தொகுப்பு

Posts Tagged ‘பச்சை மிளகு’

மிளகு


மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum)

MILAGU“பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சு முறிப்பானாக செயல்படுகிறது.

மிளகு (பைப்பர் நிக்ரம் Piper nigrum) என்பது ‘பைப்பரேசியே’ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. ‘மிளகு’ என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகுக் கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது. மிளகின் வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம். தென்னிந்திய மொழிகளில் இத்தாவரம் தமிழில் மிளகு எனவும், கன்னடம்:மெனசு (menasu, ಮೆಣಸು) மலையாளம்: குறு மிளகு(Kuru Mulagu) தெலுங்கு: மிரியாலு அல்லது மிரியம் (miriyam, మిరియం) கொங்கணி: மிரியாகொனு (Miriya Konu) எனவும் அழைக்கப்படுகிறது. மிளகுக் கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதால், தென்னிந்தியாவின் தட்பவெப்ப நிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும். பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சமையலறைகளிலும், உணவு உண்ணும் மேசைகளிலும் காணலாம். மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும்.

உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லி மலை, சேர்வ ராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது. உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.

மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.

உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால் தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.

இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும் போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப்படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.

நன்றி:- முகநூல் நண்பர்கள்.

நன்றி:- தமிழ் தந்த சித்தர்கள்.

ஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி!


நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வித்தியாசமின்றி, நடுத்தர வயதைத் தாண்டியவர்களில் பலருக்கும் இன்று உயர் ரத்த அழுத்தம் (Hypertension) காணப்படுகிறது. ரத்த அழுத்தம், 140/90 என்ற அளவினைக் கடக்கும்போது, அதை உயர் ரத்த அழுத்தப் பிரச்னை என்கிறோம். இந்தப் பிரச்னையைப் பற்றி விரிவாகப் பேசிய, சென்னை, பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் திருநாராயணன், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகளைப் பற்றியும் கூறுகிறார். இவை அனைத்துமே, ரத்த அழுத்தத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நேரடி உணவுகள். இவற்றைச் செய்து வழங்கியிருக்கிறார் பாரம்பரிய சமையல் கலை நிபுணர் சுந்தரவல்லி.

கருப்பரிசி, சிவப்பரிசி தோசை

தேவையானவை: கருப்பரிசி (பச்சரிசி), சிவப்பரிசி (புழுங்கலரிசி) – தலா ஒரு கப், உளுந்து, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு, தேங்காய்த் துருவல் – ஒரு டீஸ்பூன் (வேண்டுமெனில்), தக்காளி – மூன்று, சீரகம், மிளகுத் தூள் – தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் – தேவையான அளவு, இந்துப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:அரிசி, பருப்புகள், வெந்தயம் அனைத்தையும் களைந்து தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், அதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, இந்துப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் மற்ற பொருட்களைச் சேர்த்து, மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு, மிதமான தீயில் இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.


வெள்ளைப் பூசணி, பச்சைப் பட்டாணிக் கூட்டு

தேவையானவை: வெள்ளைப் பூசணி – ஒரு சிறு துண்டு, பச்சைப் பட்டாணி – அரை கப், தேங்காய்த் துருவல், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், சிறிய பச்சைமிளகாய் – ஒன்று,  கறிவேப்பிலை – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பூசணியைத் தோல், விதை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர்விட்டு ஒரு கொதிக்கு வேகவைக்கவும். பச்சைப் பட்டாணியையும் வேகவைத்துக்ªகாள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து வேகவைத்த காய்கறிகளுடன் கலந்து, உப்பு சேர்க்கவும். கடைசியாக ஒரு கடாயில் அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுத் தாளித்து, காய்கறிக் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.


முருங்கைக் கீரைக் கூட்டு

தேவையானவை: முருங்கைக் கீரை – ஒரு கப், பாசிப் பருப்பு – கால் கப், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: முருங்கைக் கீரையை ஆய்ந்துகொள்ளவும். பாசிப் பருப்புடன், கீரை சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, கீரைக் கூட்டில் கலந்து, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.


பச்சை மிளகு ஊறுகாய்

தேவையானவை: பச்சை மிளகு – 100 கிராம், எலுமிச்சம் பழம் – நான்கு, இந்துப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: எலுமிச்சம் பழங்களை விதை நீக்கிச் சாறு எடுக்கவும். பச்சை மிளகை சிறு சிறு கொத்தாக நறுக்கி, காம்புடன் அலசித் துடைத்துக்கொள்ளவும். பிறகு அதில் எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்த்து மூன்று நாள் ஊறவிடவும். ஊறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்துப் பரிமாறவும்.


கொள்ளு ரசம்

தேவையானவை: கொள்ளு – அரை கப், புளி – சிறு எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு, ரசப்பொடி – ஒரு டீஸ்பூன். தாளிக்க: நெய் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை.

செய்முறை: கொள்ளை அரை மணி நேரம் ஊறவைத்து, நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். வேகவைத்த பிறகு, தண்ணீரைத் தனியே வடித்து விடவும். வெந்த கொள்ளை, சுண்டலாகத் தாளித்து உண்ணலாம். புளியைத் தேவையான தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். அதில் ரசப்பொடி, உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். பிறகு கொள்ளு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து நுரை கட்டி வரும்போது, நெய்யில் தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.


தவிர்க்க வேண்டியவை:

அதிக உப்பு சேர்ந்த பொருட்கள், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பிஸ்கட், அதிகப் புளிப்பு, உப்பு, காரம் மிகுந்த உணவுகள், துரித உணவுகள், இனிப்பு வகைகள் போன்றவை, உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி, ரத்தக் குழாயைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்த்தல் நலம்.

சேர்க்க வேண்டியவை:

பழங்கள், காய்கறிகளில் சோடியம் சத்துக்குப் பதிலாக பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால், சர்க்கரை நோய் இல்லாத, உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, வாழைப் பழம் நன்மை தரும். கீரை வகைகள் பெரும்பாலும் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரை, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை ஆகியவை சோடியத்துக்கு மாற்றாக அமைந்து உடலில் நீர் கோத்துக்கொள்வதைத் தவிர்த்து, ரத்த அழுத்தத்தை ஓரளவுக்குக் குறைக்கும். உப்புக்கு மாற்றாக, இந்துப்பு பயன்படுத்தலாம். குறைந்த அளவு போட்டாலே, அது உப்பின் சுவையைத் தந்துவிடும். சிறுநீரை எளிதாக வெளியேற்றக்கூடிய வாழைத்தண்டு, முள்ளங்கி, வெள்ளைப் பூசணியை வாரம் ஒருமுறையாவது, உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்களில் குறைந்த அளவில் நல்லெண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், மிகக் குறைந்த அளவில் நெய் சேர்த்துக்கொள்வது தவறு இல்லை. சீஸ், வெண்ணெய், டால்டா போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். எப்போதாவது ஒரு நாள் சிறிய அளவில் முறுக்கு, தேன்குழல், காரச்சேவு முதலிய நொறுக்குத் தீனிகளைச் சிறிதளவு  எடுத்துக்கொள்ளலாம். வாதுமை, முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்ற பருப்பு வகைகளை எண்ணெய், நெய்யில் பொரிக்காமல் உப்பு சேர்க்காமல் நான்கு, ஐந்து சாப்பிடலாம்.