தொகுப்பு

Archive for the ‘பகுதி-13 டாக்டரிடம் கேளுங்கள்’ Category

பகுதி-13 டாக்டரிடம் கேளுங்கள்

செப்ரெம்பர் 12, 2010 3 பின்னூட்டங்கள்

‘‘எனது வயது 23. நான் மிகவும் ஒல்லியாக இருக்கிறேன். எடை 45 கிலோ. குண்டாவதற்கு அக்ரூட் பருப்புகளை பாலில் சேர்த்து சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால், நிறைய சாப்பிட்டால் ரொம்ப குண்டாகிவிடுவாய் என்று வீட்டில் கூறுகிறார்கள். இரவில் இதைச் சாப்பிடலாமா? எத்தனை பருப்புகளை பாலில் அரைத்து குடிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லவும்.

எனது உடல் ஓர் அமைப்பு இல்லாமல் உள்ளது. எனது இடை, அழகாக அமைய உடற்பயிற்சி எதுவும் உள்ளதா? அப்படி செய்து வந்தால் சரியான அளவில் இடை எனக்கு அமையுமா? எனக்கு வழிமுறைகள் கூறுங்கள்.’’

டாக்டர் துஸ்னா பார்க், டயட்டீஷியன், சென்னை:

‘‘உடல் மெலிவாக இருப்பது குறித்து நீங்கள் கவலைப் பட வேண்டியதே இல்லை. சொல்லப்போனால் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். குண்டாக இருந்தால்தான் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஒல்லியாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். உங்கள் எடை 45 கிலோ என்று எழுதியுள்ளீர்கள். உங்களது உயரத்தை குறிப்பிட்டிருந்தால், டயட் சொல்வதற்கு எளிதாக இருந்திருக்கும். 23 வயதிற்கு, 45 கிலோ என்பது அளவுக்கு அதிகமான எடை இல்லை. எனவே, இரவில் அக்ரூட் சாப்பிடுவதால், அதிக எடை போடுவதற்கு வாய்ப்பு இல்லை. பாதி பால், பாதி தண்ணீரில் ஒரு அக்ரூட் பருப்பினை சேர்த்து, தினமும் இரவு நேரங்களில் சாப்பிடலாம்.’’

ஜென்சி ஷாம்னா, மகளிர் யோகா சிறப்பு பயிற்சியாளர், சென்னை:

‘‘சரியான உணவுமுறையோடு கூடிய உடற்பயிற்சி நிச்சயமாக நல்ல உடல் அமைப்பைக் கொடுக்கும். சர்வாங்காசனம், பட்சிமோத்தாசனம், அர்த்த மச்சேந் திராசனம், பாத ஹஸ்த ஆசனம் ஆகிய ஆசனங்களை செய்து வந்தால் அழகிய இடை கிடைக்கும். இந்த ஆசனங்களை மூச்சை இழுத்து, மெதுவாக 15 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

இந்த ஆசனங்களைத் தொடர்ந்து 12 படி நிலைகள் அடங்கிய சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். யோகா நிலையத்துக்குச் சென்று, ஓர் ஆசிரியரிடம் முறையான பயிற்சி பெற்ற பிறகே இந்த ஆசனங்களைச் செய்யவேண்டும்.’’

‘‘என் வயது 27. இன்னும் திருமணமாகவில்லை. எனக்குப் பிறவியிலேயே ஒரு கிட்னிதான் அமைந்துள்ளது. கல்யாணத்துக்குப் பின் தாம்பத்ய உறவிலோ, குழந்தைப் பிறப்பிலோ அதிக சிரமத்துக்கு உள்ளாவேனோ என் பயமாக உள்ளது. எனக்குப் பிறக்கும் குழந்தையும் என்னை மாதிரி ஒரு கிட்னியுடன் தான் பிறக்குமா? நான் திருமணம் செய்துகொள்ளலாமா? அப்படி செய்துகொண்டால், எனது பிரச்னை பற்றி மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லலாமா? கொஞ்ச நாளாக எனக்கு அடிக்கடி கை, கால் வீக்கம், தலைசுற்றல் அதிகமாக ஏற்படுகிறது. மிகவும் குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்துங்களேன் டாக்டர்!’’

டாக்டர் சிவராமன், சிறுநீரகவியல் நிபுணர், சென்னை:

‘‘உலகில் பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு பிறப்பிலேயே ஒரு கிட்னிதான் இருக்கிறது. அப்படி ஒரு கிட்னியுடன் வாழ்பவர்கள் பலருக்கு இந்த உண்மை தெரிய வருவதே இல்லை. ஏனெனில், அவர்களும் இரண்டு கிட்னி இருப்பவர்களைப் போல ஆரோக்கியமாக சாதாரண வாழ்க்கை வாழமுடியும். எனக்குத் தெரிந்த சிலர், தங்களுக்கு ஒரு கிட்னிதான் இருக்கிறது என்பது தெரியாமலேயே அறுபது வயதுக்குமேல் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் இறக்கும் வரையில்கூட, அந்த விஷயம் அவர்களுக்குத் தெரிய வருவதில்லை. காரணம், ஆரோக்கியமாக, சாதாரண மனிதர்கள் போலவே அவர்கள் உடல்நிலை இருப்பதால்தான்.

ஒரு கிட்னி இருப்பது கவலைக்குரிய, பிரச்னைக்குரிய விஷயமே இல்லை. நீங்களும் மற்றவர்களைப் போல திருமணம் செய்து கொள்ளலாம், தாம்பத்ய உறவில் ஈடுபடலாம். குழந்தை பெற்றுக்கொள்ளலாம். பயப்படத் தேவையில்லை. ஆனால், உங்களுக்கு அடிக்கடி தலைசுற்றல், கை, கால் வீக்கம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால், உங்கள் கிட்னியில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, அதனால்தான் அவை வருகிறதா என முதலில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். (கை, கால் வீக்கம், தலைசுற்றல் போன்றவை, வேறு ஏதாவது காரணங்களாலும் ஏற்படலாம்). கிட்னியில் பாதிப்பு இல்லாதபட்சத்தில், நீங்கள் தாராளமாக மற்றவர்களைப் போல் செயல்படலாம்.

ஆண்டுக்கு ஒருமுறை, மருத்துவரிடம் சென்று, ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் ஆகியவற்றைச் செய்துகொள்வது நல்லது. உங்களுக்குத் திருமணப் பேச்சு நடைபெறும் சமயத்தில், மாப்பிள்ளை வீட்டாரிடம் இதைப் பற்றிக் கூறவேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அறுவைசிகிச்சை மூலம் ஒரு கிட்னி அகற்றப்பட்டிருந்தால் அதைக் கூற வேண்டியது அவசியம். மற்றபடி, இயற்கையிலேயே ஒரு கிட்னி என்பதில் எவ்வித அபாயமும் இல்லை.’’

‘‘எனக்கு 21 வயதாகிறது. திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. பாவாடை கட்டும் இடத்திலும் மற்றும் வயிற்றுக்குக் கீழ்ப் பகுதியிலும் மிகவும் அரிப்பு எடுக்கிறது. அந்த இடமும் மிகவும் கறுப்பாக உள்ளது. ஐந்தரை வருடங்களாக இந்தப் பிரச்னை இருக்கிறது.

அரிப்பு எடுக்கும் இடம் புண் போல் ஆகி, மருந்து போட்டவுடன் காய்ந்து போகிறது. நான்கைந்து நாட்களில் மறுபடியும் இதே அவஸ்தை! கிரீம், மாத்திரை, மருந்து, ஆயுர்வேதம் என அனைத்தும் உபயோகப்படுத்தினேன். ஒன்றும் சரியாகவில்லை (மருத்துவரிடமும் காண்பித்தேன். ஆனால், தோல் டாக்டர் இல்லை!).

நான் வசிக்கும் இடம் கிராமப்பகுதி. தயவுசெய்து எனக்கு இந்த அவஸ்தையிலிருந்து விடைபெற வழி சொல்வீர்களா?’’

டாக்டர் ரத்னவேல்,தோல் சிறப்பு மருத்துவர், மதுரை:

‘‘நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில் சருமம் கறுப்பு நிறமாக மாறப் பொதுவான காரணங்கள் மூன்று:

ஒன்று | உராய்வு. பாவாடையை மிகவும் இறுக்கமாகக் கட்டுவதால், அந்த இடத்தில் அதிகப்படியான உராய்வு ஏற்பட்டு, அதனால் கறுப்பு நிறமாக மாறுவதுடன் அரிப்பும் ஏற்படும்.

இரண்டு | படர்தாமரை போன்ற நுண்ணுயிர் தொற்று. காற்றுப் புகாத மற்றும் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும் இடங்களில் இது ஏற்படும்.

மூன்று | வியர்வை. அதிகப்படியான வியர்வையினால் கிருமிகள் உருவாகி, சின்னச் சின்னக் கொப்பளங்கள் தோன்றி, பின் அந்த இடத்தையே கறுப்பாக மாற்றிவிடும்.

இந்தக் காரணங்களில் ஏதேனும் ஒன்றுதான் உங்கள் பிரச்னைக்குக் காரணமாக இருக்கும். அது, எது என்று கண்டு பிடித்து, அதை நிவர்த்தி செய்யுங்கள். மேலும், இந்த மூன்றில் உங்கள் பிரச்னைக்கு எது காரணமாக அமைந்தாலும், அதற்கு ‘Lobate-GM’ என்ற கிரீமை, ஒரு நல்ல தோல் மருத்துவரைக் கலந்தாலோசித்தபின், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்து காலை வேளையிலும், இரவிலும் பயன்படுத்தி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதோடு, அரிப்பும் அடங்கி, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கறுப்பு நிறமும் மறைந்துவிடும்!’’

நன்றி:- டாக்டர் துஸ்னா பார்க், டயட்டீஷியன், சென்னை:

நன்றி:-ஜென்சி ஷாம்னா, மகளிர் யோகா சிறப்பு பயிற்சியாளர், சென்னை:

நன்றி:-டாக்டர் சிவராமன், சிறுநீரகவியல் நிபுணர், சென்னை:

நன்றி:- டாக்டர் ரத்னவேல்,தோல் சிறப்பு மருத்துவர், மதுரை:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்