தொகுப்பு

Posts Tagged ‘பாடல்கள்’

சிதையும் உறவுகள்


கள்ளக் காதலால் சிதையும் உறவுகள் !!

இந்த கட்டுரை நமக்கு உணர்த்துவது ஒன்றே ஓன்று தான்  படியுங்கள் பகிருங்கள்.

ஒரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் கள்ளக் காதல் பற்றிய செய்திகள் வரும். இன்று அப்படியல்ல. கள்ளக் காதல் அதனால் ஏற்படும் கொலைகள், ஆள்கடத்தல், பணம் – நகை கொள்ளை போன்ற செய்திகள் முன்பைவிட பன்மடங்கு அதிகமாக வெளிவருகின்றன.

கள்ளக் காதல் விவகாரத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஈடுபடுவதால், பெண் தரப்புக் குடும்பமும் ஆண் தரப்புக் குடும்பமும் அவமானத்தில் தலை குனிகின்றன. பல இடங்களில் கள்ளக்காதலனுடன் பெண் சென்று விடுவதால் குடும்பமே தற்கொலை செய்து கொள்வதும், ஆண்கள் கள்ளக் காதலில் சிக்கும் போது அவனைச் சார்ந்த குடும்பம் சிதைவதும், இந்தச் சமூகத்தில் நடந்தபடிதான் உள்ளன.

ஆண்டுதோறும் தேசிய குற்றவியல் புள்ளி விவரங்களில் முதலிடம் பிடித்துள்ள விவரமாக விளங்குவது. கள்ளக் காதலால் நிகழ்ந்த கொலைக் குற்றங்கள்தான். இருவேறு ஆயுதக் குழுக்களாக மோதிக் கொள்ளும் ரௌடிகள் கொலை 316 தான். ஆனால், காதல் + கள்ளக் காதலால் நடந்த கொலை மட்டும் 237. சில இடங்களில் கள்ளக் காதல் மற்றும் காதலில் ஈடுபட்டதுபோல் நடித்துப் பெண்களைக் கடத்திச் சென்று விபச்சார விடுதிகளில் சேர்க்க முனையும் போது எதிர்க்கும் பெண்கள் மட்டும் 464 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கள்ளக் காதலன் தலைமறைவு, காதல் தோல்வி, காதலி வேறொருவரை மணமுடித்ததால் போன்றவற்றால் மட்டும் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு மட்டும் 61 பேர் இறந்துள்ளனர்.

மேற்கத்திய நாடுகளில் கள்ளக் காதல், காதல் கொலைகளை அங்குள்ள சட்டங்கள் “பார்ட்னர் வயலன்ஸ்” என்று குறிப்பிடுகின்றன.ஒரு கணவனுக்கோ, மனைவிக்கோ போலித்தனமான வாழ்க்கை அல்லது தன் கணவன், தன் மனைவியைத் தாண்டி வேறு ஆணுடனோ, வேறு பெண்ணுடனோ ஏன் ஈர்ப்பு ஏற்படுகிறது? இந்த இருவரின் ஈர்ப்பால் விளையப் போகும் விளைவுகளை அவர்கள் அறியாததா?

அவர்கள் கள்ளக் காதலில் மட்டும் கைதேர்ந்தவர்களாக இல்லாமல், தங்கள் தவறு பிறருக்குத் தெரியா வண்ணம் மறைப்பதிலும் புத்திசாலிகள். ஆம், படிப்பில்லாத ஊர்களில் நிகழ்ந்த இதுபோன்ற குற்றங்கள்தான் கணக்கில் இதுவரை வந்துள்ளன. தர்மபுரி – 38, கிருஷ்ணகிரி – 27, நாகை – 24, வேலூர் – 20, தேனி – 14 என இந்த கல்வியறிவோ, படிப்பறிவோ இல்லாத மாவட்டக் கள்ளக் காதல் கொலைகள்தான் வெளித் தெரிந்துள்ளன. ஆனால், படித்த வசதியுள்ள, நடுத்தர பிரிவினரின் கள்ளக் காதல் கொலையானால்தான் இந்தப் பட்டியலில் சேரும்.


30 ஆண்டுகள் நெறியோடு வாழ்ந்த பெண்மணி ஒருவரை இந்தக் கட்டுரைக்காக தேடிப் பிடித்தோம். அவர் பத்தாண்டு ஆயிரக்கணக்கான பெண்கள் பணி புரிந்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அத்துடனில்லாமல், பல பெண்களுக்கும் நல்லதொரு ஆலோசனைகளை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்தியவரும்கூட.அவரிடம் கள்ளக் காதல் என்பது ஏன் ஏற்படுகிறது. இது முழுக்க ஒழுக்கக் கேடான ஒன்றாயிற்றே. இது தவறு என்பது தெரிந்தும் ஏன் நிகழ்கிறது என்று மட்டும்தான் கேட்டோம்.

கள்ளக் காதல் என்பது தவறு. ஒழுக்கக் கேடான ஒன்று என்பது தெரிந்ததுதான். ஆனால், அவ்வாறு அது நிகழ யாரெல்லாம் காரணம், எது காரணம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். வேண்டுமென்றே எந்தப் பெண்ணும் திமிர் பிடித்து கள்ளக் காதலில் ஈடுபடமாட்டாள். எனினும் சில விதிவிலக்கு உள்ளது. எல்லா வசதிகளும் வாழ்க்கைத் தேவையும் நிறைவாக இருந்தும் சிலர் இதுபோன்ற இரட்டை வாழ்க்கை வாழ்கின்றனர். ஒன்று அந்தப் பெண்ணின் கணவன் தகுதியற்றவனாக சதா சர்வ காலமும் பணம் பணம் என்று அலைபவனாக இருக்கலாம். அல்லது எல்லா வசதி தந்த பின்னரும் அவனின் முணுமுணுப்புகள் பெண்ணின் சுயமரியாதைக்கு எதிரான நடவடிக்கைகள், சந்தேகப் பார்வை, பலவும் அவளை அன்றாடம் மனதளவில் கொல்லும் போது அவள் அவனை எதிர்ப்பதாக நினைத்து அவனிடம் பெற முடியாத நிம்மதியைத் தரும் இன்னொரு துணையை நாடுகிறாள். இந்தப் புதிய உறவு ரகசியமாக நீடிக்கிறது. காலப் போக்கில் வெளிப்படும் போது எரிமலையாய் வெடித்து எரிமலைக் குழம்பு போகும் பாதையெல்லாம் பொசுக்குவது போல் அவர்கள் தொடர்பான அனைவரின் கௌரவமும் பொசுங்குகிறது. சில நேரங்களில் சிலர் இதனை உணர்ந்து விலகுகிறார்கள். விலக இயலாதவர்கள் இடையூறாக இருக்கும் ஆணையோ பெண்ணையோ கொன்று விடுகின்றனர்.

கண் நிறைந்த கணவன்தான். ஆனால், குழந்தைகள் படிப்புச் செலவு, குடும்பச் செலவுக்கு போதாத நிலை, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழத் தெரியாத கணவனின் சம்பாத்யத்திற்கு ஈடுகொடுக்கத் தெரியாத நிலையில் பொருளாதாரம் சரிக்கட்ட சோரம் போகிறாள்.


நாலு பேரைப் போல் நாமும் வாழ வேண்டும் என்ற மட்டரகமான சிந்தனை அப்பெண்ணுக்குள் சாத்தானாக புகுந்து விடுகிறது. நுகர்வுக் கலாச்சாரம் படோடபமான வாழ்க்கை வாழ அவள் நினைக்கும் போது அதற்காக வசதியான ஆணை அவன் அழகனோ, நோயாளியோ, கருப்போ, சிவப்போ அவளுக்குக் கவலை இல்லை. அவனிடம் உள்ள செல்வம்தான் அவளின் குறிக்கோள். அதனால் உறவில் நாட்டமில்லாமல்தான் கள்ளத் தொடர்பில் ஈடுபடுவாள். பல இடங்களில் கள்ளத் தொடர்புக்கு இதுதான் பெருங் காரணமாக உள்ளது. இவர் யார்? அடிக்கடி வருகிறாரே? கேட்டால், தூரத்து உறவு என்பாள் சொந்தக் குடும்பத்திடமே! சில இடங்களில் கணவன் தன் வருமானத்திற்கும் மேலாக வீட்டில் சேரும் பொருட்களைப் பற்றி சந்தேகம் கொண்டு கேட்டாள். சீட்டு கட்டுகிறேன், சுயஉதவிக் குழு எனச் சொல்லிப் பார்ப்பாள். அவை கணவனின் விசாரணைக்கு உட்படும் போது சந்தேகம் அகலமாகும். அறிவுரை சொல்லிப் பார்ப்பான், அடித்தும் பார்ப்பான், அவளால் கணவனையும் இழக்க முடியாது, கள்ளக் காதலையும் மறுக்க இயலாமல் புழுங்குவாள். எல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் போலவே தன் பிள்ளைகளும் வளர வேண்டும் என்ற நினைப்பால் வந்தது.

சகிப்புத் தன்மையுள்ளவன் பேரளவுக்கு கணவனாக அவனுக்குள்ளேயே மனம் புழுங்கி பைத்தியமாவான். அல்லது முரட்டுத்தனம் உள்ளவன் குடும்ப வன்முறையில் ஈடுபடுவான். இன்னொரு நிலையுள்ள எதனையும் கண்டு மிரளும் மனநிலையுள்ள ஆண் குடும்பத்தை விட்டு விலகிச் செல்ல முற்படுவான். இது போன்ற ஆண்களால் அவளுக்கு கள்ளத்தனமானவன்தான் கதி என்று ஆகும்.

இன்னொரு ரகம் புடவை நகைகளுக்காக கணவன், பிள்ளைகள் வீட்டை விட்டுச் சென்றவுடன், தன் ஆசைக்கான பொருளை வாங்கித் தரும் பசையுள்ளவனை பிடித்துக் கொள்வது. அவனுடன் ஊர் சுற்றுவது. வீட்டிற்கு எல்லோரும் வரும் முன்பு வந்து விடுவது.இன்னொரு ரகம் ஒதுக்குப்புறமான வீடு, தனிமை, கணவன், பிள்ளைகள் அவரவர் வேலை பார்க்க வெளியே சென்றவுடன், பிற ஆண்களை வீட்டிற்கே வரவழைத்து கள்ள உறவு கொள்வது இவர்கள் வழக்கம். இந்தத் தவறுக்கு தனிமைதான் பெரிய காரணம். பெரும்பாலான கள்ளக் காதல் கொலைகள் இந்த ரகத்தினால்தான் நடக்கிறது.


விதவைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழும் போது தனிமை அவர்களை வாட்டுகிறது. உடல் ரீதியான தொடர்புகளை விட ஒரு ஆண் துணை தனக்கு தேவை என்று நினைக்கிறாள். சிலர் சில சமூகங்களில் விதவைத் திருமணம் மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள். இதனால், விதவை வெளிப்படையாக இல்லாமல் ஒரு ரகசிய வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறாள். கூடவே அவளுக்கு பிள்ளைகள் இருந்து விட்டால் கூடுதல் பாதுகாப்பாக கட்டாயம் ஒரு ஆண் துணை தேவை என்பதை உணருகிறாள். சில இடங்களில் பிள்ளைகள் அங்கீகரிக்கின்றன. சில இடங்களில் எதிர்க்கின்றன. ஒரு பெண் அன்னிய ஆடவருடன் எச்சரிக்கையுடன் பேசுவது முக்கியம். பேச்சிலேயே சந்தேகம் வந்தால் தவிர்க்க வேண்டும். இது ஆண்களுக்கும் அவ்வாறே பொருந்தும். பிறன் மனை நோக்கான் என்பது ஒரு பொதுவான இருபாலர்க்கும் உரிய ஒழுக்க நெறியாகும்.

எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான். ஒரு பெண்ணின் மனம் ஒழுக்க நெறியோடு இருந்தால், எந்த ஆணும் அவளை நெருங்க இயலாது. தவறான பேச்சு, சமிக்ஞைகள், தேவையற்ற அரட்டை, மூன்றாம் நபரிடம் தன் குடும்ப நிலைகளைப் பகிர்ந்து கொள்வது முதலானவை நல்ல பெண்மணி தவிர்ப்பாள். நல்ல ஆணும் இது போன்ற இயல்புடன் உள்ள பெண்களை விட்டு விலகி இருப்பார்கள். தவிர்ப்பார்கள். ஆனால், மனம் ஒரு குரங்கு என்பதால்,  தாவ நினைக்கும். அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி சுய கட்டுப்பாடு மட்டுமே.

எவர் எந்த சமயத்தைப் பின்பற்றுகிறவர்களோ அதன் வழியில் மனதை செலுத்துவது சிறந்தது. அதிலும் ஓர் சிக்கல் என்னவென்றால், தங்கள் சந்தேகங்களை நூல்கள் வழியாகவே கூடுமானவரை பெற முயல வேண்டும். நேரில் சென்று எவரிடம் விளக்கம் கேட்கும் போதும் அங்கும் கோளாறுள்ளவர்கள் இருந்தால் சிக்கல்தான். வழிபாட்டு இடங்களிலும் வில்லன்கள் உண்டு. சில குடும்பம் இதுபோன்ற வழிகளிலும் சிலரால் சிதைக்கப்பட்டுள்ளன.

கணவன் என்பவன் வெறுமனே ஒரு ஏ.டி.எம். எந்திரம் போல் வேண்டிய பணம் தந்து விட்டால் போதும் மற்றவை சரியாகும் எனக் கருதக் கூடாது. குடும்பத்தில் அனைவர் மீதும் அக்கறை உள்ளவனாக, அன்புள்ளவனாக விளங்க வேண்டும். தினசரி குறைந்தபட்சம் சில மணி நேரங்கள் மனைவி மக்களுடன் அமர்ந்து பேச வேண்டும். உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கூடுமானவரை நேரம் ஒதுக்கி குடும்பத்துடன் சென்று வரவேண்டும்.

மனைவி என்பவள் தனக்கு உடமை மட்டுமல்ல, தன் நேசத்துக்கும் அன்புக்கும் உரியவள் என்று மதிப்புடன் வைத்திருக்க வேண்டும். அன்பு செலுத்துவது என்பது அது ஓர் ஆயுதம்! எந்தக் கேட்டையும் அந்தக் குடும்பத்தைத் தாக்குவதிலிருந்து தடுக்க வல்லது. மனைவியிடம் பொய் சொல்லக் கூடாது. மறைவு என்பது கூடவே கூடாது.

பெரும்பாலான அமைதி தவழும் குடும்பத்திற்குள் கணவன் மனைவி நல்ல முறையில் வாழ்க்கை நடத்தினாலும் பிள்ளைகள் மேல் கவனக் குறைவு ஏற்பட்டாலும் அவர்கள் வழியாக தேவையற்ற வம்பு வரும். இன்றைக்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பலவும் குழந்தைகள் மனதை சிதைக்கும் காரணியாக உள்ளன. பல காதல் திருமணங்கள் குடும்பத்தில் பட்ட துன்பத்தைக்கூறும் போது மதிப்புமிக்க உறவினரா? அப்படிச் செய்தார் இருக்காது,’’ என நீங்களே தீர்மானித்து குழந்தை தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூற விடாமல் வாயடைக்கின்றனர்.

சிறு வயதில் மறைவாக உறவுகளால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகள் அது சரியா? தவறா? சொந்தமான இவர் செய்ததையும் தாயிடம் தந்தையிடம் கூற முற்படும் போது காது கொடுத்து கேட்க வேண்டும். தன் பிள்ளை தானே “”அப்படிச் சொல்லாதே, வாயை மூடு! இத வேற யார்கிட்டயும் சொல்லாதே’’, என அதட்டக் கூடாது. குழந்தை சொன்னதைக் கேட்ட பின்பு பக்குவமாக எடுத்துச் சொல்லி சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு காண வேண்டும். ஏனெனில் பெரும்பாலான காதல் கத்தரிக்காய் எல்லாம். ஒரு பெண் அல்லது ஆண் தங்களுக்கு தங்கள் குடும்பத்தில் பாதுகாப்பு இல்லாதவர்களாக தங்கள் உணர்வைப் புரிந்து கொள்ளாதவர்களாக பெற்றோர் உள்ளனர் என நினைக்கும் போது அதற்கு வடிகாலாகத்தான் மன ஆறுதல் தரும் மாற்றம் தேடும் நிலைக்குச் செல்கிறார்கள். இந்த வழி காதலாகிறது.

 மனம், மனத்திருப்தி, ஆறுதல், அன்பான உபசரிப்பு, தேவைகள், ஆடம்பரம், சொகுசு, அதிகமான உறவில் நாட்டம் அதற்கு வழி இல்லாமை, சந்தேகம், அடி-உதைகள், பாதுகாப்பு, வசவுகள், நோயாளி, கணவன் மனைவி குடும்பச் சண்டை, உறவினர் கொடுமை, மகப்பேறின்மை என்பன பல காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காக அது கிடைக்கும் இடத்திற்கு தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இதுபோன்ற சமயத்தில் சுற்றி இருக்கும் குடும்பத்தினர் பற்றியோ, எதிர்காலம் குறித்தோ, பழிகள் சூழும் என்பது குறித்தோ அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் தேவை தற்காலிக நிவாரணம். பின்னர் இதுவே சூழலைப் பொறுத்து நிரந்தரமாகின்றன. சிக்கல் உருவாகிறது.

இவ்வாறான இவர்களின் தேடலுக்கு வழி காட்டும் வடிகாலாக இருப்பது. நண்பர்கள் மற்றும் ஊடகங்கள், இதுபோன்ற சமூக சீரழிவுக்கு ஊடகங்கள் கடந்த இருபதாண்டுகளாக பெருங் காரணமாக உள்ளன. காதல், ஆடம்பரம், முறைகேடான உறவுக்கு நியாயம் கூறும் கதைகள் இல்லாமல் ஒரு தொடரோ, சினிமாவோ எடுக்கப்படுவதில்லை. ஒரு பொழுதுபோக்கு சாதனமாக விளங்கிய சினிமா, தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளத்தின் சாட்டிங் முதலானவை. தவறு செய்யத் தூண்டும் காரணிகளாக உள்ளன. செல்போன்கள் வந்த பின்னால் கள்ளக் காதல்கள் அதிகம் நடப்பதை வலுப்படுத்தியுள்ளன!

கூட்டுக் குடும்பம் என்ற கட்டமைப்பு சிதைந்து தனிக்குடும்பம் என்ற நிலையில் தேவைகள் அதிகரித்தன. அதை எதிர்கொள்ள முயலும் போது, குறிப்பாக பெண்கள் தேவைகளை எந்த வழியிலும் பெறலாம் என்ற நிலைக்கு பொருளாதார காரணிகளால் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நிலைக்கு ஆண்களும் தேவை அறிந்து அதை சரி செய்வதற்குப் பதில் அமைதியாகும் போது பெண் மாற்று சிந்தனைக்கு தள்ளப்படுகிறாள்.

இன்றைக்கு மனித மனங்களை வர்த்தக ரீதியாக சுரண்டும் போக்கு அதிகரித்துவிட்டது. குடும்ப வாழ்க்கையை பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. அவர்கள் இதனை சாதிக்க ஊடகங்களை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இந்த விளம்பரங்கள் நல்ல குடும்பத்தையும் கூட நுகர்வு வெறியுள்ள குடும்பமாக மாற்றி விடுகின்றன.

சமூக பேரழிவுகளுக்கு தொலைக்காட்சி சனியன்கள்தான் 90% காரணம். இதை கண்டுபிடித்த மேற்குலகம் ‘இடியட் பாக்ஸ்’ என்றே டிவியை குறிப்பிடுகிறது. ஆபாசமான காட்சிகள், வசனங்கள், பாடல்கள், இரட்டை மொழி சிரிப்புகள் என மலிந்துள்ளன. இவைகள் பொழுது போக்கு என்ற பெயரால் ஒளிபரப்பப்படுகின்றன.

அதேவேளை பல சேனல்கள் தாங்கள் தொலைபேசி வழியாக பணமீட்ட ஆபாசமான குறுஞ்செய்தியை ஒளிபரப்புவது போன்ற கேவலத்திலும் ஈடுபட்டுள்ளன.

இவைகளுக்கு சென்சார் எதுவுமில்லாததால் கட்டுப்பாடற்ற ஆபாசத்தை வெளிப்படுத்துகின்றன. இவை குடும்பச் சீரழிவுக்கும் வழிகாட்டிகளாக விளங்குகிறது. இன்று கள்ள உறவுகள் அதிகரிக்க சினிமா தியேட்டர்களும் டிவிக்களும் பெரும் பங்குவகிக்கின்றன.

இப்படித்தான் பல இடங்களிலும் கள்ள உறவுகள் உருவாகின்றன, தொடங்கப்படுகின்றன, தொடங்கி வைக்கிறார்கள், தூண்டப்படுகிறார்கள் ஊடகங்களால்.

கள்ள உறவுக்கான காரணங்கள் எவை எவை, கொலைகள் ஏன் நிகழ்கின்றன என்பதெல்லாம் தெரிந்த விவரங்களைக் கொண்டுதான் நாம் பரிமாறிக் கொள்ள இயலுமே தவிர, தீர்வு என்ன என்ற வினாவிற்கு ஒரே பதில். ஒழுக்கமான வாழ்வின் உன்னதத்தை வளரும் தலைமுறைக்கு பக்குவமாகக் கூறுவதும், அவர்கள் பிரச்சனைகளைக் காது கொடுத்து பெற்றோர் கேட்பதும்தான் ஒரே தீர்வு.

அர்த்தமுள்ள, புரிதலான, ஈடுபாடுள்ள குடும்ப வாழ்க்கைதான் நம்மையும், நம் குடும்பத்தையும் காக்கும். சமூக நோக்குள்ள ஊடகங்கள் தங்களுக்குள் சுய கட்டுப்பாட்டை வளர்த்து, இதுபோன்ற செய்திகளைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

குடும்பங்களில் இதுபோன்ற தொடர்கள் வரும் போது தவிர்ப்பதும் நல்லதுதான். அதைப் போலவே பொருட்கள் விளம்பரம் வரும் போதும் சேனலை மாற்றுவதும் நல்லதுதான். நம் மனம் கெடாமல் இருக்க கூடுமானவரை என்னென்ன வழிமுறை உண்டோ, புனித பயணம், சுற்றுலா, நல்ல நூல்களைப் படிப்பது என நம் நேரத்தை நாமே மேலாண்மை செய்தால் எந்த சாத்தானும் நம்மை அணுகாது.

 

நன்றி:- http://www.samooganeethi.org

நன்றி:- முகநூல்

பிரிவுகள்:கட்டுரைகள், சிதையும் உறவுகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை – ஷெய்க் அகார் முஹம்மத்


இன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அவையாவன:

1. இராணுவ ரீதியான படையெடுப்பு
2. சிந்தனாரீதியான கலாசாரப் படையெடுப்பு

முதல்வகைப் படையெடுப்பைப் போலவே இரண்டாம் படையெடுப்பும் உலகில் பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

‘உலகமயமாக்கல்’ எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.

இந்த வகையில் மேற்குலகின் உலகாயத, சடவாத சிந்தனைகளும், கலாசாரமும் மூன்றாம் மண்டல நாடுகளில் பொதுவாகவும் இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவுவகைகள், குடிபானங்கள், உடைகள், நகைச்சுவை, காட்டூண்கள், மொழி, இசை, விளையாட்டுக்கள் முதலான சாதாரண அம்சங்கள் முதல் அனைத்தும் மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.

உலகமமயமாதலும் பாலியல் சீர்கேடுகளும்

மேற்குலகம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல் மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை அது உருவாக்க விரும்புகின்றது. இஸ்லாமிய உலகிலோ கட்டுக்கோப்பான குடும்ப சமூக அமைப்பு காணப்படுகின்றது. எனவே, மேற்குலகு இவ்விறுக்கமான அமைப்பை தகர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. தனது சுதந்திரமான, எத்தகைய தார்மீக, ஆன்மீக கட்டுப்பாடுகளுமற்ற கலாசாரத்தை உலகமயப்படுத்துவதற்காக அவ்வப்போது சர்வதேச மாநாடுகளையும் நடாத்தி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கெய்ரோவிலும், பீஜினிலும் நடைபெற்ற சனத்தொகை மாநாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இம்மாநாடுகளில் பெறப்பட்ட தீர்மானங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:

1. திருமணத்தின் மூலமோ, திருமணமின்றியோ ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் உறவு அங்கீகரிக்கப்படத்தக்கதாகும்.
2. ஆணும் பெண்ணும் மணமுடிப்பது போலவே ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணமுடிக்க முடியும்

ஆண், பெண் பால் வேறுபட்டை (Gender perspective) மறுக்கும் இவர்கள் கணவன், மனைவி என்ற புனிதமான உறவையும் கொச்சைப்படுத்துகின்றனர். கணவனை வாழ்க்கைத்துணைவர் (Life Partner) என்ற அளவில் மாத்திரமே இவர்கள் அங்கீகரிக்கின்றனர். சட்டரீதியற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளைக் கூட Natural Baby என அழைத்து அங்கீகாரம் வழங்குகின்றனர். தற்போது அதனை Love Baby என அழைக்க முற்பட்டுள்ளனர். இவ்வாறு கிழக்குலகில் பொதுவாகவும், இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் பேணப்படுகின்ற இறுக்கமான குடும்ப அமைப்பை சீர்குலைக்க கையாளப்படும் உத்திகளுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.

1. சினிமா
2. தொலைக்காட்சி
3. வானொலி
4. இன்டர்நெட்
5. பொப் பாடல்கள்
6. சஞ்சிகைகள்
7. விளம்பரங்கள்
8. நவீன மோஸ்த்தர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் (Fashion show)
9. அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics)

இவ்வாறு தொடர்பாடல் ஊடகங்கள், பல்தேசிய கம்பனிகள் முதலானவற்றுக்கூடாக மேற்குலகு தனது கலாசார திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. Holly Wood திரைப்படங்களின் செல்வாக்கின் விளைவாக Bolly Wood திரைப்படங்களும் வன்முறையையும், ஆபாசத்தையும் மிகக்கேவலமாக அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கூட ஒவ்வொரு நான்கிலும் மூன்று ஆபாசத் திரைப்படங்களாக அமைந்துள்ளன. இன்றைய சினிமாக்களில் கதையில்லை. பாடங்களோ படிப்பினைகளோ இல்லை. குறைந்தது மொழியையாவது காண முடியாது. தமிழ், ஹிந்தி சினிமாக்களில் இப்போது வன்முறையையும் ஆபாசத்தையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. குறிப்பாக தமிழ் சினிமாப்பாடல்கள் ஒரு கட்டுரையில் உதாரணத்திற்காகவேணும் மேற்கோள் காட்ட முடியாதளவிற்கு அருவெறுக்கத்தக்க ஆபாச வர்ணனைகளாக அமைந்துள்ளன. பெண்களை போகப்பொருளாகவும், போதைப்பொருளாகவும் காட்டும் வகையிலேயே பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. விரகம் விரசமாகி, காதல் பாலுறவாகி, காதலர்கள் காமுகர்களாக சித்தரிக்கப்படும் அவலத்தைத்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவில் காணமுடிகின்றது.
ஆபாசத் திரைப்படங்கள், வெப்தளங்கள், வீடியோக்கள், நூல்கள், சஞ்சிகைகள் முதலானவை மேற்குலகிற்கு அதன் கலாசாரத்தை பரப்புவதற்கான ஊடகங்களாக மட்டுமன்றி உலகநாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கான மிகச் சிறந்த வழியாகவும் அமைந்துள்ளன. இன்றைய உலகின் மிகவும் இலாபகரமான வியாபாரமாக ஆபாசத்தை சந்தைப்படுத்துவது காணப்படுகின்றது.
மேற்கண்ட கட்டுப்பாடற்ற சுதந்திர ஆண், பெண் உறவு கலாசாரம் உலகமயப்படுத்தப்பட்டதன் விளைவை இன்றைய உலகம் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளது. இன்று இக்கலாசாரத்தின் பரவல் மனித சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்திவருகின்றது. இக்கலாசாரத்தின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:

1. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
2. சட்டபூர்வமற்ற கருத்தரிப்பு
3. கருக்கலைப்பு
4. கற்பழிப்பு
5. தன்னினச்சேர்க்கை
6. தாயோ அல்லது தந்தையோ இல்லாத (Single Parents) குழந்தைகள்
7. ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்
8. விவாகரத்து
9. தற்கொலை
10. போதைவஸ்துப் பாவனை

இன்றைய உலகில் பற்றி எரிகின்ற பிரச்சினையாக மாறியுள்ள பாலியல் சீர்கேடுகள் தொடர்பான பிரச்சினைக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இஸ்லாமிய நோக்கில் பாலியல்

ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.

அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

”மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.” (51:49)

”அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.” (36:36)

திருமணம், துறவறம், விபசாரம்

மிருக உலகம், தாவர உலகம் உட்பட ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் சுதந்திரமாக ஈடுபடுகின்றன. அந்த சுதந்திரத்தை அல்லாஹ் அவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனைப் பொறுத்தவரையில் அவன் தனது பால் உணர்ச்சியை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.

இன்றைய சமயசார்பற்ற – சடவாத மேற்குலக கலாசாரம், மனிதன் தனது பாலுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள எத்தகைய கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ, ஆன்மீக, தார்மீக ஒழுங்குகளோ அவசியமில்லை எனக் கருதுகின்றது. திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமே அன்றி வேறில்லை என்பது இந்தக் கலாசாரத்தின் நிலைப்பாடாகும். இக்கருத்தியலின் பயங்கர விளைவுகளை இன்றைய உலகம் எவ்வாறு அனுபவிக்கின்றது என்பதை மேலே கண்டோம்.

மறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.

இஸ்லாம் பாலுணர்வை சுதந்திரமாக, எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றித் தீர்த்துக் கொள்வதை தடைசெய்வது போலவே சம்சார வாழ்க்கையை துறக்கும் துறவறத்தையும் பிரமச்சாரியத்தையும் விலக்கி, இரண்டிற்கும் இடையே திருமணம் என்ற ஒரு நெறியை அமைத்திருக்கின்றது. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாகவும் நாகரிகமானதாகவும் அமைய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.

திருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் – பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை ‘ஸினா’ (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.
விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.

”நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.” (17:32)

விபச்சாரத்திற்கு வழிவகுப்பவை

இவ்வடிப்படையில் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:

1. அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் மற்றும் சுதந்திரமாகப் பழகுதல்.

இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:
‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.’ (அஹ்மத்)
‘உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.’ (புகாரி, முஸ்லிம்)

குறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)

2. அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

‘அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.’ (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
‘இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.’ (புகாரி)

3. அவ்ரத்தை காட்டுவதும், பார்ப்பதும்

அவ்ரத்தை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.

இவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.

இஸ்லாத்தின் ஒளியில் திருமணத்தினால் விளையும் நன்மைகளை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்:

1. இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி, அவர்களைக் கொண்ட குடும்பங்களை அமைத்து, இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும்.இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் ஒரு பிரதான இடத்தைப் பெறுகின்றது. இஸ்லாத்தை குடும்பவியல் சார்ந்த மார்க்கம் (Family Oriented Religion) என வர்ணிப்பர். குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம் (Micro Society) என கருதப்படுகின்றது. ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும். குடும்பம் எனும் கோட்டையை பாதுகாக்கும் சிப்பாய்களாக குடும்ப அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் பெற்ற குடும்பம் எனும் நிறுவனத்தின் நுழைவாயிலாக இருப்பது திருமணம் ஆகும். திருமணம் இன்றி குடும்பம் உருவாவது சாத்தியமற்றதாகும்.
2. மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானதாகும். அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதுமானதும், பாதுகாப்பானதும், கௌரவமானதுமான வழியாக திருமணம் விளங்குகின்றது.
3. குழந்தைச் செல்வத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகவும், இனப்பெருக்கத்திற்கான சீரிய முறையாகவும் இருப்பது திருமணமாகும்.
4. தாய்மை உணர்வு (Motherhood), தந்தை உணர்வு (Fatherhood) சகோதர உறவு (Brotherhood) முதலான உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. திருமணமே உணர்வுகளை உருவாக்கி போஷித்து வளர்க்கக் கூடியதாகும்.
5. மணவாழ்வு மனிதனில் சுறுசுறுப்பை ஏற்படுத்தவல்லது. அது மனிதனுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதோடு அவனை பொறுப்புணர்ச்சி உள்ளவனாகவும் மாற்றுகின்றது. இந்த வகையில் உழைப்பு அதிகரித்து, உற்பத்தி பெருகி, மனித வாழ்வு வளம் பெற மணவாழ்வு வழிகோலுகின்றது.
6. வாழ்க்கையுடன் தொடர்பான பொறுப்புக்கள் ஆண், பெண் இருபாலாருக்குமிடையே சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. திருமணத்திற்கூடாக இத்தகைய பொறுப்புக்கள் கணவன், மனைவிக்கிடையேயும், வீட்டின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிட்டுகின்றது.
7. குடும்பங்களுக்கிடையே தொடர்புகள் உருவாகி, பரஸ்பர அன்பும் ஒத்துழைப்பும் நிலவுகின்ற ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கும் திருமணமே காரணமாக அமைகின்றது.
8. மனஅழுத்தம், உளஇறுக்கம், கவலைகள் முதலான உளரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவானதும் நிம்மதியானதுமான ஒரு வாழ்வுக்கு திருமணம் சிறந்த வழியாகவும் விளங்குகின்றது. திருமணம் முடித்தவர்களின் ஆயுள் திருமணம் முடிக்காதவர்களின் ஆயுளை விட கூடியதாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது
”நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.” (30:21)

குடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள்

இல்லற வாழ்வுக்கும் அதன் நுழைவாயிலான திருமணத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் அம்சங்களை அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.

துர்நடத்தை

விபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் – பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவை யாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும். இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.

இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன. இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப்புள்ளி முறைகோடான பாலியல் உறவுகள் என்பதை அறியாவதவர் எவரும் இல்லை. மனநோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடைசெய்துள்ளது.

ஓரினச்சேர்க்கை

ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தன்னினச்சேர்க்கை என்ற தரங்கெட்ட செயலில் ஈடுபட்ட நபி லூத் (அலை) அவர்களின் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் அவர்களின் இக்குற்றச் செயல்களின் காரணமாக அவர்கள் எவ்வாறு பயங்கரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. (பார்க்க: ஸூறத்து அஷ்ஷுஅரா : 172-174)

மனிதனின் மனத்தையும் குணத்தையும் இயல்பையும் இறைத்தொடர்பையும் கெடுத்து, இம்மை, மறுமை ஈருலக வாழ்வையும் பாழ்படுத்தக்கூடிய ஓரினச்சேர்க்கை என்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பது ஷரீஆவின் சட்டத்தீர்ப்பாகும்.

விபசாரம்

ஓரினச்சேர்க்கையைப் போலவே விபசாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் – பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.

விபசாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

விபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
‘ஒருவர் விபசாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்’ (புகாரி, முஸ்லிம்)
‘விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்’
(ஆதாரம் : அத்தபராணி)

எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்;வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்வின் பேரருளாகும்.

جَزَاكَ اللَّهُ خَيْرًا

நன்றி:- அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்

நன்றி:- www.sheikhagar.org

பிரிவுகள்:பாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,