தொகுப்பு

Posts Tagged ‘ரமழான்’

ரமழானின் சிறப்புகள்

ஜூலை 8, 2013 1 மறுமொழி

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

ramadan-kareem-7-copy

ரமழானின் சிறப்புகள்

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183 

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.

அருள் வாயில்கள் திறக்கப்படும் மாதம்

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: புஹாரீ(1899), முஸ்லீம்(1957) மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பு.ramalan

“ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். முஸ்லீம் (2119) இது நோன்புக்கே உள்ள தனிச் சிறப்பாகும்.

நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரத்தில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமை மிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி (ரழி) நூல் : பைஹகி

 ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ◊ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ◊ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

நிச்சயமாக நாம் குர்ஆனை கண்ணியமிக்க லைலத்துல் கத்ர் என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அல்குர்ஆன் 972:1-3

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் மேலும் இம்மாதம் சிறப்பும், கண்ணியமும் மிக்க மாதமாகிறது.

3070806_maxலைலத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட, இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

 நோன்பாளிகளுக்கு சுவர்க்கத்தில் தனி வாசல்

மறுமை நாளில் சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.  நூல்: புஹாரீ (1896), முஸ்-ம் (2121)

 அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்

“நோன்பு நரகத்தி-ருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரீ (1904)

 கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
ramadan-kareem-1

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரீ, முஸ்லிம்

 எனவே சிறப்பும், கண்ணியமும் மிக்க இந்த ரமழான் மாதத்தை அடைந்து நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நல் அமல்கள் செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக! அமீன்!  அமீன்! யாரப்பல் ஆலமின்.

நன்றி:- முகநூல்

 

 

 

 

ரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி


அஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே…..

வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன்…. ஏதோ இருக்கேண்டீ…. நீ சொல்லு….

என்ன நஸீம்… ரமலான் மாசம்… கையில் பிடிக்க முடியாத குறையா பிஸியா இருப்பே… இப்ப என்ன சுரத்தே இல்லாம பேசறே??

இல்லடீ…. ரெண்டு நாளா நோன்பில்லை… அதான் டல்லா இருக்கேன்…. நோன்பில்லைன்னா என்னதான் செய்யறதுன்னு தெரியலை…. போரடிக்குது….

நஸீமாவின் இடத்தை நம்மில் பலரும் கடக்க வேண்டி இருக்கிறது. மாதம்தோறும் வரும் உதிரப்போக்கினாலோ அல்லது பிரசவத்திற்கு பின் வரும் உதிரப்போக்கினாலோ ரமலானை, அந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும், வேகத்துடனும் கடக்க இயலாமல் போகிறது. ஆனால் வருத்தப்பட்டு இந்த மாதத்தை நாம் விட்டு விடலாமா? அதன் ரஹ்மத்தை1, பரக்கத்தை2, அதில் கிடைக்கும் அளவிலா நன்மைகளை?????????????? தொழுக முடியாத நிலையில் என்ன இபாதத்3 செய்து விட முடியும் என்று நினைக்கும் சகோதரிகளுக்காகவே இந்தக் கட்டுரை. இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் பல சகோதரிகள் பயன் பெறக்கூடும் என்னும் நிய்யத்துடன், பிஸ்மில்லாஹ்…. 🙂

முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே… எப்படி அல்லாஹ் கட்டளையிட்ட ஐவேளைத் தொழுகையை தொழுவதிலும், நோன்பு நோற்பதிலும், ஸகாத்4 தருவதிலும் நமக்கு கூலிகள் உண்டோ… அதே போன்றுதான், அல்லாஹ்வின் கட்டளையை மதித்து இந்த உதிரப்போக்கு காலங்களில் நாம் தொழுகாமல் இருப்பதற்கும் கூலி கிடைக்கிறது. ஆம், அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றித்தான் நம் தொழுகையை விட்டிருக்கிறோம் அல்லவா…. எனவே அதுவும் ஓர் இபாதத்தே…. எனவே முதலில் அந்தக் கவலையிலிருந்து மீண்டெழுங்கள்.

இரண்டாவது, இது தீண்டாமை போன்றதொரு கொடிய நோயோ, தீட்டோ அல்ல. மாறாக, தஹாரா என்னும் தூய நிலையை வராத ஒரு இயற்கை/நிலை மட்டுமே. எவ்வாறு ‘ஜனாபா5’ நிலையை அடைந்தால் ஆண், பெண் இருவருக்குமே ‘தூய்மை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதே போல் இந்த நிலையும் வெளிப்புற அசுத்தமே தவிர அல்லாஹ்வின் முன் நிற்கக்கூடியவரின் அகத்தூய்மையை கேள்விக்குறியாக்கும் தீட்டல்ல. இதனையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஓர் ஹதீஸ்6சில் குறிப்பிட்டுள்ளார்.
‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவி த்தார். (புகாரி 1:6:297)

தீட்டாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தகைய நிலையில் அன்னையின் மடியில் தலை வைத்து குர்’ஆன் ஓத செய்திருப்பார்களா?

உடலாலும் மனதாலும் தளர்ந்து போயிருக்கும் நம்மை கஷ்டப்படுத்தாமல் இபாதத்தை இலகுவாக்கவே அல்லாஹ் தந்த பரிசு என்பதை நினைவில் வையுங்கள். அதுவும் விட்டுப்போயிருக்கும் நோன்பை மட்டுமே நமக்கு மீண்டும் பிடிக்க கட்டளையுள்ளது. விட்டுப்போன தொழுகைகளையல்ல. அதையும் யோசித்துப் பாருங்கள். மார்க்கத்தை நமக்காக எத்தனை இலகுவாக்கி தந்துள்ளான் நம் இறைவன் என்பது புரியும். அல்லாஹு அக்பர்.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் கூறி இருப்பது போல, அனைத்து பொருட்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை உண்டு, ஒரு ஒழுங்கு உண்டு, அது போல நமக்கும் வைத்துள்ளான். எப்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் அததற்கான ஆர்பிட் / வழி உள்ளதோ அதே போல பெண்களுக்கும் இந்த குறிப்பிட்ட காலத்தை ஒரு ஒழுங்காக அமைத்துள்ளான்.
(உஹதுப் போரில்) உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால் அதே போன்று அக்கூட்டத்தினருக்கும் (பத்ரு போரில்) காயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச்செய்கிறோம். இதற்குக்காரணம் நம்பிக்கை கொன்டோரை அல்லாஹ் அறிவதற்கும் உங்களில் உயிர்தியாகம் செய்வோரை உருவாக்குவதற்குமே ஆகும். அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.(ஆலெ இம்ரான்:140)

இன்னும் ஒரு விஷயம் உற்று நோக்கினால் புரிபடும். அது ரமதானை நாம் தராவீஹ்7 + தொழுகை + குர்’ஆன் என்னும் மூன்று விஷயங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதை. தொழுகை இல்லாதபோதுதான் மற்ற விஷயங்களைப் பற்றி நமக்கு தெரியவும் வருகிறது, அதன் மேலும் நம் ஃபோகஸை கொண்டு போக முடிகிறது. உதாரணத்திற்கு
“என்மீது அதிகமாக ஸலவாத்தை ஓதுபவர் கியாமத்து நாளில் என்னை அதிகம் நெருங்கியிருப்பார்! என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அறிவித்துள்ளார்.”
என்னும் ஹதீஸ்சை நினைத்துப் பாருங்கள். எந்தளவிற்கு நாம் ஸலவாத்8தை நினைக்கிறோம் அல்லது ஓதுகின்றோம்?? தொழுகையில் அத்தஹியாத்9திற்கு பிறகு ஓதுவதோடு பலர் நிறுத்திக் கொள்கிறோம். அதன் மகத்தான கூலியை மேலே படித்துப் பாருங்கள்…….
அதே போல்தான் நோன்பாளிகளுக்கு உணவளிப்பதும், திக்ரு செய்வதும், து’ஆ செய்வதும்.
‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)
“து’ஆ என்பது வணக்க வழிபாட்டின் சாராம்சமாகும்.” (அஹ்மத், திர்மிதி, ஹஸன் ஸஹீஹ்)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (பகரா 2:185)
அல்லாஹ் எந்த இபாதத்தின் கூலியையும் குறைத்துக் கொடுப்பவனல்ல. ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த நன்மைக்கான கூலியை வழங்குவேன் என்று வாக்களித்துள்ளான். அதுவும் அணுவளவும் குறையாமல். இன்னும் குர்’ஆனை திலாவத்தாக மட்டும் அல்லாமல் மனனம் செய்யவோ, கற்கவோ, கற்றுக்கொடுக்கவோ கூட செய்யலாம். வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு புதிதாக ஒரு சூறா / குர்’ஆனின் அத்தியாயம் கற்றுக்கொடுக்கலாம். அல்லது நீங்களே மனனம் செய்யலாம்.

இன்னும் ஈஈஈஈஸியான வழி, அவரவர் செல்ஃபோன் மூலமாகவோ, மடிக்கணிணி மூலமாகவோ, அல்லது டேப் ரிக்கார்டர், ஆடியோ சிஸ்டம் கொண்டோ எத்தனை முறை வேண்டுமானாலும் கேளுங்கள், மகிழுங்கள், மனனம் செய்யுங்கள். அல்லது மனனம் செய்து மறந்து போன சூறா எனில் அதை மீண்டும் சரி செய்து கொள்ளுங்கள். மாஷா அல்லாஹ்…. நினைத்துப் பாருங்கள், தொழும் நிலையில் இருக்கும்போது இத்தனை விதத்தையும் நாம் எண்ணிப்பார்க்கிறோமா??
தஃப்ஸீர்10 படிப்பதற்கும், படித்ததை பகிர்வதற்கும், அதற்கான கூலிகளும் உண்டு. எத்தனை விதமான தஃப்ஸீர்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் எத்தனை படிப்பினைகள் உள்ளன… எத்தனை எத்தனை புதிய செய்திகளை / ஹதீத்துக்களை / ரிவாயத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது??? அதை பகிர்வதிலும் கிடைக்கும் நன்மையை நானோ நீங்களோ அளக்க முடியுமா??

எனவே இந்த காலத்தை (ஹைல் / நிஃபாஸ்) துவண்டு போகும் காலமாக அன்றி, நமக்கு ஒரு இடைவேளை தரப்பட்டுள்ளது, அதுவும் அல்லாஹ்விடமிருந்து, அதை மனதார ஏற்றுக்கொள்வதிலும் நமக்கு கூலியுண்டு என்பதை நினைவில் வையுங்கள். தொழுகையும், குர்’ஆன் ஓதுவதும் மட்டுமே இபாதத்தல்ல என்பதை புரிந்து கொள்ளவும் ஏனைய அமல்களிலும் திக்ரையும், இறையச்சத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவும் இந்த காலத்தை ஒதுக்குங்கள்.
இன்ஷா அல்லாஹ், இனி நடைமுறையில் செய்யக்கூடிய, நற்கூலியை பெற்றுத்தரும் செயல்களை ஒரு சேர பார்ப்போம்.

நோன்பாளிகளுக்கு உணவு தயார் செய்யவும், பரிமாறவும், இஃப்தார் குழுக்களிலும் பங்கு பெறுங்கள்.
இஃப்தார் முடிந்த பின் மஸ்ஜிதில் சுத்தப்படுத்தும் வேலையில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
தராவீஹ் தொழுக வரும் தாய்மார்களின் குழந்தைகளை (Baby Care) கவனித்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு நன்மை யோசியுங்கள். குழந்தையின் தாய்மார் மட்டுமல்ல. இன்னும் மற்றவர்களும் சிரமம் இன்றி தொழுகையில் ஒன்றி தொழுக முடியும். அதற்கான கூலியும்….மாஷா அல்லாஹ் :))
இது வரை மனனம் செய்யாத சூறாக்கள், து’ஆக்களை மனனம் செய்யுங்கள்.
வீட்டிலுள்ள வயதானோருக்கு (எழுத படிக்க இயலாமல் இருப்பவர்களுக்கு) மற்றும் குழந்தைகளுக்கு சூறாக்களையும், து’ஆக்களையும் கற்றுக் கொடுங்கள். தஃப்சீர் உரக்க படித்துக் காட்டுங்கள்.
உங்கள் வீட்டிலுள்ள / தெருவில் / அணுகக் கூடிய அருகாமையில் உள்ள நோன்பு வைக்கும் வயதானோருக்கு / ஏழைகளுக்கு / சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு / புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உணவுக்கும் / மற்ற தேவைகளுக்கும் உதவுங்கள்.
“யார் தன் சகோதரனின்தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.”  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி). நூல்: புகாரீ 2262, முஸ்லிம்

(உங்களின் வீட்டுக்கு இஃப்தாருக்கு அழைத்துப்பாருங்களேன்… இன்னும் அதிகமான மகிழ்ச்சி, கூலி மாஷா அல்லாஹ்)
நிஃபாஸில் இருக்கும் தாய்மார்களே… உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் ஒவ்வொரு முறையும்(மற்ற எல்லா வேளைகளிலும் கூட:) ) ஒரு சூறாவோ/து’ஆவோ/திக்ரோ அதிகமதிகம் ஓதுங்கள். பக்கத்தில் ஒரு ஆடியோ பிளேயர் வைத்து குர்’ஆனோ / தஃப்ஸீரோ ஒலிக்க வையுங்கள். உங்கள் மேலும், இன்ஷாஅல்லாஹ் உங்களின் குழந்தை மேலும் அதன் எஃபெக்ட்டை உணர முடியும் (இது சொந்த அனுபவமே….)
அதிகமதிகம் திக்ரு செய்யுங்கள். இதுவரை மனனம் செய்யாத காலை மற்றும் மாலை திக்ருக்களை மனனம் செய்யுங்கள். ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் மற்றவர்கள் தொழும்போது நீங்களும் அமர்ந்து அந்தந்த வேளைகளுக்கான திக்ருக்களை ஓதுங்கள்.
இரவில் தஹஜ்ஜுத் நேரத்தில் எழுந்து, உள்ளம் ஒன்றி, கண்ணீர் மல்க து’ஆ கேளுங்கள். து’ஆவிற்கு முன்னும் பின்னும் திக்ரையும், ஸலவாத்தையும் அதிகப்படுத்துங்கள்.
வீட்டில் பிரிண்டர் / சிடி ரைட்டர் இருந்தால் இலவசமாக து’ஆக்கள் / திக்ருக்களை பிரிண்ட் செய்தோ / சிடியில் காப்பி செய்தோ எத்தனை பேருக்கு இயலுமோ பகிருங்கள். (இதை அச்சிட்டது / காப்பி செய்தது…ஜனாப் / ஹாஜி/இன்னாரின் ஹக்கில் து’ஆ—- என்னும் போஸ்டரெல்லாம் அடிக்காமல் இன்ஷா அல்லாஹ்…. :)) )
தஜ்வீத் சரி செய்து கொள்ளவும், அதன் சட்டங்களை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும், தகவல்களை / பாடங்களை பகிர்ந்து கொள்ளவும் நேரம் ஒதுக்குங்கள்.
அஸ்மா உல் ஹுஸ்னாவை மனனம் செய்யுங்கள். அதற்கான கூலியும் உண்டு…கூடவே உங்களின் து’ஆக்களின் போது அல்லாஹ்வின் எந்தப்பெயரை உபயோகிக்கலாம் என்பது தெள்ளென விளங்கும்….
“அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. யார் அவற்றை மனனமிட்டுக்கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6410, முஸ்லிம் 2677) இன்னும் அதிகமாகவும் து’ஆவில் ஒன்ற வைக்கும்.

ஈத் பெருநாளைக்கான ஷாப்பிங்கையெல்லாம் இந்த நேரங்களில் வைத்துக் கொண்டால் தொழும் நிலை கிடைக்கும்போது அதைப்பற்றிய கவலை இருக்காது.
இன்னும் வேறு எந்த விதத்தில் நற்கூலி பெறலாம் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள்…. அதுவே உங்களுக்கு இன்னும் பல வழிகளைக் காட்டும் இன்ஷா அல்லாஹ். மனித மனம் எப்படிப்பட்டதெனில், ஒரு கதவு மூடப்படும்போதுதான் மற்ற வழிகளை தேட ஆரம்பிக்கும் 🙂
மிக முக்கியமாக, ஹலால்11-ஆன அமல்களை செய்வதை விடவும், ஹராம்12-ஆன செய்கைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வதே மிக மிக முக்கியமானது, மேன்மையானது. எனவே புறம் பேசுவதை விட்டும், அவதூறு சொல்வதை விட்டும், பொய்யிலிருந்தும், வீண் பேச்சுக்களிலிருந்தும், நேரத்தை வீணாக்கும் செயல்களிலிருந்தும் காத்துக்கொள்ளுங்கள். இந்த காலமானது உங்களை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்குவதில்லை, உங்களின் அமல்களில் குறை வைப்பதில்லை என்பதையும் ஆனால் வீண் செயல்களால் குறையேற்படக்கூடும் என்பதையும் நினைவில் வையுங்கள்.

இன்ஷா அல்லாஹ் இந்த இடைவெளியானது இன்னும் அதிக ஈர்ப்புடனும், சக்தியுடனும், பலமான ஈமானுடனும் உங்களை தயார் செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே மகிழ்ச்சியுடனும், ஒவ்வொரு அமலுக்கும் கூலி இருப்பதில் நம்பிக்கை கொண்டும் களத்தில் இறங்குங்கள்.

…அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)… (2:185)

அகராதி:

1. ரஹ்மத்- பேரளுள்
2. பரக்கத்- அபிவிருத்தி
3. இபாதத்- இறைவணக்க வழிபாடு
4. ஜகாத் – ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கான வரி / தூய்மையாக்குதல் என்னும் பொருளும் உண்டு
5. ஜனாபா- பெருந்தொடக்கு-சிறு தொடக்கு உடையவர்
6. ஹதீஸ் – நபிமொழி
7. தராவீஹ் – ரமதான் மாதத்தில் மஸ்ஜிதில் தொழும் இரவு நேர தொழுகை
8. ஸலவாத்– நபிகள் நாயகம் அவர்களின் மீது அல்லாஹ்வின் ரஹ்மத்தும், பரக்கத்தும் இறங்க வேண்டி ஓதப்படுவது
9. அத்தஹியாத்து – தொழுகையின் கடைசி ரக்’அத்தில் ‘இருத்தல்’ நிலையில் ஓதுவது
10. தஃப்ஸீர் – திருக் குர்’ஆனின் பொருளுரை
11. ஹலால் – இஸ்லாமிய சட்டப்படி ஆகுமாக்கப்பட்டது.
12. ஹராம் — இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்படாதது.

நன்றி:- இஸ்லாமிய பெண்மணி
நன்றி:-சகோதரிகள். ஷாஸியா நவாஸ், அஸ்மா பின்த் ஷமீம், ஹாஃபிதா. ரைஹானா ஒமர் 

 


பிரிவுகள்:ரமலானும் அந்த நாட்களும் - இஸ்லாமிய பெண்மணி குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்புகள்!​ – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


ஆன்மாவின் உணவாக
ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
நோய்முறிக்கும் ரமலானே!

பாரினிலே குர்ஆனைப்
பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
காதுகளில் சொட்டுந்தேன்!

பகைவனான ஷைத்தானைப்
பசியினாலே முறியடித்தாய்த்
தொகையுடனே வானோரைத்
தொடரவும்தான் நெறியளித்தாய்!

இருளான ஆன்மாவை
இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
அழைத்திடுமுன் வழியாமே!

நூற்களும்தான் நண்பனாம்
நோற்றிடும்நற் பொழுதினிலே
நூற்களிந்தாய் குர்ஆனை
நண்பனாக வழங்கினாயே!

இம்மாதம் மறையோதி
இரட்டிப்பு நன்மைகள்
இம்மைக்கும் மறுமைக்கும்
இனிப்பாகத் தந்தாயே

புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
புத்துணர்வுப் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
தினந்தொழுத தராவிஹூமே!


நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844

வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

பிரிவுகள்:நோன்பு குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இஃ‌ப்தா‌ர் துஆ iftar dua

ஜூலை 23, 2012 1 மறுமொழி

இஃ‌ப்தா‌ர் துஆ Dua When breaking the fast – Iftar

اللَّهُمَّ اِنِّى لَكَ صُمْتُ وَبِكَ امنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَعَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

அ‌ல்லாஹு‌ம்ம ல‌க்க ஸு‌ம்‌த்து வ‌பிக ஆம‌ன்‌த்து வஅலை‌க்க துவ‌க்க‌ல்‌த்து வஅலா ‌ரி‌ஜ்‌க்‌கி‌க்க அஃ‌ப்த‌ர்‌த்து ஃபதக‌ப்ப‌ல்‌மி‌ன்‌னி [அபூதாவு]
யா அ‌ல்லா‌‌ஹ‌் உன‌க்காகவே நோ‌ன்பு நோ‌ற்றே‌ன் உ‌ன்னை‌க் கொ‌ண்டே ஈமா‌ன் கொ‌ண்டே‌ன் உ‌ன் ‌மீதே பொறு‌ப்பு சா‌ட்டினே‌ன். உ‌ன்னுடைய ‌ரி‌ஜ்‌க்கை கொ‌ண்டே நோ‌ன்பு ‌திற‌க்‌கிறே‌ன். இதை எ‌ன்‌னிட‌மிரு‌ந்து ஏ‌ற்று‌க் கொ‌ள்வாயாக.

O Allah! I fasted for You and I believe in You [and I put my trust in You] and I break my fast with Your sustenance. [Abu Dawud]

நோன்பு திறந்தவுடன் ஓதும் துஆ Dua After Iftar

ذَهَبَ الظَّمَأُ وَ ابْتَلَّتِ الْعُرُوقُ، وَ ثَبَتَ الأجْرُ إنْ شَاءَ اللَّهُ

தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’ [அபூதாவு]

நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின்படி உறுதியாகிவிட்டது’

Dhahabadh lhamau wabtallatil urooqu, wa sha batal ajru insha Allah [Abu Dawud]

The thrist is gone, the veins are moistened and the reward is confirmed, if Allah [Ta’ala] wills.

 

நோன்பு கஞ்சி செய்யும் முறை


ரமழான் மாதத்தில் அரை நாளுக்கும் கூடுதலாக நோன்பிருக்கிறோம். வருடத்தின் 11 மாதங்களில் தேங்கிய கொழுப்பை மறுசுழற்சி செய்ய நோன்பு மருத்துவரீதியில் உதவுகிறது. நோன்பாளிகள் பசித்திருக்கும்போது உடலில் தேங்கிய சர்க்கரைளவு பகலில் உடலை இயங்க வைப்பதற்காகச் அதிகமாகச் செலவிடப்படுகிறது.

மாலையில் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்து நாவரட்சி ஏற்பட்டு, உடலின் சர்க்கரை பகல் முழுதும் பயன்படுத்தப்பட்டதால் சிலருக்கு சோர்வு/தலைவலி ஏற்படும். இந்நிலையில் சோர்வுற்ற உடலுக்குத் தேவையான உடனடி புத்துணர்வை வழங்க அருமையான ஆகாரமாக நோன்புக்கஞ்சி இருக்கிறது.

தேவையானவை:
அரிசி – ஒரு கப்
கடலை பருப்பு – கால் கப்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை – கால் கப்
கொத்து கறி – 100 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 5
மல்லித் தழை – 2 கொத்து
புதினா – 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
தேங்காய் – ஒரு மூடி
பட்டை – ஒன்று
கிராம்பு – 4
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொத்திய கறியை போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.

2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும். எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும். அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.

இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும். பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.சுவையான நோன்புக் கஞ்சி தயார்.

இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது.

நன்றி:- பைரோஜா ஜமால்
நன்றி:- முகநூல்

ரமழானே! ரமளானே!!


ரமளானை வாஞ்சையோடு வரவேற்போம்!

செளகத் அஹமது இபுறாகிம்

ஒவ்வோர் ஆண்டும் காத்திருந்தோம்
ஆண்டில் ஓர் முறை வரும் – இந்த
இனிய ஓர் திங்கள் வசந்த காலத்திற்கு
இனிதே வருக ரமளான்

பிறை கண்ட நாள் முதலாய்
ஸகர் செய்து நோன்பு வைத்து
பேரின்பம் பெற்றுத் தரும் ரமளான்
புனிதமிக்க இரவுகளைத் தந்த ரமளான்

எங்கள் பாவங்களை
கழுவிக் களையும் ரமளான்
ஏழை, பணக்காரன் ஏற்றத் தாழ்வின்றி
எல்லோரும் நோன்பு வைக்கும் ரமளான்

உள்ளங்கள் ஒளி வீசி தூய்மை பெற
ஓர் மாதம் உதிக்கும் இந்த ரமளான்
சைத்தான்கள் பூட்டப்படும் ரமளான்
சத்திய வேதம்தனை இறக்கி வைத்த ரமளான்

குர்ஆன் மாதம் என பேறு பெற்ற ரமளான்
‘இஃப்தார்’ நோன்பு திறக்குமுன் நேரம்
இறைவனிடம் இறைஞ்சி கேட்கப்படும்
எங்கள் துஆக்கள் ஏற்கப்படும் ரமளான்

‘தராவீஹ்’ தொழுகைகளில் சிறப்பாக
நன்மைகளை கூட்டித் தரும் ரமளான்
இரவு நின்று தொழுதவர்க்கு
இன்னும் நன்மையை அள்ளித்தரும் ரமளான்

லட்சிய இரவுகளாய்
‘லைலத்துல் கத்ர்’ என்றும்
பதினேழாம் பிறைநாளில்
பத்ரு யுத்த ஸகாபாக்களின்
நினைவுகளை நெஞ்சினிலே
நெகிழ வைக்கும் ரமளான்

ஸகாத் எனும் புனித வரியை
இருப்போர் தந்து, தேவையுற்றோர் பெற்று
எல்லோரும் இன்புறும் ரமளான்
இருப்போரும் பசித்துணரும் ரமளான்

மாதம் முழுவதும் பெருநாளாய்
மஸ்ஜித்கள் மக்களால் நிறைந்திருக்கும் ரமளான்
நோன்புக் கஞ்சி கூட
நிறைவாய் பள்ளிதோறும் கிட்டும் ரமளான்

தூக்கம் துறந்து இறையை துதிப்போம்
தௌபா செய்து பாவம் களைவோம்
தீமைகளை தவிர்ந்து, நன்மைகளை நாடி
இறையச்சம், மறுமையின் பயம் உணர்ந்து
நாமும் ரமளானை நிறைவு செய்வோம்
நன்மையாய் நிறைவு செய்வோம்
இனிதே வருக ரமளான்

நன்றி:- செளகத் அஹமது இபுறாகிம் Jubail, KSA

நன்றி :  madukkur.com

ரமளானே வருகவே…!!! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


பகலெலாம் பசித்து

இரவெலாம் விழித்து
அகமெலாம் நிறைந்து

அல்லாஹ்வைத் துதித்து

முழு மாதம் நோன்பு பிடித்து
அகமும் முகமும்
அமல்களால் அலங்கரித்து
இகம் பரம் ஈடேற்றமும் இறையின்
ரகசிய அறிவும் பெற்று தரும்
ரமளானே வருகவே…!!!
பசித்தவரின் பசியினை
பட்டு நீ உணர்த்திடும் பட்டினி- ஊனில்
வசித்திடும் ஷைத்தானை

வதைத்திட வைத்திடும் உண்ணாமை
குடலுக்கு ஓய்வுக் கொடுத்து;
குர்-ஆனின் ஆய்வு தொடுத்து;- மஹ்ஷர்
திடலக்கு தயார்படுத்துதல் உன் கவனம்;
திண்ணமாய் கிட்டும் சுவனம்
பாவம் தடுத்திடும்
பாதுகாப்பு கேடயம்;
கோபம் வென்றிடும்
குணத்தின் பாடம்
அல்லாஹ்வுக்காகவே நோன்பு;
அல்லாஹ் மட்டுமே அறியும் மாண்பு
அல்லாஹ்வே அதற்கான சாட்சி;
அல்லாஹ்வே தருவான் மாட்சி


முப்பது நாட்களை மூன்றாய் வகுத்து
முப்பதின் முதல் பத்தில் ரஹ்மத்து;
முப்பதின் இரண்டாம் பத்தில் மக்பிரத்து;
முப்பதின் மூன்றாம் பத்தில் நஜாத்து;
தப்பாது வேண்டிட வேண்டியே
தகை சான்றோர் வேண்டினரே

வானில் இருந்த இறைவேதம்
வஹியின் வழியாக
தேனினும் இனிய திருநபியின் (ஸல்)
திருவதனம் மொழிய வந்த மாதம்


ஆற்றல் மிக்கதோர் இரவின் பிறப்பு;
ஆயிரம் மாதங்களினும் மிக்க சிறப்பு;
போற்றிடுவோம் பெற்றிடுவோம் அவ்விரவு;
புனிதமிகு ரமளானின் வரவு…!!!


ஈகைத் திருநாளாம்
ஈத் பெருநாளைக்கு முன்பாகவே
வாகைத்தரும் பித்ரா தர்மம்
வழங்குவோம் ஏழைகட்கு அன்பாகவே

அரபி பதங்கள்: அதன் பொருள் இதோ:

உம்மத்து= சமுதாயம்
அமல் = செயல்
மஹ்ஷர்= மறுமை தீர்ப்பு நாளின் பெருவெளி மைதானம்
ரஹ்மத்து= இறையருள்
மக்பிரத்து= இறைமன்னிப்பு
நஜாத்து= நரக விடுதலை
வஹி= வானவர் ஜிப்ராயில்(அலை)மூலம் இறைத் தூது
பித்ரா= ஏழைகட்கு ஈந்துவக்கும் தானிய தர்மம் (அதனாற்றான் இந்த நோன்பு பெருநாளை “ஈதுல் பித்ர்” (ஈகைத் திருநாள்) என்பர்
.

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் ஆக்கங்களில் சில…..

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்

இணயதளம் ஓர் இனியதளம்

தமிழாய் தமிழுக்காய்

விதைகள்

ஊனம்

தாய்

காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்

வேடிக்கை மனிதர்கள்

அப்பா

கடலும்; படகும்

ரமளானே வருகவே…!!!

ரமழானை வரவேற்போம்! – மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும்

அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.

‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).

ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும்.

‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

ரமழான் மாதத்தின் சிறப்பு:

‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி)..

இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.

இரண்டாவது சிறப்பு:

‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

மூன்றாவது சிறப்பு:

‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

நான்காவது சிறப்பு:

‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஐந்தாவது சிறப்பு:

ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:

1-நோன்பு பரிந்து பேசும்:

‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை:

‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).

3-கனக்கின்றி கூலி வழங்கப்படும்:

‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

4-நோன்பின் கூலி சுவர்க்கம்:

‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

5-நரகத்தை விட்டு பாதுகாப்பு:

‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

6-நோன்பு நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்:

’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).

7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்:

‘எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்:

‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி:

‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

10-கஸ்தூரியை விட சிறந்த வாடை:

‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.

ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்

நிய்யத்தின் அவசியம்:

‘எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ).

நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு:

‘நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

‘நமது நோன்புக்கும் வேதக்காhர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).

‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.

ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:

‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’

இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கிறது. அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இவ் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.

ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:

‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

இரவுக் காலங்களில் நின்று வணங்குவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).

‘எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

உம்ராச் செய்வது:

‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:

அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது.

‘நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி).

ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை:

பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்.

‘எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

‘எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).

நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!

நன்றி:- மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி

நன்றி :  கூத்தாநல்லூர் ஆன்லைன்

ரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்


நோன்பின் முக்கியத்துவம்

‘ஸவ்ம்’  என்பதன் பொருள்: ‘தடுத்துக்கொள்ளல்’

தீய எண்ணங்கள், மனோ இச்சைகளிலிருந்து மனதைத் தூய்மையுறச் செய்தல்.

ஷைத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்தல்.

அளவுகடந்த உலகியல் ஆசைகளிலிருந்து மீளச்செய்தல்.

மரணத்தின் பின்னுள்ள வாழ்வு பற்றிய பிரக்ஞையை அதிகரிக்கச் செய்தல்.

ஏழைகளின் துன்ப துயரங்களை அனுபவபூர்வமாக உணரச் செய்து உதவும் மனப்பான்மையை வளர்த்தல்.

முழு வாழ்வையும் அல்லாஹ்வுக்காக அமைத்துக் கொள்ளல் வேண்டும் எனும் பயிற்சியை வழங்குதல்.

அல்லாஹ் மீதான பயபக்தியை அதிகரிக்கச் செய்தல்.

நோன்பின் அடிப்படை நோக்கம்

يَأيُّهَأالَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَي اَّلِذينَ مِن قَبلِكُم لَعَلَّكُم تَتًّقُونَ [١٨٣:سورة البقرة]

உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’.  (அல்குர்ஆன் 2:183)

ரமழானின் சிறப்பு

“ரமழான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன”   (அறிவிப்பவர் அபூஹுரைரா ரழி. ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1898)

அபூஹுரைரா (றழி) பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: “இறைதூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:  ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் ” என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1899)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “(அல்லாஹ் கூறினான்) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது. நோன்பைத் தவிர. ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பிய அளவிற்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன். மேலும் இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (றழி), ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 5927)


ரமழானை வரவேற்கத் தயாராவது எப்படி?

எதிர்வரும் ரமழானில் நற்செயல் புரிவதில் ஒரு கணத்தைக்கூட வீணாக்காமல் முழுமையான பயன்பாட்டைப் பெறுவதற்கு நாம் திட்டமிட வேண்டும். அதற்காக சில முன்னாயத்தங்கள் அவசியமாகின்றன.

ரமழானின் வருகையைப் பற்றி ஆசையூட்டுதல்

குடும்பத்தினர், அயலவர்கள், நண்பர்கள் மத்தியில் ரமழானுக்காகத் தயாராவது குறித்து ஆர்வமூட்டுதல்

குழந்தைகளிடம் ரமழானின் சிறப்புக்களை எல்லாம் எடுத்துக்கூறி, அதன் முக்கியத்துவத்தை அவர்களின் மனதில் பதியச் செய்தல்

எதிர்வரும் ரமழானில் முழுமையாக எல்லா நோன்புகளையும் நோற்கும் குழந்தைகளுக்கு பரிசு தருவதாகக்கூறி இப்போதிருந்தே ஊக்குவிக்கலாம்.

குழந்தைகளிடையே அதிக நோன்புகளை நோற்பது, குர்ஆனை அதிகம் ஓதுவது, குர்ஆன் ஸூறாக்கள் மனனம், அதிக ஹதீஸ் மனனம், இஸ்லாமிய அறிவு என்பவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகளை வைக்கலாம்.

அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதற்கும் மனனமிடவும் ஆசையூட்டுதல்

நோன்பும் அல்குர்ஆனும் மறுமை நாளில் அடியானுக்காகப் பரிந்துரை செய்யும். நோன்பு அல்லாஹ்விடம், ‘இரட்சகனே! நான் இந்த அடியானை உணவு முதலான விருப்பங்களிலிருந்து தடுத்துவைத்தேன். நான் இவனுக்காகப் பரிந்துரை செய்கின்றேன்’ என்று கூறும். அல்குர்ஆன் அல்லாஹ்விடம், ‘இரவுப் பொழுதுகளில் நான் இந்த அடியானை விழித்திருக்கச் செய்தேன். எனவே நான் இவனுக்காகப் பரிந்துரை செய்கின்றேன்’ எனக் கூறும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (ஆதாரம்: அஹ்மத், ஹாகிம்)

அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “எவரொருவர் அல்குர்ஆனை ஓதுகின்றாரோ அவருக்கு ஓர் எழுத்துக்கு பத்து நன்மை வீதம் வழங்கப்படும்” என அறிவித்தார்கள்.  (ஆதாரம்: திர்மிதி)

சிறுவர்களுக்கு நோன்பு நோற்கப் பயிற்சியளித்தல்

ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுவர்களிடையே பரிட்சார்த்தமாக நோன்பு நோற்கச் செய்யலாம்.

அவர்களை நம்மோடு ஸஹர், இஃப்தார் செய்ய வைக்கலாம்

அவர்களுக்கு முடியுமானவரை நோன்பிருந்துவிட்டு இடையில் விடுவதற்கு அனுமதிக்கலாம். இதன் மூலம், நோன்பு நோற்பதற்கான படிமுறைப் பயிற்சி அவர்களுக்குக் கிடைக்கும். நோன்பு பற்றிய அறிவும் அவர்களுக்குக் கிடைக்கும்.

பெண்கள் இஃப்தார் சிற்றுண்டித் தயாரிப்புக்கு அதிக நேரம் விரயமாக்கக் கூடாது

ரமழானின் பயனை அதிகம் அடைந்து கொள்வதை முதன்மைப்படுத்துதல்.

சமையலறையிலேயே நாளில் பெரும் பகுதியைக் கழித்து பர்ழான அமல்களையும் கோட்டை விடுவதைத் தவிர்த்தல்.

வேலை நேரத்திலும் திக்ர், இஸ்திஃபார், குர்ஆனில் மனனமுள்ள பகுதிகளை ஓதுவதை அதிகப்படுத்துதல்

“இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானதாகும். (நன்மை-தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி. (பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.)”     (ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 6406)

ரமழான் என்பது வயிறுமுட்ட சாப்பிடுவதற்கான மாதமல்ல

ஓரிரு சிற்றுண்டி வகைகளோடு மட்டும் போதுமாக்கிக் கொள்ளுதல்; முடியுமானால் கடையிலிருந்து தருவித்துக் கொள்ளுதல்.

ஆண்கள் இதற்குப் புரிந்துணர்வோடு ஒத்துழைப்பு வழங்குதல்.

பெருநாள் ஷாப்பிங்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுதல்

ரமழானின் இறுதிப் பத்தில் வரக்கூடிய லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்ளும் முனைப்பில் நாம் இருத்தல் வேண்டும்.

அதிகம் பாவமன்னிப்புத் தேடுவதிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ர் செய்வதிலும், இஃதிகாப் இருப்பதிலும் கழிக்கவேண்டிய நாட்களை கடைத்தெருவில் ‘ஷாப்பிங்’ செய்வதற்காகக் கழிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல் சிறப்பானது.

தான தர்மங்களை அதிகப்படுத்துதல்

“பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்றார்கள்.  (அறிவிப்பவர் : அதீ இப்னு ஹாத்திம் (றழி), ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1417).

எப்படி நோன்பு நோற்பது?

ரமழான் மாதம் முழுதும் காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல், புகைபிடித்தல் முதலான நோன்பை முறிக்கக்கூடிய அனைத்துச் செயல்களிலிருந்தும் முற்றாகத் தவிர்ந்திருந்து நோன்பு நோற்றல் கட்டாயக் கடமையாகும்.

நோன்பின் நிபந்தனைகள்

முஸ்லிமாக இருத்தல்.

பருவமடைந்திருத்தல்.

புத்தி சுவாதீனமுடையவராக இருத்தல்.

நோன்பை நிறைவேற்றுவதற்குச் சக்தி உடையவராக இருத்தல்.

ஊரில் தங்கி இருத்தல். (பிரயாணத்தில்  இல்லாதிருத்தல்)

நோன்பாளி ஒருவரின் செயல்கள்

நிய்யத் (எண்ணம்) வைத்தல்

நபி (ஸல்) அவர்கள், “எவர் ஒருவர் பஜ்ருடைய நேரத்துக்கு முன் நோன்புக்கான நிய்யத்தினை வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு நோற்றல் இல்லை”  )ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், இப்னு ஹூஸைமா, இப்னு ஹிப்பான்).

அல்லாஹ்வை அதிகம் நினைவுகூர்தல்

அப்துல்லாஹ் இப்னு அனஸ் (ரழி) அவர்கள் கூறுவதாவது, “நோன்பாளி ஒருவர் அதிகமதிகம் குர்ஆன் ஓதுவதிலும் துஆ, திக்ர்களிலும் ஸதகா கொடுப்பதிலும் ஈடுபடுவதோடு, தீயவற்றைப் பேசுவதிலிருந்து நாவைப் பாதுகாத்துக் கொள்வதும் இன்றியமையாததாகும்.”    (ஆதாரம்: திர்மிதி)

ரமழான் என்பது குர்ஆனின் மாதமாகும்

அல்லாஹ் சொல்கிறான்: “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக்  கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம் மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க  வேண்டும். எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).” (2:185 )

பாவங்களிலிருந்து தவிர்ந்துகொள்ளல்

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ, அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும். (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும் பானத்தையும் இச்சையையும் விட்டுவிடுகிறார். நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும் (என்று அல்லாஹ் கூறினான்)  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (றழி), ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1894)

ஸஹ்ர் செய்வதில் பரக்கத்

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது”       (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (றழி),       ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1923)

நோன்பு திறத்தல்

நன்கு பழுத்த பேரீச்சம் பழத்தினையோ நீரையோ அவ்வாறின்றேல் வேறேதேனும் உணவினையோ உட்கொள்வதன் மூலம் நோன்பு திறத்தல் சுன்னத் ஆகும். (ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, ஹாகிம்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!’  (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி, ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1957)

நோன்பு திறக்கும் போது

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ َثَبَتَ الْأَجْرٌ إِنْ شَاءَ اللَّهُ

“தஹபBல் ளமஉ வப்Bதல்ல(த்)தில் உரூவ்கு வஸபB (த்)தல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்”  (தாகம் தீர்ந்தது; நரம்புகள் நனைந்தன; அல்லாஹ் நாடினால் நன்மைகள் உறுதியாகிவிட்டன) (ஆதாரம்: அபூதாவுத், ஹாகிம், பைஹகி)

நோன்பாளிகளை நோன்பு திறக்க வைத்தல்

“யாரேனும் ஒருவர் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்வாரேயானால், அவர் அந்த நோன்பாளி பெற்ற அதேயளவு நன்மையைப் பெறுவார்.”   (ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், அஹ்மத்)

லைலத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்தல்

ரமழான் இறுதிப் பத்து நாட்களிலும் ஆயிரம் மாதங்களை விட உயர்ந்த லைலத்துல் கத்ர் இரவுக்காகத் தயாராகுதல். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி),  ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1901)

லைலத்துல் கத்ரின் மகத்துவம்

“நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனைக் கண்ணியமிக்க ஓர் இரவில் இறக்கிவைத்தோம்.” (அல் கத்ர்:1)

“அந்த கண்ணியமிக்க இரவின் மகிமையை  நீர் அறிவீரா?”     (அல் கத்ர் : 2)

கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மேலானதாகும்”  (அல் கத்ர் :3)

ரமழானின் இறுதிப் பத்து நாட்கள்

ரமழான் இறுதிப் பத்து நாட்களைப் பற்றி ஆயிஷா (ரழி) பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் வேறெந்த மாதத்தை விடவும் ரமழானின் இறுதிப் பத்து நாட்களும் வணக்கவழிபாடுகளுக்காக அதிக சிரமமெடுத்துக் கொள்பவார்களாக இருந்தார்கள்”  (ஆதாரம் : திர்மிதி)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!”  (அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி),  ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 2017

“(ரமழானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!”  (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி,  ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 2024)

லைலத்துல் கத்ர் இரவு

அன்னை ஆயிஷா (ரழி)அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘லைலத்துல் கத்ர் இரவை (இதுதான் என)அறிந்துகொண்டால் நான் எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும் எனக் கேட்டபோது, “அல்லாஹூம்ம இன்னக்க அஃபூவன் துஹிப்புல் அஃப்வஃ ஃபு அன்னி – யா அல்லாஹ்!’ (அல்லாஹ்வே! நீ எப்போதும் மன்னிப்பவனாக இருக்கின்றாய். நீ மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே, என்னையும் மன்னிப்பாயாக!) எனும் துஆவை ஓது மாறு பணித்தார்கள் ‘ (ஆதாரம்: திர்மிதி, இப்னு மாஜா)

ஸகாத்துல் பித்ர் கொடுத்தல்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமழான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக்காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள்  ‘குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்‘ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 3220 இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஃபாத்திமா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.)

உம்றா செய்தல்

இப்னு அப்பாஸ் (றழி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்… இப்னு அப்பாஸ் (றழி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான் அதை மறந்துவிட்டேன். என அவரிடமிருந்து அறிவிக்கும் அதா (றஹ்) கூறினார்: ‘நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?’ எனக் கேட்டார்கள். அதற்கவர்,” எங்களிடம் இருந்த தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும் (என்னுடைய கணவரும் மகனும்) ஏறிச் சென்று விட்டனர். இன்னொரு ஒட்டகத்தை விட்டுச் சென்றுள்ளனர். அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ரமழான் வந்துவிட்டால், அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமழானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்’ எனக் கூறினார்கள். அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹ்  புகாரி, ஹதீஸ் எண்: 1782)

இஃதிகாஃப்

ரமழான் இறுதிப் பத்து நாட்களும் மஸ்ஜிதில் தங்கி (இஃதிகாஃப்) இருத்தல்.

“நபி(ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!”  (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி, ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 2025)

“நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 2026)

இஃதிகாஃப் இருப்பதற்குரிய நிபந்தனைகள்

1. நிய்யத்

2. முஸ்லிமாக இருத்தல்.

3. புத்தி சுவாதீனமுடையவராக இருத்தல்.

4. பருவமடைந்திருத்தல்.

5. குளிப்புக் கடமையிலிருந்து நீங்கியிருத்தல்.

6. இஃதிகாஃப் இருக்கும் ஸ்தானத்தில் தரித்திருத்தல்

நோன்பு நோற்றுள்ள நிலையில் பல்துலக்குதல்

ஆமிர் இப்னு ரபீஆ (ரழி) கூறுவதாவது, “ நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் பலதடவை பல்துலக்கினார்கள்.” (ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத், திர்மிதி)

நோன்பாளி ஒருவர் கண்டிப்பாகத் தவிர்ந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்

பொய் பேசுதல்

கோள் சொல்லுதல்

புறம் பேசுதல்

கடுஞ்சொற்களைப் பிரயோகித்தல்

தீய செயல்களில் ஈடுபடுதல்


பொய்யும் அறிவீனச் செயலும்

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பொய்யான பேச்சையும் அறிவீனமான நடவடிக்கைகளையும் விட்டுவிடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை”  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (றழி),  ஆதாரம் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1903)

நோன்பை முறிக்கும் செயல்கள்

நன்கு அறிந்துகொண்டே உணவு, பானங்களை உட்கொள்ளல் அல்லது அதுபோன்ற செயல்களில் ஈடுபடுதல். “யாரேனும் ஒருவர் மறதி காரணமாக உணவையோ பானத்தையோ உட்கொண்டு விட்டால் அவர் தனது நோன்பைக் கைவிடாது பூரணமாக்கட்டும். நிச்சயமாக அல்லாஹ்வே அவருக்கு உணவளித்தான்.” ‘ (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், திர்மிதி, நஸஈ).

வாய் வழியாகவோ அல்லது மூக்குத் துவாரம் மூலமாகவோ ஏதேனும் வயிற்றை அடைதல்.

வேண்டுமென்றே வலிந்து வாந்தியெடுத்தல் கூடாது.  “எவரேனும் வேண்டுமென்றே வாந்தி எடுப்பாரேயானால் அவர் அந்த நோன்பைக் ஷகழா’ச் செய்யவேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்   (ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, அஹ்மத்)

விந்து வெளியாதல்.  முத்தமிடுதல்- அணைத்தல் முதலான செயல்களால் விந்து வெளியாதல்.

இரத்தம் குத்தியெடுத்தல்

மாதவிடாய், பிரசவம் என்பனவற்றால் இரத்தம் வெளியேறுதல்

உடலுறவு கொள்ளுதல்.

நோன்பு நோற்பதிலிருந்து சலுகை பெற்றவர்கள்

“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம் மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).” (அல்குர்ஆன் 2:185)

நோயாளிகள்

பிரயாணிகள் “பிரயாணிக்கு நோன்பு நோற்றல் கட்டாயம் இல்லை” என்று நபி (ஸல்) நவின்றார்கள். (ஆதாரம்: முத்தஃபகுன் அலைஹி)

மாதவிடாய், பிரசவ ருது ஏற்படுதல்.  ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவதாவது, “மாதவிடாயினால் விடுபடும் நோன்புகளைப் பின்னர் “கழா”ச் செய்யுமாறு நாம் ஏவப்பட்டோம். ஆனால், விடுபட்ட தொழுகைகளைக் “கழா”ச் செய்யுமாறு ஏவப்படவில்லை”  (ஆதாரம்: முத்தஃபகுன் அலைஹி )

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்

வயோதிகர்

ஆபத்தான நிலைமைக்கு உட்பட்டவர்

நோன்பின் மகத்தான பயன்கள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 1896)

நோன்பும் அல்குர்ஆனும் மறுமை நாளில் அடியானுக்காகப் பரிந்துரை செய்யும். நோன்பு அல்லாஹ்விடம், “இரட்சகனே! நான் இந்த அடியானை உணவு முதலான விருப்பங்களிலிருந்து தடுத்துவைத்தேன். நான் இவனுக்காகப் பரிந்துரை செய்கின்றேன்’என்று கூறும். அல்குர்ஆன் அல்லாஹ்விடம், ‘இரவுப் பொழுதுகளில் நான் இந்த அடியானை விழித்திருக்கச் செய்தேன். எனவே நான் இவனுக்காகப் பரிந்துரை செய்கின்றேன்” எனக் கூறும்.  (ஆதாரம்: அஹ்மத், ஹாகிம்)

உமாமா அல்பாBஹிலி (ரழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்விடத்தில் நன்மையைப் பெற்றுத்தரும் ஒரு செயலை அறிவிக்குமாறு நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு அன்னார், ‘நான் உம்மை நோன்பு நோற்குமாறு உபதேசிக்கின்றேன். அதற்கு ஒப்பான வேறொரு வணக்கம் இல்லை” என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: நஸஈ)

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:- “நோன்பானது ஒருவனை நரகைவிட்டும் காக்கும் கேடயமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள்குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: அத்தபBரானி ஃபில் கபீBர்).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- “நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவை நோன்புத் துறக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும் மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற மகிழ்ச்சியும் ஆகும் என அபூ ஹுரைரரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 7492)

“நம்பிக்கை கொண்டு (நற்கூலியை எதிர்பார்த்து) ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்” என்று இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (றழி) அறிவித்தார்.  (ஆதாரம்:ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 37)

நோன்பின் மூலம் கிடைக்கப்பெறும் பயிற்சி எவ்வாறு வாழ்க்கையை வளப்படுத்துகிறது?

என்னை வணங்குவற்காகவே அன்றி வேறெதற்காகவும் நான் மனு, ஜின் வர்க்கங்களைப் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 51:56)

என்ற இறை கட்டளையை உயிரோட்டமுள்ளதாக்கி, முழு வாழ்வையும் வணக்கமாக்குவதற்கு உரிய  பயிற்சியை வழங்குகிறது.

“உமக்கு யகீன் எனும் மரணம் வரும்வரையில் உமது இரட்சகனை வணங்கிக்கொண்டிருப்பீராக.’”          (அல்குர்ஆன் 15:99)

நோன்பு தந்த பயிற்சியினால் உள்ளங்களில் தக்வா அதிகரித்து வணக்க வழிபாடுகளில் அதிக ஆர்வமும் ஊக்கமும் ஏற்படுதல்.

தொடர்ச்சியான செயற்பாடு

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (ரமழான் மாதத்தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக் கொண்டு (அதில்) தொழுவார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக்கொண்டு அதன் மீது அமர்வார்கள். மக்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் (இவ்வாறு இரவில் வந்து தொழும்) மக்கள் (எண்ணிக்கை) அதிகமாகி விடவே, நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, ‘மக்களே! உங்களால் இயன்ற (நற்)செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில்,நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்’ என்றார்கள். (ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண்: 5861)

சுன்னத்தான நோன்புகள்

ஷஃபான் மாத நோன்பு:-

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  “நபி (ஸல்) அவர்கள் ஷஃபான், அதையடுத்து வரும் ரமழான் ஆகிய இருமாதங்களிலும் நோன்பு நோற்பதை மிக விரும்பினார்கள்” (ஆதாரம்: அபூதாவுத், நஸஈ, அஹ்மத்)

“நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் தவிர்ந்து அதிகமாக நோன்பு நோற்ற மாதம் ஷஃபான்  ஆகும்”                (முத்தஃபகுன் அலைஹி)

விடுபட்ட நோன்புகளைக் கழாச் செய்தல்

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எனக்கு ரமழான் மாதத்தில் விடுபடும் நோன்புகளைக் கழாச் செய்துகொள்ள ஷஃபான் மாதத்தைத் தவிர வேறு மாதங்களில் அவகாசம் கிடைப்பதில்லை.” (ஆதாரம்: முத்த.பகுன் அலைஹி)

ஷவ்வால் மாத நோன்பு

ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத் ஆகும். “எவரேனும் ஒருவர் ரமழானில் நோன்பு நோற்றபின் அதையடுத்த ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்றாரோ அவர் அந்த வருடம் முழுவதும் நோன்பு நோற்றதாகக் கருதப்படுவார்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.                    (ஆதாரம்: முஸ்லிம்).

ஆஷூரா தின நோன்பு

இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் சுன்னத்தான நோன்பின் சிறப்புப் பற்றி நபிஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: “ரமழானின் (நோன்புக்குப்) பின் மிகச் சிறந்தது முஹர்ரம் மாதத்தில்நோற்கும் நோன்பாகும்” (ஆதாரம்: முஸ்லிம்). (

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: “நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான்நோன்பு கடமையாக்கப்பட்டதும் விரும்பியவர் ஆஷூரா நோன்பு நோற்றனர்; விரும்பாதவர் விட்டுவிட்டனர்!” (ஸஹீஹ்புகாரி, ஹதீஸ் எண்: 2001)

நபி (ஸல்) அவர்கள்: “ஆஷூரா நோன்பானது கடந்து போன வருடத்தின் அனைத்துப் பாவங்களுக்கும் பிராயச் சித்தமாகஅமைந்துவிடுகின்றது” என்றார்கள்.  (ஆதாரம்: முஸ்லிம்)

அரஃபா தின நோன்பு

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, “அரஃபா நோன்பானது கடந்து போன வருடத்தினதும் பிறக்கவுள்ள வருடத்தினதும்பாவங்களுக்கான பிராயச் சித்தமாக அமைந்துவிடுகின்றது” என்றார்கள்.  (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸஈ, இப்னுமாஜா).

ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள்

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதாக இருந்தால் பிறை 13,14,15 ஆகியஅய்யாமுல் பீல்) நாட்களில் அதனை நிறைவேற்றுங்கள்” என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி, நஸஈ). (

திங்கள், வியாழக் கிழமைகள்

திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு நோற்பது சுன்னத் ஆகும். “திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அடியானின் வணக்கவழிபாடுகள் சமர்ப்பிக்கப்படும். அதனால், நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் எனது நற்செயல்கள் அல்லாஹ்வின் முன் சமர்ப்பிக்கப்படுவதையே விரும்புகின்றேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸஈ).

ஒரு நாள் விட்டு ஒருநாள்

“நோன்புகளில் சிறந்தது நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அன்னார் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்றார்கள்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

இறைதிருப்தியைப் பெறுவோம்!

அதிகமதிகம் நல்லமல் செய்வோம்

பாவமான செயல்களை விட்டும் தவிர்ந்துகொள்வோம்

அதிகமதிகம் பாவமன்னிப்புக் கோருவோம்

அல்லாஹ்வை எந்நேரமும் திக்ர் செய்வோம்

ரமழானில் பெற்ற பயிற்சியை வாழ்நாள் முழுதும் கடைபிடிப்போம். அல்லாஹ் நம் அனைவர் பணிகளையும் பொருந்திக்கொள்வானாக!

நன்றி:- தொகுத்த லறீனா அப்துல் ஹக்

பிரிவுகள்:இஸ்லாம், ரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,