இல்லம் > எஸ்டேட் பிளானிங் > எஸ்டேட் பிளானிங் – தெளிவா இருக்கும்போதே இதைச் செஞ்சுடுங்க! – எஸ்.ராஜசேகரன்

எஸ்டேட் பிளானிங் – தெளிவா இருக்கும்போதே இதைச் செஞ்சுடுங்க! – எஸ்.ராஜசேகரன்


மேலை நாடுகளில் எஸ்டேட் பிளானிங் என்பது பிரபலம். நம் நாட்டில் இப்போதுதான் இது பற்றிய விழிப்பு உணர்வு படிப்படியாக ஏற்பட்டு வருகிறது. அது என்ன எஸ்டேட் பிளானிங்?

எஸ்டேட் பிளானிங் என்பது ஒருவரது மறைவுக்குப் பின்னால் அவருக்குச் சொந்தமான சொத்தை எந்தப் பிரச்னையும் வராமல் வாரிசுகள் அனுபவிக்க முன்கூட்டியே தெளிவாக முடிவெடுத்து அதற்கான ஆவணத்தை எழுதி வைப்பதாகும். எல்லோருக்கும் சட்டென புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், உயில் எழுதி வைப்பது.

பொருளாதார வளர்ச்சியின் காரணமாகவும், சமூக மாற்றங்களின் காரணமாகவும், இன்றைக்கு கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, தனிநபர் குடும்பமாக மாறி வருகிறது. இந்நிலையில், நாம் அரும்பாடுபட்டுச் சம்பாதித்த சொத்தை சரியாகத் திட்டமிட்டு, முன்

எச்சரிக்கையோடு நாம் விரும்பும் வாரிசுகளுக்கு முறையாக பகிர்ந்து அளிப்பதன் மூலம் அந்த சொத்தை இன்னும் அதிக வளர்ச்சி அடைய வைக்க முடியும். அதற்கு கட்டாயம் தேவை இந்த எஸ்டேட் பிளானிங்.  

மேலும், ஒருவரது சொத்து யாருக்குப் பயன்பட வேண்டும் என்று நினைக்கிறோமோ, அவருக்கே போய்சேர வழி செய்து தருவதும் எஸ்டேட் பிளானிங்கில் முக்கியமான அம்சம். இதனால் நாம் விரும்பும் நபர் எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளாமல் அந்த சொத்தை நிம்மதியாக அனுபவிக்க வழி செய்கிறது.

உயில்!

எஸ்டேட் பிளானிங் என்பதில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது ‘வில்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற உயில். உயில் என்பது அசையும், அசையா சொத்தை, தான் விரும்பியவாறு முறையாக எழுதிக் கொடுக்கும் ஆவணமாகும். இவ்வாறு எழுதும் ஆவணம் சட்டத்திற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். இப்படி வாரிசுகளுக்கு சொத்தை எழுதிக் கொடுக்கும் முறை உலகில் ரோமானிய காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வழக்கமாக நடந்து வருகிறது.

உயில் எழுதி வைத்தால் சொத்துகள் வாரிசுகளுக்குக் கிடைக்குமா என கேள்வி கேட்பவர்கள் இன்னும்கூட அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஏன் உயில் எழுதி வைக்க வேண்டும் என்பதற்கு இரு முக்கிய சம்பவங்களைச் சொல்கிறேன்.

ஒருவர் தன் மறைவுக்குப் பிறகு சொத்து அனைத்தும் துணைவியாருக்குச் சேர வேண்டும் என்று விரும்பினால் அவர் உயில் எழுதி வைத்தால்தான் முழுமையாகச் சேருமே தவிர, இயல்பாக போய் சேர வாய்ப்பில்லை. உயில் எழுதவில்லை என்கிறபட்சத்தில் பிள்ளைகள் பிரித்துக்கொண்டு மனைவிக்கு கொடுக்காமல்கூட விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகள் பொறுப்பாக இல்லை; மனைவி பொறுப்பாக பார்த்துக்கொள்வார்; அவர்களுக்குப் பிறகு பிள்ளைகளுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்று நினைக்கிறபட்சத்தில் உயில் எழுதுவது கட்டாயம்.

உயில் எழுதும்போது ஒரு நபருக்கு உள்ள இரண்டு குழந்தைகளில் ஒன்று ஊனமாகவோ இருந்தால், அந்தக் குழந்தைக்கு அதிகமான சொத்தை விருப்பம்போல் எழுதி வைக்கலாம். அப்படி இல்லை என்றால் சட்டம் இரு குழந்தைகளுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்க நேரிடும். ஆகவே, உயில் எழுதுவது அவசியம்.

இந்தியாவில் கிராமத்து மக்களைவிட நகரத்தில் வசிப்பவர்கள் உயில் எழுதி வைக்கும் பழக்கம் இல்லாததால் அவதிப்பட நேரிடுகிறது. இதற்கு காரணம், சொத்தை பிரித்தால் சொந்தம், உறவு பிரிந்துவிடுமோ அல்லது சண்டை வருமோ என்ற மனக் குழப்பம்தான். இதனால், உயில் எழுதாமலே இறந்துவிடும் நிலையில், சொத்து உள்ளவர் இறந்தபிறகு வாரிசுகளுக்கு மனஉளைச்சல், சகோதர – சகோதரிகளுக்குள் சண்டை என அவதிப்பட வேண்டியுள்ளது. அது மட்டுமின்றி கோர்ட்டுக்கு போய், பல வருடங்கள் அலைந்து கடைசியில் மனக்கசப்பே மிஞ்சுகிறது. இதனைத் தவிர்க்க ஒரே வழி, சிரமம் பாராமல் உயில் எழுதி வைத்துவிடுவதுதான்.

உயில் வகைகள்!

தனிநபர் உயில்:

தனிநபர் யாருடைய ஆலோசனையும் இல்லாமல், தானே சிந்தித்து சுயமாக முடிவெடுத்து எழுதுவது தனிநபர் உயில்.

கூட்டு உயில்:

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பலரும் சேர்ந்து முடிவு செய்து ஆவணத்தை முறைப்படி தயாரித்து எழுதும் உயில், கூட்டு உயில். இது சட்டத்திற்கு உட்பட்டு அமைதல் வேண்டும். மேலும் எழுதி வைத்தவர் இறந்தபிறகு நடுநிலையாகச் செயல்படுபவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் ஆன ஒருவரை நியமனம் செய்தல் வேண்டும். இல்லாவிட்டால் சேர்ந்து எழுதிவைத்த அனைவரும் இறந்தபிறகுதான் நியமனதாரர் செயல்பட முடியும்.

உயில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து எழுதியிருந்தால் கணவனோ அல்லது மனைவியோ இறக்க நேரிட்டுவிட்டால், உயிரோடு இருக்கும் கணவர் அல்லது மனைவி, உயில் தொடர்பான புரோபேட் (ஜீக்ஷீஷீதீணீtமீ) கோர்ட்டில் உயிலை சமர்பிக்க வேண்டும். புரோபேட் கோர்ட்டில் உயிலின்படி, நியமனதாரர் மூலமாகச் சொத்து பகிர்ந்து அளிக்கப்படும்.

பரஸ்பர உயில்:

பரஸ்பர உயில் என்பது இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து தயாரித்த உயில் ஆவணம். இதில் ஏதேனும் மாற்றி அமைக்க விரும்பினால் எழுதிய அனைவருடைய ஒப்புதல் பெற்றபிறகே திருத்தம் செய்ய இயலும். இவ்வாறு எழுதிய உயில், முக்கியமாக சொத்தில் சம பங்கு உரிமம் உள்ளவரால் உருவாக்கப்படுவதாகும்.

நிபந்தனை உயில்:

உயில் எழுதுபவர் சில நிபந்தனைகளை குறிப்பிட்டு எழுதுவது நிபந்தனை உயில். அப்படி நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் அந்த உயில் சட்டத்தின் முன் செல்லாது.

நகல் உயில்:

உயில் எழுதிய நபர் அசல் பிரதியை பாதுகாப்பாக தன்னிடமும் நகல் பிரதியை நியமனதாரரிடம் கொடுத்து வைப்பது நகல் உயில். உயில் எழுதுபவர் உயிலின் பாதுகாப்புக் கருதி அசலும் நகலும் ஒரே மாதிரி இருக்குமாறு உருவாக்கியிருத்தல் மிக அவசியம். ஏனெனில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அசல் உயில் பிரதி தவறிவிட நேர்ந்தால், நகலை வைத்து திரும்பவும் புதிதாக வேறு உயில், வேறு மாதிரி உருவாக்கிவிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் அத்தனை ஆவணப் பக்கங்களிலும் முறையாக கையப்பம் இடுவது அவசியம்.

கன்கரன்ட் உயில்!

ஒருவருக்கு வெவ்வேறு ஊர்களில் சொத்து இருக்குமானால் தனித் தனியாக குறிப்பிட்டு தனித்தனியே எழுதி வைக்கும் உயிலை கன்கரன்ட் உயில் என்பர். அப்படி எழுதின உயிலின் சொத்தினை ஒன்றை ஒன்று சம்பந்தபடுத்தாமல் இருப்பது அவசியம்.

லிவ்விங் உயில்:

இயற்கைக்கு மாறுபட்ட அல்லது நீண்ட நாள் குணமாக்க முடியாத நோயாளியாக இருந்து இறக்கும் தருவாயில் அவர் வாயால் சொல்ல சொல்ல, மருத்துவர் எழுதக்கூடிய ஆவணமாகும். அவ்வாறு எழுதப்படும் உயில் இந்திய சட்டத்திற்கு உட்படுவதில்லை. மேலும், இது கோர்ட்டிலும் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதால் உடல் நலம் பாதிக்கும் அறிகுறி இருக்கும்போதே உயில் எழுதிவிடுவது அவசியம்.

ஹலோகிராப் உயில்:

உயில் எழுதும் நபர், அவரே கைப்பட எழுதுவது ஹலோகிராப் உயில். முக்கியமாக, சொற்களும் / உள்கருத்து / உண்மை நிலையை கூறுவதாக இந்த உயில் இருப்பது அவசியம். குழப்பத்தைத் தவிர்க்க, புரியும்படியும் மற்றவர்கள் படிக்கும் வகையிலும் இருப்பது நல்லது.

வாய்மொழி உயில்:

இத்தகைய உயில் ஒரு தனிநபர் நாட்டுக்காக போரிலோ/ விமான விபத்திலோ/ கப்பல் விபத்திலோ இறக்க நேரிடலாம்; அப்படி இறக்கும் தருவாயில் சக ஊழியரிடம் எடுத்துரைக்கும் பேச்சின் மூலமாகவோ, எழுத்து மூலமாகமோ கூறியதை முறையாக எடுத்துரைக்கப்பட்டு அதன்படி செயல்படுத்தப்படும். இப்படி எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் காரணத்தினால் மேற்கண்டபடி உயில் எழுதலாம்.

பதிய வேண்டுமா?

உயிலில் அசையும் சொத்தாக இருந்தாலும் அசையா சொத்தாக இருந்தாலும் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டிய அவசியமில்லை. பதிவு செய்தாலும் செய்யாவிட்டாலும் உயில் செல்லுபடியாகும். ஒருவர் உயிலை பதிவுசெய்ய விரும்பினால் எழுதியவரும் சாட்சியாளரும் சொத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம். உயில் பத்திரத்தாளில் இருக்க வேண்டியது அவசியம். இது பதிவாளர் அலுவலகத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்படும்.

மாற்றி எழுதினால்…?

ஒருவர் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவரே மாற்றி எழுத முடியும். அவ்வாறு திருத்தி எழுதும்போது எழுதுபவர், சாட்சியாளர், நியமனதாரர் கையப்பம் இடுதல் வேண்டும்.

தான் சேர்த்த சொத்தினை பகிர்ந்து அளிப்பதை சுமையாக கருதாமல் அதையே தனி மனிதனின் தலையாய கடமை என்று உணர்ந்து, சுய நினைவோடு இருக்கும்போதே உயில் எழுதி வைத்துவிட்டால், பிற்பாடு ஏற்பட இருக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முடிவு கட்டிவிடலாம்!

நன்றி:  எஸ்.ராஜசேகரன்

நன்றி:- நாணயம் விகடன்

பிரிவுகள்:எஸ்டேட் பிளானிங் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக