தொகுப்பு

Posts Tagged ‘இஸ்லாம் மார்க்கம்’

மன்னிக்க மாட்டார்களா எனும் சிந்தனை மேலானது. – அதிரை ஏ.எம்.ஃபாரூக்


 
கடந்த கட்டுரையில் இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கற்றுத்தந்த இறைவனிடம் பாதுகாப்புக் கோரும் வாசகமாகிய ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம், என்ற வாசகத்தை மொழிந்து விட்டு அதற்கடுத்து எதிராளியை மன்னித்து விடுவோம் என்ற நல்லமுடிவை மேற்கொண்டு விட்டு இறுதியாக அவருக்கு ஸலாம் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும் என்ற மூன்று உயர் பண்புகளை பின் பற்றினால் அவரிடமிருந்தும் அவருடைய மேற்காணும் நற்செயல்கள் மூலம் எதிராளியிடமிருந்தும் கோபம் முற்றாக விலகி விடுவதுடன் ஷைத்தானின் தீய சூழ்ச்சி முறியடிக்கப்பட்டு விடும் என்பதைப்  பார்த்தோம்.
 
அனைத்து விஷயங்களிலும் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவனாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளக் காரணத்தால் தான் எது சரி, எது தவறு என்பதை பிரித்து அறிந்து சூழ்நிலைக்கொப்ப காரியங்களின் வீரியங்களுக்கு ஏற்றவாறு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உணர்வுகளை அடக்கி ஆள்வதற்காக அருள்மறைக் குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான்.
 
 
அவற்றில் ஒன்று தான் கோபம் ஏற்பட்டு இரு தரப்பார் சச்சரவில் ஈடுபடும்பொழுது காட்டுக் கூச்சல் இடுவதாகும். ( இதை இதற்கு முந்தைய நான்காவது தொடரில் சுட்டிக்காட்டினோம் அதன் சுருக்கம்.) …’அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே ஏன்?’ என்று கேட்டு விட்டு ‘அவ்விருவரின் விவகாரம் என்ன?’ என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இந்த அறியாமைக் கால அழைப்பை விட்டு விடுங்கள். இது அருவருப்பானது” என்று கூறினார்கள்… புகாரி 3518. ஜாபிர்(ரலி) கூறினார்.
 
குரல் வளையிலிருந்து அதிகமான சப்தம் வெளிப்படுவதையே இஸ்லாம் தடுத்திருக்கிறது அதை அஞ்ஞானப் பழக்கம் என்று இடித்துரைக்கிறதென்றால் கோபத்தின் வாயிலாக கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் செய்வதையும் ஒருவருக்கொருவர் காறி உமிழ்ந்து கொள்வதையும் சட்டையைப் பிடித்துக் கொண்டு மல்லுக்கு நிற்பதையும் இஸ்லாம் அனுமதிக்குமா ? சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம். இதனால் தான் கோபத்தை மென்று விழுங்கி விடுங்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறினான்.
 
அருள்மறைக் குர்ஆனின் அழகிய உபதேசங்களைப் பின்பற்றி அருள்மறைக் குர்ஆனாகவே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அண்ணல் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களிடத்தில் ஒருவர் எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டபொழுது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள் என்று மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வலியுருத்திக் கூறிய  சம்பவமும் உண்டு.
 
 
 
இதே தாய் தந்தை, மூத்த சகோதர, சகோதரி, மூத்த வயதையுடைய தூரத்து உறவினர்கள், மார்க்க அறிஞர்கள் நம்மிடம் கோபம் கொண்டால் அல்லது கோபம் எற்படுவது போன்று நடந்து கொண்டால் அவர்களின் விஷயத்தில் மன்னித்து விட்டேன் என்ற எண்ணம் நமக்கு வரக் கூடாது அவர்களை நாம் மன்னிக்க முடியாது அவர்களே நம்மை மன்னிக்கத் தகுதியானவர்கள்.
 
இது போன்றத் தருணங்களில் நாமே நம்மை கட்டுப் படுத்திக் கொள்ள முன் வர வேண்டும் கோபத்தை மென்று விழுங்குவதுடன் இச்சம்பவத்திற்காக அவர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்களா ? இப்பிரச்சனை முடிந்து விடாதா ? என்ற எண்ணமே உதயமாக வேண்டும் இந்த நற்சிந்தனையே முன்னதை விட உயர்வானதாகும் அத்துடன் அங்கிருந்து இடம் பெயர்ந்து தனி இடத்தில் போய் சற்று அமர்ந்து விட வேண்டும்.
 
 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு ஒரு செய்தியை சொல்லி விட்டால் கண்டிப்பாக அதில் நன்மை இருக்கும் என்பதை அறிந்து வைத்திருந்த அவர்களின் ஆருயிர் தோழர்கள் அதை சிறிதளவும் மாற்றமில்லாமல் பின்பற்றி வந்தார்கள். அவர்களின் கூற்று நடைமுறைக்கேற்றது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் அதனடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இம்மை, மறுமை நற்பேருகளை தேடிக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்.
 
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்திய செய்தி அறிந்து அங்குக் குழுமி இருந்த மக்களிடம் அண்ணல் அவர்கள் இறக்க வில்லை என்றும் இறந்து விட்டதாகக் கூறியவர்களிடம் கடும் கோபம் கொண்டும் பேசிக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களைப் பார்த்து அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறிய முதல் வார்த்தை நீங்கள் முதலில் உட்காருங்கள் என்பது தான் அதற்கு அவர்கள் மறுக்கவே மீண்டும், மீண்டும் உட்காருங்கள் என்றுக் கூறி விட்டே அண்ணல் அவர்கள் இறந்து விட்டார்களா ? இல்லையா ? என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மக்களை தெளிவுப் படுத்தினார்கள் இதில் கடும் கோபத்தில் இருந்த உமர் (ரலி) அவர்களும் தெளிவு பெற்றார்கள்.
 
(நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூபக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர்(ரலி) ‘உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்” (திருக்குர்ஆன் 3:144) என்றார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூபக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். 1242. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
 
கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறிய உபதேசத்தை உள்ளத்தில் ஏற்றி வைத்திருந்த அபூபக்ர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடாமல் அண்ணல் அவர்களின் உபதேசததைக் கூறி அமரச் சொல்லி விட்டு அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கூறி உமர்(ரலி) அவர்களின் கோபத்தை கட்டுப்படுத்தி விட்டு சிந்திக்கத் தூண்டினார்கள்.
 
 
 
 
அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

இஸ்லாம் இலகுவான மார்க்கம்


ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்;

‘இலகுபடுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள்;   ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள்.’
அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (றழி) ஆதாரம்; புகாரி, முஸ்லிம்

இஸ்லாம் மானிடருக்கு அருளாக வந்த மார்க்கமாகும். அது மனிதனை வாழ்வாங்கு வாழவைக்க விரும்புகின்றது: சிரமங்கள், நெருக்கடிகள் அற்ற சீரான ஒரு வாழ்வை மனிதனுக்கு அமைத்துக்-கொடுக்க வேண்டுமென்பதை இஸ்லாம் தனது அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. இந்த உண்மையைத் தான் மேலே தரப்பட்ட ஹதீஸ் இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றது.

மார்க்கம் என்பது விளங்குவதற்கு இலகுவானதாகவும் விளங்கியதைச் செயற்படுத்துவதற்குச் சிரமமற்றதாகவும் இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படையான ஒரு கருத்தாக இருப்பதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரசாரப்பணிக்காக ஸஹாபாக்களை அனுப்பிய போது இந்த அம்சத்தை ஞாபகமூட்டினார்கள்.

யெமன் பிரதேசத்துக்கு தஃவாப் பணிக்காக முஆத் இப்னு ஜபல் (ரழி), அபூ மூஸா அல் அஷ்அரி (றழி) ஆகிய இருவரையும் அனுப்பிய வேளையில் நபி (ஸல்) அவர்கள் இதனை ஞாபகமூட்டினார்கள். ‘இலகுபடுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள்: ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள்.’

அல்குர்ஆனும் இக்கருத்தை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

‘அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.’ (பகரா 286)

‘அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை.’ (பகரா 185)

‘சிரமம் எப்பொழுதும் இலகுபடுத்தலை வேண்டி நிற்கும்’ என்ற மார்க்கச் சட்டவிதி, நாம் விளக்க எடுத்துக் கொண்ட ஹதீஸ்களிலிருந்தும் அதையொத்த குர்ஆன் வசனங்களிலிருந்துமே மார்க்கச் சட்டவல்லுநர்களால் பெறப்பட்டுள்ளது. இந்த விதியின் அடிப்படையில்தான், சிரமமான கட்டங்களிலெல்லாம் ‘ருக்ஸத்’ என்ற சலுகைகளை மார்க்கம் வழங்குகிறது. இச்சலுகைகளே இஸ்லாம் மனிதனைச் சிரமப்படுத்த விரும்புவதில்லை என்பதை எடுத்துக் காட்டுவனவாயுள்ளன.

பிரயாணத்தை இஸ்லாம் சிரமமான ஒரு காரியமாகக் கருதுகிறது. எனவே, பிரயாணிக்குப் பல விசேட சலுகைகளை வழங்குகிறது. உதாரணமாக, ஐங்காலத் தொழுகைகளை சுருக்கிச் சேர்த்துத் தொழுவதற்கும், ரமழானில் நோன்பை விடுவதற்கும், ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றா-மலிருப்பதற்கும் பிரயாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோயையும் இஸ்லாம் ஒரு சிரமமெனக் கருதி, நோயாளிக்குப் பல சலுகைகளை வழங்கியுள்ளது. வுளூவுக்குப் பதிலாகத் தயம்மும் செய்வதற்கும், இருந்த நிலையில் அலலது படுத்த நிலையில் அல்லது சைக்கினை மூலம் தொழுவதற்கும் கூட்டுத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை ஆகியவற்றை விடுவதற்கும் ரமழான் நோன்பை நோற்காதிருப்பதற்கும் இன்னும் பல விடயங்களுக்கும் இஸ்லாம் நோயாளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பலவந்தப்படுத்தலையும் இஸ்லாம் ஒரு சிரமமாகக் கருதுகிறது. எனவே, ஒருவன் பலவந்தத்தின் காரணமாக ஒரு ஹராத்தைச் செய்தால் இஸ்லாம் அவனைக் குற்றவாளியாகக் கருதுவதில்லை.

மறதியும் ஒரு சிரமமாகும். மறதியாகச் செய்யும் தவறுகளை இஸ்லாம் பாவமாகக் கருதுவதில்லை. அவ்வாறே அறியாமை,நிர்ப்பந்தம் ஆகியவற்றின் காரணமாகச் செய்கின்ற குற்றங்களையும் இஸ்லாம் குற்றமாகக் கருதுவதில்லை.

பருவமடையாத சிறுவர்கள், பெண்கள், சித்தசுவாதீனமற்றோர் ஆகியோருக்கும் சட்டங்களிற் பல விதிவிலக்குகளும் சலுகைகளும் சிரமங்களைத்தவிர்க்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளன.

மார்க்கத்தின் பெயரால் தன்னையும் பிறரையும் சிரமங்களுக்குட்படுத்தக் கூடாது: தம்மால் சுமக்க முடியாத சுமைகளைச் சுமக்க முயலக்கூடாது என்ற கருத்தையும் இந்த ஹதீஸ் தருகின்றது. இஸ்லாம் விலக்கப்பட்டவற்றின் வட்டத்தைச் சிறியதாகவும் ஆகுமானவற்றின் வட்டத்தை விரிந்ததாகவும் ஆக்கிவைத்துள்ளது. பேணுதல், தக்வா என்ற பெயரால் அல்லாஹ் ஆகுமாக்கியவற்றை ஹராமாக்கிக் கொள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஹராத்தை ஹலாலாக்குவதை விட ஹலாலை ஹராமாக்குவதை இஸ்லாம் பாரதூரமான குற்றமாகக் கருதுகிறது. இத்தகைய கடுமையான போக்குடையோரை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். ‘கடுமையான போக்குடையோர் அழியட்டும், கடுமையான போக்குடையோர் அழியட்டும், கடுமையான போக்குடையோர்; அழிந்தே போகட்டும்’ என்று அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், அஹ்மத்,அபூதாவூத்)

‘இலகுபடுத்துவோர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்களே அன்றி, சிரமப்படுத்துபவர்களாக அல்ல.’ (புகாரி, முஸ்லிம்)

ஹலால், ஹராம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முழுமையாக அல்லாஹ்வுக்குரியது. இதில் மனிதன் தலையிடுவது ஷிர்க்காகும். இந்த வகையில், அல்லாஹ்வால் எமது வசதிக்காகவும் சுக வாழ்வுக்காகவும் ஆகுமாக்கித் தரப்பட்டுள்ளவற்றைத் ‘தக்வா’ என்ற முலாம் பூசி ஹராமாக்க முயல்வது ஷிர்க் ஆகும்.

”(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் ஆகாதவையென்று தடுப்பவர் யார் என்று கேளும்.” (அஃராப் 32)

மதீனாவில் ஸஹாபாக்களிற் சிலர், அல்லாஹுதஆலா ஆகுமாக்கியவற்றைப் பேணுதல் என்ற பெயரால் தமக்கு ஹராமாக்கிக் கொள்ள முயன்றபோது அல்லாஹ் அத்தகையோரைக் கண்டித்து, அவர்களை நெறிப்படுத்தி நேரான வழியில் செலுத்தும் நோக்கோடு கீழ்வரும் வசனங்களை இறக்கினான்:

”விசுவாசிகளே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் பரிசுத்தமானவற்றை நீங்கள் ஆகாதவையாக்கிக் கொள்ளாதீhகள். அன்றி, நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதேயில்லை.” (மாயிதா: 87)

வாழ்க்கையை ஆன்மீக வாழ்வு, லௌகீக வாழ்வு எனக் கூறுபோட்டு நோக்குவோரும், உலக வாழ்க்கையை முற்றாகத் துறந்து வாழவேண்டுமென்ற சிந்தனைப் போக்குடையோரும் இறைவனின் கண்டனத்திற்கு உட்படுவர். இத்தகையோரை நபி (ஸல்) அவர்களும் கண்டித்துள்ளார்கள்.

‘திருமணம் எனது வழிமுறை, எனது வழிமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவரல்லர்.’ (புகாரி)

‘இஸ்லாத்தில் துறவறம் இல்லை.’ (அஹ்மத்)

இஸ்லாமிய தஃவாப் பணியில் ஈடுபடுவோர் எப்பொழுதும் மக்களோடு நளினமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்; கடுமையான போக்கைத் தவிர்த்தல் வேண்டும் என்ற கருத்தையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. அல்குர்ஆன் இந்தக் கருத்தைக் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது:

”(நபியே) நீர் (மனிதர்களை) நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின்பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கஞ் செய்வீராக!” (16:125)

நபி (ஸல்) அவர்களது பிரசாரத்தின் வெற்றிக்கு அவர்களது நளினமான போக்கும் அணுகுமுறையும்தான் காரணம் என்ற உண்மையை அல்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

”(நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே, நீர் அவர்கள் மீது இரக்கமுள்ளவரானீர். கடுகடுப்பான வராகவும் கடின சித்தமுள்ளராகவும் நீர் இருந்திருப்பீரானால், உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்.” (3:159)

 

 

தேன் துளி அழைப்புபக்கம்

*****************************