தொகுப்பு

Posts Tagged ‘உண்ணலில் உயர்வு!’

உண்ணலில் உயர்வு! – மு.அ. அபுல்அமீன் நாகூர்

ஜூலை 2, 2013 1 மறுமொழி

f2

உண்ணும் உணவே உடலுக்கு வலிவையும் பொலிவையும் தருகிறது. அதற்கொப்ப நோயின்றி வாழ உடலில் வலிவும் மற்றவர்களிடம் மதிப்போடு வாழ பொலிவும் வேண்டும். அதற்கேற்ற உணவை உண்பது உண்ணலின் உயர்வு.

முதலில் நாம் உண்ணும் உணவு சுத்தமானதாக இருக்க வேண்டும். இன்று கண்ட இடங்களில் துண்டு துண்டாக விற்கப்படும் தூய்மையற்ற உணவுகளை உண்ணக்கூடாது என்பதை அல்குர்ஆனின் 2-172வது வசனம் “நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானதைப் புசியுங்கள்” என்று கூறுகிறது.

பால் ஒரு சுத்தமான இனிய உணவு என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 16-66வது வசனம். “கால்நடைகளின் வயிற்றில் உள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து, அருந்துபவர்களுக்கு இன்பமான தூய பாலை உங்களுக்கு புகட்டுகிறோம்”.

சுத்தத்தின் செயலாக உணவு உண்ணும் முன்னும் உண்ட பின்னும் கை கழுவுவதையும் பாத்திரங்களைக் கழுவி வைப்பதையும் வற்புறுத்தினார்கள் நபி(ஸல்) என்று சல்மான் பார்ஸி(ரலி) அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது.

உண்ணும் உணவு நேரிய வழியில் ஈட்டியதாக இருக்க வேண்டும். புறம்பான வழியில் பெற்றதைப் புசிக்காதீர்கள் என்கிறது திருக்குர்ஆனின் 2-188வது வசனம். “”உங்கள் பொருட்களை உங்கள் மத்தியில் அநீதியாகப் புசிக்காதீர்கள். இன்னும் நீங்கள் அறிந்துகொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியைப் பாவமான முறையில் புசிக்கும் பொருட்டு வழக்காடாதீர்கள்”.

ஒருவரின் பொருளை பலவந்தமாகவோ, கொள்ளையிட்டோ, திருடியோ, சூதாடியோ, பந்தயம் வைத்தோ, பொய் வழக்கு தொடுத்தோ தனக்கு உரிமையாக்கிக்கொண்டு சாப்பிடுவது சாபக் கேடானது என்பதையே மேற்குறிப்பிட்ட குர்ஆனின் வசனம் எடுத்துரைக்கிறது.

எம்பெருமானார் (ஸல்) எவ்வுணவையும் எப்பொழுதும் குறை கூறவில்லை. விரும்பும் உணவை உண்பார்கள். விரும்பாததை உண்ண மாட்டார்கள் என்று அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததை “புகாரி’யில் காணலாம்.

எனினும் ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் பழம், காய்கறிகளை விரும்பி உண்டதை விளம்புகிறார்கள் உளமொத்த நபிகளாரின் உத்தம தோழர்கள். ஒரு தையல்காரர் அளித்த விருந்தில் தொலிக் கோதுமை ரொட்டியும் தொட்டுக்கொள்ள உப்புக்கண்டமும் சுரைக்காயும் கலந்து காய்ச்சிய குழம்பும் இருந்தன. அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பாத்திரத்தின் ஓரத்தில் சுரைக்காயைத் தேடி எடுத்துப் புசித்ததைப் பார்த்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பது புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது.

சீராய் உண்டால் சிலரின் சாப்பாடு பலருக்கும் பயன்படும். இருவரின் உணவு நால்வருக்கும் நால்வரின் உணவு எண்மருக்கும் போதுமானதென்று போதகர் முஹம்மது (ஸல்) அவர்கள் போதித்ததை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பது முஸ்லிம், திர்மிதீ நூல்களில் காணலாம்.

உண்ணத் f1துவங்குகையில் உள்ளத்தில் உறையும் இறைவனை எண்ணித் துதித்து, உண்டபின் உணவளித்த இறைவனுக்கு உளமார நன்றி நவின்று நம்மையும் அவ்வாறே நடந்திட பணித்தார்கள் நபி முஹம்மது(ஸல்) அவர்கள்.

ஏந்தல் நபி எடுத்துக் காட்டியபடி எவ்வுணவையும் எள்ளாது ஏற்று எளிய முறையில் பலருக்கும் பயன்படும்படி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி  27 June 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.