பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
لسلام عليكم و رحمة الله و بركاته
நஹ்மதுஹூ வநுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்.
“என்னைக் குறித்து அறிவியுங்கள். அது சிறியதோர் செய்தியாயினுஞ்சரியே”. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இத்திரு மொழியின்படி, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நான் படித்தறிந்த விஷயங்களைத் தொகுத்து ஒரு சிறிய புத்தகத்தை எழுத நாட்டம் கொண்டேன். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா இப் புத்தகத்தை எழுதுவதற்கான ஹிதாயத்தையும், அறிவையும், ஆற்றலையும் கொடுத்தான். அதனைக் கொண்டு இச்சிறிய புத்தகத்தை எழுதியுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய உம்மத்துகள் மீது நீங்காத பற்றும் பாசமும், கவலையும் கொண்டவர்களாக இருந்தார்கள். “இறைவனே! என் சமுகத்தார், என் சமுகத்தார்” எனக் கூறி அழுதவர்களாக இருந்தார்கள். இம்மையிலும், மறுமையிலும் அவர்களின் வாட்டம் போக்க நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
ஆனால், உம்மத்துகளில் ஒரு கூட்டத்தார் அன்னாரை கண்ணியப்படுத்துவதில் குற்றம் காண்கிறார்கள்! அன்னார் மீது ஸலவாத்து ஓதுவதில் குற்றம் காண்கிறார்கள்! அன்னாரின் நேரிய வழிமுறைகளில் குற்றம் காண்கிறார்கள்!
மனிதர்கள்தான் இவ்விதம் குற்றம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்! ஆனால், அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவோ தன்னுடைய ஹபீபை ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணியப்படுத்தி சிறப்பித்திருக்கிறான். யாருக்கும் வழங்காத பல்வேறு அந்தஸ்துகளை வழங்கி சிறப்பித்திருக்கிறான். அன்னார் மீது தன்னுடைய அருளையும், அன்பையும் பொழிந்து சிறப்பித்திருக்கிறான். இப்படியாக சிறப்புகளை எல்லாம் சிறப்பாக வழங்கி சிறப்பித்திருக்கிறான். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கிய சிறப்புகளில் சிலவற்றைத்தான் இப்புத்தகத்தில் தொகுத்தெழுதியுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்.
இந்நூலில் பல்வேறு ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பல்வேறு ஹதீஸ் நூல்களிலிருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளேன். அவ்விதம் இப்புத்தகத்தில் நான் பயன்படுத்தியுள்ள ஹதீஸ் நூல்களின் மூல ஆசிரியர்களுக்கும், மொழிபெயர்ப்பு செய்தவர்களுக்கும், பதிப்பித்தவர்களுக்கும் எனது நன்றியினை காணிக்கையாக்குகிறேன். மேலும், அன்னவர்களின் ஹக்கில் துஆ செய்தவனாகவும் இருக்கிறேன்.
இப்புத்தகத்தில் என்னையறியாமல் ஏதேனும் குறைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சுட்டிக்காட்டி, திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால், இச்சிறிய புத்தகத்தைக் கொண்டு நம் அனைவருக்கும் பயன் கிடைக்கும்படி செய்வானாக. மேலும், குறைவின்றி இம்மை மறுமை பேறுகளையும் தந்தருள்வானாக. ஆமீன்.
சென்னை,
அன்பு சகோதரன்,
(ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி)
14 .6 .1430 ( 8 .6 .2009 ).

1.சிறப்பான தலைமுறை
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்பான வம்சா வழியிலேயே தேர்ந்தெடுத்திருக்கிறான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வம்ச பாரம்பரியத்தில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதற்கொண்டு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய தலைமுறை வரை வந்த அனைவருமே சிறப்பானவர்களாக இருந்தனர். இது குறித்த விவரம் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
“ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி வழி வந்தவர்களில் மிகவும் மேலானவர்களிலிருந்துதான் நான் அனுப்பப்பட்டேன். நான் இருக்கும் இந்தத் தலைமுறை வரை ( அனைவரும் சிறப்பானவர்களாகவே இருந்தனர். )” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
“இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றல்களில் கனானா குலத்தினரைத்தான் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். கனானா குலத்தினரிடமிருந்து குறைஷி குலத்தினரை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். குறைஷிக் குலத்தினரிடமிருந்து பனூ ஹாஷிம் குலத்தினரை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தினரிடமிருந்து அவன் என்னைத் தேர்ந்தெடுத்தான்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்ம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: வாஸிலாதுப்னுல் அஸ்கஃ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம்.
ஒரு முறை மக்கள் பேசிகொண்ட சில விஷயங்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எட்டின. அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உடனே மிம்பரில் ஏறினார்கள். மக்களிடம், “நான் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “தாங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்” என பதிலளித்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மது ( ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) ஆவேன். நிச்சயமாக அல்லாஹ் படைப்புகளைப் படைத்தான். என்னை அப்படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஆக்கினான். அந்த மக்களை அல்லாஹ் இரண்டு பிரிவினர்களாக ஆக்கினான். அதில் சிறந்த பிரிவினரில் நின்றும் என்னை ஆக்கினான். அம்மக்களை பல கோத்திரங்களாக அல்லாஹ் ஆக்கினான். அவற்றில் சிறந்த கோத்திரத்தில் நின்றும் அல்லாஹ் என்னை ஆக்கினான். அவர்களை அல்லாஹ் பல வீடுகளாக ( குடும்பத்தார்களாக ) ஆக்கினான். அவற்றில் சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான். நான் உங்களில் சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறேன். மனத்தாலும் உங்களில் சிறந்தவனாக இருக்கிறேன். அறிவிப்பவர்: அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ( இமாம் அஹ்மது ).
மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வமிசத் தொடரில் இடம்பெற்றுள்ள அனைவருமே நிக்காஹ் உறவின் மூலமே பிறந்தவர்கள்! அவர்களில் எவருமே விபச்சாரத்தின் மூலம் பிறந்தவர்கள் அல்லர்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரர்களில் ஒருவரான இமாம் முஹம்மதுல் பாகிர் (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் நிக்காஹ் மூலமே ( என் பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் நிக்காஹ் உறவின் மூலமே ) வெளிப்படுத்தப்பட்டேன். விபச்சார உறவின் மூலம் அல்ல” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( அப்துர் ரஜ்ஜாக் )
ஒரு முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். அதில் கூறினார்கள்: “நான் அப்துல்லாஹ்வின் மகன் ஆவேன். அவர் அப்துல் முத்தலிபின் மகனாவார். அவர் ஹாஷிமின் மகனாவார். அவர் அப்து முனாஃபின் மகன் ஆவார். அவர் குஸையின் மகன் ஆவார். அவர் கிலாபின் மகன் ஆவார். அவர் முர்ராவின் மகன் ஆவார். அவர் கஃபின் மகன் ஆவார். அவர் லுஅய்யின் மகன் ஆவார். அவர் காலிபின் மகன் ஆவார். அவர் பஃஹரின் மகன் ஆவார். அவர் மாலிகின் மகன் ஆவார். அவர் நள்ரின் மகன் ஆவார். அவர் கினானாவின் மகன் ஆவார். அவர் குஜைமாவின் மகன் ஆவார். அவர் முத்ரிகாவின் மகன் ஆவார். அவர் இல்யாஸின் மகன் ஆவார். அவர் முளரின் மகன் ஆவார். அவர் நிஜாரின் மகன் ஆவார். மக்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்தால், அதில் சிறந்த பிரிவிலேயே அல்லாஹ் என்னை ஆக்கி வைத்தான். என் பெற்றோரிலிருந்து அல்லாஹ் என்னை வெளிப்படுத்தினான். அறியாமைக் கால விபச்சாரத் தொடர்பு என்னைத் தொடவில்லை. நான் நிக்காஹ் மூலம் வெளியானேன். விபச்சாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படவில்லை. ஆதம் ( அலைஹிஸ்ஸலாம் ) அவர்களிடமிருந்து என் தாய், தந்தை அளவில் நான் வந்து சேறும் வரை நிக்காஹ்வின் மூலமே கொண்டுவரப்பட்டேன். நான் உங்களில் சிறந்தவன். நான் உங்களின் வமிசத்திலும் சிறந்தவன். ( பைஹகீ ).
ஹளரத் இமாம் புகாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவம் பற்றிய தலைப்பில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வம்ச வரலாறு பற்றி கீழ்கண்டபடி குறிப்பிட்டிருக்கிறார்கள். (1) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள். (2) அப்துல்லாஹ், (3) அப்துல் முத்தலிப், (4) ஹாஷிம், (5) அப்துமனாப், (6) குஸய்யு, (7) கிலாப், (8) முர்ரா, (9) கஃபு, (10) லுவய்யு, (11) காலிப், (12) பிஹ்ர், (13) மாலிக், (14) நள்ர், (15) கினானா, (16) குஜைமா, (17) முத்ரிக்கா, (18) இல்யாஸ், (19) முளர், (20) நிஜார், (21) மஅத்து, (22) அத்னான்.
இவர்களில் கடைசியாக கூறப்பட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஆரம்பத் தந்தையான அத்னான் அவர்கள், ஹஜ்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பேரப்பிள்ளைகளில் உள்ளவராவார்!
இவ்விதம் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்பான வம்சா வழியிலே தேர்ந்தெடுத்து சிறப்பித்திருக்கிறான்.

2.பிறப்பு
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா சிறப்பாக்கினான்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது பல்வேறு அதியங்களும் அற்புதங்களும் வெளிப்பட்டன. அதன் மூலம் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உயர்ந்த அந்தஸ்தை வெளிப்படுத்தி சிறப்பித்தான்.
யமன் நாட்டு மன்னனான அப்ரஹா புனித கஃபாவை இடிக்கும் நோக்கத்துடன் படையெடுத்து வந்தான். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா அவனையும், அவனுடைய யானைப் படையையும் பொடிக்கற்களைக் கொண்டு அழித்தான்! புனித கஃபாவையும் காத்தருளினான். இந்த நிகழ்ச்சிக்கு ஐம்பது நாட்கள் கழித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள். அதன்படி அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம், பன்னிரண்டாம் தேதி, திங்கட்கிழமை வைகறைப் பொழுதில் பிறந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தேதி குறித்து அறிஞர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் தேதி பிறந்தார்கள் என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது பல்வேறு அற்புதங்களும், அதிசயங்களும் நிகழ்ந்தன! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர் ( ஒளி ) வெளிப்பட்டது! வீடு ஒளியால் நிரம்பியது! நட்சத்திரங்கள் இறங்கி அன்னாரின் பக்கம் நெருங்கின!
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தாயார் ஆமினா அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அண்ணலாரைப் பெற்றெடுத்த இரவில் ஒரு மாபெரும் ஒளியைப் பார்த்தேன். அதன் ஒளியில் ஷாம் நாட்டின் கோட்டைகள் இலங்குவதை நான் பார்த்தேன். (அபூ நுஅய்ம் )
உஸ்மான் பின் அபில் ஆஸ் தம்முடைய தாயாரும் ஸஹாபிப் பெண்மணியுமான உம்மு உஸ்மான் அஸ்ஸகபிய்யா அஸ்ஸஹாபிய்யா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள்: நபியவர்களின் பிரசவத்தின் பொழுது நான் அவர்களின் இல்லத்தில் இருந்தேன். அவர்கள் பிறந்ததும் அவர்களின் வீடு ஒளியால் நிரம்பியது. நட்சத்திரங்கள் இறங்கி அவர்களின் பக்கம் நெருங்கி வந்துவிட்டன. எந்த அளவெனில் என் மீது அவை விழுந்து விடும் என நான் எண்ணுகிற அளவுக்கு நெருங்கின! அண்ணலாரை, ஆமினா பெற்றெடுத்ததும் அவர்களிடமிருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது. அவ்வொளியில் அந்த அறையும், அந்த வீடும் பிரகாசித்தது! அதனால் ஒளியைத் தவிர வேறு எதையும் பார்க்காதவளாக நான் ஆகிவிட்டேன். ( பைஹகீ, திப்ரானி ).
இமாம் இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “அல்பிதாயா வந்நிஹாயா” என்னும் நூலில் பின்வரும் அற்புதங்களையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள்: அணணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர் வெளிப்பட்டது. அது பூமியில் இறங்கி மண்டியிட்டு நின்றது! வானத்தின் பக்கம் தன் தலைப்பாகத்தை உயர்த்தியது. அண்ணலார் பிறந்த இல்லத்தில் ஒளி பரவியது. வானிலுள்ள நட்சத்திரங்கள் அவர்களை நெருங்கி வந்தன. கிஸ்ரா மன்னனின் மாடங்கள் அசைந்தாடி இடிந்து விழுந்தன. நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த நெருப்பு நூர்ந்துவிட்டது! இவை தவிர மற்றும் பல அற்புதங்களும் நிகழ்ந்தன.
மக்ஜூம் பின் ஹானி என்பவர் தம் தந்தை வாயிலாக அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவில் கிஸ்ரா மன்னனின் மாடங்கள் உடைந்தன. அவற்றில் பதினான்கு மாடங்கள் இடிந்து கீழே விழுந்தன. ஆயிரம் ஆண்டுகளாக நூர்ந்து விடாது எரிந்துக் கொண்டிருந்த பாரசீக நாட்டின் நெருப்புக் குண்டம் நூர்ந்தது. “ஸாவா” நகரத்தில் இருந்த சிறிய கடல் போன்ற ஏரி வற்றிப்போனது. ( பத்ஹூல் பாரி ). இந்த அற்புதங்களை ஹதீஸ் அறிவிப்பாளர்களான இமாம்கள் பைஹகீ, அபூ நுஅய்ம், கராஇதி, இப்னு அஸாகிர், இப்னு ஜரீர் போன்ற மார்க்க மாமேதைகளும் கூறியுள்ளனர்.
இப்படியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் சிறப்பாக்கி, அன்னாரின் சிறப்பையும், அன்னாரின் தூதுவத்தையும் வெளிப்படுத்தியுள்ளான்.

3.திருப்பெயர்
நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் முஹம்மத் என்பதாகும். இத்திருப்பெயரை அன்னாரின் பாட்டனார் ஹளரத் அப்துல் முத்தலிப் அவர்கள் சூட்டி மகிழ்ந்தார்கள். “இத்திருப்பெயரை சூட்ட காரணமென்ன?” என்று மக்கள் கேட்டபோது, ” இப்பிள்ளைக்கு முஹம்மத் என்னும் திருப்பெயரையே சூடடும்படி கனவின் மூலம் அறிவுறுத்தப்பட்டேன். இப்பிள்ளையின் புகழ் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதிரொலிக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் ” என பதில் கூறினார்கள். முஹம்மத் என்னும் திருப்பெயருக்கு ” புகழப்பட்டவர் ” என்பது பொருளாகும்.
அன்னை ஆமினா அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ‘அஹ்மது’ என்னும் திருப்பெயரை சூட்டினார்கள். அன்னை ஆமினா அவர்கள் நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கருவுற்றிருக்கும் போது, அன்னாருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும், அக்குழந்தைக்கு அஹ்மது என்னும் திருப்பெயரை சூட்டும்படியும் கனவின் மூலம் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படியே அன்னை ஆமினா அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அஹ்மது என்னும் திருப்பெயரை சூட்டினார்கள். அஹ்மது என்னும் திருப்பெயருக்கு ‘புகழ்பவர்’ என்பது பொருளாகும். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் புகழப்பட்டவரும் எவருமில்லை. ஒவ்வொரு கணமும் வானவர்களும், மனிதர்களும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து என்னும் புகழ்மொழியை ஓதிக் கொண்டுதானே இருக்கிறார்கள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவை புகழ்ந்தவரும் எவருமில்லை! அதனால்தான் இத்திருப் பெயர்களை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா சூட்டச் செய்தான் போலும்!
முஹம்மது, அஹ்மது என்னும் இவ்விரு திருப்பெயர்களும் திருக்குர்ஆனில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளன. முஹம்மது என்னும் திருப்பெயர், ஸூரத்துல் ஆலஇம்ரான், வசனம் – 144, ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் – 40, ஸூரத்து முஹம்மது, வசனம் – 2, ஸூரத்துல் பஃத்ஹ், வசனம் – 29 , ஆகிய நான்கு இடங்களில் கூறப்பட்டுள்ளது. அஹ்மது என்னும் திருப்பெயர் ஸூரத்துஸ் ஸஃப்பு, வசனம் – 6 ல் இடம்பெற்றுள்ளது.
நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் தவ்றாத் வேதத்தில் முஹம்மது என்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஸூரத்துல் பஃத்ஹ், வசனம் – 29 ல் கூறப்பட்டுள்ளது. இன்ஜீலில் (பைபிளில் ) நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் அஹ்மது என கூறப்பட்டுள்ளது. இதுபற்றி, ” மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: ” இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் ; எனக்குப் பின்னர் வரவிருக்கும் ” அஹ்மது ” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன் ” என்று கூறிய வேளையை ( நபியே! நீர் நினைவு கூறுவீராக! ) என்று, ஸூரத்துஸ் ஸஃப்பு, வசனம் – 6 ல் கூறப்பட்டுள்ளது.
மேலும், அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை ‘முத்தஸ்ஸிர்’ (போர்த்திக் கொண்டு இருப்பவரே! ) என்று அழைத்திருக்கிறான். இது குறித்த விவரம் ஸஹீஹூல் புகாரீயில் இடம் பெற்றுள்ளது.
வஹீ (தெய்வ அறிவிப்பு) நின்றிருந்ததைக் குறித்து ஜாபிறுப்னு அப்தில்லாஹில் அன்ஸாரி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கூறியபோது, “நான் நடந்துக் கொண்டிருக்கும் போது வானிலிருந்து ஒரு சப்தத்தைச் செவியேற்று, என் தலையை உயர்த்தினேன். அப்பொழுது ஹிராவில் என்னிடம் வந்த அதே வானவர், வானுக்கும் பூமிக்குமிடையில் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே, அவருக்கு நான் பயந்து திரும்ப (வீட்டுக்கு ) வந்து “எனக்குப் போர்த்துங்கள், எனக்குப் போர்த்துங்கள்” என்று கூறினேன். ( துப்பட்டியை போர்த்திவிட்டார்கள். அப்பொழுது )
“(1) ( போர்வை ) போர்த்திக் கொண்டு இருப்பவரே! (2) நீர் எழுந்து ( மக்களுக்கு ) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. (3) மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக. (4) உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக. (5) அன்றியும் அசுத்தத்தை வெறுத்து ( ஒதுக்கி ) விடுவீராக” என்னும் வசனங்களை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா அருளினான். ( பார்க்க: அத்தியாயம் 74, ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் – 1 – 5 . ) வஹீ தொடர்ந்து வந்தது” என்று ( அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ) கூறியதாக அவர் சொன்னார். அறிவிப்பவர்: ஜாபிறுப்னு அப்தில்லாஹி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.
இதன் காரணமாக முத்தஸ்ஸிர் என்பதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயராக உள்ளது. இதைப் போலவே அத்தியாயம் 73, ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் 1 – ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘முஸ்ஸம்மில்’ என்பதும் அண்ணல் நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப் பெயராக உள்ளது.
“(1) தாஹா. (2) ( நபியே! ) நீர் துன்பப் படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை. ” இவை, அத்தியாயம் 20, ஸூரத்து தாஹாவின் தொடக்க வசனங்களாகும். இதில், முதல் வசனமாக கூறப்பட்டுள்ள ‘தாஹா’ என்பதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் திருப்பெயரேயாகும் என சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது. ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 6, பக்கம் – 64 . )
இப்னு ஜூபைர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், அத்தியாயம் 36, ஸூரத்து யாஸீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘யாஸீன்’ என்பதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயரே என அறிவித்திருக்கிறார்கள். ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 363 . ) ஹூரத்துல் அஃராஃப், 157, 158 வசனங்களில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ( எழுதப் படிக்கத் தெரியாத ) ‘உம்மி’ நபி என அழைக்கப் பட்டிருக்கிறார்கள்.
நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்களைப் பற்றி ஸஹீஹில் புகாரி ஷரீபில், கீழ்கண்ட ஹதீஸ் உள்ளது. ” எனக்கு ஐந்து பெயர்களிருக்கின்றன. நான் முஹம்மது, அஹ்மது ( என்னும் பெயர்களுள்ளவர் ) . நான்தான் அல்மாஹீ, அதாவது என் மூலமாக அல்லாஹ் குப்ரை அழிக்கிறான. நான்தான் அல்ஹாஷிர், அதாவது இறுதி நாளில் எனக்குப் பின்னர்தான் மனிதர் யாவரையும் அல்லாஹ் ( உயிர்த் தெழுப்பி ) ஒன்று சேர்ப்பான். நான்தான் கடைசி நபி. ( எனக்குப் பின்னர் நபி இல்லை ) ” என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜூபைறுப்னு முத்இம் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். இந்த ஹதீஹில், நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஐந்து பெயர்கள் கூறப்பட்டுள்ளன.
இப்படியாக திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருப்பெயர்கள் பலவும் கூறப்பட்டுள்ளன. இத்திருப் பெயர்கள் யாவும் நபிமார்களால் அறிவிக்கப் பட்டவையும், வேத நூல்களில் சொல்லப்பட்டவையுமாகும். இவை தவிர இன்னும் பல்வேறு திருப்பெயர்களும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உள்ளன. அவை விர்து ( ஜபம் ) நுல்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளன.
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா தன்னுடைய ஹபீபு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்களை கண்ணியப் படுத்தியிருக்கிறான். இதற்கு சாட்சியாக திருக்குர்ஆன் இருக்கிறது. திருக்குர்ஆனில். நபிமார்களை குறிப்பிட்டுக் கூறும் பொழுது அவர்களுடைய பெயர்களைக் கொண்டே அழைக்க ப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குறிப்பிட்டுக் கூறும் பொழுது ‘யா ஆதமு’ ( ஆதமே! ) என்றே கூறப்பட்டிருக்கிறார்கள். இதைப்போலவே நூஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா நூஹூ’ ( நூஹே! ) என்றே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா இப்ராஹீமே’ (இப்ராஹீமே! ) என்றும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா மூஸா’ ( மூஸாவே! ) என்றும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா ஈஸா’ (ஈஸாவே! ) என்றும் திருக்குர்ஆனில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்விதமே மற்ற நபிமார்களும் பெயர்களைக் கொண்டே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா முஹம்மத்’ என்றோ, ‘யா அஹ்மத்’ என்றோ பெயரைக் கொண்டு அழைக்கப்படவில்லை! இதற்கு மாறாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை குறிப்பிட்டுக் கூறும் இடங்களில் பெரும்பாலும் ‘யா அய்யுஹன் நபியு’ ( நபியே! ) என்றோ, ‘யா அய்யுஹர் ரஸூலு’ ( தூதரே! ) என்றோ, ‘யா அய்யுஹல் முஸ்ஸம்மிலு’ ( போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! ) என்றோ, ‘யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்’ ( ( போர்வை ) போர்த்திக் கொண்டு இருப்பவரே! ) என்றோதான் அழைக்கப்பட்டுள்ளார்கள்! திருக்குர்ஆன் முழுமையிலும் வெறும் நான்கு இடங்களில் மட்டும்தான் – அதுவும் தேவையைக் கருதி, முஹம்மத் என்னும் திருப்பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்! இவ்விதமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்கள் திருக்குர்ஆனில் கண்ணியப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவரங்களை ஹளரத் முஃப்தி முஹம்மத் ஷபீஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மஆரிபுல் குர்ஆன், பாகம் – 8, பக்கம் – 91 ல், ஸூரத்துல் பஃத்ஹூ, வசனம் – 29 க்கான தப்ஸீரில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.
மேலும், திருக்கலிமா, பாங்கு, இகாமத் மற்றும் இது போன்ற காரியங்களில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவை நினைவு கூறும்போதெல்லாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயரையும் சேர்த்து நினைவுகூறும்படியாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா ஏற்பாடு செய்திருக்கின்றான். இவ்விதமாகவும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் சிறப்பிக்கப்பட்டுள்ளது. ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 222. )
இவ்விதம் சிறப்பிற்கும், கண்ணியத்திற்கும் உரிய அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயரை கூறும்போதும், கேட்கும்போதும் அன்னார் மீது ஸலவாத் ஓதுவது ஈமான் கொண்ட அனைவர் மீதும் வாஜிபு ஆகும். ஏனெனில், “எவர் முன்னிலையில் என் பெயர் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத்துக் கூறவில்லையோ அவருடைய மூக்கை மண் அரிக்கட்டும்!’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் திர்மிதீயில் இடம்பெற்றுள்ளது. இன்னொரு ஹதீஸில், “எவர் முன் என்னைக் குறிப்பிடப்பட்டு, அவர் என் மீது ஸலவாத்துக் கூறவில்லையோ அவரே ( உண்மையில் ) உலோபியாவார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை ஹளரத் அலி கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த ஹதீஸூம் திர்மிதீயில் உள்ளது.

4.மனிதகுலம் முழுமைக்கும் நபியாக
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பல்வேறு அந்தஸ்துகளை வழங்கி சிறப்பித்திருக்கிறான். அவற்றில் ஒன்று, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை மனிதகுலம் முழுமைக்கும் நபியாகவும், றஸூலாகவும் ஆக்கியிருப்பது.
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை ) அறியமாட்டார்கள். ( ஸூரத்துஸ் ஸபா, வசனம் – 28. )
திருக்குர்ஆனின் இந்த வசனத்தில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதகுலம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டிருக்கும் விஷயம் கூறப்பட்டுள்ளது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்களும், றஸூல்மார்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் உள்ளவர்களுக்கோதான் நபியாகவும், றஸூலாகவும் அனுப்பப்பட்டார்கள். இதுகுறித்தும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஹளரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், பிர்அவ்னிடமும் அவனுடைய சமுதாயத்தாரிடமும் நபியாக அனுப்பப்பட்டார்கள். இதுகுறித்து திருக்குர்ஆனில்,
மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் பிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திட்டமாக நாம் அனுப்பி வைத்தோம், என ஸூரத்துஜ் ஜூக்ருஃப், வசனம் – 46 ல் கூறப்பட்டுள்ளது.
ஹளரத் நூஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அவர்களது சமூகத்தார் மட்டிலும் நபியாக அனுப்பப்பட்டார்கள்.
இன்னும்: நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ( ஸூரத்துல் முஃமினூன், வசனம் – 23. )
ஸமூது சமூகத்தாரிடம், ஹளரத் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்கள். இதுகுறித்து திருக்குர்ஆனில், “தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” ( என்று போதிக்குமாறு ) அனுப்பினோம் ;” என கூறப்பட்டுள்ளது. (ஸூரத்துல் நம்ல், வசனம் – 45. )
மத்யன் என்னும் இடத்திற்கு ஹளரத் ஷூஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்கள். ஸூரத்து ஹூது, வசனம் – 84 ல், “மத்யனி (நகரத்தி) லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷூஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம்” என இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.
அதைப்போலவே ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். “அவர் ( ஈஸா நம்முடைய ) அடியாரே அன்றி வேறில்லை ; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (ஸூரத்துஜ் ஜூக்ருஃப், வசனம் – 59.)
இப்படியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் வந்த நபிமார்கள் யாவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாரிடமோ, அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தாரிடமோ மட்டுமே நபியாக அனுப்பப் பட்டார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டமே மனிதகுலம் முழுவதற்கும் நபியாகவும், றஸூலாகவும் அனுப்பப்பட்டார்கள். இது, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வழங்கியுள்ள சிறப்பாகும்.
மேலும், இதுகுறித்து மஆரிபுல் குர்ஆனில், ஸூரத்துஸ் ஸபா, வசனம் – 28 க்கான விரிவுரையில் கீழ்கண்டவாறு எழுதப் பட்டுள்ளது:
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட நபிமார்கள் யாவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் உள்ளவர்களுக்கோ மட்டும்தான் நபியாக அனுப்பப் பட்டார்கள். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதகுலம் முழுவதற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். மனிதகுலத்திற்கு மட்டுமின்றி, ஜின் வர்க்கத்தாருக்கும் கூட நபியாக அனுப்பப்பட்டார்கள். அரபு நாட்டிற்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். தாம் வாழ்ந்த காலத்திற்கு மட்டுமின்றி கியாமத்து நாள் வரைக்குமான நபியாகவும் அனுப்பப்பட்டார்கள். ஏனெனில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே இறுதி நபியாகவும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 293. )
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதகுலம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டது பற்றி ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளது. “நபிகள் (இதற்கு முன்) தங்கள் சமூகத்தாருக்கு மட்டிலுமே அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் அனைவருக்கும் ( மனித வர்க்கம் முழுவதற்கும் பொது நபியாக ) நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஹளரத் ஜாபிர் இப்னு அப்தில்லாஹி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் புகாரீ ஷரீபில் இடம்பெற்றுள்ளது.
இப்படியாக, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை மனிதகுலம் முழுமைக்கும் நபியாக அனுப்பி சிறப்பித்திருக்கிறான்.

5.ஐந்து பேறுகள்
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் விசேஷமாக ஐந்து பேறுகளை வழங்கி சிறப்பித்திருக்கிறான். இந்த ஐந்து பேறுகளை அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வேறு எவருக்குமே வழங்கவில்லை!
(1) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்லம் அவர்களின் திருப்பெயரை கேட்டே மக்கள் பணிந்தனர். இதன் காரணமாக போர் செய்யவேண்டிய அவசியமில்லாமலேயே ஒரு மாத வழி தூரமுள்ள நாடுகள் பணிந்தன. இந்த பேறு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வழங்கி யிருக்கிறான்.
(2) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட நபிமார்கள் மஸ்ஜிதில் மட்டுமே தொழ அனுமதிக்கப் பட்டனர். இதனால் மஸ்ஜிது அல்லாத வேறு இடங்களில் தொழ அவர்களால் முடியாதிருந்தது. ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த பூமி முழுவதும் ஸூஜூது செய்யும் இடமாக அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால், அண்ணல் நபி ஸ்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர் மஸ்ஜிதுகளிலும் தொழுது கொள்ளலாம். மஸ்ஜிது இல்லாத இடங்களில் தாம் இருக்கும் இடத்திலேயே தொழுது கொள்ளலாம். இவ்விதமாக பூமியின் எப்பகுதியிலும் தொழுது கொள்ள இந்த உம்மத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூமி முழுவதும் ஸூஜூது செய்யும் இடமாக ஆக்கி அருளப்பட்டுள்ள இந்த பேறும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
(3) போர்க்களத்தில் பகைவர்கள் விட்டுச்சென்ற பொருள்களை எடுத்து அனுபவித்துக்கொள்ள முற்காலத்து நபிமார்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, போரில் பகைவர்கள் விட்டுச் செல்லும் பொருட்களை எடுத்து உபயோகித்துக் கொள்ள அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அனுமதித்துள்ளான். இந்த பேறும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.
(4) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஷபாஅத்து ( பரிந்துரை ) செய்யும் பேறும் அளிக்கப்பட்டுளளது. மறுமை நாளில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா மனிதர்களில் முந்தியவர்களையும், பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்று திரட்டுவான். அப்போது மனிதர்களிடம் அவர்களால் தாங்கிக் கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ இயலாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்களில் சிலர் சிலரை நோக்கி, “நீங்கள் இருக்கும் நிலையைக் கவனிக்கவில்லையா? உங்களுக்கு எத்தகைய நிலை நேரந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரைத் தேடிப் பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள். அப்போது மக்கள் நபிமார்களிடம் சென்று, தமக்கு நேர்ந்திருக்கும் துன்ப நிலையை அகற்ற அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவிடம் பரிந்துரை செய்யும்படியாக முறையிடுவார்கள். முதலில் ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும், பிறகு ஹளரத் நூஹூ, ஹளரத் இப்ராஹீம், ஹளரத் மூஸா, ஹளரத் ஈஸா அலைஹிமுஸ் ஸலாத்து வஸ்ஸலாம் ஆகிய எல்லா நபிமார்களிடமும் முறையிடுவார்கள். ஆனால், அந்நாளில் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவிடம் பரிந்துரை செய்ய எந்த நபிமாரும் முன்வரமாட்டார்கள். அச்சமயம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே, மனிதவர்க்கத்தாருக்காக அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவிடம் ஷபாஅத்து (பரிந்துரை) செய்யும் பேறு பெற்றிருப்பார்கள். அவ்வேளை, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவிடம், மனிதவர்க்கத்தாருக்காக பரிந்துரை செய்வார்கள். அந்த பரிந்துரையின் பயனாக மனிதவர்க்கம் முழுவதும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த கஷ்டத்திலிருந்து மீட்சி பெறுவார்கள். இந்த பேறு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே உரியதாகும்.
(5) அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை மனிதகுலம் முழுமைக்கும் பொது நபியாக ஆக்கி அனுப்பினான். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட நபிமார்கள் யாவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டனர். மனிதகுலம் முழுவதற்கும் பொது நபியாக அனுப்பப்பட்டவர் என்னும் சிறப்பு – பேறு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்றது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் சிறப்பாக அளிக்கப்பட்ட இந்த ஐந்து விசேஷ பேறுகளைப் பற்றிய விவரம், புகாரீ ஷரீபில் உள்ள கீழ்கண்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது:
“எனக்கு ஐந்து காரியங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு முன்னர் ஒருவருக்கும் அவைகள் அளிக்கப்படவில்லை. ஒரு மாதத் தொலைவு தூரம் ( உள்ள பிரதேசம் ) வரை திடுக்கத்தால் (மட்டும் யுத்தமின்றி ) வெற்றியடைந்தேன். எனக்கு பூமி முழுவதம் ஸூஜூது செய்யும் இடமாகவும் சுத்தமானதாகவும் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய உம்மத்தில் ஒருவருக்கு எந்த இடத்தில் தொழுகைக்கு நேரமானாலும் அவர் தொழுதுவிடவேண்டும். எனக்கு பகைவர் விட்டுச் சென்ற பொருள்கள் அனுமதிக் கப்பட்டிருக்கின்றன. எனக்கு முன்னருள்ள ( நபிமார்களில் ) எவருக்கும் அது அனுமதிக்கப்படவில்லை. எனக்கு ஷபாஅத்துச் செய்யும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. நபிமார்கள் (இதற்கு முன்) தங்கள் சமூகத்தாருக்கு மட்டிலுமே அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் அனைவருக்கும் ( மனித வர்க்கம் முழுவதற்கும் பொது நபியாக ) நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.
மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, மற்ற சமூகத்தினரை விட மூன்று விஷயங்களில் மேன்மை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஹதீஸ்: “மற்ற சமூகத்தினரை விட மூன்று விஷயங்களில் நமக்கு மேன்மை அளிக்கப்பட்டுள்ளது. (1) நம் படை அணி வானவர்களின் படை அணியைப் போன்று ஆக்கப்பட்டு விட்டது. (2) பூமி எல்லாம் நமக்குத் தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது. (3) நாம் தண்ணீரை அடையவில்லை என்றால், அதன் மண்ணும் நமக்குத் துப்புரவு அளிக்கும் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹூதைஃபா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம்.

6.இறுதி நபி
இந்த உலகத்தில் இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களும், இறைவனுக்கு இணைவைக்கும் காரியங்களும், பாவகரமான காரியங்களும் பெருகிடும் போது, மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா நபிமார்களை அனுப்பிவைத்தான். இவ்விதம் இந்த உலகத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களின் உண்மையான எண்ணிக்கையை அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவே நன்கு அறிவான். ஆனால், இந்த உலகத்தில் இறுதி நபியாக அனுப்பப்பட்டவர் என்னும் சிறப்பு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே கிடைத்துள்ளது. இதைப்பற்றி திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதாவது:
“முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்க வில்லை ; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி(முத்திரை)யாகவும் இருக்கின்றார் ; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் – 40. )
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா திருக்குர்ஆனின் இந்த வசனத்தில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் இறுதி முத்திரையாக இருக்கின்றார், எனக் கூறியுள்ளான். இதன்மூலம், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் நபித்துவம் முடிந்துவிட்டது, இனி உலகில் எவரும் ‘நபி’ என்ற அந்தஸ்துடன் அனுப்பப்படமாட்டார்கள் என்ற உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளான்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காதமன் நபியீனாக – நபிமார்களின் முத்திரையாக அனுப்பப்பட்டிருப்பது அன்னாரின் பிரத்யேகமான, பூரணத்துவம் பெற்ற, உயர்ந்த ஸ்தானத்தை வெளிப் படுத்துகிறது. ஏனெனில், எந்த ஒரு காரியமும் ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்து, தொடர்ந்து, முடிவை அடைகிறது. காரியத்தின் இறுதி நிலையான ‘முடிவு’ என்பது, எந்த நோக்கத்திற்காக காரியம் ஆரம்பிக்கப்பட்டதோ, அக்காரியம் முழுமை பெற்று, அதன் நோக்கமும் நிறைவேறிவிட்டது என்பதையே காட்டுகிறது. ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 161. )
இந்த உலகில் எந்த நோக்கத்திற்காக நபிமார்கள் அனுப்பப்பட்டார்களோ அந்த நோக்கம் முழுமை பெற்றுவிட்டது என்பதையே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களின் முத்திரையாக அனுப்பப்பட்டிருப்பது காட்டுகிறது. இதற்கு அனுகூலமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதகுலம் முழுவதற்கும் பொது நபியாக அனுப்பப் பட்டிருக்கிறார்கள். கியாமத்து (இறுதி) நாள் வரைக்குமான காலத்திற்கும் நபியாக ஆக்கப் பட்டிருக்கிறார்கள். மேலும், கியாமத்து நாள் வரைக்குமான மக்களுக்கு வழிகாட்டியாக, வேதநூலாக திருக்குர்ஆன் அளிக்கப் பட்டிருக்கிறது. திருக்குர்ஆனை கியாமத்து நாள் வரையிலும் பாதுகாப்பதற்கான பொறுப்பை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவே ஏற்றுக் கொண்டுள்ளான். கியாமத்து நாள் வரைக்கும் நடைமுறைப்படுத்தும் விதமாக ஷரீஅத் வகுத்தளிக்கப் பட்டிருக்கிறது. உலக மக்களுக்கு ‘வாழ்க்கை வழிகாட்டியாக’ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஸூன்னத்தான நடைமுறைகள் அமைந்துள்ளன. இவ்விதமாக, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை இறுதி நபியாக அனுப்பியும், அதற்கு அனுகூலமாக பல்வேறு விஷயங்களை ஏற்படுத்திக் கொடுத்தும் சிறப்பித்திருக்கிறான்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காதமன் நபியீனாக அனுப்பப்பட்டிருப்பது பற்றி பல்வேறு ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில:
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் இரு விரல்களை (அதாவது) நடுவிரலையும், பெருவிரலுக்கு அடுத்துள்ளதையும் ( ஆள்காட்டி விரலையும் ) இணைத்து, நானும் ( நியாயத் தீர்ப்புக்குரிய ) அவ்வேளையும் இவ்வாறு இருக்கும் நிலையில் (நபியாக) அனுப்பப்பட்டேன் என்று கூற நான் பார்த்தேன். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
“நான் உலக முடிவு நாளுக்குரிய அடையாளத்திலேயே அனுப்பப்பட்டுள்ளேன். ஆனால் அதற்கு நான் முந்திக் கொண்டுவிட்டேன். இந்த (கலிமா) விரல் இந்த (நடு) விரலுக்கு முந்தி இருப்பது போல்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி தங்களின் சுட்டு விரலையும் நடு விரலையும் சாடை செய்து காட்டினார்கள். அறிவிப்பவர்: மிஸ்தவ்ரிதுப்னு ஷத்தாதில் கிஹ்ரிய்யி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.
“என்னுடைய நிலையும், (ஏனைய) நபிமார்களின் நிலையும் ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டி ஒரு செங்கல்லுடைய இடத்தைத் தவிர அதனை பூர்த்தி செய்து அதனை அழகாக்கியதையும், மக்கள் அதில் நுழைந்து ஆச்சரியப்பட்டு, இந்தச் செங்கலுடைய இடம் ( மட்டும் குறையாக இருக்கிறதே, இந்தக் குறையும் ) இல்லாமல் இருக்கக்கூடாதா? என்று கூறுவதையும் போலிருக்கிறது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
ஹளரத் அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கூறிய மற்றோர் அறிவிப்பில்: “ஒரு மூலையில் ஒரு செங்கல்லுடைய இடம் காலியாக இருக்கிறதே என்று மக்கள் கூறுவதைப் போலிருக்கிறது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகச் சொல்லிவிட்டு, அதன் முடிவில், “நான் தான் அந்தச் செங்கல், நான் தான் இறுதிநபி” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகவும் சொல்லப் பட்டிருக்கிறது.
“அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக்குக்குப் புறப்பட்டார்கள். அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ ) அவர்களை பிரதிநிதியாக நியமித்தார்கள். ‘பையன்களிடமும், பெண்களிடமும் என்னைப் பிரதிநிதி யாக்குகிறீர்களா?’ என்று அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் வினவினார்கள். அதற்கு, “மூஸாவுக்கு ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடத்தில் நீர் இருக்க விரும்பமாட்டீரா? என்றாலும், எனக்குப் பின்னர் (வேறு ) நபியே இல்லை” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
இந்த ஹதீஸ்கள் மூலமாகவும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே இறுதி நபியாக அனுப்பப் பட்டிருக்கிறார்கள் என்னும் உண்மையை அறியலாம். மேலும், ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் இவ்வுலகில் வரக்கூடியவராக இருக்கிறார்கள். அவ்விதம் அன்னார் மீண்டும் இவ்வுலகில் வரும்போது ஒரு நபியாக வரமாட்டார்கள். ஒரு சாமான்யராகவே வருவார்கள். எனவே, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே நபிமார்களின் முத்திரையாக – நபிமார்களில் இறுதிநபியாக இருக்கிறார்கள். அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா இந்த சிறப்பையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே வழங்கியிருக்கிறான்.

7.உயிர்களைவிட மேலானவர்
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா திருக்குர்ஆனிலே, “இந்த நபிதான் முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்” என்று, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கூறியுள்ளான். திருக்குர்ஆனில் இந்த வசனம், ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் – 6 ல் உள்ளது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களை விட மேலானவர்களாக இருப்பதற்கான காரணத்தை மேற்படி வசனத்தின் விரிவுரையில் இவ்விதம் எழுதப்பட்டுள்ளது:
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமின்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். இதன்மூலம் முஃமின்களுக்கு இலாபத்தையும், நன்மைகளையும் கொடுப்பதில் அவர்களுடைய ஆத்மாவை விட மிக உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். காரணம், மனிதனுடைய ஆத்மா சில நேரங்களில் இலாபத்தையும், சில நேரங்களில் நஷ்டத்தையும் கொடுப்பதாகவே உள்ளது. அதாவது, மனிதனின் ஆத்மா நன்மையின் பக்கம் இருந்து, நன்மையான காரியங்களைச் செய்தால், அது மனிதனுக்கு இலாபமாக அமைகிறது! மனிதனின் ஆத்மா தீமையின் பக்கம் அமைந்து, தீய காரியங்களைச் செய்யுமேயானால், அது மனிதனுக்கு கேடாக அமைகிறது. இதற்கு மாறாக, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலும், போதனைகளும் மனிதனுக்கு இலாபத்திற்கு மேல் இலாபத்தை மட்டும் கொடுக்கக்கூடியதாகவும், நன்மைகளுக்கு மேல் நன்மைகளை மட்டும் கொடுப்பதாகவுமே உள்ளன. மேலும், மனிதனுடைய ஆத்மா நன்மையின் பக்கமாக இருந்து, நன்மையான காரியங்களை செய்து, இலாபத்தையும், நன்மைகளையும் அடைவதாக இருந்தாலும் அது, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலாலும், போதனைகளாலும் கிடைக்கக்கூடிய இலாபத்திற்கும் நன்மைகளுக்கும் ஈடாகாது! ஏனெனில், மனிதனுடைய ஆத்மா நன்மையான, தீமையான காரியங்களின்பால் தவறான நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் கொள்ளக்கூடும்! அவற்றை செயல்படுத்தவும்கூடும்! காரணம், மனிதனுக்கு நன்மை, தீமை பற்றி முழுமையான அறிவு இல்லை. இதற்குமாறாக, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல்களில், போதனைகளில் இலாபமும் நன்மையும் தவிர வேறு கெடுதி எதுவுமே இல்லை! இதனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமின்களுக்கு இலாபத்தையும், நன்மையையும் கொடுப்பதில் அவ்களுடைய ஆத்மாக்களைவிட உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். ஆகையினால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை முஃமின்கள் யாவரும் தங்களுடைய உயிர்களைவிட மேலானவர்களாக கொள்வது கடமையாகிறது.
அந்த கடமையை, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாக பின்பற்றி வாழ்வதன் மூலம் நிறைவேற்ற வேண்டும். அன்னாருக்கு கீழ்படிவதன் மூலம் நிறைவேற்ற வேண்டும். அன்னாரை கண்ணியப் படுத்துவதன் மூலம் நிறைவேற்ற வேண்டும். ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 85. )
( நபியே ) நீர் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களாயின், என்னைப் பின்பற்றுங்கள் ; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மிகக் கிருபையுடையவனுமாக இருக்கிறான். ( ஸூரத்துல் ஆல இம்ரான், வசனம் – 31. )
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் ; (ஸூரத்துல் அன்பால், வசனம் – 20.) இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள் ; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள் ; (ஸூரத்துல் மாயிதா, வசனம் – 92. )
ஆகவே எவர்கள் அவர்மீது ஈமான் கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவிசெய்து, அவருடன் இறக்கி வைக்கப்பட்ட அந்த( வேத ) ஒளியை பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (ஹூரத்துல் அஃராஃப், வசனம் – 157.) இவ்விதம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுவது பற்றியும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கீழ்ப்படிவது பற்றியும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணிப்படுத்துவது பற்றியும் பல்வேறு வசனங்கள் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. எனவே. அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாக பின்பற்றுவதும், அன்னாருக்கு முழுமையாக கீழ்ப்படிவதும், அன்னாரை யாவரையும்விட உயர்வாகக் கொண்டு கண்ணியப் படுத்துவதும் முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமையாகும்.
‘ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்தான் முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவர்களாக இருக்கின்றார்கள்’, என்பதை கீழ்காணும் ஹதீஸ் மூலமாகவும் அறியலாம்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் நாங்கள் இருந்து கொண்டிருந்தோம். அப்பொழுது அவர்கள் உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களுடைய கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, “இறைத்தூதர் அவர்களே! எல்லாவற்றையும்விட தாங்கள் எனக்கு அதிகப் பிரியமானவர்கள். ஆனால், என் உயிரைத் தவிர” என்று உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் கூறினார்கள். அதற்கு “இல்லை, எவன் கரத்தில் என் ஆன்மா இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக(க் கூறுகிறேன்). உம்முடைய உயிரைவிட உமக்கு நான் அதிக பிரியமாக ஆகும்வரை” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உடனே, “நிச்சயமாக இப்பொழுது, அல்லாஹ்வின் மீது சத்தியமாக(க் கூறுகிறேன்). என் உயிரைவிட தாங்கள் எனக்கு அதிகப் பிரியமானவர்களாக இருக்கிறீர்கள்” என்று உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “உமரே! இப்பொழுதுதான் (நீர் பரிபூரணமான விசுவாசத்தை அடைந்தீர்)” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
மேலும், ஒரு முஸ்லிமானவர் தம் தந்தையைவிடவும், தனயனைவிடவும், உலக மக்கள் யாவரைவிடவும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையே அதிகப் பிரியமானவர்களாகக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அவர் முழுமையான ஈமான் ( விசுவாசம் ) கொண்டவராவார். இதுகுறித்தும் ஹதீஸ்கள் உள்ளன.
“யார் கரத்தில் என் உயிர் இருக்கிறதோ அவர் மீது ஆணையாகக் கூறுகிறேன். உங்களுடைய ததந்தையையும், தனயனையும் விட அதிகப் பிரியமானவராக நான் உங்களுக்கு ஆகாதவரை உங்களில் எவரும் ( முழுமையான ) விசுவாசங் கொண்டவராக ஆகமாட்டார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
“ஒருவருக்குத் தம் குடும்பத்தார், தமது செல்வம், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் பிரியமானவனாக ஆகாதவரை எந்த அடியாரும், அல்லது எந்த மனிதரும் இறைநம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம்.
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே இவ்வுலகிலும், மறுவுலகிலும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். “ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்றவர்களைவிட நானே இவ்வுலகிலும் மறுவுலகிலும் மிகவும் முக்கியமானவன். இதற்கு ஆதாரம் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ‘இந்த நபிதான் முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்….’ என்ற அத்தியாயம் 33 ல், 6 வது வசனத்தை ஓதுங்கள். எனினும் எந்த முஸ்லிமாவது பொருள்களை விட்டு இறந்தால், அவர்களின் வாரிசுகளே அவற்றை அடையட்டும். ஆனால் எந்த முஸ்லிமாவது கடனையோ அல்லது மனைவி மக்களையோ விட்டு இறப்பின் அவர்கள் என்னிடமே வரவேண்டியது. ஏனெனில் அவர்களுக்கு நானே மிகவும் முக்கியமானவன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம்.
இப்படியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை, முஃமின்களுடைய உயிர்களைவிடவும் மேலானவர்களாக ஆக்கி, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா சிறப்பித்திருக்கிறான்.

8.நபிமார்களுக்கு இமாம்
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா ஹளரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸாம் அவர்களை மக்களுக்கு இமாமாக (தலைவராக) ஆக்கி சிறப்பித்திருக்கிறான். இதுகுறித்து திருக்குர்ஆனில், ‘இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான் ; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார் ; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான் ; (ஸூரத்துல் பகரா, வசனம் – 124.) எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கு இமாமாக – இமாமுல் அன்பியாவாக இருக்கிறார்கள்.
புனித மிஃராஜ் இரவில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து) பைத்துல் முகத்தஸிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றான். இதுகுறித்த விவரம் திருக்குர்ஆனில், ஸூரத்து பனீ இஸ்ராயீல், வசனம் – 1 ல் இவ்விதம் கூறப்பட்டுள்ளது. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன் ; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ் விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான் ; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம் ; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) ; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் ; பார்ப்போனாகவும் இருக்கின்றான். இவ்விதமாக, புனித மிஃராஜ் இரவில், மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றி வைத்தார்கள். இதுகுறித்த விவரங்கள் புனித மிஃராஜ் பற்றிய அறிவிப்புகளிலும், விரிவுரைகளிலும் கூறப்பட்டுள்ளன.
சில அறிவிப்புகளில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பைத்துல் முகத்தஸிலிருந்து விண்வெளிப் பயணத்தைத் தொடங்கும் முன், அங்கு குழுமியிருந்த நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றி வைத்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. சில அறிவிப்புகளில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி ஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் பைத்துல் முகத்தஸ் திரும்பிய பிறகு நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றி வைத்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
“நான் (கஃபாவில்) ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் இருந்தேன்” எனத் தொடங்கும் 278 ஆவது ஹதீஸின் இறுதிப் பகுதியில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது: “(பைத்துல் முகத்தஸில்) இறைத் தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர். அங்கு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் (யமனியர்களான) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று (உயரமாக) திரண்ட உடல் உள்ள மனிதராக இருந்தார்கள். அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களிலேயே ( என் தோழர் ) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களுக்கு மிக நெருக்கமான சாயல் உடையவர் உங்கள் தோழர் (நான் ) தான். அப்பொழுது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே, இறைத்தூதர்களுக்கு நான் தலைமைத் தாங்கித் தொழுகை நடத்தினேன். தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், “முஹம்மதே! இதோ இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக். அவருக்கு ஸலாம் சொல்லுங்கள்!” என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பியபோது அவர் முந்திக்கொண்டு எனக்கு ஸலாம் சொல்லிவிட்டார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம்.
இந்த ஹதீஸில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றிவைத்த விவரம் கூறப்பட்டுள்ளது. மேலும், இமாம் இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸூரத்து பனீ இஸ்ராயீல், வசனம் – 1 க்கான விரிவுரைக்குப் பிறகு இவ்விதம் கூறியுள்ளார்கள்: ‘அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பைத்துல் முகத்தஸில் வந்து இறங்கினார்கள். அன்னாரை வழியனுப்பி வைக்கும் முகமாக, வானங்களில் சந்தித்த நபிமார்களும் அன்னாருடன் பைத்துல் முகத்தஸ் வந்தார்கள். அச்சமயம் ஒரு தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது. நபிமார்கள் அனைவரும் தொழுகைக்கு வரிசையாக நிற்க, ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சைகை மூலமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றும்படி கூறினார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றிவைத்தனர். இந்த நிகழ்வின் மூலம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மற்ற அனைவர் மீதும் இருந்த மேம்பாடு வெளிப்படுத்தப்பட்டது. ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 5, பக்கம் – 440. )
மற்றொரு அறிவிப்பில் ஹளரத் அபூஸயீது ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கீழ்கண்டபடி கூறியுள்ளார்கள்:
அண்ணல் நபி ஸ்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புனித கஃபாவிலிருந்து அக்ஸா பள்ளிவாசலுக்கு அழைத்து வந்தார்கள். அங்கு இருவரும் இரண்டு ரக்அத்து தொழுதார்கள். அச்சமயம் அங்கு நபிமார்கள் பலரும் தனித்தனியாக தொழுதுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் ருகூஉவிலும், சிலர் ஸூஜூதுவிலுமாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தொழுது முடித்த பிறகு ஒருவர் பாங்கு கூறினார். நபிமார்கள் அனைவரும் தொழுகைக்கு அணிவகுத்து நின்று, தொழுகையை முன்னின்று நிறைவேற்றி வைக்கும் இமாமை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்கரத்தைப் பிடித்து, அன்னாரை இமாமாக முன்னிருத்தினார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றி வைத்தார்கள். ( பைஹக்கீ ).
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இமாமாக இருந்த இந்த தொழுகையில் ஹளரத் மூஸா, ஹளரத் இப்ராஹீம், ஹளரத் ஈஸா அலைஹிமுஸ்ஸலாம் ஆகியவர்களும் முக்ததீகளாக இருந்தனர்! இப்படி நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றி வைத்த பெருமையும், சிறப்பும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இமாமுல் அன்பியா’ என போற்றப்படுகிறார்கள்.

9.ஸலவாத்து
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, தன்னுடைய ஹபீபான அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து என்னும் புகழ்மொழியைக் கூறும்படியாக முஃமின்களுக்கு கட்டளையிட்டு சிறப்பித் திருக்கிறான். இதுகுறித்து திருக்குர்ஆனில் கட்டளையும் பிறப்பித்திருக்கிறான்.
நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ‘ஸலவாத்து’ ( புகழ்மொழி ) கூறுகிறார்கள். எனவே, முஃமின்களே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துக் கூறி, அவர்மீது ஸலாமும் கூறுங்கள். ( ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் – 56. )
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, திருக்குர்ஆனின் மூலமாக பல்வேறு கட்டளைகளை முஸ்லிம் பெருமக்களுக்கு பிறப்பித்திருக்கிறான். தொழுகையைக் கடைபிடிக்கும்படி, ஜகாத்தை கொடுத்து வரும்படி, நோன்பு நோற்கும்படி, ஹஜ்ஜை பூர்த்தி செய்யும்படி, இப்படி பல்வேறு கடமைகளைப் பற்றி கட்டளைகளை பிறப்பித் திருக்கிறான். ‘தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ;’ என்று தொழுகையைப் பற்றியும், ஜகாத்தைப் பற்றியும் கட்டளையிட்டிருக்கிறான். ‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப் பட்டுள்ளது ;’ என்று நோன்பு பற்றி கட்டளையிட்டிருக்கிறான். ‘ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று ஹஜ்ஜைப் பற்றி கட்டளையிட்டிருக்கிறான்.
இந்த கடமைகளை எல்லாம் நிறைவேற்றும்படியாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா நேரிடையாகவே கட்டளை யிட்டிருக்கிறான். ஆனால், ஸலவாத்து கூறும்படி கட்டளையிடும்போது, ‘நபி மீது ஸலவாத்து கூறுங்கள்’ என்று நேரிடையாக கூறாமல், ‘அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்து கூறுகிறார்கள்’ என்று முதன்மைப் படுத்திக் கூறிவிட்டு, பிறகே ‘முஃமின்களே! நீங்களும் நபியின் மீது ஸலவாத்தையும், ஸலாமையும் கூறுங்கள்’ என கட்டளையிட்டிருக்கிறான். இதன் மூலம் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா தன் ஹபீபுடைய சிறப்பையும், ஸலவாத்துடைய சிறப்பையும் வெளிப்படுத்தியுள்ளான்.
மேற்படி வசனத்தின் சிறப்பு பற்றியும், ஸலவாத்தின் சிறப்பு பற்றியும் திருக்குர்ஆன் விரிவுரையில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது: “இந்த வசனத்தின் அசல் நோக்கம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்தும் ஸலாமும் ஓதும்படி முஃமின்களுக்கு உத்தரவிடுவதேயாகும். ஆனால், இதன் சிறப்பை மேலும் விளக்கும் வகையில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவும், வானவர்களும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து கூறுவதாக முதன்மைப் படுத்திக் கூறிய பிறகு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் பேரில் ஸலவாத்தும் ஸலாமும் கூறும்படியாக முஃமின்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவும் வானவர்களும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து கூறுவதாக கூறப்பட்டிருப்பது, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய உயர்ந்த ஸ்தானத்தையும், கீர்த்தியையும் வெளிப்படுத்துகிறது. மேலும், ஸலவாத்து ஓதும் முஃமினுக்கும் ஓர் உயர்ந்த ஸ்தானத்தை வழங்குகிறது. அதாவது, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா புரிகின்ற ஒரு செயலை, வானவர்கள் புரிகின்ற ஒரு செயலை அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகின்ற பாக்கியத்தை முஃமின்களுக்கு வழங்குகின்றது! எனவே, இந்த பாக்கியத்தை போற்றும் விதமாகவும், நன்றி செலுத்தும் விதமாகவும் முஃமின்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் அதிகம் அதிகமாக ஸலவாத்தையும், ஸலாமையும் கூறிடவேண்டும். மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டே இஸ்லாமிய மார்க்கம் முஃமின்களுக்கு கிடைத்துள்ளது. இந்த உபகாரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாகவும் முஃமின்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் அதிகம் அதிகமாக ஸலவாத்தையும் ஸலாமையும் கூறிடவேண்டும்”.
ஸலவாத்து என்னும் அரபி சொல்லுக்கு ரஹ்மத்து (கிருபை), துஆ (பிரார்த்தனை), தோத்திரம் போன்ற பொருள்கள் கூறப்பட்டுள்ளன. மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவின் புறத்திலிருந்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து கூறப்பட்டிருப்பது, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் கிருபை செய்வது என்பதாகவும், வானவர்கள் புறத்திலிருந்து ஸலவாத்து சொல்வது என்பதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் பிரார்த்தனை செய்வது என்பதாகவும், முஃமின்கள் புறத்திலிருந்து ஸலவாத்து சொல்வது என்பதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் தோத்திரம் என்னும் புகழ்மொழி கூறுவது என்பதாகவும் விரிவுரையாளர்கள் பொருள் கூறியுள்ளனர். (மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 221.)
சரி, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஓதுவது எப்படி? இதை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
‘”இறைத்தூதர் அவர்களே, தங்களுக்கு ஸலாம் சொல்வதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஸலவாத்து எப்படி(ச் சொல்வது?)” என்று வினவப்பட்டது. “அல்லாஹூம்ம ஸல்லி அலாமுஹம்மதின்(வ்) வஅலாஆலி முஹம்மதின் கமாஸல்லைத அலாஇப்ராஹீம வஅலாஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத். அல்லாஹூம்ம பாரிக் அலாமுஹம்மதின்(வ்) வஅலாஆலி முஹம்மதின் கமாபாரக்த அலாஇப்ராஹீம வஅலாஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத் (நாயனே! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்மீதும், இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ அருள் செய்தது போல், முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ அருள்புரிவாயாக. நிச்சயமாக நீ புகழ் பெறுவதற்கு உரியவனும் மாண்பு மிக்கவனும் ஆவாய். நாயனே! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் (விருத்தி) செய்தது போல் முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுடைய குடும்பத்தார் மீதும் பரக்கத் செய்வாயாக. நிச்சயமாக நீ புகழ் பெறுவதற்கு உரியவனும் மாண்பு மிக்கவனும் ஆவாய்.) என்று கூறுங்கள்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஅப் இப்னு உஜ்ரத்த ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ.
தறூதே இப்ராஹீம் என்னும் இந்த ஸலவாத்தைப் போலவே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஓதும் ஸலவாத்துக்கள் இன்னும் மிகுதியாக உள்ளன. அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஓதவேண்டியதன் அவசியம் குறித்தும், ஸலவாத்து ஓதுவதால் கிடைக்கும் இம்மை மறுமை பேறுகள் பற்றியும் பல்வேறு ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.
“மறுமையில் எனக்கு மிகவும் அருகில் இருப்போர் எவரெனில், என் மீது எவர் அதிகமாக ஸலவாத்து கூறுகிறாரோ அவர்தாம்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.
“எவர் என் மீது ஒரு முறை ஸலவாத்துக் கூறுகிறாரோ, அவரை அல்லாஹ் பத்து முறை வாழ்த்தி விட்டு, அவரை விட்டும் பத்து பாவங்களை அழித்து, அவருக்குப் பத்து பதவிகளையும் உயர்த்துகிறான்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: நஸாயீ.
ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (வெளியில்) வந்தார்கள். அப்பொழுது அவர்களின் திருமுகம் மலர்ந்திருந்தது. அப்பொழுது நாங்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி, ” (இறைத்தூதரே!) நிச்சயமாக, நாங்கள் தங்களின் முகத்தில் சந்தோஷத்தின் அறிகுறியைப் பார்க்கின்றோம். (அதற்கான காரணம் என்ன?)” என்று கேட்டோம். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “நிச்சயமாக இப்பொழுது ஒரு வானவர் என்னிடம் வந்து, ‘முஹ்மதே! எவர் உங்கள் மீது ஒரு முறை ஸலவாத்துக் கூறுகிறாரோ, அவர் மீது தாம் பத்து முறை வாழ்த்துவதாகவும், தவிர, எவர் தங்கள் மீதுஒரு முறை ஸலாம் கூறுகிறாரோ அவர் மீது தாம் பத்து முறை ஸலாம் (சாந்தி) கூறுவதாகவும் நிச்சயமாக தங்களின் இறைவன் கூறுவது தங்களை மகிழ்விக்கவில்லையா?’ என்று கூறிச் சென்றார்” என்றார்கள். அறிவிப்பவர்: அபூதல்ஹா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: நஸாயீ.
ஸலவாத்து ஓதுபவருக்கு இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கக்கூடிய பேறுகள் பற்றி மஆரிபுல் குர்ஆனில் கூறப்பட்டிருப்பதாவது: (1) ஸலவாத்து ஓதுபவர் செய்த பிழைகளுக்கு அது கஃப்பாராவாக (தவறுக்குரிய பரிகாரம்) அமையும். (2) செய்யும் கிரியைகளை பரிசுத்தமாக்கும். (3) அந்தஸ்துகளை உயர்த்தும். (4) பாவங்கள் மன்னிக்கப்படும். (5) அடிமைகளை விடுதலை செய்வதைக் காட்டிலும் அதிகமான புண்ணியத்தைக் கொடுத்து, அதன் காரணமாக ஆபத்துகளை நீக்கும். (6) பொருளில் செழுமையும், அபிவிருத்தியும் கிடைக்கும். (7) வறுமையையும், இறுக்கமான ஜீவனாம்சத்தையும் போக்கும். (8) அமல்களில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவிற்கு மிகவும் பிடித்தமான அமலாக இருக்கும். (9) சபைகளுக்கு அலங்காரமாக அமையும். (10) விரோதிகளை அடக்கி ஆளும் திறமையை பெறுவதற்கான வழியாக இருக்கும். (11) உள்ளங்களை கபடம் போன்றவற்றை விட்டும் சுத்தப்படுத்தும். (12) மக்களின் உள்ளங்களில் பிரியத்தை ஏற்படுத்தும். (13) கனவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருத்தரிசனம் கிடைக்கச் செய்யும். (14) மரணத்திற்கு முன்பாகவே சுவனத்தில் தம்முடைய இருப்பிடத்தைக் காணும் பாக்கியத்தைக் கொடுக்கும். (15) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஷஃபாஅத்து (பரிந்துரை) ஸலவாத்து ஓதுபவர் மீது வாஜிபு ஆக்கும். (16) அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவின் உவப்பும், கிருபையும் கிடைக்கும். (17) கியாமத்து நாளின் கடுமையான தாகத்திலிருந்து சாந்தியைக் கொடுக்கும். (18) ஸிராத்து பாலத்தை நிதானமாகக் கடந்திட உதவிடும். (19) ஜஹன்னம் என்னும் நரக நெருப்பை விட்டும் விடுதலையைக் கொடுக்கும். (20) கவ்ஸர் என்னும் தடாகத்தில் பிரவேசிக்கும் பாக்கியத்தைக் கொடுக்கும். (21) சுவனத்தில் மிக அதிகமான மனைவியரை அடையும் பாக்கியம் கிடைக்கும். (22) கியாமத்து நாளில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய பாக்கியத்தைக் கொடுக்கும். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஓதுபவர்களுக்கு இது போன்று பற்பல பேறுகள் இன்னும் இன்னும் கிடைக்கும்.
மேலும், கஅபாவின் திசையை முன்னோக்கி, அல்லாஹ்விற்காக தொழும் தொழுகையிலும் கூட அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஓதப்படுகிறது. தொழுகையின் காஃதா இருப்பில் ஸலவாத்து ஓதுவது ஸூன்னத்து முஅக்கதா என மார்க்க அறிஞர்கள் பலரும் ஏகோபித்து கூறியுள்ளனர். ஆயினும், இமாம் ஷாபிஈ, மற்றும் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ஆகியோர் தொழுகையின் இருப்பில் ஸலவாத்து ஓதுவது வாஜிபு என்பதாகக் கூறியுள்ளனர். எனவே தொழுகையிலும் ஸலவாத்து சிறப்புடன் ஓதப்படுகிறது.
ஸலவாத்தை அதிகம் அதிகமாக ஓதும்படியாகவும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். “இரவில் இரண்டு பாகம் கழிந்த பின் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (தஹஜ்ஜத்) தொழ எழுந்துவிடுவது வழக்கமாக இருந்து வந்தது. அப்பொழுது அவர்கள், ‘மக்களே! அல்லாஹ்வைத் திக்ரு (தியானம்) செய்யுங்கள். அல்லாஹ்வைத் திக்ரு செய்யுங்கள். (முந்திய எக்காளம் ஊதப்படின்) நில அசைவு ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து (பல) நில அசைவுகள் ஏற்படும். அதில் எல்லோரும் இறந்துவிடுவார்கள்’ என்று கூறினார்கள். (அப்பொழுது) நான், “இறைத் தூதரே! நிச்சயமாக, நான் தங்கள் மீது அதிகமாக ஸலவாத்து ஓதிவருகிறேன். எனவே என்னுடைய இறைஞ்சுதலில் எத்தனை பாகம் தங்களுக்கென ஒதுக்கி ஓதிவரவேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “நீர் விரும்பிய அளவு” என்று பதிலளித்தார்கள். அப்பொழுது நான், “கால் பாகம்?” என்றேன். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “நீர் விரும்பிய அளவு (ஓதிவாரும்.) ஆயினும், நீர் அதிகமாக ஒதுக்கி(ஓதி வருவீரா)னால் அதனால் உமக்கு நன்மையேயாம்” என்று கூறினார்கள். “பாதி அளவு?” என்றேன் நான். (அதற்கு) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “நீர் விரும்பிய அளவு. ஆயினும், நீர் அதிகமாக ஒதுக்கி(ஓதி வருவீரா)னால் அதனால் உமக்கு நன்மையேயாம்” என்றார்கள். “மூன்றில் ஒரு பாகம்?” என்றேன் நான். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “நீர் விரும்பிய அளவு. ஆயினும், நீர் இன்னும் அதிமாக ஒதுக்கி(ஓதி வருவீரா)னால் அதனால் உமக்கு மேன்மையேயாம்” என்றார்கள். “(அவ்விதமாயின்) என்னுடைய இறைஞ்சுதல் அனைத்தையும் தங்களுக்கே (ஸலவாத்து) ஓதி விடுகிறேன்” என்று கூறினேன். “அவ்விதமாயின் உம்முடைய முயற்சிக்குப் போதுமான பயன் கிடைக்கும். உம்முடைய பாவமும் மன்னிக்கப்பட்டுவிடும்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக எனது தந்தையார் சொன்னார்கள். அறிவிப்பவர்: உபையுப்னு கஃபு ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.
மேலும், ஒவ்வொரு துஆவுக்கு முன்னும் பின்னும் ஸலவாத்து ஓத வேண்டும் என்றும், அவ்விதம் துஆவுக்கு முன்னும் பின்னும் ஸலவாத்து ஓதாத போது துஆக்கள் வவானத்திற்கும் பூமிக்கும் இடையில் நின்றுவிடும் என்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். ஹஜ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நான் தொழுது கொண்டிருந்தேன். அப்பொழுது அபூபக்கர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களும், உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் இருந்தனர். தொழுது முடித்தபின் நான் அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டு என்னுடைய துஆவை துவங்கி, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பேரில் ஸலவாத்து ஓதிய பிறகு என்னுடைய ஆன்ம நலத்திற்காக துஆ செய்தேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “நீங்கள் கேளுங்கள், கொடுக்கப் பெறுவீர்கள். நீங்கள் கேளுங்கள், கொடுக்கப் பெறுவீர்கள்” என்று திருவாய் மலர்ந்து அருளினார்கள். ( நூல் : திர்மிதீ. )
ஹஜ்ரத் உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “என் மீது ஸலவாத்துக் கூறாதவரை துஆக்கள் மேலே செல்லாது, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நின்று விடும். எனவே, உங்களின் துஆக்களுக்கு முன்னும், மத்தியிலும், இறுதியிலும் என் மீது ஸலவாத்துக் கூறுங்கள்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ. )
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்துகள் கூறும் ஸலவாத்துக்களை வானவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் சேரப்பிக்கின்றனர். இது குறித்து ஹஜ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் அறிவித்திருப்பதாவது: “இந்த உலகத்தில் இரவு பகலாகச் சுற்றித் திரியும் அல்லாஹ்வுடைய வானவர்கள் இருக்கிறார்கள். என்னுடைய உம்மத்துகள் கூறும் ஸலவாத்துக்களை அவர்கள் என்னிடம் சேர்ப்பிக்கின்றனர்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( நூல்: நஸாயீ. )
இன்னும், புனிதம் மிக்கதும் கண்ணியத்திற்கு உரியதுமான அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப் பெயரை வாயால் உச்சரித்தாலோ, காதால் செவியுற்றாலோ உடனே ஸலவாத்து ஓதவேண்டியது முஸ்லிம்கள் மீது வாஜிபு ஆகும் என இமாம்கள் இசைவுடன் கூறியுள்ளார்கள்.ஏனெனில், “எவருக்கு முன்னால் என்னைப் பற்றி குறிப்பிடப்பட்டும், அவர் என் மீது ஸலவாத்துக் கூறவில்லையானால், அவரே உண்மையில் கஞ்சனாவார்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த ஹதீஸை ஹஜ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இன்னொரு ஹதீஸில், “எவருக்கு முன்னால் என் பெயர் கூறப்பட்டு, அவர் என் மீது ஸலவாத்துக் கூறவில்லையோ அவருடைய மூக்கை மண் அரிக்கட்டும்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் திர்மிதியில் இடம்பெற்றுள்ளன. மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப் பெயரை எழுதும்போதும் அன்னாரின் திருப்பெயரோடு ஸலவாத்தையும், ஸலாமையும் எழுத வேண்டியதும் வாஜிபு ஆகும்.
இப்படியாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஓதும் ஸலவாத்தை சிறப்பித்திருக்கிறான். மேலும், ஸலவாத்து ஓதுபவர்களுக்கு இம்மை மறுமை பேறுகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான்.

10.இறை தரிசனம்
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவை தமது திருக் கண்களால் தரிசித்திருக்கிறார்கள். இந்த சிறப்பும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே கிடைத்துள்ளது.
ஹஜ்ரத் மூஸா அலைஹிஸ்ஸாம் அவர்கள் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவை தரிசிக்க விரும்பினார்கள். ஆனால், அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவின் தரிசனம் அன்னாருக்கு கிடைக்கவில்லை. ஆயினும், அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா மூஸா அலைஹிஸ்ஸாம் அவர்களுடன் பேசினான். எனவே, ‘அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவுடன் பேசியவர்’ என்னும் சிறப்பு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து திருக்குர்ஆனில், அத்தியாயம் – 7, ஸூரத்துல் அஃராஃப், வசனம் – 143, 144 ல் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
(143) நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான் ; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும் ; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!” என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான் ; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன் ; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மை யானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
(144) அதற்கு அவன், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவர்களாக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளோம் – ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும் ; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான்.
இவ்விதமாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா தனது உரையாடலை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அளித்து சிறப்பித் திருக்கிறான். தன்னுடைய தரிசனத்தையோ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே அளித்து சிறப்பித் திருக்கிறான். இது குறித்த விவரம் ஹதீஸ்களில் உள்ளது.
“அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறைவனை தரிசித்திருக்கிறார்கள் என்று நான் கூறினேன். அதற்கு இக்ரமா அவர்கள், ‘எவருடைய பார்வையும் அவனை அடையாது……’ என்று 6 ;103 ஆவது வசனத்தில் இறைவன் கூறவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு நான், “உம்முடைய கை சேதமே! இது இறைவன் தன்னுடைய பேரொளியுடன் தோற்றம் வழங்கும் போதுதான். நிச்சயமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தரிசித்திருக்கிறார்கள்” என்று கூறினேன். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.
திர்மிதீயில் இடம்பெற்றுள்ள இன்னொரு ஹதீஸில், “நிச்சயமாக, அல்லாஹ் தன்னுடைய தரிசனத்தையும் தன்னுடைய உரையாடலையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் பகிர்ந்தளித்து விட்டான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனை இரண்டு முறை தரிசித்தார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரண்டுமுறை இறைவனுடன் உரையாடினார்கள்” என்று கூறப் பட்டுள்ளது.
“(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை” (53;11), “நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்” (53;13) ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள் கூறும்பொழுது, “அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது அகத்தால் பார்த்தார்கள்” எனக் கூறியுள்ளார்கள்.
“இறைவன் மீது ஆணையாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இறைவனைக் கண்ணாரக் கண்டனர்” என்று ஹஸன் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் சத்தியமிட்டுக் கூறியிருக்கிறார்கள். (அப்துர் ரஸ்ஸாக்கு) இந்தக் கருத்தை ஜூபைர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களின் புதல்வர் உர்வா (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களின் மாணவர்கள் அனைவரும் இதை ஏற்றுக் கொண்டனர். கஃபுல் அஹ்பார், ஷஹ்ரீ, மஃமர் ஆகியவர்களும் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினர். “இறைவன் தனது நேசத்தை ஹஜ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், உரையாடலை ஹஜ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், தரிசனத்தை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அளித்திருக்கிறான் என்பது பற்றி நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்களா?” என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ) அவர்கள் வினவினார்கள். இதை நஸயீ ஆதாரத்தோடு அறிவித்திருக்கிறார்கள். ஹாக்கிம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த விவரங்களை மவ்லானா, அல்ஹாஜ் பி.எஸ்.கே.முஹம்மது இப்ராஹீம் அவர்கள் “மிஃராஜ் விளக்கம்” என்னும் நூலில் குறிப்பிட் டிருக்கிறார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறைவனை நேரில் தரிசித்தார்கள் என்று அபூதர் (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ) , கஅபுல் அஹ்பார் (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ) , உர்வா பின் அஸ்ஸூபைர், ஹஸனுல் பஸ்ரி, அஸ்ஸூஹ்ரீ, அபுல் ஹஸன் அல்அஷ்அரீ (ரஹ்மதுல்லாஹி அலைஹிம்) ஆகியோரும் கூறியுள்ளனர். (ஸஹீஹ் முஸ்லிம், பாகம் – 1, பக்கம் – 216. )
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தன்னுடைய தரிசனத்தை வழங்கி சிறப்பித்த அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, மறுமை நாளில் அன்னாரின் உம்மத்துகளுக்கும் தன்னுடைய தரிசனத்தை வழங்குவான்! இது குறித்து அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “பெளர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள், “(சிரமம்) இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள், “(சிரமம்) இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “இவ்வாறுதான் (மறுமையில்) இறைவனை நீங்கள் காண்பீர்கள்” என்று கூறினார்கள். ( புகாரீ, முஸ்லிம் ).
இவ்விதமாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா தன்னுடைய ஹபீபான அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தன்னுடைய தரிசனத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறான்.

11.புனித மிஃராஜ் பயணம்
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே என்று சில விசேஷமான பாக்கியங்களை அளித்திருக்கிறான். இந்த விசேஷமான பாக்கியங்கள் வேறு எந்த நபிமாருக்கும் வழங்கப்படவில்லை! அத்தகைய விசேஷமான பாக்கியங்களில் ஒன்றுதான் புனித மிஃராஜ் பயணமாகும். இப்புனித பயணம், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவம் பெற்று, 11- ம் ஆண்டு – ஹிஜ்ரத்திற்கு ஓர் ஆண்டுக்கு முன் (கி.பி. 621) ரஜப் மாதம் 27- ம் தேதி திங்கட்கிழமை இரவு நிகழ்ந்தது. அச்சமயம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வயது 51 ஆண்டு, 8 மாதம், 20 நாட்களாக இருந்தது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இப்புனித பயணத்தை விழிப்பு நிலையில், பூத உடலுடன் மேற்கொண்டார்கள். இப் புனித பயணம் ‘இஸ்ராவு’, ‘மிஃராஜ்’ ஆகிய வார்த்தைகளால் குறிப்பிடப்படுகிறது. ‘இஸ்ராவு’ என்னும் வார்த்தைக்கு ‘இரவில் செல்லல்’ என்பது பொருளாகும். ‘மிஃராஜ்’ என்னும் வார்த்தைக்கு ‘ஏறுதல்’ என்பது பொருளாகும். இப்புனித பயணம் ஒரு இரவிலேயே நிகழ்ந்தது. இதன் காரணமாக இப்புனித பயணத்தை ‘இஸ்ராவு’ என்னும் வார்த்தையால் குறிப்பிடப்படுகிறது. மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பைத்துல் முகத்தஸிலிருந்து விண் ஏறி தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள். எனவே, இப்புனித பயணத்தை ‘மிஃராஜ்’ என்ற வார்த்தையாலும் குறிப்பிடப்படுகிறது. இப்புனித பயணம் பற்றி திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஆயினும், இப்புனித பயணம் பற்றிய முழுமையான விவரங்கள் ஹதீஸ்கள் மூலமாகவே அறியப்படுகிறது. இப்புனித பயணத்தின் தொடக்கமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திருமக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து ஜெருசலேமிலுள்ள மஸ்ஜிது அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது குறித்து திருக்குர்ஆனில் கீழ்கண்டபடி கூறப்பட்டுள்ளது:
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன் ; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ் விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான் ; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம் ; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப் பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) ; நிச்சயமாக அவன் (யாவற்றையும் ) செவியுறுவோனாகவும் ; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (ஸூரத்து பனீ இஸ்ராயீல், வசனம் – 1.)
அதனைத் தொடர்ந்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிது அக்ஸாவிலிருந்து வானுலக பயணத்தை மேற்கொண்டார்கள். அது குறித்த சில விவரங்கள் அத்தியாயம்-53, ஸூரத்துந் நஜ்மில் கூறப் பட்டுள்ளன. ஆயினும் புனித மிஃராஜ் பற்றிய விவரங்கள் யாவும் ஹதீஸ்கள் மூலமாகவே அறியப்படுகின்றன.
புனித மிஃராஜ் பயணம் நிகழ்ந்த இரவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மக்கா நகரத்தில், கஃபா அருகில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திரு நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும், இறை நம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து அதை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திரு நெஞ்சத்தினுள் ஊற்றி நிரப்பினார்கள். அதன் பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருநெஞ்சை பழையபடியே மூடிவிட்டார்கள். இவ் விவரங்களை அறிவிக்கும் ஹதீஸ்களில் சில:
ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு நேரத்தில் (விண்ணுலகப் பயணத்திற்காக) கஃபாப் பள்ளி வாசலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டது குறித்து அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (மீண்டும்) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன் இறையில்லம் கஅபா அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்) மூன்று பேர் வந்தார்கள். ( நூல்: புகாரீ, முஸ்லிம் )
அபூதர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் கூறியதாவது: “நான் மக்காவில் இருந்த போது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி (வந்து) என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும், இறை நம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி(நிரப்பி)னார். பிறகு (பழையபடியே) நெஞ்சை மூடிவிட்டார்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
“நான் இறையில்லம் கஅபா அருகில் (பாதி) உறக்கத்திலும் (பாதி) விழிப்பிலும் இருந்த போது, (வானவர்) ஒருவர் (வந்து), “இரண்டு பேருக்கு (ஹம்ஸா மற்றும் ஜஅஃபர் (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூம்) நடுவில் படுத்திருக்கும் மூன்றாவது மனிதரைத்தாம் (நாம் அழைத்துச் செல்ல வேண்டும்)” என்று கூறுவதைக் கேட்டேன். பிறகு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது என்னிடம் ஒரு தங்கத் தட்டு கொண்டு வரப்பட்டது. அதில் ‘ஸம்ஸம்’ நீர் இருந்தது. பிறகு எனது நெஞ்சு இங்கிருந்து இதுவரையில் பிளக்கப்பட்டது” என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம் )
“என்னை அ(ந்த வான)வர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குச் கொண்டு சென்றார்கள். என் நெஞ்சைப் பிளந்து, (இதயத்தை வெளியிலெடுத்து) ஸம்ஸம் கிணற்றின் நீரால் (என் இதயம்) கழுவப்பட்டது. பிறகு மீண்டும் (அதே இடத்திற்கு) நான் கொண்டு வந்து விடப்பட்டேன்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம் )
அதன் பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புராக் என்னும் வாகனத்தில் ஏறி பைத்துல் முகத்தஸ் வரை சென்றார்கள். அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
” (விண்ணுலகப் பயணத்தின் போது) என்னிடம் கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையைவிட பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த நீளமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அது பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது கால் குளம்பை எடுத்து வைக்கும். அதிலேறி நான் பைத்துல் முகத்தஸ் இறை இல்லம் வரை சென்றேன். பிறகு இறைத் தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டிவைத்து விட்டு அந்த இறையாலயத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்பட்டபோது (வானவர்) ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் கொண்டு வந்தார். (அதில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.) நான் பால் பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அப்போது ஜிப்ரீல், “இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்” என்று கூறினார். ( அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம் )
அதன் பிறகு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்துக் கொண்டு வானங்களில் பிரவேசித்தார்கள். வானங்களிலே ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஈஸா அலைஹிஸ்ஸலாம், யஹ்யா அலைஹிஸ்ஸலாம், யூசுஃப் அலைஹிஸ்ஸலாம், இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம், ஹாரூன் அலைஹிஸ்ஸலாம், மூஸா அலைஹிஸ்ஸலாம், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆகிய நபிமார்களையும் கண்டார்கள். அதன் பிறகு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை ‘ஸித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் பேரில் ஐவேளைத் தொழுகைகளைக் கடமையாக்கினான். இது குறித்த ஹதீஸ் வருமாறு:
தாங்கள் இரவில் சென்றதைக் குறித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மிடம் கூறினார்கள் என்று மாலிக் இப்னு ஸஃஸஆ (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் கூறிவிட்டு, “நான் ஹத்தீமில் இருக்கும் போது – சில சமயங்களில் ஹிஜ்ரிலிருக்கும் போது என்று கூறுவார்கள் – என்னிடத்தில் வருபவர் வந்து, இதிலிருந்து இதுவரையில் கிழித்து (பிளந்தார்) என்று கூறுவதையும் நான் செவி யுற்றிருக்கிறேன். (தொண்டைக் குழியிலிருந்து தொப்புளுக்குக் கீழ் வரை என்று இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் கூறினார்). என்னுடைய இதயத்தை வெளிப்படுத்தினார். பின்னர், ஈமான் (மார்க்க விசுவாசம்) நிறப்பப் பட்டுள்ள தங்கத் தட்டை கொண்டு வந்து என்னுடைய இதயம் கழுவப்பட்டது. பின்னர், அதில் அது நிறப்பப்பட்டது. பின்னர், (அது இருந்த இடத்தில்) மீண்டும் வைக்கப்பட்டது.
பின்னர், கோவேறு கழுதைக்குச் சிறியதாகவும், கழுதைக்குப் பெரியதாகவுமுள்ள ஒரு வெள்ளைப் பிராணி என் அருகில் கொண்டு வரப்பட்டது. அதுதான் புராக். அது பார்வைக்கு எட்டிய தூரத்துக்கு தன்னுடைய அடியை வைக்கிறது. நான் அதன் மீது ஏற்றப்பட்டேன். என்னுடன் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) வந்தார். அவர் என்னை அழைத்துக் கொண்டு முதல் வானத்திற்கு உயர்ந்து, (அதன் கதவைத்) தட்டினார். “யார் அது?” என்று வினவப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரயீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று வினவப்பட்டது. “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று வினவப்பட்டது. (அதற்கு ) “ஆம்” என்றார். “அவருக்கு வாழ்த்து, நல்ல வருகை” என்று கூறிவிட்டு (வாயிலைத்) திறந்தார். அங்கு ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார். “இவர் உமது தந்தை ஆதம். இவருக்கு ஸலாம் சொல்வீராக” என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் சொன்னேன். அவர் ஸலாமுக்கு பதில் கூறிவிட்டு, “நல்ல புதல்வருக்கும் நல்ல நபீக்கும் வாழ்த்து” என்று கூறினார்.
பின்னர், என்னை அழைத்துக் கொண்டு இரண்டாவது வானுக்கு ஏறி, அதன் கதவைத் தட்டினார். “யார் அது?” என்று வினவப்பட்டது. “ஜிப்ரயீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?” என்று வினவப்பட்டது. “ஆம்” என்று கூறினார். “அவருக்கு வாழ்த்து, நல்ல வருகை” என்று சொல்லப்பட்டதும் (வாசல் கதவு) திறந்தது. நான் அங்கு சென்றதும் யஹ்யாவையும், ஈஸாவையும் (பார்த்தேன்). அவ்விருவரும் சின்னம்மா, பெரியம்மா மக்கள். “இவர்கள் யஹ்யாவும் ஈஸாவும். இவர்களுக்கு ஸலாம் சொல்வீராக” என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) கூறினார். நான் ஸலாம் கூறினேன். அவ்விருவரும் பதில் ஸலாம் கூறிவிட்டு, “நல்ல சகோதரருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறினர்.
பின்னர், என்னை அழைத்துக் கொண்டு மூன்றாவது வானத்தில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார். “யார் அது?” என்று வினவப்பட்டது. “ஜிப்ரயீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் யார்?” என்று வினவப்பட்டது. “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று வினவப்பட்டது. “ஆம்” என்று கூறினார். “அவருக்கு வாழ்த்து. நல்ல வருகை” என்று கூறப்பட்டதும் (வான் கதவு) திறந்தது. (அங்கு) நான் சென்றபோது யூஸூப் (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார். “இவர் யூஸூப். இவருக்கு ஸலாம் சொல்வீராக” என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன். அதற்கு அவர் பதில் ஸலாம் கூறிவிட்டு, “நல்ல சகோதரருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
பின்னர், என்னை அழைத்துக் கொண்டு நான்காம் வானத்தில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார். “யார் அது?” என்று வினவப்பட்டது. “ஜிப்ரயீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் யார்?” என்று வினவப்பட்டது. “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று (மறுபடியும்) வினவப்பட்டது. “ஆம்” என்று ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் பதிலளித்தார். “அவருக்கு வாழ்த்து, நல்ல வருகை” என்று கூறப்பட்டு (வான் கதவு) திறந்தது. (அங்கு) நான் சென்றபோது, இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார். “இவர் இத்ரீஸ், இவருக்கு ஸலாம் சொல்வீராக” என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன். அவர் பதில் ஸலாம் கூறிவிட்டு, “நல்ல சகோதரருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்து” என்று கூறினார்.
பின்னர், என்னை அழைத்துக் கொண்டு ஐந்தாம் வானில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார். “யார் அது?” என்று வினவப்பட்டது. “ஜிப்ரயீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் யார்?” என்று வினவப்பட்டது. “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று வினவப்பட்டது. “ஆம்” என்று கூறினார். “அவருக்கு வாழ்த்து, நல்ல வருகை” என்று கூறப்பட்டதும் (வான் கதவு) திறந்தது. (அங்கு) நான் சென்றதும் ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார். “இவர் ஹாரூன், இவருக்கு ஸலாம் சொல்வீராக” என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு ஸலாம் கூறினேன். அவர் பதில் (ஸலாம்) கூறினார். பின்னர், “நல்ல சகோதரருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்து” என்று கூறினார்.
பின்னர், என்னை (அழைத்துக்) கொண்டு ஆறாம் வானில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார். “யார் அது?” என்று வினவப்பட்டது. “ஜிப்ரயீல்” என்று பதிலளித்தார். ” உம்முடன் யார்?” என்று வினவப்பட்டது. “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப்பட்டாரா?” என்று வினவப்பட்டது. “ஆம்” என்று பதிலளித்தார். உடனே, “அவருக்கு வாழ்த்து, நல்ல வருகை” என்று கூறப்பட்டு (வான் கதவு) திறந்தது. (அங்கு) நான் சென்றதும், மூஸா (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார். “இவர் மூஸா, இவருக்கு ஸலாம் சொல்வீராக” என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன். அவர் பதில் (ஸலாம்) கூறினார். பின்னர், “நல்ல சகோதரருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்து” என்று கூறினார். (அவரை) நான் கடந்த போது, அவர் அழுதார். “உம்மை அழச் செய்தது எது?” என்று அவரிடம் வினவப்பட்டது. “எனக்குப் பின்னர் ஒரு வாலிபர் நபியாகுவார். என் உம்மத்தாரில் சுவர்க்கம் பிரவேசிப்பவர்களைக் காட்டிலும் அவருடைய உம்மத்தில் அதிகமானவர்கள் சுவர்க்கம் புகுவார்கள். (அதற்காக) நான் அழுகிறேன்” என்று அவர் கூறினார்.
பின்னர், என்னை (அழைத்துக்) கொண்டு ஏழாம் வானில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார். “யார் அது?” என்று வினவப்பட்டது. “ஜிப்ரயீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் யார்?” என்று வினவப்பட்டது. “முஹம்மத்” என்று கூறினார். “அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?” என்று வினவப்பட்டது. “ஆம்” என்று பதிலளித்தார். “அவருக்கு வாழ்த்து, நல்ல வருகை” என்று கூறப்பட்டு (வான் கதவு) திறந்தது. (அங்கு) நான் சென்றதும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார். “இவர் உம்முடைய தந்தை இப்ராஹீம். இவருக்கு ஸலாம் சொல்வீராக” என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன். அவர் பதில் (ஸலாம்) கூறினார். பின்னர், “நல்ல புதல்வருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்து” என்று கூறினார்.
பின்னர், எனக்காக ஸித்ரத்துல் முன்த்தஹா உயர்த்தப்பட்டது. அதன் கனி ஹஜரிலுள்ள குடத்தைப் போலவும், அதன் இலை யானையின் காதுகளைப் போலவும் இருந்தன. “இதுதான் ஸித்ரத்துல் முன்த்தஹா” என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அங்கு புறத்தில் இரண்டும், அகத்தில் இரண்டும் ஆக நான்கு நதிகள் இருந்தன. “இது என்ன ஜிப்ரயீலே?” என்று கேட்டேன். “அகத்திலுள்ள இரண்டும் சுவர்க்கத்திலுள்ள இரண்டு நதிகள். புறத்திலுள்ள இரண்டும் நைல்நதியும், புராத்நதியும்” என்று (ஜிப்ரயீல் அலைஹிஸஸலாம்) கூறினார்.
பின்னர், எனக்காக பைத்துல் மஃமூர் உயர்த்தப்பட்டது. அதில் ஒவ்வொரு நாளும் எழுபது ஆயிரம் வானவர்கள் நுழைகிறார்கள். பின்னர், மதுப் பாத்திரம், பால் பாத்திரம், தேன் பாத்திரம் ஆகியவை எனக்காக கொண்டு வரப்பட்டன. நான் பாலை எடுத்தேன். “அதுதான் இயற்கை (மார்க்கம்) . அதில் நீரும், உம்முடைய உம்மத்துகளும் இருக்கிறீர்கள்” என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) கூறினார்.
பின்னர், என் மீது தினசரி ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பும் போது மூஸாவின் அருகில் வந்தேன். “என்ன கட்டளையிடப்பட்டீர்?” என்று (மூஸா அலைஹிஸ்ஸலாம்) கேட்டார். “தினசரி ஐம்பது நேரத் தொழுகைக்கு கட்டளையிடப்பட்டேன்” என்று கூறினேன். “உம்முடைய உம்மத்துகள் தினமும் ஐம்பது நேரத் தொழுகைகளைத் தாங்க மாட்டார்கள். நான் அல்லாஹ்வின் மீது சத்தியமாக(க் கூறுகிறேன்). மக்களிடத்தில் உமக்கு முன் நான் அனுபவம் பெற்றிருக்கிறேன். பனூ இஸ்ராயீல்களை மிகக் கடுமையாகப் பயிற்றுவித்தேன், எனவே, உமது ரப்பிடம் திரும்பச் சென்று, உம்முடைய உம்மத்துகளுக்காக (தொழுகைகளைக்) குறைக்க வேண்டும் என கேட்பீராக” என்று (மூஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார்.
நான் திரும்பச் சென்றேன். என்னை விட்டு பத்து (தொழுகைகளை) தள்ளுபடி செய்தான். பின்னர் மூஸாவிடம் திரும்ப வந்தேன். அவர் அதே போன்று மீண்டும் கூறினார். நான் (மீண்டும்) திரும்பச் சென்றேன். என்னை விட்டு பத்து (தொழுகைகளை) தள்ளுபடி செய்தான். பின்னர், மூஸாவிடம் திரும்ப வந்தேன். அவர் அதே போன்று மீண்டும் கூறினார். நான் திரும்பச் சென்றேன். என்னை விட்டு பத்து (தொழுகைகளை) தள்ளுபடி செய்தான். பின்னர், மூஸாவிடம் திரும்ப வந்தேன். அவர் அதே போன்று மீண்டும் கூறினார். நான் திரும்பச் சென்றேன். என்னை விட்டு பத்து (தொழுகைகளை) தள்ளுபடி செய்தான். ஆகவே, தினசரி பத்து வேளைத் தொழுகைகளுக்கு நான் கட்டளையிடப்பட்டேன். பின்னர், நான் (மூஸாவிடம்) திரும்ப வந்தேன். அவர் அதே போன்று மீண்டும் கூறினார். நான் திரும்பச் சென்றேன். (அப்போது) தினசரி ஐந்து வேளைத் தொழுகைகளுக்கு நான் கட்டளையிடப்பட்டேன். (நான் மீண்டும்) மூஸாவிடம் திரும்ப வந்தேன். “என்ன கட்டளையிடப்பட்டீர்?” என்று அவர் கேட்டார். “தினசரி ஐந்து வேளைத் தொழுகைகளுக்கு நான் கட்டளையிடப்பட்டேன்” என்று கூறினேன்.
“உம்முடைய உம்மத்துகள் தினசரி ஐந்து வேளைத் தொழுகைகளைத் ( தொழ ) தாங்க மாட்டார்கள். உமக்கு முன்னர் நான் மக்களிடம் அனுபவம் பெற்றிருக்கிறேன். பனூ இஸ்ராயீல்களை மிகக் கடுமையாகப் பயிற்று வித்திருக்கிறேன். (எனவே மீண்டும்) உமது ரப்பிடம் திரும்பச் சென்று, உம்முடைய உம்மத்துகளுக்கு (தொழுகைகளைக்) குறைக்க வேண்டும் என்று கேட்பீராக” என்று அவர் கூறினார். “என்னுடைய ரப்பை கேட்டு கேட்டு வெட்கமடைகிறேன். எனினும், நான் (இதை) திருப்தியடைந்து ஒப்புக் கொள்கிறேன்” என்றேன். பின்னர், (அங்கிருந்து) நான் கடந்த போது, என்னை அழைப்பவர் அழைத்து, “என்னுடைய கடமையை நான் ஜாரீ செய்துவிட்டேன். என் அடியார்களுக்கு நான் எளிதாக்கிவிட்டேன்” என்று கூறினார். (அறிவிப்பவர்: மாலிக்குப்னு ஸஃஸஆ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ )
“அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தின் போது சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கே முத்தாலான கோபுரங்கள் இருந்தன. சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது” என்று இப்னு ஹஸ்ம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) ஆகியோர் அறிவித்திருக்கிறார்கள். ( நூல்: முஸ்லிம் )
அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸின் இறுதிப் பகுதியில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது: “நான் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் இறங்கி வந்தேன். அப்போது அவர்கள், “உங்கள் உம்மத்துகளுக்கு உம்முடைய என்ன கடமையாக்கினான்?” என்று கேட்டார்கள். “ஐம்பது (வேளைத்) தொழுகைகளை(க் கடமையாக்கினான்)” என்று நான் பதிலளித்தேன். “உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று (உங்கள் உம்மத்தாருக்காக தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைக்கும்படி கேளுங்கள். ஏனெனில், உங்கள் உம்மத்தார் இதைத் தாங்க மாட்டார்கள். நான் (என்னுடைய) பனூ இஸ்ராயீல் மக்களிடம் பழகி அனுபவப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று, “என் இறைவா! என் உம்மத்தார் மீது (ஐம்பது வேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைப்பாயாக!” என்று கேட்டேன். இறைவன் (ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான். நான் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் திரும்பி வந்து, “(ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “உங்கள் உம்மத்துகள் இதையும் தாங்கமாட்டார்கள். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் குறைக்கும்படி கேளுங்கள்” என்றார்கள். இவ்வாறே நான் என் இறைவனுக்கும் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும் இடையில் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தேன். இறுதியாக, “முஹம்மதே! இவை இரவிலும், பகலிலும் (நிறைவேற்ற வேண்டிய) ஐவேளைத் தொழுகைகள் ஆகும். ஒவ்வொரு தொழுகைக்கும் பத்து (நன்மைகள்) உண்டு. (நன்மைகளில்) இவை ஐம்பது வேளைத் தொழுகை(க்கு ஈடு) ஆகும். ஒருவர், ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனதில்) எண்ணிவிட்டாலே, அதைச் செய்யாவிட்டாலும் அவருக்காக ஒரு நன்மை பதிவு செய்யப்படும். அதை அவர் செய்து முடித்துவிட்டால் அவருக்காகப் பத்து நன்மைகள் பதிவு செய்யப்படும். ஒருவர் ஒரு தீமையைச் செய்ய நாடி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் இருந்து விட்டால் (குற்றம்) எதுவும் பதிவு செய்யப்படமாட்டாது. (எண்ணியபடியே ) அதை அவர் செய்து முடித்து விட்டால் அது ஒரு குற்றமாகவே பதிவு செய்யப்படும்” என்று கூறினான். (நூல்: முஸ்லிம் )
புனித மிஃராஜ் பயணத்தின் போது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மூன்று (கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: (1) ஐவேளைத் தொழுகைகள் வழங்கப்பட்டன. (2) அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசனங்கள் அருளப்பட்டன. (3) அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்(படுவதாக அறிவிக்கப்)பட்டது. ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
புனித மிஃராஜ் பயணத்தின் போது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இறைவனை நேரில் தரிசித்தார்கள். “நிச்சயமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தரிசித் திருக்கிறார்கள்” என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித் திருக்கிறார்கள். ( நூல்: திர்மிதீ ) இந்த தரிசனம் புனித மிஃராஜ் பயணத்தின் போது நடைபெற்றது. இது குறித்த விவரங்கள் ” இறை தரிசனம்” என்னும் தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளன.
புனித மிஃராஜ் பயணத்தின் முடிவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பைத்துல் முகத்தஸில் குழுயிருந்த நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நடத்தினார்கள். இது குறித்து அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்களின் அறிவிப்பில், “நான் (கஃபாவில்) ஹிஜ்ர் என்னும் பகுதியில் இருந்தேன்” என்று தொடங்கும் ஹதீஸின் இறுதிப் பகுதியில் “அப்பொழுது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே நபிமார்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன்” என்று கூறப்பட்டுள்ளது. (நூல்: முஸ்லிம்) இதன் காரணமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இமாமுல் அன்பியா’ என்று போற்றப்படுகிறார்கள்.
இவ்விதமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, அன்னாரின் திரு நெஞ்சைப் பிளந்து சுத்தப்படுத்தி, பைத்துல் முகத்தஸ அழைத்துச் சென்றதிலிருந்து, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நடத்தியது வரை எல்லா நிகழ்வுகளுமே சிறப்பு மிகுந்தவை களாகவே அமைந்திருந்தன. அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் முகமாகவே அமைந்திருந்தன.
மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரவின் ஒரு சிறு பகுதியில் புனித மிஃராஜ் பயணத்தை மேற்கொண்டு திரும்பியது பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது குறைஷிகள் அதை நம்ப மறுத்தனர். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பொய்ப்பிக்க முயற்சி செய்தனர். வானுலக பயணம் பற்றிய அறிவு இல்லாத காரணத்தால் பைத்துல் முகத்தஸ் பற்றி பல்வேறு கேள்வி களைக் கேட்டனர். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இதற்கு முன்னர் ஜெருசலேம் நகருக்கு சென்றதுமில்லை, பைத்துல் முகத்தஸ் ஆலயத்தை பார்த்ததுமில்லை. எனவே, பைத்துல் முகத்தஸ் பற்றி தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் பதில் சொல்ல முடியாது என குறைஷிகள் எண்ணினர். அந்த தைரியத்தில் பைத்துல் முகத்தஸ் பற்றி பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அப்போதும் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவி செய்தான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கண் முன் பைத்துல் முகத்தஸை காட்சியளிக்கச் செய்தான். அதைப் பார்த்தபடியே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குறைஷிகளின் கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கூறினார்கள். இதன் காரணமாக இப்புனித பயணத்தை பொய்ப்பிக்க குறைஷிகளாலும் முடியவில்லை. எனவே, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்ட இப்புனித பயணம் மகா நிச்சயமான உண்மையாகிவிட்டது. இது குறித்த ஹதீஸ்களில் சில:
“நான் ஹிஜ்ரில் (கஃபாவின் தாழ்வாரத்தில் உள்ள ஓர் இடம்) இருந்தேன். நான் (இரவின் ஒரு சிறு பகுதியில் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து ஜெருசலேம் நகரிலுள்ள பைத்துல் முகத்தஸ் வரை) பயணம் மேற்கொண்டது பற்றி என்னிடம் குறைஷியர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பைத்துல் முகத்தஸிலுள்ள சில பொருட்களைப் பற்றி என்னிடம் அவர்கள் கேட்டனர். ஆனால், அவை என் நினைவிலிருக்கவில்லை. அப்போது நான் மிகவும் வருந்தினேன். முன்பு எப்போதும் அந்த அளவுக்கு நான் வருந்தியதேயில்லை. உடனே அல்லாஹ் பைத்துல் முகத்தஸை எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக் கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றுக்கும் (சரியான) தகவல் தெரிவித்தேன்.” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம். )
“குறைஷியர் என்னைப் பொய்ப்பித்த போது ஹிஜ்ரில் நான் நின்றுக் கொண்டிருந்தேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் முகத்தஸை வெளி யாக்கினான். அதனை நான் பார்த்து, அதனுடைய அடையாளங் களை அவர்களுக்கு நான் கூறிக் கொண்டிருந்தேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ. )
இப்படியாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் புனித மிஃராஜ் பயணத்தை அளித்து சிறப்பித்திருக்கிறான். மேலும், இப்புனித பயணத்தை சன்மார்க்க விரோதிகளும் நிராகரிக்காதபடி மெய்மைப்படுத்தியும் சிறப்பித்திருக்கிறான்.

12.கவ்ஸர் நதி
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏராளமான நற்பாக்கியங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். அவற்றில் ஒன்று, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்காக சுவர்க்கத்தில் கவ்ஸர் என்னும் நதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது. இது குறித்து திருக்குர்ஆனில், “(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக் கின்றோம்.” என்று கூறப்பட்டுள்ளது. ( ஸூரத்துல் கவ்ஸர், வசனம் – 1. )
“கவ்ஸர் என்றால் என்ன?” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “(அது) சுவர்க்கத்திலுள்ள ஓர் ஆறாகும். அதனை என் இறைவன் எனக்காக கொடுத்திருக்கிறான். அதன் தண்ணீர் பாலைவிட அதிக வெண்மையானதாக இருக்கும். அதன் சுவையோ தேனைவிட அதிக இனிப்பானதாக இருக்கும். அதில் பறவைகளும் இருக்கின்றன. அவற்றின் கழுத்துகள் ஒட்டகத்தின் கழுத்துகளைப் போல் இருக்கும்” என்று கூறினார்கள். அப்போது உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், “இந்தப் பறவைகள் மிகவும் உல்லாசமாக இருக்கும்” என்று கூறினார்கள். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “அவற்றை உண்பவர்கள் அவற்றை விட உல்லாசமாக இருப்பார்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ. )
கவ்ஸர் நதியின் பரப்பு, ஒரு மாத நடை தூரமுடையதாக இருக்கும். அதன் இரு மருங்குகளிலும் விலை உயர்ந்த கற்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் இருக்கும். அதன் நீர் பாலைவிட அதிக வெண்மை யானதாகவும், கஸ்தூரியை விட அதிக வாசமுள்ளதாகவும் இருக்கும். அதன் நீரை அருந்தியவர்கள் பின்னர் ஒருபோதும் தாகிக்க மாட்டார்கள். அங்கு நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமான பாத்திரங்கள் இருக்கும். இவ்விவரங்களைக் கூறும் ஹதீஸ்களில் சில:
‘நிச்சயமாக நாம் உமக்குக் கவ்ஸரைக் கொடுத்திருக்கிறோம்’ என்பதைக் குறித்து அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள் வினவப்பட்டார்கள். (அதற்கவர்) “அது ஒரு நதி. உங்களுடைய நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அது கொடுக்கப் பட்டிருக்கிறது. அதனுடைய இரு மருங்குகளிலும் துவாரமிடப்பட்ட மாணிக்கம் இருக்கிறது. அதனுடைய பாத்திரங்கள் நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமானவை” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள். நூல்: புகாரீ. )
“என்னுடைய ஹெளல் ஒரு மாதத் தூரமு(பரப்பளவு)ள்ளது. அதன் தண்ணீர் பாலினும் வெண்மையானது. அதன் வாடை கஸ்தூரியினும் அதிக வாசனையுள்ளது. அதன் கோப்பைகள் வானின் நட்சத்திரங்கள் போன்றவை. அதிலிருந்து அருந்தியவர் (பின்னர்) ஒரு போதும் தாகிக்க மாட்டார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியலலாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ. )
“நாயகமே! ஹவ்ளுல் கவ்ஸரின் பாத்திரங்கள் எத்தனை உள்ளன?” என்று நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் “எவன் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, அதன் பாத்திரங்கள் இருள் நிறைந்த இரவில் வானத்தின் சிறிய, பெரிய நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கின்றன. சுவர்க்கத்தின் பாத்திரங்களில் எவர் தண்ணீர் அருந்துகிறாரோ அவருக்கு அவருடைய இறுதிநாள் வரை தாகமெடுக்காது. சுவர்க்கத்திலிருந்து இரண்டு ஆறுகள் வருகின்றன. அதன் அகலமோ சிரியா (ஷாம்) தேசத்திலுள்ள அம்மான், ஈலா ஆகிய ஊர்களுக்கிடையே உள்ள தூரத்திற்குச் சமமாக இருக்கும். அதன் தண்ணீரோ பாலைவிட அதிக வெண்மையாய் இருக்கும். அதன் சுவையோ தேனைவிட அதிக இனிமையாக இருக்கும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம், திர்மிதீ. )
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தில் கவ்ஸர் நதியைக் கண்டிருக்கிறார்கள். இது குறித்த ஹதீஸ்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜூக்கு சென்ற போது (கூறிய விவரங்களில்) “நான் ஒரு நதியின் பக்கமாக அழைத்து வரப்பட்டேன். அதன் இரு மருங்குகளிலும் துவாரமுள்ள முத்துக் கூடாரங்களிருந்தன. ‘இது என்ன, ஜிப்ரயீல்?’ என்று கேட்டேன். ‘இது கவ்ஸர்’ என்று (அவர்) கூறினார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ. )
கவ்ஸர் நதியில் பிரவேசிக்கும் பாக்கியம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினருக்குக் கிடைக்கும். அவர்களின் எண்ணிக்கையும் மிகவும் கூடுதலாக இருக்கும். இது குறித்த ஹதீஸ்: “நிச்சயமாக எல்லா நபிமார்களுக்கும் ஒவ்வொரு ஹவ்ளு உண்டு. அங்கு அவரவரின் சமூகத்தினர் வருவார்கள். அன்றி, நிச்சயமாக அவர்கள் தங்களுக்குள் அவர்களில் எவர் (அதாவது எந்தச் சமூகத்தினர்) அதிகமாக வருகிறார்கள் என்று பெருமை பாராட்டிக் கொள்வார்கள். மேலும், நிச்சயமாக நான் என்னுடைய ஹவ்ளில் அவர்களை விட அதிகமான பேர் வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரதுப்னு ஜூன்துப் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ. )
கவ்ஸர் நதியில் பிரவேசிக்கும் பாக்கியமுடைய உம்மத்தினருக்கு விருந்தோம்புபவராக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே இருப்பார்கள்! ஆயினும், இஸ்லாம் மார்க்கத்தில் புதுமைகளை ஏற்படுத்தி, மாற்றங்களை உண்டு பண்ணியவர்கள் கவ்ஸர் நதியை விட்டும் அப்புறப்படுத்தப் படுவார்கள்! இது குறித்த ஹதீஸ்கள்:
“ஹவ்ளுல் கவ்ஸரில் நான்தான் உங்களுக்கு விருந்தோம்புபவனாக இருப்பேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜூன்துப் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம். )
“ஹவ்ளுல் கவ்ஸரில் நான்தான் உங்களுக்கு விருந்தோம்புபவனாக இருப்பேன். அப்பொழுது உங்களில் சிலர் என்னிடம் கொணரப்படுவீர்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க அவர்களின் பக்கம் குனியும் போது, அவர்கள் என்னை விட்டும் அப்புறப்படுத்தப் படுவார்கள். அப்பொழுது நான், “இறைவனே! இவர்கள் என் தோழர்களாயிற்றே!” என்று கூறுவேன். அதற்கு, “நிச்சயமாக, இவர்கள் தங்களுக்குப் பின் என்னவென்ன புதுமைகளை மார்க்கத்தில் உண்டுபண்ணினார்கள் என்று தாங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறப்படும். எனவே நான், “தூரமாகிவிடுங்கள்: தூரமாகிவிடுங்கள். எனக்குப் பின் (என் மார்க்கத்தை) மாற்றியவர்கள் (நீங்கள்) எனக் கூறுவேன்” எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம். )
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, தன்னுடைய ஹபீபு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் நம் அனைவருக்கும் கவ்ஸர் நதியில் பிரவேசிக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன்.

13.போர்களில் வானவர்கள்
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒவ்வொரு காரியத்திலும் உதவி செய்திருக்கிறான். ஒவ்வொரு கஷ்டத்திலும் உதவி செய்திருக்கிறான். அந்த வகையில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு போர்களிலும் கூட உதவி செய்திருக்கிறான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் படையுடன் சேர்ந்து போரிடும்படியாக வானவர்களை அனுப்பி யிருக்கிறான். வானவர்களும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் படையுடன் சேர்ந்து, சன்மார்க்க விரோதிகளுடன் போர் புரிந்திருக் கிறார்கள். இது குறித்த விவரங்கள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சன்மார்க்க விரோதிகளை எதிர்த்து முதன் முதலாக போரிட்டது பத்ரு போர்களத்தில்தான்! இப்போரில், மக்கத்து குரைஷிகள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்தம் தோழர்களையும், அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் அழித்து ஒழித்திட வேண்டும் என்ற வெறியுடன் பத்ரு களத்தில் பாளையமிட்டிருந்தனர். அந்த வெறிக் கூட்டத்தில் ஆயிரம் வீரர்கள் இருந்தனர்! புகழ் பெற்ற போர்த் தளபதிகள் பலரும் இருந்தனர்! நூறு குதிரைகள் இருந்தன! போர்க் கருவிகள் ஏராளமாக இருந்தன! ஆடிப்பாடி போர் வெறியைத் தூண்டும் பெண்களும் இருந்தனர்!
இதற்கு மாறாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறு படையிலே முன்னூற்று பதின்மூன்று வீரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிலும் சிலரிடம் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன. மற்றவர்களிடம் போதிய ஆயுதங்களும் இருக்கவில்லை! மேலும், அப்படையில் இரண்டு குதிரைகள் மட்டுமே இருந்தன! இந்நிலையைக் கண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரு கரம் ஏந்தி அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவிடம் துஆ செய்தனர். உதவி கோரினர். முடிவில், அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்னும் சுபச் செய்தியை வஹீ மூலமாக அருளினான். இது குறித்த ஹதீஸ் வருமாறு:
“பத்ருப் போர் நாளின் போது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இணைவைப்பவர்(களின் படை)கள் ஆயிரம் பேர் இருப்பதையும், தம் படையில் முன்னூற்று பத்தொன்பது ஆண்கள் இருப்பதையும் கண்டு, கிப்லாவை நோக்கித் தம் இரு கரங்களையும் ஏந்தி தம் இறைவனிடம் தாழ்மையோடு இறைஞ்சினர். “இறைவனே! நீ என்னிடம் வாக்களித்ததைப் பூரணமாக்கி வைப்பாயாக! இறைவனே! நீ எனக்கு வாக்களித்ததைத் தந்தருள்வாயாக! இறைவனே! முஸ்லிம்களின் இந்த (சிறு) கூட்டத்தினரை நீ அழித்து விடுவாயானால், இவ்வுலகில் உன்னை வணங்கப்பட மாட்டாது” என்று கூறினர். (இவ்விதம் கூறி) தம் இரு கைகளையும் அடிக்கடி உயர்த்தித் தம் இறைவனிடம் தாழ்மையோடு இறைஞ்சி வந்தார்கள், அவர்களின் போர்வை தோளிலிருந்து கீழே விழும் வரை! அப்பொழுது அபூபக்ர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள், அண்ணலாரிடம் வந்து அன்னவர்களின் போர்வையை எடுத்து அன்னாரின் தோளில் போட்டு விட்டு, அண்ணலாருக்கு பின்னிருந்து அவர்களைக் கட்டிப் பிடித்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும். ஏனெனில், நிச்சயமாக அவன் உங்களுக்கு வாக்களித்ததை அதி விரைவில் நிறைவேற்றி வைப்பான்” என்று கூறினர். அப்பொழுது,
‘(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடிய போது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்குப் பதிலளித்தான்.’ என்னும் 8:9 -வது வசனம் அருளப்பட்டது. எனவே இறைவன் வானவர்களைக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவி புரிந்தான், என உமர் (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ) அவர்கள் எனக்கு அறிவித்தனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம், திர்மிதீ.
பத்ரு போரைப் பற்றி பல வசனங்கள் திருக்குர்ஆனில் அருளப்பட்டுள்ளன. அவைகளாவன:
(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது ; பிரிதொன்று காஃபிர்களாக இருந்தது ; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப் போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர் ; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான் ; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. ( ஸூரத்துல் ஆல இம்ரான், வசனம் – 13. )
‘பத்ரு’ போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான் ; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.
ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான். ( ஸூரத்துல் ஆல இம்ரான், வசனம் – 123, 124, 125. )
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் ; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கிவிடுவேன் ; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் ; அவர்களின் விரல் நுனிகளையும் வெட்டிவிடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூரும். ( ஸூரத்துல் அன்பால், வசனம் – 12. )
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் பத்ரு போரைப் பற்றியும், அதில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வானவர்களைக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவியதையும் கூறுகின்றன. மேலும், பத்ரு போரில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கலந்துக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சார்பில் போரிட்டிருக்கிறார்கள்! இது குறித்த ஹதீஸ் புகாரீ ஷரீபில் இடம்பெற்றுள்ளது. ‘பத்ருடைய தினத்தன்று, “தங்களுடைய குதிரையின் தலையைப் பிடித்துக் கொண்டு இதோ ஜிப்ரயீல் இருக்கிறார். அவரிடம் போர்க் கருவிகள் இருக்கின்றன” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.
இவ்விதம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆவின் பொருட்டாலும், அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் உதவியாலும், வானவர்களின் வருகையாலும் பத்ரு போரில் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. மக்கத்து குரைஷிகள் தோற்றோடினார்கள்! அவர்களில் இருபத்து நான்கு தலைவர்களும், வீரர்கள் பலரும் கொல்லப்பட்டனர்! எழுபது வீரர்களும் சிறைப் படுத்தப் பட்டனர்! முஸ்லிம்களில் பதினான்கு பேர்கள் மட்டுமே ஷஹீதானார்கள்.
உஹது போரிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து வானவர்கள் போரிட்டுள்ளனர். இது குறித்த விவரம் கீழ்கண்ட ஹதீஸ் மூலம் அறியப்படுகிறது.
“உஹதுடைய தினத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நான் பார்த்தேன். அவர்களுடன் (சேர்ந்து) இரண்டு மனிதர்கள் (அண்ணலார் சார்பாகக்) கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர். அவ்விருவரின் மீது வெள்ளை உடைகளிருந்தன. (அதற்கு) முன்னரும், பின்னரும் அவர்களை நான் பார்க்கவில்லை”. அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ. “அவ்விருவரும் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம், மீக்காயில் அலைஹிஸ்ஸலாம் ஆகிய வானவர்கள்” என்று முஸ்லிம் ஷரீபில் கூறப்பட்டுள்ளது. இவ்விதம் உஹது போரில் வானவர்கள், மனித உருவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து போரிட்டுள்ளனர்.
அகழ் போரிலும் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவியாக வானவர்களின் படையை ஏவியுள்ளான்! இது குறித்த விவரம் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
முஃமின்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள் ; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்தபோது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம் ; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான். ( ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் – 9. )
திருக்குர்ஆனின் இந்த வசனம் அகழ் போரின் போது அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, வானவர் படையை அனுப்பி முஃமின்களுக்கு புரிந்த அருட்கொடையைப் பற்றி கூறுகிறது.
அகழ் யுத்தம் ஹிஜ்ரீ 5 -ம் வருடம், துல்கஃதா மாதத்தில் நிகழ்ந்தது. இந்த யுத்தத்தில் அரப் நாட்டிலிருந்த பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, சுமார் இருபத்து நான்காயிரம் பேர்கொண்ட பெரும் படையை திரட்டினார்கள். யூதர்களும் இவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர். இப்பெரும்படை திருமதீனாவைத் தாக்க புறப்பட்டது.
இதை அறிந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். இறுதியாக, ஸல்மான் பாரிஸீ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்களின் ஆலோசனைப்படி திருமதீனா நகரில் உள்ள பாதுகாப்பற்ற இடங்களில் அகழிகளை வெட்டி பகைவர்களின் படையைத் தடுப்பது எனவும், அகழிக்கு இப்பக்கமாகவே இருந்துக் கொண்டு எதிரிகளை எதிர்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அகழி வெட்டும் பணி இருபது நாட்கள் வரை தொடர்ந்தது. அகழி வெட்டும் பணியில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுடன் சேர்ந்து பணிபுரிந்தார்கள்! அச்சமயம், போதிய உணவுப் பொருள்கள் இல்லாத காரணத்தால் அனைவரும் கடும் பசியுடன் அகழிகளை வெட்டினர்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கடும் பசியை அகற்ற தமது திருவயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டு அகழியை வெட்டினர்!
போர் தொடங்கியபோது, அகழியை கடந்து வருவதற்கான முறையை அறியாத எதிரிப் படைகள், அகழிக்கு அப்பால் இருந்து கொண்டு போரிட்டனர். இப்போர் சுமார் ஒருமாத காலம் வரை தொடர்ந்தது. ஆயினும் எதிரிப் படைகளுக்கு வெற்றி கிடைக்க வில்லை! கடைசியாக, கூட்டு சேர்ந்திருந்த யூதர்களும், குரைஷி கோத்திரத்தார்களும் மனந்தளர்ந்து பிளவு பட்டார்கள்!
அந்த சந்தர்ப்பத்தில்தான் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, திருக்குர்ஆன் வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி கடுங் குளிருடன் கூடிய புயற்காற்றை எதிரிப் படைகள் மீது வீசச் செய்தான்! அதன் காரணமாக எதிரிகள் மனம் கலங்கிப் போனார்கள்! அவர்களுடைய கூடாரங்கள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டன! பாத்திரங்கள் எல்லாம் காற்றில் பறந்து போயின! அதேசமயம் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வானவர்களையும் எதிரிப்படைகள் மீது ஏவிவிட்டான். அவர்கள் எதிரிகளின் மனங்களில் கிலியை ஏற்படுத்திவிட்டனர். அதன் காரணமாக எதிரிப் படைகள் போர்க்களத்தை விட்டும் ஓடிப் போனார்கள்! இந்த யுத்தத்தில் ஆறு முஸ்லிம்கள் ஷஹீதானார்கள். எதிரிப் படையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்!
இப்படியாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, போர்களில் வானவர்களை அனுப்பி அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவி செய்திருக்கிறான். வெற்றிகளைத் தந்திருக்கிறான். எதிரிகளை தோற்றோடச் செய்திருக்கிறான்!

14.உடுக்கை இழந்தவன் கைபோல
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை தன்னுடைய ஹபீபாக ஆக்கி சிறப்பித்திருக்கிறான். தன்னுடைய ஹபீபுக்கு சன்மார்க்க விரோதிகள் பேச்சாலும், செயலாலும் துன்பத்தைக் கொடுத்த போது உடனடியாக வஹீ மூலமாக ஆறுதலைக் கொடுத்திருக்கிறான். தன்னுடைய ஆதரவைக் கொடுத்திருக்கிறான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் விசனத்தைப் போக்கியிருக்கிறான். இதற்கு ஆதாரமாக பல்வேறு சம்பவங்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் நடைபெற்றுள்ளன. அவை ஹதீஸ்கள் மூலமாக கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த அத்தியாயத்தில் காணலாம்.
* ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுவதற்கு நின்றார்கள். அப்பொழுது ஏதோ ஒரு தவறு அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுக் கொண்டிருந்த நயவஞ்சகர்கள், “பார்த்தீர்களா, நிச்சயமாக இவருக்கு இரண்டு இதயங்கள் இருக்கின்றன. ஒரு இதயம் உங்களுடனும் மற்றொன்று ஏனையோரிடமும் இருக்கிறது” என்று கூறினார்கள். அப்பொழுது,
“எந்த மனிதனுக்கும் அவனுடைய நெஞ்சில் இரண்டு இதயங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை…”
என்னும் 33 : 4 ஆவது வசனம் அருளப்பட்டது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.
* ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபா (என்னும் குன்றின்) மீது ஏறி, “யா ஸபாஹாஹ்” என்று (கூறி) அழைத்தார்கள். அவர்களிடம் குரைஷியர் ஒன்று கூடி “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “காலையிலோ அல்லது மாலையிலோ உங்களிடம் பகைவர்கள் வருவார்கள் என்று உங்களுக்கு நான் அறிவித்தால் என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். “ஆம் (நம்புவோம்)” என்று அவர்கள் (பதில்) கூறினார்கள். அப்பொழுது, “நிச்சயமாக நான் எதிரிலுள்ள மிகக் கடுமையான வேதனையைக் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்” என்று கூறினார்கள். அதற்கு, “உமக்கு நாசத்தை (ஏற்படுத்தட்டும்). இதற்காகவா எங்களை நீர் ஒன்று திரட்டினீர்?” என்று அபூலஹப் கூறினார். அப்பொழுது,
(1) அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக ; அவனும் நாசமாகட்டும். (2) அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. (3) விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். (4) விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, (5) அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). என்னும் ஸூரத்துல் லஹப் அருளப்பட்டது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ.
* “நிச்சயமாக முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஒரு மகனும் இல்லை. அவரும் விரைவில் இறந்துவிடுவார். அவருடைய அடையாளம் அறுபட்டு(மறைந்தொழிந்து) விடும்” என்று குரைஷிகள் கூறினார்கள். அப்பொழுது,
(1) (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். (2) எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானீயும் கொடுப்பீராக. (3) நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன் தான் சந்ததியற்றவன். என்னும் ‘ஸூரத்துல் கவ்ஸர்’ ஐ இறைவன் அருளினான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: ரஜீன்.
* அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்த ஆரம்ப காலத்தில் ஒருநாள், தொழுது முடித்து இறைவனைப் பிரார்த்திக்கும் போது, “யா அல்லாஹ்! யா ரஹ்மான்!” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்த அபூஜஹ்லும், அவனுடைய தோழர்களும், “பல தெய்வங்களை வணங்க வேண்டாம் என்று எங்களுக்கு முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் உபதேசம் செய்கிறார். ஆனால், அவர் ‘யா அல்லாஹ், யா ரஹ்மான்’ என்று பல தெய்வங்களை பிரார்த்திக்கிறார்” என்று கூறினர். அப்பொழுது,
“நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள் ; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள் ; எப்பெயரைக் கொண்டு நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக;…என்னும் ஸூரத்து பனீ இஸ்ராயீல், 110 – வது வசனம் அருளப்பட்டது. ( புகாரீ. )
* ஒரு சமயம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்றிருந்தனர். (அதன் காரணமாக) அவர்கள் ஓரிரவு அல்லது இரண்டு இரவுகள் (தஹஜ்ஜூத் தொழ) எழுந்திருக்கவில்லை. அப்போது ஒரு பெண் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “முஹம்மதே! நிச்சயமாக உம்முடைய இறைவன் உம்மைக் கைவிட்டு விட்டான் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்” என்று கூறினாள். அப்பொழுது,
(1) முற்பகல் மீது சத்தியமாக – (2) ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக – (3) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை ; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை….என்று தொடங்கும் ‘ஸூரத்துள் ளுஹா’ அருளப்பட்டது. அறிவிப்பவர்: ஜூன்துப் இப்னு ஸூஃப்யான் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ. மற்றோர் அறிவிப்பில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருவதில் சுணக்கம் ஏற்பட்டதைக் கண்ட இணைவைப்போர், “நிச்சயமாக முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கை விடப்பட்டார்” என்று கூறினர். அப்பொழுது, “உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை”. என்னும் ‘ஸூரத்துள் ளுஹா’, 3 – வது வசனம் அருளப்பட்டது என குறிப்பிடப் பட்டுள்ளது.
* “நிச்சயமாக நாங்கள் உங்களை பொய்யராக்கவில்லை ; எனினும் நீங்கள் எதனைக் கொண்டு வந்தீர்களோ அதனையே பொய்யாக்குகின்றோம்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் அபூஜஹ்ல் கூறினான். அப்பொழுது,
(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம் ; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ; ஆனால் இந்த அநியாயக் காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னும் ‘ஸூரத்துல் அன்ஆம்’, 33 – வது வசனம் அருளப்பட்டது. அறிவிப்பவர்: அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.
* அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போரில் வெற்றி கண்டு திருமதீனாவுக்கு வந்து சேர்ந்த பின்னர், யூதர்களை ஒருங்கு சேர்த்து, “குரைஷி களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போன்று உங்களுக்கும் துன்பம் நேரிடுவதற்கு முன் நீங்கள் முஸ்லிம்களாக ஆகிவிடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “முஹம்மதே! போர் செய்யத் தெரியாத சில அறிவற்ற குரைஷிகளை நீங்கள் வெட்டி வீழ்த்தி வெற்றி பெற்றுவிட்ட எண்ணமானது உங்களை மயக்கிவிட வேண்டாம். நீங்கள் விரும்பினால் எங்களுடன் போர் செய்யுங்கள். அப்பொழுது, நாங்களும் மனிதர்கள் தாம் என்பதையும், எங்களைப் போன்றவர்களிடம் நீங்கள் மோதிக் கொள்ளவில்லை என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறினர். அப்பொழுது,
(12) நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள் ; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும். (13) (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக இருக்கிறது ; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது ; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது ; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப் போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர் ; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான் ; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.
என்னும் ஸூரத்துல் ஆல இம்ரான், 12 , 13 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: அபூதாவூத்.
* பனு தமீம் கூட்டத்தாரில் பலர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். அப்பொழுது, அபூபக்ர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம், கஃகாஃ இப்னு மஃபதை அவர்களுக்கு தலைவராக நியமிக்கும்படி வேண்டினார்கள். ஆனால் உமர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்களோ அக்ரஃ இப்னு ஹாபிஸைத் தலைவராக நியமிக்கும்படி வேண்டினார்கள். (அப்பொழுது) அபூபக்ர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் (உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்களை நோக்கி) “நீங்கள் எனக்கு விரோதமாகவே எதனையும் கூற ஆசைப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், “தங்களை விரோதிப்பது எனது நோக்கமல்ல” என்று கூறினார்கள். இவ்விதமாக பேச்சு வளர்ந்து அவ்விருவரின் சப்தமும் உயர்ந்து விட்டது! அப்பொழுது,
(1) முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள் ; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள் ; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன் ; நன்கறிபவன். (2) முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள் ; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் பேசாதீர்கள். (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் (நற்செயல்கள்) அழிந்து போகும்.
என்னும் அத்தியாயம் – 49 (ஸூரத்துல் ஹூஜூராத்), 1, 2 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, திர்மிதீ, நஸாயீ.
* குரைஷிகளிலுள்ள நிராகரிப்போர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விதியைப் பற்றி தர்க்கம் செய்தார்கள். அப்பொழுது,
(48) அவர்களுடைய முகங்கின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், “நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (49) நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
என்னும் அத்தியாயம் – 54 ( ஸூரத்துல் கமர் ), 48, 49 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன.

15.ரஹ்மதல்லில் ஆலமீன்
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஒரு அருட்கொடையாக ஆக்கி சிறப்பித்திருக்கிறான். இது குறித்து திருக்குர்ஆனில், ஸூரத்துல் அன்பியா, வசனம் – 107 ல், “(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை”. எனக் கூறியுள்ளான். இந்த வசனத்திற்கான விரிவுரையில் கீழ்கண்ட விளக்கம் கூறப்பட்டுள்ளது.
இந்த வசனத்தில் உள்ள ‘ஆலம்’ என்னும் அரபி சொல்லில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதவர்க்கம், ஜின் வர்க்கம், விலங்கினம், தாவரவினம் ஆகிய அனைத்து படைப்பினங்களும் அடங்குகின்றன. எனவே, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கண்ட அனைத்து சிருஷ்டிகளுக்கும் ரஹ்மத்தாக – அருட்கொடையாக ஆக்கி அனுப்பப்பட்டுள்ளார்கள். மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டே இந்த அகிலத்தில் அல்லாஹ்வுடைய இபாதத்தும், திக்ரும் நிலை பெறும்படியாகவும் அனுப்பப்பட்டுள்ளார்கள். இவ்விதம் அகிலத்திலுள்ள சிருஷ்டிகளுக்கெல்லாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அருட்கொடையாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பது, இந்த அகிலத்தின் உண்மையான ஆத்மா ‘ அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவை இபாதத்து செய்வதும், திக்ரு செய்வதும்தான் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இதன் காரணமாகத்தான் எப்பொழுது இந்த அகிலத்தை விட்டு இந்த ஆத்மா வெளியேறி விடுகிறதோ, அதாவது இந்த அகிலத்தில் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் இபாதத்தும், திக்ரும் முற்றிலுமாக இல்லாமல் போகிறதோ, அப்பொழுது இந்த அகிலமும், அனைத்து சிருஷ்டிகளும் அழிந்துபோகும், அதாவது கியாமத்து வந்துவிடும்!
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் இபாதத்தும், திக்ருமே இந்த அகிலத்தின் உண்மையான ஆத்மா என அறிந்துகொண்டால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை இந்த அகிலத்தின் அருட்கொடையாக ஆக்கியிருப்பதின் நோக்கம் தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது! ஏனெனில், இந்த அகிலத்தில் கியாமத்து நாள் வரையில் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் இபாதத்தும், திக்ரும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காரணமாகவும், அன்னாரின் போதனைகளாலுமே நிலை பெற்றிருக்கும்! இதன் காரணமாகத்தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் அல்லாஹூதஆலாவின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட ரஹ்மத்தாக – அருட்கொடையாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்கள். (மஆரிபுல் குர்ஆன், பாகம் – 6, பக்கம் – 233.)
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சிருஷ்டிகளுக்கெல்லாம் அருட்கொடையாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக மனித வர்க்கத்தார் மட்டுமின்றி, ஜின் வர்க்கத்தாரும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு சிலைகளும் சாட்சியம் கூறியுள்ளன! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் விரல் அசைவிற்கு சந்திரன் இரண்டு பகுதிகளாக பிளந்தது! தாவரங்கள் நடந்தன, பேசின! கற்களும் கலிமா கூறின! விலங்குகளும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையீடு செய்தன!
இப்படியாக அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பி சிறப்பித்திருக்கிறான்.

16.ஷபாஅத்து
மறுமை நாளில் மனித வர்க்கம் முழுவதற்கும் ஷபாஅத்து (பரிந்துரை)செய்யக் கூடிய பேறு அண்ணல் நபி ஸ்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே, அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா வழங்குவான்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும், அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் அனுமதியைக் கொண்டு மனித வர்க்கத்தாருக்கு ஷபாஅத்து புரிவார்கள்! அந்நாளில் ஏற்படும் கஷ்டத்திலிருந்து மனித வர்க்கத்தாரை காத்தருள்வார்கள்! அதுவும், ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதற்கொண்டு ஈஸா அலைஹிஸ்ஸலாம் வரை ஷபாஅத்து புரிய யாரும் இசையாத நிலையில்! இது குறித்த விவரம் வருமாறு:
இறுதி நாளில் இந்த உலகம் முழுவதுமாக அழிவைக் காணும். மனித இனம் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் முற்றிலுமாக அழிந்துபோகும்! அதன் பிறகு, ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதற்கொண்டு இறுதி நாள் வரை வாழ்ந்து மரித்த அனைவரும், அவரவர் வாழ்வில் அவரவர் ஆற்றிய காரியங்களுக்கு பதில் கூறுவதற்காக மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அந்நாளில் தாங்கமுடியாத கஷ்டத்தில் மக்கள் அனைவரும் இருப்பார்கள்! அந்நாளில் “சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம் அவர்களால் தாங்கிக் கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும்” என்று அபூஹூரைரா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள் அறிவித் திருக்கிறார்கள். (நூல்: புகாரீ, முஸ்லிம்.) “அகிலத்தாருக்கு ரப்பாக இருப்பவனின் முன்னிலையில் மக்கள் (விசாரணைக்காக) நிற்கும் (இறுதி) நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தன்னுடைய பாதிக்காதுகள் வரை (வியர்வையால் மூழ்கி இருப்பர்)” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ( நூல்: புகாரீ. )
மக்கள் அனைவரும் அவ்விதம் கஷ்டத்தில் தவித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய உள்ளத்தில் ‘தமக்காக பரிந்துரைக்கும்படி யாரிடமாவது கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தப்படும். இது குறித்து அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் பின்வருமாறு அறிவித் திருக்கிறார்கள்: “அல்லாஹ் மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்களுடைய உள்ளத்தில் (‘பரிந்துரைக்கும்படி யாரையாவது நாம் கேட்டுக் கொண்டால் நன்றாக இருக்குமே’ என்னும்) எண்ணம் ஏற்படுத்தப்படும்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம். )
அப்போது மக்கள் கூட்டம் கூட்டமாக பிரிந்து விடுவார்கள். ஒவ்வொரு வர்க்கமும் தம்முடைய நபியைப் பின் தொடர்ந்து சென்று தமக்காக இறைவனிடம் பரிந்து பேசும்படி கேட்டுக் கொள்வார்கள். ஆனால் யாரும் பரிந்துரை செய்யமாட்டார்கள். கடைசியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருவார்கள். இது குறித்து, இப்னு உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் வருமாறு: “மறுமையில் மக்கள் கூட்டம் கூட்டமாக பிரிந்து விடுவார்கள். ஒவ்வொரு வர்க்கமும் தன்னுடைய நபியை பின் தொடர்ந்து, “இன்ன நபியே! எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரையுங்கள்” என்று கூறுவார்கள். இறுதியாக, பரிந்துரைக்கும் முறையானது என்னிடம் வந்து முடிவுறும். இதுவே ‘ மிகவும் புகழ் பெற்ற இடமாகும்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ.) இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ மிகவும் புகழ் பெற்ற இடம்’ பற்றி திருக்குர்ஆனில் அத்தியாயம் – 17, ஸூரத்து பனீ இஸ்ராயீல், வசனம் – 79 ல், “இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையை தொழுது வருவீராக ; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், ‘ மகாமம் மஹ்மூதா ‘ என்னும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்”. எனக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நபிக்கும் அங்கீகரிக்கக்கூடிய ஒரு சிறப்பு பிரார்த்தனை உண்டு. எல்லா நபிமார்களும் அந்தப் பிரார்த்தனைகளை இந்த உலகத்திலேயே கேட்டுவிட்டனர். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்குரிய பிரார்த்தனையை மறுமை நாளில் தம்முடைய உம்மத்துகளுக்காக பரிந்துரை செய்ய பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்த பிரார்த்தனையின் பயன் அல்லாஹ் நாடினால், அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரிக்கக்கூடியவர்களுக்குக் கிடைக்கும். இது குறித்து அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் பின்வருமாறு அறிவித்திருக்கிறார்கள்: “ஒவ்வொரு நபிக்கும் ஒரு பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும். அதனை அவர் பிரார்த்திக்கிறார். என்னுடைய (அங்கீகரிக்கப்படுகிற) பிரார்த்தனையை மறுமையில் என் உம்மத்துக்கு (வர்க்கத்துக்கு) ஷபாஅத்து (பரிந்துரை) செய்வதற்காக நான் ஒதுக்கி வைத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ, முஸ்லிம்.) இன்னொரு ஹதீஸில், “ஒவ்வோர் நபிக்கும் (தம் உம்மத்து தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு. எல்லா நபிமார்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே ) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் உம்மத்தாருக்கு பரிந்துரை செய்வதற்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் உம்மத்தாரில் எவர் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம்.)
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பிரார்த்தனையைக் கொண்டு மக்களுக்கு ஷபாஅத்து (பரிந்துரை) புரிவார்கள். இது குறித்த முழுமையான விவரங்கள் கீழ்காணும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
ஒருநாள் (விருந்தொன்றில்) அண்ணல் நபி ஸலலல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (பக்குவம் செய்த) இறைச்சி கொண்டு வரப்பட்டது. (அதில்) முன்கால்சப்பை (இறைச்சி) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பரிமாறப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அதனை அவர்கள் கடித்து (ச் சாப்பிட்டு) விட்டுப் பின்னர், நான் கியாமத்து (இறுதி) நாளில் மனிதர்கள் யாவருக்கும் தலைவன் ஆவேன். எதனால் அது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒரு இடத்தில் அல்லாஹ் முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரு சமவெளியில் ஒன்று சேர்ப்பான். அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை ஊடுருவிச் செல்லும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மக்களுக்கு அவர்கள் தாங்கிக் கொள்ள முடியாத கஷ்டமும், சங்கடமும் ஏற்படும். அவர்கள் சகிக்க மாட்டார்கள். அப்போது மனிதர்களில் சிலர் (சிலரை நோக்கி) “நீங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையைக் கவனிக்கவில்லையா? உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடி)ப் பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம், “(ஆதி பிதா) ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள். (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார் )” என்பர்.
பின்னர் மக்கள் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்து, “நீங்கள் அபுல்பஷராக (மனித இனத்தின் தந்தையாக) இருக்கிறீர்கள். உங்களை அல்லாஹ் தன்னுடைய கரத்தால் படைத்தான். தன்னுடைய ஆன்மாவிலிருந்து உங்களில் அவன் ஊதி, வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும்படி உத்தரவிட்டான். அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடுங்) கோபம் கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறிவிட்டு, “நீங்கள் வேறு யாரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்.
உடனே மக்கள் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்து, “நூஹே! புவியோரில் தூதராக வந்தவர்களில் நீங்கள் முதலாமவர். தங்களை ‘நன்றியுள்ள அடியார்’ (அப்தன் ஷகூறா) என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள், “என் இறைவன் இன்று (என் மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போன்று கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபி மார்களுக்கும் இருப்பதைப் போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது!” என்று கூறிவிட்டு, “நீங்கள் (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்.
அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று, “நீங்கள் அல்லாஹ்வின் நபி ஆவீர்கள். புவியோரில் அல்லாஹ்வுடைய கலீல் (தோழர்). எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “என் இறைவன் இன்று (என் மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைக் கூறி இருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
உடனே மக்கள் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்து, “மூஸாவே, தாங்கள் அல்லாஹ்வின் ரஸூல் (தூதர்). தன்னுடைய ரிஸாலத்தையும் (தூதையும்) தன்னுடைய கலாமை(பேச்சை)யும் கொண்டு மக்கள் அனைவரையும் விட உங்களை சிறப்பித்திருக்கிறான். ( ஆகவே ) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள், “இன்று என் இறைவன் (என் மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. நான் ஒரு உயிரைக் கொலை செய்திருக்கிறேன். அதனைக் கொல்லுமாறு நான் கட்டளை யிடப்படவில்லை. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
உடனே மக்கள் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று, “ஈஸாவே, நீங்கள் அல்லாஹ்வின் ரஸூல் (தூதர்). நீங்கள் (குழந்தையாய்) தொட்டிலில் இருந்தபோதே மக்களிடம் பேசினீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். ஆகவே, எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்துள்ள (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “என் இறைவன் இன்று (என் மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். எந்தக் குற்றத்தையும் தாம் செய்ததாக அவர் கூறமாட்டார்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து, “முஹம்மதே! தாங்கள் அல்லாஹ்வின் ரஸூல் (தூதர்). காத்தமுல் அன்பியா (நபிமார்களுக்கு முத்திரையாக உள்ளவர்கள்). தங்களின் பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் அல்லாஹ் மன்னித்திருக்கிறான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்துள்ள (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறுவார்கள்.
அப்பொழுது, அர்ஷூக்கு கீழே நான் வந்து என்னுடைய இறைவனுக்கு (ப் பணிந்து) ஸூஜூது செய்வேன். அல்லாஹ் தன்னை புகழ்வதற்குரிய முறைகளையும், அவனுக்கு சொல்வதற்குரிய அழகிய பாராட்டு தல்களையும் எனக்கு வெளி யாக்குவான். எனக்கு முன்னர் எவருக்கும் அதனை வெளியாக்கியதில்லை. (அவற்றைக் கூறி இறைவனைப் புகழ்ந்து திக்ரு செய்வேன்.) பின்னர், (என்னிடம்) “முஹம்மதே! உம்முடைய தலையை உயர்த்துவீராக. கேளுங்கள், அது கொடுக்கப்படும். பரிந்துரை செய்யுங்கள். உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று கூறப்படும். அப்பொழுது, நான் என் தலையை உயர்த்தி, “இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம்” என்று கூறுவேன். அப்பொழுது, “முஹம்மதே! சுவர்க்கத்தின் தலைவாசல்களில் வலப்புறமுள்ள வாசலில் உம்முடைய சமுதாயத்தாரில் விசாரணை இல்லாதவர்களை பிரவேசிக்கச் செய்வீராக. அது அல்லாததிலும் (இதர தலைவாசல்களிலும் ஏனைய) மக்களுடன் அவர்களும் சேர்ந்து கொள்வார்கள்” என்று கூறப்படும்.
பின்னர், “எவன் கரத்தில் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக(க் கூறுகிறேன்). சுவர்க்கத்தின் நிலைக்கம்பங்களில் இரண்டு நிலைக் கம்பங்களுக்கிடையில் ( உள்ள தூரம் ) மக்காவுக்கும் ஹிம்யருக்கும் இடையிலுள்ளதைப் போலவோ அல்லது மக்காவுக்கும் புஸ்ராவுக்கும் இடையிலுள்ளதைப் போலவோ (தூரம்) இருக்கும்” என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம். )
அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் பின்வரும் விஷயத்தையும் கூடுதலாக அறிவித்திருக்கிறார்கள்: அப்பொழது, ஈஸாவிடத்தில் மக்கள் வருவார்கள். “அதற்கு நான் (தகுதி) இல்லை. எனினும் முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களை(ப் பற்றிப் பிடித்துக் கொள்வது) உங்களுக்கு அவசியமாகும்” என்று கூறுவார்.அப்பொழுது, என்னிடம் அவர்கள் வருவார்கள். “அதற்கு நான் (தகுதியுள்ளவன்)” என்று நான் கூறி என்னுடைய இறைவனிடம் அனுமதி கோருவேன். எனக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, எனக்கு (இல்ஹாமில் அவனைப் புகழ வேண்டிய முறை பற்றிய) புகழ்கள் அறிவிக்கப்படும். அவற்றைக் கொண்டு நான் புகழ்வேன். இப்பொழுது, எனக்கு (அவை இன்னவை என்று கூற) வராது. அப்புகழ்களைக் கொண்டு இறைவனைப் புகழ்ந்து அவனுக்கு ஸூஜூது செய்தவனாக நான் விழுவேன்.
அப்பொழுது (இறைவன்) “முஹம்மதே! உம்முடைய தலையை உயர்த்துவீராக. நீர் விரும்புவதைக் கூறுவீராக. உமக்கு செவி கொடுக்கப்படும். கேட்பீராக. (நீர் கேட்பது) கொடுக்கப்படும். பரிந்துரை செய்வீராக. (உம்முடைய பரிந்துரை) ஏற்றுக் கொள்ளப்படும்” என்று கூறுவான். அப்பொழுது, “என்னுடைய இரட்சகனே! என் உம்மத்து, என் உம்மத்து” என்பேன். “நீர் சென்று எவருடைய இதயத்தில் தொலிக் கோதுமை அளவு ஈமான் இருக்கிறதோ, அவரை(யும்) அதிலிருந்து (நரகிலிருந்து) வெளி யேற்றுவீராக” என்று கூறப்படும். நான் சென்று (அப்படியே) செய்வேன்.
பின்னர், நான் திரும்ப வந்து அந்தப் புகழ்களைக் கொண்டு இறைவனை புகழ்வேன். பின்னர், அவனுக்கு ஸூஜூது செய்தவனாக விழுவேன். அப்பொழுது, “முஹம்மதே! உம்முடைய தலையை உயர்த்துவீராக. (நீர் விரும்புவதைக்) கூறுவீராக. உமக்கு செவி கொடுக்கப்படும். கேட்பீராக. (நீர் கேட்பது) கொடுக்கப்படும். பரிந்துரை செய்வீராக. (உம்முடைய பரிந்துரை) ஏற்றுக் கொள்ளப்படும்” என்று கூறப்படும். அப்பொழுது, “என் உம்மத்து, என் உம்மத்து, என் உம்மத்து” என்று கூறுவேன். அதற்கு, “நீர் சென்று எவருடைய இதயத்தில் கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவரை அதிலிருந்து (நரகிலிருந்து) வெளியேற்று வீராக” என்று கூறுவான். நான் சென்று (அவ்விதமே) செய்வேன்.
பின்னர், நான் திரும்ப வந்து அந்தப் புகழ்களைக் கொண்டு இறைவனை நான் புகழ்வேன். பிறகு, அவனுக்கு ஸூஜூது செய்தவனாக விழுவேன். அப்பொழுது, “முஹம்மதே! உம்முடைய தலையை உயர்த்துவீராக. (நீர் கூற விரும்பியதைக்) கூறுவீராக. (அதற்குச்) செவி கொடுக்கப்படும். (கேட்க விரும்புவதைக்) கேட்பீராக. (அது உமக்குக்) கொடுக்கப்படும். (பரிந்துரை செய்ய விரும்புபவருக்கு) பரிந்துரை செய்வீராக. (உம்முடைய பரிந்துரை) ஏற்றுக் கொள்ளப்படும்” என்று கூறப்படும். அப்பொழுது, “என்னுடைய இரட்சகனே! என் உம்மத்து, என் உம்மத்து” என்று கூறுவேன். “நீர் சென்று எவருடைய இதயத்தில் கடுகு விதையளவினும் மிகக் குறைவான ஈமான் (இறை நம்பிக்கை) இருக்கிறதோ, அவரை(யும் நரக) நெருப்பை விட்டு வெளியேற்றுவீராக” என்று கூறப்படும். நான் சென்று (அவ்விதமே) செய்வேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ. )
மற்றோர் அறிவிப்பில், “பின்னர், நான்காவதாக நான் திரும்பி வந்து அந்தப் புகழ்களைக் கொண்டு இறைவனை புகழ்ந்து, அவனுக்கு ஸூஜூது செய்தவனாக நான் விழுவேன். அப்பொழுது, “முஹம்மதே! உம்முடைய தலையை உயர்த்திக் கூறுவீராக. (உமக்குச்) செவி கொடுக்கப்படும். (கேட்க விரும்புவதைக்) கேட்பீராக. அது கொடுக்கப்படும். (பரிந்துரை செய்ய விரும்புபவருக்கு) பரிந்துரை செய்வீராக. (உம்முடைய பரிந்துரை) ஏற்றுக் கொள்ளப்படும்” என்று கூறப்படும். “என்னுடைய இரட்சகனே! ‘ லாஇலாஹ இல்லல்லாஹூ’ (வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யரும் இல்லை) என்று கூறியவருக்கு (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி கொடுப்பாயாக” என்று கூறுவேன். “என்னுடைய இஸ்ஸத்தின் (கண்ணியத்தின்) மீதும், என்னுடைய கிப்ரியாவின் (பெருமையின்) மீதும், என்னுடைய அள்மத்தின் (மகத்துவத்தின்) மீதும் சத்தியமாக. லாஇலாஹ இல்லல்லாஹூ என்று கூறியவரை அதிலிருந்து (நரகிலிருந்து) நிச்சயமாக நான் வெளியாக்குவேன்” என்று (அல்லாஹ்) கூறுவான் (என்று மற்றோர் அறிவிப்பில்) இருக்கிறது.
இவ்விதமாக, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மறுமை நாளில் மனித வர்க்கத்தாரின் கஷ்டத்தைப் போக்க முன்வருவார்கள். தமக்குரிய விசேஷ பிரார்த்தனையைப் பயன்படுத்துவார்கள்.மனித வர்க்கத்தாருக்காக அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவிடம் ஷபாஅத்து (பரிந்துரை) செய்வார்கள். அதன் மூலம் மனித வர்க்கத்தாரை கொடிய கஷ்டத்திலிருந்தும், சகிக்க முடியாத துன்பத்திலிருந்தும் காப்பாற்றுவார்கள். முஃமின்களை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வார்கள். மேலும், பாவிகளையும், அணுவளவு ஈமான் கொண்டிருந்தவர்களையும் கூட நரகத்திலிருந்து மீட்டு சுவர்க்கத்தில் சுகிக்கச் செய்வார்கள். இத்தகைய பெரும்பேறு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வழங்கி சிறப்பித்துள்ளான்.
மேலும், ஒவ்வொரு முறையும் பாங்கு சொல்லி முடிந்தவுடன் கீழ்கண்ட துஆவை ஓதுபவருக்கு, மறுமை நாளில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்து கிடைக்கப்பெறும். இது குறித்த ஹதீஸூம், துஆவும் வருமாறு: “அல்லாஹூம்ம ரப்(B)ப ஹாZiஹித்(D) தஃவத்தித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் QAஇமத்தி, ஆத்தி முஹம்மதனில் வஸீலத்த வல் FA’ZEEலத்த வப்(B)அஸ்ஹூ மQAமன் மஹ்மூதனில்லZEE வஅத்தஹூ இன்னக லாதுக்(KH)லிFUல் மீஆத்(D). (பொருள்: நாயனே! நிறப்பமான இந்த அழைபபுக்கும் நிரந்தரமான தொழுகைக்கும் ரப்பானவனே! முஹம்மதுக்கு வஸீலாவையும் சிறப்பையும் கொடுத்து, அவருக்கு நீ வாக்களித்துள்ள மக்காமன் மஹ்மூதில் அவரை எழுப்புவாயாக.) என்று பிரார்த்திப்பவருக்கு கியாமத்து நாளில் எனது ஷபாஅத்து கடமையாகி விட்டது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிறுப்னு அப்தில்லாஹி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ. )
எனவே, மேற்கண்ட துஆவை அதிகம் அதிகம் ஓதி, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துக்கு தகுதி பெருவோமாக.

17.திரு மதீனாவும், மஸ்ஜிதுந் நபவியும்
“நாயனே! மக்காவில் ஏற்படுத்தியதைவிட இரட்டிப்பு பரக்கத்தை மதீனாவில் ஏற்படுத்துவாயாக” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், முஅத்தா. )
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்விதம் பிரார்த்தனை செய்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாகப் பார்க்கப்போனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திரு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பிறகுதான் இஸ்லாம் வேகமாக பரவியது! பல்வேறு மக்களுடைய ஆதரவு கிடைத்தது! போர்களில் வெற்றி கிட்டியது! அண்ணலாரின் புகழும் பரவியது! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய ஐம்பத்து மூன்றாவது வயதில் திரு மக்காவை விட்டு திரு மதீனாவுக்கு ஹிஜ்ரத் புரிந்தார்கள். அதுவரை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திரு மக்காவிலேயே வாசம் புரிந்தார்கள். அக்கால கட்டத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு கஷ்டங்களையும், சோதனை களையும் அனுபவித்தார்கள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், தம்முடைய ஆறாம் வயதில் அன்னையை இழந்தார்கள்! எட்டாம் வயதில் பாட்டனாரை இழந்து தவித்தார்கள்! இருபத்து ஐந்தாம் வயதில் கதீஜா பிராட்டியாரை மணம் முடித்தார்கள்! முப்பத்து ஐந்தாம் வயதில் திருக் கஃபாவை புதுப்பிக்கும் பணியில் பங்கேற்றார்கள்! நாற்பதாம் வயதில் நபித்துவம் கிடைத்தது! ஹிரா மலைக் குகையில் வஹீ (வேத அறிவிப்பு) அருளப்பட்டது. அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்! அதன் காரணமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்தம் தோழர்களும் பல்வேறு கொடுமைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்தார்கள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நாற்பத்து ஐந்தாம் வயதில், சன்மார்க்க விரோதிகளின் கொடுமைகளை தாங்க முடியாத நிலையில் தோழர்கள் அபிஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்! ஐம்பதாம் வயதில் அன்பிற்குரிய துணைவியார் கதீஜா பிராட்டியாரையும், தம்முடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் அவர்களையும் இழந்து தவித்தார்கள்! அதே ஆண்டில் தாயிப் நகரத்து வீதயிலே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுமைப் படுத்தப்பட்டார்கள்! ஐம்பத்து ஓராம் வயதில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தை மேற்கொண்டார்கள்! ஐங்காலத் தொழுகையும் கடமை ஆக்கப்பட்டது!
ஐம்பத்து மூன்றாம் வயதில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் உத்தரவுப்படி திரு மதீனாவுக்கு ஹிஜ்ரத் புரிந்தார்கள்! மதீனா வாசிகள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை உற்சாகமாக வரவேற்று உபசரித்தார்கள். மக்கத்து குரைஷிகள் புரிந்த கொடுமைகளுக்கு மருந்தாக மதீனாவாசிகள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்தம் தோழர்களையும் கண்ணியப் படுத்தினார்கள்! இவ் உலகத்தில் சகோதரத்துவத்துக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள்! ஐம்பத்து ஐந்தாம் வயதில் கிப்லாவின் திசை மஸ்ஜிதுல் அக்ஸாவின் பக்கத்திலிருந்து மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) பக்கமாக மாற்றப்பட்டது! ரமலான் மாத நோன்பு கடமையாக்கப்பட்டது! ஜக்காத்து கடமையாக்கப்பட்டது! அதே வருடம் பத்ருப் போரும் நடந்தது! அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் உதவியைக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய படை மாபெரும் வெற்றியைக் கண்டது! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஐம்பத்து ஆறாம் வயதில் உஹதுப் போர் நடைபெற்றது! அதே வருடம் மது ஹராம் ஆக்கப்பட்டது. ஐம்பத்து எட்டாம் வயதில் கந்தக் (அகழ்) போர் உட்பட சில போர்கள் நடந்தன. பர்தா பற்றிய அருள்மறை வசனம் அருளப்பட்டது. ஹஜ்ஜூ கடமை ஆக்கப்பட்டது. ஐம்பத்து ஒன்பதாம் வயதில் ஹூதைபியா உடன்படிக்கை ஏற்பட்டது. அதே வருடத்தில் மன்னர்களை இஸ்லாமியத்துக்கு அழைக்கும் பணியைத் தொடங்கினார்கள்! அறுபதாம் வயதில் கைபர் உட்பட சில போர்கள் நடந்தன! அறுபத்து ஒன்றாம் வயதில் திருமக்கா வெற்றிக் கொள்ளப்பட்டது. ஹூனைன், தாயிப் போர்கள் நடந்தன. அறுபத்து இரண்டாம் வயதில் தபூக் யுத்தம் நடைபெற்றது. அறுபத்து மூன்றாம் வயதில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.
இப்படியாக, திரு மதீனாவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திரு வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. வளர்ச்சிகள் ஏற்பட்டன. வெற்றிகள் கிட்டின. அதனால்தானோ என்னவோ, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் “மக்காவில் ஏற்படுத்தியதை விட இரட்டிப்பு பரக்கத்தை மதீனாவில் ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தித் தார்கள்!
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்து திருமதீனாவுக்கு வந்தபோது திருமதீனா, ‘யத்ரிப்’ என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. யத்ரிப் என்னும் பெயர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கவில்லை. ஏனெனில், யத்ரிப் என்னும் பெயருக்கு ‘இழித்துக் கூறுவதில் மிகவும் கடுமையானது’ என்பது பொருளாகும்! எனவேதான் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிப் என்னும் பெயரை மாற்றி ‘மதீனா’ என்னும் பெயரை சூட்டினார்கள். மதீனா என்னும் பெயருக்கு ‘பட்டணம்’ என்று பொருளாகும்! மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திருமதீனாவிற்கு ‘மணம் உள்ளது’ என்னும் பொருள் கொண்ட ‘தையிபா’ என்றும், ‘மணம் பெற்றது’ என்னும் பொருள் கொண்ட ‘தாபர்’ என்றும் பெயர் சூட்டினார்கள். மேலும், திருமதீனாவைப் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் பல்வேறு விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். அவற்றில் சில:
“எல்லா நகரங்களையும் மிகைக்கிற ஓர் ஊருக்கு(ச் செல்லுமாறு) நான் கட்டளையிடப் பட்டிருக்கிறேன். அதற்கு யதுரிபு என்று சொல்லு கிறார்கள் ; அதுதான் மதீனா. கொல்லுலை இரும்பிலுள்ள துருவை ஒழிப்பது போல தீயோரை அது ஒழித்து விடும்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
“மதீனாவுக்கு ‘தாபா’ என்று அல்லாஹ் பெயரிட்டான்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் தபூக்கிலிருந்து நாங்கள் திரும்பி வந்துக் கொண்டிருந்தோம். மதீனாவுக்கு பக்கத்தில் நாங்கள் நெருங்கியபோது, “இது தாபத்துன் (மணமானது)” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூமைத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
“திரு மதீனா இன்ன இடத்திலிருந்து இன்ன இடம்வரை ஹரம். அதன் மரம் வெட்டப் படக்கூடாது. அதில் (மார்க்க விஷயத்தில் புதியது) எதையும் புதிதாக ஏற்படுத்தக் கூடாது. அங்கு (மார்க்க விஷயத்தில்) புதியதை உண்டு பண்ணுகிறவரின் மீது அல்லாஹ், மலக்குகள், மக்கள் யாவருடைய முனிவு சாபம் ஏற்படும்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
“மதீனாவின் தலை வாசல்களில் மலக்குகள் (காவல் புரிந்துக் கொண்டு) இருக்கிறார்கள். (அதனால்) அதற்குள் தாஊனும், தஜ்ஜாலும் நுழைய முடியாது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ.
“மதீனாவாசிகளுக்குத் தீங்கிழைப்போர் நீரில் உப்பு கரைவது போல் கரைந்து விடுவார்கள்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃது ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
“எவருக்கு மதீனாவில் இறக்க முடியுமோ அவர் அங்கு இறக்கவும். ஏனெனில், நிச்சயமாக நான் அங்கு இறப்பவருக்கு (அல்லாஹ்விடம்) பரிந்துரைப்பேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.
இவ்விதமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த திரு மதீனாவை, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா ‘தாபா (மணமுள்ளது)’ என்று பெயரிட்டு சிறப்பித்துள்ளான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திரு மதீனாவை ‘ஹரம் ( கண்ணியமான இடம் )’ என அறிவித்திருக்கிறார்கள். திரு மதீனாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ரெளலா ஷரீபும் திரு மதீனாவிலேயே அமைந்துள்ளது. இதுவும் ஒரு சிறப்பாகும்.
திரு மதீனாவிற்கு பெருமை சேர்க்கும் இன்னொரு விஷயம் மஸ்ஜிதுந் நபவீ ஆகும். மஸ்ஜிதுர் ரஸூல் என போற்றப்படும் இந்த மஸ்ஜிதை நிர்மாணிக்கும் பணியில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் கலந்து கொண்டார்கள். தமது திருக் கரங்களால் கல்லையும், மண்ணையும் சுமந்து சென்று இப் பள்ளிவாசலைக் கட்டினார்கள். மஸ்ஜிதுந் நபவீ நிர்மாணிக்கப்பட்ட விவரத்தை கீழ்கண்ட ஹதீஸ் மூலமாக அறியலாம்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வந்த பொழுது, அதன் மேற்புறத்தில் வாழ்ந்து வந்த அம்ருப்னு அவ்ப்பு என்று சொல்லப்படும் குடும்பத்தினரிடம் தங்கி, அவர்களிடத்தில் நான்கு இரவு (பகல்கள்) இருந்தனர். பின்னர், பனூ நஜ்ஜாருடைய தலைவர்களை அழைத்து வருமாறு ஆள் அனுப்பினார்கள். அவர்கள் தங்களின் கழுத்தில் வாள்களை மாட்டிக் கொண்டு வந்து சேர்ந்தனர். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வாகனத்தின் மீதும், அன்னாருக்குப் பின்னால் அபூபக்ர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களும் ஏறி, பனூ நஜ்ஜார்கள் புடைசூழப் புறப்பட்டு அபூஅய்யூப் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களுடைய (வீட்டு) வாசலில வந்து, தங்களுடைய பொருள்களை வைத்தனர். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “பனூ நஜ்ஜார்களே! உங்களுடைய இந்த தோட்டத்தை எனக்கு விற்று விடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “இல்லை, இறைவன் மீது ஆணையாக, நாங்கள் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் இதற்குரிய விலையைப் பெற விரும்பவில்லை (அதாவது: விலையின்றியே கொடுக்கிறோம்)” என்று கூறினார்கள். அது பேரீச்ச மரங்களும், இணை வைப்பவர் களுடைய கப்ருகளும், மேடு பள்ளமுடைய தரையை கொண்டதாகவும் இருந்தது. எனவே, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்ச மரங்களை வெட்டிச் சாய்க்குமாறு கட்டளை யிட்டார்கள். அவ்விதமே மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்(டு வேரோடு தோண்டி எடுக்கப்பட்)டன. இணை வைப்பவர்களுடைய கப்ருகள் தோண்டப்(பெற்று அவற்றில் இருந்த எலும்புகள் அப்புறப் படுத்தப்) பட்டன. அதன்பின் தரையும் சரிசமமாக ஆக்கப்பட்டது. aபின்னர், பள்ளியின் கிப்லா திசையில் பேரீச்ச மரங்கள் வரிசையாக நடப்பட்டு, அதன் ஓரத்தில் மக்கள் பாடிக் கொண்டே கல்லால் (சுவர்) கட்டி சரிசெய்துக் கொண்டிருந்தனர். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களுடன் இருந்தனர். அப்போது அவர்கள், “இறைவனே! மறுமையின் நன்மையைத் தவிர வேறு எந்த நன்மையும் (நன்மை) இல்லை. எனவே, மதீனாவின் ஆதரவாளர்களுக்கும், மக்காவின அகதிகளுக்கும் உதவி புரிவாயாக!” என்று கூறிக் கொண்டு (கவித் தோரணையில் பாடிக் கொண்டு) இருந்தனர். அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ.
மஸ்ஜிதுந் நபவீ விரிவு படுத்தப்பட்டது குறித்து இந்த ஹதீஸில் விவரம் கூறப்பட்டுள்ளது. “அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில், பள்ளிவாயில் பச்சைக் கற்களால் சுவர் எழுப்பப்பட்டும், பேரீச்சம் ஓலையால் முகடு போடப்பட்டும், பேரீச்ச மரத்துண்டுகளைக் கொண்டு தூண் நிறுத்தப்பட்டும் இருந்தது. பின்னர் அபூபக்ர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களுடைய காலத்தில், இவற்றில் யாதொன்றும் அதிகப் படுத்தப்படவில்லை. ஆனால், உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் (தம்முடைய காலத்தில்) சற்று அதிகப்படுத்தி – ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் இருந்த, அதே கடைக்காலின் மீது கட்டடம் எழுப்பினார். பின்னர் உஸ்மான் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களுடைய காலத்தில், அது பெரிதும் விரிவு படுத்தப்பட்டு, சுற்றுச் சுவர்களைப் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய கற்களைக் கொண்டும், சுண்ணாம்பைக் கொண்டும் கட்டி, அதன் தூண்களையும் மேற்படி கற்களால் எழுப்பி, அதன் முகட்டுக்குத் தேக்கு மரத்தையும் பயன் படுத்தினார்கள்”. அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, அபூதாவூத்.
மஸ்ஜிதுந் நபவீயின் சிறப்புகள் பற்றியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக் கிறார்கள். அவற்றில் சில ஹதீஸ்கள் வருமாறு:
“என்னுடைய இந்த மஸ்ஜிதில் ஒரு தொழுகை, மஸ்ஜிதுல் ஹராமைத் தவிரவுள்ள இதர மஸ்ஜிதில் ஆயிரம் தொழுகைகளை விட சிறந்தது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
“அல்மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுர் ரஸூல், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று மஸ்ஜிதுகளைத் தவிர பயணம் செய்யக் கூடாது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
“என் வீட்டுக்கும், என் மின்பருக்கும் இடையில் உள்ளது சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்கா. என்னுடைய மின்பர் என் ஹெளலின் மீதிருக்கிறது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், முஅத்தா.
இவ்விதமாக திரு மதீனாவும், மஸ்ஜிதுந் நபவீயும் சிறப்பிக்கப்பட்டுள்ளன!

18.தவ்ராத்திலும், இன்ஜீலிலும்
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, தவ்ராத் வேதத்தை ஹஜ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளினான். அந்த தவ்ராத் வேதத்திலே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் குண நலன்கள் பற்றி சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. ஹஜ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இன்ஜீல் அருளப்பட்டது. இன்ஜீலிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நற்செய்தி கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து திருக்குர்ஆனிலே, அத்தியாயம் – 7, (ஸூரத்துல் அஃராஃப்), வசனம் – 157 ல் இவ்விதம் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.
அவர்கள் எத்தகையோர் என்றால், அவர்களிடத்திலுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் அவரைப் பற்றி எழுதப்பட்டவராக காண்கிறார்களே, அத்தகைய எழுதப் படிக்கத் தெரியாத (உம்மி) நபியான (நம்) தூதரை பின்பற்றுவார்கள். அவர்களை நன்மையான காரியங்களை (செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார். இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி வைத்து, கெட்டவற்றை அவர்கள் மீது விலக்கி வைப்பார். இன்னும் அவர்களை விட்டும், அவர்களுடைய சுமையையும், அவர்களின் மீதுள்ள விலங்குகளையும், (அல்லாஹ்வின் பல கடினமான கட்டளைகளை அவன் அனுமதி கொண்டு) அவர் நீக்கிவிடுவார். ஆகவே எவர்கள் அவர் மீது ஈமான் கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கி வைக்கப்பட்ட அந்த (வேத) ஒளியை பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள். ( 7 : 157 )
தவ்ராத் வேதத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தன்மையைப் பற்றிக் கூறப்பட்டிருப்பது என்னவென்று அப்துல்லாஹிப்னு அம்ரிப்னில் ஆஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூமா அவர்கள் வினவப்பட்டார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக(க் கூறுகிறேன்). அவர்களுடைய தன்மைகளைப் பற்றி திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் அதே விஷயம் தவ்ராத்திலும் கூறப்பட்டிருக்கிறது. அதாவது, நபியே! சாட்சி கூறுபவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும், எழுதப்படிக்கத் தெரியாதவர்(உம்மீ) களுக்கு பாதுகாப்பாளராகவும் உம்மை நாம் அனுப்பியிருக்கிறோம். நீர் எமது அடியாராகவும், தூதராகவும் இருக்கிறீர். உமக்கு “அல்முத்தவக்கில்” என்று பெயரிட்டிருக்கிறேன். (நீர்) தீய குணம் உள்ளவரல்லர். வன்னெஞ்ச முள்ளவருமல்லர். தீமைக்கு பதில் தீமை செய்பவரும் அல்லர். எனினும், சகிப்பவர், மன்னிப்பவர், லாஇலாஹ இல்லல்லாஹூ (வணக்கத்துக் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று அவர்கள் கூறுவதன் மூலம் உம்மைக் கொண்டு கோணலான மார்க்கத்தைக் கொண்டு குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், மறந்த இதயங்களையும் திறக்காதவரையிலும் உம்மை அவன் அழைத்துக் கொள்ளவே மாட்டான் என்று கூறப்பட்டிருக்கிறது” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னில் ஆஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ. )
இன்ஜீலில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து கூறப்பட்டிருக்கும் நற்செய்தி பற்றி திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதாவது:
மேலும், மர்யமின் மகன் ஈஸா “இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் உங்களின்பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் ரஸூலாக இருக்கின்றேன். எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப் படுத்துபவனாகவும், எனக்குப் பின்னால் வரப்போகின்ற, அஹ்மது என்னும் பெயரைக் கொண்ட தூதரைப் பற்றி, நற்செய்தி கூறுபவனாகவும் இருக்கின்றேன் என்று கூறிய நேரத்தை (நபியே நீர் நினைவு கூர்வீராக). அவர்களிடம் (அத்தூதராகிய) அவர் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தபோது, இது தெளிவான சூனியமாகும் என்று அவர்கள் கூறினார்கள். ( அத்தியாயம் – 61 (ஸூரத்துஸ் ஸஃப்பு), வசனம் – 6. )
இவ்விதம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி தவ்ராத்திலும்,

19.மாண்பும் மகிமையும்
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பல்வேறு சிறப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து சிறப்பித் திருக்கிறான். அவற்றில் பலவற்றை, வேறு எந்த நபிமாருக்கும் வழங்காமல் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கி சிறப்பித் திருக்கிறான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியப் படுத்தியுமிருக்கிறான்.