாவு, கோதுமை மாவு – தலா அரை கப், துருவிய சௌசௌ – ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய், ஓமம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கம்பு மாவு, கோதுமை மாவு, துருவிய சௌசௌ, தேங்காய், ஓமம், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

சேமியா சப்பாத்தி

தேவையானவை: சேமியா – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சேமியாவில் சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

சாக்கோ சப்பாத்தி

தேவையானவை: பால் பவுடர் – கால் கப், சாக்கோ பவுடர், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், கோதுமை மாவு – ஒரு கப், பால் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு, முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் சாக்கோ பவுடர், பால் பவுடர், வெண்ணெய், பால் சேர்த்து கெட்டியாகக் கலந்து… முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளை சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை: ஆப்பிள் – 1, கோதுமை மாவு – ஒரு கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிளை தோல் சீவி துருவி… உப்பு, நெய், மிளகுத்தூள், கோதுமை மாவு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

தொகுப்பு: ரேவதி, படங்கள்: து.மாரியப்பன்

நன்றி:- சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்

நன்றி:-அ.வி


பிரிவுகள்:30 வகை சப்பாத்தி குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

30 வகை கூட்டு! – வசந்தா விஜயராகவன்


ஜோரா சமைக்கலாம்.. ஜாலியா சுவைக்கலாம்…

.ம்… காய்கறிகளின் விளைச்சல் அதிகமாகிவிட்டதால், விலையும் மெள்ள குறைய ஆரம்பித்துவிட்டது. இனி, காய்கறிகளுடன் தைரியமாகக் கூட்டணி போடலாம் என்கிற சூழலில்… இங்கே 30 வகை கூட்டுகளை மணக்க மணக்கப் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்

.”காய்கறி, பருப்பு, பயறு, கிழங்குனு எல்லாத்தையும் கலந்து கட்டி அசத்தலாம்கிறதுதான் கூட்டுகளோட ஸ்பெஷாலிட்டியே! காய்கறிகளோட விலை, கண்காணாத உசரத்துக்கு எகிறினாலும் கவலைப்படத் தேவையில்ல. காய்கறிகளைக் குறைச்சலாவும், பருப்பு மற்றும் பயறு வகைகளைக் கூடுதலாவும் சேர்த்தா… அமர்க்களமான கூட்டு ரெடி. சப்புக் கொட்டிக்கிட்டே சாப்பிடலாமே!’’ என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார் வசந்தா விஜயராகவன்.

பிறகென்ன… காய்கறிகளோடு கூட்டணி போட்டு ஜமாயுங்க!

சௌசௌ மலபார் கூட்டு

.

தேவையானவை: சௌசௌ துண்டுகள் – 150 கிராம், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் விழுதாக அரைக்கவும். சௌசௌவில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

சேனைக்கிழங்கு மிளகு கூட்டு

தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய சேனைக்கிழங்கு – 150 கிராம், உளுத்தம்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். அரைத்து வைத்துள்ள கலவை, உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

கத்திரிக்காய்-போண்டா புளிக் கூட்டு

தேவையானவை: கத்திரிக்காய் – 4, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

வறுத்து அரைக்க: தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

போண்டா செய்ய: உளுத்தம்பருப்பு – 100 கிராம் (ஊற வைக்கவும்).

செய்முறை: கத்திரிக்காயை நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். ஊறிய உளுத்தம்பருப்புடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, போண்டாவாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். புளியைக் கரைத்து, வேக வைத்த கத்திரிக்காயில் விட்டு, வேக வைத்த துவரம்பருப்பு, கடலைப்பருப்பை போடவும். அரைத்து வைத்திருக்கும் பொடியையும் போட்டு கொதிக்கவிடவும். உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்குவதற்கு முன்பு பொரித்த போண்டாக்களைப் போட்டு ஒரு முறை கிளறி இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

காலிஃப்ளவர் மசாலா கூட்டு

தேவையானவை: காலிஃப்ளவர் – 100 கிராம் (உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்தால், புழுக்கள் நீங்கிவிடும்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய தக்காளி, வெங்காயம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரில் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். வேக வைத்த காலிஃப்ளவரை சிறிது எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். பொரித்து மீதமுள்ள எண்ணெயில் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கி… கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வரும்போது பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை அதில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு

தேவையானவை: நறுக்கிய கேரட், பீன்ஸ், அவரைக்காய், புடலங்காய் சேர்ந்த கலவை – கால் கிலோ, கடுகு, சீரகம், தனியா – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் – தலா 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை உப்பு போட்டு வேக வைக்கவும். தனியா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெந்த காய்கறிகளில் அரைத்த விழுதைக் கொட்டி, நன்றாகக் கொதித்ததும் சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், இஞ்சி தாளித்துக் கொட்டி இறக்கவும்.

சாம்பார் வெங்காயம் புளிக் கூட்டு

தேவையானவை: உரித்த சாம்பார் வெங்காயம் – 150 கிராம், புளி – எலுமிச்சம்பழ அளவு, துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை வதக்கி, புளிக் கரைசல் விட்டு வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

கொத்தவரங்காய் – மிளகு பொரித்த கூட்டு

தேவையானவை: கொத்தவரங்காய் – 150 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்தவரங்காயில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த கொத்தவரங்காயுடன் அரைத்த விழுது சேர்த்து, கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

பரங்கிக்காய் பால் கூட்டு

தேவையானவை: பரங்கிக்காய் – ஒரு கீற்று, பால் – அரை டம்ளர், பச்சை மிளகாய் – 2, சர்க்கரை – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

.

செய்முறை: பரங்கிக்காயைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்துக் குழையாமல் வேக விடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து, வெந்த பரங்கிக்காயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். கடைசியில் பால் விட்டுக் கலக்கவும்.

காரம், தித்திப்பு என கலக்கலாக இருக்கும் இந்தக் கூட்டு.

பாகற்காய் புளிக் கூட்டு

தேவையானவை: நறுக்கிய பாகற்காய் – 100 கிராம், புளி – எலுமிச்சம்பழ அளவு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம் – சிறு துண்டு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாகற்காயுடன் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து… வெந்த பாகற்காய், பருப்புடன் சேர்த்து, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

.தக்காளி பிட்லை

. தேவையானவை: தக்காளித் துண்டுகள் – 100 கிராம் (தக்காளி செங்காயாக இருக்க வேண்டும்), துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.

.வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

.செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். தக்காளித் துண்டுகளுடன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, உப்பு, வேக வைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கூட்டு பதத்தில் வந்ததும், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

. அவரைக்காய் பொரித்த கூட்டு

.தேவையானவை: நறுக்கிய அவரைக்காய் – 100 கிராம், பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், ரசப்பொடி – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: அவரைக்காயுடன் பயத்தம்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும். இதனுடன் உப்பு, ரசப்பொடி சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

. பாகற்காய்-எள்ளு புளிக் கூட்டு

. தேவையானவை: பாகற்காய் துண்டுகள் – 100 கிராம், எள்ளு – 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள், – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயம் – சிறிதளவு, வெல்லம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: சிறிது எண்ணெயில் எள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து… பாகற்காய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பாகற்காய் நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் வறுத்துப் பொடித்த எள்ளு, மிளகாய்த்தூள் சேர்த்து, மேலும் கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து நன்றாக கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

.கொண்டைக் கடலை புளிக் கூட்டு

.தேவையானவை: கொண்டைக் கடலை – 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு – ஒரு டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.

.செய்முறை: முந்தைய நாளே கொண்டைக் கடலையை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் புளிக் கரைசலை விட்டு… உப்பு, சாம்பார் பொடி சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலில் கொட்டவும். வேக வைத்த கொண்டைக் கடலையையும் கொட்டவும். பிறகு, சிறிது தண்ணீரில் கரைத்த கடலை மாவை அதில் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

.வெள்ளைப் பூசணி மோர் கூட்டு

. தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய வெள்ளைப் பூசணி துண்டுகள் – 200 கிராம், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கெட்டி மோர் – ஒரு டம்ளர், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: பூசணிக்காய் துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் வேக வைத்த பூசணிக்காய் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மோர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

.வாழைத்தண்டு புளிக் கூட்டு

.தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன்.

.

.வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – கால் கப்.

.செய்முறை: வாழைத்தண்டில் மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசலை விட்டு வேக விடவும். பருப்புகளை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வறுக்க கொடுத்தவற்றை வறுத்து அரைக்கவும். இந்த விழுதை வேக வைத்த வாழைத்தண்டு, பருப்புகளுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

.மிக்ஸ்டு வெஜிடபிள் புளிக் கூட்டு

.தேவையானவை: நறுக்கிய வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகள் எல்லாம் சேர்த்து – 200 கிராம், கடுகு, மஞ்சள்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, புளி – எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகளுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றி வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வெந்த காய்கறிக் கலவையில் கொட்டி, கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்க்கவும்.

. சேப்பங்கிழங்கு-தக்காளி ரோஸ்டட் கூட்டு

. தேவையானவை: வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்த சேப்பங்கிழங்கு – 150 கிராம், கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம், தக்காளி சாறு – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சாறு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை கடைசியாக சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

.சாதம், சப்பாதிக்கு ஏற்ற சைட் டிஷ் இது!

.பூசணி வடகம் புளிக் கூட்டு

. தேவையானவை: நறுக்கிய பூசணித் துண்டுகள் – 250 கிராம், பூசணி வடகம் – 10, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.பூசணி வடகம் செய்ய: 100 கிராம் உளுத்தம்பருப்பை ஊற வைத்து, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, 50 கிராம் பூசணி துருவலை கலந்து… ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து சிறிய உருண்டையாக செய்து, வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும்.

.செய்முறை: புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பூசணித் துண்டுகளை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் பூசணி வடகத்தை வறுத்து சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

. மரவள்ளிக் கிழங்கு புளிக் கூட்டு

. தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய மரவள்ளிக் கிழங்கு – 200 கிராம், தேங்காய்ப் பால் – ஒன்றரை டம்ளர், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: மரவள்ளிக் கிழங்கு துண்டுகளைத் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து… தக்காளி, வெங்காயம், சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு, வெந்த மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

.சாப்பாடு, டிபன் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் இது!

.சேப்பங்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு

. தேவையானவை: வேக வைத்து தோலுரித்த சேப்பங்கிழங்கு – 150 கிராம், கெட்டியான தேங்காய்ப் பால் – தலா ஒன்றரை டம்ளர், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

.

.செய்முறை: தேங்காய்ப் பாலில் சேப்பங்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி கலக்கவும்.

. பொடி சேர்த்த காய்கறி கூட்டு

.தேவையானவை: மீந்து போன காய்கறிக் கலவை (வீட்டில் மிச்சம் மீதி இருக்கும் எந்த காயையும் சேர்க்கலாம்) – 200 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், வேக வைத்த பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

.

.செய்முறை: காய்கறியில் தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த பயத்தம்பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் போட்டு, வெந்த காய்களையும் போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொட்ட வும்.

. பாகற்காய்-கொண்டைக் கடலை கூட்டு

.தேவையானவை: பொடியாக நறுக்கிய பாகற்காய் – 200 கிராம், வேக வைத்த கொண்டைக் கடலை – 100 கிராம், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3.

.செய்முறை: கொண்டைக் கடலையை வேக வைத்து கரகரப்பாக அரைக்கவும். புளியை தண்ணீர் விட்டு கரைத்து பாகற்காயில் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். புளிக் கரைசல், அரைத்த விழுது, வெந்த பாகற்காய், அரைத்த கொண்டைக் கடலை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து சேர்க்கவும்.

. பீட்ரூட்-தேங்காய் கூட்டு

.தேவையானவை: பொடியாக நறுக்கிய பீட்ரூட் – 150 கிராம், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய பீட்ரூட்டை இதில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி பேஸ்ட், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி… கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

.காராமணி-வேர்க்கடலை புளிக் கூட்டு

.தேவையானவை: காராமணி – ஒரு கப், வேர்க்கடலை – அரை கப் (2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்), புளி – எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3 (சிறிது எண்ணெயில் வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்).

.செய்முறை: காராமணியையும், வேர்க்கடலையையும் ஒன்றாக வேக வைக்கவும். புளியைத் தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்து இதில் ஊற்றி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

. கேரட்-பீன்ஸ்-இஞ்சி கூட்டு

.தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் – தலா 100 கிராம், இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு,

.

.செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

. பரங்கிக்காய் – காராமணி கூட்டு

.தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் – 150 கிராம், ஊற வைத்து, வேக வைத்த காராமணி – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக் காயுடன் வேக வைத்த காராமணியை சேர்த்து தண்ணீர் விட்டு, உப்பு, அரைத்த விழுதைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

.சுட்ட கத்திரி கூட்டு

.தேவையானவை: பெரிய கத்திரிக்காய் – 1, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா 50 கிராம், புளி – சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி, அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சுட்டெடுக்கவும். தோல் நன்றாக சுருங்கியதும் ஆற வைத்து, தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்கி… புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

.

.வாழைக் கச்சல் (பிஞ்சு) கூட்டு

. தேவையானவை: நறுக்கிய கச்சல் வாழைக்காய் – 150 கிராம், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.

.செய்முறை: தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும். வாழைக்காயில் மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

. சேனை புளிச்சேரி

.தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு – 150 கிராம், காய்ந்த மிளகாய் – 2, மிளகு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், கெட்டி மோர் – தலா 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: சிறிதளவு தேங்காய் எண்ணெயில் மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். இறக்கும்போது கெட்டி மோர் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

.உருளைக்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு

.தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய உருளைக்கிழங்கு – 200 கிராம், கடுகு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒரு டம்ளர், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். இஞ்சி – பச்சை மிளகாய் விழுதை சேர்த்துக் கிளறி, கடைசியாக தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

.இந்தக் கூட்டு சப்பாத்தி, அடைக்கு தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும் .

நன்றி:- வசந்தா விஜயராகவன்

நன்றி:- அ.வி


பிரிவுகள்:30 வகை கூட்டு! குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

30 வகை பிரியாணி! (வெஜிடபிள்) – பாரதி முரளி வளசரவாக்கம்

பிப்ரவரி 16, 2011 1 மறுமொழி

‘பிரியாணி’ என்றாலே… பெரும்பான்மையோருக்கு ஒரு ‘கிக்’தான். எப்போது ஓட்டலுக்குச் சென்றாலும், அவர்கள் ஆர்டர் செய்யும் அயிட்டங்களில் முதல் இடத்தைப் பிடித்துவிடும் இந்த பிரியாணி! அதன் சுவையும் மணமும் ச்சும்மா சுண்டியிழுப்பது ஒரு காரணமென்றால்… ‘ஈஸியா நம்மளால செய்ய முடியாதே’ என்கிற ஏக்கம் இன்னொரு காரணம்!

உங்கள் ஏக்கத்தைப் போக்க… வகை வகையாக வீட்டிலேயே நீங்கள் சமைத்து அசத்த… உங்கள் கை பிடித்து இங்கே சமைக்கக் கற்றுத் தருகிறார் ‘வளசரவாக்கம்’ பாரதி முரளி.

”பிரியாணி செய்றது ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரமில்ல… கவனமா களத்துல இறங்கினா… சுலபமா செய்து முடிச் சுடலாம்… சூப்பர் சுவையுள்ள பிரியாணியை!” என்று நம்பிக்கை கொடுக்கும் பாரதி, பயறு, கீரை, காய்கறிகள், பழங்கள், பனீர் என்று வெரைட்டி வெரைட்டியாக சமைத்திருக்கும் பிரியாணி அடுத்தடுத்த பக்களில் பரிமாறப்பட்டிருக்கிறது.

பார்த்ததுமே… ‘தொட்டுக்கறதுக்கு தயிர் பச்சடிகூடத் தேவையில்ல… ஒரு பிடி பிடிச்சிட வேண்டியதுதான்’ என்று களத்தில் இறங்கி, கவளம் கவளமாக வெட்ட ஆரம்பித்துவிடுவீர்கள்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், தக்காளி – 4, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 4, லவங்கம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம் – தலா 2, சீரகம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நன்றாக ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். தக்காளியைத் தனியாகவும், பூண்டு – பச்சை மிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம் போட்டு தாளித்து… பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி… தக்காளி சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி, வடித்த சாதம்


சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி, கெட்டித் தயிர் – தலா ஒரு கப், காய்கறித் துண்டுகள் – 2 கப், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – அரை கப், எலுமிச்சம்பழம் – 1, புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: முந்திரி – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 7, இஞ்சி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 6, பட்டை – 1, லவங்கம், ஏலக்காய் – தலா 2 (இந்தப் பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி, அவற்றுடன் சுத்தம் செய்யப்பட்ட மல்லித்தழையை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்).

செய்முறை: அரிசியை நன்றாகக் களைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது, காய்கறித் துண்டுகள், உப்பு சேர்த்துக் கிளறவும். அரைத்த மசாலா விழுதை இதில் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஊறிய அரிசி, தயிர் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். பிறகு, எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும்.

தேவையானவை: உடைத்த கோதுமை – ஒரு கப், உருளைக்கிழங்கு – 1, பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், பீன்ஸ், – தலா கால் கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, இஞ்சி, பூண்டு – சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா – தலா ஒரு கப், கடலை எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, சோம்பு, உப்பு – தேவையான அளவு

செய்முறை: உடைத்த கோதுமையில் உப்பு சேர்த்து வேக வைத்து, உதிரியாக வடித்துக் கொள்ளவும். காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் கடலை எண்ணெய் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து… புதினா, வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, வேக வைத்த காய்களை சேர்த்துக் கிளறவும். பிறகு வெந்த கோதுமையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், காலிஃப்ளவர் – 1, சீரகம் – ஒரு டீஸ்பூன், லவங்கம், பச்சை மிளகாய் – தலா 2, தக்காளி கெக்சப் – 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை உதிர்த்து உப்பு கரைத்த நீரில் சிறிது நேரம் வைக்கவும். பிறகு, அதை வெந்நீரில் போட்டு எடுக்கவும். சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், லவங்கம் தாளித்து… நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, உதிர்த்த காலிஃப்ளவர், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் தக்காளி கெச்சப், கொத்தமல்லித்தழை சேர்த்து, வடித்த சாதத்தைப் போட்டு, கிளறி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பேபி கார்ன் – 3, பச்சை மிளகாய் – 10, பிரிஞ்சி இலை – 1, பட்டை – 2, இஞ்சி-பூண்டு விழுது – சிறிதளவு, தேங்காய் – 1, புதினா – ஒரு கப், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், லவங்கம் – 4, நெய் – 2 டீஸ்பூன், முந்திரி – 10, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பேபி கார்னை வட்ட துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வெயிட் போடாமல் பத்து நிமிடம் வேக வைத்து, நெய்யில் வதக்கிக் கொள்ளவும். தேங்காயை அரைத்துப் பிழிந்து பால் எடுக்கவும். முந்திரியை வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் போட்டு வறுத்து… பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊறிய அரிசி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் தேங்காய்ப் பால், தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வெயிட் போடாமல் பத்து நிமிடம் வைக்கவும். பிறகு சோளம், கரம் மசாலாத்தூள், புதினா, வறுத்த முந்திரி, உப்பு சேர்த்து வெயிட் போட்டு மூடி, 8 நிமிடம் கழித்து இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், சின்ன வெங்காயம் – ஒரு கப், மராட்டி மொக்கு, அன்னாசி பூ, பிரிஞ்சி இலை, புதினா – சிறிதளவு, லவங்கம், ஏலக்காய் – தலா 1, சோம்பு – அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் – 3 டீஸ்பூன், சில்லி சாஸ் – 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6, தேங்காய் துருவல் – கால் கப், முந்திரி – 20, நெய் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு… சோம்பு, மராட்டி மொக்கு, அன்னாசி பூவை வறுத்து பொடித்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை நெய்யில் வதக்கி அரைக்கவும். வெங்காயத்தை சில்லி சாஸ் விட்டு வதக்கி தனியே வைக்கவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்து… அரிசியைக் களைந்து போட்டு, தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் விடவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து பதினைந்து நிமிடம் வேகவிடவும். பிறகு, வதக்கிய வெங்காயம், வறுத்துப் பொடித்து வைத்திருக்கும் மசாலாத்தூள், நெய், முந்திரி, புதினா, எலுமிச்சைச் சாறு, பாலில் கரைத்த குங்குமப் பூ சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

தேவையானவை: அவல் – கால் கிலோ, நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட் – தலா ஒரு கப், பச்சைப் பட்டாணி – கால் கப், நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, தேங்காய் – ஒரு மூடி, இஞ்சி, பட்டை, சோம்பு – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, லேசாக கொதித்ததும் இறக்கி அவலைப் போட்டு, சிறிது நேரம் கழித்து வடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணியை தனியாக வேக வைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, சோம்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி சேர்த்து, வடித்து வைத்திருக்கும் அவலைப் போட்டு கிளறி, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், வெங்காயம் – 1, இஞ்சி-பூண்டு விழுது – சிறிதளவு, பனீர் – 100 கிராம், பிரிஞ்சி இலை, பட்டை – தலா 1, ஏலக்காய் – 4, லவங்கம் – 3, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு… வெங்காய விழுது, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிரிஞ்சி இலை, ஏலக்காய், லவங்கம், பட்டை சேர்த்து வதக்கி, அரிசியைப் போட்டு நன்றாகக் கலக்கவும். இதில் உப்பு சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். அரிசி பாதி வெந்ததும் வறுத்த பனீரை சேர்த்து, தீயைக் குறைத்து, தண்ணீர் வற்றி சாதம் உதிரியாக வரும்வரை வேக வைத்து இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், காராமணி – அரை கப், வெங்காயம் – 2, தக்காளி – 3, மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், உளுந்து, எலுமிச்சைச் சாறு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காராமணியை ஊற வைத்து, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். சாதத்தை வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து… காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேக வைத்த காராமணி, உப்பு, எலுமிச்சைச் சாறு, தக்காளி சேர்த்து வதக்கி, சாதத்தை போட்டு கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

தேவையானவை: அரிசி – ஒரு கப், நறுக்கிய பீன்ஸ், கேரட் வெங்காயம் – தலா அரை கப், முந்திரி, திராட்சை – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்), சீரகம் – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, லவங்கம், பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி, உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி… சீரகம், ஏலக்காய், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து வறுக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், ஊறிய அரிசி, முந்திரி, திராட்சை, கேரட், பீன்ஸ் சேர்த்து மிதமான தீயில் வதக்கி… கரம் மசாலாத்தூள், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி, ஆறு கப் தண்ணீர் விட்டு வேக வைத்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி – தலா கால் கப், பச்சை மிளகாய் – 4, நறுக்கிய வெங்காயம் – கால் கப், லவங்கம் – 4, பட்டை, ஏலக்காய் – தலா 2, இஞ்சி – பூண்டு விழுது, நெய், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பிரிஞ்சி இலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். லவங்கம், ஏலக்காய், பட்டையை பொடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு… வெங்காயம், பிரிஞ்சி இலை, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பொடித்து வைத்திருக்கும் லவங்கம். பட்டை, ஏலக்காயை சேர்க்கவும். காய்கறிகளைப் போட்டு நன்றாகக் கிளறி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் விழுது, அரிசி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கைவிடாமல் கிளறவும். பிறகு குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் சேர்த்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி, உரித்த பச்சைப் பட்டாணி – தலா ஒரு கப், நெய் – கால் கப், வெங்காயம் – 1, இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு, துருவிய தேங்காய் – கால் கப், முந்திரி, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். அரிசி, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். சாதம் உதிராக வந்ததும் இறக்கவும். சிறிது நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

தேவையானவை: அரிசி – ஒரு கப், குடமிளகாய் – 2, நறுக்கிய வெங்காயம் – அரை கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை – அரை கப், சீரகம், மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன், துருவிய சீஸ் – 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியில் உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். குடமிளகாயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகுத்தூள் போட்டு தாளித்து… வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, சாதத்தைப் போட்டு கிளறி, கொத்தமல்லித்தழை, சீஸ் துருவலை சேர்த்து இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், முளைக்கீரை – 2 கட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, முந்திரி – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியாத்தூள், வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், பட்டை, லவங்கம் – தலா 1, காய்ந்த மிளகாய் – 5, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உதிராக வடித்து ஆற விடவும். கீரையை அலசி பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு… கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், தனியாத்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, கீரையைச் சேர்க்கவும். பச்சை வாசனை போகும்வரை கீரையை வதக்கியதும்… சாதம், உப்பு, பட்டை, லவங்கம், தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கவும். இதில் எலுமிச்சைச் சாறை விட்டு கலக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி, அரைத்த தக்காளி விழுது – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 4, மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு – தலா அரை டீஸ்பூன், உரித்த சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 6 பல், பட்டை – ஒரு துண்டு, லவங்கம் – 3, ஏலக்காய் – 2, பிரிஞ்சி இலை – 1, உரித்த பட்டாணி – கால் கப், அரைத்த முந்திரி விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய் – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரம் போக நெய்யில் வறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் லவங்கம், பூண்டு, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெந்த பட்டாணி, தக்காளி விழுது ஆகியவற்றை அதில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடவும். இந்தக் கலவை நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், ஒரு பாத்திரத்தில் கொட்டி குக்கரில் வைத்து… உப்பு, மிளகாய்த்தூள், அரைத்த முந்திரி விழுது, சர்க்கரை, வறுத்த அரிசியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். குக்கருக்கு வெயிட் போட்டு, தீயைக் குறைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – கால் கிலோ, நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கப், முளைக்கட்டிய பயறு – அரை கப், குடமிளகாய், முட்டைகோஸ் – தலா கால் கப், வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – 3 டீஸ்பூன், அஜினமோட்டோ – அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைத்துக்கொள்ள: பச்சை மிளகாய் – 2, இஞ்சி – அரை துண்டு.

செய்முறை: அரிசியைக் கழுவி வேக வைத்து சாதமாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த பச்சை மிளகாய் – இஞ்சி விழுதைப் போட்டு வதக்கவும். சர்க்கரை, குடமிளகாய், முட்டைகோஸ், முளைப்பயறு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, அஜினோமோட்டோ சேர்க்கவும். கடைசியில் வெங்காயத்தாள், உப்பு, சாதம், சோயா சாஸ் சேர்த்து, அடுப்பை பெரிய தீயில் வைத்துக் கிளறி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, நெய் – 2 டீஸ்பூன், உருளைக்கிழங்கு, தக்காளி – தலா 2, பச்சை மிளகாய் – 7, பட்டாணி – அரை கப், தேங்காய் துருவல், தனியா – தலா 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு, புதினா – அரை கட்டு, பட்டை, ஏலக்காய், கிராம்பு – தலா 1, கரம் மசாலாத்தூள், சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – அரை துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி ஊற வைக்கவும். பட்டாணியை வேக வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி துருவிக் கொள்ளவும். தக்காளியில் தண்ணீர் விட்டு மூன்றரை கப் அளவுக்கு அரைத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் இவற்றை சிறிது நெய்யில் வதக்கி அரைத்துக் கொள்ளவும். சிறிது எண்ணெயில், தனியா, சீரகத்தை வறுத்துப் பொடிக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து… துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். அரைத்த கொத்தமல்லி விழுதையும் சேர்த்து வதக்கி… அரிசி, வேக வைத்த பட்டாணி, துருவிய உருளைக்கிழங்கு, தக்காளி சாறு, உப்பு, தனியா – சீரகப் பொடியைத் தூவி கிளறி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், உருளைக்கிழங்கு – 3, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, தேங்காய் துருவல் – 5 டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 6, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், சோம்பு, கடுகு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியை வேக வைத்து உதிராக வடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து, வாசனை வரும்வரை வதக்கவும். பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து, சாதத்தையும் போட்டு நன்றாகக் கலக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பால் – 2 கப், கேரட் – 1, பீன்ஸ் – 5, பட்டாணி – ஒரு கைப்பிடி, வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 4, பட்டை, ஏலக்காய், லவங்கம் – தலா 2, பிரிஞ்சி இலை – 1, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாகவும், பீன்ஸை அரை விரல் நீளத்துக்கும் நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி சேர்த்துக் கிளறி, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அரிசி, பால் ஆகியவற்றை சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரை மூடி, வெயிட் போட்டு, வேக வைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு விட்டு, கிளறி பரிமாறவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், வெங்காயம் – 2, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நெய் – 3 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, சர்க்கரை – ஒன்றரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். குக்கரில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து, தீயைக் குறைத்து சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து மேலே எழும்பி வரும்போது வெங்காயத்தை சேர்த்து வதக்கி… உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, அரிசியைத் தண்ணீருடன் ஊற்றிக் கலந்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், தேங்காய்ப் பால் – 2 கப், அன்னாசிப்பழம் – கால் கப், ஆப்பிள் துண்டுகள் – சிறிதளவு, துருவிய கேரட், மாங்காய், வெள்ளரிப் பிஞ்சு – தலா 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைத்துக் கொள்ள: வெங்காயம் – 1, காய்ந்த மிளகாய் – 5.

செய்முறை: அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் ஊற வைத்து… அரைத்த வெங்காய விழுது, தேங்காய்ப் பால் சேர்த்து, குக்கரில் வைத்து சாதமாக வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கேரட், மாங்காயைப் போட்டு வதக்கி, வெள்ளரித் துருவலை பிழிந்து எடுத்துப் போட்டு, அன்னாசிப் பழம், ஆப்பிள், உப்பு, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், சிறிய உருளைக்கிழங்கு – கால் கிலோ, வெங்காயம் – 2, காய்ந்த மிளகாய் – 6, குடமிளகாய் – 2, தக்காளி – அரை கிலோ, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய் – அரை மூடி, பூண்டு – 2 பல், ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு – தலா 1, தனியா – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், புதினா, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியைக் கழுவி ஊற வைக்கவும். வெங்காயம், குடமிளகாய் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தக்காளியைத் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய் மூன்றையும் லேசாக சூடு செய்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயைப் போட்டு, உருகியதும் பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு போட்டு வறுத்து, குடமிளகாய், வெங்காயம், பூண்டு, கரம் மசாலாத்தூள் போட்டு வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு, புதினா, கொத்தமல்லி, அரிசி, உப்பு, தக்காளி விழுது, பொடித்து வைத்த தேங்காய், காய்ந்த மிளகாய், தனியா தூளை சேர்த்து, குக்கரை வெயிட் போட்டு மூடி, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பால் – முக்கால் கப், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், கிஸ்மிஸ், டூட்டிஃப்ரூட்டி – தலா 2 டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், லவங்கம், பேரீச்சம்பழம், ஏலக்காய் – தலா 4, பச்சை மிளகாய் – 2, செர்ரி – 10, சீரகம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நன்கு கழுவி… பால், சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாதமாக வடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சீரகம், ஏலக்காய், லவங்கம், நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு லேசாக வறுத்து சாதத்தில் போடவும். கிஸ்மிஸ், டூட்டிஃப்ரூட்டி, பேரீச்சம்பழத்தை நறுக்கி சாதத்தின் மேலாகப் போட்டு, செர்ரி பழத்தை சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், நறுக்கிய வெங்காயம், பீன்ஸ் – தலா அரை கப், நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி – தலா ஒரு கப், பட்டாணி – ஒரு கைப்பிடி, புதினா, கொத்தமல்லி – தலா அரை கட்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தயிர் – அரை கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பச்சை மிளகாய் – தலா 2, பிரிஞ்சி இலை – 1, இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி இரண்டரை கப் தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து, மிளகாய்த்தூள், தனியாத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி, தக்காளி சேர்க்கவும். எல்லாம் நன்றாக வதங்கியதும் உப்பு, தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து… வெந்த காய்கறிகள், அரிசி ஆகியவற்றை போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை ஐந்து நிமிடம் ‘சிம்’மில் வைத்து இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், மிளகு – 2 டீஸ்பூன், கிராம்பு – 2, இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – கால் கப், புதினா – அரை கப், கீறிய பச்சை மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : அரிசியை உதிர் உதிராக வடித்து ஆற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மிளகு, கிராம்பு, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, வெங்காயம், புதினா சேர்த்து நன்றாக வதக்கவும். வடித்த சாதம், உப்பு சேர்த்துக் கிளறி, சூடாகப் பரிமாறவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், சோயா உருண்டைகள் – அரை கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், தயிர் – அரை கப், எண்ணெய், நெய் – தலா 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். சோயாவைக் கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 2 நிமிடம் ‘சிம்’மில் வைத்து இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், தேங்காய்ப் பால் – 2 கப், பச்சைப் பட்டாணி, டபுள் பீன்ஸ் – தலா முக்கால் கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், கரம் மசாலாத்தூள் – முக்கால் டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, லவங்கம் – தலா 2, பிரிஞ்சி இலை, காய்ந்த வெந்தயக்கீரை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: பச்சை மிளகாய் – 7, பூண்டு – 4 பல்.

செய்முறை: அரிசியை லேசாக வறுத்து, நன்றாகக் கழுவி, பத்து நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, கரம் மசாலாத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த பச்சை மிளகாய் – பூண்டு விழுது, டபுஸ்பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்றாக வேகும்வரை வதக்கவும். பிறகு, தேங்காய்ப் பால் விட்டு… அரிசி, உப்பு சேர்த்துக் கிளறி, வெந்தயக்கீரை சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி, கேரட் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், சோம்பு, நெய், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பட்டை, ஏலக்காய் – தலா 1, கிராம்பு, கீறிய பச்சை மிளகாய் – தலா 2, நறுக்கிய கொத்தமல்லித் தழை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் களைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய், பட்டை சேர்த்து வதக்கவும். வெங்காயம், கேரட் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். அரிசி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், வெங்காயம் – 3, புதினா – ஒரு கட்டு, கொத்தமல்லி – அரை கட்டு, பட்டை – 1, லவங்கம், ஏலக்காய் – தலா 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 6 பல், நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியில் உப்பு சேர்த்து வேக வைத்து உதிர் உதிராக சாதத்தை வடித்துக் கொள்ளவும். வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். பட்டை, லவங்கம், இஞ்சி, ஏலக்காய், பூண்டை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லி, அரைத்த மசாலா விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சாதத்துடன் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் சேர்த்து – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 6 பல், அஜினமோட்டோ – அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்), மிளகாய் எண்ணெய் (கடாயில் எண்ணெய் விட்டு, நன்றாகக் காய்ந்ததும் காய்ந்த மிளகாயைப் போட்டு ஆற விடவும்) – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயத்தாள் – 3, சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், முளைகட்டிய பயறு – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயுடன், பூண்டு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். அடுப்பை பெரிய தீயில் வைத்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்களை சேர்க்கவும். அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வதக்கி, சர்க்கரை சேர்க்கவும். சாதம், சோயா சாஸ், வெங்காய்த்தாள் சேர்த்துக் கிளறி…. கடைசியில் பயறு, மிளகாய் போட்டு காய்ச்சிய எண்ணெயை விட்டுக் கிளறி இறக்கவும்.

நன்றி:- பாரதி முரளி வளசரவாக்கம்

நன்றி:- அ.வி


30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல்


30 வகை அதிசய சமையல்

”எப்பப் பாரு… ‘சமையல், சமையல்’னு அடுப்புல கெடந்தே வேக வேண்டியிருக்கு. அட்லீஸ்ட், வாரத்துல ஒரு நாளாவது இந்த அடுப்புக்கு ஓய்வு கொடுத்துட்டு, பச்சையா அரிசியை அள்ளி தின்னுட்டு ‘அக்கடா’னு உக்கார்ந்துடலாம் போல இருக்கு…”

– இப்படி பல சமயங்களில் தோன்றும்தானே!

ஆனால், ”அடுப்பையே பத்த வைக்காம, வாய்க்கு ருசியான சாப்பாட்டை தயாரிக்கற வழி இருக்கறப்ப, எதுக்காக இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?” என்று கேட்கும் ‘இயற்கை வழி சமையல்’ நிபுணர் இரத்தின சக்திவேல்… லட்டு, சாம்பார், ரசம், இட்லி, பிரியாணி எனறு வரிசையாக ரெசிபிகளை அள்ளிவிட… எல்லாமே மேஜிக் போல நம்மை அதிசயத்தில் ஆழ்த்தின!

”நம்ம முன்னோர்கள், ‘மருந்தே உணவு, உணவே மருந்து’னு உலகத்துக்கே முன்னோடியா வாழந்துட்டு இருந்தவங்க. இடையிலதான் பீட்ஸா, பர்கர், பாக்கெட்டுல அடைச்சு விக்கிற சாப்பாடுனு சேர்த்துக்க ஆரம்பிச்சு, விதம்விதமான நோய்களுக்கும் விருந்து வச்சுட்டோம். நான் சொல்ற இயற்கை ரெசிபிகளை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க. உடம்பும் மனசும் எப்பவும் ஆரோக்கியமா இருக்கும்” என்று உத்தரவாதமும் கொடுத்தார் இரத்தின சக்திவேல்.

அவர் கொடுத்த ரெசிபிகளை வைத்து, 30 வகையான உணவுகளை தயாரித்த பிரபல சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், ”நம்மள சுத்தி கிடைக்கற பொருட்கள வச்சே, எளிமையா இந்த ரெசிபிகள தயாரிக்க முடியும். கேஸ், எண்ணெய்னு பலதுக்கும் நாம செலவழிக்கற காசு மிச்சமாகறதோட, சமையல் அறை டென்ஷனும் போயே போச்சு” என்று சந்தோஷம் பொங்கச் சொல்கிறார்.

பிறகென்ன தோழிகளே..? இயற்கையா சமைங்க… இளமையாவே இருங்க!

பப்பாளிபழ பாயசம்

தேவையானவை: பப்பாளிபழம் (நறுக்கியது) – ஒரு கப், தேங்காய்ப்பால் – அரை கப், வெல்லம் (பொடித்தது) – அரை கப், முந்திரி, திராட்சை – தலா 20, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: நறுக்கிய பப்பாளியை மிக்ஸியில் போட்டு, குறைந்த அளவு வேகத்தில் வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பழக் கலவையை பாத்திரத்தில் விட்டு, அதில் தேங்காய்ப்பால், பொடித்த வெல்லம் (வெல்லத்துக்கு பதில் தேன் சேர்த்துக் கொள்ளலாம்), முந்திரி, திராட்சை, ஏலகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்தால்… பப்பாளிபழப் பாயசம் ரெடி!

ஆப்பிள், மாம்பழம், அன்னாசி, வாழைப்பழம் ஆகிய பழங்களிலும் இதே முறையில் பாயசம் செய்யலாம்.

குறிப்பு: மலச்சிக்கல், தொப்பை, பசியின்மை, குடல்புண், உடல் சூடு போன்ற உடல் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் குணம் இந்த பழ பாயசத்துக்கு இருக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும்.

ஃப்ரூட்ஸ்\அவல் மிக்ஸ்

தேவையானவை: அவல் – அரை கிலோ, திராட்சை – 50 கிராம், நறுக்கிய கொய்யா, ஆப்பிள், பேரீச்சை, முந்திரி – ஒரு கப், பொடித்த வெல்லம் – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – ஒரு கப்.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். திராட்சைப் பழத்தை நீரில் ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும். பேரீச்சையை கழுவி கொட்டை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். கழுவிய அவலுடன் நறுக்கிய பழங்கள், திராட்சை, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இது, அசிடிட்டி மற்றும் நெஞ்சு எரிச்சலை சரிசெய்யும்.

நேச்சுரல் லட்டு

தேவையானவை: முந்திரி – 200 கிராம், பாதாம், திராட்சை – தலா 100 கிராம், பிஸ்தா – 50 கிராம், பேரீச்சை – 250 கிராம் (கொட்டை நீக்கியது), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: பேரீச்சை, திராட்சையை நன்கு கழுவிக் கொள்ளவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து… கடைசிச் சுற்றில் பேரீச்சை, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். அரைத்த இந்தக் கலவை லேசான சூடுடன் இருக்கும்போதே, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்க… நேச்சுரல் லட்டு தயார். ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.

குறிப்பு: நீண்ட நேரம் பசி தாங்கும் இந்த லட்டு, உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு, மாலை நேர டிபனாக கொடுக்கலாம்.

நெல்லிக்காய் சிப்ஸ்

தேவையானவை: முழு நெல்லிக்காய் – 100

செய்முறை: முழு நெல்லிக்காய்களை கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பிறகு, அவற்றை மிதமான வெயிலில் 5-6 நாட்கள் காய வைத்து எடுக்கவும். காய்ந்ததும், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் எதுவும் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

குறிப்பு: இளமையாக இருக்க வேண்டும் என்பவர்கள் இதைத் தினமும் சாப்பிடலாம்; மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவறாமல் சாப்பிட… நல்ல பலன் கிடைக்கும்.

கோலா லட்டு

தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ், கோதுமை, கம்பு – தலா 100 கிராம், பொடித்த வெல்லம் – ஒரு கப், முந்திரி – 20, ஏலக்காய்த்தூள் – சிட்டிகை.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தானியங்களையும் 8 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டவும். பிறகு, ஈரத்துணியில் கட்டி முளைகட்டவும். அந்த முளைகட்டிய தானியங்களை வெயிலில் உலர வைத்து. அரைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி அதில் அரைத்த மாவு, முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்க.. கோலா லட்டு தயார்!.

குறிப்பு: உடலில் வலுவில்லாதவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட… சக்தி பெறுவார்கள்.

கோவைக்காய் ஊறுகாய்

தேவையானவை: கோவைக்காய் – கால் கிலோ, இஞ்சி – 100 கிராம், எலுமிச்சம்பழம் – 5, இந்துப்பு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி, நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு பிழியவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி, கொட்டை நீக்கி, சாறு பிழிந்தெடுக்கவும். இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, நறுக்கிய கோவைக்காய், இந்துப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்க… எண்ணெய் இல்லாத கோவைக்காய் ஊறுகாய் ரெடி!

குறிப்பு: இது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது.

கேரட் கீர்

தேவையானவை: கேரட் – அரை கிலோ, தேங்காய் துருவல் – அரை கப், பொடித்த வெல்லம் – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: கேரட்டை கழுவி, நறுக்கி மிக்ஸியில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த கலவையை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் அரைத்து வடிகட்டி, தேங்காய்ப்பால் எடுக்கவும்.

வடிகட்டிய கேரட் ஜூஸ், தேங்காய்பால், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், குடல் புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் சாப்பிட… நல்ல பலன் கிடைக்கும்.

வொண்டர் ஃபுட்

தேவையானவை: பாசிப்பயறு – 200 கிராம், பொடித்த வெல்லம் – 250 கிராம்.

செய்முறை: பாசிப்பயறை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து ஈரத் துணியில் கட்டி வைக்கவும். அடுத்த எட்டு மணி நேரத்தில் நன்கு முளை விட்டிருக் கும். முளைவிட்ட பாசிப்பயறை, மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து, பாலெடுக்கவும். பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இதனை, நீரழிவு நோயாளிகள் வெல்லம் சேர்க்காமல் சாப்பிடலாம். உடம்பில் சக்தியும், நல்ல அழகும் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், காலை உணவாக தினமும் எடுத்துக் கொள்ளலாம். முளைகட்டிய பயிர்களை ஆங்கிலத்தில் வொண்டர் ஃபுட் என்கிறார்கள்.

நெல்லி ஜாமூன்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 50, தேன் – ஒன்றரை கிலோ, பனங்கற்கண்டு – அரை கிலோ.

செய்முறை: நெல்லிக்காயை நன்கு கழுவவும். பிறகு, சுத்தமான ஊசியால்… ஒவ்வொரு நெல்லிகாய் முழுவதிலும் சிறு சிறு துளைகள் இடவும். கண்ணாடி பாட்டிலில் தேனை விட்டு, அதில் துளையிட்ட நெல்லிக்காய், பனங்கற்கண்டு போட்டு ஊற விடவும். கண்ணாடிப் பாட்டிலின் மேல் பகுதியில், மெல்லிய காட்டன் துணியைக் கட்டி.. வெயிலில் ஒரு வாரம் வரை வைத்தெடுத்தால், நெல்லி ஜாமூன் ரெடி!

குறிப்பு: முதுமையை விரட்டும் அற்புத மருந்து இது. தினம் தவறாமல் சாப்பிட… உயர் ரத்த அழுத்தம், ஒபிஸிட்டி போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். சளி, இருமல், தலைவலி விலகும்; கண்பார்வை மேம்படும்.

மேட்ச் ஸ்டிக் சாலட்

தேவையானவை: கேரட் – 2, தக்காளி – 2, வெள்ளரிக்காய், வெங்காயம் – தலா ஒன்று, முட்டைகோஸ் – 200 கிராம், வெண்பூசணி, புடலை, பீர்க்கங்காய், சௌசௌ, முள்ளங்கி, சுரைக்காய்… இவற்றில் எதாவது ஒன்று – 200 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், எலுமிச்சம்பழம் – ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, பொடித்த வெல்லம் – தேவையான அளவு, பிளாக் சால்ட் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள எல்லா காய்கறிகளையும் நன்றாகக் கழுவி, தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி சாறு எடுக்கவும். நறுக்கிய காய்கறிகளுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், பொடித்த வெல்லம், பிளாக் சால்ட் சேர்த்துக் கலக்க… மேட்ச் ஸ்டிக் சாலட் தயார்!

குறிப்பு: உடல் சூடு, மூலம், மாதவிடாய் கோளாறுகளை இது கட்டுப்படுத்தும். தொடர்ந்து சாப்பிட… இந்த உபாதைகள் நீங்கும்.

காலிஃப்ளவர் கொத்சு

தேவையானவை: காலிஃப்ளவர் – 400 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள் – தலா 200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக்கி, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்தவற்றை குச்சி போல் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவலை, கொஞ்சம் தண்ணீர் விட்டு, துவையல் போல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய காலிஃப்ளவர், தேங்காய் விழுது,பொடித்த வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: நார்ச்சத்து நிறைந்த இந்த உணவு, ரத்தத்தை சுத்தப்படுத்தும். வயிற்று உபாதைகளை சரிசெய்யும்.

வெண்பூசணிக் கூட்டு

தேவையானவை: வெண்பூசணி – 500 கிராம், பாசிப்பருப்பு – 50 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், வறுத்துப் பொடித்த பொட்டுக்கடலைத்தூள் – முக்கால் கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், முளைகட்டிய தானியம் (ஏதாவது ஒருவகை பயறு) – கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும். வெண்பூசணியைக் கழுவி தோல், கொட்டை நீக்கி தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காய் உட்பட கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும், ஒரு பாத்திரத்தில் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

இதேபோல் சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, வாழைத்தண்டு, புடலங்காய் போன்ற அனைத்து நீர்சத்து காய்களிலும் செய்யலாம்.

குறிப்பு: இதை ரெகுலராக செய்து சாப்பிட்டு வர… மூலவியாதி, அதனால் உண்டாகும் எரிச்சல் போன்றவை நீங்கும். முகம் பொலிவு பெறும்.

நேச்சுரல் தயிர்

தேவையானவை: தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: தேங்காய்ப்பாலுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். அதனை ‘ஹாட் பேக்’கில் விட்டு நன்கு மூடி வைக்க.. தயிர் போல் உறைந்து விடும். இந்த நேச்சுரல் தயிரை நறுக்கிய பழங்களுடன் கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு: இது, அடுப்பில் வைக்காத பால் என்பதால் கொழுப்பு உண்டாகாது. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, சளி தொந்தரவை நீக்கும்.

வெண்பூசணி அல்வா

தேவையானவை: வெண்பூசணி – அரை கிலோ, தேன் (அ) வெல்லம் – 250 கிராம், பேரீச்சை – 100 கிராம், முந்திரி, திராட்சை – தலா 50 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – அரை கப்.

செய்முறை: வெண்பூசணியை தோல் சீவி, கழுவி, துருவிக் கொள்ளவும். பேரீச்சையை நன்கு கழுவி, கொட்டை நீக்கி, சிறிதாக நறுக்கவும். வெண்பூசணி துருவலுடன் நறுக்கிய பேரீச்சை, தேன் (அ) பொடித்த வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இதேபோல், கேரட்டிலும் தயார் செய்யலாம்.

குறிப்பு: இது ஒபிஸிட்டி, அல்சர், மூலம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், தொப்பை, மூட்டுவலி பிரச்னைகளை சரி செய்யும். பித்தத்தை சரிசெய்யும். சிறுநீரகக் கல் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால், பலன் கிடைக்கும்.

எள்ளுருண்டை லட்டு

தேவையானவை: வறுத்த எள் – 400 கிராம், திராட்சை – 100 கிராம், பேரீச்சை – 300 கிராம், முந்திரி – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: எள்ளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பேரீச்சையின் கொட்டையை நீக்கவும். திராட்சை, பேரீச்சையைக் கழுவவும். எள்ளை, மிக்ஸியில் பொடித்து.. திராட்சை, பேரீச்சை சேர்த்து மீண்டும் அரைக்கவும். பிறகு, அதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: பாலூட்டும் தாய்மார்களுக்கும், உடல் இளைத்து இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்லது.

நொறுக்ஸ் அவல்

தேவையானவை: அவல் – அரை கிலோ, வறுத்த வேர்க் கடலை – 50 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், பொடித்த வெல்லம் – 100 கிராம்.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்று சேர்த்து, கலந்து பரிமாறவும். காரம் வேண்டுபவர்கள், நறுக்கிய குடமிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.

குறிப்பு: குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேர டிபனாக சாப்பிடக் கொடுக்கலாம்.

சீரியல்ஸ்\பல்ஸஸ் ஹெல்த் டிரிங்க்

தேவையானவை: கேழ்வரகு, கோதுமை – தலா 250 கிராம், கம்பு – 150 கிராம், பச்சைப்பயறு – 100 கிராம், கொண்டைக்கடலை – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், வெல்லம் (அ) தேன் – தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: தானியங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, 8 மணிநேரம் ஊற வைக்கவும். நீரை வடித்து, துணியில் கட்டி வைக்க, முளைவிடும். முளைவிட்டதும், அவற்றை நன்கு உலர வைத்து அரைக்கவும். அரைத்த மாவை ஈரமில்லாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

தேவைப்படும்போது, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் மாவு கலந்து… வெல்லம் அல்லது தேன், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். காரம் வேண்டும் என்பவர்கள், வெல்லத்துக்கு பதிலாக மிளகுத்தூள், பிளாக் சால்ட் கலந்து பருகலாம். சூடாக சாப்பிட விரும்புபவர்கள்… தண்ணீரில் மாவைக் கரைத்து நன்கு சூடு செய்து வெல்லம் அல்லது மிளகுத்தூள் கலந்து பருகலாம்.

குறிப்பு: இந்த பானம் உடலை வலுவடைய செய்யும். சத்து இல்லாத குழந்தைகளுக்கு இதனை ரெகுலர் உணவாகத் தர… சக்தி கிடைக்கும்.

அவல் மிக்ஸர்

தேவையானவை: அரிசி அவல் (அ) சோள அவல் – அரை கிலோ, தேங்காய் துருவல் – அரை கப், நறுக்கிய குடமிளகாய் – ஒன்று, வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 50 கிராம், பொரி – 100 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், பொடித்த வெல்லம் – 250 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தப்படுத்தவும். சுத்தப்படுத்திய அவலை, ஒரு பாத்திரத்தில் போட்டு… அதனுடன் வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை, பொரி, நறுக்கிய குடமிளகாய், பொட்டுக்கடலை, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: மாலை நேர டிபனாகவும் பயணத்தின்போது நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடலாம். மணிபர்சுக்கும், உடல் நலத்துக்கும் சேஃபானது இது!

வெஜிடபிள் இட்லி

தேவையானவை: அவல் – அரை கிலோ, முளைகட்டி, உலர வைத்த கோதுமை – 200 கிராம், தேங்காய் துருவல் – ஒன்றரை கப், பிளாக் சால்ட் – தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டி, உலர வைத்த கோதுமையை மிக்ஸியில் அரைக்கவும். அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற விடவும். ஊறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கோதுமை, அவலுடன் தேங்காய் துருவல், பிளாக் சால்ட் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் மெல்லிய துணி விரித்து, இந்த மாவை இட்லி போல் விடவும். 10 நிமிடம் கழித்து… துணியிலிருந்து மெதுவாக இதனைப் பிரித்தெடுக்க… நேச்சுரல் இட்லி தயார். இதனுடன் காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.

குறிப்பு: இதற்குத் தொட்டுக்கொள்ள இயற்கை சாம்பார் ஏற்றது.

ஸ்டஃப்டு பேரீச்சை

தேவையானவை: பேரீச்சை – அரை கிலோ, முந்திரி – 250 கிராம், தேன் – 200 கிராம்.

செய்முறை: முந்திரியை தேனில் ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். பேரீச்சையைக் கழுவி உலர விடவும். பிறகு, நீளவாக்கில் கீறி கொட்டையை மெதுவாக நீக்கி விடவும். கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சைக்குள் தேனில் ஊற வைத்த முந்திரியை ஸ்டஃப் செய்யவும். இதுபோல் ஒவ்வொரு பேரீச்சை யிலும் ஸ்டஃப் செய்ய வும்.

குறிப்பு: ரத்தசோகையை நீக்கும் நல்ல மருந்து இது. உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்கள் இதனை தினமும் சாப்பிடலாம்.

கொத்தமல்லி\அவல் மிக்ஸ் மீல்ஸ்

தேவையானவை: அவல் – 600 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், கொத்தமல்லி – ஒரு கட்டு, கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடியளவு, வெங்காயம், குடமிளகாய் – தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், முந்திரி – 100 கிராம், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கிச் சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும். சுத்தம் செய்த கொத்தமல்லி, கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு அரைத்து… கெட்டியாக சாறு எடுக்கவும். குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

கழுவிய அவலுடன் அரைத்தெடுத்த கொத்தமல்லி – கறிவேப்பிலை சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் முந்திரி, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய் துருவல், இந்துப்பு சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

நேச்சுரல் பிரியாணி

தேவையானவை: அரிசி அவல் – 250 கிராம், முளை கட்டி, உலர வைத்த கோதுமை – 250 கிராம், வெங்காயம் – 2, கேரட், தக்காளி – தலா 3, முட்டைகோஸ், பீன்ஸ், வெண்பூசணி, புடலங்காய், சௌசௌ – தலா 100 கிராம், வெள்ளரி – 2, உருளைக்கிழங்கு, குடமிளகாய் – தலா 1, மாதுளை முத்துக்கள் – அரை கப், முளைகட்டிய பாசிப்பயறு – 50 கிராம், முளை கட்டிய வேர்க்கடலை – 100 கிராம், முளைகட்டிய எள் – 50 கிராம், முந்திரி, திராட்சை – தலா 100 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பட்டை – 2, கிராம்பு – 3, ஏலக்காய் – 4, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு- 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், இஞ்சி – 50 கிராம், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, மிக்ஸியில் ரவையாக அரைக்கவும். முளைகட்டி உலர வைத்த கோதுமையையும் ரவையாக அரைக்கவும். ரவையாக அரைத்த அவல், கோதுமையை தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து… ஊற வைக்கவும். இஞ்சியைத் தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கவும். முந்திரி, திராட்சையைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும்.

ஒரு பாத்திரத்தில், ஊற வைத்த ரவையாக அரைத்த அவல், கோதுமையுடன் நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி, முளை கட்டிய தானியங்கள், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, மாதுளை முத்துக்கள், மிளகுத்தூள், சீரகத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், எலுமிச்சைச் சாறு, இந்துப்பு அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளற… நேச்சுரல் பிரியாணி ரெடி!

எலுமிச்சை\அவல் மிக்ஸ் மீல்ஸ்

தேவையானவை: அவல் – 600 கிராம், எலுமிச்சைச் சாறு – 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், வெங்காயம், குடமிளகாய் – தலா 2, பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பூண்டு – 5 பல், வறுத்த வேர்க்கடலை – 200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, கழுவி தண்ணீரை வடித்து ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும்.

ஊற வைத்த அவலுடன் எலுமிச்சைச் சாறு, தேங்காய் துருவல், வறுத்துத் தோல் நீக்கிய வேர்கடலை, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு கலந்து நன்கு கிளறி பரிமாறவும்.

பீட்ரூட் ஊறுகாய்

தேவையானவை: பீட்ரூட் துருவல் – ஒரு கப், இஞ்சி – 100 கிராம், எலுமிச்சம்பழம் – 10, இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி, கொட்டை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, அதில் பீட்ரூட் துருவல், இந்துப்பு சேர்த்துக் கலந்து… 10 நிமிடம் ஊற வைக்கவும். இதே முறையில் கேரட்டிலும் செய்யலாம்.

குறிப்பு: இந்த ஊறுகாய்… ஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் போன்ற உபாதைகளை சரிசெய்யும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.

இயற்கை சாம்பார்

தேவையானவை: பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடி – தலா 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – கைப்பிடியளவு, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், தக்காளி – 200 கிராம், குடமிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு கப், முட்டைகோஸ், வெண்பூசணி – தலா 100 கிராம், கேரட் – 200 கிராம், குடமிளகாய் – 2, சீரகத்தூள் – அரை டீஸ்பூன், பூண்டு – 3, இஞ்சி – சிறிய துண்டு, பிளாக் சால்ட் – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். அல்லது தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். குடமிளகாய், பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் தனியே அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடியை தேவையான அளவுத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அதனுடன் காய்கறி துருவல், அரைத்த தேங்காய் விழுது, சாம்பார் பொடி, அரைத்த கொத்தமல்லி, கறிவேப்பிலை விழுது, சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, பிளாக் சால்ட் போட்டு கலக்கினால் இயற்கை சாம்பார் தயார்.

குறிப்பு: இதனை அவல் சாதம், நேச்சுரல் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

இயற்கை ரசம்

தேவையானவை: தக்காளி – அரை கிலோ, ரசப்பொடி – ஒன்றரை டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, தோலுரித்த பூண்டு – 5 பல், பிளாக் சால்ட் – தேவையான அளவு.

செய்முறை: தக்காளியை நன்கு கழுவி, அரைத்து சாறு எடுத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தோலுரித்த பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் ரசப்பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள், பிளாக் சால்ட் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை தக்காளிச் சாறுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்க… இயற்கை ரசம் ரெடி!

குறிப்பு: தக்காளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு அல்லது புளிக்கரைசல் உபயோகித்தும் செய்யலாம்.

தக்காளி\அவல் ஜீமிக்ஸ் மீல்ஸ்

தேவையானவை: அவல் – 600 கிராம், தக்காளி – 2 கிலோ, தேங்காய் துருவல் – ஒரு கப், வெங்காயம் – 2, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், முந்திரி – 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பூண்டு – 3 பல், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பிளாக் சால்ட் – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து.. தண்ணீர் விட்டுக் கழுவி வடிகட்டவும். தக்காளியை நன்றாகக் கழுவி மிக்ஸியில் போட்டுக் கெட்டியாக அரைத்து… சாறு எடுத்துக் கொள்ளவும். அல்லது தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல், தக்காளிச் சாறு அல்லது தக்காளித் துண்டுகள், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, நசுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள், முந்திரி, பிளாக் சால்ட் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதற்குத் தொட்டுக் கொள்ள பச்சடி ஏற்றது.

குறிப்பு: மதிய உணவாக இதனை எடுத்துக் கொள்ளலாம். குறைந்த கலோரி உணவு இது.

இஞ்சி ஜாம்

தேவையானவை: தேன் – அரை கிலோ, இஞ்சி – அரை கிலோ, பேரீச்சை – 250 கிராம், பனங்கற்கண்டு – 200 கிராம்.

செய்முறை: இஞ்சியை தோல் நீக்கிக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு பாட்டிலில் தேன் விட்டு அதில் நறுக்கிய இஞ்சியை ஊற வைக்கவும். பேரீச்சையைக் கழுவி, கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய பேரீச்சை, பனங்கற்கண்டு ஆகியவற்றை தேனில் ஊறும் இஞ்சியுடன் கலக்கவும். அந்த பாட்டிலின் வாயை மெல்லிய காட்டன் துணியால் கட்டவும். இதனை, ஒருவாரம் வெயிலில் வைத்து எடுத்து, சாப்பிடவும்.

குறிப்பு: வயிற்று வலி, வயிற்று பூச்சி, ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், சளி, இருமல் தொல்லைகளுக்கு சிறந்தது இஞ்சி ஜாம்.

ஸ்டஃப்டு டமாட்டர்

தேவையானவை: தக்காளி – 10, பொட்டுக்கடலை – 50 கிராம், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – 50 கிராம், தேங்காய் துருவல் – கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் – சிறிதளவு

செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலை, தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் எல்லவற்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் நீர் விட்டுக் கெட்டியாக அரைக்கவும். தக்காளியை நன்கு கழுவி, அதன் மேல் பக்கத்தில் கீறவும். அதற்குள் அரைத்த கலவையை வைத்து, மேலே நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.

குறிப்பு: இதை அடிக்கடி செய்து சாப்பிட ரத்த சோகை விலகி, இளமை மேம்படும். உடல் தொப்பை, கொலஸ்ட்ரால், அதிக உடல் எடையை சரிசெய்யும்.

முட்டைகோஸ் பொரியல்

தேவையானவை: முட்டைகோஸ் துருவல் – ஒன்றரை கப், கேரட் துருவல் – கால் கப், தேங்காய் துருவல் – அரை கப், வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 200 கிராம், முந்திரி – 50 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இந்துப்பு – சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டைக்கோஸ் துருவல், கேரட் துருவல், தேங்காய் துருவல், முந்திரி, வேர்க்கடலை, மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, புதினா எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, இந்துப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: உடல் எடை, வியர்வை நாற்றம், வாயுத்தொல்லை, அல்சர், குடல் புண், முகப்பரு போன்ற பிரச்னை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர… குணமடைவார்கள்.

நன்றி:- சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்

நன்றி:- சமையல் கலை நிபுணர் இரத்தின சக்திவேல்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

30 வகை எண்ணெய் இல்லாத சமையல் – சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்

ஜூன் 24, 2010 1 மறுமொழி

”எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!” என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது, உணவில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் எண்ணெய்!

எண்ணெய் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தியே விதம்விதமான சமையல் இருக்கத்தான் செய்தது. எள்ளு தாத்தா-எள்ளு பாட்டியிடம் (உயிரோடு இருந்தால்) கேட்டுப் பாருங்கள்… பல தலைமுறைகளாக தாங்கள் சப்புக்கொட்டி, ரசித்து, ருசித்து சாப்பிட்டு, நோய் நொடியில்லாமல் வலம் வந்த அந்த ரகசியத்தைச் சொல்வார்கள்!

அப்போதெல்லாம், பண்டிகைகளுக்கு மட்டுமே எண்ணெய் என்பது வீடுகளை எட்டிப் பார்க்கும். இன்றைக்கோ… தோசை, பூரி, வடை என்று பொழுதுவிடிந்தால்… பொழுதுபோனால், எண்ணெயோடுதான் வாழ்க்கை! விளைவு… கொலஸ்ட்ரால், பிளட் பிரஷர், சர்க்கரை என டாக்டரிடம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அவர் சொல்கிற முதல் வார்த்தையே “சாப்பாட்டுல எண்ணெயைக் குறைச்சுடுங்க” என்பதுதான்.

”எண்ணெய் இல்லாமல் சமைக்க முடியுமா?” என்று அலறாதீர்கள். இங்கே, பிரபல ‘சமையல் கலை நிபுணர்’ ரேவதி சண்முகம் உங்களுக்கு பரிமாறிஇருக்கும் 30 வகை சமையலுமே ‘ஆயில் ஃப்ரீ’தான்! கூடவே அவர் சொல்லும் ஓர் எச்சரிக்கைக் குறிப்பு …

“இந்த வகை சமையலுக்காக தாளிக்கறப்ப, அடுப்பை மிதமான தீயில வச்சுருக்கணும். அப்பதான் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு மாதிரியான பொருட்கள் கருகாம பொரிஞ்சு வரும்.”

எண்ணெய் செலவுக்கு மட்டுமல்ல… மருத்துவச் செலவுக்கும் குட்பை சொல்வோமா?!

டயட் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், ஏதேனும் ஒரு வகை காய் (நறுக்கியது) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – 1, தக்காளி – 2, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும். வெந்த பருப்புடன் நறுக்கிய காய், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி… 2 விசில் வந்ததும் இறக்கவும்.

வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் நன்கு பொரிய விட்டு, சாம்பாரில் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால்… டயட் சாம்பார் ரெடி!

வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், வாழைத்தண்டு (மீடியம் சைஸ்) – ஒன்று, வெங்காயம் (நறுக்கிக் கொள்ளவும்) – 1, பச்சை மிளகாய் – 3, காய்ச்சிய பால் – கால் கப், சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய வாழைத்தண்டு, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் திறந்து, அதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு, நசுக்கிய பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, பால் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

உசிலி

தேவையானவை: கடலைப்பருப்பு – முக்கால் கப், துவரம்பருப்பு – கால் கப், பச்சை மிளகாய் – 3, பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், ஏதாவது ஒரு வகை காய் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் கலந்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு, தண்ணீரை வடித்து, அவற்றுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, இட்லி பாத்திரத்தில் போட்டு 10-15 நிமிடம் வேக வைத்து, இறக்கவும். ஆறியதும், அந்த உருண்டைகளை, சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒருமுறை சுற்றி எடுத்தால்… உதிராக வரும். நறுக்கிய காய்கறியுடன் உப்பு சேர்த்து (தேவைப்பட்டால்), குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். உதிர்த்த பருப்புடன் வேக வைத்த காய்கறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறவும். வெறும் கடாயில், கடுகு பொரித்து சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

கீரை மசியல்

தேவையானவை: அரைக்கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 5, பச்சை மிளகாய் – 1, பூண்டு – 5 பல், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும். ஆய்ந்த கீரையுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், திறந்து நன்கு மசித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால், வேக வைத்த பாசிப்பருப்பு கொஞ்சம் சேர்த்துக் கலந்தும் பரிமாறலாம்.

இதேபோல் முளைக்கீரை, சிறுகீரையிலும் செய்யலாம்.

பருப்பு ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், புளிக் கரைசல் – கால் கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

பொடிக்க: மிளகு, சீரகம் – தலா ஒன்றரை டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 3 பல்.

செய்முறை: பாத்திரத்தில் துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர், புளிக் கரைசல், பெருங்காயத்தூள், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து… கொதிக்க விடவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு பொடிக்கவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து கடுகு, வெந்தயம் சேர்த்து சிவக்கப் பொரித்து, துவரம்பருப்புத் தண்ணீர் கரைசலில் சேர்க்கவும். ஒரு கொதி வரும்போது, பொடித்த பொடியையும் சேர்க்கவும். கூடவே, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கிப் பரிமாற வும்.

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: வாழைக்காய் – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

பொடிக்க: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வாழைக்காயை இரண்டாக நறுக்கி, வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் இறக்கவும். ஆற வைத்து, தோல் நீக்கி, துருவிக் கொள்ளவும். வெறும் கடாயில் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். மிதமான தீயில் கடாயை வைத்து கடுகு போட்டு பொரித்து, கறிவேப்பிலை சேர்த்து… துருவிய வாழைக்காயை சேர்த்துக் கிளறவும். பொடித்த பொடி, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எண்ணெய் சேர்க்காததால், அடுப்பை ‘சிம்’மிலேயே வைத்து சமைக்கவும். விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

அவல் தோசை

தேவையானவை: பச்சரிசி – ஒன்றரை கப், புழுங்கல் அரிசி, அவல் – தலா அரை கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைக்கவும். அவலை தனியாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், எல்லாவற்றையும் ஒன்றாக்கி, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்க விடவும். புளித்ததும், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து, ஒரு கரண்டி மாவு விட்டு, ஊத்தப்பம் போல் வார்த்து மூடியால் மூடவும். வெந்ததும், திருப்பிப் போடாமல் அப்படியே எடுக்க… அவல் தோசை ரெடி! இதேபோல் ஒவ்வொரு அவல் தோசையையும் தயார் செய்யவும்.

இளந்தோசை

தேவையானவை: இட்லி மாவு – ஒரு கப், தண்ணீர் – சிறிதளவு.

செய்முறை: இட்லி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, தோசை மாவை விட்டு, மெல்லிய தோசையாக வார்க்கவும். பிறகு, மூடியால் மூடி வைத்து ஒரு நிமிடம் வேக விட்டு எடுக்கவும். இதேபோல், ஒவ்வொரு தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

இந்த தோசைகள், வெள்ளை நிறம் மாறாமல் மிக மெல்லியதாக இருக்கும்.

பொடி இட்லி

தேவையானவை: இட்லி மாவு – 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி – 3 டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: இட்லி மாவில், மினி இட்லிகளை தயார் செய்து கொள்ளவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து, கடுகு போட்டு பொரிக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும். இட்லி மிளகாய்ப் பொடியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு… தண்ணீர் விட்டுக் குழைத்து, மினி இட்லிகளைப் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். பொரித்த கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

தயிர் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, புளிக்காத தயிர் – ஒரு கப், வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1, புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன், சாட் மசாலா, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும். பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும். பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு ஸலைஸால் மூடவும். இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து கொள்ளவும். தயிருடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்.

மல்டி வெஜிடபிள் குழம்பு

தேவையானவை: நறுக்கிய பரங்கிக்காய், கத்திரிக்காய், அவரை, காராமணி, மொச்சை, வாழை, முருங்கைக்காய் கலவை – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு – கால் கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 8 பல், புளி – 50 கிராம், தக்காளி – 4, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன், வெந்த யம் – அரை டீஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயம், பூண்டை தோலுரித்து, நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டவும். பிறகு புளிக் கரைசலை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்த தும், தோல் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, நறுக்கிய காய்கறி கலவையைச் சேர்த் துக் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து… காய் வேகும் வரை கொதிக்க விடவும்.

வெறும் கடாயில் கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து வறுத்து, குழம்பில் சேர்க்கவும். வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

வெஜ் சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – 3 டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, சர்க்கரை – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும், பொடியாக நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்க்கவும். காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து இறக்கி… சூடாகப் பரிமாறவும்.

மசாலா சென்னா

தேவையானவை: வெள்ளை சென்னா – ஒரு கப், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, சாட் மசாலா – ஒரு டீஸ்பூன், மாங்காய்த்தூள் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சென்னாவை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சென்னாவுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், மூடியைத் திறந்து, தண்ணீரை வடிக்கவும். கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலக்க… மசாலா சென்னா தயார்!

செட்டிநாட்டு பருப்புத் துவையல்

தேவையானவை: துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – கால் கப், காய்ந்த மிளகாய் – 2, புளி – கொட்டைப்பாக்களவு, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில், பருப்பை பொன்நிறமாக வறுக்கவும். பிறகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், புளி, தேங்காய் துருவல். உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாகவும், கரகரப்பாகவும் அரைக்கவும். கடைசி யாக, பூண்டு சேர்த்து ஒருமுறை சுற்றி எடுக்க… செட்டிநாட்டு பருப்புத் துவையல் ரெடி!

பருப்பு சாதம்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 8 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதித்ததும், கழுவிய துவரம்பருப்பு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும். பிறகு, அரிசி, தோலுரித்து நசுக்கிய பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து குழைய வேக வைத்து இறக்கவும்.

இதற்கு மோர்க்குழம்பு, பொடிமாஸ் சிறந்த சைட் டிஷ்.

கலவைக்காய் குருமா

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் கலவை – 2 கப், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் – கால் கப், பாதாம் – 10, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பூண்டு – 2 பல், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா ஒன்று.

செய்முறை: நறுக்கிய காய்கறிகளுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு கடாயில் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வதக்கி இறக்கவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து… வேக வைத்த காய்கறி கலவையுடன் சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து ஒருமுறை கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும்.

காய்கறி போளி

தேவையானவை: கேரட் துருவல் – கால் கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் (கலந்தது) – கால் கப், கோதுமை மாவு – ஒன்றரை கப், பால் – அரை கப், பட்டை – 2 துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத் திரத்தில் கேரட், முள்ளங்கி, முட்டை கோஸ் துருவலுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து… அந்தக் கலவையை அழுத்தி வைக்கவும். 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து, மசித்த உருளைக் கிழங்கு, பட்டை, சோம்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்த மல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கோதுமை மாவுடன் பால், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து… உருட்டிக் கிண்ணம் போல் செய்து, அதனுள் காய்கறி கலவையை வைத்து மூடவும். அதனை சப்பாத்திக் கல்லில் இட்டு, சற்று கனமாகத் தேய்க்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தேய்த்து தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக்கல்லில் போட்டு, மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

பனீர் டிக்கா

தேவையானவை: பனீர் – 200 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த வெந்தயக்கீரை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பனீரை, மீடியம் சைஸ் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அதனுடன், கொடுத்துள்ள மற்ற பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்கு கலந்து… 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து, 4-5 பனீர் கலவை துண்டுகளைப் போட்டு, இருபுறமும் திருப்பி எடுக்க… பனீர் டிக்கா ரெடி!

பாலக் பனீர்

தேவையானவை: பாலக் கீரை (அ) பசலைக் கீரை, வெந்தயக் கீரை – தலா ஒரு கட்டு, பனீர் – 200 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரைகளை ஆய்ந்து, அலசிக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், தோலுரித்த பூண்டு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும், உப்பு சேர்த்துக் கலந்து நன்கு மசித்துக் கொள்ளவும். நறுக்கிய பனீர் துண்டுகளைச் சேர்த்து ஒருமுறை லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

காலிஃப்ளவர் மசாலா

தேவையானவை: காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், அரைத்த தேங்காய் விழுது – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து, அதில் நறுக்கிய காலிஃப்ளவரை நன்கு கழுவவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய காலிஃப்ளவர், நறுக்கிய வெங்காயம், தக்காளியை கடாயில் சேர்த்து வேகவிடவும். சில நிமிடங்கள் கழித்து, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சோம்புத்தூள், தேங்காய் விழுது, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கிளறவும். கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

மினி ரவா இட்லி

தேவையானவை: ரவை, புளிக்காத தயிர் – தலா ஒரு கப், சேமியா – 1 டேபிள்ஸ்பூன், ஃப்ரூட் சால்ட், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், இஞ்சி விழுது – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கடுகு சேர்த்து பொரிக்கவும். பிறகு உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, ரவை சேர்த்து சிவக்க வறுத்தெடுக்கவும். ஆறியதும், ஃப்ரூட் சால்ட் நீங்கலாக மற்றவற்றை எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அந்த ரவைக் கலவையில் தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இட்லி பானையில் தண்ணீர் விட்டு, சூடாகும் நேரத்தில், ரவை மாவில் ஃப்ரூட் சால்ட் சேர்த்து அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் விட, அது பொங்கி வரும். மாவை மீண்டும் நன்கு கலந்து, மினி இட்லிகளாக சுட்டெடுக்கவும்.

முட்டைகோஸ் ரொட்டி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், காய்ச்சிய பால் – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன்.

ஸ்டஃப் செய்வதற்கு: முட்டைகோஸ் துருவல் – அரை கப், வெங்காயத் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பசலைக் கீரை – தலா கால் கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசையவும். முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து கொள்ளவும். அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள… காய்கறி பூரணம் ரெடி!

பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து… அதனுள் பூரணம் வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொரு ரொட்டியையும் தயார் செய்யவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் இட்டு சற்று கனமாகத் தேய்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து தேய்த்த ரொட்டியை சுட்டெடுக்கவும்.

கிரீன் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய்ப் பால் – ஒரு கப். உப்பு – தேவையான அளவு

அரைக்க: நறுக்கிய கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 1.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட் களை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை, தேங்காய் பாலில் கரைத்து வடிகட்டவும். அந்தப் பாலை அடுப்பில் வைத்து சூடாக்க… நுரை கட்டி வரும். அப்போது அரிசி மாவைக் கொட்டி, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கிளறி இறக்கவும். அதிலிருந்து, கொஞ்சம் மாவு எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி… ஆவியில் வேக வைக்க, கொழுக்கட்டை ரெடி!

வாழைத்தண்டு கோசம்பரி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரை கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, குடமிளகாய், கொத்தமல்லி – தலா கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், வேக வைத்த சென்னா (அ) ஸ்வீட் கார்ன் – அரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், மாதுளம் முத்துக்கள் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வாழைத்தண்டை 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். ஆறியதும், கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

எளியமையான இந்த ரெசிபி, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.

பேங்கன் கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், கத்திரிக்காய் – 5, உருளைக்கிழங்கு, வெங்காயம் – தலா 1, தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, சோம்பு – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், மிளகாய்த்தூள், கீறிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும். இவை எல்லாம் ஒன்றாகக் கலந்து நன்கு வெந்ததும், புளிக் கரைசல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு, வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

தால் இட்லி

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல், கேரட் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மூன்று வகை பருப்புகள், புழுங்கல் அரிசி எல்லாவற்றையும் ஒன்றாக்கி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக இட்லி மாவு பதத்தில் அரைக்கவும். அரைத்த மாவுடன், தேங்காய் துருவல், கேரட் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை, இட்லித் தட்டுகளில் விட்டு இட்லிகளாக வேக வைத்து, சூடாகப் பரிமாறவும்.

இதற்கு கார சட்னி சிறந்த காம்பினேஷன்.

இட்லி சாம்பார்

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

அரைக்க: உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளியை பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். வெறும் கடாயில் மிதமான தீயில், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, ஆறியதும் அரைக்கவும். அரைத்த விழுதை, பருப்புக் கலவையுடன் சேர்த்துக் கலந்து நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து… ஒரு கொதி வந்ததும் இறக்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

மோர்க்குழம்பு

தேவையானவை: புளிப்பில்லாத தயிர் – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, வெந்தயம், ஓமம் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தயிரை நன்கு கடைந்து, கொஞ்சம் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கரைக்கவும். வெறும் கடாயில், கடுகு, வெந்தயம், ஓமம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, மோர்கலவையை சேர்த்து.. கிளறியவாறே இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

ஏதாவது காய்கள் சேர்ப்பதாக இருந்தால் தனியே வேக வைத்து சேர்க்கவும்.

மல்டி பருப்பு சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், ஏதாவது ஒரு காய் (நறுக்கியது) – ஒரு கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, தக்காளி – 2, வெங்காயம் – 1, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – கால் டீஸ்பூன், பெருங்காயம் – தேவையான அளவு, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: தனியா – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும்… துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதி பதத்தில் வெந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறி சேர்த்துக் குழைய வேகவிடவும். பிறகு, புளிக் கரைசல் விட்டுக் கலந்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும். பெருங்காயம், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

இந்த சாம்பார்… சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது.

பாசிப்பருப்பு டோக்ளா

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் – கால் கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் கடலை மாவு, தயிர், பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், உப்பு, கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவில்… ஃப்ரூட் சால்ட் சேர்த்து, அதன் மேல் கால் கப் தண்ணீர் விட, உடனே அது பொங்கி வரும். அதன் பிறகு, மாவை நன்கு கலக்கவும். இட்லித்தட்டில், ஒரு சொட்டு எண்ணெய் விட்டுத் தடவி, அதில் மாவை விட்டு வேகவைத்து இறக்கவும்.

ஆறியதும், துண்டுகளாக நறுக்கி, தேங்காய் சட்னி, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

நன்றி:- சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை