தொகுப்பு
Archive for the ‘நாகூர்’ Category
நாகூர் கடற்கரையில் 16-ம் நூற்றாண்டில் ஐந்து கோயில்கள் இருந்தன. இந்தக் கோயில்கள் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன. இத்துறைமுகத்திற்கு ஒன்றை மரப்பாய் கப்பலிலிருந்து, 300 டன் எடையுள்ள கப்பல் வரை வந்து சென்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகர்கள் சுமத்தரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாவன : அரிசி, சங்கு , மிளகு மற்றும் துணிவகைகள். இறக்குமதிப் பொருட்களாவன : பாக்கு, யானை, குதிரை, தேங்காய், உலோகங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் (20). நாகூர் துறைமுகத்திலிருந்து மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பிற துறைமுகங்களுக்கும் வணிகத் தொடர்பு மிக அதிகமாக இருந்து வந்தது. மேலும் நாகூர் துறைமுகம் வெட்டாறின் கிளையான குடவளாற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால், ஆற்றில் தண்ணீர் அளவு கணிசமாக இருக்கும்போது, ஆற்றினுள் குறைந்த எடையுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் போக்குவரத்து நடந்து வந்தது. இதன்மூலம் உள்நாட்டு விளைபொருட்களை, துறைமுகத்திற்கு ஏற்றிவர ஏதுவாக இருந்தது (21).
முஸ்லிம் வணிகர்களான மரைக்காயர்கள் குறித்த செய்திகள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன.
மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன் ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில் காணக்கிடக்கின்றன. இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். சில வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். 1722-ல் ஆங்கிலேயர் அச்சை நாட்டில் ஒரு வணிகச் சாவடி ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகமது காசிம் மரைக்காயர் மூலமாகவே அணுகவேண்டி வந்தது. இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும் முகமது காசிம் மரைக்காயர் பினாங்கிலும் கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும் பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் (32). இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது (33). இது போன்று தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சை, சுமத்தரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்கியதை ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன (34).
கி.பி. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகூர் மரைக்காயர்கள் தங்களது கப்பல்களை கொழும்பு, அச்சை, பினாங்கு, மலாக்கா, மலேயா ஆகிய நாடுகளுக்கு வணிக நிமித்தம் அனுப்பி வந்தனர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர்களின் தொடர்பாக இந்தியாவிலும் ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் பகை மூண்டது. இப்போர்களில் நடுநிலை வகித்து வந்த டேனிஷ்காரர்களின் கொடி மற்றும் அனுமதிச்சீட்டுடன் நாகூர் மரைக்காயர்கள் தங்கள் கப்பல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தனர். ஆனால் டேனிஷ்காரர்கள் நடுநிலையிலிருந்து மாறியபோது, அவர்களது அனுமதிச்சீட்டுடன் சென்ற கப்பல்களை பிரஞ்சு நாட்டு போர்க்கப்பல்கள் வளைத்துப் பிடித்தன. பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையிலிருந்து தங்களை காப்பாற்றக்கோரி நாகூர் முஸ்லிம் வணிகர்கள் ஆங்கிலேய அரசிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றனர். இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ள பதினேழு பேர்களுள் பதிமூன்று பேர் முஸ்லிம்கள் ஆவர். அவர்களது பெயர்கள் வருமாறு :- முகமதலி மரைக்காயர், முகமது சையது மரைக்காயர், அலிசாயபு நகுதா, ஹபீப் முகமது மாலுமி, பீர் சாஹிப் நகுதா, முத்துனா சாஹிப், சையது இஸ்மாயில் லப்பை, முகமது ஹபீப் மரைக்காயர், மதார் சாஹெப் நகுதா, சையது முகமது நகுதா, சுலைமான் மாலுமி, பக்கீர் முகமது நகுதா, சித்தி முகமது இப்ராஹிம் நகுதா (39).பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாகூர் வணிகர்களின் கப்பல்கள் வாணிகப் பொருட்களோடு பயணிகளையும் தூரக்கிழக்கு நாடுகளுக்கு ஏற்றிச் சென்றன. மலாக்கா, மலேஷியா, இலங்கை, பர்மா ஆகிய
நாடுகளுக்கு பெருமளவிற்கு முஸ்லிம்கள் சென்றனர். அங்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டதின் பயனாக தொழிலாளர்கள் நிறைய தேவைப்பட்டனர். நாகூரிலிருந்தும் இந்நாடுகளுக்குச் சென்றவர்கள் அந்நாடுகளில் தொழிலாளர்களாகவும், வணிகர்களாகவும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டும் இருந்தனர். 1786-ல் பினாங்கும் 1824-ல் சிங்கப்பூரும் உருவானபோது நாகூர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மரைக்காயர்கள் அங்கெல்லாம் கணிசமான என்ணிக்கையில் இருந்தனர். நாகூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற மரைக்காயர்கள் தங்களது ஆன்மீகத் தேவைகளுக்காக அங்கெல்லாம் நாகூர் ஆண்டவர் பெயரால் தர்காக்கள் கட்டி ஆண்டுதோறும் நாகூரில் நடைபெறுவதுபோல் கந்தூரியும் நடத்தினர். இதுபோன்ற கலாச்சார மையங்கள் (தர்காக்கள்) சிங்கப்பூரிலும், பினாங்கிலும் இன்ரும் உள்ளன (40). மேலும் நாகூர் தர்காவில் கந்தூரியின்போது ஏற்றுவதற்காக ‘கொடி’, கப்பல் மூலம் அனுப்பி வந்தனர்.
1848-ல் சுமார் பத்து கப்பல் உரிமையாளர்கள் மட்டும் நாகூரில் இருந்தனர் என்பதற்கு அங்கு பதிவாகியுள்ள கப்பல்களின் பெயர்களைக் கொண்டு அறிகிறோம். இவை அனைத்தும் பாய்மரக் கப்பல்கள். அவையாவன : காதர்மீரா, ஷம்ஷீர், ஜூலிக்ஸ், கூடு காதர் பக்ஸ், பதேகாசிம், சகியா, பால காதர், அகமது பக்ஸ் முகமது மைதீன் பக்ஸ், ஜஹாங்கீர், ஷாஹுல் ஹமீது. இக்கப்பல்கள் சிங்கப்பூர், பினாங்கு, பர்மா, ஆகிய நாடுகளுக்கு பெரும்பாலும் பயணிகளை ஏற்றிச் சென்றன. குறைந்த அளவில் வணிகப் பொருட்களையும் ஏற்றிச் சென்றன (41).
25.271139
55.307485
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
அண்மைய பின்னூட்டங்கள்