தொகுப்பு

Posts Tagged ‘பெற்றோர்கள்’

மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்! – ரேவதி


மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்

”பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகிவிட்டாள்!?” – சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல்களை இப்போது அதிகம் கேட்க முடிகிறது. 

10 வயதில் பாவாடை அணிந்த  பட்டாம்பூச்சியாகக்  குதூகலித்தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக்கிறது. உறவுக்காரர்களின் மடியில் படுத்துறங்கி, அவர்களின் விரல் பிடித்து வெளியிடங்களுக்குச் சென்று ஆனந்தப்படும் வாய்ப்புகள் இப்போதைய சிறுமிகளுக்கு வாய்ப்பது இல்லை. காரணம், பள்ளிக்குச் செல்லும் பால்யம் மாறாத பருவத்திலேயே உடலாலும் உணர்வாலும் அவர்கள் பெரும் மாற்றத்தைச் சந்திக்கின்றனர்.

 

10 வயதுக்குள்ளாகவே பூப்பெய்திவிடும்போது, உடல் – மனரீதியாக ஒரு சிறுமி எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? அவர்களுக்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

”சமீப காலமாக 8-9 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர். இதற்கு மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டு காரணங்கள். சுற்றுச்சூழல் சார்ந்த காரணியில், உடல் பருமன் அதிகரிப்பதுதான் பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடும், உபயோகப்படுத்தும் சில பொருட்களில் பெண் ஹார்மோன் என்று சொல்லக்கூடிய ஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருக்கிறது. ஈஸ்ட்ரோஜென்னில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென், பைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென் என்பது பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தப்பட்ட சில உணவுகள், ஃபேஷியல் போன்ற காஸ்மெட்டிக் பொருட்களில் அதிகமாக இருக்கிறது. சோயா போன்ற உணவுப் பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் அதிகமாக உள்ளது. ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற பொருட்கள் மற்றும் உணவு வகைகளைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகி, பூப்பெய்தலும் மிகக் குறைந்த வயதிலேயே நிகழ்கிறது.

மரபியல் ரீதியான பிரச்னையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். ஹார்மோன்கள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது ஒரு முக்கியக் காரணம். இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்னைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட ஹார்மோன்கள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன. சிறுவர்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி அருகில் கட்டி அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, விரைப்பையில் கட்டி போன்ற காரணங்களால் பருவம் அடைதல் விரைவாக நடக்கிறது (இது வெளியே தெரிவது இல்லை என்றாலும், மன ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தும்).

ஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பருவம் அடைவதற்கான அறிகுறிகள் 7-8 வயதுக்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்தால், உடனடியாக என்டோகிரைனாலஜி அல்லது மகப்பேறு மருத்துவர்களைச் சந்தித்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.

மிக சீக்கிரத்தில் பருவம் அடைவதால், ‘என்ன பிரச்னை?’ என்று நினைக்கலாம். ஒரு ஆண் அல்லது பெண் பருவம் அடையும்போது அவர்களின் எலும்பின் வளர்ச்சி நின்று, ஒன்றுகூடுகிறது. இதனால் கடைசிக் கட்ட உயரம் என்பது குறைகிறது. பெண்களுக்கு உடல் ரீதியாக, சமூக ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளும் வர ஆரம்பிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மருத்துவச் சிகிச்சை மூலம் பூப்பெய்துதலை சில வருடங்கள் தள்ளிப்போட முடியும்” என்கிறார் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முதுநிலை நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை நிபுணர் (என்டோகிரைனாலஜிஸ்ட்) ஆர்.பரத்.

குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை  நிபுணர் ஷைனி சந்திரன் கூறும் யோசனை இது…

”உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல… உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்னைக்கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்த வேண்டும்.

கொழுப்புமிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடையை அதிகரிக்க ஹார்மோன் மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே பிராய்லர் வகைக் கோழிக் கறியைத் தவிர்த்து, நாட்டுக் கோழி இறைச்சியைச் சாப்பிடலாம்.

கால்சியம் சத்துக்காக அதிக அளவில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் கால்சியமும் நிறைய உள்ளது” எனப் பட்டியல் இடுகிறார் ஷைனி.

சிறுமிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளைச் சரிசெய்வது குறித்துப் பேசும் மன நல மருத்துவர் செந்தில்வேலன், ”நம் கலாசாரத்தில், ‘ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், அவள் திருமணத்துக்குத் தயார்’ என்பதை ஊராருக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் சடங்கு செய்வார்கள். இது அந்தப் பெண்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பெண் பூப்படைந்துவிட்டாள் என்றாலே, ‘ஆண்கள் எதிரில் செல்லக் கூடாது; தொட்டுப் பேசக் கூடாது’ என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடுவார்கள். நேற்றுவரை தன்னுடன் விளையாடிய பையன்களுடன் பேசவே கட்டுப்பாடு எனும்போது, அது அவர்களது மனதில் பெரும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

பருவம் அடையும்போது செக்ஸ் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மன ரீதியாக சில பிரச்னைகள் எழும். வளர்நிலைப் பருவத்தில் ஒரு பெண் தன் வயதுக்கு நிகரான மற்ற பெண்களைப் பார்த்துத்தான் தன்னை ஒப்பிட்டுக்கொள்வார். பூப்பெய்தும் பருவத்தில், சக வயது நண்பர்களைவிட அவர்களது உயரம், உடல் எடை போன்றவை அதிகரிக்கும். இது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

தவிர, முகப்பரு, மாதவிடாய் போன்ற மாற்றங்கள் அசௌகரியமாக, தினசரி வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பதால், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரிக்கும்.

சிறு வயதிலேயே ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலும், மனதளவில் அவள் இன்னமும் குழந்தையாகத்தான் இருப்பாள். இந்த மாதிரியான நேரத்தில் பெற்றோர்கள் அவளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதற்குப் பதில், அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும். அவளுக்குப் புரியும் விதத்தில் சில விஷயங்களை பக்குவமாக, நாசூக்காகச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவளுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும் மன ரீதியாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்” என்கிறார் நம்பிக்கையோடு.

 

தள்ளிப்போடுவது சாத்தியமே!

சென்னை அடையாறைச் சேர்ந்த சைல்ட் மற்றும் அடலசன்ட் நியூராலஜிஸ்ட் மருத்துவர் வி.முருகன், ”சங்க காலத்தில், ‘பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை’ என வகைப்படுத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கைப் பருவங்களுக்கு இடையே இருந்த  இடைவெளி இப்போது சுருங்கிவிட்டது. 100 வருடங்களுக்கு முன்பு, சராசரியாக 15 முதல் 17-வது வயதில்தான் பெண்கள் பூப்பெய்தினார்கள். ஆனால், இன்றோ, 6 முதல் 13 வயதுக்குள் சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர்.

நம் மூளையில் ‘ஹைபோதலாமஸ்’(hypothalamus)  எனும் ஒரு பகுதி பிறந்ததில் இருந்தே சுவிட்ச் ஆஃப் மோடில்தான் இருக்கும். உரிய வயது வரும்போது அந்த சுவிட்ச் ஆன் ஆகி பால் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும். அடுத்து, ‘ஹைபோதலாமஸ்’ பிட்யூட்ரியைத் தூண்டிவிட்டு, மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோனைத் தூண்டும். அப்போது கட்டிகள் தோன்றும். இந்த கட்டிகள் ஹைபோதலாமஸிலும் வரலாம்; பிட்யூட்ரியிலும் வரலாம். பூப்பெய்தும் பருவத்தில், பெண்கள் உடல்வாகைப் பொறுத்து இந்தக் கட்டிகள் உருவாகும். சிறு வயதிலேயே கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகள் செய்து பூப்பெய்தும் காலத்தை தள்ளிப் போடலாம்.

குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு, பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் போதிய உடல் பயிற்சிகளையும் கற்றுத் தருவது பெற்றோர்களின் கடமை!”

நன்றி:- ரேவதிஆர்.பரத்ஷைனி சந்திரன்வி.முருகன்

நன்றி:- அவள் விகடன்

சின்ன வயசிலேயே.. பெரிய மனுஷியாவது….

பிரிவுகள்:கட்டுரைகள், மழலையில் மலரும் மொட்டுகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பெஸ்ட் ரிட்டையர்மென்ட் பிளான்… நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு… சொக்கலிங்கம் பழனியப்பன்

ஜனவரி 13, 2013 1 மறுமொழி

கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை பெரும்பாலான பெற்றோருக்கு அவர்களுடைய குழந்தைகள்தான் ஓய்வுக்கால முதலீடாக இருந்தார்கள். ஆனால், இன்றோ அந்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. இந்தக் காலத்து இளைஞர்கள் கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்தவுடனேயே கை நிறைய பணத்தைப் பார்க்கிறார்கள்.  பெற்றோர்களை விட்டு தூரத்தில் இருக்கும் நகரங்களுக்குச் சென்று வசிக்கிறார்கள். சிறிய குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும், இன்றைய பொருளாதாரத்தில் குடும்பம் என்று உண்டானவுடன் செலவுகள் பல வகைகளில் அதிகமாகிவிடுகிறது. கல்விக் கடன், வீட்டுக் கடன், கார் கடன், குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, சுற்றுலா, வீட்டுச் செலவு என இந்த செலவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போக, அந்தப் பட்டியலில் கடைசியில் இடம் பெறுபவர் களாக இருக்கிறார்கள் பெற்றோர்கள்.

ஆக, இன்றையப் பொருளாதாரச் சூழ்நிலையில், நமது ஓய்வுக்காலத்திற்கு நாம் யாரையும் நம்ப முடியாது – நம் குழந்தைகள் உட்பட. நமது ஓய்வுக்காலத்தில் நாம் தலைநிமிர்ந்து வாழ விரும்பினால், நம் கையில் பணம் இருந்தால்தானே நல்லது? ஓய்வுக்காலத்திற்கு முதலீடு அவசியம் என்கிறபட்சத்தில், எந்த வகையான முதலீடு சிறந்தது என்று பார்ப்பதுதானே உத்தமம்?

சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு உறுதியாகக் கிடைக்கும் ஒரு விஷயமாக இருந்தது பென்ஷன். ஆனால், இப்போது அங்குகூட நிலைமை மாறிவிட்டது. அரசாங்கம் அந்தப் பொறுப்பில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டுவிட்டது. பி.எஃப்.ஆர்.டி.ஏ. (பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி) என்ற அமைப்பை ஏற்படுத்தி, அரசு ஊழியர்களை நியூ பென்ஷன் ஸ்கீம் (என்.பி.எஸ்.) என்ற திட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டது. இன்றைய தினத்தில் என்.பி.எஸ்-ல் ஒவ்வொரு இந்திய குடிமகனும் சேர்ந்து முதலீடு செய்யலாம். என்.பி.எஸ். பற்றி விரிவாகப் பார்க்கும்முன் வேறு என்னென்ன திட்டங்கள் ஓய்வுக்காலத்திற்கு உள்ளன என்று பார்த்துவிடுவோம். பொதுவாக கீழ்க்கண்ட திட்டங்கள் இன்றைய தினத்தில் நமது ஓய்வுக்கால ஊதியத்திற்கு முதலீடு செய்ய ஏதுவாக உள்ளன:

1. அரசாங்க பழைய பென்ஷன்,

2. என்.பி.எஸ்.,

3. பி.பி.எஃப். (பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்),

4. இ.பி.எஃப். (எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட்),

5. இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் திட்டங்கள்,

6. நமக்கு நாமே சொந்தமாக முதலீடு செய்து கொள்ளும் பென்ஷன் திட்டங்கள்.

இனி, இத்திட்டங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகக் கீழே காண்போம்.

பழைய பென்ஷன் திட்டம்!

நாம் ஏற்கெனவே சொன்னபடி, புதிதாகச் சேரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் (ராணுவம் தவிர) மற்றும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கும் அரசின் பழைய பென்ஷன் திட்டம் செல்லாது. ஜனவரி 01, 2004 முதல் புதிதாகச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் என்.பி.எஸ். திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். எனவே, 2004 ஆண்டுக்கு முன்பு அரசு வேலையில் சேர்ந்தவர்களுக்கும் மற்றும் ராணுவத்தில் வேலையில் செய்பவர்களுக்கும்தான் மட்டுமே இத்திட்டம். ஒரு சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இன்னும் இந்தப் பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ளன.

என்.பி.எஸ். (நியூ பென்ஷன் ஸ்கீம்)

அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் (ராணுவம் தவிர) 2004 முதல் இந்த என்.பி.எஸ். திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களும் (தமிழ்நாடு உட்பட) இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை நிர்வகிக்க பென்ஷன் ஃபண்ட் மேனேஜர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கும் இத்திட்டம் 2009-ல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும்பாலான வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலம் இத்திட்டத்தில் மக்கள் சேர்ந்துகொள்ளலாம்.

இதில் டயர்-1, டயர்-2 என இருவகை கணக்குகள் உள்ளன. டயர்-1-ல் போடும் பணம் ஓய்வுக்காலத்தில்தான் எடுக்க முடியும். டயர்-2-வில் போடும் பணத்தை இடையில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை என்.பி.எஸ். திட்டத்தின்கீழ் கொண்டு வந்துள்ளன.

சிறிய அளவில் தங்கள் ஓய்வுக்காலத்திற்காக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காக, என்.பி.எஸ். லைட் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கும் அதிலிருந்து வரும் வருமானத்திற்கும் வருமான வரிவிலக்கு உண்டு. ஆனால், மெச்சூரிட்டி தொகைக்கு வரி உண்டு. இது இனிவரும் காலங்களில் மாறலாம்.

இத்திட்டம் பொதுமக்களிடையே பல்வேறு காரணங்களினால் இன்னும் பிரபலமாகவில்லை. இனிவரும் காலங்களில் அரசாங்கம் கொண்டு வரும் சீர்திருத்தங்களைப் பொறுத்து இத்திட்டம் பொதுமக்களிடையே பிரபலம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஓய்வுக்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர் களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. ஏனென்றால் 60 வயதிற்கு முன்பு இத்திட்டத்தில் (டயர்-1 அக்கவுன்ட்) இருந்து வெளியேற நினைப்பவர்கள், குறைந்தபட்சமாக 80 சதவிகிதத் தொகையை ஆனுயூட்டியாக மாற்றிக்கொள்ள வேண்டும். மீதி 20 சதவிகிதத்தை மொத்தமாக எடுத்துவிடலாம். 60-70 வயதில் வெளியேறுபவர்கள் 40 சதவிகிதத்தை ஆனுயூட்டியாக மாற்றிக்கொள்ள வேண்டும். 70 வயதிற்கு மேல் அக்கவுன்ட் குளோஸ் செய்யப்பட்டு, மொத்த பணமும் திருப்பித் தரப்படும்.  

இத்தொகையை நிர்வகிப்பதற்கு மிகக் குறைந்த பணமே செலவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதலீடு செய்வதற்கு உச்சபட்ச தொகை ஏதுமில்லை. குறைந்தபட்ச தொகை ஆண்டிற்கு ரூ.6,000 மட்டுமே.

ஆனால், இதில் சில அசௌகரியங்களும் உண்டு. என்.பி.எஸ்.-ல் உள்ள ஃபண்டுகளின் செயல்பாடு பரவலாக ஆய்வு செய்யப்படவில்லை. மேலும், இந்த ஃபண்டுகள், பி.எஃப். அல்லது பி.பி.எஃப். போல இவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும் என்று கேரன்டியாக சொல்லமுடியாது. அதே நேரத்தில் அதீதமான ரிட்டர்னைத் தருவதற்கும் வாய்ப்பில்லை. தவிர, பணத்தை வெளியில் எடுக்கும்போது கட்டாயமாக ஓர் ஆனுயூட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆனுயூட்டியைவிட சொந்தமாக முதலீடு செய்பவர்களுக்கு அதிக ரிட்டர்னில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. மேலும், இத்திட்டத்தில் சிறு முதலீட்டாளர்களுக்கு செலவின சதவிகிதமும் சற்று அதிகமாக உள்ளது. கட்டாய முதலீட்டாளர்களுக்கு இத்திட்டம் ஒரு நல்ல உபகரணமாகும்.

இத்திட்டத்தில் சேரும் ஒவ்வொருவருக்கும் பிரான் (பெர்மனென்ட் ரிட்டையர்மென்ட் அக்கவுன்ட் நம்பர்) நம்பர் வழங்கப்படும். அவர் இந்தியாவில் எங்கு வேலை பார்த்தாலும் இந்த நம்பர் ஒன்றே! ஆகவே, வேலை காரணமாக அடிக்கடி நகரத்தை மாற்றுகிறவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தற்போது நாம் செய்யும் முதலீட்டை நிர்வகித்துத் தர ஏழு ஃபண்ட் மேனேஜர்கள் (எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., யூ.டி.ஐ., ஐ.டி.எஃப்.சி., கோட்டக், ரிலையன்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.) உள்ளனர்.

இதில் ஃபண்ட் மேனேஜரை பொறுக்கிக் கொள்வது நமது ஆப்ஷனாகும். ஒரு ஃபண்ட் மேனேஜரில் இருந்து இன்னொரு ஃபண்ட் மேனேஜருக்கும் மாற்றிக்கொள்ளலாம். நமது அக்கவுன்டை பராமரிப்பதற்காக ஃபண்ட் மேனேஜருக்கும், சென்ட்ரல் ரெக்கார்டு கீப்பிங் ஏஜென்சிக்கும் (சி.ஆர்.ஏ.) நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அக்கட்டணங்கள் யூனிட்டை ரத்து செய்வதன் மூலம் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. ஆனால், இக்கட்டணங்கள் மிக மிகக் குறைவே; மேலும், இக்கட்டணங்கள் பி.எஃப்.ஆர்.டி.ஏ-வால் தீர்மானிக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 18; அதிகபட்ச வயது 60 ஆகும். இந்திய குடிமக்கள் மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

என்.பி.எஸ்-ல் ஸ்வலம்பன் திட்டத்தை 2010-11-ல் மத்திய அரசாங்கம் வெளியிட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.1,000 முதல் 12,000-த்திற்குள் முதலீடு செய்பவர்களுக்கு வருடத்திற்கு ரூ.1,000-த்தை அந்த ஆண்டும், அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்கும் திட்டத்தில் சேருவதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் வழங்குகிறது. 2012-13-ல் கணக்கு தொடங்கியவர்களுக்கும் இந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகிறது.

பொருளாதார ரீதியாக வசதி குறைவானவர் களுக்காக என்.பி.எஸ். லைட் என்ற திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் செலவினங்கள் இன்னும் குறைவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர்கள் ‘அக்ரிகேட்டர்கள்’ (நலிவடைந்த பிரிவு மக்களை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளர்) மூலம் சேரவேண்டும். இதில் சேருபவர்களுக்கு ஸ்வலம்பன் திட்டத்தைப் போலவே, மத்திய அரசாங்கம் வருடத்திற்கு ரூ.1,000 மானியமாக 2016-17 வரை வழங்குகிறது.

இத்திட்டம் மூன்று வகையான முதலீடுகளை ஒவ்வொருவருக்கும் தருகிறது. பங்கு சார்ந்த குறியீட்டு முதலீடுகள், கடன் சார்ந்த அரசாங்கப் பத்திர முதலீடுகள், கடன் சார்ந்த கார்ப்பரேட் பத்திர முதலீடுகள் என்பவைதான் அந்த மூன்றும்.

பங்கு சார்ந்த முதலீட்டில் அதிகபட்சமாக ஒருவர் 50 சதவிகிதம்தான் முதலீடு செய்ய முடியும். அதேசமயத்தில், கடன் சார்ந்த இரண்டு வகையான முதலீட்டிலும் 100 சதவிகிதம்கூட செய்யலாம். எதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆட்டோ சாய்ஸ் ஆப்ஷன். வயதைப் பொறுத்து திட்டத்திற்கான சதவிகிதம் ஆட்டோமெட்டிக்காக நிர்ணயிக்கப்படும்.

எனக்கு ரிஸ்க் எடுப்பது பிடிக்காது. பங்கு சார்ந்த முதலீடே எனக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள், இத்திட்டத்தில் முழுக்க முழுக்க அரசாங்க பாண்டு அல்லது கார்ப்பரேட் பாண்டு அல்லது இரண்டிலும் கலந்து முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் 50 சதவிகிதத்தைப் பங்கு சார்ந்த முதலீட்டிலும், மீதியை கடன் சார்ந்த திட்டத்திலும் முதலீடு செய்யலாம்.  

பி.பி.எஃப். (பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்)

பி.பி.எஃப். மக்கள் பரவலாக அறிந்த ஒன்று. பொதுமக்களுக்காக மத்திய அரசாங்கம் செயல் படுத்தும் திட்டமாகும். பல பொதுத்துறை வங்கிகள் மூலமும், ஓரிரு தனியார் வங்கிகள் மூலமும் மற்றும் அஞ்சலகங்கள் மூலமும் இத்திட்டத்தில் மக்கள் கணக்கை துவக்கிக்கொள்ளலாம்.

இது 15 வருட திட்டமாகும். அதற்கு மேலும் கணக்கைத் தொடரலாம்.

இந்தக் கணக்கைத் துவக்குவது எளிது. தற்போது ஆண்டுக்கு 8.8 சதவிகித வட்டி கேரன்டி-ஆக தரப்படுகிறது. போடும் பணம், அதிலிருந்து வரும் வட்டி மற்றும் வெளியே எடுக்கும் பணம் என
அனைத்திற்கும் வரி விலக்கு உண்டு. ஒருவரின் பி.பி.எஃப். அக்கவுன்டை கோர்ட்கூட அட்டாச் செய்ய முடியாது. ஒவ்வொருவரும் ஒரு அக்கவுன்ட்தான் வைத்துக்கொள்ள முடியும். ஆண்டிற்கு உச்சபட்சமாக

ரூ.1 லட்சமும், குறைந்தபட்சமாக ரூ.500-ம் முதலீடு செய்யவேண்டும். மாதத்திற்கு ஒருமுறைதான் முதலீடு செய்ய முடியும்.

இப்படி பல வசதிகள் கொண்ட இத்திட்டம் ஒவ்வொருவரின் ஓய்வுக்கால முதலீட்டுக் கூடையில் அவசியம் இடம் பெறவேண்டும். இதற்குமேல் தேவைப்படும் முதலீட்டை பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம். ஓய்வுக்காலத்தில் ஒருவர் இத்திட்டத்தில், வரிச் சலுகைக்காக முதலீடும் செய்யலாம்; அதேசமயத்தில், டாக்ஸ் ஃப்ரீயாக, திட்டம் துவங்கி 15 வருடம் ஆகியிருக்கும்பட்சத்தில், பணத்தை எடுத்துக்கொள்ளவும் செய்யலாம்.

நன்றி:-சொக்கலிங்கம் பழனியப்பன்.

நன்றி:- நாணயம் விகடன்

பிரிவுகள்:பெஸ்ட் ரிட்டையர்மென்ட் பிளான் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சின்ன வயசிலேயே.. பெரிய மனுஷியாவது….

செப்ரெம்பர் 12, 2012 2 பின்னூட்டங்கள்

சின்ன வயசிலேயே பெரிய மனுஷி ஆவது ஏன்?

கருத்தரிக்கும் கடமை ஒன்றுக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல மாதவிடாய் என்பதை நவீன அறிவியல் உணர்ந்தது சமீபத்தில் தான். மாதவிடாய் துவங்கியது முதல் முடியும் வரை. அந்த மூன்று நாட்கள் சோர்வையும் வலியையும் களைப்பையும் போக்கும் விஷயத்தில் மட்டும் தான் கவனம் கொண்டிருந்தது மருத்துவ உலகம்.இன்னும் கருத்தரிப்பு சார்ந்த விஷயத்தில் வரும் இடையூறுகளுக்கு மட்டும் மாதவிடாய் உற்றுப்பார்க்கப்பட்டது.

மாதவிடாய் முடிவுக்குப் பின் வந்த கால்சிய குறைவின் ஆஸ்டியோபோரோசிஸ், அல்சர், மார்பகப் புற்றுநோய் மற்றும் மன அழுத்தம் ஆகிய துன்பங்கள்தாம் அட! இந்த மாதவிடாய் பல்வேறு உடல் செயல்பாடுகளுடன் தொடர்புடையது போலும் என்ற புரிதலை துவக்கியது.

சரியாக 11-14 வயதில் துவங்கும் இந்த மாதவிடாய் தற்போது 8 வயதில் 9 வயதில் துவங்க ஆரம்பித்துள்ளது..ஏனிந்த அவசரம்? எப்படி நிகழ்கிறது இந்த மாற்றம்? என்ற சிந்தனை இன்று பல மருத்துவ ஆய்வாளர்களிடையே வேகமாக எழுந்துள்ளது. உணவா? வாழ்வியலா?பாரம்பரியமா? சுற்றுச்சூழலில் நிகழும் மாசுக் குவியலா? மன அழுத்தமா? மருந்தா? இன்னும் என்ன காரணத்தால் இந்த அவசரமாக வெகு இளம்வயதில் ஏற்படுகிறது இந்த மாதவிடாய் என்ற ஆய்விற்கு இன்னும் சரியாய் முடிவு கிடைக்கவில்லை.. ஆனால் பல முக்கிய காரணங்கள் முதல் ஆய்வுத் தகவல் அறிக்கைகள் வந்து சேர ஆரம்பித்துவிட்டன. என்ன அவை?

அதில் முதலும் முக்கியமும் மான காரணம் “நம் உணவு “

1 )பிராய்லர் கோழி                2) பால்             3) ஓட்ஸ்

முதலில் பால்:

“அடிக்கடி பால் வேண்டாம்” பால் (என்றால் மாட்டுப்பால்) நான் அடிகடி சொல்வதுண்டு “மாட்டுப்பால் கன்றுகாக தாய்ப்பால் தான் குழந்தைகாக” சமீபமாக பால் மீதான குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் சிறுவயதில் அதிகம் பால் மட்டும் குடிக்கும் குழந்தைகள் சீக்கிரமாக பூப்பெய்துகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. இனி பெண் குழந்தைகளை கூடுதல் பால் கொடுத்து, பாலூட்டி வளர்த்த கிளியாக்க வேண்டாம்..  அப்புறம் 4 ம் வகுப்பு படிக்கையிலேயே அதிகம் அவஸ்தைப்பட வைக்கும் அந்த குழந்தையை.

பால் மட்டுமல்ல, பால்பவுடர் கலந்து செய்யப்படும் சாக்லேட்டுகளாலும் இது நிகழக் கூடும். கன்னாபின்னாவென மில்க் சாக்லேட் சாப்பிடும் கூட்டம் இன்று நடுத்தர வர்க்கத்தில் அதிகம்.. என் குழந்தை கண்ட கண்ட மிட்டாய் எல்லாம் சாப்பிடுவது கிடையாது, ஒன்லி மில்க் சாக்லேட்” என்று பெருமைப்படும் அப்பாவி அம்மாவின் குழந்தை ஓவர் வெயிட்டாகத் தான் திரியும். இந்த குட்டி குண்டுக்கள் கூட விரைவில் பூப்படையும் என்கிறது அறிவியல். இன்னும் இது போன்ற சிறுவயது குண்டு குழந்தைகள் விரைந்து மிக இளம் வயதில் பூப்படைவது மட்டுமல்லாமல், சரியாக மாத மாதம் இதனைப் பெறுவதில்லை.. சினைப்பையினுள் நீர்க்கட்டிகள் உருவாகி பின்னர் பூப்பும் முழுமையாய் irregular ஆகிவிடும். Polycystic ovarian disease இன்று அதிகம் பெருகி, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கும், இளவயது குண்டும், சீக்கிரம் பூப்பெய்துவதும் காரணமாகிவிடும்.

மாடு கூடுதலாகப் பால் பீச்ச RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் சேர்ப்பதை மேனாட்டு FDA – வே அங்கீகரித்திருக்கிறது.இந்த RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் பாலிலும் தயிரிலும் மில்க் சாக்லேட்டிலும் இருக்கும் பட்சத்தில், அதுவும் குழந்தைகளை விரைவில் பூப்பெய்த வைக்கும்.

அடுத்தது பிராய்லர் கோழி :

“சிக்கனில்லாமல் எம் பொண்ணு சாப்பிடவே மாட்டாளாக்கும்” என்று இனி பெருமை கொள்ள வேண்டாம். அதிலும் தற்போது பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழிக்கறிகளில் சேர்க்கப்படும் சில ஹார்மோன்கள் 8வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள்..”இந்த மேனாட்டு கோழிக்கறி கடைகள் பல இப்போது படு அலங்காரமாக வந்திருக்கிறதே! . அதற்காக சிறு பிள்ளைங்களுக்கு கோழியே காட்ட வேண்டாம் என்றல்ல. நாட்டுக் கோழியை கொடுங்க (காலை இட்லிக்கு கொத்துக்கறி; மத்தியானம் சிக்கன்பிரியாணி, மாலை சிக்கன் லாலிபப் என புகுந்து விளையாடுவதை, “வளர்ற பிள்ளை அதைப்போயி..” என பேசாமல் இருக்க வேண்டாம்.) அதையும் குறைவாகொடுங்க

பிராய்லர் கோழியில் மட்டுமல்ல, பதப்படுத்தபட்டு டின்களில் அடைக்கபட்ட புலாலிறைச்சியில் அதிக எடை கிடைக்க பல ஹார்மோன்கள் சேர்ப்பது, எல்லா விலங்கிறைச்சியிலும் நடக்கிறது. இதில் சேர்க்கப்படும் ஈஸ்டர்டியால் ஹார்மோன் கொஞ்சம் கூடுதலாக அப்படியே இறைச்சியிலும் இருப்பதுதான் இந்த இளம் வயது பூப்பிற்கு காரணம் என மேல்நாடுகளில் சண்டையே நடந்து வருகிறது. நாம தான் இந்தியாவை உரம் போட்டு வளர்க்க, அத்தனை வெளிநாட்டுக் குப்பையையும் சிகப்புக்கம்பளம் விரித்து கடை விரிக்கிறோமே! நாளை நாமும் இந்த கூக்குரலிட வேண்டியிருக்கலாம்.

அப்புறம் ஓட்ஸ்:

எப்போதும் இல்லாத அளவு இப்போது ஓட்ஸ் வியாபாரம் பெருகிவருகிறது. வணிக உத்திகள் சரியாக இருந்தால் எதையும் எங்கும் கொண்டு செல்ல்லாம் என்ற விதிக்கு தற்போதைய உதாரணம், சத்தியமங்கலம் காடு முதல் சங்கரங்கோயில் முள்ளிக்குளம் வரை அமோகமாக விற்கப்படும் ஓட்ஸ்தான். இந்த ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது. ஐஸோஃப்லாவின்ஸ், லிக்னைன் சத்துக்கள் அதிகமுள்ள எந்த தாவரமும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் உடலுக்கு தரக் கூடியவை அந்த வரிசையில் எள், உளுந்துக்கு இணையாக ஓட்ஸ்-உம் ஒய்யாரத்தில் உள்ளது. “நாங்க ஒட்ஸ் சாப்பிட்டு ஒல்லியாயிட்டு இருக்கோம்னு,” நினைச்சு ’நாகரீக’ பாட்டிகள் ஒரு டம்ளர் உங்க பேத்திக்கும் இனி அடிக்கடி தர வேண்டாம்.

அட! கொஞ்சம் சீக்கிரம் வயதிற்கு வந்தால் என்ன? என்போருக்கு ஒரு செய்தி… மார்பகபுற்று நோய் வரும் வாய்ப்பு சீக்கிரம் வயதிற்கு வரும் குழந்தைகட்குத்தான் அதிகமாம். அதுவும் தற்போது மார்பகப் புற்றுநோய் மிக அதிகமாக வருவதில் மருத்துவ உலகம் திணறிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு கூடுதல் செய்தி.. விரைவாக பூப்பெய்தும் பெண்களின் வாழ்நாள் விகிதம் சரியான வயதில் பூப்பெய்தும் பெண்ணைக்காட்டிலும் குறைவு என மருத்துவப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

 அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு-என்பதை மறக்க கூடாது. கோழியோ, பாலோ ஓட்ஸோ எப்போதோ சாப்பிடுவது நிச்சயம் கேடு கிடையாது. விளம்பரம் பார்த்தோ, வசதியாக இருக்கிறதே என்ற சோம்பலிலோ, குழந்தைகள் அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதுதான் ஆபத்தாகக் கூடும்.

நன்றி:- முகநூல்-SUVAIinbam.com(சுவைஇன்பம் டார்ட் காம்)

நன்றி:- http://siddhavaithiyan,blogspot.com/

பிரிவுகள்:சின்ன வயசிலேயே..பெரிய மனுஷியாவது குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,