தொகுப்பு

Archive for the ‘பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்’ Category

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்


‘‘எங்கள் வீட்டில் தங்கி இருந்தபடி வேலைக்குப் போய் வருகிறான் என் தம்பி. அவனுக்கு வயது 30. என் மகள்மீது (அவளுக்கு 20 வயது) அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந் தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டான். ஆனால், அவள் மறுத்துவிட்டாள். அதிலிருந்து மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் ஆகிவிட்டான்.

அவனிடம் தற்போது சில கெட்ட பழக்கங்களும் வந்து விட்டன. நான் குளிப்பதை மாடியிலிருந்து பார்க்கி றான். சரியாகச் சாப்பிடு வதோ, தூங்குவதோ இல்லை. இது எனக்கு வேதனையாக உள்ளது.

அவனுக்கு என் மகளைத் திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவானா? இதற்கு வேறு என்ன வழி? அவனைத் திருத்த ஆலோசனை வழங்குங்கள்…’’

டாக்டர் எஸ்.கே.நம்பி, மனநல மருத்துவர், வேலூர்:

‘‘நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் அவருக்கு மனநோய் இருப்பதையே உணர்த்துகிறது. தவிர, அவர் அடிக்கடி தனிமையை விரும்புகிறாரா, வேலைக்கு ஒழுங்காகப் போகாமல் டிமிக்கி அடிக்கிறாரா என்பதையும் கவனியுங்கள். குளியலறையில் எட்டிப் பார்ப்பது, நார்மலான நடத்தையே அல்ல.

அவருக்கு உங்கள் மகளை கல்யாணம் செய்துவைத்தால் அவர் நார்மலாகிவிடுவார் என்று சொல்லமுடியாது. வலுக்கட்டாயமாக, உங்கள் மகளின் விருப்பத்துக்கு மாறாக மணம் முடித்துவைத்தால் அது விபரீதங்களைத் தான் உண்டாக்கும்.

உடனடியாக அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள். சிகிச்சை மற்றும் ஆலோசனையின் மூலம்தான் அவரை முற்றிலும் குணப்படுத்த முடியும்!’’

‘‘என் கணவருக்கு வயது 40. பல வருடங்களாக காலையில் எழுந்தது முதல் அவருக்கு அடிக்கடி தும்மல் வந்துகொண்டே இருக்கிறது. டாக்டரிடம் சென்றுவந்தால் ஒரு வாரம்தான் நன்றாக உள்ளார். பல பரிசோதனைகள் செய்து பார்த்துவிட்டோம். ஒரு குறையும் இல்லை என்றே சொல்கிறார்கள் டாக்டர்கள். ஒவ்வொரு முறையும் அடுக்கடுக்காக தும்மல் வந்து, ரொம்ப கஷ்டப்படுகிறார். என்ன காரணத்தினால் தும்மல் வருகிறது? அதை நிறுத்த முடியாதா?’’

டாக்டர். ஆண்டனி இருதயராஜ், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், சென்னை:

‘‘தும்மல் என்பது நம் மூக்கில் உண்டாகும் நமைச்சலினால் ஏற்படுவது. ஒருவகையில் தும்மல் என்பது, நமது மூக்குக்கு இயற்கை அளித்துள்ள பாதுகாப்பு அம்சம்.

உதாரணமாக, மூக்கினுள் மிளகாய்த்தூள் சென்றதும் தும்மல் வரும். மிளகாயின் காரம் நம் நுரையீரலுக்குள் சென்று கெடுதல் விளைவிப்பதைத் தடுக்கத்தான் இந்த தும்மல்! ஆனால், இதுபோன்ற நியாயமான காரணம் எதுவும் இல்லாமலும் தும்மல் வரும். அது அலர்ஜியின் விளைவு.

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் உடலுக்கு உள்ளேயும் இருக்கலாம். வெளியேயும் இருக்கலாம்.

சாப்பிடும் பொருள்கள், மூக்கினுள் போகும் தூசி, முடி, பஞ்சு மற்றும் கடினமான நெடி போன்றவற்றினால் ஏற்படுகிற அலர்ஜி வெளி காரணங்களால் வருவது. சாப்பிடும் பொருளால் அலர்ஜி என்றால், அந்தப் பொருளை சாப்பிடாமல் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு, தக்காளி சாப்பிட்டதும் அலர்ஜி ஏற்பட்டு தும்மல் வருகிறது எனில், தக்காளிக்கு ‘நோ’ சொல்லிவிட வேண்டும். அலர்ஜியை முறியடிக்க தடுப்பு மருந்தும் உண்டு.

உடலுக்குள் நிகழும் சில மாற்றங்களால் அலர்ஜி ஏற்படுகிறது எனில், சில சமயங்களில் அது உடல் வளர்ச்சியிலேயே சரியாகிவிட வாய்ப்பு உண்டு.

உங்கள் கணவருக்கு தும்மலுடன் மூக்கடைப்பும் இருந்தால், சிறு அறுவை சிகிச்சை மூலம் சதையை அகற்றி சரி செய்யலாம். அலர்ஜிக்கு வெறுமனே ஒரு வாரம் மட்டும் மாத்திரை சாப்பிட்டால் போதாது. அது ஏற்படும்போதெல்லாம் சாப்பிட வேண்டும். அலர்ஜி எதனால் வருகிறது என்பதை முறையான பரிசோதனை மூலம் கண்டுபிடித்து அந்த காரணத்தையே களைவதுதான் இதற்கு சரியான தீர்வு!’’

‘‘என் அம்மாவுக்கு 49 வயது ஆகிறது. இன்னும் மெனோபாஸ் ஏற்படவில்லை. திடீரென அவருக்கு உடம்பு முழுதும் வீக்கம் வந்து ரொம்ப வலியாக இருந்தது. டாக்டரிடம் காண்பித்ததில் ‘ஹைபோ தைராய்டு’ எனச் சொன்னார். இதற்கு ‘எல்-தைராக்ஸின்’ என்கிற மாத்திரை தினமும் பாதி மட்டும் சாப்பிடுகிறார். அவருக்கு பி.பி\யும் சர்க்கரையும் உள் ளது. இதனால் வேறு ஏதும் பிரச்னை வருமா? என்ன டயட் எடுத்துக் கொள்வது என்பது பற்றி தெளிவாகக் கூறுங் களேன்…’’

டாக்டர் வீணா, மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:

‘‘தைராய்டு சுரப்பியிலிருந்து தைராக்ஸின் குறைவாகச் சுரப்பதினால் ஏற்படும் பிரச்னைக்கு ‘ஹைபோ தைராடிஸம்’ என்று பெயர். இதனால் உடலின் எடை சற்று அதிகரிக்கும். உடலில் வலி ஏற்படும். தூக்கம் அதிகம் வரும். மலச்சிக்கல், முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இதற்கு உங்கள் தாயார் எடுத்துக் கொள்கிற மாத்திரைதான் சரியான தீர்வு. இந்தப் பிரச்னைக்கு தனிப்பட்ட உணவுக் கட்டுப்பாடு ஏதும் கிடையாது. இருந்தாலும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி இருப்பதால் உணவில் உப்பைக் குறையுங்கள். முற்றிலுமாக தவிர்த்தால் ரொம்பவும் நல்லது…’’

‘‘எனக்கு வயது 27. என் கணவருக்கு வயது 28. திருமணமாகி நான்கு மாதங்களாகிறது. நாங்கள் என் கணவரின் பெற்றோருடன் வசித்து வருகிறோம். எங்கள் குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை காரணமாக குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். ஆனால், தற்போது கருத்தரித்து உள்ளேன். கருக்கலைப்பு செய்யலாம் என்றால் உறவினர்களும் தோழிகளும் ‘முதல்முறை கருக்கலைப்பு செய்தால், அதன்பிறகு குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லாமல் போகும் அபாயம் உண்டு’ என்கிறார்கள். எனக்குக் குழப்பமாக உள்ளது. உங்களது ஆலோசனைக்காகக் காத்திருக்கிறேன்…’’

டாக்டர் ரஜினி குமார், மகப்பேறு மருத்துவர், கோவை:

‘‘உங்கள் தோழிகளும் உறவினர்களும் சொல்வதே சரி. ஏனென்றால் கருக்கலைப்பு ஆபரேஷன் செய்யும்போது கர்ப்பப்பையின் இரண்டு புறமும் உள்ள ஃபெலோபியன் ட்யூபில் அடைப்பு ஏற்படும். அதன் காரணமாக மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, முதல் குழந்தைக்கு தாயாகும் முன்னரே கருக்கலைப்பு செய்வது வரவேற்கக் கூடிய விஷயமல்ல.

அதோடு, குழந்தை பெற்றுக்கொள்ள உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இதுதான் சரியான வயது. குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடவேண்டாம். செலவுகளை சுருக்கி, குழந்தைப் பிறப்பைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!’’

‘‘என் வயது 21. இரண்டே வருடங்களில் உடல்பெருத்து 45 கிலோவிலிருந்து 55 கிலோவாகி விட்டேன். சொதசொதவென தொப்பையுடன் இருக்கிற என்னைப் பார்க்க எனக்கே கவலையாக உள்ளது.

எனக்கு நிறைய சந்தேகங்கள்… தற்போது எனக்கு மாதவிலக்கு 4-5 நாட்கள் முன்னும் பின்னுமாக வருகிறது. இப்படி ஒழுங்கற்று இருப்பதால் ஏதேனும் ஹார்மோன் பிரச்னை இருந்து அதனால் எடை அதிகரிக்குமா?

ஆறு மாதங்கள் முன்புவரை எண்ணெய் அதிகமுள்ள உணவும், இனிப்பும் அதிகம் சாப்பிட்டு வந்தேன். இதனால் எடை கூடியிருக்க வாய்ப்பு உள்ளதா? ஆனால், இப்போது அவற்றை முற்றிலும் நிறுத்தி விட்டேன். அப்படியும் எடை கூடுகிறதே, ஏன்? அடிக்கடி மலச்சிக்கல் பிரச்னை வேறு.

எடை குறைக்க டானிக் குடிக்கலாமா? உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன் றவை பயனளிக்குமா? அப்படியே என் முகத்தைக் கெடுக்கும் பருக்கள் மறைய வழிசொல்லுங்கள்…

எனக்கு வீட்டில் வரன் தேடுகிறார்கள். அதற்கு முன் பழைய எடையை திரும்பப் பெற உதவுங்கள்…’’

டாக்டர் பி.வி.தனபால், பொது மருத்துவர், ராசிபுரம்:

‘‘கடிதத்தில் நீங்கள் விரிவாகக் குறிப்பிட்டிருக்கும் விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, உங்கள் எடை சரியான விகிதத்தில்தான் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை குறைய வாய்ப்பில்லை. மகப்பேறு மருத்துவ நிபுணரையோ அல்லது நாளமில்லா சுரப்பி நிபுணரையோ (என்டோகிரனாலஜிஸ்ட்) அணுகி, ஹார்மோன் பிரச்னை உள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுவதே நல்லது.

கொழுப்பு உள்ள உணவுப் பண்டங்களையும் இனிப்பு, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் சாப்பிடுவதால் கண்டிப்பாக எடை அதிகரிக்கும். நீங்கள் இவற்றை நிறுத்தினது மட்டும் போதாது. தொடர்ந்த உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைக்கும். நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, நடைபயிற்சி போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம்.

முகப்பருக்கள் வராமல் தடுக்க: எண்ணெயில் பொரித்த உணவு வகைகளையும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளையும் தவிர்த்து, வேக வைக்கப்பட்ட உணவை சாப்பிடுங்கள்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க: அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கள், கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். காலைக்கடனை உரிய நேரத்தில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்…’’

‘‘என் மகளின் வயது 26. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக, கைகளில் வெள்ளைத் தழும்புகள் இருக்கின்றன. முதலில் ஒரு பைசா அளவில் ஒன்று மட்டும் இருந்தது. இப்போது, இடுப்புக்குக் கீழிருந்து, கால்கள், பாதம் வரை 2 கால்களிலும் வில்லை வில்லையாக, 3 அங்குல நீளத்தில் உள்ளது. இது வெண்குஷ்டத்தில் சேர்ந்ததா? ஆங்கில வைத்திய முறையில் எந்த டாக்டரை அணுகலாம்? குணமாக எத்தனை நாளாகும்? எவ்வளவு செலவாகும்?’’

டாக்டர் ஜி.செந்தமிழ்ச் செல்வி, தோல் சிறப்பு நிபுணர், சென்னை:

‘‘இந்தப் பிரச்னைக்குப் பெயர் ‘விடிலைகோ’. இதை வெண்குஷ்டம் என்று சொன்னாலும், தொழுநோய்க்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

நமது தலைமுடி எப்படி நரைத்துப் போகிறதோ, அதேபோல் தோலில் சில இடங்கள் வெளுக்கிறது. தோலுக்கு நிறத்தைக் கொடுக்கக்கூடிய மெலனின் நிறமிக்குள் இருக்கும் மெலனோசைட் செல்கள் சில இடங்களில் மட்டும் அழிந்து போவதால் இந்த வெள்ளை நிறம் உண்டாகிறது. இந்த செல்கள் அழிவதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இது, அழகு சம்பந்தப்பட்ட ‘காஸ்மெடிக் பிராப்ளம்’ என்பதைத் தவிர, தொற்றுநோய் அல்ல. உயிருக்கு ஆபத்தானதும் இல்லை.

இதை ஓரளவுக்கு குணப்படுத்த வாய்ப்பு உண்டு. தோல் வைத்தியரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ‘இத்தனை நாள்களில் குணமாகும்’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. 6 மாதங்களிலிருந்து, ஒரு வருடம் வரை ஆகலாம். மருந்துகளும் அதிக விலையில்லை.

ஒரு இடத்தில் மட்டும் நீண்ட நாட்களாக இருக்கும் ‘ஸ்டேபிள் விடிலைகோ’வுக்கு, மருத்துவர் ஆலோசனையுடன், ‘காஸ்மெடிக் சர்ஜரி’ செய்யலாம். ஆனால், பரவக்கூடிய விடிலைகோவுக்கு இந்த சிகிச்சை பயனளிக்காது…’’

நன்றி:- டாக்டர் எஸ்.கே.நம்பி, மனநல மருத்துவர், வேலூர்:

நன்றி:- டாக்டர். ஆண்டனி இருதயராஜ், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், சென்னை:

நன்றி:- டாக்டர் வீணா, மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:

நன்றி:-  டாக்டர் ரஜினி குமார், மகப்பேறு மருத்துவர், கோவை:

நன்றி:- டாக்டர் பி.வி.தனபால், பொது மருத்துவர், ராசிபுரம்:

நன்றி:- டாக்டர் ஜி.செந்தமிழ்ச் செல்வி, தோல் சிறப்பு நிபுணர், சென்னை:

நன்றி:- அ.வி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்