தொகுப்பு

Posts Tagged ‘நீங்கள் ஆப்பிளா? பேரிக்காயா?’

வலுவான உடலுக்கு வைட்டமின் சி! – ந.ஆஷிகா


உடலுக்கு சரிவிகித ஊட்டச் சத்துள்ள உணவு, மிக அவசியம் என்பது டாக்டர்கள் சொல்லும் ஆரோக்கிய அறிவுரை. சரிவிகித ஊட்டச் சத்து என்றால், எவ்வளவு என்பதில்தான் பலருக்கும் சந்தேகம். குறிப்பிட்ட அளவில் புரதச் சத்து, கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, தாதுச் சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் சேர்ந்ததுதான் சரிவிகித ஊட்டச் சத்து. எல்லாச் சத்துக்களுமே முக்கியமானவை என்றாலும், உடல் செல்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவதற்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம்.

வைட்டமின் சி என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின். ‘வைட்டமின் டி’-யைப்போல் இதை நம் உடல், உற்பத்தி செய்வதில்லை. நீரில் கரையக்கூடியது என்பதால், சேமித்து வைக்கவும் முடியாது. எனவே, பெரியவர்கள் தினசரி 60 மி.கி. அளவுக்கு வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை, நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதுதவிர, வேறு எந்தெந்த உணவுப் பொருள்களில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது என்பது பற்றி காரைக்குடியைச் சேர்ந்த டயட்டீஷியன் செல்வராணியிடம் கேட்டோம்.

‘நோய் எதிர்ப்பு சக்திக்கும், கொலாஜன் என்ற புரத உற்பத்திக்கும் வைட்டமின்- சி மிகவும் அவசியம். இந்த கொலாஜன்தான் லிகமென்ட் என்று சொல்லக்கூடிய எலும்பு மூட்டு சவ்வுகள், ரத்தக் குழாய்கள், தசைகளுக்கு உதவுகிறது. மேலும், நம் சருமம் மற்றும் இதர உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்கும் காரணமாக இருக்கிறது. இது, மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ‘ என்றவர், இதர காய்கறி – பழங்களில் வைட்டமின் சி எவ்வளவு உள்ளது என்று பட்டியலிட்டார்.


ஆரஞ்சுdownload.jpg

100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் 80 மி.கி. அளவில் வைட்டமின் சி உள்ளது. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சருமம் பொலிவடையும். வளரக்கூடிய எலும்புகள், தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் ஆரஞ்சு முக்கியமான பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா- கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. மேலும், கலோரி அளவு குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத் தரும். அதுமட்டுமின்றி, ஆரஞ்சுப் பழத்தின் வாசமே மனநிலையை சந்தோஷமாக மாற்றும்.  


பப்பாளிdownload.jpg

விலை மலிவானதும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியதுமான பப்பாளியில்  வைட்டமின் ஏ சத்துடன், வைட்டமின் சி-யும் நிறைவாக உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 60 மி.கி. வைட்டமின் சி இருக்கிறது. நாள் ஒன்றுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி, 100 கிராம் பழத்திலேயே கிடைத்துவிடும். இதுதவிர பொட்டாசியம், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் அதிகம் உள்ளன.


கொய்யாkoyy

கொய்யாப் பழ ரகத்துக்கு ஏற்றபடி அதிகபட்சமாக 228 மி.கி. வரையில் வைட்டமின் சி உள்ளது. இது செல்களைப் பாதுகாத்து, புற்றுநோய் செல் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைப்பதுடன், இதர செல்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களுக்கு எதிராகப் போராடும் ஆற்றலை, செல்களுக்கு அளிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. வைட்டமின் சி தவிர்த்து இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க இது பெரிதும் உதவும்.


குடமிளகாய்

இதில், வைட்டமின் சி இருக்கிறது. இதுதவிர, குடமிளகாயில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். பார்வைத் திறனுக்கு உதவுவதுடன், இளமையிலேயே கண் தொடர்பான பிரச்னைகளை அண்ட விடாமலும் காக்கும். சாதாரண மிdownloadளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும். மேலும் கூந்தலின் ஆரோக்கியத்தைக் காத்து நுனியில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கிறது. காய்கறி சாலட் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை? பச்சிளம் குழந்தைகளுக்கு: 35 மி.கி., வளர் இளம் பருவத்தினருக்கு: 50 மி.கி., பெரியவர்களுக்கு: 70-75 மி.கி. கர்ப்பிணிகளுக்கு: 80-85 மி.கி. தாய்ப்பால் புகட்டும்போது: 120-125 மி.கி.

நன்றி:- டயட்டீஷியன் செல்வராணி

நன்றி:- டாக்டர் விகடன்.

டாக்டர் விகடன்

விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி

 

உடல் எடையைக் குறைக்கும் உணவுப் பட்டியல்! – ரேவதி

நவம்பர் 5, 2013 1 மறுமொழி

 

30 வருடங்களுக்கு முன்பு, ‘அம்மா நான் கோகோ, ரன்னிங்ல ஃபர்ஸ்ட் பிரைஸ்’ என்று பெருமையோடு சொன்னால், ‘போதும்டீ… நீ படிக்க ஸ்கூல் போறியா? இல்லை, விளையாடப் போறியா? படிப்பை முதல்ல கவனி’ என்று விளையாட்டுக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். ‘ஒல்லி உடம்பு கொஞ்சமாவது தேறுமா?’ என்று பிள்ளைகளைப் பற்றிய ஏக்கமும், கனவும் அன்றைய பெற்றோருக்கு இருக்கும். உடலில் துளியும் எடைகூடாத அளவுக்கு விளையாட்டு, வீட்டு வேலை, சத்தான உணவு என அருமையான வாழ்க்கை முறையாக இருந்தது.

 ஆனால் இன்றோ, டீன் ஏஜ் பிள்ளைகளின் உடல் எடையைக் குறைக்க வழிதேடும் பெற்றோர். நாற்பது வயதில், வயிறு பெருத்து நடக்கக்கூட முடியாமல் திணறும் பெண்கள் மற்றும் ஆண்கள். விளைவு, தெருவுக்குத் தெரு, ஜிம். வீட்டுக்கு வீடு நடைபயிற்சி, ஓடுற மெஷின்கள்.

எடையைக் குறைக்க என்னவெல்லாம் வழி? என்பது குறித்து, எழும்பூர் குழந்தை நல மருத்துவர் எஸ். ஸ்ரீனிவாசன், ஊட்டச் சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விரிவாகப் பேசுகின்றனர்.

எடை கூட காரணங்கள்:

எடை ஒரேநாளில் அதிகரித்துவிடுவது இல்லை. நம்முடைய தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மருத்துவரீதியான பிரச்னை காரணமாக உடல் எடை கொஞ்சம்கொஞ்சமாக அதிகரிக்கிறது.

சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, ஒரே நேரத்தில் அதிக அளவில் உணவை உட்கொள்வது, இரவு நேரங்களில், பீட்சா, பர்கர் போன்ற கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவது கூடவே கூல்டிரிங்ஸ் குடிப்பது போன்றவை உடல் எடை அதிகரிக்க காரணம்.

உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் ஆண், ஒரு நாளைக்கு 1,600 கலோரி உள்ள உணவையும் பெண், 1,200 கலோரி எடை உணவையும் உட்கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைப்பதன் ரகசியம், நாம் உட்கொள்ளும் உணவில்தான் இருக்கிறது, சரியான அளவில் உட்கொள்ளாமல் இருப்பது நம் உடலின் வளர்சிதை மாற்றங்களைப் பாதித்து உடல் நலத்துக்கு வேறு பல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கான பொது விதிகள்

 எதை, எப்படி, எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும் என்ற உணவுக்கட்டுப்பாடு மிகமிக முக்கியம். இது உடலுக்கு சரிவிகித ஊட்டச்சத்துக்களை அளித்து ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

 அதிக அளவு கலோரி உள்ள, அதேநேரம் ஊட்டச்சத்து சிறிதும் இல்லாத கூல் டிரிங்ஸ், நொறுக்குத் தீனி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

 அதிக அளவில் கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்கு அதிக வைட்டமின், தாது உப்பு மற்றும் நார்ச் சத்துக்கள் கிடைக்கின்றன.  

 வயிறு நிறைந்துவிட்ட உணர்வை மூளை அடைய, குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும். எனவே, அவசர அவசரமாக உணவை எடுத்துக்கொள்ளவேண்டாம்.  உணவு சாப்பிடும் நேரம் மிக நீண்டதாக இருக்கட்டும்.

 கொழுப்புச் சத்துள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டியது இல்லை. அப்படித் தவிர்ப்பதன்மூலம் அது நம் உடலில் ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையை ஏற்பட்டு, உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிவிடும்.

 சூப், ஜூஸ், பால்… என போன்ற நீராகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு, பசி உணர்வு தோன்றாமல் பார்த்துக்கொள்ளும்.

 ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க, உடல் பருமன் குறைப்பு வல்லுனரின் ஆலோசனையைப் பெறத் தயங்காதீர்கள். ஒருவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட டயட் உணவை, மற்றவர் பின்பற்றுவது மிகவும் தவறு.

உணவாலும் உடல் இளைக்கும்!

நல்ல புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 2,000 கலோரி தேவையெனில், அதில் 500 கலோரியைக் குறைத்தாலே போதும்.  மாதம் இரண்டு கிலோ எடை குறைந்துவிடும்’ என்றவர் ஒருநாள் உணவை பட்டியலிடுகிறார்.

ஒரு நாள் உணவு!

காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப். பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.

அரை மணி நேர நடைப்பயிற்சி.

வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப். (சர்க்கரை சேர்க்காமல்)

புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட் போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட்.   (100 கிராம்)

10 மணிக்கு மோர்

11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்

12 மணிக்கு இளநீர்

மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.

வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம். (இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன் ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம், கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)

200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும் எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்கவேண்டியதும் இல்லை.

நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் / சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத் தவிர்க்கவும்.

நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.

ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேகவைத்த ஏதேனும்  சுண்டல் ஒரு கப்.

காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.  

இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.  

தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.  

டயட் பற்றிய டவுட்!

பட்டினி கிடந்தால் எடையைக் குறைக்கலாம் என்பது தவறான கருத்து.  

 எடை குறைக்க விரும்புபவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைக்கவேண்டும். பழங்கள், காய்கறிகளைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.  

 நீராகாரமாக மட்டும் சாப்பிட்டால் வயிற்றின் உட்புறச் சுவர்கள் பாதிக்கப்படும்.  இதனால் அல்சர் வரும் வாய்ப்புகள் அதிகம்.  திட மற்றும் திரவ உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலமே மலச்சிக்கல் வராமல் இருக்கும்.  

ரெசிபிகள்

கோஸ் சூப்

செய்முறை: 200 கிராம் கோஸை பொடியாக நறுக்கி, நீர் விட்டுக் கொதிக்கவைக்கவும். காரட், பீன்ஸ், வெங்காயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, இவற்றை அரைத்து விழுதாக்கி,  மஞ்சள்தூள், சீரகத்தூள், இந்துப்பு கலந்து இறக்கி, சுடச்சுட பருகவும்.

மதியம் சாப்பிட வெஜிடபிள் அவல் மிக்ஸ் சாதம்!

செய்முறை: அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயத்தை, தக்காளி, கோஸ், குடமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கி வதக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஊறிய அவலைப் போட்டு, உப்பு சேர்த்து எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, கிளறி இறக்கவும்.

வாழைத்தண்டு பச்சடி

செய்முறை: வாழைத்தண்டைக் கழுவி, பொடியாக நறுக்கி, தண்ணீர்விட்டு  லேசாக வேக வைக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சேர்க்கவும். ஒரு டம்ளர் மோர், இந்துப்பு சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.

நன்றி:- ரேவதி, எழும்பூர் குழந்தை நல மருத்துவர் எஸ். ஸ்ரீனிவாசன், ஊட்டச் சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.

நன்றி:- டாக்டர் விகடன்.

டாக்டர் விகடன்

விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி

 

பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா! – நீங்கள் ஆப்பிளா? பேரிக்காயா?


‘பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக  வரிசை கட்டும். சென்னை அப்போலோ மருத்துவமனையின் மூத்த உடல்பருமன் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனிடம் பேசினோம்.

‘உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது. ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் ஒருசில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி ஏதாவது இருக்கிறதா? என  விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். உடல்பருமனில் இருந்து அபரிமிதமான உடற்பருமனுக்கு செல்லும்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இந்தியர்களின் சராசரி பாஸல் மெட்டபாலிக் ரேட் (பி.எம்.ஆர்.) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் 3000 கலோரி உள்ளது. நம் உடல்வாகையும், உணவுப் பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியான மாற்றங்களை நமக்குள் நிகழ்த்தினால், நிச்சயம் உடல் பருமன் பிரச்னையை சரி செய்துவிட முடியும். இதோ, உங்களை நீங்களே அலசுவதற்கான அற்புத வழிகள்…  

 நீங்கள் ஆப்பிளா? பேரிக்காயா?

உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைப் பொறுத்து மட்டுமே நோய் அபாயம் அதிகரிப்பது கிடையாது. எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து அது மாறும். ஈஸியாகப் புரிந்து கொள்வதற்காக, கொழுப்பு சேரும் இடத்தை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல் என்று இரண்டு விதமாக வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை ஆப்பிள் மாடல் என்றும், இடுப்பு மற்றும் பின்புறத்தில் சேரும் கொழுப்பை பேரிக்காய் மாடல் என்றும் கூறுவார்கள். இரண்டுமே மோசம்தான். பேரிக்காய் வடிவத்தினரைவிட ஆப்பிள் வடிவத்தினர்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களைவிட இவர்களுக்கு அதிகம்!


 இடுப்பை அளவிடுங்கள்… அபாயத்தைக் கணக்கிடுங்கள்…

நீங்கள் (ஆப்பிள்) ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ-க்கு (37 இன்ச்) அதிகமாகவும், பெண்ணாக இருந்தால் 80 செ.மீ-க்கு (32 இன்ச்) அதிகமாகவும் இருந்தால்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். (பேரிக்காய்) ஆண்கள் 102 செ.மீ-க்கு (40 இன்ச்) அதிகமாகவும், பெண்கள் 88 செ.மீ-க்கு (35 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் கூடுதல் எச்சரிக்கை தேவை. இடுப்பு அளவைக் குறைக்கும் முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டியது அவசியம்!

 திட்டமிட்ட ஆரோக்கிய உணவு  

ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆரோக்கியமான உணவுத் திட்டமிடல் என்பதில், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவின் அளவைக் குறைத்து, அதிகக் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளுதல், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த அளவு கொழுப்பு உள்ள பால் எடுத்துக்கொள்ளுதல், இறைச்சி, மீன், முட்டை, பாதாம், முந்திரி ஆகியவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ளுதல் போன்றவை அடங்கும். உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இப்படி சமச்சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே, உடல் எடை கட்டுப்படத் தொடங்கிவிடும்.

உடல் எடையைக் குறைக்க அதிக கலோரிகள் உள்ள உணவு மற்றும் பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு சக்தி கிடைக்கிறதோ, அதை உடம்பில் சேர்த்துவைக்காமல் அவ்வப்போது  எரித்துவிட வேண்டும்.  அதாவது, உடல் உழைப்பின் மூலம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.  விளக்கமாகச் சொன்னால்… உண்ணுகிற உணவுக்கு ஏற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று எது முடிகிறதோ, அதைச் செய்ய வேண்டும்.

உடல்பருமனால் அவதிப்படும் அதே நேரம், நீரிழிவு போன்ற பிரச்னை இல்லை என்றால் அவர்களுக்கு புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி (Sleeve gastrectomy) அறுவைச் சிகிச்சை உள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையில், பசியைத் தூண்டும் க்ரெலின் (Ghrelin)) என்ற ஹார்மோன் அகற்றப்படும். மேலும்,  இரைப்பையின் அளவும் குறைக்கப்படும். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவைச் சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில், உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும். அபரிமிதமான உடல்பருமன் உள்ளவர்களுக்கு பை பாஸ் அறுவைச் சிகிச்சை தான் சிறந்தது. இதில் இரைப்பையின் அளவு குறைக்கப்படுவதுடன், ஊட்டச்சத்து கிரகிக்கப்படும் அளவும் குறைக்கப்படுகிறது. இதுதவிர, ரோபோட்டிக் அல்லது எண்டோஸ்கோப்பி மூலமாகவும் உடல்பருமன் அறுவைச் சிகிச்சை செய்யும் முறை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகமாகியுள்ளது’ என்றார்.

 உடல் எடை குறைய டாக்டர்கள், டயட்டீஷியன் அளிக்கும் உற்சாக வழிகள்…

 காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை  தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.

 உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர்.

முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

 பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத்  தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம்.

அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும்.

குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம்.

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து அருந்தலாம்.

கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

லிபோசக்ஷன் என்ற கொழுப்பு உறிதல் சிகிச்சையும் உள்ளது. இது, உடலின் எந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்தில் செய்யப்படும்.

பொதுவாக, நாவை அடக்குவது என்பது மிகவும் கடினமான செயல். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான். இவை அனைத்தையும் ஒரேயடியாகத் தவிர்த்தாலும், மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று உடல் எடையைக் குறைப்பதற்காக, உணவு மற்றும் உடற்பயிற்சியை மிக வேகமாக மாற்றிவிடக் கூடாது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே… அதே பாணியில் பருமனையும் கரைப்போ

நன்றி:- டாக்டர் ராஜ்குமார் பழனியப்பன்.