தொகுப்பு

Archive for the ‘தொழுகை’ Category

தொழுகையின் சிறப்புக்கள்


இஸ்லாத்தை தழுவியபின் முதற்கடமை தொழுகையாகும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும்.

Salat_Positions_and_Prayers

அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடை களுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும்.

இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் நோயாளியாக இருக்கும் போதும் கூட தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.

தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள். முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு தொழுகைதான். தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களை விட்டும் மனிதனைத் தடுக்கின்றது. ஒரு தொழுகை மற்றொரு தொழுகைக்கு மத்தியிலுள்ள சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது. மறுமையில் தொழுகையைப் பற்றித்தான் முதலாவதாக விசாரிக்கப்படும். தொழுகையை பேணித் தொழுதவருக்கு அது மறுமையில் பிரகாசமாகவும் ஒளியாகவும் வரும். தொழுகையை பேணித் தொழாதவன் மறுமையில் அல்லாஹ்வின் எதிரிகளான ஃபிர்அவ்ன், ஹாமான், உபை பின் கலப் ஆகியோருடன் இருப்பான். தொழுகையை முறையாகப் பேணியவர்கள் நிச்சயமாக ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார்கள். மனஅமைதியை பெற்று விட்டார்கள்.

தொழுகையைப் பற்றி அல்குர்ஆன் மற்றும் ஹதீதுகளில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9

தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள்   அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72

எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 7:170

‘நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை’. அல்குர்ஆன் 74:42,43

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக.இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78

உங்கள் குழந்தைகள் ஏழு வயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு. நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு, அம்ருஇப்னு ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) நூல் : அஹ்மத்

சிறந்த அமல்: அமல்களில் சிறந்தது எது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்: (பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

கூட்டுத் தொழுகையின் சிறப்பு: ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அல்லாஹு) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்கு மேலானதாகும்.’ (ஸஹீஹுல் புகாரி)

தொழுகையை விட்டவனின் நிலை: நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள்: திர்மிதி, அபுதாவூத், அஹமத், இப்னுமாஜா

இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றனர். அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும், உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பாளர் : அபூ{ஹரைரா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், ‘இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!’ என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

‘எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ‘எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.’ பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.’ (ஸஹீஹ் முஸ்லிம்)

உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், ‘நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!’ என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: ‘நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்’ என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!’ என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரை விட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: ‘இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.’ (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தொடர்புடைய ஆக்கங்கள்

பிரிவுகள்:கட்டுரைகள், தொழுகை குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்.

நவம்பர் 26, 2013 1 மறுமொழி

fajr2

அதிகாலை ஆண்கள்) அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா?

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை
இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்!எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!”

(அபூதாவூத்)

அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம்இருக்கின்றது.

ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்:

“அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)
ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

“படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..!

படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (அஹ்மத்)

நபிகளாரின் வேதனை:

உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்:“இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை..” என்று கூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா..?”
என்று கேட்க, மக்களும் “இல்லை” என்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:

“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.” (புகாரி,முஸ்லிம்)

ஆம். நபித்தோழர்களின் காலத்தில் இறை-நம்பிக்கை-யாளர்களை அளக்கும் அளவுகோலாக இந்த இருவேளைத் தொழுகைகள்தாம் இருந்தன. இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்: “ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும்

யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் மோசமாகவேஎண்ணியிருந்தோம்” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).

அண்ணலாரின் அமுத மொழிகள்:

மறுமையில் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் இருளில் ஒளியின்றி நடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்” (பைஹகீ)

“சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின் உள்ள தொழுகையையும் (ஸுபுஹ், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒரு நாளும் நுழைய மாட்டார்” (முஸ்லிம்)

யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்.” (தபரானி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவிக்கின்றார்: யார் ஒளு செய்தபின் பள்ளிவாசலுக்கு வந்து ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத் தொழுது பின்னர் ஃபஜ்ர் தொழுகையையும் தொழுகின்றாரோ அவர் நன்மக்களின் பட்டியலிலும்,அல்லாஹ்வின் தூதுக்குழுவினரின் பட்டியலிலும் எழுதப்படுகின்றார்.”

ஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை தருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ் தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம்

அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்:
“எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:“அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு வந்தோம்.” (திர்மிதி)

அதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குபவர்களைக் குறித்து அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகளாரின் பதில் இது: “அந்த மனிதரின் காதுகளில் ஷைத்தான் சிறுநீர்க் கழித்து விட்டான்”

யூதப் பெண் அமைச்சரின் பதில் :

நான் அரபுலகில் வசித்தபோது யூதப் பெண் அமைச்சர் ஒருவரின் நேர்காணலைப்பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். “கடைசி காலத்-தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே.. அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்..?”

இதுதான் கேள்வி.

அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? “ஆம். நாம் அதனை நம்புகின்றோம்.

ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்”. அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப்பெண்மணி கூறினார் :

“ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்றுஎன்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்றுவேண்டுமென்றால் அது நடக்கலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை.” அப்பெண்மணியின் மதி நுட்பத்தைப் பாருங்கள். இஸ்லாமியச் சமூகத்தை எவ்வாறுஎடை போட்டு வைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள்.

‘யூதர்களால் நாங்கள் சுக்கப்படுகின்றோம்; எங்களைக் காப்பாற்று’ என்று நாம் இறைவனிடம் இருகைஏந்துகின்றோமே.. இறைவன் ஏன் நமது இறைஞ்சுதல்கள் மீது இரக்கம்காட்டுவதில்லை..? அவனது கட்டளையை நாம் நிராகரித்தோம்; அவன் நமதுவிண்ணப்பங்களை நிராகரிக்கின்றான் அவ்வளவுதான். காலை 7 மணி முதல் 10 மணி வரை சாலைகளில் போக்கு வரத்து நெரிசலைச் சற்றுகவனித்துப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள். புற்றீசல்கள் போன்று எங்கிருந்து இவ்வளவு மக்களும் ஒரு சேரப் புறப்பட்டு வந்தனர் என்று தோன்றும். அதில் முஸ்லிம்களும் கணிசமாக இருப்பர்.

ஆச்சரியம் சுமார் 3 மணி நேரத்திற்கு முன் இம்முஸ்லிம்கள் எல்லாம் எங்கிருந்தனர்..? உயிருடனா அல்லதுஉயிரற்றவர்களாகவா..? உயிருடன்தான் இருந்தனர் என்றால் ஸுபுஹ் தொழுகைக்குப்பள்ளிவாசலுக்கு ஏன் வரவில்லை? யாரிடம் கேட்டால் இதற்கான பதில் கிடைக்குமோதெரியவில்லை.

அதிகாலைத் தொழுகையில் அரை வரிசையை வைத்துக்கொண்டு அமெரிக்காவை வெற்றி கொள்ள நாம் ஆசைப்படுகின்றோம். பள்ளிவாசலில் பாதி வரிசை கூட இல்லை;

பலஸ்தீன் எங்களுக்கே என்கிறோம். ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நடத்துகின்றோம். முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என்கிறோம். எப்படிக்
கிடைக்கும்?

அதிகாலைத் தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

மாற்றத்தின் நேரம் அதிகாலை உலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதிகாலை நேரத்திலேயேதான் அல்லாஹ்ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம்அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

ஹூத் (அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து
அல்லாஹ்கூறுகின்றான்: “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள்வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.” (46:25)

ஸாலிஹ் நபி (அலை) அவர்களின் சமூத் கூட்டத்தைக் குறித்து
இறைவன்குறிப்பிடுகின்றான் : “திடுக்குறச்செய்கின்ற ஒரு நிலநடுக்கம்
அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற(உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (7:91) (இதே கருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும் காணலாம்.)

லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து மிகத்தெளிவாகவே
அல்லாஹ்கூறுகின்றான்: “எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனைதிண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காகநிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமாஇருக்கிறது?” (11: 81)

ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான் :
“இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம்
வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்” (29:37)
இவ்வாறு ஒவ்வொன்றாக நாம் கூறிக்கொண்டே போகலாம். மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்திலேயே அழிக்கப்பட்டுள்ளனர். ஆகவேதான், மக்கத்து சமூகமும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் செய்தியைஏற்றுக்கொள்ளாமல் ஏளனம் செய்தபோது அல்லாஹ்வின் எச்சரிக்கை
இவ்வாறுஇருந்தது: “என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக
அவசரப்படுகின்றார்களா? அதுஅவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின்,

எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாளின் அதிகாலை மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்” (37:176,177)
(இப்போது கூறப்பட்ட அத்தனை வசனங்களிலும் அதிகாலை என்பதற்கு ஸுபுஹ் எனும் அரபிச் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

பண்டைய காலத்தில்தான் இவ்வாறு அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாகஇருந்தது என்று நாம் நிம்மதி அடைய வேண்டாம். இன்றும் அவ்வப்போதுஅல்லாஹ்வின் எச்சரிக்கைகள் அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.

2004-இல் ஏற்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.
துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன.

2009 -இல் ஆப்ரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பமும் அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.

ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும்
அநேகமாகஅதிகாலை 3 முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள்கூறுகின்றன.

இன்னும் இன்னும் ஏராளம் கூறலாம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதனை என்றோ எச்சரிக்கை என்றோ எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

மரணம் என்பது அல்லாஹ்வின் விதி. அது வந்தே தீரும். அதில் எந்த
ஐயமும்எவருக்கும் இருக்க முடியாதுதான். ஆனால், துர் மரணம் என்பது…?

அல்லாஹ்வின்தூதரே பாதுகாப்பு கேட்ட விஷயம் அல்லவா? மேலே கூறிய அனைத்தும் துர் மரணம்அல்லவா? அல்லாஹ் பாதுகாப்பானாக!

“யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின்
பாதுகாப்பில்இருக்கின்றார்” என்று நாம் மேலே கூறிய ஹதீஸின் முழுமையான பொருள் இப்போதாவது புரிகின்றதா..?

நாம் செய்ய வேண்டியது என்ன?

1) தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழுவேன் (இன்ஷா அல்லாஹ்)

என்றஉறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக்
கொள்ளலாம் என்றல்ல!)

2) படுக்கும் முன் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.

3) தவறிய தொழுகைகளுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள்.

4) நாம் தொழுதால்தான் நமது பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்

5) அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.

6) சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவதே நபிவழி என்பதை நினைவில் வையுங்கள்

7) கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரண-மாக அமைந்துவிடக்கூடாது என்பதாக உறுதி எடுங்கள்.

வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

9) ஒளுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.

10) தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத்
தண்ணீர்தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள்
அதில்தான்அடங்கியுள்ளது.

களதொகுப்பு:- சகோதரன் பஷிர்அஹமது.

பதற்றம் தவிர்! வெற்றி நிச்சயம்!


பதற்றம்! ஆங்கிலத்தில் இதனை Anxiety என்று குறிப்பிடுகின்றார்கள். அடுத்து என்ன நடந்திடுமோ என்ற பயம் கலந்த அச்சம். இது ஒரு மனித பலவீனம். இதனை நாம் வென்றாக வேண்டும்.

தனி மனித வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, தொழில் துறை அல்லது பணியிடம் ஆனாலும் சரி, தொண்டனாக இருக்கும் போதும் சரி, தலைவர் பொறுப்பில் இருக்கும் போதும் சரி – இந்த பதற்றம் கூடவே கூடாது.

ஏனெனில் – பதற்றம் – நமது செயல் திறனை பாதிக்கும் (performance).

பதற்றம் – நமது முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் (interferes decision making).

பதற்றம் – எந்த ஒன்றிலும் நமது கவனத்தைக் குவித்திட இயலாமல் தடுக்கும் (shatters concentration).

எந்த ஒரு செயலையும் நாம் அழகே செய்து முடித்திட நிதானம் தேவை. அவசரம் கூடாது. பதற்றம் எந்த ஒரு காரியத்தையும் கெடுத்து விடும். பதறாத காரியம் சிதறாது என்பது முதுமொழி.

சாதாரண சூழலில் யாரும் பதற்றம் அடைய மாட்டார்கள் தான். ஆனால் சில அழுத்தம் தரும் சூழல்கள் (stressful situations) பதற்றத்தைக் கொண்டு வரலாம். அந்த சமயங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதே நமது ஆளுமையை (personality) நிர்ணயிக்கும்.

இதோ பதற்றம் வரவழைக்கும் சூழல்களில் சில:

மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு.

ஏதேனும் அவசியமான பொருள் ஒன்று அவசியமான நேரத்தில் தொலைந்து விட்டால்.

அவசிய வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது Traffic jam ஏற்பட்டால்.

புதிதாக ஒரு இடத்துக்குச் சென்றிருக்கும் போது.

முற்றிலும் புதிதான மனிதர்கள் (strangers) இருக்கும் இடத்தில்.

சொற்பொழிவுக்கு முன்னர்.

நேர்முகத் தேர்வுக்கு முன்னர் – நேர்முகத் தேர்வின் போது.

சரி, இப்படிப்பட்ட தருணங்களில் பதற்றம் தவிர்க்க என்ன வழி?

ஆசுவாசப் படுத்துதல் – Relaxation!

நன்றாக மூச்சை இழுத்து விடுதல்.

நகைச்சுவை உணர்வை வரவழைத்துக் கொள்ளுதல்.

“நல்லதே நடக்கும்” என்ற சிந்தனையை வலிந்து நினைத்தல்.

எது நம் கைகளில் இல்லையோ அது குறித்து கவலைப் படுவதைத் தவிர்த்தல்.

எது நம் கைகளில் உள்ளதோ அது குறித்து ஆகக் கூடிய காரியத்தில் இறங்குதல்.

இறைவன் மீது நம்பிக்கை (தவக்குல்) வைத்தல். துஆ செய்தல்.

சரி, பதற்றமான சூழல்களில் அண்ணலார் (ஸல்) அவர்களின் முன்மாதிரி எப்படி என்று பார்ப்போமா?

பத்ர் போருக்கு முன். நபியவர்கள் பதற்றப் பட்டார்களா? இல்லையே! ஏன்? எந்த ஒரு போரின் போதும் சரி நபியவர்கள் பதற்றப்பட்டதே கிடையாது.

அரபுலகம் முழுவதுமே திரண்டு வந்து மதீனாவை முற்றுகையிட்டு அழித்திட வந்த அகழ் யுத்தத்தின் போதும் நபியவர்கள் பதற்றம் அடைந்திடவில்லை. நபித்தோழர்களும் பதற்றம் அடைந்திடவில்லை.

அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள். (33: 11)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை. (33: 21 – 22)

பொதுவாகச் சொல்வதென்றால் – எல்லா இறைத்தூதர்களின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சூழல்கள் நிறைந்தே காணப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழல்களில் வைத்துத் தான் அல்லாஹு தஆலா இறைத்தூதர்களுக்கும் இறை நம்பிக்கை கொண்ட அந்த நபித் தோழர்களுக்கும் “பயிற்சி” அளித்திருக்கின்றான்.

ஹிஜ்ரத்தின் போது தவ்ர் குகையில் அண்ணலாரும் அபூ பக்ர் சித்தீக் அவர்களும் தங்கியிருந்த சமயம் பதற்றத்திற்குரியது தான். “பயப்பட வேண்டாம்! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்!” என்றார்கள் நபியவர்கள்.

அதுவெல்லாம் சரி! நாம் எப்படி நிதானத்தைக் கற்றுக் கொள்வது?

தினமும் அதற்குப் பயிற்சி அளிக்கின்றானே அல்லாஹு த ஆலா!

என்ன அது?

ஐந்து வேளை தொழுகையைத் தான் சொல்கின்றேன். அவசரப்படாமல் நிதானமாகத் தொழுங்கள்!

இன்னும் சொல்லப்போனால் – உளூவை நிதானமாகச் செய்யுங்கள்.

பள்ளிக்கு நிதானமாக கம்பீரத்துடன் நடந்து வாருங்கள். ஓடி வர வேண்டாம் என்பது நபிமொழி.

“தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.” (புஹாரி )

தொழுகையில் நிதானமாக குர் ஆனை நிறுத்தி நிறுத்தி ஓதுங்கள்.

மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக. (73: 4)

தொழுகையின் ஒவ்வொரு நிலையிலிருந்து மறு நிலைக்குச் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்கவும்.

இவ்வாறு நிதானமாக ஒவ்வொரு நாளும் நாம் பெற்றுக் கொள்கின்ற பயிற்சி, நமது வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் நமக்கு நிச்சயம் உதவும்.

நாம் தான் இரண்டு ரக்அத் தொழுகையை இரண்டு நிமிடங்களில் முடிப்பவர்கள் ஆயிற்றே!

அவசரம் அவசரமாக தொழுது முடிக்கப் படும் தொழுகையும் நமக்கு எப்படி பயிற்சியாக அமையும்?

இன்றிலிருந்து நிதானமாகத் தொழுவோம் தானே!

பதற்றம் தவிர்க்க இதுவே சிறந்த வழி! வெற்றிக்கான வழியும் கூட!

நமது பாங்கொலியே இதற்குச் சான்று!

“தொழுகையின் பக்கம் வாருங்கள்! தொழுகையின் பக்கம் வாருங்கள்!
“வெற்றியின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!


நன்றி:- http://meemacademy.com/

முல்லா நஸ்ருதீன்

பிரிவுகள்:தொழுகை, பதற்றம் தவிர்! வெற்றி நிச்சயம்! குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

தொழுகையும் உடல் ஆரோக்கியமும் – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி

ஓகஸ்ட் 5, 2010 1 மறுமொழி

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் தொழுகையும் ஒன்று. தினமும் ஐந்துவேளை தொழ வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இக்கடமையை பேணி, அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலாவின் கட்டளைக்கு கீழ்பணிந்து தினம் ஐவேளை தொழுபவருக்கு, மறுமையில் ஏராளமான நற்பாக்கியங்கள் உண்டு. இம்மையிலும் ஏராளமான நற்பாக்கியங்கள் கிடைக்கும். இவ்விதம் கிடைக்கும் நற்பாக்கியங்கள் பற்றி திருக்குர்ஆனிலும், திருநபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளன. எனவே, தொழுகை இம்மை மறுமை நற்பேறுகளை கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. மேலும், தொழுகையை பேணுபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை ‘ போனஸாகவும்’ வழங்குகிறது. அவற்றில் ஒன்றுதான், தொழுகை, தொழுகையை பேணுபவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியதாக இருப்பது! மருத்துவரீதியாக தொழுகை மனிதர்களுக்கு எவ்விதம் உடல் ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்பதைத்தான் இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்!

நமது உடலில் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் யாவும் உள் உறுப்புகளாக அமைந்துள்ளன.   கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் போன்றவை புற உறுப்புகளாக உள்ளன.   மேலும், உடல் முழுவதும் ஒரு போர்வை போல தோலால் மூடப்பட்டிருக்கிறது. மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் உடலுக்குள் பாதுகாப்பாக அமைந்திருந்தாலும், உடலின் புற உறுப்புகளால் இவைகள் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது!   உதாரணமாக காற்றில் கலந்துள்ள கிருமிகள் மூக்கின் வழியாக உடலுக்குள் புகுந்து பல்வேறு உள் உறுப்புகளை பாதிக்கின்றன. பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. ஆகாரம் உண்ணும் போது பல்வேறு கிருமிகள் வாய் வழியே உடலுக்குள் புகுந்து உள் உறுப்புகளை பாதிப்படையச் செய்கின்றன.   தோலில் ஏற்படும் காயங்கள் வழியாக பல்வேறு கிருமிகள் உடலுக்குள் புகுந்து பல்வேறு வியாதிகளை ஏற்படுத்துகின்றன.   எனவே, முக்கிய உறுப்புகள் யாவும் உடலுக்குள் பாதுகாப்பாக இருக்கிறதே என்று யாரும் அலட்சியமாக இருந்திட முடியாது!   இருக்கவும் கூடாது! மாறாக புற உறுப்புகளையும் நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்! உடலின் புற உறுப்புகளை நாம் பாதுகாக்க அவசியமானது உடல் சுத்தமாகும். உடல் சுத்தத்துடன் உடுத்தும் உடைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். வசிக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சுத்தம் தொழுகை மூலமாக நமக்குக் கிடைக்கிறது!

‘சுத்தம் சோறு போடும்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது.   ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களோ “பரிசுத்தம் இறை நம்பிக்கையில் பாதியாகும்” என்று சுத்தத்தை பிரதானப்படுத்திக் கூறியுள்ளார்கள்! காரணம், தொழுகைக்கு பரிசுத்தம் ஒரு நிபந்தனையாகும்! உடல் சுத்தமாக இருக்க வேண்டும். உடுத்திய உடைகள் சுத்தமாக இருக்க வேண்டும். தொழக்கூடிய இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தொழுகை நிறைவேறும். சுத்தம் இல்லாமல் எந்த ஒரு தொழுகையும் நிறைவேறாது!

உடல் சுத்தம்:

மனிதர்களுக்கு நிறத்தையும் அழகையும் கொடுப்பது சருமமே ஆகும். மேலும், இந்த சருமம் முக்கியமான மூன்று வேலைகளையும் செய்கிறது. (1) மனித உடலை ஒரு கவசம் போல போர்த்தியபடி பாதுகாக்கிறது. (2) உடலின் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்வதில் உதவுகிறது. (3) வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டு அதை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் ஆக்குகிறது.   இத்துடன் உடல் ஸ்பரிசம், வலி, உஷ்ணம், குளிர்ச்சி போன்றவற்றையும் மனிதன் சருமம் மூலமாகவே அறிகிறான். இவற்றை மத்திய நரம்பு மண்டலத்திற்கு தெரிவிக்கும் உயிரணுக்கள் சருமம் முழுவதிலும் நிறைந்து இருக்கின்றன. இந்த சருமத்திலிருந்தே வியர்வை வெளியேறுகிறது.   உடல் வறண்டு போகாமல் இருக்கவும், வெடிப்புக் காணாமல் இருக்கவும், சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாக இருக்கச் செய்யவும் ஒருவிதமான எண்ணெய்க் கசிவும் வெளியேறுகிறது.   இப்படிப்பட்ட சருமத்தில் அழுக்கு படியும் போது சருமத் துவாரங்கள் எல்லாம் அடைபட்டுப் போகின்றன.   இதன்காரணமாக பலவிதமான தோல் வியாதிகள் ஏற்பட்டு உடல் நலத்தைக் கெடுக்கின்றன. மேலும், சில தோல் வியாதிகள் தொற்று வியாதிகளாகவும் இருக்கின்றன.   இதனால் பொது சுகாதாரமும் பாதிப்படைகிறது!   குளித்து சருமத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால் இத்தகைய தோல் வியாதிகளை தடுத்துவிடலாம். ஆரோக்கியமாகவும் வாழலாம்!   பொதுச் சுகாதாரத்தையும் பேணலாம்!

இஸ்லாம் மார்க்கம், குளித்து உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதை ஒரு கடமையாகவே ஆக்கியிருக்கிறது! தொழுகைக்காக குளித்து உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறது! எந்தெந்த காரியங்களினால் ஒருவருக்கு குளிப்பு கடமையாகிறது என்ற விவரத்தையும் கூறியிருக்கிறது! எவ்விதம் குளிப்பது என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறது! இனி, இதுகுறித்த விவரங்களை ஹதீஸ்கள் மூலமாக பார்க்கலாம்:

“ஒவ்வொரு ஏழு நாட்களில் ஒரு நாள் தன்னுடைய தலையையும், உடலையும் கழுவி குளிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:   அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்:   புகாரீ.

“ஸ்கலிதமாகிற ஒவ்வொருவரின் மீதும் ஜூம்ஆவின் நாளில் குளிப்பதும், இயலுமாயின் மிஸ்வாக்கு செய்தலும், வாசனையைப் பூசுவதும் அவசியம்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று சாட்சி கூறுகிறேன். அறிவிப்பவர்: அபூஸயீதினில் குத்ரீ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்:   புகாரீ.   இந்த ஹதீஸ்களில் குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு முறையாவது குளிக்க வேண்டியது முஸ்லிம்கள் பேரில் கடமை எனக் கூறப்பட்டுள்ளது. ஜூம்ஆ தொழுகைக்காக ஜூம்ஆ நாளில் குளிக்க வேண்டியது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.   ஜூம்ஆ நாளில் குளிப்பது சுன்னத்தான குளிப்பு என மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். இதைப்போலவே இரு பெருநாள் தொழுகைக்காக குளிப்பதும் சுன்னத்தான நடைமுறையே ஆகும்.

தாம்பத்திய உறவு கொண்டு அசுத்தமாக இருக்கும் நிலைக்கு பெருந்துடக்கு (ஜனாபத்) என்பர். பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் தொழுவது விலக்கப்பட்டுள்ளது.   மஸ்ஜிதில் பிரவேசிப்பதும் விலக்கப்பட்டுள்ளது.   பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் குளித்து சுத்தமான பிறகே தொழ முடியும்! மஸ்ஜிதிலும் பிரவேசிக்க முடியும்! எனவே, பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் குளித்து சுத்தமாகவேண்டும்! இஸ்லாம் மார்க்கத்தில் பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் மீது குளிப்பு கடமையாக்கப்பட்டுள்ளது.   அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலா திருக்குர்ஆனில், ஸூரத்துல் மாயிதா வசனம் – 6 ல், ‘நீங்கள் பெருந்துடக்குடையோராக இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்’ என்று அருளியுள்ளான். மேலும், நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து, பின்னர் அவள்மீது தனது வலிமையைக் காட்டினாலே அவர் மீது குளியல் கடமையாகிவிடும்’. (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம்). இப்படியாக பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் கடமையை பேணியவர்களாக குளித்து சுத்தமாகிக் கொள்கிறார்கள்.

தூக்கஸ்கலிதம் ஏற்பட்டாலும் குளிப்பது கடமையாகும். ஏனெனில் இதுவும் பெருந்துடக்கே! குளிக்காமல் தொழக்கூடாது. மஸ்ஜிதில் பிரவேசிக்கவும் கூடாது! திருக்குர்ஆனை தொடக்கூடாது, ஓதவும்கூடாது! “ஒருவர் (தூக்கத்திலிருந்து விழித்து) ஈரத்தைக் கண்டு அவருக்கு ஸ்கலிதமானது நினைவுக்கு வரவில்லையானால் என்ன செய்வதென்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டதற்கு அவர்கள், “அவர் குளிக்கவும்” என்று கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள்,   நூல்: அபூதாவூத், திர்மிதீ).   ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தூக்கஸ்கலிதம் ஏற்பட்டால் அவர்கள் பேரிலும் குளிப்பு கடமையாகும். ஒரு பெண்மணி நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம், “ஆண் தூக்கத்தில் காண்பதைப் பெண் கண்டால் (அவள் என்ன செய்ய வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆணுக்கு ஏற்படுவதைப் போன்றே பெண்ணுக்கும் (ஸ்கலிதம்) ஏற்பட்டால் அவர் குளிக்க வேண்டும்” என்று கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: முஸ்லிம்). இதன்காரணமாக தூக்கஸ்கலிதம் ஏற்பட்டவர்களும் கடமையைப் பேணி குளித்து சுத்தமாகிறார்கள்.

பெண்களுக்கு ஹைளூ என்னும் மாதவிடாய் ஏற்பட்டு அது நின்ற பிறகு குளிப்பது கடமையாகும். நிஃபாஸ் என்னும் பிரசவத் தீட்டு ஏற்பட்டு அது நின்றுபோனதும் குளிப்பதும் கடமையாகும். ஹைளூ, நிஃபாஸூடைய காலத்தில் பெண்களுக்கு தொழுகை மன்னிக்கப்பட்டுப் போகிறது! ஆனால், ஹைளூ, நிஃபாஸ் நின்றுபோனதும் குளித்து சுத்தமாகி தொழவேண்டியது கடமையாகும்!   “மதீனாவின் ஆதரவாளர்களைச் சேர்ந்த ஒரு பெண் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் மாதவிடாய் குளிப்பைப் பற்றி வினவினார். அதற்கு நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், எவ்விதம் குளிக்க வேண்டுமென்று (அவருக்குக்) கட்டளையிட்டு, ‘நீர் கஸ்தூரி கலந்த சிறிது பஞ்சைக் கொண்டோ அல்லது கந்தையைக் கொண்டோ அதனைத் துப்புரவு செய்து கொள்ளும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ).  இப்படியாக பெருந்துடக்குடையவர்கள் கடமையை பேணியவர்களாக குளித்து சுத்தமாக இருக்கிறார்கள்!

மேலும், காபிர் இஸ்லாத்தை தழுவியவுடன் குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். மய்யித்தை குளிப்பாட்டிய பிறகு குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். பராஅத் இரவில் குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.

லைலத்துல் கத்ரு தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். சூரிய கிரகண தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். பகலில் கடும் இருள் சூழ்ந்துவிட்டால் அதை நீக்கத் தேடும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். மழை பொழியத் தேடும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். திடுக்கம் நீங்கத் தொழும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.

புயல் காற்று விலகிட தொழும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.   இப்படியாக பல்வேறு காரணங்களுக்காக குளிப்பும், அதன் மூலமாக உடல் சுத்தமும் பேணப்படுகிறது!

குளிக்கும் முறை:
நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குளிக்கும் முறையையும் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.   நிர்வாணமாக குளிக்கக்கூடாது. ஒவ்வொரு முடியின் அடிவரை கழுவிக் குளிக்கவேண்டும்.   தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.   இப்படி குளிப்பு பற்றிய பல்வேறு விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.   இவை குறித்த சில ஹதீஸ்கள்: “ஒருவர் நிர்வாணமாகக் குளிப்பதைக் கண்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், மிம்பர் (மேடை) மீது ஏறி (நின்று) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைத் துதி செய்து பின்னர், “நிச்சயமாக அல்லாஹ் நாணமுறுபவனும் திரை மறைவிலிருப்பவனுமாவான். (அன்றி) அவன் நாணமுறுவதையும் திரை மறைவையும் நேசிப்பவனாக இருக்கிறான்.   எனவே உங்களில் எவரேனும் குளிக்க நாடினால் திரை மறைவில் (கீழாடை அணிந்தவண்ணம்) குளிக்கவும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: யஃலா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: அபூதாவூத், நஸாயீ). “ஒவ்வொரு முடியின் அடியிலும் குளிப்பு விதியாகி விடுகிறது. எனவே முடியின் அடிவரைக் கழுவுங்கள்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: அபூதாவூத், திர்மிதீ). “‘முழுக்குக்கான குளிப்பில் ஒரு முடி அளவுள்ள இடத்தைக் கழுவாமல் எவர் விட்டு விடுகிறாரோ அவருக்கு நரகத்தில் இன்ன இன்ன விதமாக வேதனை செய்யப்படும்’ என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்கள் தெரிவித்து, இதற்காகத்தான் தாம் தம் தலைமுடியை எடுத்து விட்டதாக மூன்று முறை கூறினார்கள்”. (அறிவிப்பவர்களும் அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்களே,  நூல்: அபூதாவூத்).

நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பெருந்துடக்குக்காக குளித்தால் தங்களது இரு கரங்களையும் (மணிக்கட்டுவரை முதலில்) கழுவுவார்கள்.   பின்னர் தொழுகைக்கு உளூ செய்வது போல உளூ செய்வார்கள். பின்னர் குளிப்பார்கள்.   பின்னர் தங்கள் இரு கைகளால் தங்கள் ரோமங்களைக் கோதிவிடுவார்கள்.   அதன் ரோமக்கால்கள் நனைந்துவிட்டன என்பதை உணர்ந்தால், அதன் மீது மூன்று முறை தண்ணீர் வார்த்துக் கொள்வார்கள். பின்னர் தங்கள் உடல் முழுவதிலும் (நனைத்துக்) குளிப்பார்கள்.   (அறிவிப்பவர்:   அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள்,   நூல்: புகாரீ).   “தொழுகைக்கு உளூ செய்வது போல நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கால் நீங்கலாக உளூ செய்தார்கள். தங்கள் வெட்கஸ்தலத்தையும், அசுத்தம் பட்ட இடத்தையும் கழுவினார்கள். பின்னர் தங்கள் மீது தண்ணீர் வார்த்துக் கொண்டார்கள். பின்னர் தங்கள் கால்களை (கொஞ்சம்) நகர்த்தி அவைகளைக் கழுவினார்கள்”.   (அறிவிப்பவர்: மைமூனா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள்,   நூல்: புகாரீ). இப்படியாக நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பு பற்றிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அன்னாரின் நடைமுறைகளை பேணியவர்களாக முஸ்லிம்கள் அனைவரும் குளித்து சுத்தத்தைப் பேணுகிறார்கள்!

மலம், சிறுநீர் சுத்தம் செய்தல்:   மலம், சிறுநீர் ஆகிய இரண்டும் அசுத்தங்களாகும்!   உடலில் அல்லது உடையில் இந்த அசுத்தங்கள் இருக்கும் நிலையில் தொழமுடியாது.   எனவே, இவ்விரண்டையும் துப்புரவு செய்வது கட்டாயமாகும்!   நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மலம், சிறுநீர் கழிக்கச் சென்றால், தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். “நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மல உபாதை கழிக்கச் சென்றால், நானும் என்னுடன் ஒரு பையனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு செல்வோம். தண்ணீரால் அவர்கள் சுத்தம் செய்வார்கள்”. (அறிவிப்பவர்:   அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: புகாரீ).   சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாதவர்களுக்கு கப்ருக்குள் (சவக்குழிக்குள்) வேதனை செய்யப்படுவார்கள். ‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரு அடக்கத் தலங்களைத் கடந்து சென்றார்கள். அப்போது, “அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (கப்ருக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்துக் கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர கழித்துவிட்டு சுத்தம் செய்யமாட்டார்” என்று கூறினார்கள்.   (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: முஸ்லிம்).   மலம், சிறுநீர கழித்த பிறகு வலக் கரத்தால் சுத்தம் செய்யக் கூடாது!   “உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது அவர் தமது பிறவி உறுப்பை வலது கையினால் பிடிக்க வேண்டாம். மலம் சிறுநீர் கழித்த பிறகு வலது கையினால் சுத்தம் செய்ய வேண்டாம்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகத்தாதா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்).   மலம் கழுவி சுத்தம் செய்த பிறகு இடது கையையும் தேய்த்து கழுவவேண்டும்.   “(ஒரு சமயம்) நான் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அப்பொழுது அவர்கள் மல உபாதை கழிக்கச் சென்றார்கள்.   மலம் கழித்த பிறகு, “ஜரீரே! தண்ணீர் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.   நான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்.   அதைக் கொண்டு அவர்கள் சுத்தம் செய்துகொண்டனர். பின்னர் தங்களின் இடது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள்”. (அறிவிப்பவர்: ஜரீர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: நஸாயீ).   இப்படியாக மலம், சிறுநீர் கழிப்பதிலும் சுத்தம் பேணப்படுகிறது!

மிஸ்வாக்:
உலகத்திலேயே மிக அதிகமான மக்களுக்கு இருக்கும் நோய் பற்சொத்தையாகும்! பற்சொத்தை வராமலிருக்க தினமும் காலையிலும், இரவு படுக்கப் போகும் முன்பாகவும் பற்களைத் துலக்க வேண்டும் என பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.   ஆனால் நமக்கு, ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்யும் முன்பாக பல் துலக்குவது சுன்னத்தாக (நபிவழியாக) இருக்கிறது.   நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமது சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்படும் என்னும் அச்சத்தினாலேயே ஒவ்வொரு தொழுகைக்கு உளூ செய்யும் போதும் மிஸ்வாக் செய்வதைப் பற்றி கட்டளையிடவில்லை! “இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லது என் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்யுமாறு அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்”   என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம்) தினமும் ஐவேளை உளுவுக்கு முன்னால் மிஸ்வாக் செய்வது பற்றி கட்டளையிடப்படவில்லை.   ஆனால், தினமும் ஐவேளைத் தொழுகைக்காக ஐந்து முறை பல் துலக்கி சுத்தம் செய்வது வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். “எந்த தொழுகை (யின் உளூ) யில் மிஸ்வாக்குச் செய்யப்பட்டதோ அத்தொழுகை (உளூவில்) மிஸ்வாக்குச் செய்யப்படாத தொழுகையை விட எழுபது மடங்கு சிறப்பு (தவாபைப்) பெறும்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள்,   நூல்: ஷூஃபுல் ஈமான் பைஹக்கீ).   “எனது உம்மத்தினருக்கு சிரமம் கொடுப்பதை நான் அஞ்சவில்லை என்றால் ஒவ்வொரு தொழுகை (அல்லது அதன் உளூ) நேரத்திலும் மிஸ்வாக்குச் செய்யுமாறு (கடமையாக்கி) ஏவி இருப்பேன்”   என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூஸலமா (ரஹ்) அவர்கள்,   நூல்: திர்மிதீ, அபூதாவூது). மேலும், ஐந்து நேரங்களில் மிஸ்வாக்கினால் பல் துலக்குவது மிகவும் விரும்பத்தக்க செயலாகும் என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். (1) உளு செய்யும் போது. (2) தொழுகைக்காக நிற்கும் போது. (3) திருக்குர்ஆன் ஓதும் போது. (4) தூங்கி எழும் போது. (5) நீண்ட நேரம் சாப்பிடாததால், அல்லது துர்வாடை உள்ள பொருட்களை சாப்பிட்டால், அல்லது நீண்ட நேரம் வாய் மூடி இருந்தால், அல்லது அதிகமாகப் பேசியதால் வாயில் வாடை வரும்போது. (அல்மின்ஹாஜ்)

“நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் (நித்திரையிலிருந்து) எழுந்தால் மிஸ்வாக்கினால் வாயைச் சுத்தஞ் செய்பவர்களாக இருந்தார்கள்”. (அறிவிப்பவர்: ஹூதைஃபா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: புகாரீ, முஸ்லிம்).   “மிஸ்வாக்குச் செய்வது வாயை சுத்தமாக்குவதாகவும், அல்லாஹ்வின் பொருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது”   என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள்,   நூல்: ஷாபீ, அஹ்மது, தாரிமீ, நஸயீ).   “இரவு பகல் (எந்நேரத்திலும்) தூக்கத்திலிருந்து விழிக்கும் போது நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உளூ செய்யும் முன்பாக மிஸ்வாக் செய்தே அன்றி இருக்க மாட்டார்கள்”.   (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள்,   நூல்: அஹ்மது, அபூதாவூது). இப்படியாக ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்யும் முன்பாக மிஸ்வாக் குச்சியினால் பல் துலக்கி சுத்தம் செய்வது நபிவழியாக உள்ளது!

மிஸ்வாக் குச்சியினால் பற்களைச் சுத்தம் செய்வதில் எழுபது நற்பலன்கள் உண்டு என்றும், அவைகளில் சிறு பலன் உயிர் பிரியும் போது ஷஹாதத் கலிமாவை நினைவூட்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆயுர்வேதம், யூனானி மருத்துவ முறையிலும் மிஸ்வாக் குச்சியின் பயன்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது!   இவை தவிர வேறு சில பயன்களும் உள்ளன.   பற்களை மேல் கீழாகத் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.   பக்கவாட்டில் மட்டும் தேய்த்தால் பற்களுக்கு இடையேயுள்ள இடுக்குகள் சுத்தமாகாது என்று பல் மருத்துவர்கள் கூறுவார்கள்.   மிஸ்வாக் குச்சியினால் எளிதாக பற்களை மேலும் கீழுமாக தேய்க்க முடியும்!   பற்களுக்கு வெளிப்புறம் மட்டுமின்றி, உட்பக்கங்களையும் துலக்க வேண்டும் என்பார்கள். மிஸ்வாக் குச்சியினால் எளிதாக உட்பக்கங்களையும் சுத்தம் செய்ய முடியும். மேலும், கீழ் கடைவாய்ப் பற்களின் மேல்பரப்பையும், மேல் கடைவாய்ப் பற்களின் கீழ் பரப்பையும் துலக்க வேண்டும். இந்த வசதியும் மிஸ்வாக் குச்சியில் இருக்கிறது! இப்படியாக, வாய் மற்றும் பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள மிஸ்வாக் உதவுகிறது!

உளூ:
புற உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள உளூ உதவுகிறது! எந்த ஒரு தொழுகையும் நிறைவேற வேண்டுமானால் அதற்கு உளூ அவசியமாகும்.   இது குறித்து திருக்குர்ஆனில், ‘முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும் போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்;   உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹூ செய்து) கொள்ளுங்கள்;   உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) ‘ என்று கூறப்பட்டுள்ளது. (காண்க: ஸூரத்துல் மாயிதா, வசனம்: 6). “உளூ செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது”   என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்: முஸ்அப் பின் ஸஅத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், நூல்: முஸ்லிம்).

ஒருவர் தொழுவதற்கு முன்னால் தன் கைகள், கால்கள், முகம் உள்ளிட்ட உறுப்புகளை, அதற்கான ஒழுங்கு முறைப்படிக் கழுவிச் சுத்தம் செய்வதற்கே ‘உளூ’ என்பார்கள்.   இவ்வாறு தூய்மை செய்யாமல் ஒருவர் தொழுதால், அவரது தொழுகை செல்லாது.   இது கட்டாயத் தொழுகை, விருப்பத் தொழுகை, இறுதித் தொழுகை (ஜனாஸா), ஸஜ்தா திலாவத் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும்.   (அல்மின்ஹாஜ்). உளூ செய்யும் முறை பின் வரும் ஹதீஸில் கூறப்படுகிறது:   ‘உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் உளூ செய்வதற்காகத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி உளூ செய்தார்கள்.   (முதலில்) தம்முடைய இரு முன் கைகளை மூன்று முறை கழுவினார்கள்.   பிறகு வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள்.   பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.   பிறகு தமது வலக்கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்துத் தமது இடக்கரத்தையும் அதைப் போன்றே (முழங்கை மூட்டுவரை மூன்று முறை) கழுவினார்கள்.   பின்னர் தலையை (ஈரக் கையால் தடவி) மஸஹூ செய்தார்கள். பிறகு தமது வலக் காலை கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள்.   பிறகு இடக் காலையும் அதைப் போன்றே (கணுக்கால் வரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர், “நான் செய்த இந்த உளூவைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் உளூ செய்ததை நான் பார்த்தேன்.   மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யார் நான் செய்த இந்த உளூவைப் போன்று உளூ செய்து, பின்னர் வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும்” என்று கூறனார்கள். முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹூம்ரான் பின் அபான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இவ்விதம் செய்யப்படும் உளூவின் மூலம் புற உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் போன்ற உறுப்புகள் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன!   உளூவில் முதலாவதாக மணிக்கட்டுவரை கைகள் மூன்று முறை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன.   கைகள் மூலமாக பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன!   மனித உயிர்களுக்கு கேடு விளைவிக்கின்றன! இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 15 ந் தேதியை ‘உலக கை கழுவுதல் தினம்’ (GLOBAL HAND WASHING DAY) என உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது!   கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தப்படுகிறது.   ஆனால் இந்த சுத்தம் தொழுகைக்கான உளூவின் மூலமாக தினமும் ஐந்து முறை உலக முஸ்லிம்களால் பேணப்படுகிறது!   மேலும், தூங்கி விழித்து எழுந்ததும் முதலில் கைகளை மூன்று முறை கழுவ வேண்டும், குளிக்கும் முன் கைகளை கழுவ வேண்டும், சாப்பிடும் முன்பாக கைகளை கழுவ வேண்டும், சாப்பிட்ட பிறகும் கைகளை கழுவ வேண்டும் என்பன போன்ற ஒழுக்க முறைகளையும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்!

உளூவில் அடுத்ததாக மூன்று முறை வாய் கொப்பளித்து, மூக்கிற்குள் நீர் செலுத்தி, மூக்குச் சிந்தி சுத்தம் செய்யப்படுகிறது.   உளூவிற்கு முன்பாக மிஸ்வாக் குச்சியினால் பற்கள் சுத்தம் செய்யப்பட்டு விடுகிறது.   இப்பொழுது வாய் கொப்பளித்து வாயும் சுத்தம் செய்யப்படுகிறது! அடுத்து மூக்கை சுத்தம் செய்வது!   மூக்கின் மூலமாகவே சுவாசமும் நடைபெறுகிறது.   மூக்கின் மூலமாகவே வாசனைகளை அறிய முடிகிறது! மேலும், மூக்கு காற்றிலே கலந்திருக்கும் தூசி போன்ற அசுத்தங்களை சுத்தம் செய்து, பின்னரே காற்றை உள்ளே செலுத்துகிறது. இதற்காக மூக்கின் முனைப்பாகத்தில் மயிரிழைகளை உள்ளன.   மேலும், வெளிக் காற்றின் அதிகப்படியான வெப்ப நிலையை ‘ஏர்கண்டிஷன்’ போல குளிர்வித்து, உடலுக்கு உகந்த வெப்ப நிலைக்கு மாற்றி அனுப்புகிறது.   இதற்கு வசதியாக மூக்கினுள்ளே ஒரு திரவம் (சளி) சுரக்கிறது!   இப்படி மூக்கினுள்ளே பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால்தான் மூக்கையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்!   நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “எவர் உளூச் செய்ய நாடுகிறாரோ அவர் மூக்குக்குத் தண்ணீர் செலுத்தி மூக்கைச் சிந்தி சுத்தம் செய்யவும்” என்று கூறியிருக்கிறார்கள்.   (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: புகாரீ, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸாயீ).

உளூவில் அடுத்தபடியாக முகம், மூன்று முறை கழுவப்படுகிறது. முன் தலையிலிருந்து தாடை வரையிலும், ஒரு காதின் முனையிலிருந்து மறு காதின் முனை வரையிலும் முகம் கழுவிட வேண்டும். இவ்விதம் கழுவிடும் போது முகத்துடன் கண்களும் சுத்தம் செய்யப்படுகின்றன!   கண் ஒரு மென்மையான அவயம். இதனை வெகு கவனமாக பாதுகாக்க வேண்டும்! தூசி, புகை போன்றவற்றால் கெடுதல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். உளூ செய்வதன் மூலம் கண்களும் பாதுகாக்கப் படுகின்றன! மேலும், மீண்டும் மீண்டும் முகத்தை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதால் முகப்பரு, வேர்க்குரு போன்ற சரும நோய்களும் ஏற்படுவதில்லை!

அடுத்து, இரண்டு கைகளும் முழங்கை மூட்டு வரை கழுவப்படுகின்றன.   முதலில் வலது கையை முழங்கை மூட்டுவரை கழுவ வேண்டும். பிறகு இடது கையை முழங்கை மூட்டு வரை கழுவ வேண்டும்.   இவ்விதமாக இரண்டு கைகளும் முழங்கை மூட்டு வரை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன!   அடுத்து தலைக்கு மஸஹூ செய்ய வேண்டும். தலைக்கு மஸஹூ செய்யும் போது காதுகளின் துளைகளிலும் விரல்களை நுழைத்து சுத்தம் பேணப்படுகிறது. காதும் ஒரு முக்கியமான உறுப்பாகும். இதையும் கவனமாக பாதுகாக்க வேண்டும். காதில் எதையாவது போட்டு குடைந்துக் கொண்டிருக்கக் கூடாது! மேலும், காதின் உட்பக்கத்துத் துவாரத்தில் குறும்பி எனப்படும் ஒருவித மெழுகு சுரக்கும். அளவுக்கும் அதிகமாக குறும்பி சேர்ந்தால் அதை சுத்தம் செய்ய வேண்டும்!   புறச் செவியில் அழுக்கும் சேறும்! இதையும் சுத்தம் செய்ய வேண்டும்!   இல்லாவிட்டால் ஒரு விதமான அரிப்பு ஏற்படும்!   புண்ணும் ஏற்படலாம். எனவே காதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உளூவின் மூலம் காதின் சுத்தமும் பேணப்படுகிறது.   நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உளூச் செய்யும் போழுது தங்களின் இரு விரல்களைத் தங்களின் இரண்டு காதுகளின் துளையிலும் நுழைத்தார்கள்” என ரபீஉ பின்து முஅவித் (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.   ஆதாரம்: அபூதாவூத். மேலும், “இப்னு உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் தம் இரு காதுகளுக்காகத் தம் இரு விரல்களில் தண்ணீர் எடுத்தனர்” என நாபிஃ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.   நூல்: முஅத்தா. இவ்விதமாக காதுகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.

அடுத்து, இரு கால்களும் கணுக்கால்கள் வரை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன!   சாதாரணமாக எல்லோருமே கால்களை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆயினும் சர்க்கரை வியாதி (நீரிழிவு) உள்ளவர்கள் தமது பாதங்களை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறுவார்கள். உளூவின் மூலம் பாதங்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள முடியும்!   உளூவில் இரண்டு கால்களும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன.   கால்களை முழுமையாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.   ‘ஒரு மனிதர் உளூ செய்தார். அப்போது அவர் தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்) விட்டுவிட்டார்.   இதைக் கண்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார்.   (அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல: முஸ்லிம்).   ‘தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்து கொண்டிருந்)த ஒரு மனிதரை நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள். அப்போது, “(உளூவில் சரியாக கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைர ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: முஸ்லிம்).   உளூவில், கால்களை கழுவுவதில் அலட்சியம் காட்டுபவர்களுக்கு நரக வேதனைதான் என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதால் உளூ செய்பவர்கள் கால்களை கவனமாக, முழுமையாகக் கழுவி சுத்தம் செய்கிறார்கள்.

இவ்விதம் கண், காது, மூக்கு, கைகள், கால்கள் போன்ற புற உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உளூவை, தினமும் ஐவேளை தொழுகைகளுக்காக ஐந்து முறை செய்திட வேண்டும். ஆயினும், உளூ சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்பட்டு முறிந்துவிடும் போது மறுபடியும் உளூ செய்திட வேண்டும்.   இவ்விதம் மறுபடியும் உளூ செய்யாத வரை தொழுகை ஏற்கப்படாது! உடலிலிருந்து சிறுநீர், மலம், பின் துவாரத்திலிருந்து வாயு ஆகியவை வெளியேறுவதற்கே சிறு துடக்கு (ஹதஸ்) என்பார்கள். இவ்விதம் சிறு துடக்கு ஏற்படும் போது ஏற்கெனவே செய்த உளூ முறிந்துவிடும்! எனவே மறுபடியும் உளூ செய்தால்தான் தொழுகை கூடும்.   “உங்களில் ஒருவருக்கு சிறு துடக்கு ஏற்பட்டு விட்டால், அவர் உளூ செய்து கொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: புகாரீ, முஸ்லிம்).   இதன் காரணமாக புற உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வாய்ப்பு கூடுகிறது!

உடல் ஆரோக்கியத்திற்கு உடல் சுத்தம் தேவை! உடல் சுத்தமே தொழுகைக்கு தேவை!   குளிப்பு, உளூவின் மூலம் உடல் சுத்தம் கிடைக்கிறது!   எனவேதான் தொழுகை உடல் ஆரோக்கியத்தை பேணக் கூடியதாக இருக்கிறது எனக் கூறப்பட்டது!

உடை சுத்தம்:

“கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்பார்கள்.   இது, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.   ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டியதும் அவசியமாகும். அணியும் ஆடைகளில் சுத்தம் பேணவேண்டியது தொழுகையின் (வெளிக்) கடமைகளில் ஒன்றாகும்!   ‘ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்’   என்று திருக்குர்ஆனிலே ஸூரத்துல் அஃராஃப், வசனம் 31 ல் அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலா கூறியுள்ளான்.   “உங்கள் ஆடைகளை அழகாக்கிக் கொள்ளுங்கள்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.   (அறிவிப்பவர்: ஸஹல் பின் ஹள்ளலிய்யா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: ஹாகிம்).   ஆடையில்லாமல் – நிர்வாணமாக ஒரு போதும் தொழக்கூடாது! இரண்டு தோள்கள் திறந்த நிலையிலும் தொழுக்கூடாது.   “உங்களில் ஒருவர் தம் தோள்களை மறைக்காமல் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: புகாரீ, முஸ்லிம்). ‘நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே துணியில் தொழுதார்கள். ஆனால் இரண்டு ஓரங்களுக்கும் இடையில் வித்தியாசப் படுத்தினார்கள்.   (அதாவது வேஷ்டியை இரண்டு பாகமாக்கி ஒன்றை உடுத்திக் கொண்டு மற்றொன்றை மேலில் போட்டுக் கொண்டார்கள்).   அறிவிப்பவர்: உமறுப்னு அபீஸலமா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ.   வசதி இருந்தால் குறைந்தது இரு ஆடைகளைக் கீழும் மேலுமாக அணிந்து கொண்டு தொழுவதே சிறந்தது ஆகும். இரு ஆடைகளுக்கு வா்ப்பில்லாத போது ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவதில் குற்றமில்லை.   அந்த ஓர் ஆடையை தோளை மறைக்கும் வகையில் கட்டிக் கொண்டு, மறைக்க வேண்டிய உறுப்புகள் வெளியே தெரியாதபடி அணிந்து தொழ வேண்டும்’ என அல்மின்ஹாஜில் கூறப்பட்டுள்ளது.

ஜூம்ஆ தொழுகைக்கு அணிந்து கொள்வதற்காக தம்மிடம் இருப்பதில் சிறந்த ஆடைகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.   இது குறித்து நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “உங்களில் எவரும் தாம் வேலை செய்யும் போது அணிந்திருக்கும் ஆடைகளைத் தவிர வெள்ளிக் கிழமைகளில் அணிந்து கொள்வதற்காக இரண்டு ஆடைகளை(த் தயாரித்து) வைத்துக் கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை” எனக் கூறியுள்ளார்கள்.   (அறிவிப்பவர்: முஹம்மதுப்னு யஹ்யா இப்னு ஹப்பான் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: அபூதாவூத்).   மேலும், நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சுத்தமான ஆடைகளையே விரும்பினார்கள்.   “எங்களில் ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த எங்களின் சகா ஒருவரை நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டனர். அப்போது அவர் இரண்டு பழைய ஆடைகளை அணிந்திருந்தார்.   எனவே நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், “அவிவிரண்டையும் தவிர்த்து வேறு ஆடைகள் ஏதுமில்லையா?” எனக் கேட்டார்கள்.   (அறிவிப்பவர்: ஜாபிர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: முஅத்தா).

மலம், சிறுநீர், இரத்தம், இந்திரியம் போன்றவை அசுத்தங்களே ஆகும். இத்தகைய அசுத்தங்கள் பட்ட ஆடைகளுடன் தொழுக்கூடாது.   எனவே, இவை ஆடைகளில் பட்டுவிட்டால் கழுவி சுத்தம் செய்த பிறகே அணிந்து தொழ வேண்டும்.   “நான் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஆடையில் இருக்கும் இந்திரியத்தைக் கழுவுவேன். அவர்கள் தங்களின் ஆடை காய்வதற்குள் தொழச் செல்வார்கள்”. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ). “நம்மில் எவருக்கேனும் மாதவிடாய் வந்துவிடின், மாதவிடாயை விட்டும் துப்புரவாகும் போது, அந்தத் துணியிலிருந்த இரத்தத்தைச் சுரண்டி அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தைக் கழுவி, மீதமுள்ள இடத்தில் தண்ணீரைத் தெளித்துப் பின்னர் அதனை உடுத்திக் கொண்டு தொழுததுண்டு”.   (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள்,   நூல்: புகாரீ).   மேலும், காயாத அசுத்தத்தின் மீது ஆடை பட்டுவிட்டாலும் அதைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.   “நீர், காயாத அசுத்தத்தின் மீது நடந்தாலோ, அல்லது உம்முடைய ஆடை அதன்மீது இழுபட்டாலோ கழுவிவிடும்.   ஆனால் அது (அசுத்தப் பொருள்) காய்ந்ததாக இருப்பின் உம்மீது யாதொரு குற்றமுமில்லை”.   (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், நூல்: ரஜீன்).   இவ்வாறெல்லாம் ஆடைகளிலுள்ள அசுத்தங்கள் யாவும் கழுவப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. உடுத்தும் ஆடைகளிலும் சுத்தம் பேணப்படுகிறது! சுத்தமான ஆடைகள் மூலமாக ஆரோக்கியமும் காக்கப்படுகிறது!

இடம் சுத்தம்:

தொழும் இடம் சுத்தமாக இருக்க வேண்டியதும் தொழுகையின் (வெளிக்) கடமைகளில் உள்ளதாகும். நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த பூமி முழுவதும் பள்ளியாகவும் தூய்மையாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. எனவே, எங்கு தொழுகையின் நேரம் வந்து விடுகிறதோ அங்கேயே தொழுது கொள்ளலாம். ஆயினும் சில இடங்களில் தொழுவதை விட்டும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.   “ஏழு இடங்களில் தொழுவதை நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தனர். (1) மலஜலம் கழிக்கும் இடங்கள் (2) கால்நடைகள் அறுக்கப்படும் இடங்கள் (3) புதை குழிகள் (கப்ருஸ்தான்கள்) (4) நடுவீதி (5) குளியலறை (6) ஒட்டகங்கள் கட்டும் இடங்கள் (7) கஃபாவின் முகடு ஆகியவையாம்”.   (அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: திர்மிதீ).

தொழும் இடங்களான மஸ்ஜித்களை சுத்தப்படுத்துமாறும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.   “வீடுகள் உள்ள பகுதிகளில் மஸ்ஜித்களை கட்டும்படியும், அவற்றை சுத்தப்படுத்துமாறும், அவற்றில் நறுமணங்களை பயன்படுத்துமாறும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஏவினார்கள்”   என அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளனர். நூல்: அஹ்மது, திர்மிதீ, அபூதாவூது, இப்னுமாஜா.

தொழுகைகளில் சிலவற்றை வீடுகளில் தொழும்படியும், வீடுகளை அழகாக வைக்கும்படியும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.   “உங்களுடைய வீடுகளிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். வீடுகளை (தொழுகை நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியலலாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்).   “உங்கள் ஆடைகளை அழகாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை சீராக்குங்கள்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்: ஸஹல் பின் ஹள்ளலிய்யா அவர்கள், நூல்: ஹாகிம்).   தொழும் விரிப்புகளை சுத்தம் செய்திடுமாறும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்த ஹதீஸ்:  ‘நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவர்களாக விளங்கினார்கள்.   அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் போது சில நேரங்களில் தொழுகை(யின் நேரம்) வந்துவிடும்.   உடனே, தாம் அமரும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு பணிப்பார்கள். அவ்வாறே அது பெருக்கி(த் துடைத்து)ச் சுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்படும்.   பிறகு நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னே நிற்க, நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்போம்.   நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள். (அன்று) மக்களுடைய விரிப்பு பேரீச்ச மட்டையால் செய்யப்பட்டதாகவே இருந்தது”.   (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: புகாரீ, முஸ்லிம்).   இப்படியாக தொழுகைக்காக மஸ்ஜித்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்! வீடுளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்! விரிப்புகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்!

உடற்பயிற்சி:

‘தொழுகை எளிய உடற்பயிற்சியாகவும் இருக்கிறது’. இது, தொழுகையின் நிலைகளை ஆராய்ந்த மருத்துவர்களின் கருத்தாகும்! யோசித்துப் பார்த்தால் நமக்கும் இந்த உண்மை விளங்கும்! தொழுகையில் தக்பீர் கூறி நிற்றல் (கியாம்), குனிதல் (ருகூஉ), மீண்டும் நிமிர்ந்து நிற்றல், சிரம்பணிதல் (ஸஜ்தா), அமர்தல் போன்று பல நிலைகள் மேற்கொள்ளப்படுகின்றன!   இவற்றை நிறுத்தி நிதானமாக செய்யும் போது எளிய உடற்பயிற்சியாவே ஆகிவிடுகிறது!   மேலும், சாந்தமும் அமைதியும் உள்ள இடத்தில் உடற்பயிற்சி செய்வது சிறப்பாகும் எனக் கூறுவார்கள். தொழும் இடம் சாந்தமும் அமைதியும் நிறைந்ததாகவே இருக்கிறது! காலைக் கடன்களை முடித்து விட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பார்கள்.   “சிறுநீர், மலத்தை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள்,   நூல்: முஸ்லிம்).   வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பார்கள். பொதுவாக ஐவேளை தொழுகை நேரங்களும் இவ்விதமே அமைந்துள்ளன!   உடற்பயிற்சி செய்யும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பார்கள். தொழுகை சுத்தமான இடத்தில்தான் நடைபெறும்!   இவிவிதமான காரணங்களாலும் தொழுகையை ஒரு எளிய உடற்பயிற்சி என்றே கூறலாம்!

தொழுகைக்காக வெகு தொலைவிலிருந்து மஸ்ஜிதுக்கு நடந்து வரும் போது, அது ஒரு சிறந்த நடைபயிற்சியாகவும் ஆகிவிடுகிறது!   தொழுகைக்காக வெகு தொலைவிலிருந்து நடந்து வருவது அதிக நன்மையைக் கொடுக்கும் என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.   “மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), (தொழுகைக்காக) வெகு தொலைவிலிருந்து நடந்து வருபவர் ஆவார்.   அடுத்து, அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவர் ஆவார்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: புகாரீ, முஸ்லிம்).   “யார் தமது வீட்டிலேயே உளூ செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்து வைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்திவிடுகிறது” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம்). இவ்விதம் தொழுகைக்காக வெகு தொலைவிலிருந்து நடந்து வருவது நன்மைக்கு நன்மையும் சேர்க்கிறது, நடைபயிற்சிக்கு நடைபயிற்சியாகவும் அமைகிறது!

இக்காலத்தில் பெரும்பாலான மக்கள் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற வியாதிகளால் அவதிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவர்கள் கூறும் அறிவுறை, “உடல் எடையைக் குறையுங்கள்! உடற்பயிற்சி செய்யுங்கள்! நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்!”   என்பவைதான். எனவே, மஸ்ஜிதுக்கு அருகில் வசிப்பவர்கள் கூடுதல் தொழுகைகளை (நஃபில் தொழுகை) அதிகம் அதிகமாக தொழுது நன்மைகளை அடையலாம். உடற்பயிற்சியின் பயனையும் பெறலாம்! வெகு தூரத்தில் வசிப்பவர்கள் ஒவ்வொரு வேளை தொழுகைக்கும் மஸ்ஜிதுக்கு நடந்து சென்று நன்மைகளைப் பெறலாம்.   நடைபயிற்சியின் பயனையும் அடையலாம்! இதன் மூலம் அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலாவின் பேரருளையும் அடையலாம். ஆரோக்கியமான வாழ்க்கையையும் பெறலாம்!

பிரார்த்தனை:

இக்காலத்தில் மனிதர்கள் இயந்திரங்களைப் போல வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்! மனிதர்களிடம் இருந்த சகோதர பாசம் குறைந்து விட்டது!   மனிதாபிமானம் குறைந்து விட்டது! நட்பு குறைந்து விட்டது!   சுற்றத்தாரின் ஆதரவும் குறைந்து விட்டது! இதனால் மனிதன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டவனாகி விட்டான். ‘தான்’ என்ற வட்டத்திற்குள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறான்! தன் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள அவனுக்கு வழியில்லை!   தன்னுடைய கஷ்ட நஷ்டங்களை கூறி அழ அவனுக்கு ஆளில்லை!   தன்னுடைய தேவைகளை, குறைகளை தீர்த்து வைக்க யாருமில்லை! இதில், அதை சாதிக்க வேண்டும் இதை சாதிக்க வெண்டும் என்ற ‘வெறி’ வேறு!   இந்த சூழ்நிலையில் மனிதன் எந்நேரமும் கவலையும், மன இறுக்கம் கண்டு அவதிபட்டுக் கொண்டிருக்கிறான்!   இரத்த அழுத்த நோய்க்கும் ஆளாகிறான்!   சில சமயம் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் விடுகிறான். சில சமயம் தற்கொலை செய்துக் கொள்கிறான்!   சில சமயம் மனநிலை பாதிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்கிறான்!

இத்தகைய மனிதர்களுக்கு தொழுகை மிகவும் உதவிகரமாக இருக்கிறது! ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் துஆ (பிரார்த்தனை) செய்யப்படுகிறது.   இந்த பிரார்த்தனையின் மூலம் மனதை வருத்தும் பாவச்சுமைகளை இறக்கி வைக்கலாம்.   மன்னிப்பைக் கேட்டுப் பெறலாம். உற்ற நண்பனிடம் கூறுவதைப் போல மனக்கஷ்டங்களை எல்லாம் தடையின்றி கூறலாம். பரிகாரம் காணலாம்.   எல்லாவிதமான தேவைகளையும் கேட்டுப் பெறலாம். ஆயுளைக் கோரலாம். ஆரோக்கியத்தைக் கேட்கலாம். சம்பத்து கேட்கலாம். சம்பாத்தியம் கேட்கலாம். அதிகாரத்தைக் கேட்கலாம். ஆகாரத்தைக் கேட்கலாம். ஏன், காரும் பங்களாவும் கூட கேட்கலாம்! ஏனெனில்,   “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்;” என்று இறைவன் திருக்குர்ஆனிலே கூறியுள்ளான். (ஸூரத்துல் முஃமின், வசனம்: 60).   மேலும்,   “(ஆகவே முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் – வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை” என்றும் கூறியுள்ளான்.   (ஸூரத்துல் அஃராஃப், வசனம்: 55).   நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “இறைஞ்சுதல் (பிரார்த்தனை) தான் வணக்கமாகும்” எனக் கூறியுள்ளார்கள்.   (அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: அபூதாவூது, திர்மிதீ).

மேலும், நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “எவருக்கு இறைஞ்சுதலின் வாயில் திறக்கப்பட்டு விடுகிறதோ, அவருக்கு அருளின் (ரஹ்மத்தின்) வாயில்கள் திறக்கப்பட்டு விடுகின்றன.   அன்றியும் (ஈருலகிலும்) நல்வாழ்வைக் கோரி இறைஞ்சுவதை விட, வேறு எதைப்பற்றியும் அல்லாஹ்விடம் கேட்பது அவருக்கு உவந்ததல்ல.   மேலும் இறைஞ்சுதல், வந்து விட்ட சோதனைக்கும் வரப்போகும் சோதனைக்கும் நிவாரணம் தருவதாக உள்ளது.   இறைஞ்சுதல் விதியையும் மாற்றிவிடும். எனவே இறைஞ்சுவதை நீங்கள் உங்களுடைய இன்றியமையாப் பண்பாக ஆக்கிக் கொள்ளுங்கள்”   என்றும் கூறியுள்ளார்கள்.   (அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,   நூல்: திர்மிதீ).

“உங்களின் பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்பட்டுவிடும் என்ற முழு நம்பிக்கை கொண்ட நிலையில் நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்”   என்றும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.   (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: திர்மிதீ).

“உங்களில் ஒவ்வொருவரும் தம் தம் தேவை அனைத்தையும் தம் இறைவனிடமே கேட்கவும்.   அவருடைய செருப்பின் தோல்வார் அறுந்து விடினும் அதனையும் அவனிடமே கேட்கவும்”   என்றும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.   இதன்மூலம், ‘இம்மை மறுமை நற்பாக்கியங்கள் போன்ற பெரிய பெரிய விஷயங்கள் முதற்கொண்டு, அறுந்து போன செருப்பின் தோல்வார் போன்ற சின்ன சின்ன விஷயங்கள் வரை அனைத்து தேவைகளையும் அல்லாஹ்விடமே கேட்டுப் பேறலாம்’ என்பதை அறியலாம்! இத்தகைய வசதி தொழும் போதெல்லாம் கிடைத்துக் கொண்டிருக்கும்!   ஒரு நாளைக்கு ஐவேளைத் தொழுகை, ஒவ்வொரு வேளையிலும் பர்ளு தொழுகை, ஸூன்னத்து தொழுகை, நஃபில் தொழுகை என பல்வேறு தொழுகைகள்! இத்தொழுகைகள் ஒவ்வொன்றிலும் மனக்குறைகளை, கஷ்டங்களை, தேவைகளை கேட்கும் வசதி! பிறகு? தனிமையும் இல்லை, கவலையும் இல்லை, மன இறுக்கமும் இல்லை! மாறாக, மனதிலே அமைதி, நம்பிக்கை, துணிவு!   யோசித்துப் பாருங்கள், திக்கற்றவர்களுக்கு தொழுகை எவ்விதம் துணையாகிறது என்பதை!

இப்படியாக, உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் பல்வேறு விஷயங்கள் தொழுகையில் உள்ளன!   ஆயினும் நாம் இந்த விஷயங்களை, பயன்களை நாடியவர்களாக தொழுக்கூடாது. அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலாவின் கட்டளைக்கு கீழ்படிந்து கடமைகளை பேணியவர்களாக தொழ வேண்டும்!   நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையை பேணியவர்களாக தொழவேண்டும்!   அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலாவின் பேரருளை நாடியவர்களாக கூடுதல் தொழுகைகளை தொழவேண்டும்! இவ்விதம் தொழும் போது மேற்கூறிய பயன்களும் ‘போனஸாக’ கிடைத்துவிடும்!

நன்றி:- ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி

நன்றி:- http://islammargam.com

தயம்மும்-நோயாளி உளூ செய்வது எப்படி?


தயம்மும்-நோயாளி உளூ செய்வது எப்படி?  மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)


தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வது நோயாளி மீது கடமையாகும். சிறு தொடக்கு எனில் உளூ செய்ய வேண்டும். பெருந் தொடக்கு எனில் குளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

நோயின் காரணமாக தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை என்றாலோ அல்லது குணமடைய தாமதமாகும் எனும் அச்சத்தினால் தண்ணீரால் சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலோ தயம்மும் செய்ய வேண்டும்.

தயம்மும் செய்யும் முறை யாதெனில்: சுத்தமான தரையை இரண்டு கைகளால் ஒரு முறை அடித்து அவைகளால் முகம் முழுவதையும் தடவ வேண்டும். பிறகு இரு மணிக்கட்டுகளையும் ஒன்றைக் கொண்டு மற்றொன்றைத் தடவ வேண்டும்.

சுயமாக சுத்தத்தை அவரால் மேற்கொள்ள அவரால் முடியவில்லை என்றால் வேறொருவர் அவருக்கு உளூ அல்லது தயம்மும் செய்து வைப்பார்.

சுத்தம் செய்ய வேண்டிய பகுதிகள் சிலவற்றில் காயம் இருந்தால் தண்ணீரால் அதைக் கழுவ வேண்டும். தண்ணீரால் கழுவுவது தீங்கு அளிக்கும் என்றிருந்தால் கையை தண்ணீரில் நனைத்து காயத்தின் மீது தடவ வேண்டும். அப்படிச் செய்வதனால் தீங்கு ஏற்படும் என்றிருந்தால் அதற்குப் பகரமாக தயம்மும் செய்யலாம்.

சுத்தம் செய்ய வேண்டிய பகுதிகளில் சிலவற்றில் முறிவு ஏற்பட்டு துணி வைத்தோ அல்லது பட்டை வைத்தோ கட்டப்பட்டிருந்தால் அதைக் கழுவுவதற்குப் பதிலாக தண்ணீரால் தடவ வேண்டும். அப்படித் தடவுவது கழுவுவதற்குப் பகரமாகும் என்பதால் தயம்மும் செய்ய வேண்டிய தேவையில்லை.

மண் சுவர் மீதோ அல்லது புழுதி படிந்துள்ள சுத்தமான பொருள் மீதோ தயம்மும் செய்வது கூடும். பெயின்ட் போன்ற மண் சாராத பொருளால் சுவர் பூசப்பட்டிருந்தால் அதன் மீது புழுதி படிந்திருந்தால் மட்டும் தயம்மும் செய்யலாம்.

மண் சுவரிலோ அல்லது புழுதி படிந்த ஏதேனும் ஒரு பொருளிலோ தயம்மும் செய்ய முடியவில்லை என்றால் ஒரு பாத்திரத்தில் அல்லது கைத்துண்டில் மண்ணை வைத்து அதில் தயம்மும் செய்யலாம்.

அசுத்தங்களை நீக்கி தன் உடலை சுத்தம் செய்வது நோயாளி மீது கடமையாகும். அவரால் இயலவில்லையானால் அப்படியே தொழலாம். அத்தொழுகை நிறைவேறி விடும். திருப்பித்தொழ வேண்டியதில்லை.

சுத்தமான ஆடைகளோடு தொழுவது நோயாளி மீது கடமையாகும். அவருடைய ஆடைகள் அசுத்தமாகி விட்டால் அவற்றைத் துவைப்பதோ அல்லது அவற்றைக் கழைந்து விட்டு சுத்தமான ஆடைகள் அணிவது அவர் மீது கடமையாகும். அது சாத்தியமில்லையானால் அப்படியே தொழலாம். அத்தொழுகை நிறைவேறி விடும். திருப்பித்தொழ வேண்டியதில்லை.

சுத்தமான இடத்தின் மீது தான் நோயாளி தொழ வேண்டும். அவ்விடம் அசுத்தமாகி விட்டால் அதைக் கழுவி சுத்தம் செய்வது அல்லது அதை மாற்றிவிட்டு சுத்தமான பொருளைக் கொண்டு வருவது அல்லது சுத்தமான விரிப்பை அதன் மீது விரிக்க வேண்டும். அவைகள் அனைத்தும் சாத்தியப்படாத பட்சத்தில் அப்படியே தொழலாம். அவரது தொழுகை நிறைவேறிவிடும். திருப்பித்தொழ வேண்டியதில்லை.

சுத்தம் செய்யவில்லை என்பதால் தொழுகையை நேரப்படி தொழாமல் பிற்படுத்துவது நோயாளிக்குக் கூடாது. மாறாக முடிந்தவரை சுத்தத்தைச் செய்து கொண்டு நேரத்துக்கு தொழ வேண்டும். அவரது உடலிலோ உடையிலோ இடத்திலோ அசுத்தம் இருந்து அதைச் சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலும் சரியே!

நன்றி:- சுவனத் தென்றல்

உளூ செய்யும் முறை


நபி (ஸல்) அவர்கள் உளூ செய்த முறை!

அல்லாஹ் கூறுகிறான்: –

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) – நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை – ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். (அல்-குர்ஆன் 5:6)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களில் எவரது தொழுகையையும் நீங்கள் ஒலூச் செய்தால் தவிர, அசுத்தத்துடன் ஏற்றுக் கொள்ள மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவுத்

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம்: –

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: –

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

எனவே நாம் தொழுகைக்கான உளூ செய்யும் போது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறே நாமும் செய்ய வேண்டும்.

உளூவிற்கான நிய்யத் செய்தல்: – உளூ செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு (வாயால் மொழிவது அல்ல).

‘பிஸ்மில்லாஹ்’ கூறுதல்: – மனதால் நிய்யத் செய்த பிறகு ‘பிஸ’மில்லாஹ்’ கூறி உளூ செய்யத் துவங்க வேண்டும்.

இரு மணிக்கட்டுகளை கழுவுதல்: – இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவிக் கொள்ளவேண்டும்.

வாய் கொப்பளித்தல்: – மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

நாசிக்கு (மூக்கிற்கு) நீர் செலுத்தி சுத்தம் செய்தல்: – மூக்கிற்குள் வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.

முகம் கழுவுதல்: – ஒரு காதிலிருந்து மறு காதுவரையும், நெற்றியின் ஆரம்பப் பகுதியிலிருந்து கீழ் தாடை வரையும் முகத்தை மூன்று முறை கழுவவேண்டும்.

இரு கைகளை முழங்கை வரை கழுவுதல்: – இரண்டு கைகளையும் விரல் நுனிகளிலிருந்து முழங்கை உட்பட மூன்று முறை கழுவவேண்டும். முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் கழுவவேண்டும்.

மஸஹ் செய்தல்: – இரண்டு கைகளையும் தண்ணீரில் நனைத்து தலையின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை கொண்டு சென்று மீண்டும் அதனை முற்பகுதிக்கு கொண்டு வரவேண்டும்.  பிறகு ஆட்காட்டி விரலை காதின் உட்பகுதியையும், பெருவிரலால் காதின் வெளிப்பகுதியையும் தடவ வேண்டும்.

தலையில் மஸஹ் ஒரு முறை தான் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி),  ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவுது, இப்னுமாஜா, அஹ்மது

நம்மில் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு  எவ்வித ஆதாரமும் இல்லை.


இரு கால்களையும் கழுவுதல்: – இரண்டு கால்களையும் விரல் நுனிகளிலிருந்து கணுக்கால் வரையில் முதலில் வலது காலையும் பிறகு இடது காலையும் மூன்று முறை கழுவவேண்டும்.

ஒரு மனிதரின் காலில் நகம் அளவுக்கு தண்ணீர் படாததைக்கண்ட நபியவர்கள் திரும்பிச் சென்று உம் உளுவை அழகாகச்செய் என்றார்கள். அறிவிப்பவர்:அனஸ் (ரலி) ஆதாரம் : நஸயீ, அபூதாவூது.

குதிகால்களை நன்றாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா, ஆதாரம் : புகாரி.

காலுறை அணிந்தவர் உளூ செய்யும் முறை: –

ஒருவர் உளு செய்து விட்டு காலுறை (ஸாக்ஸ்) அணிந்து, பிறகு உளு முறிந்து விட்டால் திரும்ப உளு செய்யும் போது அவர்; காலுறையை கழற்ற வேண்டிய அவசியமில்லை. காலை கழுவ வேண்டிய நேரத்தில் காலுறையின் மேல்பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால் போதும். கடமையான குளிப்பிற்கு கட்டாயம் கழற்றவேண்டும்.

காலுறையில் மஸஹ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவைகள்: –

காலுறை அணியும் போது உளூவுடன் இருந்திருக்க வேண்டும். அதன் பிறகு உளூ முறிந்தால் தான் காலுறையைக் கழற்றாமலேயே அதன் மீது மஸஹ் செய்து கொள்ளலாம்.

காலுறையின் மேல் பகுதியில் தான் மஸஹ் செய்ய வேண்டும். சிலர் செய்வது போல் கீழ் பகுதியில் அல்ல.

மஸஹ் செய்வதற்கான காலக் கெடு: –

ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் (ஐந்து நேரத் தொழுகைகள்). பிரயாணத்தில் இருப்பவர்களுக்கு மூன்று நாட்கள் ஆகும். [Al-Majmoo’ (1/487), Al-Musannaf (1/209/807)]

இந்த காலக்கட்டத்திற்கு மேற்படும் போது காலுறையை கழற்றிவிட்டு முறைப்படி உளுச் செய்ய வேண்டும்.

உளூ செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகள்: –

– கை கால்களைக் கழுவும் போது முதலில் வலது புறத்திலிருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்.

– நபி (ஸல்) அவர்கள் கை, முகம்,கால்களைக் கழுவும் போதும், வாய்கொப்பளிக்கும் போதும் பெரும்பாலான சந்தர்பங்களில் மூன்று முறை செய்துள்ளார்கள். இரண்டு முறையும் ஒரு முறையும் கூட செய்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் மூன்று முறை செய்திருப்பதால் நாமும் மூன்று செய்வதே சிறந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர்.

– உளுவை இடைவெளியில்லாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். (ஒரு உறுப்பு காய்வதற்குள் மற்ற உறுப்பை கழுவவேண்டும்.)

உளூ செய்து முடித்தவுடன் ஓதும் துஆ: –

“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹ்” என்று கூறவேண்டும்.

‘உங்களில் ஒருவர் உலூச் செய்யும் போது அவ்வுலூவை அழகுறச் செய்து, அவர் அதை நிறைவு செய்யும் போது அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹுவஹ்தஹு லாஷரீக லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு (வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தவிர யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணையில்லை என்று நான் சான்று பகர்கின்றேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், திருத்தூதரும் ஆவார்கள் என்றும் சான்று பகர்கின்றேன்) என்று கூறினால் அவருக்காக எட்டு சுவனங்களின் வாயில்கள் திறக்கப்பட்டு விடும். அவற்றில் அவர் விரும்பிய எதிலும் நுழையலாம். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) ஆதாரம் : அபூதாவுத்

உளூ செய்து முடித்ததும் ஓதக் கூடிய மற்றொரு துஆ: –

‘அல்லாஹூம்மஜ்அல்னீ மினத்தவ்வாபீ(B) வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்’

உளுவை முறிக்கும் செயல்கள்: –

சில செயல்களால் உளு முறிந்து விடும். இவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து விட்டால் மீண்டும் உளு செய்த பிறகே தொழவேண்டும். அவைகள்:

– மல ஜலம் கழித்தல்

– காற்று பிரிதல்

உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தனது வயிற்றுக்குள் இறைச்சலை உணர்ந்து தான் ஹதஸ் ஆகிவிட்டோமா அல்லது ஹதஸ் ஆகவில்லையா என்று சந்தேகம் கொண்டால் அவர் சப்தத்தை கேட்கின்ற வரை அல்லது நாற்றத்தை உணர்கின்ற வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஆதாரம் : அபூதாவுத் (ஆடியோ)

– இச்சை நீர் வெளிப்படல்

– அயர்ந்து தூங்குதல்

– ஒட்டக மாமிசம் உண்ணுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளு செய்ய வேண்டுமா? எனக் கேட்ட போது ஆம் என்றார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

– ஆட்டிறைச்சி சாப்பிட்டால் உளூ முறியாது: –

‘நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுத் தொடை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்” என மைமூனா(ரலி) அறிவித்தார்

– இன உறுப்பை இச்சையுடன் தொட்டால் உளூ முறிந்து விடும்: –

உங்களில் ஒருவர் தனது மர்ம பாகத்தைத் தொட்டுவிட்டால் அவசியம் அவர் உளு செய்து கொள்ளவும். அறிவிப்பவர்: புஷ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி),  ஆதாரம் : அபூதாவூது

– இச்சையில்லாமல் இன உறுப்பை தொட்டால் உளூ முறியாது.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையில் ஒரு ஆடவர் தன் ஆண்குறியைத் தொட்டு விடுகிறார். அவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டபோது அதுவும் உனது உடலிலுள்ள ஒரு சதைத்துண்டே தவிர வேறில்லை அல்லது உன்னிலுள்ள சதைத்துண்டுதானே! எனக் கூறினர்.

அறிவிப்பவர்: தல்கு பின் அலி (ரலி), ஆதாரம் :இப்னுமாஜா

மேற்கண்ட ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்து, ஒருவர் இச்சையோடு மர்ம உறுப்பை தொட்டால் உளு முறிந்து விடும். இச்சையுடன் இல்லாமல் ஏதேச்சையாக தொட்டால் உளூ முறியாது எனவும் மீண்டும் உளு செய்ய வேண்டியதில்லை என்பதையும் அறியலாம். (ஆடியோ)

தயம்மும்: –

உளு செய்யவோ, குளிக்கவோ தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அல்லது தண்ணீர் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நோய் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உளு மற்றும் குளிப்புக்கு பகரமாக தயம்மும் செய்து தொழுகையை நிறை வேற்றலாம். ஏனென்றால் எக்காரணத்தைக் கொண்டும் தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

தயம்மும் செய்யும் முறை: –

தூய்மையான மண்ணில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒரு முறை அடித்து அதனை முகத்தில் தடவிவிட்டு பிறகு அதனைக் கொண்டு இரண்டு முன்னங்கையில் தடவவேண்டும். இதுவே தயம்மும் செய்யும் முறையாகும்.

நன்றி:- சுவனத் தென்றல்


வெற்றியின் இரகசியம் இஸ்திகாரா தொழுகை! தமிழில்: மௌலவி அர்ஸத் ஸாலிஹ் மதனி

ஏப்ரல் 28, 2010 1 மறுமொழி

بسم الله الرحمن الرحيم

سر النجاح – ومفتاح الخير والبركة والفلاح

ஒரு  வாலிபன் ஒரு பெண்னை  திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்;  பின்னர் திருமணத்துக்காக    தயாராகின்றான்;  அப்போது     அவனது சகோதரன்  அப்பெண்னை  திருமணம்  முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.  அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை  கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்;  ஆனால் அனைத்து முயற்சிகளும்  பயனளிக்கவில்லை.  இறுதியில்  வேறொரு பெண்னை மணக்கின்றான்.  குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம்  பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.

ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் வேலை பார்த்து வந்தான்;  ஆனால் அவனது சம்பளமோ தனது அடிப்படைத் தேவையைக்கூட நிறைவேற்ற  போதாது; அல்லாஹ் அவனுக்கு நேரான வழியைக் காட்டினான்;  அல்- குர்ஆன் மனனப்பிரிவில் சேர்ந்தான்;  அத்தோடு பள்ளியில் நடக்கக்கூடிய மார்க்க வகுப்புக்களிலும், மார்க்க சொற்பொழிவுகளிலும் தவறாமல் கலந்து கொள்பவனாக இருந்தான். என்றாலும் அவனது தொழிலோ அதற்குத் தடையாகவே இருந்து வந்தது. இதனால், தான் மனைவி மக்களுடன் வீட்டில் இருப்பதற்கும் வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும்  மிக மிக குறைவாகவே  அவனுக்கு நேரம் கிடைத்தது.

ஒரு நாள் அறிஞர் ஒருவரிடம் சென்று, தனது கஷ்டத்தை, முறைப்பாட்டை முன் வைக்கின்றான்.  அவர் சில அறிவுரைகளைக் கூறினார். அன்றிலிருந்து அந்த வேலையை வெறுத்தவனாக  தான் அல்-குர்ஆனையும் கற்று, மார்க்க வகுப்புக்களிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேறொரு வேலையை தேடுகிறான். ஆனாலும் எங்கு தான் செல்ல? பின்னர் மார்க்க அறிஞர் அவனை பார்த்து,  நன்மையை, தனது தேவையை வேண்டி தொழும்  தொழுகையைப் பற்றி (இஸ்திகாரா தொழுகை) தெரியுமா? என்று கேட்க, அவன் தெரியாது என்று கூறினான். பின்னர் அதனை கற்றுக் கொடுத்தார். அவன் உடனே இஸ்திகாரா தொழுகையைத் தொழுதுவிட்டு இறைவன் பால் நம்பிக்கை வைத்தவனாக பிரார்திக்கின்றான். பின்னர் முயற்ச்சி செய்து ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றான்.

சிறிது காலத்துக்குப் பிறகு மார்க்க அறிஞரிடம் மகிழ்ச்சியுடன் சநதோஷமான நிலையில்  சென்று கூறினான். அல்லாஹ் எனது கஷ்டத்தை நீக்கினான்;  குறைந்த நேரத்தில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டேன்; இதன் மூலம் மார்க்க வகுப்புக்களிலும், தனது மனைவி மக்களுடனும்  இருப்பதற்கு மிக மிக வசதியாக இருப்பதாக கூறினான்.

இதனது இரகசியம் தான் என்ன? இவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது எது? இதுதான் இஸ்திகாரா தொழுகையின் இரகசியம்! இதனை பற்றிய தகவல்களை பின்வருமாறு பார்ப்போம்.

இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!

மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை  இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு  செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.

ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்!  சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.

இவ்வாறாண நிலைமைகளில் ஜாஹிலியா கால அரேபியர்கள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக சில வழிமுறைகளைக் கையாண்டார்கள்.  அதுதான் அம்பெய்து குறி பார்ப்பதாகும்! அவர்களிடம் மூன்று சீட்டுகள் இருக்கும்; அவற்றில் ஒன்றில் “செய்” என்றும் மற்றதில் “செய்யாதே” என்றும் மற்றொன்றில்  “ஒன்றும் இருக்காது”! இவற்றில் “செய்”என்ற சீட்டு விழுந்தால் குறித்த அக்காரியத்தைச் செய்வார்கள். “செய்யாதே” என்ற சீட்டு விழுந்தால் அதனைச் செய்ய மாட்டார்கள்.

“ஒன்றும் இல்லாத” சீட்டு விழுந்தால் ஏதோ ஒன்று விழும் வரை தொடர்ந்து  சீட்டுகளை போட்டுக்கொன்டே இருப்பார்கள். இவ்வாறான நிலைமைகளில் இருந்து அல்லாஹ் முஃமின்களை பாதுகாத்தான். அதனை அவர்களுக்கு தடை செய்தான்.

قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق….) سورة المائدة :03

அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்” (அல்குர்-ஆன் 5:3)

இதற்கு பகரமாக, நன்மையை நாடி தொழும் தொழுகையை (ஸலாத்துல் இஸ்திகாரா) நபி (ஸல்)அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதில் இருக்கக்கூடிய பிரார்தனை, “அல்லாஹ்வின்   மீது நம்பிக்கை வைத்தல், உதவி தேடுதல் அனைத்து சக்திகளை விட்டும் ஏக இறைவனது சக்தியை மாத்திரம் எதிர்பார்த்தல் முழுமையாக அவனது செயல்கள் வர்னனைகளை ஒருமைப்படுத்தல் அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டுவது போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும்.”

அல்லாஹ் மனிதனிடத்தில் கொண்ட கருனையால் தனது அடியானுக்கு (இஸ்திகாரா தொழுகையை) செய்யும்படி சொல்கின்றான். இச்செயலை செய்வதற்கு படைத்த இறைவனுக்கு முன்னால் ஒரு சில நிமிடங்களை மாத்திரமே செலவு செய்ய வேண்டும. இக்காரியத்தைச் செய்கின்றவர்கள் மிக மிக அரிதே! இத்தொழுகையின் மூலம் தான் நாடியதை தனது இறைவனிடம் கேட்பான்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிகப் பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே!

இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான்  சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்”

இஸ்திகாரா  தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.

இஸ்திகாரா  தொழுகையை தொழும் முறை:

பர்ளு தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை இஸ்திகாரா தொழுகை என்ற என்னத்தோடு  தொழ வேண்டும். அதில் சூரா பாதிஹாவையும் அதன் பின்னால் அல்குர்-ஆனில் சில வசனங்களையும் ஓத வேண்டும். சுஜூதில் அல்லது அத்தஹியாத்தில் அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பிறகு  இஸ்திகாரா நபிமொழியில் வரக்கூடிய பிரார்த்தனையை, துஆவை பொருள் விளங்கி ஓதவேண்டும். தொழுகைக்கு பிறகு பிரார்த்திப்பதே மிக சரியான முறையாகும்.

இஸ்திகாரா தொழுகையைப் பற்றி வரக்கூடிய நபிமொழியும் பிரார்தனையும்:

عن جابر رضي الله عنهما قال:كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن،يقول:إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة  ثم  ليقل : اللهم إني أستخيرك  بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك  من فضلك العظيم،فانك تقدر ولا أقدر،وتعلم ولا أعلم،وأنت علام الغيوب،اللهم إن كنت تعلم أن هذا الأمر- ويسمي حاجته-خير لي في ديني ومعاشي وعاقبة أمري-أو

قال عاجل أمري وآجله-فاقدره لي ويسره لي،ثم بارك لي فيه،وان كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري- أو قال:عاجله وآجله-فاصرفه عني واصرفني عنه،واقدر لي الخير حيث كان ثم أرضني به.   (أخرجه البخاري. )

“அல்லாஹூம்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பீகுதுரதிக, வஅஸ் அலுக மின் பழுலிகல் அழீம், பஇன்னக தக்திர் வலா அக்திர், வதஃலம் வலா அஃலம், வ அன்த அல்லாமுல் குயூப், அல்லாஹூம்ம இன் குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர – (தேவையைக் குறிப்பிட வேண்டும்) -கைருன் லீ பீ தீனீ வமஆஷீ வஆகிபது அம்ரீ பக்துர்கு லீ வயஸ்ஸிர்கு லீ சும்ம பாரிக்லீபீ, வ இன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீதீனீ  வமாஆஷீ  வ ஆகிபது அமரீ பஸ்ரிப்கு அன்னீ வஸ்ரிப்னீ அன்கூ  வக்துர்லியல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்”

இதன் பொருள்:

“யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னிடமிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கிறேன்; ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்; என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதனையும் அறியமாட்டேன். மேலும் நீயே மறைவானவை அனைத்தும் அறிந்தவன்! யாஅல்லாஹ்! இந்த விஷயம் (விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்) எனக்கும், எனது தீனுக்கும், எனது வாழ்கைக்கும், எனது விவகாரத்தின் முடிவுக்கும்-இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான, தாமதமான விவகாராத்திற்கும் – நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்கு, எனது தீனுக்கும் எனது வாழ்கைக்கும் எனது விவகாரத்திம் முடிவுக்கும் – இவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான், தாமதமான விவகாரத்துக்கும்) தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தித் தருவாயாக!” (ஆதாரம் புகாரி)

இஸ்திகாரா தொழுகையை தொழும் நேரம்:

இஸ்திகாரா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. எனினும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்களை தவிர்ந்து கொள்வது நல்லதே! பஜுர் தொழுகையிலிருந்து சூரியன் ஒரு ஈட்டி உயரும் வரை உள்ள நேரம்,  மற்றும் அஸருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் மரையும் வரை உள்ள நேரங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான நேரங்களில் நபிலான தொழுகைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு காரணத்துக்காக தொழும் தொழுகையை தொழலாம்.  உதாரணமாக பள்ளியுடைய கானிக்கை தொழுகை (தஹீயதுல் மஸ்ஜித்) மேலும் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ளப்படும் நேரங்களில் தொழுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். உதாரணமாக இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், இஸ்திகாரா தொழுகை தொழ தடுக்கப்பட்ட நேரத்தை விட்டும் பிந்திவிடுமானால் அந்நேரத்தில் தொழலாம்.

தவறான நம்பிக்கை:

இஸ்திகாரா தொழுகையை இரவில் தூங்குவதற்கு முன் தொழுதுவிட்டு தூங்கினால் அத்தூக்கத்தில் ஒரு கணவு காண்பார்; அக்கணவே சரியானது என்று சில மனிதர்கள் தவறாக இதனை புரிந்திருக்கின்றார்கள். இது முற்றுமுழுதாக  பிழையான கருத்தும் நபிமொழிக்கு மாற்றமான  முறையும் ஆகும். மேற்குறிப்பிட்டது போல் இத்தொழுகைகென்று குறிப்பிட்ட நேரம் இல்லை. அத்தோடு இஸ்திகாரா தொழுபவர் கணவு காண்பது நிபந்தனையும் அல்ல! ஆகையால் எப்பொழுது ஒரு மனிதனுக் தேவை வருகின்றதோ அப்பொழுது அவன் தொழுவான். பின்னர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பான்.

இஸ்திகாரா தொழுவதற்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்:

அனைத்து விஷயங்களுக்காகவும் தொழலாம்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிக பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே! எத்தனை மனிதர்களது சிறிய விஷயங்கள் மிக பெரிய விஷயங்களாக மாறி இருக்கின்றன! இந்த நபிமொழியில் வரக்கூடிய “அனைத்து விஷயங்களிலும்” என்ற சொல் இதற்கு  ஆதாரமாக  இருப்பதோடு அதனை உறுதிப்படுத்துகின்றது.

ஆனால் இரண்டு விஷயங்களை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்:

(1) கட்டாயமான கடமைகள், தடுக்கப்பட்டவைகள்; உதரணமாக ஒரு மனிதன் லுஹர் தொழுவதற்காக வேண்டி லுஹர் தொழுவதா? இல்லையா? என்பதற்காக இஸ்திகாரா தொழுவது கூடாது! அல்லது ஹராமக்கப்பட்டிருக்கின்ற வட்டியை வாங்குவதற்கு முன்னால் வட்டியை வாங்குவதா? இல்லையா? என்பதற்கு இத்தொழுகை தொழக் கூடாது! ஏனெனில் லுஹர் தொழுகை என்பது ஒரு கடமையான தொழுகை. அதனை ஒரு முஸ்லிம் தொழுதுதான் ஆக வேண்டும். அத்தோடு வட்டி எடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஒன்று. அதனை ஒருவன் தவிர்ந்துதான் ஆகவேண்டும்.

(2) வழமையான விஷயங்கள், உதாரணமாக ஒருவன் உண்பதற்கும் குடிப்பதற்கும் இஸ்திகாரா  தொழ முற்படுகிறான் உண்பதா? குடிப்பதா? என்று! இதற்கு இஸ்திகாரா தொழவேண்டிய தேவையும், பிரார்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனெனில் ஒருவன்  உண்பதும் குடிப்பதும் இன்றியமையாத தேவைகளாகும்.

அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்தவற்றிலே நன்மையுண்டு:

ஒரு முஸ்லிம், ஒரு விஷயத்துக்காக இஸ்திகாரா தொழுவான்; ஆனால் அந்த விஷயத்தையே முக்கியத்துவப்படுத்தி அதிலே உறுதியாக இருப்பான்; அல்லாஹ் அவனுக்கு அதனை விதியாக்கி இருக்கமாட்டான்!  உதாரணமாக, ஒருவன் தனக்கு விரும்பிய பெண்னை திருமணம் முடிப்பதற்காக இஸ்திகாரா தொழலாம். ஆனால் அல்லாஹ்வின் விதியில் அது எழுதப்பட்டிருக்காது.  இவ்வாறான நிலைமையில் அல்லாஹ்வின்பால் அவன் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவனது விதியை முழுமையாக பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கபட்டவற்றிலே நன்மையும் வெற்றியும் உண்டு என்று அவன் நம்ப வேண்டும். சில வேளைகளில் அவன் விரும்பிய அப்பெண் அவன் மோசமாகுவதற்கு அல்லது பாவியாகுவதற்கு காரணமாக இருக்கலாம்! ஆனால் அதனை அவன் அறியமாட்டான்.  யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

قال تعالى(وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون)

سورة البقرة :216

அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:216)

அதிகமான மக்கள் பல விஷயங்களை வெறுத்திருப்பார்கள்; ஆனால் அவைகள் அவனது விதியில்-அல்லாஹ்வினால் நன்மையுள்ளதாக எழுதப்பட்டிருக்கும்!  பிற்காலத்தில் அதில் அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அதே போன்று எத்தனையோ மனிதர்கள் ஏராளமான விஷயங்களை விரும்பி இருப்பார்கள்.  விரும்பப்பட்ட அவ்விஷயங்கள் அவனை அழிவின்பால் இட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கலாம். இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

قال تعالى (والله يعلم وأنتم لا تعلمون)سورة البقرة :216

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள்”  (அல்-குர்ஆன் 2:216)

சில விஷயங்களை பொருத்தவவையில், அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடி இருப்பான்.  ஆனால் அதில் அவனுக்கு வெற்றி இருக்காது! உதாரணமாக ஒரு மனிதன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக இஸ்திகாரா தொழுது பிரார்திப்பான்; அத்திருமணம் நடக்கும்;  குறித்த அப்பெண்னை மணப்பான்;  காலப்போக்கில்  அத்திருமணம் சீர்குழைந்துவிடும்; எனவே இச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை பொருந்திக்கொள்ள வேண்டும். அதுவும் அவனுக்கு நல்லதாகவே இருக்கும் அதனை அவன் அறியமாட்டான்

இஸ்திகாரா தொழுகையினால் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்வொன்றை காண்போம்:

ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டு ஒருவர் பிரயாணத்தை மேற்கொள்வதற்காக ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். அவர் விமான நுழைவு சீட்டையும் (Boarding Pass) பெற்று  விமானத்துக்கு புறப்படும் இடத்தில், அழைக்கும் வரை எதிர்பார்த்து இருந்தார்.    அப்போது தன்னை அறியாமல் தூக்கம் அவரை மிகைத்து விட்டது. திடீரென விழித்தபோது, விமானம் புறப்படக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது; வாயில்கள் மூடப்பட்டுவிட்டன;  அப்போது அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!

விமானத்திற்குள் நுழைவதற்காக தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அனைத்துமே பயனளிக்கவில்லை! பின்னர் தான் கவலையுற்றவராக தடுமாறிக் கொண்டிருந்தார். குறித்த விமானம், ஒரு சில வினாடிகளில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அடுத்த விமான நிலையத்திற்கு தரையிறக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஆனால் தரையிறக்கப்படுவதற்கு முன்னரே 300  பிரயாணிகளுடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனது இரகசியம் என்ன?

அம்மனிதர் தீப்பிடிக்கும் என்று கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்! இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு! நிச்சயமாக அம்மனிதருக்கு பிரயாணம் செய்ய கிடைக்கவில்லை; அதன் மூலம் அவருக்கு நலவு இருந்திருக்கின்றது!

எப்பொழுது துஆவுடன் மாத்திரம்  சுருக்கிக்கொள்ள வேணடும்?

சிலருக்கு சில சந்தர்ப்பத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருப்பார்கள்! மாதவிடாய், நிபாஸ் நிலைமைகளில் இருக்ககூடிய பெண்களைப் போன்றவர்ககளைக் கூறலாம். இவர்களை பொருத்தவரையில் தொழ முடியுமான நிலை வரும்வரை தொழுகையைப் பிற்படுத்தலாம்.  குறித்த அச்சந்தர்ப்பத்தைப் பிற்படுத்த முடியாவிட்டால், தொழுதுதான் ஆகவேண்டுமானால் துஆவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். அதாவது நபிமொழியில் வரக்கூடிய பிரார்தனையை மாத்திரம் கேட்பார். இதற்கு பின்வரக்கூடிய வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன.

قال تعالى(لا يكلف الله نفسا إلا وسعها….)سورة البقرة286

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை”  (அல்-குர்ஆன் 2:286)

قال تعالى (فاتقوا الله ما استطعتم)سورة التغابن:16

அல்லாஹ் கூறுகின்றான்:

“உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்”  (அல்குர்-ஆன் 64:16)

சகோதரா! உனது வியாபாரத்தை துவக்குவதற்கு முன்னால் அல்லது தொழிற்சாலைக்கு வேலையாட்களை சேர்ப்பதற்கு முன்னால்  இஸ்திகாரா தொழுகையை தொழுதுகொள்!

சகோதரா! நீ ஒரு தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னால் அதில் நன்மையுண்டா? தீமையுண்டா? என்பதனை உன்னால் அறிய முடியாது! அல்லது ஒரு நோயாளி தனது நோயை குணப்படுத்த  வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னால், அல்லது ஒரு வீட்டையோ, தொலைதொடர்பு சாதனங்களையோ, ஒரு வாகனத்தையோ  வாங்குவதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! திருமணத்திற்காக தயாராகுவதற்கு முன்னால், திருமண பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்னால், மணமகன் அல்லது  மணமகளைப் பார்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! இஸ்திகாரா தொழுகை வெற்றியின் ஆரம்ப படித்தரமாகும்! அல்லாஹ்வின் நாட்டத்தால் இம்மை மறுமை வெற்றிக்கு காரணமாகவும் அமைகின்றது! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடந்து அவனுடன் உண்மையான முறையில் நடந்துகொண்டால், அவன் மீதே நம்பிக்கை வைத்தால், வெற்றியின் நுழைவாயில்கள் அனைத்தையுமே அவன் திறந்து கொடுப்பான்.

இது அல்லாஹ்வின் அருள்! அவன் நாடியவருக்கு அருள்பாளிக்கின்றான்! அல்லாஹ் மகத்தான அருளுக்கு உரியவனுமாவான்.


நன்றி:- மௌலவி அர்ஸத் ஸாலிஹ் மதனி

நன்றி:- சுவனத்தென்றல்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்


தொழுதால் தீரும்
தொல்லைகள் யாவும்

தினம் ஐவேளை
தொழுதிட வேணும்
மறந்தால் நாசம்
மறுமையில் மோசம்

மஹ்ஷர் வெளியில்
மருகிட நேரும்
படைப்பில் மேலாக நமைநாயன் படைத்தான்
பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான்

கருவில் உருவாகி நாமிருந்தபோது
கருணைக் கனிவோடு உணவீத்து காத்தான்
அருளின் இறையோனை நாம் நினைத்து தொழுதால்
பெருமைப் பெறுவோமே இருலோகில் நாமே

மறையாம் குர்ஆனின் நெறிப்பேணி நின்று
மன்னர் பெருமானார் நபிப்பாதை சென்று
மண்ணின் மாயைகள் நமைச்சூழு முன்னே
மாண்பின் இறையோனை தொழுதாலே மேன்மை

மரணம் வருமுன்னே தொழுதிடுவோம் இங்கு
மண்ணறை சென்றபின்னே தொழுதிடுதல் எங்கு
முஃமீன் அடையாளம் தொழுகை என்றார் நபி
முனைப்புடன் நாளுமே தொழுதாலே நிம்மதி

இருளைப் போக்கிடும் இழிநிலை மாற்றிடும்
இறையருள் சூழ்ந்திடும் இன்னல் பறந்தோடிடும்
குப்ரின் தீங்கான செயலின்றி வாழ
கப்ரின் வேதனையில் வீழாது மீள

சுவனத்தின் திறவுகோல் தொழுகை என்றார் நபி
கவனத்தில் பேணியே தொழுதாலே மேம்பதி
மறுமை தீர்ப்பன்று மகிழ்வோடு விண்ணில்
மாண்புடன் நாம் வாழ தொழவேண்டும் மண்ணில்
உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம்

உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம்.

*******************************************************

நன்றி:- ஏ.ஆர்.தாஹா  காயல்பட்டணம்

நன்றி:- இஸ்லாமிய தமிழ் தஃவா குழு

_____________________________________

ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

அன்பான சகோதர, சகோதரிகளே! குர்ஆன், ஹதீஸ் என்று பேசும் நம்மில் பலர் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்தாக தொழுவதில் அலட்சிம் காட்டுகின்றனர். ஜமாஅத்தாக தொழுவதின் முக்கியத்துவத்தையும் அதை தவற விடுவதால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் நிறைய இருக்கின்றன.

ஜமாத்அத் தொழுகைகளை விடுபவர்களுக்கான நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்: –

“ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கண்பார்வையற்றவருக்கே வீட்டில் தொழ அனுமதியில்லை: –

கண்பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருபவர் யாருமில்லை. எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி, அவர் சென்று கொண்டிருக்கும் போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதை நீர் கேட்கிறீரா? என்றனர். அதற்கவர் ஆம் என்றதும் அந்த அழைப்புக்கு நீ (ஜமாஅத்துக்கு வருவதன் மூலம்) பதிலளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்.

இயலாதவரைக் கூட கைத்தாங்கலாக பள்ளிக்கு அழைத்துவரவேண்டும்: –

ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப் போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டீர்களானால் நிச்சயம் வழிதவறிப் போவீர்கள். எவர் உளூச் செய்து – அதை நல்ல முறையில் செய்து இப் பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகிறாரோ அல்லாஹ் அவருக்கு – அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதி, ஒரு பதவியை உயர்த்துகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். எங்களிடையே நான் பார்த்திருக்கிறேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதிகளைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்க மாட்டார். திண்ணமாக இயலாதவரைக் கூட இரண்டு பேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் :முஸ்லிம்.

ஜமாஅத்தை விட்டு தனியாக தொழுபவர் ஷைத்தானின் பிடியில் எளிதில் அகப்பட்டுவிடுவார்: –

‘ஒரு பேரூரில் அல்லது சிற்றூரில் முஸ்லிம்களில் மூவர் மட்டுமே வாழ்ந்து, அங்கு ஜமாஅத்துடன் தொழுகை நிறைவேற்றப்படவில்லையானால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் பெற்றுவிடுகிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதை இன்றியமையாததெனக் கொள்! ஏனென்றால், இடையனை விட்டும், மந்தையை விட்டும் விலகிச் செல்லும் ஆட்டையே ஓநாய் (எளிதில்) வேட்டையாடுகிறது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அறிவிப்பவர் : அபுத் தர்தா (ரலி), ஆதாரம் : அபூதாவூது.

ஜமாஅத் தொழுகையை விடுவது முனாஃபிக் (நயவஞ்சகத்)தனம்: –

எவரொருவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையில் மறுமைநாளில் அவனைச் சந்திக்க விரும்புகின்றாரோ அவர் – ஐவேளைத் தொழுகைகளை மிகவும் பேணுதலுடன் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றைப் பள்ளியில் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் உங்களின் தூதருக்கு ‘சுன்னத்துல் ஹுதா’வைக் கற்றுத் தந்துள்ளான். இத்தொழுகைகள்யாவும் அதனைச் சார்ந்தவைதாம். நயவஞ்சகர்கள் தம் தொழுகைகளை வீட்டில் இருந்துகொண்டு நிறைவேற்றுவது போல் நீங்களும் வீட்டில் இருந்தவாறே தொழுகைகளை நிறைவேற்றுவீர்களாயின் நீங்கள் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை விட்டுவிட்டால் நேரிய வழியை (ஸிராத்துல் முஸ்தகீமை) விட்டவர்களாகின்றீர்கள். ஆதாரம் :முஸ்லிம்.

தக்க காரணமின்றி ஜமாத் தொழுகையை விட்டுவிட்டால் அவனின் தொழுகை மறுமையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது: –

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன், முஅத்தின் (பாங்கு சொல்பவர் ) தொழுகைக்காக விடுக்கம் அழைப்பினைச் செவியேற்றதும் – அதன்பக்கம் விரைந்து வருவதிலிருந்து தடுக்கும் காரணம் எதுவுமில்லையானால், தனித்து நின்று நிறைவேற்றப்படும் அவனின் தொழுகை (மறுமைநாளில்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.’

அப்போது தோழர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘காரணம் என்று கூறினீர்களே, அது என்ன? எவை எவை காரணங்களாக அமைய முடியும்?’ என வினவ, ‘அச்சமும் நோயும் தாம்!’ என்று பெருமானார் (ஸல்) விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அபூதாவூத்

ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்: –

ஜமாஅத் தொழுகை தனியாக தொழுவதை விட இருப்பத்தி ஐந்து மடங்கு சிறந்தது. மேலும் வானவர்களும் ஜமாத் தொழுகைக்காக செல்பவர்களுக்காக பிரார்த்திக்கின்றனர்: –

“ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் ‘இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!’ என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

ஜமாஅத்தாக தொழுபவரின் ஈமான் செழித்தோங்குகிறது: –

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன் தனித்து நின்று நிறைவேற்றும் தொழுகையைவிட மற்றொருவனுடன் சேர்ந்து நிறைவேற்றம் தொழுகை ஈமானின் வளப்பத்திற்கும் முன்னேற்றதிற்கும் காரணமாகின்றது. மேலும், ஒருவருடன் சேர்ந்து அவர் நிறைவேற்றும் தொழுகையைவிட இருவருடன் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை மென்மேலும் ஈமான் செழித்தோங்கக் காரணமாகின்றது. இன்னும் எத்தனை அதிகப் பேருடன் மக்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றார்களோ அல்லாஹ்விடத்தில் அது மிகவும் உதந்ததாகும். (அந்த அளவு அல்லாஹ்வுடன் தொடர்பு வலுப்பெறும்.) அறிவிப்பவர்: உபைபின் கஅப் (ரலி), ஆதாரம் : அபூதாவூது

ஜமாஅத் தொழுகைக்காக நீண்ட தூரம் நடந்து வருபவர்களுக்கு அதிக நன்மையுள்ளது: –

‘யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

பஜ்ர் மற்றும் இஷா தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்: –

நம்முடைய சகோதரர்களில் சிலர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுதாலும் இஷா மற்றும் பஜ்ர் தொழுகை நேரங்களில் பள்ளிக்கு வருவதற்கு அலட்சியமாக இருந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக பஜருடைய தொழுகையில் பள்ளியில் எண்ணிக்கை மிக சொற்பமாகவே காணப்படுகின்றது.

தவழ்ந்தாவது பள்ளிக்கு வருவார்கள்:

“தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

நன்றி:-சுவனத்தென்றல்

********************

தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்! – M.அன்வர்தீன்


“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)

தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) – சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)

குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.

இறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்கு உள்ளானவராவார்.

மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: –

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)

நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: –

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)

தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: –

அல்லாஹ் கூறுகிறான்: –

நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: –

ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)

முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)

தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)

“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)

அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”

தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி

தொழாதவர்களின் நோன்பு, தர்மம் போன்ற நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: –

“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)

யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)

தொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்: –

‘அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)

‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)

கருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும்.

நன்றி:-M. அன்வர்தீன்

நன்றி:-சுவனத்தென்றல்

********************