தொகுப்பு

Posts Tagged ‘இஸ்லாமிய பெண்மணி’

இஸ்லாம் கற்றுத் தரும் ‘சுயநலம்’ ? பாத்திமாஹ் முஸ்லீமாஹ்

செப்ரெம்பர் 18, 2012 பின்னூட்டமொன்றை இடுக

நாம் தனிமனிதராக தனிக் காட்டில் பிறந்து தன்னந்தனியாக வாழ்ந்து மரணிப்போமானால் அனேகமாக சொர்க்கம் செல்வது இலகுவாக இருந்திருக்க கூடும் .ஏனெனில் ,பாவம் செய்வதுக்குரிய சந்தர்ப்பங்கள் அப்பொழுது குறைவாகவே இருந்திருக்கக் கூடும். ஆனால், இறைவன் அப்படி நம்மை விடவில்லை. மாறாக உலகம், பொருள், மண், மக்கள் என்னும் பெரும் பெரும் காரணிகளை ஏற்படுத்தி நம்மை சோதனையிட்டுக் கொண்டே இருக்கிறான், பிறப்பிலிருந்து, இறப்பு வரை.  திருமறையில் வரும் வசனத்தைப் பாருங்கள்:

“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் – நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன் உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் – அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.” (திருக் குர்’ஆன் 64:14-15)


இறைவன்  நம்மை சோதனைக்குட்படுத்தாமல் சொர்க்கம் எனும் மாபெரும் பரிசினை தந்துவிடப்போவதில்லை. நமது சோதனை நம்மைச் சூந்துள்ள சமுதாயத்தில்தான் உள்ளது. இதனை உணராத நாம் அதன் பிடியில் எளிதில் சிக்கிக் கொண்டு, சோதனைகளால் தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம். இதில் பெரிய கொடுமை  என்னவென்றால் இவ்வாறு தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட நாம் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறோம்..

அனேகமாக நாம் அனைவரும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர்களுக்காகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . நமது குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக, பெற்றோருக்காக, சமுதாயத்துக்காக, ஏன் எதிரிகளுக்காவும் கூட நேரத்தையும் காலத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இது போன்று அடுத்தவருக்காக வாழும் பொழுது தவறிழைக்காமல் இருக்க, வழி தவறாமல் இருக்க இஸ்லாம் ஒருவித சுயநலத்தை  வலியுறுத்தியிருகிறது . என்னது இஸ்லாம் சுயநலமா இருக்க சொல்லுதான்னு அதிர்ச்சி அடையறீங்களா?? ஆமாம், இஸ்லாம் சில விஷயங்களில் மிகுந்த சுய நலத்துடன் இருக்கச் சொல்கிறது.
இறைவனிடம் பிராத்தனை செய்யும் பொழுது முதலில் நமக்காக கேட்டு, அதன் பின்னரே பிறருக்கு கேட்க சொல்கிறது இஸ்லாம். குரான் மற்றும் நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த பிராத்தனைகள் அனைத்தும் நமக்காகவே முதலில் கேட்க சொல்கின்றன.

 என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! 14:40

எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக 14:41

என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன் 21:89

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன் 59:10

இந்த வசனங்களை கவனிச்சீங்களா? முதலில் தனக்கு கேட்ட பின் தான் மற்றவர்களுக்கு கேட்கப்பட்டிருக்கு இல்லையா?  பொதுவாக சுயனலமற்றவர்களாக, எப்போதும் பிறர் நலம் கருதியே வாழ வேண்டும் எனும் கோட்பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்.

அவ்வாறு இருக்கையில் இஸ்லாம் தனக்காக முதலில் கேட்க சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். அவ்வாறு நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இது பற்றி சற்று சிந்தித்தால், இதில் ஆழமான கருத்துக்கள் பொதிந்திருப்பதைக் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நாம் இறைவனிடம்  ஒரு விஷயம் வேண்டுவது,  மற்றவர்களிடம் கேட்பது போலல்ல. ஏனெனில் ,இறைவனின்  அருட்கொடைகள் எவ்வளவுதான் அள்ளித் தந்தாலும் குறையாதவை. கொடுப்பதற்கு அவன் தயாராக இருக்கிறான். நாம்தான் கஞ்சர்களாக இருக்கிறோம் .

இதனை  பலர் புரிந்து கொள்ளாமல்  “சுயநலமற்ற மேதாவிகளாக” இருப்பதாகக் கருதிக் கொண்டு ” நான் எனக்காக அல்லாஹ்விடம் எதையுமே கேட்பதில்லை. பிறருக்காகவும்,  என் குடும்பத்துகாகவும் மட்டுமே பிரார்த்திகின்றேன்” என்று சொல்கிறார்கள். இது உண்மையா??  நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்காமல் ஒரு கணமேனும் வாழ்ந்திட முடியுமா? நிச்சயம் முடியாது. இவ்வாறு கூறுபவர்கள் போலிகளே.

இறைவன்  ஏற்படுத்தியிருக்கின்ற சுயநலம் நமக்கு அவசியமானது. ஆனால் மற்றவர்களிடம் இருந்து பிடுங்கிச் சுரண்டும் சுயநலமல்ல இது .மாறாக ,நம்மை இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் இரண்டிலுமே வெற்றி பெறச் செய்யும், மற்றவர்களையும் நம்மோடு சுவனத்துக்கு இழுத்துச் செல்லும் சுயநலம்.

சுயநலமா இருங்கன்னு சொல்லியாச்சு. அப்ப பிறர் நலம் பத்தி யோசிக்காமல் இருந்தால் அது தப்பு இல்லையா? அது ஒரு மோசமான முன்னுதாரணம் இல்லையா என்ற கேள்வி எழாமல் இருக்கப்போவதில்லை.

ஒருபுறம் நாம் சுயநலத்தை இஸ்லாமிய ரீதியாக நோக்கும் அதேவேளையில், இதன் மறுபுறமான “பிறர்நலம் கருதுவோம்” என்று கூறும் மனிதன்  தாமும் பாவத்தில் விழுந்து அடுத்தவரையும் பாவம் செய்ய தூண்டுகிறான்.  மனிதன் எவ்வாறெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அந்தளவுக்கு தன்னை மாய்த்துக்கொண்டு தனக்காகவும் ,மற்றவர்களுக்காகவும்  பாடுபடுகிறான்  என்பதை அன்றாடம் நாம் காண்கிறோம். மற்றவர்களுக்காக அதிகமாய் சம்பாதிக்க வேண்டி அவன் எத்தகைய குறுக்கு வழிகளில் செல்கிறான்?  இதில் எத்தனையோ பேர் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்? பொய், களவு, மோசடி, வட்டி, இவை எல்லாம் எதற்காக?  நாம் எந்தளவு சம்பாதித்தாலும் ஒருவேளை  வயிற்றுக்குதான். ஒருசில  ஆடைகளைத்தான் அணியப் போகிறோம்.

நாம் யாராக இருந்தாலும், கோடி கோடியாக சம்பாதித்தாலும் மனிதனாகிய நமக்கு அடிப்படை தேவைகள் ஒன்றுதான். நாம் இவ்வுலகில் வாழப்போவதும் கொஞ்ச காலம் தான்.. நாம் சேர்க்கும் செல்வத்தை வேற யாரோ அனுபவிக்க போறாங்க.. அதற்காக நாம் தப்பான வழியில் அதை சேர்த்து வைத்து  பாவம் செய்ய வேணுமா?  நிச்சயம் தேவை இல்லை.

நாம் ஹலாலான(நேர்மையான) முறையில் சம்பாதித்து அன்றாட தேவைகள் போக மீதமானதை நமக்காக சேர்க்க வேண்டும். நம்மால் முடிந்தளவுக்கு நேர்மையாக, உண்மையாக, நீதியுடன் நடந்து செல்வம் ஈட்ட வேண்டும் .இப்படி செய்வது மற்றவர்களுக்கும் நன்மை செய்தது போல் அமையும். நம்மையும் சொர்க்கத்துக்கு இழுத்துச்செல்லும் இல்லையா?.

நாம் இவ்விடத்தில் இன்னுமொன்றை மறந்து விடுகின்றோம் .மற்றவர்களின் தேவை இல்லாத விடயங்களில் தலையிட்டு அவர்களின் குற்றம் குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து,,…. புறம் சொல்லி நம் நேரத்தை செலவு செய்கிறோம். கேட்டால் சமுதாய நன்மை என சொல்கிறோம். இதில் என்ன  இலாபம் நமக்கு? மற்றவர்கள்களின் குறைகளை பற்றியே புறம்பேசிக்கொண்டிருப்பதால் என்ன பயன் வந்துவிட போகிறதுஎன, கொஞ்சம் சுயநலமாக சிந்தித்தால் புறம் பேசாமல் இருப்பது நமக்கு நன்மை என்பது எளிதில் புரியும். மாறாக அதை தொடர்ந்தால் மறுமையில் மற்றவர்களுடைய தீமைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு  நம்மீது சுமத்தப்படும் என்பதை நாம் அறியாமல் இருக்கிறோமா? அநீதி இளைக்கப்பட்டவன் அல்லாஹ்விடம் முறையிட்டால், நம்மை நோக்கி குற்றம் சாட்டினால், படைத்தவனிடம் நீதி கேட்டால்??!! என்ன செய்வோம் நாம்?

அதற்கு அல்லாஹ் குற்றப்பரிகாரம் கொடுக்குமாறு நம்மை பணித்தால்… சொத்தோ, பொருளோ உதவிடாத அந்நாளில் நமது நன்மைகள் அவர்கள் மீது சாட்டப்பட்டு அவர்களின் தீமைகள் நம்மீது திணிக்கப்படும். (இந்த நிலைமையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்)அதற்கு நாம் சுயநலத்தையும், பிறர் நலத்தையும் குழப்பிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

சில உதாரணம் பார்க்கலாம்:

எந்த மனிதரும் தாம் உயிரோடு இருக்கும் போது தன்சொத்து முழுவதையும் வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தான் இறுதிகாலம் வரை அனுபவித்து பின்னர் தான் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற கூறுகிறது. இதில்  சுயநலம் இருப்பது போல் தெரியும்… ஆனால் இது ஒரு அற்புதமான சட்டம்.. பாருங்கள்….

இன்று பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் திருமணத்தின் போது தன்னிடம்  உள்ள அனைத்து சொத்துக்களையும் பிரித்துக் கொடுத்து விடுகின்றனர்.( பாகப் பிரிவினை இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் மாற்றமானது என்பது வேறு விடயம் ) பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து சொத்துடன் போய்விடுகிறார்கள்…. அதன் பிறகு இவர்களின் நிலை என்ன? மாற்றானிடம் கை நீட்டி பிச்சை கேட்கிற நிலை ஏற்படும் .தம் பிள்ளையிடமே கை நீட்டி கேக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படும் ,இதன் காரணமாக பெற்றோரை மதிக்காத பிள்ளைகளால் பெற்றோர்க்கு நிகழும் சங்கடங்கள் எத்தனை எத்தனை? ஒருவேளை கணவன் மரணித்தால் மனைவி எந்த வசதியும் இன்றி தவிர்க்க நேரிடும். இதற்குத்தான்  இஸ்லாம் யாராலும் இயற்ற முடியாத சட்டங்களை கொண்டிருகின்றது. இந்த விஷயத்தில் சுயநலம் மிகுந்த நன்மையை தருகிறது…  இல்லையா?

அதேநேரம் மரணத் தருவாயில் செய்யும் மரண சாசனத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் தானம் செய்ய தடை செய்துள்ளது இஸ்லாம். காரணம் குடும்ப உறுப்பினர்களை நடுத்தெருவில் விட்டுச்செல்லாமல் இருக்கவும், அவர்களிடம் மேலதிகமாக சொத்துக்கள் இருந்தால் இலகுவாக இருக்கும் என்பதற்க்குமே! சட்டமியற்றுவதில் அல்லாஹ்வை விட சிறந்தவர் யாராக இருக்க முடியும்.

அடுத்ததாக:

ஒரு தாய் தன் குழந்தைக்கு நல்ல கல்வி கிடைக்க வழிசெய்கிறாள் என்றால், அது அந்தக் குழந்தையின் நல்வாழ்வுக்காக மட்டுமல்ல. ‘தாய்’ என்ற தனது கடமையைச் சரியாகச் செய்வதன்மூலம் இரண்டு பலன்கள் அவளுக்கு: ஒன்று, ஒருவருக்கு நற்கல்வி கிடைக்கச் செய்வதன் மூலம், அவளது அக்கவுண்டில் நன்மை கூடுகிறது. இரண்டாவது, இறைவனிடம் மறுமைநாளில் தன் கடமையைச் சரியாகச் செய்துவிட்டாயா என்ற கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லி, நரகத்திலிருந்து தப்பிக்கவும் முடிகிறது. ஆக சுயநலமுடன் பிறர் நலமும் பேணப்பட்டு சமுதாயத்தில் சமமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதாவது இப்படி ஒரே கல்லிலே ரெண்டு, இல்லையில்லை மூணு மாங்காய் அடிக்க முடியுது…

நமது பிராத்தனைகள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப் படவேண்டும்.. அதற்கு நம்மை நாமே தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும். நம் துவாக்களில் உடல் நலத்தை மட்டுமன்றி வறுமை, கடன், சோம்பல் இவை அனைத்தையும் விட்டும் பாதுகாப்பு கேட்க வேண்டும்.. அப்போதுதான் நம்மை படைத்தவனை வணங்கவும் ,பிறருக்கு உதவவும் இலகுவாக இருக்கும்.இதன் மூலம் சொர்க்கம் செல்ல பாக்கியம் கிடைத்தால்.. எமது சகோதர்களுக்காகவும் அல்லாஹ்விடம் மன்றாட சந்தர்ப்பம் கிடைக்கும் அல்லவா? நாம் சிந்திப்போம் ,செயல்படுவோம் .

உண்மையில் இஸ்லாம் விதித்துள்ள பல கோட்பாடுகள் பற்றி சற்று அழுத்தமாக சிந்திக்கும் போது ,எம்மை வியப்பில் ஆழ்த்தும். அல்லாஹ்வின் மேம்பாட்டை உணரவைத்து அவனுக்கு சிரம் தாழ்த்த வைக்கும். அல்லாஹ் அக்பர் ;அவன் மிகப் பெரியவன்.

இஸ்லாம் சொல்லி கொடுக்கும் சுயநலத்தில் பிறர் நலமும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலமும் காண முடிகிறது இல்லையா? ஆகவே  இஸ்லாம் கூறியபடி சுயநலனோடு சிந்தித்து பிறர் நலனையும், சமுதாய நலனையும் பேணுவோம்.

நன்றி:- பாத்திமாஹ் முஸ்லீமாஹ்
நன்றி:-இஸ்லாமிய பெண்மணி http://www,islamiyapenmani.com/




ரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி


அஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே…..

வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன்…. ஏதோ இருக்கேண்டீ…. நீ சொல்லு….

என்ன நஸீம்… ரமலான் மாசம்… கையில் பிடிக்க முடியாத குறையா பிஸியா இருப்பே… இப்ப என்ன சுரத்தே இல்லாம பேசறே??

இல்லடீ…. ரெண்டு நாளா நோன்பில்லை… அதான் டல்லா இருக்கேன்…. நோன்பில்லைன்னா என்னதான் செய்யறதுன்னு தெரியலை…. போரடிக்குது….

நஸீமாவின் இடத்தை நம்மில் பலரும் கடக்க வேண்டி இருக்கிறது. மாதம்தோறும் வரும் உதிரப்போக்கினாலோ அல்லது பிரசவத்திற்கு பின் வரும் உதிரப்போக்கினாலோ ரமலானை, அந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும், வேகத்துடனும் கடக்க இயலாமல் போகிறது. ஆனால் வருத்தப்பட்டு இந்த மாதத்தை நாம் விட்டு விடலாமா? அதன் ரஹ்மத்தை1, பரக்கத்தை2, அதில் கிடைக்கும் அளவிலா நன்மைகளை?????????????? தொழுக முடியாத நிலையில் என்ன இபாதத்3 செய்து விட முடியும் என்று நினைக்கும் சகோதரிகளுக்காகவே இந்தக் கட்டுரை. இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் பல சகோதரிகள் பயன் பெறக்கூடும் என்னும் நிய்யத்துடன், பிஸ்மில்லாஹ்…. 🙂

முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே… எப்படி அல்லாஹ் கட்டளையிட்ட ஐவேளைத் தொழுகையை தொழுவதிலும், நோன்பு நோற்பதிலும், ஸகாத்4 தருவதிலும் நமக்கு கூலிகள் உண்டோ… அதே போன்றுதான், அல்லாஹ்வின் கட்டளையை மதித்து இந்த உதிரப்போக்கு காலங்களில் நாம் தொழுகாமல் இருப்பதற்கும் கூலி கிடைக்கிறது. ஆம், அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றித்தான் நம் தொழுகையை விட்டிருக்கிறோம் அல்லவா…. எனவே அதுவும் ஓர் இபாதத்தே…. எனவே முதலில் அந்தக் கவலையிலிருந்து மீண்டெழுங்கள்.

இரண்டாவது, இது தீண்டாமை போன்றதொரு கொடிய நோயோ, தீட்டோ அல்ல. மாறாக, தஹாரா என்னும் தூய நிலையை வராத ஒரு இயற்கை/நிலை மட்டுமே. எவ்வாறு ‘ஜனாபா5’ நிலையை அடைந்தால் ஆண், பெண் இருவருக்குமே ‘தூய்மை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதே போல் இந்த நிலையும் வெளிப்புற அசுத்தமே தவிர அல்லாஹ்வின் முன் நிற்கக்கூடியவரின் அகத்தூய்மையை கேள்விக்குறியாக்கும் தீட்டல்ல. இதனையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஓர் ஹதீஸ்6சில் குறிப்பிட்டுள்ளார்.
‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவி த்தார். (புகாரி 1:6:297)

தீட்டாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தகைய நிலையில் அன்னையின் மடியில் தலை வைத்து குர்’ஆன் ஓத செய்திருப்பார்களா?

உடலாலும் மனதாலும் தளர்ந்து போயிருக்கும் நம்மை கஷ்டப்படுத்தாமல் இபாதத்தை இலகுவாக்கவே அல்லாஹ் தந்த பரிசு என்பதை நினைவில் வையுங்கள். அதுவும் விட்டுப்போயிருக்கும் நோன்பை மட்டுமே நமக்கு மீண்டும் பிடிக்க கட்டளையுள்ளது. விட்டுப்போன தொழுகைகளையல்ல. அதையும் யோசித்துப் பாருங்கள். மார்க்கத்தை நமக்காக எத்தனை இலகுவாக்கி தந்துள்ளான் நம் இறைவன் என்பது புரியும். அல்லாஹு அக்பர்.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் கூறி இருப்பது போல, அனைத்து பொருட்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை உண்டு, ஒரு ஒழுங்கு உண்டு, அது போல நமக்கும் வைத்துள்ளான். எப்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் அததற்கான ஆர்பிட் / வழி உள்ளதோ அதே போல பெண்களுக்கும் இந்த குறிப்பிட்ட காலத்தை ஒரு ஒழுங்காக அமைத்துள்ளான்.
(உஹதுப் போரில்) உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால் அதே போன்று அக்கூட்டத்தினருக்கும் (பத்ரு போரில்) காயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச்செய்கிறோம். இதற்குக்காரணம் நம்பிக்கை கொன்டோரை அல்லாஹ் அறிவதற்கும் உங்களில் உயிர்தியாகம் செய்வோரை உருவாக்குவதற்குமே ஆகும். அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.(ஆலெ இம்ரான்:140)

இன்னும் ஒரு விஷயம் உற்று நோக்கினால் புரிபடும். அது ரமதானை நாம் தராவீஹ்7 + தொழுகை + குர்’ஆன் என்னும் மூன்று விஷயங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதை. தொழுகை இல்லாதபோதுதான் மற்ற விஷயங்களைப் பற்றி நமக்கு தெரியவும் வருகிறது, அதன் மேலும் நம் ஃபோகஸை கொண்டு போக முடிகிறது. உதாரணத்திற்கு
“என்மீது அதிகமாக ஸலவாத்தை ஓதுபவர் கியாமத்து நாளில் என்னை அதிகம் நெருங்கியிருப்பார்! என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அறிவித்துள்ளார்.”
என்னும் ஹதீஸ்சை நினைத்துப் பாருங்கள். எந்தளவிற்கு நாம் ஸலவாத்8தை நினைக்கிறோம் அல்லது ஓதுகின்றோம்?? தொழுகையில் அத்தஹியாத்9திற்கு பிறகு ஓதுவதோடு பலர் நிறுத்திக் கொள்கிறோம். அதன் மகத்தான கூலியை மேலே படித்துப் பாருங்கள்…….
அதே போல்தான் நோன்பாளிகளுக்கு உணவளிப்பதும், திக்ரு செய்வதும், து’ஆ செய்வதும்.
‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)
“து’ஆ என்பது வணக்க வழிபாட்டின் சாராம்சமாகும்.” (அஹ்மத், திர்மிதி, ஹஸன் ஸஹீஹ்)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (பகரா 2:185)
அல்லாஹ் எந்த இபாதத்தின் கூலியையும் குறைத்துக் கொடுப்பவனல்ல. ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த நன்மைக்கான கூலியை வழங்குவேன் என்று வாக்களித்துள்ளான். அதுவும் அணுவளவும் குறையாமல். இன்னும் குர்’ஆனை திலாவத்தாக மட்டும் அல்லாமல் மனனம் செய்யவோ, கற்கவோ, கற்றுக்கொடுக்கவோ கூட செய்யலாம். வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு புதிதாக ஒரு சூறா / குர்’ஆனின் அத்தியாயம் கற்றுக்கொடுக்கலாம். அல்லது நீங்களே மனனம் செய்யலாம்.

இன்னும் ஈஈஈஈஸியான வழி, அவரவர் செல்ஃபோன் மூலமாகவோ, மடிக்கணிணி மூலமாகவோ, அல்லது டேப் ரிக்கார்டர், ஆடியோ சிஸ்டம் கொண்டோ எத்தனை முறை வேண்டுமானாலும் கேளுங்கள், மகிழுங்கள், மனனம் செய்யுங்கள். அல்லது மனனம் செய்து மறந்து போன சூறா எனில் அதை மீண்டும் சரி செய்து கொள்ளுங்கள். மாஷா அல்லாஹ்…. நினைத்துப் பாருங்கள், தொழும் நிலையில் இருக்கும்போது இத்தனை விதத்தையும் நாம் எண்ணிப்பார்க்கிறோமா??
தஃப்ஸீர்10 படிப்பதற்கும், படித்ததை பகிர்வதற்கும், அதற்கான கூலிகளும் உண்டு. எத்தனை விதமான தஃப்ஸீர்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் எத்தனை படிப்பினைகள் உள்ளன… எத்தனை எத்தனை புதிய செய்திகளை / ஹதீத்துக்களை / ரிவாயத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது??? அதை பகிர்வதிலும் கிடைக்கும் நன்மையை நானோ நீங்களோ அளக்க முடியுமா??

எனவே இந்த காலத்தை (ஹைல் / நிஃபாஸ்) துவண்டு போகும் காலமாக அன்றி, நமக்கு ஒரு இடைவேளை தரப்பட்டுள்ளது, அதுவும் அல்லாஹ்விடமிருந்து, அதை மனதார ஏற்றுக்கொள்வதிலும் நமக்கு கூலியுண்டு என்பதை நினைவில் வையுங்கள். தொழுகையும், குர்’ஆன் ஓதுவதும் மட்டுமே இபாதத்தல்ல என்பதை புரிந்து கொள்ளவும் ஏனைய அமல்களிலும் திக்ரையும், இறையச்சத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவும் இந்த காலத்தை ஒதுக்குங்கள்.
இன்ஷா அல்லாஹ், இனி நடைமுறையில் செய்யக்கூடிய, நற்கூலியை பெற்றுத்தரும் செயல்களை ஒரு சேர பார்ப்போம்.

நோன்பாளிகளுக்கு உணவு தயார் செய்யவும், பரிமாறவும், இஃப்தார் குழுக்களிலும் பங்கு பெறுங்கள்.
இஃப்தார் முடிந்த பின் மஸ்ஜிதில் சுத்தப்படுத்தும் வேலையில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
தராவீஹ் தொழுக வரும் தாய்மார்களின் குழந்தைகளை (Baby Care) கவனித்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு நன்மை யோசியுங்கள். குழந்தையின் தாய்மார் மட்டுமல்ல. இன்னும் மற்றவர்களும் சிரமம் இன்றி தொழுகையில் ஒன்றி தொழுக முடியும். அதற்கான கூலியும்….மாஷா அல்லாஹ் :))
இது வரை மனனம் செய்யாத சூறாக்கள், து’ஆக்களை மனனம் செய்யுங்கள்.
வீட்டிலுள்ள வயதானோருக்கு (எழுத படிக்க இயலாமல் இருப்பவர்களுக்கு) மற்றும் குழந்தைகளுக்கு சூறாக்களையும், து’ஆக்களையும் கற்றுக் கொடுங்கள். தஃப்சீர் உரக்க படித்துக் காட்டுங்கள்.
உங்கள் வீட்டிலுள்ள / தெருவில் / அணுகக் கூடிய அருகாமையில் உள்ள நோன்பு வைக்கும் வயதானோருக்கு / ஏழைகளுக்கு / சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு / புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உணவுக்கும் / மற்ற தேவைகளுக்கும் உதவுங்கள்.
“யார் தன் சகோதரனின்தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.”  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி). நூல்: புகாரீ 2262, முஸ்லிம்

(உங்களின் வீட்டுக்கு இஃப்தாருக்கு அழைத்துப்பாருங்களேன்… இன்னும் அதிகமான மகிழ்ச்சி, கூலி மாஷா அல்லாஹ்)
நிஃபாஸில் இருக்கும் தாய்மார்களே… உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் ஒவ்வொரு முறையும்(மற்ற எல்லா வேளைகளிலும் கூட:) ) ஒரு சூறாவோ/து’ஆவோ/திக்ரோ அதிகமதிகம் ஓதுங்கள். பக்கத்தில் ஒரு ஆடியோ பிளேயர் வைத்து குர்’ஆனோ / தஃப்ஸீரோ ஒலிக்க வையுங்கள். உங்கள் மேலும், இன்ஷாஅல்லாஹ் உங்களின் குழந்தை மேலும் அதன் எஃபெக்ட்டை உணர முடியும் (இது சொந்த அனுபவமே….)
அதிகமதிகம் திக்ரு செய்யுங்கள். இதுவரை மனனம் செய்யாத காலை மற்றும் மாலை திக்ருக்களை மனனம் செய்யுங்கள். ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் மற்றவர்கள் தொழும்போது நீங்களும் அமர்ந்து அந்தந்த வேளைகளுக்கான திக்ருக்களை ஓதுங்கள்.
இரவில் தஹஜ்ஜுத் நேரத்தில் எழுந்து, உள்ளம் ஒன்றி, கண்ணீர் மல்க து’ஆ கேளுங்கள். து’ஆவிற்கு முன்னும் பின்னும் திக்ரையும், ஸலவாத்தையும் அதிகப்படுத்துங்கள்.
வீட்டில் பிரிண்டர் / சிடி ரைட்டர் இருந்தால் இலவசமாக து’ஆக்கள் / திக்ருக்களை பிரிண்ட் செய்தோ / சிடியில் காப்பி செய்தோ எத்தனை பேருக்கு இயலுமோ பகிருங்கள். (இதை அச்சிட்டது / காப்பி செய்தது…ஜனாப் / ஹாஜி/இன்னாரின் ஹக்கில் து’ஆ—- என்னும் போஸ்டரெல்லாம் அடிக்காமல் இன்ஷா அல்லாஹ்…. :)) )
தஜ்வீத் சரி செய்து கொள்ளவும், அதன் சட்டங்களை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும், தகவல்களை / பாடங்களை பகிர்ந்து கொள்ளவும் நேரம் ஒதுக்குங்கள்.
அஸ்மா உல் ஹுஸ்னாவை மனனம் செய்யுங்கள். அதற்கான கூலியும் உண்டு…கூடவே உங்களின் து’ஆக்களின் போது அல்லாஹ்வின் எந்தப்பெயரை உபயோகிக்கலாம் என்பது தெள்ளென விளங்கும்….
“அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. யார் அவற்றை மனனமிட்டுக்கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6410, முஸ்லிம் 2677) இன்னும் அதிகமாகவும் து’ஆவில் ஒன்ற வைக்கும்.

ஈத் பெருநாளைக்கான ஷாப்பிங்கையெல்லாம் இந்த நேரங்களில் வைத்துக் கொண்டால் தொழும் நிலை கிடைக்கும்போது அதைப்பற்றிய கவலை இருக்காது.
இன்னும் வேறு எந்த விதத்தில் நற்கூலி பெறலாம் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள்…. அதுவே உங்களுக்கு இன்னும் பல வழிகளைக் காட்டும் இன்ஷா அல்லாஹ். மனித மனம் எப்படிப்பட்டதெனில், ஒரு கதவு மூடப்படும்போதுதான் மற்ற வழிகளை தேட ஆரம்பிக்கும் 🙂
மிக முக்கியமாக, ஹலால்11-ஆன அமல்களை செய்வதை விடவும், ஹராம்12-ஆன செய்கைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வதே மிக மிக முக்கியமானது, மேன்மையானது. எனவே புறம் பேசுவதை விட்டும், அவதூறு சொல்வதை விட்டும், பொய்யிலிருந்தும், வீண் பேச்சுக்களிலிருந்தும், நேரத்தை வீணாக்கும் செயல்களிலிருந்தும் காத்துக்கொள்ளுங்கள். இந்த காலமானது உங்களை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்குவதில்லை, உங்களின் அமல்களில் குறை வைப்பதில்லை என்பதையும் ஆனால் வீண் செயல்களால் குறையேற்படக்கூடும் என்பதையும் நினைவில் வையுங்கள்.

இன்ஷா அல்லாஹ் இந்த இடைவெளியானது இன்னும் அதிக ஈர்ப்புடனும், சக்தியுடனும், பலமான ஈமானுடனும் உங்களை தயார் செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே மகிழ்ச்சியுடனும், ஒவ்வொரு அமலுக்கும் கூலி இருப்பதில் நம்பிக்கை கொண்டும் களத்தில் இறங்குங்கள்.

…அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)… (2:185)

அகராதி:

1. ரஹ்மத்- பேரளுள்
2. பரக்கத்- அபிவிருத்தி
3. இபாதத்- இறைவணக்க வழிபாடு
4. ஜகாத் – ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கான வரி / தூய்மையாக்குதல் என்னும் பொருளும் உண்டு
5. ஜனாபா- பெருந்தொடக்கு-சிறு தொடக்கு உடையவர்
6. ஹதீஸ் – நபிமொழி
7. தராவீஹ் – ரமதான் மாதத்தில் மஸ்ஜிதில் தொழும் இரவு நேர தொழுகை
8. ஸலவாத்– நபிகள் நாயகம் அவர்களின் மீது அல்லாஹ்வின் ரஹ்மத்தும், பரக்கத்தும் இறங்க வேண்டி ஓதப்படுவது
9. அத்தஹியாத்து – தொழுகையின் கடைசி ரக்’அத்தில் ‘இருத்தல்’ நிலையில் ஓதுவது
10. தஃப்ஸீர் – திருக் குர்’ஆனின் பொருளுரை
11. ஹலால் – இஸ்லாமிய சட்டப்படி ஆகுமாக்கப்பட்டது.
12. ஹராம் — இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்படாதது.

நன்றி:- இஸ்லாமிய பெண்மணி
நன்றி:-சகோதரிகள். ஷாஸியா நவாஸ், அஸ்மா பின்த் ஷமீம், ஹாஃபிதா. ரைஹானா ஒமர் 

 


பிரிவுகள்:ரமலானும் அந்த நாட்களும் - இஸ்லாமிய பெண்மணி குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,