தொகுப்பு

Posts Tagged ‘வெரி வெரி டேஸ்ட்டி பிரியாணி’

30 வகை சைவ பிரியாணி!


கமகமக்கும் மணத்துடன், நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டி, ‘இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டு சாப்பிட வைக்கும் உணவு வகைகளில் பிரியாணிக்கு தனி இடம் உண்டு. ‘இன்னிக்கு ஸ்பெஷல் அயிட்டம் பண்ணப் போறேன்’ என்றாலே,  ‘பிரியாணிதானே?’ என்று வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கேட்கும் அளவுக்கு சுவையால் அனைவரையும் கட்டிப்போடும் பிரியாணியில் 30 வகைகளை அள்ளித் தந்து அசத்துகிறார் சமையல் கலை நிபுணர் கலைச்செல்வி சொக்கலிங்கம்.

”பனீர் பிரியாணி, காளான் பிரியாணி, மண்சட்டி பிரியாணி, மசாலா ஜூஸ் பிரியாணி என்று வித்தியாசமான, வகை வகையான பிரியாணிகளை செய்து காட்டியுள்ளேன். செய்து பரிமாறுங்கள்… குடும்பத்தினரால் கொண்டாடப்படுவீர்கள்” என்று உறுதி கூறும் கலைச்செல்வியின் ரெசிபிகளை, கலைநயம் பொங்க அலங்கரித்திருக்கிறர் ‘செஃப்’ ரஜினி. 


நட்ஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பாதாம், முந்திரி – தலா 50 கிராம், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 10 பல், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் 2 டீஸ்பூன். சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, கிராம்பு, ஏலாக்காய் – தலா 2.

ராய்தா செய்ய: வெங்காயம் – 2, தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று, வெள்ளரிக்காய் – சிறு துண்டு, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், இஞ்சி – சிறிதளவு, தயிர் – ஒரு கப், கடுகு, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன்,  நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நன்கு வதங்கியபின் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் விட்டு கலந்து, தண்ணீர் கொதித்தபின் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் பாதாம், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து சேர்த்து இறக்கவும். ராய்தாவுடன் பரிமாறவும்.

ராய்தா செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி, உப்பு போட்டு பிசிறி, தனியாக வைக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கவும். தேங்காய், இஞ்சி இரண்டை யும் சேர்த்து அரைக்கவும். பிசிறி வைத்த வெங்காயத்தை பிழிந்து கொள்ளவும். இதனுடன் தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், தேங்காய் – இஞ்சி விழுது சேர்த்து, எல்லாவற்றையும் தயிருடன் சேர்த்துக் கலக்கவும். எண்ணெ யில் கடுகு தாளித்து இதனு டன் சேர்க்கவும்.

இந்த ராய்தா, எல்லா பிரியாணிகளுக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.


புதினா பிரியாணி

தேவையானவை: பசுமதி அரிசி – 250 கிராம்,  வெங்காயம் – ஒன்று, தேங்காய்ப் பால் – அரை கப், தயிர் – 2 டீஸ்பூன், உரித்த பச்சைப் பட்டாணி – கால் கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு –  தேவையான அளவு.

அரைக்க: புதினா – 2 கைப்பிடி அளவு, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 3, பட்டை – 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல்.

செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் மிதந்து வரும் வரை வதக்கி, தேங்காய்ப் பால், தயிர் சேர்த்து வதக்கவும். பிறகு, பட்டாணி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, கொதித்தும் ஊற வைத்த அரிசி சேர்த்து, வெந்ததும் இறக்கி பரிமாறவும்.


காளான் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், காளான் – 10, வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பட்டை – 2 துண்டு, பூண்டு – 10 பல், கிராம்பு – 2, மிளகு, மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், ஏலக்காய் – 2.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, காளான், உப்பு, புதினா, கொத்தமல்லி எல்லாம் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். அதன்பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ஊற வைத்த அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


பட்டாணி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, தயிர் – 3 டீஸ்பூன், பச்சைப் பட்டாணி – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், பட்டை – 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்த விழுது சேர்த்து, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், பச்சைப் பட்டாணி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். ஊற வைத்த அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


தக்காளி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், சீரகம் – அரை டீஸ்பூன், நாட்டுத்தக்காளி – 5, பச்சை மிளகாய் – ஒன்று, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் குக்கரை வைத்து… எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகத் தொக்காக வதக்கி கொத்தமல்லி சேர்க்கவும். பின்னர் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரிசியை சேர்த்து மூடி, ஒரு விசில் விட்டு 5 நிமிடம் சிறிய தீயில் வைத்து இறக்கிப் பரிமாறவும்.


வெங்காய பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்கா யம் – 2 (பொடியாக நறுக்க வும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 10 பல்.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன் னிறமாக வதக்கி, உப்பு,      மஞ்சள்தூள் சேர்க்கவும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும், அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


தேங்காய்  தக்காளி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, நாட்டுத்தக்காளி – 4, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: மிளகாய்த்தூள், சோம்பு – தலா அரை டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து மேலும் நன்கு வதக்கவும். பின்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


மசாலா தக்காளி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம்,  வெங்காயம் – ஒன்று, நாட்டுத்தக்காளி – 4, பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லி, புதினா – ஒரு கைப்பிடி அளவு, தயிர் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 10 பல், பட்டை – 2 துண்டு, ஏலக்காய், கிராம்பு – தலா 2.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய்,  உப்பு, கொத்தமல்லி, புதினா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்


புழுங்கலரிசி பிரியாணி

தேவையானவை: புழுங்கலரிசி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், தேங்காய் – ஒரு துண்டு, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, பட்டை, ஏலக்காய், கிராம்பு – தலா 2, சின்ன வெங்காயம் – 8, நாட்டுத்தக்காளி – 2,  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சைப் பட்டாணி  – கால் கப், பிரியாணி இலை – ஒன்று, நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரிசியை, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய், புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், ஏலக்காய், இஞ்சி, பூண்டு… இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அம்மியில் அரைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து பிரியாணி இலை தாளித்து, வெங்காயம், தக்காளியை வதக்கி, அரைத்த விழுதுகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தனித்தனியாக போட்டு வதக்கவும். பச்சைப் பட்டாணியை சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும், எல்லாம் நன்றாக வதக்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்துக் கிளறி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் கழித்து இறக்கினால்…  புழுங்கல் அரிசி பிரியாணி ரெடி.


அவசர பிரியாணி

தேவையானவை: பிரியாணி அரிசி – கால் கிலோ, இஞ்சி – சிறிய துண்டு (நறுக்கவும்), பூண்டு – 8 பல் (நசுக்கி வைக்கவும்), பச்சை மிளகாய் – 4  (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி, புதினா – ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் – தலா 2, தயிர் – 2 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில், பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி… பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கி… தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தயிர் சேர்த்து மேலும் வதக்கவும். அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அரிசியைப் போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.


காய்கறி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ் எல்லாம் சேர்த்து – ஒரு கப், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன், வெங்காயம்,  பச்சை மிளகாய் – தலா ஒன்று, தக்காளி – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தயிர் – 4 டீஸ்பூன், புதினா – கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு. எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்த மல்லி  சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


கொண்டைக்கடலை பிரியாணி

தேவையானவை: பச்சரிசி அல்லது சீரகசம்பா அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன், ஊற வைத்து, வேக வைத்த கொண்டைக்கடலை – அரை கப், பிரியாணி இலை, பட்டை – தலா ஒன்று, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி. காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, கொண்டைக்கடலை சேர்க்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.


கத்திரிக்காய் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம்,   வெங்காயம் – ஒன்று, கத்திரிக்காய் – 3 (சுமாரான அளவு, கசப்பில்லாதது), தக்காளி – 3, மிளகாய்த்தூள் – ஒன்றே கால் டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புதினா – கறிவேப்பிலை – கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி… மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும் (அல்லது தோசைக்கல்லில் போட்டு வறுத்தெடுக்கவும் செய்யலாம்). அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி… நறுக்கிய தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது, தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும். இதில் அரை வேக்காடாக வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி, அதில் பாதியை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, பாத்திரத்தில் உள்ள கலவையில் கத்திரிக்காயை பரப்பி, எடுத்து வைத்துள்ள சாதத்தை அதன்மேல் பரப்பி, அதன்மேல் நெய் ஊற்றி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் சிறு தீயில் வைத்து இறக்கி, கிளறி பரிமாறவும்.


மசாலா ஜூஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தயிர் – 3 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன்,  நெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.

அரைக்க: தக்காளி – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 10 பல், பட்டை – ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு – தலா ஒன்று, புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2.

செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்து, கெட்டியாக வடிகட்டி, சாறு எடுக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி… அரைத்து வடிகட்டி எடுத்த சாற்றை ஊற்றி, நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, தயிர் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர் அரிசியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.


சீரக சாதம்

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், நெய் – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியோடு, தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். நெய்யில் சீரகம் தாளித்து சாதத்தோடு சேர்த்துக் கிளறவும்.

இதை தனியாக சாப்பிட முடியாது. எனவே, காய்கறி குருமா, கடலைக்குழம்பு போன்றவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்.


பிரெட் புலாவ்

தேவையானவை: சீரகசம்பா அரிசி – 250 கிராம், தேங்காய்ப் பால் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, தயிர் – 2 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தலா ஒன்று, பிரெட் துண்டுகள் – அரை கப் (எண்ணெயில் பொரித்தது), எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும்… பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தயிர், உப்பு, தேங்காய் பால் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். இதனுடன் வறுத்த பிரெட் துண்டுகளை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


வெந்தயக்கீரை சாதம்

தேவையானவை: பிரியாணி அரிசி – 250 கிராம், வெந்தயக்கீரை – 2 கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 3, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், புதினா – அரை கைப்பிடி அளவு, கொத்தமல்லி – அரை கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 5, தேங்காய்ப் பால் – அரை கப், வெங்காயம் – ஒன்று, பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, தயிர் – 3 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தனியாத்தூள், புதினா, கொத்தமல்லி, மஞ்சள்தூள், சின்ன வெங்காயம் ஆகியவற்றை நசுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, நசுக்கி வைத்துள்ளவற்றையும் சேர்த்து, கீரையை சேர்த்து வதக்கவும். இதனுடன் தயிர், உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்ப் பால் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


மொச்சை பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், பச்சை மொச்சை – கால் கப் (ஊற வைத்து, தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்), வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தலா ஒன்று, சோம்பு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு ஆகியவற்றையும் தனியாக ஊற வைக்கவும். வெங்காயம் ஒன்றை அடுப்பில் சுட்டு பின் தோல் நீக்கி அதனோடு தனியாத்தூள், பாதியளவு புதினா, கொத்தமல்லி, ஒரு பச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்த சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து… மொச்சை சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள், அரைத்த வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி, மீதமுள்ள 2 பச்சை மிளகாய், மீதமுள்ள புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.


பனீர் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், பனீர் – 150 கிராம் (துண்டுகளாக்கவும்), வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, இஞ்சி, பூண்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சைப் பட்டாணி – கால் கப், தயிர் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி… இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கி, தயிர், உப்பு, பனீர் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியைச் சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும்.


கோவா பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, கோவா – 50 கிராம் (இனிப்பு இல்லாதது), பச்சைப் பட்டாணி – கால் கப், தயிர்- 3 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை கிராம்பு, ஏலக்காய் விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய்  – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். பச்சைப் பட்டாணி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சேர்த்து தயிர் சேர்த்துக் கிளறவும். இதனுடன் கோவா சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி… கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.

குறிப்பு: கோவாவை சிறிது வதக்கினால் போதுமானது. இல்லையென்றால், அடிபிடித்து விடும். கோவா வேண்டாம் என்றால் கெட்டியான தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.


குட்டீஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், நெய் – 3 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், ஒரு பச்சை மிளகாயுடன் புதினா, கொத்தமல்லி, தேங்காய் சேர்த்து அரைத்த விழுது – ஒரு கரண்டி, கேரட் – ஒன்று, பட்டாணி – கால் கப் (நசுக்கி வைக்கவும்), பீட்ரூட் – பாதி அளவு, வெங் காயம், தக்காளி – தலா ஒன்று, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட், பீட் ரூட்டை  துருவிக் கொள்    ளவும். வெங்காயம்,    தக்காளியை பொடியாக நறுக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய் – தேங்காய் மசாலா, கேரட், பீட்ரூட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.


தேங்காய்ப் பால் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம்,  தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், தயிர் – 3 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – ஒன்று, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு – தலா ஒன்று, புதினா – ஒரு  கைப்பிடி அளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது, புதினா சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் தயிர், உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்ப் பால் சேர்க்கவும். இதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


நெய் சாதம்

தேவையானவை: சீரகசம்பா அரிசி – 250 கிராம், நெய் – 4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, புதினா – சிறிதளவு, வெங்காயம் – ஒன்று, பிரியாணி இலை – ஒன்று, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, பூண்டு, புதினா, வெங்காயம்… எல்லாவற்றையும் மிகவும் பொடியாக நறுக்கி தனியே வைக்கவும். அரிசியை உப்பு சேர்த்து முக்கால்  வேக்காடு பதத்தில் சாதம் வடித்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, பிரியாணி இலை தாளித்து, பொடியாக நறுக்கியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி, வேக வைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தை மூடி ஐந்து நிமிடம் கழித்து இறக்கி, மீதி நெய்யை ஊற்றி கிளறி பரிமாறவும்.


மண்சட்டி பிரியாணி

தேவையானவை: பச்சரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 3 (நன்றாக பழுத்தது), பிரியாணி இலை – ஒன்று, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – ஒன்று, பட்டை, ஏலம், கிராம்பு – தலா ஒன்று.

செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத் துக் கொள்ளவும். அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதை சேர்க்கவும். பிறகு புதினா, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.


நவதானிய பிரியாணி

தேவையானவை: பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, நவதானியம் – ஒரு கப் (வறுத்து, ஊற வைத்தது, வேக வைத்தது), தக்காளி – 2, தேங்காய்ப் பால் – கால் கப், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், ஏலக்காய் – ஒன்று, பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 6.

செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின் வேக வைத்த நவதானியம், தேங்காய்ப் பால் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.


கோலா உருண்டை பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி – 250 கிராம், தக்காளி – 3, வெங்காயம் – ஒன்று, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், புதினா – கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, தயிர் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

கோலா உருண்டைக்கு: துருவிய பன்னீர் – கால் கப், பொட்டுக்கடலை மாவு – 4 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோலா உருண்டை செய்ய கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன் றாகப் பிசைந்து, சிறிய உருண்டை களாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, தயிர் சேர்த்து… புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். சாப்பிடும்போது பொரித்த கோலா உருண்டைகளைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.


முட்டைகோஸ் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், முட்டைகோஸ் – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது –  ஒரு டீஸ்பூன், தயிர் – 3 டீஸ்பூன்,  தேங்காய்ப் பால் – அரை கப், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, முட்டைகோஸ் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து வதக்கி, தயிர், தேங்காய்ப் பால் சேர்க்கவும். இதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் பாத்திரத்தை மூடி, சிறு தீயில் சிறிது நேரம் வைத்து இறக்கி, பரிமாறவும்.


தனியா பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், தனியா – 150 கிராம், காய்ந்த மிளகாய் – 4 , இஞ்சி – பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 3, பட்டை கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, உருளைக்கிழங்கு – 100 கிராம், தேங்காய்ப் பால் – அரை கப், எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தனியாவை வறுத்து, குக்கரில் 2 தம்ளர் தண்ணீரில் நன்றாக வேக வைத்து, வடிகட்டி, ஒன்றரை கப் தண்ணீராக எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை விழுதாக அரைக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கு, சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் மிளகாய் விழுதையும் உப்பையும் சேர்த்து வதக்கி… தேங்காய்ப் பால், தனியா தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.


மொகல் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, தயிர் – 3 டீஸ்பூன், புதினா – கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – ஒன்று, ஏலக்காய் – 3, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, காய்கறி கலவை – அரை கப், கேசரி பவுடர் – சிறிதளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து… நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, புதினா, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், காய்கறி, தயிர், உப்பு சேர்த்து தொக்காக வரும் வரை நன்கு வதக்கி, சிறு தீயில் வைக்கவும் (தீயை அணைக்கக் கூடாது).

இன்னொரு அடுப்பில் அரிசியை அரை வேக்காடாக வேக வைத்து வடித்து உடனே சூடாக அடுப்பில் உள்ள தொக்கில் சேர்த்து நன்றாகக் கிளறி, மூடி போட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு கேசரி பவுடர் கரைத்து ஊற்றி, கிளறி இறக்கவும்.


உருளைக்கிழங்கு பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், உருளைக்கிழங்கு – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி, பூண்டு, பட்டை கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், தயிர் – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு,  நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி… உருளைக்கிழங்கையும், வெங்காயத்தையும் தனித்தனியாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி… பொரித்த வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து… தயிர், உப்பு, உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் தேவையான தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்துக் கிளறி, வேக வைத்து இறக்கவும்.

நன்றி:- சமையல் கலை நிபுணர் உஷாதேவி

நன்றி:- அவள் விகடன்

30 வகை பிரியாணி! (வெஜிடபிள்) – பாரதி முரளி வளசரவாக்கம்

பிப்ரவரி 16, 2011 1 மறுமொழி

‘பிரியாணி’ என்றாலே… பெரும்பான்மையோருக்கு ஒரு ‘கிக்’தான். எப்போது ஓட்டலுக்குச் சென்றாலும், அவர்கள் ஆர்டர் செய்யும் அயிட்டங்களில் முதல் இடத்தைப் பிடித்துவிடும் இந்த பிரியாணி! அதன் சுவையும் மணமும் ச்சும்மா சுண்டியிழுப்பது ஒரு காரணமென்றால்… ‘ஈஸியா நம்மளால செய்ய முடியாதே’ என்கிற ஏக்கம் இன்னொரு காரணம்!

உங்கள் ஏக்கத்தைப் போக்க… வகை வகையாக வீட்டிலேயே நீங்கள் சமைத்து அசத்த… உங்கள் கை பிடித்து இங்கே சமைக்கக் கற்றுத் தருகிறார் ‘வளசரவாக்கம்’ பாரதி முரளி.

”பிரியாணி செய்றது ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரமில்ல… கவனமா களத்துல இறங்கினா… சுலபமா செய்து முடிச் சுடலாம்… சூப்பர் சுவையுள்ள பிரியாணியை!” என்று நம்பிக்கை கொடுக்கும் பாரதி, பயறு, கீரை, காய்கறிகள், பழங்கள், பனீர் என்று வெரைட்டி வெரைட்டியாக சமைத்திருக்கும் பிரியாணி அடுத்தடுத்த பக்களில் பரிமாறப்பட்டிருக்கிறது.

பார்த்ததுமே… ‘தொட்டுக்கறதுக்கு தயிர் பச்சடிகூடத் தேவையில்ல… ஒரு பிடி பிடிச்சிட வேண்டியதுதான்’ என்று களத்தில் இறங்கி, கவளம் கவளமாக வெட்ட ஆரம்பித்துவிடுவீர்கள்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், தக்காளி – 4, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 4, லவங்கம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம் – தலா 2, சீரகம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நன்றாக ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். தக்காளியைத் தனியாகவும், பூண்டு – பச்சை மிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம் போட்டு தாளித்து… பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி… தக்காளி சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி, வடித்த சாதம்


சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி, கெட்டித் தயிர் – தலா ஒரு கப், காய்கறித் துண்டுகள் – 2 கப், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – அரை கப், எலுமிச்சம்பழம் – 1, புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: முந்திரி – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 7, இஞ்சி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 6, பட்டை – 1, லவங்கம், ஏலக்காய் – தலா 2 (இந்தப் பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி, அவற்றுடன் சுத்தம் செய்யப்பட்ட மல்லித்தழையை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்).

செய்முறை: அரிசியை நன்றாகக் களைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது, காய்கறித் துண்டுகள், உப்பு சேர்த்துக் கிளறவும். அரைத்த மசாலா விழுதை இதில் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஊறிய அரிசி, தயிர் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். பிறகு, எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும்.

தேவையானவை: உடைத்த கோதுமை – ஒரு கப், உருளைக்கிழங்கு – 1, பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், பீன்ஸ், – தலா கால் கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, இஞ்சி, பூண்டு – சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா – தலா ஒரு கப், கடலை எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, சோம்பு, உப்பு – தேவையான அளவு

செய்முறை: உடைத்த கோதுமையில் உப்பு சேர்த்து வேக வைத்து, உதிரியாக வடித்துக் கொள்ளவும். காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் கடலை எண்ணெய் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து… புதினா, வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, வேக வைத்த காய்களை சேர்த்துக் கிளறவும். பிறகு வெந்த கோதுமையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், காலிஃப்ளவர் – 1, சீரகம் – ஒரு டீஸ்பூன், லவங்கம், பச்சை மிளகாய் – தலா 2, தக்காளி கெக்சப் – 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை உதிர்த்து உப்பு கரைத்த நீரில் சிறிது நேரம் வைக்கவும். பிறகு, அதை வெந்நீரில் போட்டு எடுக்கவும். சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், லவங்கம் தாளித்து… நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, உதிர்த்த காலிஃப்ளவர், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் தக்காளி கெச்சப், கொத்தமல்லித்தழை சேர்த்து, வடித்த சாதத்தைப் போட்டு, கிளறி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பேபி கார்ன் – 3, பச்சை மிளகாய் – 10, பிரிஞ்சி இலை – 1, பட்டை – 2, இஞ்சி-பூண்டு விழுது – சிறிதளவு, தேங்காய் – 1, புதினா – ஒரு கப், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், லவங்கம் – 4, நெய் – 2 டீஸ்பூன், முந்திரி – 10, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பேபி கார்னை வட்ட துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வெயிட் போடாமல் பத்து நிமிடம் வேக வைத்து, நெய்யில் வதக்கிக் கொள்ளவும். தேங்காயை அரைத்துப் பிழிந்து பால் எடுக்கவும். முந்திரியை வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் போட்டு வறுத்து… பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊறிய அரிசி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் தேங்காய்ப் பால், தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வெயிட் போடாமல் பத்து நிமிடம் வைக்கவும். பிறகு சோளம், கரம் மசாலாத்தூள், புதினா, வறுத்த முந்திரி, உப்பு சேர்த்து வெயிட் போட்டு மூடி, 8 நிமிடம் கழித்து இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், சின்ன வெங்காயம் – ஒரு கப், மராட்டி மொக்கு, அன்னாசி பூ, பிரிஞ்சி இலை, புதினா – சிறிதளவு, லவங்கம், ஏலக்காய் – தலா 1, சோம்பு – அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் – 3 டீஸ்பூன், சில்லி சாஸ் – 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6, தேங்காய் துருவல் – கால் கப், முந்திரி – 20, நெய் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு… சோம்பு, மராட்டி மொக்கு, அன்னாசி பூவை வறுத்து பொடித்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை நெய்யில் வதக்கி அரைக்கவும். வெங்காயத்தை சில்லி சாஸ் விட்டு வதக்கி தனியே வைக்கவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்து… அரிசியைக் களைந்து போட்டு, தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் விடவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து பதினைந்து நிமிடம் வேகவிடவும். பிறகு, வதக்கிய வெங்காயம், வறுத்துப் பொடித்து வைத்திருக்கும் மசாலாத்தூள், நெய், முந்திரி, புதினா, எலுமிச்சைச் சாறு, பாலில் கரைத்த குங்குமப் பூ சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

தேவையானவை: அவல் – கால் கிலோ, நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட் – தலா ஒரு கப், பச்சைப் பட்டாணி – கால் கப், நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, தேங்காய் – ஒரு மூடி, இஞ்சி, பட்டை, சோம்பு – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, லேசாக கொதித்ததும் இறக்கி அவலைப் போட்டு, சிறிது நேரம் கழித்து வடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணியை தனியாக வேக வைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, சோம்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி சேர்த்து, வடித்து வைத்திருக்கும் அவலைப் போட்டு கிளறி, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், வெங்காயம் – 1, இஞ்சி-பூண்டு விழுது – சிறிதளவு, பனீர் – 100 கிராம், பிரிஞ்சி இலை, பட்டை – தலா 1, ஏலக்காய் – 4, லவங்கம் – 3, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு… வெங்காய விழுது, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிரிஞ்சி இலை, ஏலக்காய், லவங்கம், பட்டை சேர்த்து வதக்கி, அரிசியைப் போட்டு நன்றாகக் கலக்கவும். இதில் உப்பு சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். அரிசி பாதி வெந்ததும் வறுத்த பனீரை சேர்த்து, தீயைக் குறைத்து, தண்ணீர் வற்றி சாதம் உதிரியாக வரும்வரை வேக வைத்து இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், காராமணி – அரை கப், வெங்காயம் – 2, தக்காளி – 3, மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், உளுந்து, எலுமிச்சைச் சாறு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காராமணியை ஊற வைத்து, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். சாதத்தை வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து… காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேக வைத்த காராமணி, உப்பு, எலுமிச்சைச் சாறு, தக்காளி சேர்த்து வதக்கி, சாதத்தை போட்டு கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

தேவையானவை: அரிசி – ஒரு கப், நறுக்கிய பீன்ஸ், கேரட் வெங்காயம் – தலா அரை கப், முந்திரி, திராட்சை – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்), சீரகம் – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, லவங்கம், பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி, உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி… சீரகம், ஏலக்காய், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து வறுக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், ஊறிய அரிசி, முந்திரி, திராட்சை, கேரட், பீன்ஸ் சேர்த்து மிதமான தீயில் வதக்கி… கரம் மசாலாத்தூள், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி, ஆறு கப் தண்ணீர் விட்டு வேக வைத்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி – தலா கால் கப், பச்சை மிளகாய் – 4, நறுக்கிய வெங்காயம் – கால் கப், லவங்கம் – 4, பட்டை, ஏலக்காய் – தலா 2, இஞ்சி – பூண்டு விழுது, நெய், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பிரிஞ்சி இலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். லவங்கம், ஏலக்காய், பட்டையை பொடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு… வெங்காயம், பிரிஞ்சி இலை, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பொடித்து வைத்திருக்கும் லவங்கம். பட்டை, ஏலக்காயை சேர்க்கவும். காய்கறிகளைப் போட்டு நன்றாகக் கிளறி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் விழுது, அரிசி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கைவிடாமல் கிளறவும். பிறகு குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் சேர்த்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி, உரித்த பச்சைப் பட்டாணி – தலா ஒரு கப், நெய் – கால் கப், வெங்காயம் – 1, இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு, துருவிய தேங்காய் – கால் கப், முந்திரி, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். அரிசி, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். சாதம் உதிராக வந்ததும் இறக்கவும். சிறிது நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

தேவையானவை: அரிசி – ஒரு கப், குடமிளகாய் – 2, நறுக்கிய வெங்காயம் – அரை கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை – அரை கப், சீரகம், மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன், துருவிய சீஸ் – 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியில் உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். குடமிளகாயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகுத்தூள் போட்டு தாளித்து… வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, சாதத்தைப் போட்டு கிளறி, கொத்தமல்லித்தழை, சீஸ் துருவலை சேர்த்து இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், முளைக்கீரை – 2 கட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, முந்திரி – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியாத்தூள், வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், பட்டை, லவங்கம் – தலா 1, காய்ந்த மிளகாய் – 5, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உதிராக வடித்து ஆற விடவும். கீரையை அலசி பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு… கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், தனியாத்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, கீரையைச் சேர்க்கவும். பச்சை வாசனை போகும்வரை கீரையை வதக்கியதும்… சாதம், உப்பு, பட்டை, லவங்கம், தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கவும். இதில் எலுமிச்சைச் சாறை விட்டு கலக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி, அரைத்த தக்காளி விழுது – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 4, மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு – தலா அரை டீஸ்பூன், உரித்த சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 6 பல், பட்டை – ஒரு துண்டு, லவங்கம் – 3, ஏலக்காய் – 2, பிரிஞ்சி இலை – 1, உரித்த பட்டாணி – கால் கப், அரைத்த முந்திரி விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய் – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரம் போக நெய்யில் வறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் லவங்கம், பூண்டு, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெந்த பட்டாணி, தக்காளி விழுது ஆகியவற்றை அதில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடவும். இந்தக் கலவை நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், ஒரு பாத்திரத்தில் கொட்டி குக்கரில் வைத்து… உப்பு, மிளகாய்த்தூள், அரைத்த முந்திரி விழுது, சர்க்கரை, வறுத்த அரிசியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். குக்கருக்கு வெயிட் போட்டு, தீயைக் குறைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – கால் கிலோ, நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கப், முளைக்கட்டிய பயறு – அரை கப், குடமிளகாய், முட்டைகோஸ் – தலா கால் கப், வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – 3 டீஸ்பூன், அஜினமோட்டோ – அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைத்துக்கொள்ள: பச்சை மிளகாய் – 2, இஞ்சி – அரை துண்டு.

செய்முறை: அரிசியைக் கழுவி வேக வைத்து சாதமாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த பச்சை மிளகாய் – இஞ்சி விழுதைப் போட்டு வதக்கவும். சர்க்கரை, குடமிளகாய், முட்டைகோஸ், முளைப்பயறு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, அஜினோமோட்டோ சேர்க்கவும். கடைசியில் வெங்காயத்தாள், உப்பு, சாதம், சோயா சாஸ் சேர்த்து, அடுப்பை பெரிய தீயில் வைத்துக் கிளறி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, நெய் – 2 டீஸ்பூன், உருளைக்கிழங்கு, தக்காளி – தலா 2, பச்சை மிளகாய் – 7, பட்டாணி – அரை கப், தேங்காய் துருவல், தனியா – தலா 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு, புதினா – அரை கட்டு, பட்டை, ஏலக்காய், கிராம்பு – தலா 1, கரம் மசாலாத்தூள், சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – அரை துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி ஊற வைக்கவும். பட்டாணியை வேக வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி துருவிக் கொள்ளவும். தக்காளியில் தண்ணீர் விட்டு மூன்றரை கப் அளவுக்கு அரைத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் இவற்றை சிறிது நெய்யில் வதக்கி அரைத்துக் கொள்ளவும். சிறிது எண்ணெயில், தனியா, சீரகத்தை வறுத்துப் பொடிக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து… துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். அரைத்த கொத்தமல்லி விழுதையும் சேர்த்து வதக்கி… அரிசி, வேக வைத்த பட்டாணி, துருவிய உருளைக்கிழங்கு, தக்காளி சாறு, உப்பு, தனியா – சீரகப் பொடியைத் தூவி கிளறி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், உருளைக்கிழங்கு – 3, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, தேங்காய் துருவல் – 5 டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 6, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், சோம்பு, கடுகு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியை வேக வைத்து உதிராக வடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து, வாசனை வரும்வரை வதக்கவும். பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து, சாதத்தையும் போட்டு நன்றாகக் கலக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பால் – 2 கப், கேரட் – 1, பீன்ஸ் – 5, பட்டாணி – ஒரு கைப்பிடி, வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 4, பட்டை, ஏலக்காய், லவங்கம் – தலா 2, பிரிஞ்சி இலை – 1, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாகவும், பீன்ஸை அரை விரல் நீளத்துக்கும் நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி சேர்த்துக் கிளறி, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அரிசி, பால் ஆகியவற்றை சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரை மூடி, வெயிட் போட்டு, வேக வைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு விட்டு, கிளறி பரிமாறவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், வெங்காயம் – 2, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நெய் – 3 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, சர்க்கரை – ஒன்றரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். குக்கரில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து, தீயைக் குறைத்து சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து மேலே எழும்பி வரும்போது வெங்காயத்தை சேர்த்து வதக்கி… உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, அரிசியைத் தண்ணீருடன் ஊற்றிக் கலந்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், தேங்காய்ப் பால் – 2 கப், அன்னாசிப்பழம் – கால் கப், ஆப்பிள் துண்டுகள் – சிறிதளவு, துருவிய கேரட், மாங்காய், வெள்ளரிப் பிஞ்சு – தலா 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைத்துக் கொள்ள: வெங்காயம் – 1, காய்ந்த மிளகாய் – 5.

செய்முறை: அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் ஊற வைத்து… அரைத்த வெங்காய விழுது, தேங்காய்ப் பால் சேர்த்து, குக்கரில் வைத்து சாதமாக வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கேரட், மாங்காயைப் போட்டு வதக்கி, வெள்ளரித் துருவலை பிழிந்து எடுத்துப் போட்டு, அன்னாசிப் பழம், ஆப்பிள், உப்பு, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், சிறிய உருளைக்கிழங்கு – கால் கிலோ, வெங்காயம் – 2, காய்ந்த மிளகாய் – 6, குடமிளகாய் – 2, தக்காளி – அரை கிலோ, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய் – அரை மூடி, பூண்டு – 2 பல், ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு – தலா 1, தனியா – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், புதினா, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியைக் கழுவி ஊற வைக்கவும். வெங்காயம், குடமிளகாய் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தக்காளியைத் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய் மூன்றையும் லேசாக சூடு செய்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயைப் போட்டு, உருகியதும் பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு போட்டு வறுத்து, குடமிளகாய், வெங்காயம், பூண்டு, கரம் மசாலாத்தூள் போட்டு வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு, புதினா, கொத்தமல்லி, அரிசி, உப்பு, தக்காளி விழுது, பொடித்து வைத்த தேங்காய், காய்ந்த மிளகாய், தனியா தூளை சேர்த்து, குக்கரை வெயிட் போட்டு மூடி, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பால் – முக்கால் கப், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், கிஸ்மிஸ், டூட்டிஃப்ரூட்டி – தலா 2 டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், லவங்கம், பேரீச்சம்பழம், ஏலக்காய் – தலா 4, பச்சை மிளகாய் – 2, செர்ரி – 10, சீரகம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நன்கு கழுவி… பால், சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாதமாக வடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சீரகம், ஏலக்காய், லவங்கம், நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு லேசாக வறுத்து சாதத்தில் போடவும். கிஸ்மிஸ், டூட்டிஃப்ரூட்டி, பேரீச்சம்பழத்தை நறுக்கி சாதத்தின் மேலாகப் போட்டு, செர்ரி பழத்தை சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், நறுக்கிய வெங்காயம், பீன்ஸ் – தலா அரை கப், நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி – தலா ஒரு கப், பட்டாணி – ஒரு கைப்பிடி, புதினா, கொத்தமல்லி – தலா அரை கட்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தயிர் – அரை கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பச்சை மிளகாய் – தலா 2, பிரிஞ்சி இலை – 1, இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி இரண்டரை கப் தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து, மிளகாய்த்தூள், தனியாத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி, தக்காளி சேர்க்கவும். எல்லாம் நன்றாக வதங்கியதும் உப்பு, தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து… வெந்த காய்கறிகள், அரிசி ஆகியவற்றை போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை ஐந்து நிமிடம் ‘சிம்’மில் வைத்து இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், மிளகு – 2 டீஸ்பூன், கிராம்பு – 2, இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – கால் கப், புதினா – அரை கப், கீறிய பச்சை மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : அரிசியை உதிர் உதிராக வடித்து ஆற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மிளகு, கிராம்பு, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, வெங்காயம், புதினா சேர்த்து நன்றாக வதக்கவும். வடித்த சாதம், உப்பு சேர்த்துக் கிளறி, சூடாகப் பரிமாறவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், சோயா உருண்டைகள் – அரை கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், தயிர் – அரை கப், எண்ணெய், நெய் – தலா 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். சோயாவைக் கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 2 நிமிடம் ‘சிம்’மில் வைத்து இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், தேங்காய்ப் பால் – 2 கப், பச்சைப் பட்டாணி, டபுள் பீன்ஸ் – தலா முக்கால் கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், கரம் மசாலாத்தூள் – முக்கால் டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, லவங்கம் – தலா 2, பிரிஞ்சி இலை, காய்ந்த வெந்தயக்கீரை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: பச்சை மிளகாய் – 7, பூண்டு – 4 பல்.

செய்முறை: அரிசியை லேசாக வறுத்து, நன்றாகக் கழுவி, பத்து நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, கரம் மசாலாத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த பச்சை மிளகாய் – பூண்டு விழுது, டபுஸ்பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்றாக வேகும்வரை வதக்கவும். பிறகு, தேங்காய்ப் பால் விட்டு… அரிசி, உப்பு சேர்த்துக் கிளறி, வெந்தயக்கீரை சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி, கேரட் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், சோம்பு, நெய், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பட்டை, ஏலக்காய் – தலா 1, கிராம்பு, கீறிய பச்சை மிளகாய் – தலா 2, நறுக்கிய கொத்தமல்லித் தழை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் களைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய், பட்டை சேர்த்து வதக்கவும். வெங்காயம், கேரட் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். அரிசி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், வெங்காயம் – 3, புதினா – ஒரு கட்டு, கொத்தமல்லி – அரை கட்டு, பட்டை – 1, லவங்கம், ஏலக்காய் – தலா 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 6 பல், நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியில் உப்பு சேர்த்து வேக வைத்து உதிர் உதிராக சாதத்தை வடித்துக் கொள்ளவும். வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். பட்டை, லவங்கம், இஞ்சி, ஏலக்காய், பூண்டை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லி, அரைத்த மசாலா விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சாதத்துடன் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் சேர்த்து – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 6 பல், அஜினமோட்டோ – அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்), மிளகாய் எண்ணெய் (கடாயில் எண்ணெய் விட்டு, நன்றாகக் காய்ந்ததும் காய்ந்த மிளகாயைப் போட்டு ஆற விடவும்) – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயத்தாள் – 3, சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், முளைகட்டிய பயறு – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயுடன், பூண்டு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். அடுப்பை பெரிய தீயில் வைத்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்களை சேர்க்கவும். அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வதக்கி, சர்க்கரை சேர்க்கவும். சாதம், சோயா சாஸ், வெங்காய்த்தாள் சேர்த்துக் கிளறி…. கடைசியில் பயறு, மிளகாய் போட்டு காய்ச்சிய எண்ணெயை விட்டுக் கிளறி இறக்கவும்.

நன்றி:- பாரதி முரளி வளசரவாக்கம்

நன்றி:- அ.வி