தொகுப்பு

Posts Tagged ‘ஜூஸ்’

டாக்டரிடம் கேளுங்கள் 20 [பழங்கள் உணவுக்கு முன்பா? பின்பா? கால் மரத்துப்போகுதல், வாயுப் பிரச்னை ]

பிப்ரவரி 11, 2013 1 மறுமொழி

”உணவுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதையோ, ஜூஸ் குடிப்பதையோ வழக்கமாக வைத்திருக்கிறேன். ஆனால், ‘உணவுக்கு முன் பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது’ என்று சிலர் சொல்லும்போது, எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பழங்களை எப்போது, எப்படிச் சாப்பிடுவது நல்லது?”

செல்வராணி, நியூட்ரிஷியன், மதுரை.

”பழங்களே சிறந்த உணவுதான்.  எளிதில் ஜீரணமாகி உடலுக்குத் தேவையான சக்தியையும் மூளைக்குத் தேவையான குளுக்கோஸையும் அளிப்பதில் பழங்களுக்கு
இணையே இல்லை. ஆகையால், பழங்களை உணவுக்கு முன் அல்லது பின் என்று சாப்பிடுவதைக் காட்டிலும் தனித்து- அதையே உணவாகக் கருதிச் சாப்பிடுவதே சிறந்த முறை.

அப்போதுதான் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் அப்படியே நம் உடலுக்குக் கிடைக்கும். ஒரு சின்ன உதாரணம்… பழங்களில் உள்ள நார்ச் சத்து. பழங்களை அரைத்து, வடிகட்டி சாறை மட்டும் குடிக்கும்போது, பெரும்பான்மை நார்ச் சத்தை அது இழந்திருக்கும். நார்ச் சத்து இருந்தால், மலச் சிக்கலை அது களைந்துவிடும். மலச் சிக்கல் அகன்றால், செரிமானக் கோளாறு ஏற்படாது. இப்படி ஒவ்வொரு சத்தின் பயன்களையும் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.  தவிர, பழங்களைச் சாறாக்கி, பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கும் போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும், பழச்சாறின் இயல்பையே குலைத்துவிடும். செரிமானக் கோளாறையும் உருவாக்கக்கூடும்.

அதேபோல, உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால், அது ஏற்கெனவே வயிற்றில் இருக்கும் உணவு செரிமானம் ஆவதற்காகக் காத்திருக்காமல், (ஓவர்டேக் செய்து) முன்கூட்டியே ஜீரணமாகிவிடும். அதன் தொடர்ச்சியாக சத்துக்களும் கிரகிக்கப்பட்டுவிடும். இதனால், சிலருக்கு ஏப்பம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, பழங்களைத் தனித்துச் சாப்பிடுவதையே வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். சாப்பிட்ட பிறகுதான் பழம் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால், சாப்பாட்டுக்கு முன்போ, பின்போ இரண்டு மணி நேர இடைவெளியில் பழங்களைச் சாப்பிடலாம்.”

சுகுமார், ஆத்தூர்.

”வேலைநிமித்தம் அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்பவன் நான். பயணத்தின்போது, அரை மணி நேரம் தொடர்ந்து கால்களைத் தொங்கவிட்டு உட்கார்ந்தால்கூட கால் மரத்துப்போகிறது. ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காருவதால் கழுத்து, தோள் பட்டை, இடுப்பு என உடல் முழுவதும் வலி எடுக்கிறது. இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது?”

எஸ். முருகசாரதி, முதுநிலை எலும்பு சிகிச்சை நிபுணர், வேலூர்.

”நீண்ட நேரப் பயணங்களின்போது, கை, கால், இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதிகள் அனைத்தும் அசையாமல் இருப்பதுதான் இந்தப் பிரச்னைக்கான மூலக் காரணம். ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் கணுக்காலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. கெட்ட ரத்தம் கணுக்கால் பகுதிகளில் அப்படியே நிலைகொண்டுவிட்டால், கால்கள் மரத்து செயல் இழந்ததைப் போன்ற உணர்வும் அதிகப்படியான வலியும் ஏற்படும். பயணத்தின்போது, இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உட்காரும் நிலையை மாற்றி மாற்றி அமைத்துக்கொள்வது, கால்களை அவ்வப்போது அசைத்துக்கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

ஆனால், தொடர்ந்து பயணத்தில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியம். குறிப்பாக, ஒரே மாதிரியான நிலையில் அமர்ந்து இருப்பது தண்டுவடத்தைப் பாதிக்கக்கூடும். எலும்புகளிலும் தேய்மானத்தை உருவாக்கும். ஆகையால், இரவில் படுக்கும்போது தலையணை இல்லாமல் தரையில் படுப்பது, தினசரி முதுகு மற்றும் கழுத்துப் பகுதிக்கு என்று அரை மணி நேரமேனும் ஒதுக்கிப் பயிற்சிகள் மேற்கொள்வது ஆகியவை முக்கியமாகும். உணவுப் பழக்கத்திலும் நீங்கள் மாறுதல் கொண்டுவர வேண்டி இருக்கலாம். ஒரு நல்ல பிசியோ தெரபிஸ்ட்டையோ, யோகா ஆசிரியரையோ பாருங்கள்.”

ப்ரியா, மும்பை.

”என் கணவருக்கு வாயுப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. இதனால், பல நேரங்களில் உடல் வலி உள்ளிட்ட சிரமங்களை அனுபவிப்பதுடன் பொது இடங்களில் வாயு பிரியும் தர்மசங்கட நிலையிலும் சிக்கித் தவிக்கிறார். வாயுத் தொல்லையில் இருந்து விடுபட என்ன வழி?”

பக்தவச்சலம்,   வயிறு மற்றும் குடல் நோய் நிபுணர், திருநெல்வேலி.

ட”பொதுவாக, குடல் வாயு (மிஸீtமீstவீஸீணீறீ நிணீs)  என்பது கிட்டத்தட்ட 200 மி.லி. அளவுக்கு எல்லோருக்குமே  உருவாகும். பலருக்கு அது எந்தச் சிக்கலையும் கொடுப்பதில்லை. சிலருக்கு மட்டும் சிரமத்தைக் கொடுக்கிறது.

இந்த வாயு எப்படி உருவாகிறது? நாம் உணவு உட்கொண்டதும் அதனை நொதிக்கச் செய்து செரிமானத்தை ஏற்படுத்த வசதியாக நமது பெருங்குடலில் கோடிக்கணக்கான
நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நம்மோடு வாழ்நாள் முழுவதும் இணைந்து செயல் ஆற்றக்கூடிய இந்த பாக்டீரியாக்கள்தான் உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன. இந்தச் செரிமான வேலைகளின்போது வாயு உருவாகிறது. இந்தத் தன்மை பலருக்கும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், சிலருக்கு ஏற்றுக்கொள்வது இல்லை. இதுதான் நீங்கள் குறிப்பிடும் ‘வாயுத் தொல்லை’.

இப்படி வாயுத் தொல்லை உருவாவதற்கு  பல காரணங்கள் இருக்கின்றன.  மரபணுக்களும்கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் குடும்பத்தில் யாருக்காவது இந்தப் பிரச்னை இருந்திருக்குமானால், வாரிசுகளுக்கும் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

பொதுவாக, வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பால், கோதுமை உணவுகளைத் தவிர்ப்பது அல்லது  குறைத்துக்கொள்வது நல்லது. ஆடை நீக்கப்பட்ட தயிரைச் சேர்த்துக்கொள்ளலாம். பீன்ஸ், பட்டாணி, பட்டர் பீன்ஸ், பயறு, கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்ளலாம். நார்ச் சத்து மிக்க உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது, மாதத்துக்கு ஒரு முறையேனும் மலமிளக்கியை எடுத்துக்கொண்டு வயிற்றைச் சுத்தப்படுத்திக்கொள்வது போன்றவை உதவும்.  அதிகமான சிக்கலை ஏற்படுத்தினால் பெருங்குடல் பாக்டீரியாக்களைப் பரிசோதனைசெய்து, அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி வாயுத் தொல்லையைச் சரிசெய்யவும் மருத்துவ வசதி இருக்கிறது.”

 

 

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்! – நாட்டு வைத்தியம்

செப்ரெம்பர் 20, 2010 பின்னூட்டமொன்றை இடுக

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்!

யற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தா… நோய் நொடியில்லாம வாழறதுக்கான வழி மட்டுமில்ல… வந்த நோய்களை விரட்டி அடிக்கறதுக்கான வழியும் கிடைக்கும்.

உதாரணத்துக்கு எத்தனையோ விஷயங்கள பட்டியல் போட முடியும். இந்தக் கோதுமை இருக்கே கோதுமை… அதுல உள்ள சக்தி, நிறைய நோய்களுக்கு தீர்வா இருக்குங்கறது தெரியுமோ?!

கோதுமையை நல்லா கழுவி முளைகட்ட வைக்கணும். முதல் நாள் சாயங்காலம் முளைகட்டி, மறுநாள் காலையில எடுத்து அதோட கொஞ்சம் தண்ணிவிட்டு நல்லா அரைச்சி பால் எடுக்கணும். அதுல கொஞ்சம் தேங்காய்ப்பால், சுவைக்கு தேன் சேர்த்துச் சாப்பிட்டா… உடம்புக்கு நல்ல பலம் கிடைக்கும்.

இது, வாத நோயை குணமாக்கும். வெள்ளை அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, மூக்குல நீர் வடியறது உள்ளிட்ட சின்னச் சின்ன தொந்தரவுகளையும் அண்ட விடாது. இன்னும் சொல்லப்போனா, புற்றுநோயைக் எதிர்க்கக்கூடிய சக்திகூட இருக்கு இந்த கோதுமைப்பாலுக்கு.

இதைச் சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு வந்தாலும் வரும். அப்படி வந்தா… குடிக்கறத நிறுத்திடணும். வயிற்றுப்போக்கு நின்னதும், ஒருநாள்விட்டு கோதுமைப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டா… உடம்பு ஏத்துக்கும்.

பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்ப… மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். மற்ற கீரைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.

மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தா… புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

நன்றி:- அன்னமேரி பாட்டி

நன்றி:- அ.வி

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி


கோடை வந்தாச்சு. வெயிலில் விளையாடி சோர்ந்து போய் வரும் நம் வீட்டுக் குட்டீஸ்க்கும், வியர்வையை வெளியேற்றியே களைப்படைந்து போகும் பெரியவர்களுக்கும் ஏற்ற..  உற்சாகம் தருகிற..  ஜில் மந்திரங்களை இங்கே வழங்கி இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் சமந்தகமணி!

_________________________________________________________________________________

அத்திப்பழ மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்: காய்ந்த அத்திப் பழம்– (ட்ரை ஃப்ரூட்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும்)- 3, ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, சர்க்கரை – இரண்டு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – 2 டீஸ்பூன், காய்ச்சிய பால் – ஒரு கப்.

செய்முறை: அத்திப் பழத்தைப் பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, அதை நன்கு விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைக்கவும். ஐஸ்கிரீமை இதன் மேலே வைத்துப் பரிமாறவும்.

——————————————————–

தர்ப்பூசணி ரசாயணம்

தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், தேங்காய் வழுக்கல் (இளநீரில் இருப்பது – பொடிப் பொடியாக நறுக்கவும்) – 1 கப், கெட்டித் தேங்காய்ப் பால் – அரை கப், ஏலக்காய் – ஒன்று, வெல்லம் – அரை கப், உப்பு – ஒரு சிட்டிகை. விருப்பப்பட்டவர்கள், சிறிது சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை: தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைய விட்டு அடுப்பில் இளம் சூட்டில் வைத்து சிறிது நேரம் ஆன பின், ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கவும். சூடு ஆறியதும்இதனுடன் தர்ப்பூசணி, தேங்காய் வழுக்கை, சுக்குப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும் (அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் போதுமானது.)

—————————————————————————————————–

ஆப்பிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்: நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், சர்க்கரை – இரண்டு டீஸ்பூன், லவங்கப் பட்டைப் பொடி – அரை டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் – ஒரு கப்.

செய்முறை: ஆப்பிளை சிறிது தண்ணீர் சேர்த்து, சர்க்கரையுடன் நன்றாக அரைத்தெடுக்கவும். மீதமுள்ள தண்ணீரில் இந்த விழுதை நன்கு கலக்கி, ஒரு பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டி, லவங்கப் பட்டைப் பொடியை மேலே தூவி, அலங்கரித்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மிளகுப் பொடியையும் தூவலாம்.

—————————————————————————————————–

இளநீர் டிலைட்

தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கல் – அரை கப், ஜிலடின் (உணவுப் பொருட்களில் உபயோகமாகிற ஜிலடின், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன், காய்ச்சின பால் – ஒரு கப், சர்க்கரை, மில்க் மெய்ட், ஃப்ரெஷ் கிரீம் – தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: ஜிலடினை சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். இதைச் சில வினாடிகள் ஸ்டவ்வில் வைத்துக் கிளறி, ஆற விடவும். பின் இதோடு பால், மில்க் மெய்ட், சர்க்கரை, ஃப்ரெஷ் கிரீம் எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே இளநீர்த் துண்டுகளைச் சேர்த்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து உபயோகிக்கவும்.

—————————————————————————————————–
மேங்கோ லஸ்ஸி

தேவையான பொருட்கள்: மாம்பழத் துண்டுகள் (நறுக்கியது), தயிர் – தலா அரை கப், ஐஸ் கட்டிகள் – சிறிதளவு, தேன் (அல்லது) சர்க்கரை – 4 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: தயிரை மிக்ஸி அல்லது மத்து கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளையும், உப்பு, மாம்பழத் துண்டுகளையும், தேன் (அல்லது) சர்க்கரையையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்த பின் பரிமாறவும்.
—————————————————————————————————–


தண்டை

தேவையான பொருட்கள்: பால் – ஒரு கப், கன்டென்ஸ்ட் மில்க் – 2 டீஸ்பூன், பாதாம் பருப்பு – 6, பூசணி விதை, சூரியகாந்தி விதை – தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, பன்னீர் (ரோஸ் வாட்டர்) – அரை டீஸ்பூன்.

அலங்கரிக்க: ரோஜா இதழ்கள் – 4 (அல்லது) 5.

செய்முறை: பாதாம், சூரியகாந்தி விதை, பூசணி விதையை பன்னீருடன் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன், ஏலக்காய்ப் பொடி, பால், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து, நன்கு கலக்கவும். இதனுடன், சிறிதளவு குளிர்ந்த தண்ணீர் அல்லது க்ரஷ்ட் ஐஸ் சேர்த்து, கலக்கி, பரிமாறவும். மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரிக்கவும். (வட இந்திய ஸ்பெஷல் பானம் இது!)
—————————————————————————————————–


மாங்காய் பன்னா

தேவையான பொருட்கள்: மாங்காய் (துருவியது) – ஒன்று, சர்க்கரை, தண்ணீர் – தலா அரை கப், ப்ளாக் ராக் சால்ட் (இந்துப்பு), மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், சோம்புத் தூள் – ஒரு சிட்டிகை, வறுத்துப் பொடித்த சீரகப் பொடி – சிறிதளவு, க்ரஷ்ட் ஐஸ் – சிறிதளவு.

அலங்கரிக்க: புதினா இலை – சிறிதளவு.

செய்முறை: மாங்காய், சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும், ஆறிய பின் மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் இதனுடன், ப்ளாக் ராக் சால்ட், மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகப் பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறிய பின், க்ரஷ்ட் ஐஸை சேர்த்து, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும்.

(இதுவும் வட இந்தியாவின்.. முக்கியமாக, மகாராஷ்ராவின் தயாரிப்பு! அங்கெல்லாம் இதை ‘ஆம் பன்னா’ என்பார்கள். ஆம் – மாங்காய்)
—————————————————————————————————–

தர்ப்பூசணி சிப்

தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி ஜுஸ் – ஒரு கப், தயிர் – அரை கப், புதினா விழுது – அரை டீஸ்பூன், தக்காளி ஜுஸ் – அரை கப், மிளகுப் பொடி – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, தேன் – ஒரு டீஸ்பூன், லவங்கப் பட்டை பொடி – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: எடுத்துக் கொண்டுள்ள எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, லவங்கப் பட்டை பொடியைத் தூவி, அலங்கரித்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–


வெள்ளரி ஷேக்

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் (துருவியது), பால் – தலா ஒரு கப், தேன் – 2 டீஸ்பூன், சர்க்கரை, நறுக்கிய பாதாம், பாதாம் விழுது – தலா ஒரு டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் – அரை கப்.

செய்முறை: வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன், சர்க்கரை கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள், 2 டீஸ்பூன் ஐஸ்கிரீமை மேலே வைத்தும் பரிமாறலாம்.

மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்!
—————————————————————————————————–


ரெட் வொண்டர்

தேவையான பொருட்கள்: கேரட் (பொடியாக நறுக்கியது) – ஒன்று, பீட்ரூட் (பொடியாக நறுக்கியது) – பாதி, தக்காளி (பொடியாக நறுக்கியது) – ஒன்று, ஐஸ் கட்டிகள் – சிறிதளவு, எலுமிச்சம் பழச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க: புதினா இலைகள்.

செய்முறை: கேரட், பீட்ரூட், தக்காளி மூன்றையும் தனித் தனியே மிக்ஸியில் அடித்து, சாறு எடுத்து வடிகட்டவும். இதனுடன், எலுமிச்சம் பழச் சாறு, உப்பு, மிளகுத் தூள், ஐஸ் துண்டுகள் சேர்த்து, நன்கு கலந்து, 10 நிமிடங்கள் வைத்து, புதினாவை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

(கேரட், பீட்ரூட், தக்காளி என்று சிவப்பு நிறப் பொருட்களே கலந்திருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.)
—————————————————————————————————–


ரோஜா சர்பத்

தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள் – அரை கப், சர்க்கரை – கால் கப், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மாதுளம் பழச் சாறு – அரை கப்.

செய்முறை: ரோஜா இதழ்களை நன்றாகப் பொடி செய்து, ஒரு பாத்திரத்தில், கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து மூடி வைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பின், அதை வடிகட்டி சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, மாதுளைச் சாறு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கி மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரித்து, பரிமாறவும்.
—————————————————————————————————–

பரங்கிக்காய் டிலைட்

தேவையான பொருட்கள்: பரங்கிக்காய் (துருவியது) – அரை கப், முந்திரி விழுது – இரண்டு டீஸ்பூன், பால் – ஒரு கப், சர்க்கரை – 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை.

செய்முறை: பரங்கிக்காய்த் துருவலை கொதிக்-கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் நீரை வடிகட்டி, மிக்ஸியில் அரைத்து, இதனுடன் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்து, பாலில் கலக்கி, கொதிக்க விடவும். ஆறிய பின், ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின் பொடித்த முந்திரியை மேலே தூவி பரிமாறவும்.
—————————————————————————————————–


ஃப்ரூட்ஸ் வித் ஓட்ஸ்

தேவையான பொருட்கள்: பால் – ஒரு கப், ஃப்ரெஷ் கிரீம் – 2 டீஸ்பூன், ஆப்பிள் (நறுக்கியது) – அரை கப், பொடித்த லவங்கப் பட்டை – அரை டீஸ்பூன், மாதுளம் பழ முத்துக்கள், ஆரஞ்சு ஜுஸ், பாதாம் (நறுக்கியது), மில்க் மெய்ட் – தலா 2 டீஸ்பூன், வாழைப்பழம் (நறுக்கியது) – சிறிதளவு, ஓட்ஸ் – 3 டீஸ்பூன்,

செய்முறை: பாலில் ஓட்ஸை ஊற வைக்கவும். பால், ஆப்பிள், வாழைப்பழம், ஓட்ஸ் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். இதனுடன் ஆரஞ்சு ஜுஸ், லவங்கப் பட்டை, ஃப்ரெஷ் கிரீம், மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கலந்து, மாதுளம் பழம், பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
—————————————————————————————————–


மசாலா மோர்

தேவையான பொருட்கள்: தயிர் – ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – ஒரு பல், சீரகம் (வறுத்துப் பொடித்தது), தனியாப் பொடி – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, கொத்துமல்லி – அலங்கரிக்க.

தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – சிறிதளவு, பெருங்காயம் – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, தனியாப் பொடி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, பின் அதனுடன் தயிரையும் சேர்த்து அடிக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இதில் சேர்த்து, 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லி தூவி பரிமாறவும். அரைக்கும்போது, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.
—————————————————————————————————–


முலாம் பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்: முலாம் பழம் (நறுக்கியது) – ஒரு கப், சர்க்கரை – 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முலாம் பழத்தை நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–


தக்காளி ஜூஸ்

தேவையான பொருட்கள்: தக்காளி – 3, உப்பு – ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், தேன் – 3 டீஸ்பூன்.

அலங்கரிக்க: புதினா இலை – 5.

செய்முறை: கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, தக்காளி போட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தக்காளியை குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்தால், தோலை சுலபமாக உரித்தெடுக்க முடியும். இப்போது, தக்காளியை நன்றாக அரைத்தெடுத்து, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இதனுடன், மிளகுத் தூள், தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, புதினா இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

—————————————————————————————————–

மின்ட் ஐஸ் டீ

தேவையான பொருட்கள்: புதினா இலை – கால் கப், கொதிக்கும் நீர் – ஒரு கப், க்ரீன் டீ – – 1 பாக்கெட், தேன் – ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க: லெமன் க்ராஸ்- (அல்லது) புதினா இலை.

செய்முறை: கொதிக்கும் நீரில் தேன், டீ பாக்கெட், புதினா இலை ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி, ஆற வைத்து, தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, எடுத்து, லெமன் க்ராஸ் தூவி அலங்கரிக்கலாம்.
—————————————————————————————————–


சாக்லேட் ஸ்மூத்தி!

தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் (நறுக்கியது) – ஒன்று, ஸ்ட்ராபெர்ரி (நறுக்கியது) – – ஒன்று, மில்க் சாக்லேட் (பெரிய சைஸ்) – ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் – – அரை கப், வெனிலா ஐஸ்கிரீம் – தேவையான அளவு.

செய்முறை: சாக்லெட்டை சிறிது சூடு செய்து உருக்கிக் கொள்ளவும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஃப்ரெஷ் க்ரீம்.. மூன்றையும் ப்ளெண்டர் அல்லது மிக்ஸியில் அடித்து, உருக்கிய சாக்லேட்டுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும்.
—————————————————————————————————–


மின்ட் ஜூஸ்

தேவையான பொருட்கள்: புதினா இலை – 10, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 4 டீஸ்பூன், அலங்கரிக்க: எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள்.

செய்முறை: கல் உரலில் புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை எல்லாவற்றையும் நன்றாக நசுக்கி, தண்ணீர் சேர்த்து வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். எலுமிச்சைத் துண்டுகளை ஓரத்தில் செருகி, புதினா இலையை மிதக்க விட்டு அலங்கரிக்கவும்.
—————————————————————————————————–


பீ நட் பட்டர் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்: பீ நட் பட்டர் (றிமீணீஸீதt தீதttமீக்ஷீ – நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை வெண்ணெய் – டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கிறது) – ஒரு டீஸ்பூன், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் – 2 டீஸ்பூன், பால் – ஒரு கப், வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு ஸ்க்யூப்.

செய்முறை: பீ நட் பட்டர், மிக்ஸட் ஜாமை நன்றாக அடித்து, பாலுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஐஸ்கிரீம் வைத்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–


பானகம்

தேவையான பொருட்கள்: வெல்லம் (பொடித்தது) – அரை கப், தண்ணீர் – 2 கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி – தலா ஒரு சிட்டிகை, வெள்ளரிப் பழம் (பொடியாக நறுக்கியது) – 3 டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி, அதனுடன் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இதைக் கண்ணாடி டம்ளருக்கு மாற்றி மேலே வெள்ளரிப்பழம் தூவி அலங்கரிக்கவும்.
—————————————————————————————————–


லஸ்ஸி

தேவையான பொருட்கள்: தயிர் – ஒரு கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், ஐஸ் வாட்டர் – ஒரு கப், ஐஸ் துண்டுகள் — சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் — ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும். இதனுடன் ஐஸ் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடித்துக் கொண்டு, ஐஸ் வாட்டர் கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் கிரீமால் அலங்கரித்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–


மலாய் குல்ஃபி

தேவையான பொருட்கள்: கெட்டியான பால் – ஒரு கப், மில்க் மெய்ட், பால் பவுடர் – தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு.

செய்முறை: எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் நன்றாகக் கலந்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும். ஆறிய பின், சிறிய மண்ணால் ஆன கப் (அல்லது) கடைகளில் கிடைக்கும் குல்ஃபி மோல்டில் மாற்றி, ஃப்ரீஸரில் ஒரு இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் எடுத்து உபயோகிக்கலாம். பரிமாறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், வெளியில் எடுத்து வைத்து விட வேண்டும்.

குறிப்பு: மண் கப்களை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு, தண்ணீரில் ஊற வைத்து, சுத்தமாகக் கழுவ வேண்டும். தண்ணீரில் ஊற வைப்பதால் அதிலிருக்கும் மண் வாசனை போய் விடும். சுடு தண்ணீரில் மறுபடியும் கழுவி எடுப்பது மிகவும் சிறந்தது.
—————————————————————————————————–


கஸ்டர்ட்

தேவையான பொருட்கள்: வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை (இன்னும் வேண்டிய பழங்கள் – துண்டுகளாக நறுக்கியது) – 1 கப், பால் – -150 மி.லி, சர்க்கரை- – 50 கிராம், கஸ்டர்ட் பவுடர் – -2 டீஸ்பூன்

செய்முறை: காய வைத்து ஆற வைத்த நான்கு டீஸ்பூன் பாலில், இரண்டு டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து தனியே வைத்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், கலந்து வைத்துள்ள கஸ்டர்ட்- பால் கலவையை மெதுவாகக் கலந்து, அடி பிடிக்காமல் கிண்டவும். மைதா அல்வா பதத்துக்குக் கலவை வந்ததும், இறக்கி ஆற விடவும். நன்கு ஆறிய பின், பழத் துண்டுகளைப் போட்டு, தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடி தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: பழங்களுக்கு பதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். பல வகைப் பழங்களாக இல்லாமல், ஒரே வகைப் பழம் மட்டும் சேர்த்தால், அந்தக் குறிப்பிட்ட ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரைச் சேர்க்கலாம்!
—————————————————————————————————–

எலுமிச்சை ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு, தண்ணீர் – தலா 1 கப், சர்க்கரை – 2 கப், சிட்ரிக் ஆசிட் – கால் டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரில் சர்க்கரையை நன்றாகக் கரைத்து, கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் (ஒரு நிமிடத்திலிருந்து, இரண்டு நிமிடங்களில் பிசுக்கென்ற பதம் வரும்போது) அடுப்பை நிறுத்தி, இந்தக் கரைசலை வடிகட்டிக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, நன்கு கலக்கி, காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு என்ற விகிதத்தில் கலக்கி, பரிமாறவும்.

குறிப்பு: நிறைய ஸ்குவாஷ் தயாரித்து, ஃப்ரிட்ஜில் பத்திரப்-படுத்தினால், வருடம் முழுவதுக்கும்கூட வைத்துப் பயன்படுத்தலாம்.
—————————————————————————————————–


மேங்கோ ஸ்குவாஷ்

செய்ய தேவையான பொருட்கள்: மாம்பழம் – 5, சர்ககரை – அரை கிலோ, சிட்ரிக் ஆசிட் – 2 டீஸ்பூன், மேங்கோ எசன்ஸ் – சிறிதளவு, தண்ணீர் – மாம்பழச் சாற்றைப் போல 5 பங்கு.

செய்முறை: மாம்பழத் தோல், கொட்டை நீக்கி, மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு மாம்பழச் சாறைத் தயாரிக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து, பின் கொதிக்க வைத்து, அதில் சிட்ரிக் ஆசிட்டைச் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பின் இதை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய பின், மாம்பழச் சாறு, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது 1 கப் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து பரிமாறவும்.
—————————————————————————————————–


திராட்சை ஸ்குவாஷ்

செய்ய தேவையான பொருட்கள்: திராட்சைச் சாறு – 2 கப், சர்க்கரை – 4 கப், க்ரேப் எசன்ஸ் – 1 டீஸ்பூன், தண்ணீர் – 2 கப், சிட்ரிக் ஆசிட் – 1 டீஸ்பூன், ஃபுட் கலர் – கால் டீஸ்பூன்.

செய்முறை: சர்க்கரையைத் தண்ணீரில் நன்கு கரைய விட்டு அடுப்பில் வைக்கவும். இது கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பின் நிறுத்தவும். பின் இதை வடிகட்டி, இதனுடன் திராட்சைச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்க்கவும்.

தயாரான ஸ்குவாஷை சுத்தமான பாட்டிலில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து கலக்கி, பரிமாறவும். விருப்பப்பட்டால் பாரிமாறுகையில் மிளகுத் தூளைத் தூவலாம். சுவை கூடும்.
—————————————————————————————————–

ஆரஞ்சு ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: ஆரஞ்சுச் சாறு – 2 கப், சர்க்கரை – 6 கப், ஆரஞ்சு எசன்ஸ் – அரை டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் – கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் – 1 டீஸ்பூன், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரில் சர்க்கரையைக் கரைய விட்டு, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஸ்டவ்வில் வைத்துக் கொதிக்க விடவும். இதனுடன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடம் ஆன பிறகு இறக்கி, வடிகட்டவும். ஆறியவுடன் ஆரஞ்சுச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஸ்குவாஷ் ரெடி! ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
—————————————————————————————————–


தக்காளி ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: தக்காளி – ஒரு கிலோ, சர்க்கரை – அரை கப், உப்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறிய பின் தோலை நீக்கி, நன்றாக மசித்து. வடிகட்டவும். இந்தத் தக்காளிச் சாறுடன் சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிய பின் இந்த ஸ்குவாஷை பாட்டிலில் அடைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து நன்கு கலக்கி, தேவைப்பட்டால், புதினா, மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.

தொகுப்பு: பாரதி

நன்றி:-சமையல் கலை நிபுணர் சமந்தகமணி பெங்களூரு

நன்றி:-தேவதை

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பிரிவுகள்:கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக், சமையல், மகளீர் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

கோடை பானங்கள் – நங்கநல்லூர் பத்மா

ஏப்ரல் 2, 2010 1 மறுமொழி

தகிக்கும் வெயிலைப் பற்றிக் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல், ‘அடிச்சோம்ல 100 ரன்’ என ஓடிக்கொண்டே இருக்கும் குட்டீஸ்கள்…

‘சைக்கிள் ஓட்டக் கத்துக்கத்தான் சம்மர் லீவே விட்டிருக்காங்க தெரியுமா?’ என அக்னி நட்சத்திர வெயிலில்கூட அலப்பறை செய்யும் வாண்டூஸ்கள்…

– இவர்களெல்லாம் ‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…’ என்று கோடையைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால், ஒரு பருவத்துக்குப் பின் ‘வெயில்’ என்றாலே எல்லோருமே அலற ஆரம்பித்து விடுகிறோம். வயிற்றுப்போக்கு, மயக்கம், நீர்க்கடுப்பு… வெயில் கட்டி, தோல் வறட்சி, தேகம் கறுத்தல்… என அக மற்றும் புறப் பிரச்னைகள் வாட்டி எடுப்பதுதான் காரணம்.

வெயில் காலத்தில், வியர்வை காரணமாக உடலிருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறுவதுதான் பெரும்பாலான பிரச்னைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது!

“இதிலிருந்தெல்லாம் தப்பிக்க, நம் வீட்டுச் சமையலிலேயே தீர்வுகள் இருக்கின்றன” என்கிறார் ‘பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.

”கோடையில் பருகுவதற்கென்றே ஸ்பெஷலான, எளிமையான பல பானங்கள் நம் தாத்தா – பாட்டி காலத்திலிருந்தே வழக்கத்தில் இருக்கின்றன. அவையெல்லாம், நமக்கு அருகிலேயே, உடனடியாக, குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள், தானியங்களைக் கொண்டு வீட்டில் தயாரித்துவிடக் கூடியவைதான். காலப்போக்கில் நாகரிகம் என்ற பெயரில் அதனையெல்லாம் மறந்து கொண்டே இருக்கிறோம்” என்று சொல்லும் பத்மா, சிறப்பான மருத்துவக் குணம் கொண்ட அத்தகைய சூப்பர் ஸ்பெஷல் பானங்கள் தயாரிக்கக் கற்றுத் தருகிறார்.

வெயில் ஸ்பெஷல் பானங்களைக் குடிங்க… வெயிலோடு விளயாடுங்க!

குறிப்பு: எளிமையான இந்த பானங்களில் சிலவற்றை ஐஸ் சேர்த்துக் குடிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. கூடுமானவரையில் ஐஸ் என்பதை சேர்க்காமல் இருப்பதே அதிக ஆரோக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

கேரட் ஜூஸ்

தேவையானவை: கேரட் – 2, பாதாம் பருப்பு – 4, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – அரை லிட்டர், கல்கண்டு – 100 கிராம்.

செய்முறை: கேரட்டைத் தோல் சீவிக் கழுவி, துண்டுகளாக்கி வேக வைக்கவும். பாதாம்பருப்பை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் கல்கண்டு, காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி பருக லாம். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

குறிப்பு: கோடைக்காலத்தில் நிறைய குழந்தைகள் எதையுமே சாப்பிடாமல் அடம் பிடிக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த ஜூஸ் அருமையான உணவு. இதன் மூலமே நிறைய சத்துக்கள் கிடைத்துவிடும். இது, விட்டமின்-ஏ சத்து நிறைந்தது!

ஜிஞ்சர் மோர்

தேவையானவை: மோர் – 500 மில்லி, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – சிறு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ள லாம்.

குறிப்பு: இதில் சேர்க்கப் பட்டிருக்கும் கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவை வியர்வை யினால் வீணாகும் சத்துக்களை சமன்படுத்தும். அதிக செலவு இல்லாத பட்ஜெட் ட்ரிங்!

கிர்ணி ஜூஸ்

தேவையானவை: கிர்ணிப்பழம் – 1, பால் – 500 மில்லி, சர்க்கரை – 100 கிராம்.

செய்முறை: கிர்ணிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். காய்ச்சி, ஆற வைத்த பாலை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறலாம்.

குறிப்பு: கிர்ணிப் பழத் துண்டுகளுடன் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். உடல் சூட்டைத் தணிக்கும்.

மாதுளை ஜூஸ்

தேவையானவை: மாதுளம் பழம் – 1, சர்க்கரை – 100 கிராம், தேன் – 2 டீஸ்பூன், பால் – ஒரு கப்.

செய்முறை: மாதுளம் பழத்தை தோல் உரித்து, முத்து எடுத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு முன், காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம்.

குறிப்பு: இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம். தயாரித்த உடனேயே சாப்பிடுவது சிறந்தது. பித்தத்தைக் குறைக்கும்.

வாழைத்தண்டு ஜூஸ்

தேவையானவை: வாழைத்தண்டு – இரண்டு துண்டுகள், மோர் – 500 மில்லி, உப்பு – சிறிதளவு.

செய்முறை: வாழைத் தண்டின் மேல் பட்டையை உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி, நார் எடுத்துக் கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும். மோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து பருகவும்.

குறிப்பு: இதைப் பருகுவதால், கோடைக்காலத்தில் உருவாகும் சிறுநீரக சம்பந்தமான பிரச்னைகள் வராது. இதில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, தேன் – ஒரு கப், இளநீர் – 1.

செய்முறை: நெல்லிக்காயை சீவி, கொட்டை நீக்கவும். மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, மீண்டும் தண்ணீர் சேர்க்கவும். பிறகு, தேன் சேர்த்துக் கலக்கவும். குடிப்பதற்கு முன் இளநீர் சேர்த்துக் கலந்து குடிக்கவும்.

குறிப்பு: இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் ரத்தச்சோகை வராமல் தடுக்கும். குடல் புண், நீரிழிவு நோய், கண் நோய் போன்றவை வராமல் தடுக்கும்.

ஜிஞ்சர்தனியா ஜூஸ்

தேவையானவை: இஞ்சி – அரை அங்குலத் துண்டு, தனியா – 4 டீஸ்பூன், தேன் – 4 டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – 1.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு… தோல் சீவிய இஞ்சி, தனியாவை அரைத்து வடிகட்டவும். இதனுடன் தேன், எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.

குறிப்பு: காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்க… பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, அஜீரணம் நீங்கும்; நன்கு பசி எடுக்கும். இதை வாரம் ஒரு முறை குடிக்கலாம்.

தக்காளி ஜூஸ்

தேவையானவை: தக்காளி – கால் கிலோ, இஞ்சி – சிறு துண்டு, எலுமிச்சம்பழம் – 1, சர்க்கரை – ஒரு கப் (அ) குளூக்கோஸ் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ளவும். தக்காளியைக் கழுவிக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவவும். மிக்ஸியில் தக்காளி, இஞ்சி இரண்டையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து வடிகட்டவும். எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும். சர்க்கரைக்குப் பதில் குளூக்கோஸ் சேர்க்கலாம்.

குறிப்பு: இது வெயிலினால் தோல் வறண்டு போவதை தடுக்கும்!

அன்னாசிபப்பாளி ஜூஸ்

தேவையானவை: அன்னாசி, பப்பாளி பழத் துண்டுகள் கலவை – ஒரு கப், சர்க்கரை, பால் – தலா ஒரு கப்.

செய்முறை: பப்பாளி, அன்னாசிபழத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பருகுவதற்கு முன் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்துக் கலந்து பருகவும். பால் விரும்பாதவர்கள் அதை சேர்க்காமலும் பருகலாம்.

குறிப்பு: இரண்டு பழங்களும் சேர்வதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். அன்னாசிப் பழம், உணவுக் குடலின் செயல்களை சீரமைக்கும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். பசியைத் தூண்டும்.

புதினா ஜூஸ்

தேவையானவை: புதினா – ஒரு கட்டு, இஞ்சி – சிறு துண்டு, எலுமிச்சம்பழம் – 1, தேன் – 4 டீஸ்பூன், இளநீர் – 1. உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: இஞ்சியைத் தோல் சீவிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து தண்ணீரில் சுத்தமாக அலசிக் கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து, வடிகட்டவும். எலுமிச்சைச் சாறு, உப்பு, தேன் சேர்த்துக் கலக்கவும். பருகுவதற்கு முன், இளநீர் சேர்த்துப் பருகவும்.

குறிப்பு: இந்த ஜூஸ், வியர்வையினால் உடம்பிலிருந்து இழக்கப்படும் தாது உப்புக்களையும், சத்துக்களையும் உடனே மீட்டுத் தரும். பித்தத்தினால் உண்டாகும் தலை சுற்றலைத் தடுக்கும். வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்.

ஃப்ரூட்ஸ்லெமன் ஜூஸ்

தேவையானவை: கொய்யாப்பழம், வாழைப்பழம் – தலா 1, உரித்த மாதுளம்பழ முத்துக்கள் – ஒரு கப், எலுமிச்சம்பழம் – 1, சர்க்கரை – 1 கப்.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுக்க வும். கொய்யாப்பழம், வாழைப்பழம், மாதுளை முத்துக்களைச் சேர்த்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பருகவும்.

குறிப்பு: இது, புளிப்பும் இனிப்பும் கலந்த வித்தியாசமான சுவையில் இருக்கும். எலுமிச்சம்பழத்துக்கு பதில் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்தும் அருந்தலாம். இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும்!

ஃப்ரூட் லஸ்ஸி

தேவையானவை: ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள் – தலா 1, ஸ்ட்ராபெர்ரி – 4, உலர்ந்த திராட்சை – 10, சர்க்கரை – ஒரு கப், புளிப்பில்லாத தயிர் – 200 மில்லி.

செய்முறை: வாழைப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கவும். ஆப்பிளை தோல் சீவி பொடியாக நறுக்கவும். ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கவும். ஆரஞ்சை சுளைகளாக உரித்து, கொட்டையை நீக்கிக் கொள்ளவும். எல்லா பழங்களையும் ஒன்று சேர்த்துக் கலந்து, உலர்ந்த திராட்சையை சேர்க்கவும். பிறகு தயிர், சர்க்கரை சேர்த்து ஸ்பூனால் நன்கு கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் மிக்ஸியில் ஒரு முறை சுற்றியும் கொடுக்கலாம்.

குறிப்பு: வெயில் காலத்துக்கு ஏற்றது இந்த ஃப்ரூட் லஸ்ஸி. இது, உடல் சூட்டையும் நீர்க்கடுப்பையும் உடனே தணிக்கும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

மல்டி வெஜிடபிள் ஜூஸ்

தேவையானவை: முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், முள்ளங்கித் துருவல் எல்லாம் சேர்ந்து – ஒரு கப், வெள்ளரித் துண்டுகள் – சிறிதளவு, மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், இளநீர் – 1, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முட்டை கோஸ், கேரட், முள்ளங்கித் துருவலை வதக்கிக் கொள்ளவும். இவற்றுடன் வெள்ளரித் துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டவும். தண்ணீர் விட்டுக் கலந்து, மிளகுத்தூள், உப்பு, இளநீர் கலந்து பருகவும்.

குறிப்பு: இந்த ஜூஸ், டயட் பராமரிப்புக்கு உகந்தது! ரத்தத்தைச் சுத்தப்படுத்தி புத்துணர்ச்சி தரும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்!

சுரைக்காய் ஜூஸ்

தேவையானவை: சிறிய சுரைக்காய் – 1, மோர் – ஒரு கப், எலுமிச்சம்பழம் – 1 மூடி, மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். சுரைக்காயைத் தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும். வெறும் கடாயில் வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும். மோர், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இது, உடல் சூட்டைக் குறைக்கும்… சிறுநீரைப் பெருக்குவதால் நீர்க்கடுப்பு பிரச்னை வராது.

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி பழம் – 10, சப்போட்டா பழம் – 2, இளநீர் – ஒரு டம்ளர், சர்க்கரை – ஒரு கப்.

செய்முறை: கழுவிய ஸ்ட்ராபெர்ரி, தோல் உரித்த சப்போட்டாவை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை நன்கு வடிகட்டி, சர்க்கரை, இளநீர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஜூஸ், தோல் வறட்சியைப் போக்கும்… புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

குக்கும்பர் ஜூஸ்

தேவையானவை: வெள்ளரிக்காய் – 1, புளிக்காத தயிர் – 1 கப், இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 1, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காயைத் தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். அதைத் தயிருடன் கலந்து, உப்பு சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்பு: இந்த ஜூஸ், வெயிலினால் தோல் வறட்சியாவதைத் தடுக்கும்.

பீட்ரூட்தர்பூசணி ஜூஸ்

தேவையானவை: தர்பூசணித் துண்டுகள் – 2 கப், பீட்ரூட் துருவல் – 1 கப், எலுமிச்சம்பழம் – 1, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேன் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். கடாயில் பீட்ரூட் துருவலை லேசாக வதக்கவும். தர்பூசணித் துண்டுகளை விதை நீக்கி, வதக்கிய பீட்ரூட் துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனை வடிகட்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, தேன் கலந்து அருந்தவும். விருப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு: வெயிலில் செல்வதற்கு முன்னும், சென்று வந்த பின்பும் இந்த ஜூஸை குடித்தால், நாள் முழுக்க எனர்ஜியுடன் வைத்திருக்கும். தர்பூசணி அடிவயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும்.

பாகற்காய் ஜூஸ்

தேவையானவை: பாகற்காய் – 200 கிராம், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், பனங்கல்கண்டு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாகற்காயை வில்லைகளாக நறுக்கி விதை நீக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். இதை ஆற வைத்து, மிக்ஸியில் நன்கு அரைத்து, தண்ணீர், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு உப்பு, பனங்கல்கண்டு போட்டுக் கலந்து பருகவும்.

குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்க… வயிற்றில் இருக்கும் குடல்புழு நீங்கி, நன்கு பசியெடுக்கும். மூச்சிரைப்பு, ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்தது.

நீராகாரம்

தேவையானவை: அரிசி – 200 கிராம், மோர் – 2 கப், சின்ன வெங்காயம் – 10, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு, குக்கர் மூடியைத் திறந்து சாதத்தை எடுத்து ஆற வைக்கவும். ஆறியதும் அதில் தண்ணீர் விடவும். காலையில் அப்படி செய்திருந்தால், மாலையில் சாதத்தை நன்கு கரைத்து மோர் விட்டு கலக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு போட்டு வைத்து கலக்கி வைத்து விடவும். பிறகு, வேண்டும்போது குடிக்கலாம்.

குறிப்பு: இரவே சாதத்தில் தண்ணீர் விட்டு காலையில் இவ்வாறு செய்தும் குடிக்கலாம். கோடைக்காலம் முடியும் வரை இதனை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால்… உடல் சூட்டால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்கலாம். இதற்கென தனியாக சாதம் வைக்கத் தேவையில்லை. மிச்சப்படும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால்கூட போதும்.

பானகம்

தேவையானவை: புளி – 150 கிராம், வெல்லம் (அ) கருப்பட்டி – 200 கிராம், சுக்குப்பொடி – கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: புளியை ஊற வைத்துக் கரைத்து, வடிகட்டவும். வெல்லம் அல்லது கருப்பட்டியை நன்கு பொடித்துக் கொள்ளவும். பொடித்த வெல்லத்தை வடிகட்டிய புளித் தண்ணீருடன் சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை கலக்கவும். பிறகு சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி வைத்துக் கொண்டால்… வேண்டும்போது பருகலாம்.

குறிப்பு: இது எனர்ஜி தரும் பானம். குளிர்ச்சிக்கு உத்தரவாதமானது. உடல் சூட்டை சட்டெனக் குறைக்கும் வல்லமை பெற்றது.

கேப்பைக் கூழ்

தேவையானவை: கேழ்வரகு – 200 கிராம், மோர் மிளகாய் – 4, கடுகு – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மோர் – ஒரு கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், மோர் சேர்த்து, கட்டியில்லாமல் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, கிள்ளிய மோர் மிளகாய் தாளித்து, கரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். அடிபிடிக்காமல் கிளறி, கூழ் பதத்துக்கு வந்ததும்… ஈரக் கையில் கூழைத் தொடும்போது.. கையில் ஒட்டாத பதத்தில் இறக்கவும்.

குறிப்பு: மோரில் கூழைக் கரைத்துக் குடித்தால் வயிறு சம்பந்தமான வெயில் கால நோய்கள் வராது.

நியூட்ரிஷியஸ் கஞ்சி

தேவையானவை: பார்லி – 4 டேபிள்ஸ்பூன், கோதுமை – 4 டேபிள்ஸ்பூன், சோளம் 4 டேபிள்ஸ்பூன், தினை – டேபிள்ஸ்பூன், கம்பு – 4 டேபிள்ஸ்பூன், கேழ்வரகு – 1 கப், பாதாம்பருப்பு – 10, முந்திரிப்பருப்பு – 10, சோயா – 1 கப், கொள்ளு -1 கப், பால் – ஒரு டம்ளர், வெல்லம் – தேவையான அளவு.

செய்முறை: பார்லி, கோதுமை, சோளம், தினை, கம்பு, கேழ்வரகு, பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, கொள்ளு, சோயா எல்லாவற்றையும் தனித்தனியாக சுத்தம் செய்து கொள்ளவும். வெறும் கடாயில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து, நைஸாக அரைத்து, பிறகு ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். 4 டேபிள்ஸ்பூன் மாவுக்கு 1 டம்ளர் வீதம் தண்ணீர் விட்டுக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கரைத்த மாவை விட்டு, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிகொண்டே இருக்கவும். ஈரக் கையில் கஞ்சியைத் தொடும்போது கையில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும். பின்பு, கொதிக்க வைத்து ஆறிய பால், பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

குறிப்பு: வெயில் காலத்தில் வியர்வையினால் அதிகமான சத்துகள் உடலை விட்டு வெளியேறும். அதை இந்த கஞ்சி ஈடுகட்டும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இதமான கஞ்சி இது!

வடித்த கஞ்சி

தேவையானவை: அரிசி – கால் கிலோ, பனங்கல்கண்டு, வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு பங்கு அரிசிக்கு 5 பங்கு தண்ணீர் விட்டு சாதம் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும். சாதம் வெந்ததும், கஞ்சியை வடிக்கவும். வடித்த கஞ்சியுடன் வெண்ணெய், உப்பு, பனங்கல்கண்டு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

குறிப்பு: இது கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது. கர்ப்பக் காலத்தில் கால் வீக்கம் வராமல் தடுக்கும். கோடைக்காலத்தில் உடல் சூட்டினால் வரும் வயிற்றுவலியை இது நீக்கும்.

பார்லிஓட்ஸ் கஞ்சி

தேவையானவை: ஓட்ஸ், பால் – தலா ஒரு கப், பார்லி – 100 கிராம், சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: பார்லியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேக விடவும். வெந்ததும், ஓட்ஸ் சேர்த்துக் கலந்து பால் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: சர்க்கரை, ஏலக்காய்க்கு பதிலாக உப்பு, மோர் கலந்தும் குடிக்கலாம். கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது. இது, கோடைக்காலத்தில் உண்டாகும் நீர்க்கடுப்பை குறைக்கும்.

மூலிகை கஞ்சி

தேவையானவை: புழுங்கல் அரிசி – 250 கிராம், ஓமம், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், மிளகு – 10, மோர் – ஒரு கப், சுக்குத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுத்து ரவை போல உடைத்துக் கொள்ளவும். ஓமம், மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். உடைத்த அரிசியை கஞ்சி பதம் வரும் வரை வேக வைக்கவும். பொடித்து வைத்த ஓமம், மிளகு, சீரகம், உப்பு, சுக்குத்தூள் சேர்த்து, மோர் விட்டு நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இது எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது. வெயில் காலத்தில் நீர்க்கடுப்பு வராமல் இருக்க இந்தக் கஞ்சியைக் குடிக்கலாம்!

ஸ்வீட் கார்ன்சோயா கஞ்சி

தேவையானவை: சோயா – 200 கிராம், இஞ்சி பேஸ்ட் – கால் டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், ஸ்வீட் கார்ன் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோயாவை ரவை போல உடைத்து, கொதிக்கும் நீரில் சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும்… இஞ்சி பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு வெண்ணெய் சேர்த்துக் கலந்து, நறுக்கிய கொத்தமல்லி, ஸ்வீட் கார்ன் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: சோயாவில் புரதச் சத்து அதிகம் இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு இந்தக் கஞ்சி மிகவும் நல்லது. இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும்.

உளுந்தக் கஞ்சி

தேவையானவை: முளைகட்டிய உளுந்து – ஒரு கப், முளைகட்டிய வெந்தயம் – ஒரு கப், முளைகட்டிய சோளம் – சிறிதளவு, புழுங்கல் அரிசி (வறுத்து உடைத்தது) – ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மோர் – ஒரு கப். உப்பு – தேவையான அளவு,

செய்முறை: உளுந்து, வெந்தயம், சோளம், உடைத்த அரிசி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். மூன்று விசில் வந்ததும் இறக்கவும். அதில் உப்பு, மோர், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும்.

குறிப்பு: வெயிலில் அதிகம் அலைந்து திரிந்து வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. வாரம் ஒரு முறை குடித்தால் அலைச்சலினால் உண்டாகும் களைப்பு நீங்கும். உடல் வலுப்பெறும். உடலுக்குக் குளுமை தரும்.

ஜவ்வரிசிபார்லி கஞ்சி

தேவையானவை: பார்லி – 100 கிராம், ஜவ்வரிசி – 4 டீஸ்பூன், கோதுமை ரவை – ஒரு கப், மோர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பார்லி, ஜவ்வரிசியை ஒன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் கோதுமை ரவையை சேர்த்து, குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும். ஆறியதும் குக்கர் மூடியைத் திறந்து, உப்பு, மோர் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: ஜவ்வரிசி, வயிற்றுக்குக் குளுமையானது. பார்லி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது. உப்பு. மோருக்கு பதிலாக பால், சர்க்கரை சேர்த்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

பயித்தங் கஞ்சி

தேவையானவை: பாசிப் பருப்பு – 100 கிராம், வெல்லம் (பொடித்தது) – 1 டேபிள்ஸ்பூன், பால் – 1 கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரி – 6, வாழைப்பழத் துண்டுகள் – 4.

செய்முறை: வெறும் கடாயில் பாசிப் பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும். குக்கரில் தண்ணீர் விட்டு நன்கு குழைய வேக விடவும். பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, வெந்த பருப்புடன் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பொடித்த வெல்லம் போட்டுக் கலக்கி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். ஆறியவுடன் வாழைப்பழத் துண்டுகளை சேர்த்தால்… சுவையான பயித்தங் கஞ்சி ரெடி!

குறிப்பு: கோடைக்காலத்துக்கே உரிய வயிற்றுப் புண், வாய்ப்புண் ஆகியவற்றைத் தடுக்கும். பாலுக்குப் பதில் தேங்காய்ப் பாலும் சேர்க்கலாம்.

குருணைக் கஞ்சி

தேவையானவை: புழுங்கல் அரிசி – 200 கிராம், பாசிப்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன், சுக்குப்பொடி – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் புழுங்கல் அரிசியை வறுத்து, ரவை போல உடைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். உடைத்த அரிசி, பருப்பை தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும். 4 விசில் வந்ததும் இறக்கி… உப்பு, சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

குறிப்பு: உடல் நலக் குறைவின்போது இந்தக் கஞ்சியைக் குடிப்பது மிகவும் நல்லது. நாரத்தங்காய், உப்பு எலுமிச்சை ஊறுகாய் இதற்கு சிறந்த காம்பினேஷன். இது, வெயிலினால் இழக்கப்படும் நீர்ச்சத்தையும் சக்தியையும் மீட்டுத் தர வல்லது.

நன்றி:-

நன்றி:- அவள்  விகடன்

*****************

பிரிவுகள்:கோடை பானங்கள், மருத்துவம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,