இல்லம் > இஸ்லாம், ரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம் > ரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்

ரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்


நோன்பின் முக்கியத்துவம்

‘ஸவ்ம்’  என்பதன் பொருள்: ‘தடுத்துக்கொள்ளல்’

தீய எண்ணங்கள், மனோ இச்சைகளிலிருந்து மனதைத் தூய்மையுறச் செய்தல்.

ஷைத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்தல்.

அளவுகடந்த உலகியல் ஆசைகளிலிருந்து மீளச்செய்தல்.

மரணத்தின் பின்னுள்ள வாழ்வு பற்றிய பிரக்ஞையை அதிகரிக்கச் செய்தல்.

ஏழைகளின் துன்ப துயரங்களை அனுபவபூர்வமாக உணரச் செய்து உதவும் மனப்பான்மையை வளர்த்தல்.

முழு வாழ்வையும் அல்லாஹ்வுக்காக அமைத்துக் கொள்ளல் வேண்டும் எனும் பயிற்சியை வழங்குதல்.

அல்லாஹ் மீதான பயபக்தியை அதிகரிக்கச் செய்தல்.

நோன்பின் அடிப்படை நோக்கம்

يَأيُّهَأالَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَي اَّلِذينَ مِن قَبلِكُم لَعَلَّكُم تَتًّقُونَ [١٨٣:سورة البقرة]

உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’.  (அல்குர்ஆன் 2:183)

ரமழானின் சிறப்பு

“ரமழான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன”   (அறிவிப்பவர் அபூஹுரைரா ரழி. ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1898)

அபூஹுரைரா (றழி) பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: “இறைதூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:  ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் ” என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1899)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “(அல்லாஹ் கூறினான்) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது. நோன்பைத் தவிர. ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பிய அளவிற்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன். மேலும் இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (றழி), ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 5927)


ரமழானை வரவேற்கத் தயாராவது எப்படி?

எதிர்வரும் ரமழானில் நற்செயல் புரிவதில் ஒரு கணத்தைக்கூட வீணாக்காமல் முழுமையான பயன்பாட்டைப் பெறுவதற்கு நாம் திட்டமிட வேண்டும். அதற்காக சில முன்னாயத்தங்கள் அவசியமாகின்றன.

ரமழானின் வருகையைப் பற்றி ஆசையூட்டுதல்

குடும்பத்தினர், அயலவர்கள், நண்பர்கள் மத்தியில் ரமழானுக்காகத் தயாராவது குறித்து ஆர்வமூட்டுதல்

குழந்தைகளிடம் ரமழானின் சிறப்புக்களை எல்லாம் எடுத்துக்கூறி, அதன் முக்கியத்துவத்தை அவர்களின் மனதில் பதியச் செய்தல்

எதிர்வரும் ரமழானில் முழுமையாக எல்லா நோன்புகளையும் நோற்கும் குழந்தைகளுக்கு பரிசு தருவதாகக்கூறி இப்போதிருந்தே ஊக்குவிக்கலாம்.

குழந்தைகளிடையே அதிக நோன்புகளை நோற்பது, குர்ஆனை அதிகம் ஓதுவது, குர்ஆன் ஸூறாக்கள் மனனம், அதிக ஹதீஸ் மனனம், இஸ்லாமிய அறிவு என்பவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகளை வைக்கலாம்.

அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதற்கும் மனனமிடவும் ஆசையூட்டுதல்

நோன்பும் அல்குர்ஆனும் மறுமை நாளில் அடியானுக்காகப் பரிந்துரை செய்யும். நோன்பு அல்லாஹ்விடம், ‘இரட்சகனே! நான் இந்த அடியானை உணவு முதலான விருப்பங்களிலிருந்து தடுத்துவைத்தேன். நான் இவனுக்காகப் பரிந்துரை செய்கின்றேன்’ என்று கூறும். அல்குர்ஆன் அல்லாஹ்விடம், ‘இரவுப் பொழுதுகளில் நான் இந்த அடியானை விழித்திருக்கச் செய்தேன். எனவே நான் இவனுக்காகப் பரிந்துரை செய்கின்றேன்’ எனக் கூறும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (ஆதாரம்: அஹ்மத், ஹாகிம்)

அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “எவரொருவர் அல்குர்ஆனை ஓதுகின்றாரோ அவருக்கு ஓர் எழுத்துக்கு பத்து நன்மை வீதம் வழங்கப்படும்” என அறிவித்தார்கள்.  (ஆதாரம்: திர்மிதி)

சிறுவர்களுக்கு நோன்பு நோற்கப் பயிற்சியளித்தல்

ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுவர்களிடையே பரிட்சார்த்தமாக நோன்பு நோற்கச் செய்யலாம்.

அவர்களை நம்மோடு ஸஹர், இஃப்தார் செய்ய வைக்கலாம்

அவர்களுக்கு முடியுமானவரை நோன்பிருந்துவிட்டு இடையில் விடுவதற்கு அனுமதிக்கலாம். இதன் மூலம், நோன்பு நோற்பதற்கான படிமுறைப் பயிற்சி அவர்களுக்குக் கிடைக்கும். நோன்பு பற்றிய அறிவும் அவர்களுக்குக் கிடைக்கும்.

பெண்கள் இஃப்தார் சிற்றுண்டித் தயாரிப்புக்கு அதிக நேரம் விரயமாக்கக் கூடாது

ரமழானின் பயனை அதிகம் அடைந்து கொள்வதை முதன்மைப்படுத்துதல்.

சமையலறையிலேயே நாளில் பெரும் பகுதியைக் கழித்து பர்ழான அமல்களையும் கோட்டை விடுவதைத் தவிர்த்தல்.

வேலை நேரத்திலும் திக்ர், இஸ்திஃபார், குர்ஆனில் மனனமுள்ள பகுதிகளை ஓதுவதை அதிகப்படுத்துதல்

“இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானதாகும். (நன்மை-தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி. (பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.)”     (ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 6406)

ரமழான் என்பது வயிறுமுட்ட சாப்பிடுவதற்கான மாதமல்ல

ஓரிரு சிற்றுண்டி வகைகளோடு மட்டும் போதுமாக்கிக் கொள்ளுதல்; முடியுமானால் கடையிலிருந்து தருவித்துக் கொள்ளுதல்.

ஆண்கள் இதற்குப் புரிந்துணர்வோடு ஒத்துழைப்பு வழங்குதல்.

பெருநாள் ஷாப்பிங்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுதல்

ரமழானின் இறுதிப் பத்தில் வரக்கூடிய லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்ளும் முனைப்பில் நாம் இருத்தல் வேண்டும்.

அதிகம் பாவமன்னிப்புத் தேடுவதிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ர் செய்வதிலும், இஃதிகாப் இருப்பதிலும் கழிக்கவேண்டிய நாட்களை கடைத்தெருவில் ‘ஷாப்பிங்’ செய்வதற்காகக் கழிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல் சிறப்பானது.

தான தர்மங்களை அதிகப்படுத்துதல்

“பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்றார்கள்.  (அறிவிப்பவர் : அதீ இப்னு ஹாத்திம் (றழி), ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1417).

எப்படி நோன்பு நோற்பது?

ரமழான் மாதம் முழுதும் காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல், புகைபிடித்தல் முதலான நோன்பை முறிக்கக்கூடிய அனைத்துச் செயல்களிலிருந்தும் முற்றாகத் தவிர்ந்திருந்து நோன்பு நோற்றல் கட்டாயக் கடமையாகும்.

நோன்பின் நிபந்தனைகள்

முஸ்லிமாக இருத்தல்.

பருவமடைந்திருத்தல்.

புத்தி சுவாதீனமுடையவராக இருத்தல்.

நோன்பை நிறைவேற்றுவதற்குச் சக்தி உடையவராக இருத்தல்.

ஊரில் தங்கி இருத்தல். (பிரயாணத்தில்  இல்லாதிருத்தல்)

நோன்பாளி ஒருவரின் செயல்கள்

நிய்யத் (எண்ணம்) வைத்தல்

நபி (ஸல்) அவர்கள், “எவர் ஒருவர் பஜ்ருடைய நேரத்துக்கு முன் நோன்புக்கான நிய்யத்தினை வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு நோற்றல் இல்லை”  )ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், இப்னு ஹூஸைமா, இப்னு ஹிப்பான்).

அல்லாஹ்வை அதிகம் நினைவுகூர்தல்

அப்துல்லாஹ் இப்னு அனஸ் (ரழி) அவர்கள் கூறுவதாவது, “நோன்பாளி ஒருவர் அதிகமதிகம் குர்ஆன் ஓதுவதிலும் துஆ, திக்ர்களிலும் ஸதகா கொடுப்பதிலும் ஈடுபடுவதோடு, தீயவற்றைப் பேசுவதிலிருந்து நாவைப் பாதுகாத்துக் கொள்வதும் இன்றியமையாததாகும்.”    (ஆதாரம்: திர்மிதி)

ரமழான் என்பது குர்ஆனின் மாதமாகும்

அல்லாஹ் சொல்கிறான்: “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக்  கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம் மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க  வேண்டும். எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).” (2:185 )

பாவங்களிலிருந்து தவிர்ந்துகொள்ளல்

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ, அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும். (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும் பானத்தையும் இச்சையையும் விட்டுவிடுகிறார். நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும் (என்று அல்லாஹ் கூறினான்)  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (றழி), ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1894)

ஸஹ்ர் செய்வதில் பரக்கத்

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது”       (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (றழி),       ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1923)

நோன்பு திறத்தல்

நன்கு பழுத்த பேரீச்சம் பழத்தினையோ நீரையோ அவ்வாறின்றேல் வேறேதேனும் உணவினையோ உட்கொள்வதன் மூலம் நோன்பு திறத்தல் சுன்னத் ஆகும். (ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, ஹாகிம்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!’  (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி, ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1957)

நோன்பு திறக்கும் போது

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ َثَبَتَ الْأَجْرٌ إِنْ شَاءَ اللَّهُ

“தஹபBல் ளமஉ வப்Bதல்ல(த்)தில் உரூவ்கு வஸபB (த்)தல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்”  (தாகம் தீர்ந்தது; நரம்புகள் நனைந்தன; அல்லாஹ் நாடினால் நன்மைகள் உறுதியாகிவிட்டன) (ஆதாரம்: அபூதாவுத், ஹாகிம், பைஹகி)

நோன்பாளிகளை நோன்பு திறக்க வைத்தல்

“யாரேனும் ஒருவர் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்வாரேயானால், அவர் அந்த நோன்பாளி பெற்ற அதேயளவு நன்மையைப் பெறுவார்.”   (ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், அஹ்மத்)

லைலத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்தல்

ரமழான் இறுதிப் பத்து நாட்களிலும் ஆயிரம் மாதங்களை விட உயர்ந்த லைலத்துல் கத்ர் இரவுக்காகத் தயாராகுதல். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி),  ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1901)

லைலத்துல் கத்ரின் மகத்துவம்

“நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனைக் கண்ணியமிக்க ஓர் இரவில் இறக்கிவைத்தோம்.” (அல் கத்ர்:1)

“அந்த கண்ணியமிக்க இரவின் மகிமையை  நீர் அறிவீரா?”     (அல் கத்ர் : 2)

கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மேலானதாகும்”  (அல் கத்ர் :3)

ரமழானின் இறுதிப் பத்து நாட்கள்

ரமழான் இறுதிப் பத்து நாட்களைப் பற்றி ஆயிஷா (ரழி) பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் வேறெந்த மாதத்தை விடவும் ரமழானின் இறுதிப் பத்து நாட்களும் வணக்கவழிபாடுகளுக்காக அதிக சிரமமெடுத்துக் கொள்பவார்களாக இருந்தார்கள்”  (ஆதாரம் : திர்மிதி)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!”  (அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி),  ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 2017

“(ரமழானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!”  (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி,  ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 2024)

லைலத்துல் கத்ர் இரவு

அன்னை ஆயிஷா (ரழி)அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘லைலத்துல் கத்ர் இரவை (இதுதான் என)அறிந்துகொண்டால் நான் எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும் எனக் கேட்டபோது, “அல்லாஹூம்ம இன்னக்க அஃபூவன் துஹிப்புல் அஃப்வஃ ஃபு அன்னி – யா அல்லாஹ்!’ (அல்லாஹ்வே! நீ எப்போதும் மன்னிப்பவனாக இருக்கின்றாய். நீ மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே, என்னையும் மன்னிப்பாயாக!) எனும் துஆவை ஓது மாறு பணித்தார்கள் ‘ (ஆதாரம்: திர்மிதி, இப்னு மாஜா)

ஸகாத்துல் பித்ர் கொடுத்தல்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமழான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக்காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள்  ‘குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்‘ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 3220 இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஃபாத்திமா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.)

உம்றா செய்தல்

இப்னு அப்பாஸ் (றழி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்… இப்னு அப்பாஸ் (றழி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான் அதை மறந்துவிட்டேன். என அவரிடமிருந்து அறிவிக்கும் அதா (றஹ்) கூறினார்: ‘நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?’ எனக் கேட்டார்கள். அதற்கவர்,” எங்களிடம் இருந்த தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும் (என்னுடைய கணவரும் மகனும்) ஏறிச் சென்று விட்டனர். இன்னொரு ஒட்டகத்தை விட்டுச் சென்றுள்ளனர். அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ரமழான் வந்துவிட்டால், அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமழானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்’ எனக் கூறினார்கள். அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹ்  புகாரி, ஹதீஸ் எண்: 1782)

இஃதிகாஃப்

ரமழான் இறுதிப் பத்து நாட்களும் மஸ்ஜிதில் தங்கி (இஃதிகாஃப்) இருத்தல்.

“நபி(ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!”  (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி, ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 2025)

“நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 2026)

இஃதிகாஃப் இருப்பதற்குரிய நிபந்தனைகள்

1. நிய்யத்

2. முஸ்லிமாக இருத்தல்.

3. புத்தி சுவாதீனமுடையவராக இருத்தல்.

4. பருவமடைந்திருத்தல்.

5. குளிப்புக் கடமையிலிருந்து நீங்கியிருத்தல்.

6. இஃதிகாஃப் இருக்கும் ஸ்தானத்தில் தரித்திருத்தல்

நோன்பு நோற்றுள்ள நிலையில் பல்துலக்குதல்

ஆமிர் இப்னு ரபீஆ (ரழி) கூறுவதாவது, “ நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் பலதடவை பல்துலக்கினார்கள்.” (ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத், திர்மிதி)

நோன்பாளி ஒருவர் கண்டிப்பாகத் தவிர்ந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்

பொய் பேசுதல்

கோள் சொல்லுதல்

புறம் பேசுதல்

கடுஞ்சொற்களைப் பிரயோகித்தல்

தீய செயல்களில் ஈடுபடுதல்


பொய்யும் அறிவீனச் செயலும்

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பொய்யான பேச்சையும் அறிவீனமான நடவடிக்கைகளையும் விட்டுவிடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை”  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (றழி),  ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1903)

நோன்பை முறிக்கும் செயல்கள்

நன்கு அறிந்துகொண்டே உணவு, பானங்களை உட்கொள்ளல் அல்லது அதுபோன்ற செயல்களில் ஈடுபடுதல். “யாரேனும் ஒருவர் மறதி காரணமாக உணவையோ பானத்தையோ உட்கொண்டு விட்டால் அவர் தனது நோன்பைக் கைவிடாது பூரணமாக்கட்டும். நிச்சயமாக அல்லாஹ்வே அவருக்கு உணவளித்தான்.” ‘ (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், திர்மிதி, நஸஈ).

வாய் வழியாகவோ அல்லது மூக்குத் துவாரம் மூலமாகவோ ஏதேனும் வயிற்றை அடைதல்.

வேண்டுமென்றே வலிந்து வாந்தியெடுத்தல் கூடாது.  “எவரேனும் வேண்டுமென்றே வாந்தி எடுப்பாரேயானால் அவர் அந்த நோன்பைக் ஷகழா’ச் செய்யவேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்   (ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, அஹ்மத்)

விந்து வெளியாதல்.  முத்தமிடுதல்- அணைத்தல் முதலான செயல்களால் விந்து வெளியாதல்.

இரத்தம் குத்தியெடுத்தல்

மாதவிடாய், பிரசவம் என்பனவற்றால் இரத்தம் வெளியேறுதல்

உடலுறவு கொள்ளுதல்.

நோன்பு நோற்பதிலிருந்து சலுகை பெற்றவர்கள்

“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம் மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).” (அல்குர்ஆன் 2:185)

நோயாளிகள்

பிரயாணிகள் “பிரயாணிக்கு நோன்பு நோற்றல் கட்டாயம் இல்லை” என்று நபி (ஸல்) நவின்றார்கள். (ஆதாரம்: முத்தஃபகுன் அலைஹி)

மாதவிடாய், பிரசவ ருது ஏற்படுதல்.  ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவதாவது, “மாதவிடாயினால் விடுபடும் நோன்புகளைப் பின்னர் “கழா”ச் செய்யுமாறு நாம் ஏவப்பட்டோம். ஆனால், விடுபட்ட தொழுகைகளைக் “கழா”ச் செய்யுமாறு ஏவப்படவில்லை”  (ஆதாரம்: முத்தஃபகுன் அலைஹி )

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்

வயோதிகர்

ஆபத்தான நிலைமைக்கு உட்பட்டவர்

நோன்பின் மகத்தான பயன்கள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1896)

நோன்பும் அல்குர்ஆனும் மறுமை நாளில் அடியானுக்காகப் பரிந்துரை செய்யும். நோன்பு அல்லாஹ்விடம், “இரட்சகனே! நான் இந்த அடியானை உணவு முதலான விருப்பங்களிலிருந்து தடுத்துவைத்தேன். நான் இவனுக்காகப் பரிந்துரை செய்கின்றேன்’என்று கூறும். அல்குர்ஆன் அல்லாஹ்விடம், ‘இரவுப் பொழுதுகளில் நான் இந்த அடியானை விழித்திருக்கச் செய்தேன். எனவே நான் இவனுக்காகப் பரிந்துரை செய்கின்றேன்” எனக் கூறும்.  (ஆதாரம்: அஹ்மத், ஹாகிம்)

உமாமா அல்பாBஹிலி (ரழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்விடத்தில் நன்மையைப் பெற்றுத்தரும் ஒரு செயலை அறிவிக்குமாறு நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு அன்னார், ‘நான் உம்மை நோன்பு நோற்குமாறு உபதேசிக்கின்றேன். அதற்கு ஒப்பான வேறொரு வணக்கம் இல்லை” என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: நஸஈ)

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:- “நோன்பானது ஒருவனை நரகைவிட்டும் காக்கும் கேடயமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள்குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: அத்தபBரானி ஃபில் கபீBர்).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- “நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவை நோன்புத் துறக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும் மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற மகிழ்ச்சியும் ஆகும் என அபூ ஹுரைரரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 7492)

“நம்பிக்கை கொண்டு (நற்கூலியை எதிர்பார்த்து) ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்” என்று இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (றழி) அறிவித்தார்.  (ஆதாரம்:ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 37)

நோன்பின் மூலம் கிடைக்கப்பெறும் பயிற்சி எவ்வாறு வாழ்க்கையை வளப்படுத்துகிறது?

என்னை வணங்குவற்காகவே அன்றி வேறெதற்காகவும் நான் மனு, ஜின் வர்க்கங்களைப் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 51:56)

என்ற இறை கட்டளையை உயிரோட்டமுள்ளதாக்கி, முழு வாழ்வையும் வணக்கமாக்குவதற்கு உரிய  பயிற்சியை வழங்குகிறது.

“உமக்கு யகீன் எனும் மரணம் வரும்வரையில் உமது இரட்சகனை வணங்கிக்கொண்டிருப்பீராக.’”          (அல்குர்ஆன் 15:99)

நோன்பு தந்த பயிற்சியினால் உள்ளங்களில் தக்வா அதிகரித்து வணக்க வழிபாடுகளில் அதிக ஆர்வமும் ஊக்கமும் ஏற்படுதல்.

தொடர்ச்சியான செயற்பாடு

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (ரமழான் மாதத்தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக் கொண்டு (அதில்) தொழுவார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக்கொண்டு அதன் மீது அமர்வார்கள். மக்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் (இவ்வாறு இரவில் வந்து தொழும்) மக்கள் (எண்ணிக்கை) அதிகமாகி விடவே, நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, ‘மக்களே! உங்களால் இயன்ற (நற்)செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில்,நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்’ என்றார்கள். (ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 5861)

சுன்னத்தான நோன்புகள்

ஷஃபான் மாத நோன்பு:-

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  “நபி (ஸல்) அவர்கள் ஷஃபான், அதையடுத்து வரும் ரமழான் ஆகிய இருமாதங்களிலும் நோன்பு நோற்பதை மிக விரும்பினார்கள்” (ஆதாரம்: அபூதாவுத், நஸஈ, அஹ்மத்)

“நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் தவிர்ந்து அதிகமாக நோன்பு நோற்ற மாதம் ஷஃபான்  ஆகும்”                (முத்தஃபகுன் அலைஹி)

விடுபட்ட நோன்புகளைக் கழாச் செய்தல்

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எனக்கு ரமழான் மாதத்தில் விடுபடும் நோன்புகளைக் கழாச் செய்துகொள்ள ஷஃபான் மாதத்தைத் தவிர வேறு மாதங்களில் அவகாசம் கிடைப்பதில்லை.” (ஆதாரம்: முத்த.பகுன் அலைஹி)

ஷவ்வால் மாத நோன்பு

ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத் ஆகும். “எவரேனும் ஒருவர் ரமழானில் நோன்பு நோற்றபின் அதையடுத்த ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்றாரோ அவர் அந்த வருடம் முழுவதும் நோன்பு நோற்றதாகக் கருதப்படுவார்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.                    (ஆதாரம்: முஸ்லிம்).

ஆஷூரா தின நோன்பு

இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் சுன்னத்தான நோன்பின் சிறப்புப் பற்றி நபிஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: “ரமழானின் (நோன்புக்குப்) பின் மிகச் சிறந்தது முஹர்ரம் மாதத்தில்நோற்கும் நோன்பாகும்” (ஆதாரம்: முஸ்லிம்). (

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: “நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான்நோன்பு கடமையாக்கப்பட்டதும் விரும்பியவர் ஆஷூரா நோன்பு நோற்றனர்; விரும்பாதவர் விட்டுவிட்டனர்!” (ஸஹீஹ்புகாரி, ஹதீஸ் எண்: 2001)

நபி (ஸல்) அவர்கள்: “ஆஷூரா நோன்பானது கடந்து போன வருடத்தின் அனைத்துப் பாவங்களுக்கும் பிராயச் சித்தமாகஅமைந்துவிடுகின்றது” என்றார்கள்.  (ஆதாரம்: முஸ்லிம்)

அரஃபா தின நோன்பு

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, “அரஃபா நோன்பானது கடந்து போன வருடத்தினதும் பிறக்கவுள்ள வருடத்தினதும்பாவங்களுக்கான பிராயச் சித்தமாக அமைந்துவிடுகின்றது” என்றார்கள்.  (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸஈ, இப்னுமாஜா).

ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள்

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதாக இருந்தால் பிறை 13,14,15 ஆகியஅய்யாமுல் பீல்) நாட்களில் அதனை நிறைவேற்றுங்கள்” என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி, நஸஈ). (

திங்கள், வியாழக் கிழமைகள்

திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு நோற்பது சுன்னத் ஆகும். “திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அடியானின் வணக்கவழிபாடுகள் சமர்ப்பிக்கப்படும். அதனால், நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் எனது நற்செயல்கள் அல்லாஹ்வின் முன் சமர்ப்பிக்கப்படுவதையே விரும்புகின்றேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸஈ).

ஒரு நாள் விட்டு ஒருநாள்

“நோன்புகளில் சிறந்தது நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அன்னார் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்றார்கள்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

இறைதிருப்தியைப் பெறுவோம்!

அதிகமதிகம் நல்லமல் செய்வோம்

பாவமான செயல்களை விட்டும் தவிர்ந்துகொள்வோம்

அதிகமதிகம் பாவமன்னிப்புக் கோருவோம்

அல்லாஹ்வை எந்நேரமும் திக்ர் செய்வோம்

ரமழானில் பெற்ற பயிற்சியை வாழ்நாள் முழுதும் கடைபிடிப்போம். அல்லாஹ் நம் அனைவர் பணிகளையும் பொருந்திக்கொள்வானாக!

நன்றி:- தொகுத்த லறீனா அப்துல் ஹக்

பிரிவுகள்:இஸ்லாம், ரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s