தொகுப்பு

Posts Tagged ‘பணம்’

உண்ணுங்கள் பருகுங்கள் எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள்

திசெம்பர் 22, 2011 1 மறுமொழி

A LESSON FOR EVERY CITIZEN OF THE WORLD

பணம் உன்னுடையது, ஆனால் உணவு பொதுச்சொத்து!


உலகின் வளர்ந்த நாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கிறது ஜெர்மனி! பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற உலகப் புகழ்பெற்ற கார்கள் இங்குதான் தயாராகின்றன. ஸீமன்ஸ் போன்ற கம்பெனிகள் உலகப் புகழ் பெற்றவை. அணு ரியாக்டருக்கு வேண்டிய பம்புகள் இங்குள்ள ஒரு சின்ன ஊரில் தயாராகின்றன. இப்படிப் பல துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ள நாட்டில் மக்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நினைப்போம்? நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், ஒரு சின்ன டூர் என்னை அந்த நாட்டிற்கு இட்டுச் செல்லும் வரையில்!

நான் ஹாம்பர்க் சென்றபோது அங்கு ஹாம்பர்க்கில் வேலை செய்யும் சக ஊழியர்கள் எனக்கு ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் ஹோட்டலுக்குள் நுழைந்தபோது நிறைய மேஜைகள் காலியாக இருந்தன. ஒரு மேஜையில் ஓர் இளம் ஜோடி. அவர்களுக்கெதிரில் ஒன்றிரண்டே உணவு ஐட்டங்கள். இரண்டு கிளாஸ் கூல் ட்ரிங்க்ஸ். இவ்வளவு சிம்பிள் சூழ்நிலையில் ரொமாண்டிக் ஆக இருக்க முடியுமா? இந்தப் பெண் இந்தக் கஞ்ச பிரபுவை கத்திரிக்கோல் போட்டு விடுவாளா என்றெல்லாம் யோசித்தேன்.

இன்னொரு மேஜையில் சில வயதான பெண்மணிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்டர் செய்த உணவுகளை சர்வரைக் கொண்டு பரிமாறச் செய்தனர். உணவைப் பகிர்ந்து கொண்டு துளியும் மிச்சம் வைக்காமல் உண்டனர். நாங்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தவில்லை. எங்களுக்கு நல்ல பசி. அதனால் நிறைய உணவு ஆர்டர் செய்திருந்தோம். அவற்றை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

கூட்டம் அதிகம் இல்லாததால் உணவு சீக்கிரமே கொண்டு வரப்பட்டது. எங்களுக்கு இன்னும் நிறை வேலைகள் இருந்ததால் விரைவாகச் சாப்பிட்டு முடித்தோம். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உணவு மீந்து போயிருந்தது. நாங்கள் ரெஸ்டாரெண்டை விட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கையில் எங்களை யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது. மூதாட்டிகள் ஹோட்டல் முதலாளியிடம் புகார் செய்து கொண்டிருந்தனர். நாங்கள் அத்தனை உணவை வீணாக்கியதை அவர்கள் கண்டித்துக் கொண்டிருந்தனர் என்று முதலாளி ஆங்கிலத்தில் சொன்னபோது தெரிந்தது.

எங்களுக்கு அவர்கள் தலையீடு அதிகப் பிரசங்கித்தனமாகப் பட்டது. நாங்கள் பணம் கொடுத்து வாங்கிய உணவை என்ன செய்கிறோம் என்பது எங்கள் விருப்பம். நீங்கள் தலையிட வேண்டாம் என்று என் கூட வந்த நண்பர் சொன்னார். மூதாட்டிகளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவர்களில் ஒருவர் தன் கைப்பேசியில் ஏதோ ஒரு எண்ணைச் சுழற்றினார்.

சிறிய நேரத்தில் சீருடையணிந்த ஒரு ஆபிசர் – இவர் சோஷியல் செக்யூரிடி சர்வீஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் – வந்தார். விஷயம் என்னவென்று அறிந்ததும் என் நண்பருக்கு ஐம்பது மார்க் அபராதம் விதித்து, சீட்டு கொடுத்தார்.

நாங்கள் அனைவரும் மவுனம் சாதித்தோம். நண்பர் 50 மார்க் நோட்டைக் கொடுத்துவிட்டுத் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கோரினார்.

ஆபீசர் கடுமையான குரலில் சொன்னார். “உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவே ஆர்டர் செய்யுங்கள். பணம் உங்களுடையதுதான், சந்தேகமில்லை, ஆனால் இயற்கை வளங்கள் பொதுச் சொத்து. உலகில் நிறைய பேர் அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றனர். உணவை வீணாக்க உங்களுக்கு உரிமையில்லை.’ எங்கள் முகம் சிவந்துவிட்டது. அவர் சொல்வதன் நியாயம் எங்கள் மனதிற்குப் புரிந்தது. வளர்ந்த, பணக்கார நாட்டவரான அவர்களின் பொறுப்புணர்வுக்கு நாங்கள் வெட்கித் தலை குனிந்தோம்.

நம் நாடு பணக்கார நாடல்ல, ஆயினும் நாம் விழாக்கள், விசேஷங்களில் மற்றவர்களை விருந்துக்கு அழைத்தால் அதிக அளவில் உணவு தயாரிக்கிறோம். இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தது. என் நண்பர் அபராதம் கட்டிய ரசீதை போட்டோ காப்பிகள் எடுத்து ஆளுக்கொரு பிரதி கொடுத்தார். நாங்கள் அனைவரும் அதை வீட்டுச் சுவரில் ஓட்டி வைத்துத் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனி என்றும் எதையும் வீணாக்க மாட்டோம்.

– திருந்தியவர்

நன்றி:-http://www.nidur.info/

நன்றி:-http://seasonsnidur.wordpress.com/

போண்டி ஆக்கும் போலிகள்!ரசியல் பண்ண மூன்று நபர்கள் தேவை என்றால், போலிகள் அரங்கேற இரண்டு நபர்களே போதுமானது! இரண்டு நபர்களுக்கு இடையே மூன்றாவதாக ஒருவர் வரும்போதுதான் அரசியல் வருகிறது. ஆனால், இரண்டாவதாக ஒருவர் வந்தாலே போலி அங்கே வந்துவிடும்! அந்த அளவுக்கு அரசியலைவிட பவர்ஃபுல்லானது போலி!

 

இது எத்தர்களின் காலம்… போலிகளைக் கண்டு மயங்கி பணத்தை பறிகொடுப்பவர்கள் ஏராளம். எல்லா துறையிலும் நீக்கமற வியாபித்து இருக்கும் இந்த போலிகளை ஓரளவாவது அடையாளம் காட்டும் முயற்சியே இக்கட்டுரை.

‘முயல் பிடிக்கும் நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரிந்துவிடும்’ என்பது போல, நாம் குறிப்பிட்டிருக்கும் சில அடையாளங்கள் தெரிந்தாலே, போலியாக இருக்கலாம் என்ற எச்சரிக்கையோடு அவர்களை அல்லது அவற்றை அணுகுங்கள். பாடுபட்டுச் சேர்த்த பணத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!


பணம் பத்திரம்!

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை போலி நிதி நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு, முதலுக்கே மோசம் போய், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைகிறவர்கள் இன்றும் பலர். இந்த போலி நிதி நிறுவனங்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி..? இதோ சில ‘நச்’ வழிகள்..!

வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட ஆர்.பி.ஐ-யிடம் அனுமதி வாங்கியிருக்கிறதா என்று அவசியம் பாருங்கள்.

பதிவு செய்யப்பட்ட லிமிடெட் நிறுவனம் என்பது போன்ற விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒரு நிறுவனத்தை கம்பெனியாக பதிவு செய்வதற்கும், நிதி நிறுவனமாகப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

சீட்டு கம்பெனி எனில், சீட்டு ஃபண்ட் சட்டப்படி அந்தந்த மாநில அரசின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டதா என பாருங்கள்.

சில நிறுவனங்கள் தவணை முறையில் பணம் செலுத்தச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் நிலம் கொடுப் பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடியும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரியாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பார்கள்.

மார்க்கெட்டில் இருக்கும் வட்டி நிலவரத்தைவிட, மிக அதிகப்படியான வட்டி தருவதாகச் சொன்னால் உறுதியாகச் சொல்லி விடலாம் அந்த நிறுவனம் போலியானது என்று!

குறிப்பாக பெண்களை மையப்படுத்தி, அவர்களைக் கவரும் வகைகளில் திட்டங்கள் இருந்தால் கவனம் தேவை.

சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களைக் கொண்டு அலுவலகம் திறப்பது, அவர்கள் கையால் பத்திரங்கள் கொடுப்பது போன்றவைகள் உங்களை திசை திருப்பும் வேலைகளில் ஒன்றாகும்.

அவசரப்படுத்தி முதலீடு செய்ய வைப்பது, ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் பணம் போட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்தவர் என யாராவது இரண்டு நபர்களை அறிமுகம் செய்துவைப்பது போன்ற வையும் தில்லாலங்கடிக்கான அறிகுறிகளே!

பானுமதி அருணாசலம்.


நல்லவரா, கெட்டவரா?

ரியல் எஸ்டேட்டில் மட்டுமல்ல, பங்குச் சந்தையிலும் போலி புரோக்கர்கள் குவிந்து கிடக்கிறார்கள். அவர்களை எப்படி இனம் கண்டுகொள்வது?

சூப்பர் டிப்ஸ்கள் இதோ…

போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள்.

ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவணங்கள் என வியாபார ரீதியாகக் கொடுக்க வேண்டிய எதையுமே உங்களுக்குத் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற்றையும் துண்டுக் காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள்.

டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட்ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலில் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தியாசப்படும்.

கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பணம் மட்டுமே கேட்பார்கள்.

காசோலை வாங்கும்போது வெவ்வேறு பெயரிலோ தனிமனிதரின் பெயரிலோ வாங்குவார்கள்.

உங்கள் கணக்கிற்கு யாருடைய கணக்கில் இருந்து காசோலை கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள்.

இத்தனை லாபம் நிச்சயம்; பத்திரத்தில்கூட எழுதித் தருகிறோம் என்கிற போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.

ஆள் பிடித்து தந்தால் கமிஷன் தருவதாகவும் ஆசை காட்டுவார்கள்.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என அனைத்து சந்தைகளிலும் வியாபாரம் செய்கிறேன் என்று பச்சைப் பொய் சொல்வார்கள்.

செ.கார்த்திகேயன்.


பார்த்து வாங்குங்க!

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை நிலத்தின் மீதுள்ள உரிமைகள் போலியானதாக இருக்கும், புரோக்கர்களில் சிலர் போலிகளாக இருப்பார்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சில போலியாக இருக்கும்… இப்படி பல போலிகளை எதிர்கொள்ளவேண்டிய துறை இது. அதனால் அதிக கவனம் தேவைப்படும்.

மனை அல்லது வீட்டை வாங்கும்போது மிகக் குறைந்த காலகட்டத்துக்குள்ளாகவே பலமுறை சொத்து கைமாறியிருக் கிறதா என பாருங்கள். அப்படி இருந்தால் உஷாராகி, தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உரிமையாளரைச் சந்தித்து உண்மையில் அவர் சொத்து விற்றாரா அல்லது பாகப் பிரிவினை செய்து தந்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

தாய் பத்திரம் அல்லது கிரயப் பத்திரம் தொலைந்துவிட்டது என்று சொன்னால் கூடுதலாக உஷாராகுங்கள்.

வீட்டை நேரில் பார்க்காமல் வாங்காதீர்கள். அதில் யாராவது குடியி ருந்தால் அவர்களிடம் நீங்கள் வீட்டை வாங்கும் விஷயத்தைச் சொல்லுங்கள். சில இடங்களில் வீட்டின் உரிமையாளரிடம் வாடகைக்கு ஆள் கூட்டி வருவதாகச் சொல்லி வீட்டைக் காட்டி, போலிபத்திரம் மூலம் வீட்டை விற்கும் வேலையும் நடந்து வருகிறது!

புரோக்கர்கள் அவசரப்படுத்தினால் ஒரு முறைக்கு நூறு முறை விசாரியுங்கள்.

சொத்தின் உரிமையாளரை கண்ணில் காட்டாமலே விலை பேசிக் கொண்டிருந்தால் அந்த புரோக்கரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

புரோக்கர் நல்லவர்தானா என்பதை அறிய அப்பகுதி சார் பதிவாளர் அலுவலக பணியாளர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரிந்துவிடும்.

சி.சரவணன்


காந்தி கணக்கு!

நல்ல நோட்டுகளே நாணிக் கோணும் அளவுக்கு பக்காவாக தயாராகின்றன போலி ரூபாய் நோட்டுகள். நாட்டையே ஆட்டம் காண வைக்கும் இந்த போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க ஒரே வழி நல்ல நோட்டுக்களை பற்றி தெரிந்துகொள்வதுதான்…

வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றிடத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல நேர்க்கோடுகளும் இருக்கும்.

பூ அடையாளம்: வாட்டர் மார்க் பகுதியின் வலதுபக்கத்தில் முன்னும் பின்னும் பூ இதழ்கள் போல இருக்கும் இந்த அடையாளத்தை சாய்த்து பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும்.

அடையாளக் குறியீடு: ரூபாய் நோட்டுகளின் மதிப்புக் கேற்றவாறு தொட்டு உணரும் வண்ணம் இந்த குறியீடு இருக்கும்.

20 ரூபாய் – செவ்வகம், 50 ரூபாய் – சதுரம், 100 ரூபாய் – முக்கோணம், 500 ரூபாய் – வட்டம், 1000 ரூபாய் – டைமண்ட். 10 ரூபாய் நோட்டுக்கு மட்டும் இந்தக் குறியீடு இருக்காது.

கம்பி இழை: ரூபாயின் நடுவில் விட்டுவிட்டு இருக்கும் கம்பி இழையைத் தூக்கிப் பார்த்தால் அதில் ஆர்.பி.ஐ. என்று ஆங்கிலத்திலும், பாரத் என்று இந்தியிலும் நோட்டின் முன்பக்கத்தில் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும், 45 டிகிரி சாய்த்து பார்த்தால் நீல நிறமாகவும் இது இருக்கும்.

மறைந்திருக்கும் மதிப்பு: மகாத்மா காந்தியின் வலது பக்கத்தில் இருக்கும் செவ்வகப் பட்டையினுள் ரூபாயின் மதிப்பு அச்சிட பட்டிருக்கும். இது 45 டிகிரி கோணத்தில் சாய்த்து பார்க்கும் போது தெரியும்.

மாறும் நிறம்: நடுவில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ரூபாயின் நிறம் சாய்த்து பார்க்கையில் பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறும்.

அசல் நோட்டுகளை தொட்டு உணரும்படி மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் வங்கியின் பெயர், கவர்னர் கையப்பம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அடையாள குறியீடு போன்றவை மேலெழுந்து பிரின்ட் ஆகியிருக்கும்.

நீரை.மகேந்திரன்.


அதுதான்; ஆனா அது இல்லை..!

பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கையை உருவாக்க முன்னணி நிறுவனங்கள் கோடி கோடியாகச் செலவு செய்கின்றன. ஆனால், நயா பைசா செலவு செய்யாமல் அப்படியே காப்பி அடித்து, கல்லா கட்டும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் அசந்தாலும் நம் கண்ணை ஏமாற்றிவிடும் போலி பிராண்டுகளைக் கண்டுபிடிக்க சில வழிகள்…

புகழ் பெற்ற பிராண்டுகளின் பெயரை கண்டுபிடிக்க முடியாதபடி லேசாக மாற்றி இருப்பார்கள். அல்லது பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ  கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு வேறு ஒரு பெயரைச் சேர்த்திருப்பார்கள். எனவே, ஒரிஜினல் பிராண்டின் எழுத்துக் களை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

லோகோவை காப்பி யடித்து சில மாற்றங்களை செய்திருப்பார்கள். இதனால் நமக்கு எது ஒரிஜினல், எது போலி என்கிற குழப்பம் வரும்.

புகழ்பெற்ற பிராண்டு களின் பெயரை சம்பந்தமில்லாத வேறு ஏதாவது பொருட்களுக்கு வைத்து அள்ளி விடுவார்கள். உதாரணமாக சோனி என்ற பெயரில் ஷேவிங் கிரீம் வரும்!

சில பிராண்டட் பொருட்கள் குறிப்பிட்ட  சில இடங்களில் மட்டுமோ அல்லது தனி விற்பனை மையங் களில் மட்டுமோதான் கிடைக்கும். ஆனால், போலி பொருட்கள் எந்த கடையில் வேண்டுமானாலும் கிடைக்கும்.

துணி வகைகளில் ஒரிஜினல் பிராண்டில் காணக்கூடிய நேர்த்தி, வடிவம், மிருதுதன்மை மற்றும் கலர்கள் போலி பிராண்டுகளில் இருக்காது.

சில பிராண்டட் பொருட்கள் குறிப்பிட்ட கலர் அல்லது குறிப்பிட்ட வாசனைகளில் மட்டுமே கிடைக்கும்.

சில பிராண்டட் பொருட்களுக்கு விற்பனைக்கு பிறகான சேவை மற்றும் வாரண்டி, கியாரண்டி போன்ற உத்தரவாதங்கள் இருக்கும். போலிகளுக்கு இந்த உத்தரவாதங்கள் இருக்காது.

நீரை.மகேந்திரன்

நன்றி:- சி.சரவணன், பானுமதி அருணாசலம், நீரை.மகேந்திரன், செ.கார்த்திகேயன்.

நன்றி:- நா.வி

கடல் கடக்கும் கறுப்புப் பணம்!இப்போது இந்தியர்கள் அதிகமாக உச்சரிக்கும் வார்த்தைகள் இரண்டே இரண்டுதான். ஒன்று 2-ஜி. இன்னொன்று கறுப்புப் பணம். 2-ஜி விவகாரமாவது ஓரளவுக்கு புரிந்துவிடுகிறது. ஆனால் இந்த கறுப்புப்பண விவகாரம்தான் தலை சுற்ற வைக்கிறது. எப்படி உருவாகிறது இந்த கறுப்புப் பணம்? அது எப்படி கடல் தாண்டிச் சென்றுவிடுகிறது? கடலுக்கு அப்பால் அந்தப் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் அந்த வங்கி அந்தப் பணத்தை என்ன செய்யும்? லாக்கரில் வைத்திருக்குமா அல்லது எதிலாவது முதலீடு செய்யுமா? முதலீடு செய்திருந்து அதில் லாபம் வந்தால் அந்த லாபத்திலிருந்து பங்கு கொடுப்பார்களா? அந்த லாபத்தை இங்கே இருந்து பெற்றுக்கொள்ள முடியுமா? இப்படி பல கேள்விகள் சாதாரண மக்கள் மனதில். இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விளக்கமாகப் பதில் சொன்னார் பிரபல ஆடிட்டரான எம்.ஆர். வெங்கடேஷ்.

”கறுப்புப் பணத்தின் ரிஷிமூலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்தியாவின் வரி வரலாற்றை கொஞ்சம் பார்க்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் தொழிற் துறைகளுக்கு விதிக்கப்பட்ட வரி அதிகமாகவே இருந்தது. சில சமயங்களில் 60 முதல் 80 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டுதான் லாபம் சம்பாதித்தன. அப்படிச் சம்பாதிக்கும் லாபத்தில் பெரும்பகுதியை அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டும் என்றால் யார்தான் கட்டுவார்கள்? லாபத்தைக் கணக்கில் காட்டினால்தானே வரி கட்ட வேண்டும்? பாதியை மட்டும் கணக்கில் காட்டி வரியைக் கட்டிவிட்டு, மீதியை அப்படியே வெளிநாட்டுக்குக் கொண்டு போனால் என்ன? இப்படி ஒரு யோசனை 40 ஆண்டுகளுக்கு முன்பே சில பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வர, பல ஆயிரம் கோடி ரூபாயை சத்தமில்லாமல் இங்கிருந்து சுவிட்ஸர்லாந்துக்குக் கொண்டு சென்று அங்குள்ள வங்கியில் போட்டுவிட்டன!

இன்று சிவப்பு!


ஆனால், 1990-க்குப் பிறகு தாராளமயமாக்கல் வந்ததைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதனால் வரி ஏய்ப்புக்காக பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லாமல் போனது. என்றாலும், வெளிநாட்டுக்குச் செல்லும் பணத்தின் அளவு மட்டும் குறையவில்லை. ஏன்?
தாராளமயமாக்கத்தின் விளைவாக வெளிநாட்டு முதலீடு இந்தியாவுக்கு எக்கச்சக்கமாக வர ஆரம்பித்தது. இதனால் தொழிற்துறை வளர்ச்சி புதிய வேகமெடுத்தது. இந்த தொழில் பெருக்கத்தின் காரணமாக அரசியல்வாதிகள் லஞ்சம் பெறுவதும் ஊழல் செய்வதும் அதிகரித்தது. பல விஷயங்கள் சட்டத்துக்கு உட்பட்டும் சில விஷயங்கள் சட்டத்தை ஏமாற்றியும் நடந்தன. கள்ளக்கடத்தல் பெருகியது. முக்கியமாக, போதைப் பொருட்கள் கடத்தலில் பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்க ஆரம்பித்தது.

ஊழலிலும் கள்ளக் கடத்தலிலும் சேர்த்த பணத்தை அர சாங்கத்துக்கு கணக்கு காட்ட முடியாது. கணக்கில் காட்டாத பணத்தை கையில் வைத்திருக்கவும் முடியாது. பின் என்னதான் செய்வது? 40 ஆண்டுகளுக்கு முன்பு வரி ஏய்ப்பு செய்ய தொழில் நிறுவனங்கள் கடைப்பிடித்த அதே வழியை அரசியல்வாதிகளும் கடத்தல் பிரமுகர்களும் பின்பற்றினார்கள். தங்கள் பணத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று சுவிஸ் வங்கிகளில் போட்டார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்குப் போனது வெறும் வரி ஏய்ப்பு  குற்றத்தை மட்டுமே செய்த பணம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாட்டுக்குப் போன பணம் லஞ்சம், ஊழல், போதை போன்ற பல பாவங்களைச் செய்ததன் மூலமாக உருவான பணம். அதனால்தான் அதை ‘சிவப்புப் பணம்’ என்றும் ‘குருதிப் பணம்’ என்றும் சொல்கிறார்கள்.


பணம் போனது எப்படி?

வெளிநாட்டுக்குப் பணம் போனது, வெளிநாட்டுக்குப் பணம் போனது என்கிறீர்களே, எப்படிப் போனது என்று நீங்கள் கேட்கலாம். இங்குள்ள ஒரு வங்கியில் 500 அல்லது 1,000 கோடி ரூபாயைக் கட்டி, அதை சுவிஸ் வங்கியில் கொண்டு போய் சேர்க்க முடியாது. அப்படிச் செய்தால் அரசாங்கத்துக்குத் தெரிந்துவிடுமே! பெட்டியில் பணத்தை நிரப்பி விமானம் மூலம் கொண்டு போனார்களா என்றால் அதுவும் இல்லை. காரணம், விமானத்தில் ஓரளவுக்கு மேல் பணத்தைக்  கொண்டு போக முடியாது. கப்பலில் போதைப் பொருட்களைக் கடத்துகிற மாதிரி பணத்தைக் கடத்தவும் முடியாது. வழியில் யாராவது கொள்ளை அடித்தால் அத்தனையும் போய்விடும். புயல் வந்தாலும் நாசமாகிவிடும். பிறகு எப்படித்தான் பணத்தைக் கொண்டு போனார்கள்?

ஹவாலா வங்கி!

இங்குதான் ஹவாலா என்கிற விஷயம் வருகிறது. ஹவாலாவைப் புரிந்து கொள்ள ஒரு வங்கி எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் இருக்கும் ஒரு வங்கியில் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள். ஒரு வாரம் கழித்து டெல்லிக்குப் போய் அதே வங்கியின் கிளையில் ஒரு லட்ச ரூபாயை எடுக்கிறீர்கள். சென்னையில் நீங்கள் போட்ட பணம் வேறு; டெல்லியில் நீங்கள் எடுத்த பணம் வேறு. சென்னை வங்கியில் நீங்கள் பணத்தைப் போட்டிருக்கிறீர்கள் என்பதை வங்கிக் கணக்கு எடுத்துச் சொல்லவும், டெல்லியில் உள்ள வங்கி உங்களுக்கு மறுக்காமல் பணம் தருகிறது. ஹவாலாவும் ஏறக்குறைய இதே மாதிரிதான் செயல்படுகிறது. அரசாங்கத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பணத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல ஒரே வழி ஹவாலாதான்.

இங்கும் அங்கும்!
உங்கள் கையிலிருக்கும் 100 கோடி ரூபாய் பணத்தை இங்குள்ள ஒரு ஹவாலா புள்ளியிடம் கொடுக்கிறீர்கள். அவர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, வெளிநாட்டில் இருக்கும் தனது நண்பரிடம் சொல்லி, சுவிஸ் வங்கியில் உங்கள் பெயருக்கு ஒரு ரகசிய கணக்கை ஆரம்பித்து, அதில் போடச் சொல்வார். அவரும் 100 கோடி ரூபாயை அதில் போட்டுவிடுவார்.

சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் இன்னொரு வருக்கு வேறுவிதமான பிரச்னை. அவர் கையில் இருக்கும் 100 கோடி ரூபாயை மறைத்து வைக்க விரும்புகிறார். அங்குள்ள ஹவாலா பேர்வழியிடம் அவர் அந்தப் பணத்தைக் கொடுக்க, அது இங்கே கச்சிதமாக வந்து சேர்ந்துவிடுகிறது. ஏறக்குறைய ஒரு வங்கி போலவே பக்காவாகச் செயல்படும் இந்த ஹவாலா நெட்வொர்க்கில் சேர உறுப்பினராக வேண்டியதில்லை; பணம்  கொடுத்தால் ரசீது கொடுக்கமாட்டார்கள். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் எல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது இந்த ஹவாலா பிஸினஸ்.


பணம், பணத்தை சம்பாதிக்கும்!

வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணம் அப்படியே சும்மா கிடக்காது. செயல்படாத மனிதனாலும் பணத்தாலும் எந்தப் பயனும் இல்லை. எனவே, சுவிஸ் வங்கியிலிருக்கும் பணம் மொரீஷியஸ் போனவுடன், துணிகளைச் சலவை செய்கிற மாதிரி அதுவும் சலவை செய்யப்பட்டு, அனைத்து அழுக்குகளும் (பாவங்கள்) கழுவப்பட்டு, மீண்டும் நம் நாட்டுக்கு வெள்ளையும் சொள்ளையுமாக வந்து சேர்கிறது. பங்குச் சந்தை, தொழில் வளர்ச்சி என பல துறைகளுக்குள் முதலீடா கிறது. இப்படி முதலீடாகும் பணம் கொழுத்த லாபத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் மொரிஷீயஸ் வழியாக சுவிஸ் வங்கிக்கே போய்விடுகிறது. ஒருவேளை அந்தப் பணம் சுவிஸ் வங்கியில் அப்படியே கிடந்தாலும் அதற்கு நிச்சயம் வட்டி கிடைக்கும். 100 கோடி ரூபாய்க்கு 2% ஆண்டு வட்டி என்றாலும் மாதத்துக்கு சுமார் 16 லட்சம் வட்டி கிடைக்குமே!

70 லட்சம் கோடி!

இப்படி வெளி நாட்டு வங்கிகளில் சேர்ந்திருக்கும் பணம் எவ்வளவு என்பதற்கு சரி யான புள்ளிவிவரம் நம்மிடம் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கு சொல்கிறார்கள். ஆனால், மிக மிகக் குறைத்து மதிப்பிட்டாலும் இரண்டு லட்சம் கோடி ரூபாயாவது நிச்சயமாக இருக்கும் என்பது என் கணிப்பு. இது ஒன்றும் சாதாரண பணமல்ல. 1850 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் பிரிட்டிஷ்காரர்கள் நம்மை சுரண்டிக் கொண்டு போன செல்வத்தின் அளவு சுமார் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர். கிட்டத்தட்ட ஒரு நூறு ஆண்டு காலம் இதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவின் நம் அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமாக எடுத்துச் சென்றிருக்கும் பணம் கிட்டத்தட்ட 1.4 ட்ரில்லியன் டாலர் (நம் மதிப்பில் சுமார் 70 லட்சம் கோடி ரூபாய்!).

இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் காரர்களையே விஞ்சிவிட்டோம் என்பது நமக்குக் கிடைத்த அவமானத்துக்குரிய பெருமை!


பயன்படாத பணம்!

அரசியல்வாதிகளும் கள்ளக்கடத்தல் பேர்வழிகளும் இங்கிருந்து பணத்தைக் கொண்டு போய் வெளிநாட்டில் முடக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. காரணம், இப்படிச் சேர்த்த பணத்தை நாமோ, நம் வாரிசுகளோ அனுபவிக்க முடியாது. சுவிஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்தவர், தன் வாரிசுகளிடம் அந்த விஷயத்தைச் சொல்லாமல் இறந்தால், அந்தப் பணம் அப்படியே போய்விடும். ஒருவேளை வாரிசுகளுக்குத் தெரிந்தாலும் அவர்களும் அரசின் கண்களில் சிக்காமல் அந்தப் பணத்தை பயன்படுத்துகிற அளவுக்கு செயல்படும் கில்லாடிகளாக இருக்க வேண்டும். ஆக, நமக்கும், நம் சந்ததிக்கும் பயன்படாத பணத்துக்கு மனிதர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா என்பதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் கிடக்கும் இந்த கறுப்பு – சிவப்புப் பணம் நம் அரசாங்கத் துக்கும் மக்களுக்கும் சேர வேண்டியது. அதை நம் நாட்டுக்கே கொண்டு வரவேண்டும் என பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், நம் அரசியல்வாதிகளோ ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, அந்தப் பணத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். ‘கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலைக் கொடுங்கள்’ என பொத்தாம் பொதுவாக சுவிஸ் வங்கியிடம் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். 100 பேர் கொண்ட பட்டியலைத் தயார் செய்து, ‘இவர்களின் பணம் உங்கள் வங்கியில் இருக்கிறதா?’ என்று கேட்டால், நிச்சயம் பதில் சொல்வார்கள். அமெரிக்க அரசாங்கம் அங்கு கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை இப்படித்தான் பிடித்தது. அமெரிக்காவுக்குத் தேவையான தகவல்களை சுவிஸ் வங்கி கொடுக்கும் போது நாம் கேட்டால் கொடுக்காதா என்ன? வெளிநாடுகளில் கிடக்கும் பணத்தை இங்கு கொண்டு வர சில சட்டதிட்டங்கள் தடையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இதெல்லாம் சால்ஜாப்புதான். மக்கள் நலனுக்காக இந்தச் சட்டங்களை மாற்றுவது தவிர வேறு வழியில்லை என்றால் மாற்றிவிடவேண்டியதுதானே?

வெளிநாடுகளில் இருக்கும் பணத்தை திரும்பக் கொண்டு வந்தால் மட்டும் போதாது. இனிமேலும் ஹவாலா மூலம் நம் பணம் வெளிநாடுகளுக்குப் போகாதபடிக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு முதலில் நாம் ஊழலை ஒழிக்க வேண்டும். இது நடக்கிற காரியமா என்று நீங்கள் நினைக்கலாம். மக்கள் மனம் வைத்தால் நிச்சயம் நடக்கும்.”

நன்றி:- ஏ.ஆர்.குமார்

நன்றி:- நா.வி

பணம் – பன்னாட்டு பொன்மொழிகள்


நன்றி:- நா.வி

=======================================================