தொகுப்பு

Posts Tagged ‘யாசர் அரஃபாத்’

ஒரு பக்க நியாயம் – யாசர் அரஃபாத்

ஓகஸ்ட் 18, 2011 பின்னூட்டம் நிறுத்து

உடையவர் காணும்
உடல் உறுப்பை;
அந்நியர் காண்பது சரியா;
அரித்தெடுக்கும் பார்வைக்காகத்
திரையிடச் சொல்வதுப் பிழையா!

விழிக் காணும் சருமம்
விரல் தொடத் தூண்டாதா;
உணர்ச்சிக்கு
உரம் இட்டப் பின்னேப்
படித்தாண்டத் தோன்றாதா!

பார்வை மட்டும்தானே;
அழகைப் பார்க்கட்டும்;
என விழிகளுக்கு
விருந்து வைப்பது முறையா;

பசிக்கும் பார்வைக்கு
அணைப்போடச் சொல்லித்
திரைப்போடச் சொல்வது சிறையா!

மரத்துப்போன மனதினால்
மரித்துப்போன வெட்கம்;
கறுத்துப் போன
உள்ளத்தை மீட்டெடுப்பதில்
என்ன தயக்கம்!

மற்றவர் அணிந்தால்
வாய் மணக்க உரைக்கும்
ஒழுக்கமுறை என்று;
நாங்கள் அணிந்தால்
மட்டும் வாய் குரைக்கும்
அடக்கு முறையென்று!நன்றி:–யாசர் அரஃபாத்

நன்றி:- என் பக்கம் http://itzyasa.blogspot.com

இறுதி பிடி… – யாசர் அரஃபாத்


தொழுகை மறந்தக்
காலமும்;
உறவுகளை ஒதுக்கித்
தள்ளிய நேரமும்
நினைக்கையிலே;
குமுறும் நெஞ்சம்
மரணத்தைக் கண்டு
வெடித்து நிற்கிறது!

வறண்ட விழிகள்
வழியைப் பார்த்து நிற்க;
வலிக்கொண்ட மேனியோக்
கதறி நிற்க;
முட்டி மோதும் மூச்சியோத்
தொண்டைக்குழியை
குத்திக் கிழிக்க;
புரியாதப் பயம்
தொற்றிக்கொள்ள;
காரணமே அறியாமல்
கண்கள் நீர் சொரிய!

நிமிடங்களே எனத்
தெரிந்தப்பின்னும்;
கெஞ்சிக் கேட்கும் உள்ளம்;
இன்னொரு முறை
அவகாசம் கிடைக்காதா
என ஏங்கித் தவிக்கும் மனம்!

முந்தவும் செய்யா;
பிந்தவும் செய்ய;
மூச்சைப் பறிக்கும்
மரணம் வந்தப்பின்னே;
குமுறி அழுது என்னப் பயன்;

இருக்கும் காலம்
இறைவணக்கத்தை
இறுக்கப் பிடி;
இல்லையேல்
இறுதி நேரம்
இருக்காது
இலகுவாய்
இறைவனின்
இறுதிப்பிடி!

நன்றி:–யாசர் அரஃபாத்

நன்றி:- என் பக்கம் http://itzyasa.blogspot.com

லஞ்சம் – யாசர் அரஃபாத்


bribery.jpg

மூலை முடுக்கானாலும்

மூளையைத் தட்டுவேன்;

கொடுத்துச் சரிக்கட்டினால்

யார் வாயையும் கட்டுவேன்!

விரலில் ஒளித்துக்

கரத்தில் திணிப்பான்

அவன் வேலை முடிய;

பற்களை இளித்துப்

புறங்கையை நீட்டுவான்

வேலையைச் செய்ய!

கடமையைச் செய்யவேக்

கண் தேடும் என்னை;

கொடுப்பவன்;

திட்டித் தீர்த்து

மனதாலே வீசுவான்

மண்ணை!

அடிமைப் பட்டுப்போனப் பணத்திற்கு;

அடிமாடாய் என்னிடம்;

முகம் சுளிப்பான் பணத்திற்கென்றால்;

கொண்டுச் செல்வேன் பெண்ணிடம்!

வண்ண வண்ண அலங்கரமாய்

வீட்டின் முன்னே நிற்பேன்;

வாரி அணைக்கும் மனிதனின்

ஆசையைக் கண்டு மலைப்பேன்!


எந்தப் பொருளில்
வந்தாலும் எனக்குப் பெயர்
இலஞ்சம்;
தடுமாறும் மனிதன் என்னிடம்
அடைவான் தஞ்சம்!

நன்றி:–யாசர் அரஃபாத்

நன்றி:- என் பக்கம் http://itzyasa.blogspot.com

இப்படிக்கு உன் தந்தை – யாசர் அரஃபாத்

ஒக்ரோபர் 17, 2010 1 மறுமொழி

Father.jpg

எட்டிப்பார்க்கும் உன்

எதிர்காலத்திற்கு

மிச்சமிருக்கும் என் வருங்காலமும்

வளைகுடாவில்!

வருடத்திற்கு ஒரு முறை

வந்துப்போனாலும்

நொந்துப்போவேன் தினம்;

நெருங்காத உனைக்கண்டு

நொருங்கிப்போகும் மனம்!

கடல்கடந்து வந்தாலும்

மனம் மட்டும் ஏங்கும்;

தூங்காத நினைவுகளுக்கு

தாலாட்டாய் உன் புகைப்படம்!

புத்தம் புது ஆடைகள்

நீ அணிய;

வளைகுடாவில் நான் பணிய!

மிதிவண்டிக் கற்றுத்தர

நானில்லை உன் அருகில்;

மிதிப்பட்டு அனுப்புவேன் பணம்;

உனக்கு மிதிவண்டி வாங்கித்தர!

மறைந்திருந்து எல்லாம்

நான் செய்வதால்;

மறந்திருப்பாய் எனை நீ!

உன் படிப்பென்னும்

கனவுகளுக்கு விலை;

விலைப்போகும் பாலையில்

என் நிலை!

உன் வருங்காலம் சிரிக்க

என் நிகழ்க்காலம்

நித்தமும் மறந்துப்போன

புன்னகையுடன்!

எழுதமறந்த சரித்திரத்தில்

என்னையும் உன் அன்னையையும்

சேர்த்துக்கொள் தியாகிகள் என!

மறந்திடாதே பின் மறைக்கப்பட்டுவிடும்

இந்திய சுதந்திரத்தில்

முஸ்லிம் பங்கெடுப்பைப் போன்று!

கனல்கொண்டத் தேசத்தில்

நேசத்திற்கு விலைப்போன

அப்பாவி அத்தாக்களில் நானும் ஓருவன்!

இப்படிக்கு உன் தந்தை!


மணக்கூலி (கைக்கூலி) – யாசர் அரஃபாத்

செப்ரெம்பர் 24, 2010 பின்னூட்டமொன்றை இடுக

யாசகம் கேட்க

வாசகத்துடன் என் வாசலுக்கு;

படித்த மாப்பிள்ளை என்று;

அடையாளத்துடன் அறிமுக விழா

உன் புகைப்படத்துடன்!

உன்னை விலைப்பேசி

உறவைக் கொல்லக் கைக்கூலி;

மணாளியாய் வந்து

மசக்கையாவதற்கா மணக்கூலி!

எல்லாம் துறந்து

உன்னை மணந்து

உயிராய் வரும் என்னிடமே

தட்சணையா!

காலத்திற்கும் சேர்ந்து

கணவன் நீ சோர்ந்தால்

மனதிற்கு மருந்தாய்

இல்லறத்திற்குக் கனிவாய்

இருப்பதற்கா இந்தத் தினக்கூலி!

உன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய

என் பெற்றோருக்கு அபராதமா;

உனக்கான தலைமுறையை

தருவதற்கான பரிகாரமா!

மணம் முடிக்க

பணம் பறிக்கும்

உனக்குப் பெயர் மாப்பிள்ளையா

கைப்பிடிக்கவேக் கைக்கூலிக் கேட்கும்

நீயெல்லாம் ஆண்பிள்ளையா!

நன்றி:–யாசர் அரஃபாத்

கவிதைகள்

அரிய ஆமை – யாசர் அரஃபாத்


உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசத் தெரியாது
அதனால்
புறம் மட்டும் பேசுவோம்!

ஒன்றுக் கூடி நிற்போம் என்று
குழு குழுவாகக்
குரல் கொடுப்போம்
தனித் தனியாக!

கட்டி அணைப்போம்
மாற்றாரை;
எட்டி உதைப்போம்
உறுப்பின் ஒரு பகுதி சதையை!

துள்ளி எழுந்தோம்
கிள்ளி எறிய அறியாமையை;
ஒற்றுமை என்றால்
ஒய்யாரமாய் நடக்கும்;

நாங்களெல்லாம் அரிய ஆமை!!

மறுமை என்பதை
மறந்துவிட்டு
மணிக்கணக்கில் பேசுவோம்
மேடைப் போட்டு;

ஒற்றுமை என்றுச் சொல்லி
தோளைத் தொட்டுச் சொன்னால்
நடக்கும்
எங்களுக்குள் ஜல்லிக்கட்டு!!

வரிக்கு வரி பதில் சொல்லுவோம்
குர்-ஆன் சுன்னா வழிமுறையில்;
எதிர்த்துக் குரல் கொடுத்தால்
குரல்வலையை நெரிப்போம் வலி முறையில்!!

வேண்டாம் இந்த விதிமுறை;
என்னாவாகும் நம் தலைமுறை!
கிடப்பில் போடுவோம் தற்புகழ்ச்சியை;
வெறுப்பால் காட்ட வேண்டாம் காழ்ப்புணர்ச்சியை!!

ஆளுக்கொரு மூலையிலே அமைப்பாக;
சொல்லிச் சொல்லி
சுருண்டுவிட்டோம் களைப்பாக!!

வேண்டிக் கேட்பதெல்லாம்
நமக்குள் ஒற்றுமையை;
வேரருத்துவிடுவோம் நம் வேற்றுமையை!!

கரத்தோடு கரம் கோர்த்து
மனதோடு மார்க்கம் நுழைத்து
சொத்தான சுவர்க்கம் செல்ல
சத்தான அன்பைத்தருவோம்;

ஆதரவுத்தருவோம்!!!

நன்றி:–யாசர் அரஃபாத்

காலாவதியாவதற்கு முன் – யாசர் அரஃபாத்


காலாவதியாவதற்கு முன்

கடல் கடந்து என்

கரம் சேர்ந்து இருக்கும் உன்

கடிதம்!

அழிந்த எழுத்துகளும் உன்

அழுகைதான் காரணம் என

சொல்லாமல் சொல்ல;

கனத்த இதயமோ

ரணமானது மெல்ல!!

வழியில்லாமல்

வளைகுடாவில் நானும்;

விதியே என வீட்டிற்குள் நீயும்!

என் சொந்தங்களை கரையேற்ற

உன் சோகம் பணயமாக

பயணம் வந்தேன்

பாலைவனத்திற்க்கு!

என்னோடு சேர்ந்து

இன்னுமொரு கூட்டம்

வலியோடு இருந்தாலும்

வாய் விட்டு சிரிப்போம்!

கலகலப்பாக

கட்டிலுக்கு சென்றாலும்

கணப் பொழுதில்

கனமாகும் நெஞ்சம்;

உன் நினைவோடு

கனவுக்கு காலடிவைத்தாலும்

அங்கேயும் நீ கேட்பது என்னவோ

என் விடுமுறையைப் பற்றிதான்!!

பசியோடு இருந்தாலும் என்

பக்கத்தில் நீ வேண்டும்;

நடத்தியதுப் போதும் குடும்பம் பாலையோடு

முடித்துவிட்டு வந்துவிடு நாளையோடு என்று!

வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்

வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;

காலத்தோடு வந்துவிடுகிறேன்

காலாவதியாவதற்கு முன்னே

வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை

காலம் போனப் பின்னே!

நன்றி:–யாசர் அரஃபாத்

ஏதாவது செய்ய – யாசர் அரஃபாத்


வலி சொல்ல வந்த இடத்தில்
வரிக்கு என்ன விதிமுறை
என்றாவது மாறுமா என் தலைமுறை!

கல்லாத கல்வியால்
கடல்கடந்து நாங்கள்;
சொத்தோடு சோகத்தையும்
சுமந்துக் கொண்டு வருடாவருடம்
எங்கள் வீட்டிற்கு!!

துக்கம் என்
தொண்டையை அறுக்க;
தோள்கொடுக்க எவருமுண்டோ என
இயக்கங்களை நான் நோக்க;
இல்லாதது கல்லாமை மட்டுமல்ல;
ஒடிந்துப் போன ஒற்றுமையும்தான்
எனப் புரிந்துக் கொள்வதற்க்குள்
புதுப் புது இயக்கங்கள்!!

எல்லோரும் நினைக்கிறார்கள் ஏதாவது செய்ய;
எல்லோரும் நினைக்கிறார்கள் தாம் மட்டும் செய்ய!!

அனைத்தயும் செய்து அட்டைப்படம் ஜொலிக்கும்;
எடுத்துக் காட்டி இன்னொன்று காழ்ப்புணர்ச்சியைக் காட்டும்!!

மார்தட்டிச் சொல்வோம் மார்க்கம் ஒன்று;
மாலையிலே ”மைக்”கைப் பிடித்து மல்யுத்தம் உண்டு!

இனியாவது
கசப்புகளைக் காலாவதியாக்கி
கரம் கோர்ப்போம்
பகைத் தீர்ப்போம்!

உரமாகுவோம் தீனுக்காக;
உரையாட வேண்டாம் தீனிக்காக;
பக்கங்கள் நிரம்பிவிட்டன வீணுக்காக;
வெறுப்பால் வெற்றிப் பெறப்போவது யாருக்காக!!

ஒட்டியிருப்பது உதடுகளில் நம்
சகோதரனின் கறி;
இயக்கம் என்ற பெயரால் ஏன் இந்த வெறி!

வியப்பால் பார்க்கும் உலகமகா மார்க்கம்
நமக்குள் மட்டும் ஏன் இவ்வளவு தர்க்கம்!

வழிக்காட்டுவோம்
வருங்கால தலைமுறைக்கு;
விட்டுவிட்டால்
வீதியில்தான் நிற்ப்போம்!

நன்றி:–யாசர் அரஃபாத்

பாலையில் நீ – யாசர் அரஃபாத்


மணம் வீசும்

மண வாழ்வில்

மணாளனாய் நீ எனக்கு;

வெட்கம் தீர்வதற்கு முன்னமே

தீர்ந்துவிட்டது உன் விடுப்பு;

சுற்றம் சூழ

தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்

பாலைக்கு!

வீங்கிய இமைகளும்

தூங்க மறுக்க;

சாயம் போகா மருதாணியும்

புதுப்பெண் என்ற பட்டமும் இன்னும் எனக்கு!!

மருந்தாய் உன் குரல் மட்டும்;

விருந்தாய் உனக்கொரு செய்தி;

சிக்கிய எச்சிலோடும்

சிணுங்கிய கண்களோடும்

இல்லாத வார்த்தைகளால்

சொல்லாமல் நான் தவிக்க;

வருட வேண்டிய நீயோ

வருத்தெடுத்துவிட்டாய் வார்த்தைகளால்;

யோசித்துவிட்டு அழைப்புக் கொடு என்று!!

புன்னகையைக் கூட

பூக்கிறேன் என்றதுக்கு பின்தான்

புரிந்துக்கொள்ளும் தூரத்தில்

நீயும் நானும்!!

கேட்டது கிடைக்கும் மசக்கையில்

என்று யாரோ சொல்ல;

கேட்டேன் உன்னை ஒரு முறை வா என்று!!

இதோ இதோ என்று

இன்னொரு வருடமும் ஒடிவிட்டது;

என் மனமும் ஒடிந்துவிட்டது!!

எங்களை வாழ வைப்பதாக எண்ணி

பாலையில் நீ;பாதியில் நம் உறவு;

நீயிருந்தும் முதிர்க்கன்னியாக நான்

காய்ந்துப் போன மனதுடன்

தீய்ந்துப் போன வயதுடன்

இறுதிவரை இருந்திருக்கலாம் மகளாக

என் பெற்றோருக்கு!!

நன்றி:–யாசர் அரஃபாத்

எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் – யாசர் அரஃபாத்


கடக்கும்காலங்களுக்கு நடுவே
கானல் நீராய் நம்
உறவுகள்!!

போருக்குச் செல்வதைப் போலவே
புறப்படுகிறோம்
நாட்டை விட்டு;
நாதியற்று!!

வயதின்
முக்கால்வாசி
முடிந்துவிட்டது
கவலைபட்டே;
சிரிக்கும் கொஞ்ச நேரமும்
சில்லறைக்காக ஏங்குகிறது
கறைந்துவிடுமோ கைப்பேசியின் தொகை!!

நீரிலே மிதக்கும்
என் விழிகள்;
நீயில்லாமல் தடுமாறும்
என் வழிகள்!!

அனல் காற்றும்
அங்கலாய்க்கும் என்
உள்ள சூட்டினைக் கண்டு!!

பணம் மட்டும்
குறிக்கோளாய்
பலநாள்;
சேர்த்து சேர்த்துப்
பார்த்தாலும்
சேரவில்லை எதுவும்;
என்னையும் உன்னையும் போல்!!

பள்ளிக்குச் செல்லும்
பிள்ளையும்;
பாடப்புத்தகத்தில் என்
புகைப்படம்;
அத்தாவை அறிமுகப்படுத்த!!

நெடுநாள் கழித்து
நாடு திரும்பியதால்
புகைப்படத்தோடு என்னை
பொருத்தம் பார்க்கும் என் பிள்ளை!!

எல்லோரும் சிரித்தாலும்
எல்லைத் தாண்டிய
பயங்கரவாதம்
இதுதான்;
கொஞ்சி
கெஞ்சிப் பார்த்தாலும்
சொல்ல மறுக்கும் என் பிள்ளை
அத்தா என்று புகைப்படத்தைத் தவிர்த்து!!

நன்றி:-யாசர் அரஃபாத்

***************