தொகுப்பு

Archive for the ‘உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி’ Category

உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி

செப்ரெம்பர் 22, 2010 பின்னூட்டமொன்றை இடுக

அன்னையவர்களின் இயற்பெயர் ஹிந்த் பின்த் உமைய்யா என்றிருந்த போதும், உம்மு ஸலமா (ரழி) என்றே மிகப் புகழோடு அழைக்கப்பட்டு வந்தார்கள். வரலாறு அவ்வாறே அவர்களது பெயரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. பிறப்பு மற்றும் வம்சா வழிச் சிறப்புகளின் அடிப்படையில், இயற்கையிலேயே புத்திக் கூர்மையுள்ள, கல்யறிவுள்ள, நேர்மையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் கொண்டவர்களாக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள்.

அன்னையவர்களின் முதற் கணவரின் பெயர், அபூ ஸலமா என்றழைக்கப்படக் கூடிய அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி (ரழி) என்பவராவார். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தந்தை வழி மாமியான பர்ரா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவார். இஸ்லாத்தினைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்களின் பட்டியலில் அபூ ஸலமா அவர்களும் இடம் பிடித்த, சிறப்புக்குரியவர்களாவார்கள். அந்த கால கட்டத்தில் இஸ்லாத்தினைத் தழுவிய 11 நபர்களில் இவரும் ஒருவர். இன்னும் இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பால் குடிச் சகோதரரும் ஆவார்.

உம்மு ஸலமா (ரழி) அவர்களும் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்பகால முஸ்லிம்களில் ஒருவராவார். இவரது தாயார் பெயர் அதீகா பின்த் ஆமர் பின் ரபீஆ பின் மாலிக் பின் கஸீமா ஆகும். இன்னும் இவரது தந்தையின் பெயர் உமைய்யா பின் அப்துல்லா பின் அம்ர் பின் மக்சூம் என்பதாகும். இவரது பொதுநலச் சேவைகள் மற்றும் தான தர்மங்களின் மூலமாக அரபுலகில் மிகவும் பிரபலமாக மதிக்கப்பட்டவர்களாவார்கள். இவருடன் பயணம் செய்யக் கூடியவர்கள் தங்களது தேவைக்காவென எந்தப் பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தன்னுடன் வரக் கூடியவர்கள் அனைவரும் தனது விருந்தாளிகள் என மதிப்பளித்து, அவர்களது உணவிலிருந்து அத்தனைச் செலவுகளையும் பொறுப்பேற்றுச் செலவு செய்யக் கூடிய தனவந்தராக உம்மு ஸலமாவின் தந்தை திகழ்ந்தார். எனவே, தனது தந்தையைப் போலவே உம்மு ஸலமா அவர்களும் ஏழைகளுக்கு இரங்கக் கூடியவராகவும், இன்னும் தான தர்மங்களில் அதிகம் ஈடுபடக் கூடியவராகவும் திகழ்ந்தார்கள். தமது அண்டை வீட்டுக்காரர்களுடன் உணர்வுப்பூர்வமாக மிகவும் நெருக்கமான உறவும் கொண்டிருந்தார்கள். உம்மு ஸலமா அவர்களின் கோத்திரம் எவ்வாறு உபகாரத்திலும், பிறருக்கும் உதவுவதிலும் இன்பங்கண்டதோ, அதே போலவே குணங்கள் அமையப் பெற்றவரும், மக்காவில் அன்றைய தினம் வாழ்ந்த குறிப்பிடத்தக்க செல்வந்தக் குடும்பங்களில் ஒன்றான மக்சூம் குலத்திலிருந்து வந்தவராக அபூ ஸலமா அவர்களைக் கைப்பிடித்து, மணமகளாக மக்சூம் கோத்திரத்தாரின் இல்லத்திற்கு சென்ற உம்மு ஸலமா அவர்கள், அங்கும் தனது பெருந்தன்மையான குணங்களின் மூலம் அனைவருக்கும் பிடித்தமான நங்கையாகத் திகழ ஆரம்பித்தார்கள். இப்பொழுது மக்சூம் குடும்பங்களில் அன்பும், விருந்தோம்பலும் இன்னும் அனைத்து வித சந்தோஷங்களும் கரை புரண்டோட ஆரம்பித்தன.

ஆனால், இந்த சந்தோஷங்களும், குதூகுலங்களும் அபூ ஸலமா தம்பதியினர் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டதன் பின்பு, தலைகீழாக மட்டுமல்ல, அடியோடு அந்தச் சூழ்நிலைகள் மாற்றம் பெற ஆரம்பித்தன.

முழு கோத்திரத்தாரும் இவர்களுக்கு எதிராகப் புயலெனக் கிளர்ந்தார்கள். பிறரைக் கொடுமைப்படுத்தி அதில் இன்பங் காண்பதே பிழைப்பாகக் கொண்டு திரியும், வலீத் பின் முகீரா போன்றவர்கள் இவர்களுக்கு தினம் தினம் புதுப் புதுப் பிரச்னைகளைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இறுதியாக, மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத நிலைக்குச் சென்ற பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை, மற்ற மதத்தவர்களுடன் அணுசரணையாகவும், சகிப்புத் தன்மையுடனும் நடக்கக் கூடியவரான நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு அபீஸீனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முதல் குழுவில் இருந்த 16 நபர்களில், 12 பேர் ஆண்களும், 4 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். இந்தப் 16 பேர் கொண்ட குழுவில் அபூ ஸலமாவும், உம்மு ஸலமாவும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் 16 பேர்களின் பெயர்கள் வருமாறு :-

1. உதுமான் பின் அஃப்பான் (ரழி)

2. அபூ ஹுதைஃபா பின் உத்பா(ரழி)

3. அபூ ஸலமா அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி(ரழி)

4. ஆமிர் பின் ரபீஆ(ரழி)

5. ஸுபைர் பின் அவ்வாம் (ரழி)

6. முஸ்அப் பின் உமைர்

7. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)

8. உதுமான் பின் அவ்ஃப் (ரழி)

9. அபூ ஸிப்ரா பின் அபீ ரஹம் (ரழி)

10. ஹாதிப் பின் அம்ர்(ரழி)

11. சொஹைல் பின் வஹ்ப் (ரழி)

12. அப்துல்லா பின் மசூத் (ரழி)

பெண்களின் பெயர்கள் வருமாறு :-

1. ருக்கையா பின்த் முஹம்மது (ரழி) (ஸல்) (உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களின் மனைவி)

2. ஸிஹ்லா பின்த் சொஹைல் (ரழி) (அபூ ஹுதைஃபா பின் உத்பா(ரழி) அவர்களின் மனைவி)

3. உம்மு ஸலமா (அபூ ஸலமா (ரழி) அவர்களின் மனைவி)

4. லைலா பின்த் அபீ ஹஷ்மா (ரழி) (ஆமிர் பின் ரபீஆ (ரழி) அவர்களின் மனைவி)

இந்தக் குழுவினர் அபிஸீனியாவிற்குச் செல்வதற்கு கடற்கரையை அடைந்த பொழுது, இரண்டு கப்பல்கள் அந்தத் துறைமுகத்தில் அபீஸீனியாவிற்குச் செல்வதற்காகக் காத்திருந்தன. அதில் ஏறிக் கொண்ட இந்தக் குழுவினர், அபிஸீனியாவைச் சென்றடைந்தனர்.

இந்த முதல் குழுவிற்கு அடுத்தாக ஒரு குழு அபிஸீனியாவிற்குக் கிளம்பியது. அதில் 83 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவர். இந்தக் குழுவில் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களும் இடம் பெற்றிருந்தார். அபிஸீனியாவில் தொடங்கிய புது வாழ்க்கை எந்தவித அடக்குமுறைகளும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பித்தது. இவ்வாறு சென்ற குழுவில் முதன் முதலாக உம்மு ஸலமா (ரழி) அவர்கள், ஜைனப் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். இதனை அடுத்து உமர் என்ற மகவையும் பெற்றெடுத்தார்கள். இறுதியாக இன்னொரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்கள், அதன் பெயர் துர்ரா.

அபிஸீனியாவின் மன்னர் நஜ்ஜாஸி அவர்கள் இந்தப் புது மார்க்கத்தை கடை பிடிப்பவர்களுடன் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். எனவே, மக்காவின் வாழ்க்கையோடு அபிஸீனியா வின் வாழ்க்கையை ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக, மிகவும் அமைதியாகக் கழிந்து கொண்டிருந்தது.

முஸ்லிம்கள் அபிஸீனியாவில் மன்னரது நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டதுடன், அங்கு அமைதியான வாழ்வை வாழ்கின்றார்கள் என்று கேள்விப்பட்ட மக்கத்துக் குறைஷிகள், இது புதுமார்க்கத்துக் கிடைத்த அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தை நீடிக்க விட்டால், அதுவே நமது பாரம்பரிய சமுதாயத்திற்கான சாவு மணி என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள், இந்த அமைதியை நீடிக்க விடக் கூடாது என்று அதற்கான சதித் திட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். வளர்ந்து வரும் இஸ்லாத்தை, அதன் தூதை இனி வளரவே விடக் கூடாது, அதற்காக நாம் ஏதாவதல்ல, எதையாவது செய்தாக வேண்டும் என்று நிலைக்கு வந்தனர்.

மிக நீண்ட ஆலோசனைகளின் அடிப்படையில் அவர்கள், உறுதியான நடவடிக்கைகான செயல்முறைக்கு ஆயத்தமானார்கள். அன்றைக்கு அரபுலகின் மிகச் சிறந்த அரசியல் வல்லுநர்களாகக் கணிக்கப்பட்ட அம்ர் பின் ஆஸ் மற்றும் அப்துல்லா பின் ரபீஆ ஆகிய இருவரையும் பரிசுப் பொருட்களுடன் நஜ்ஜாஸி மன்னரது அவைக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் மூலம் நஜ்ஜாஸி மன்னரைச் சந்தித்து, முஸ்லிம்களைக் கைதிகளாக மக்காவுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டார்கள்.

நஜ்ஜாஸி மன்னரைச் சந்திப்பதற்கு முன்பாக, அவரது அமைச்சர்களையும், ஆலோசகர்களையும் முதலில் சந்தித்த இந்த மக்கத்துத் தூதுக் குழுவினர், இறுதியாகத் தான் நஜ்ஜாஸி மன்னரைச் சந்தித்தார்கள். அமைச்சர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கி, மன்னரைச் சந்திக்கும் பொழுது, மக்காவிலிருந்து வந்து குடியேறியுள்ள முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு ஒருபக்கச் சார்பாகவும், தங்களுக்கு சாதகமான முறையில் மன்னருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இறுதியாக, பரிசுப் பொருட்களுடன் மன்னரைச் சந்தித்த மக்கத்துக் குறைஷிகளின் குழு, மன்னருக்கு மரியாதை செலுத்தி விட்டு பரிசுப் பொருட்களையும் கொடுத்து விட்டு, தாங்கள் வந்ததன் காரணமென்னவென்பதை விளக்க ஆரம்பித்தார்கள்.

மன்னரே..! உங்களது நாட்டில் நீங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்ற இந்த முஸ்லிம்கள், எங்களது முந்தைய மார்க்கத்தைத் துறந்து விட்டு புதியதொரு மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு கலவரக்காரர்களாக இவர்கள் மாறி விட்டார்கள். அவர்களது புதிய மார்க்கத்தின் கொள்கையின் காரணமாக, இரத்த பந்தங்களுக்கிடையே பிரிவினையை உண்டு பண்ணுகின்றார்கள். தந்தையை மகனுக்கு எதிராகவும், சகோதரர்கள் சகோதரர்களுக்கு எதிராகவும் எதிர்த்து நிற்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள். எங்களது பாரம்பரியப் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் முன்னோர்களது வழிமுறைகளைக் கூட இவர்கள் உடைத்தெறிகிறார்கள். உங்களது பரந்த மனப்பான்மையின் காரணமாக இவர்களை நீங்கள் அமைதியாக இங்கு வாழ விட்டிருக்கின்றீர்கள், ஆனால் இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். இந்த நாட்டிலே குழப்பத்தை உண்டு பண்ணக் காரணமாகி விடுவார்கள், ஏனெனில் இவர்கள் உங்களது மார்க்கமான கிறிஸ்துவத்தின் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. எங்களைப் போல நீங்களும் பிரச்னைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால், இவர்களை நீங்கள் எங்கள் கையில் ஒப்படைத்து நாடு கடுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை, இவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை எங்களைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்று கூறி முடித்தார்கள்.

இப்பொழுது, நஜ்ஜாஸி மன்னர் தனது அவையோரைப் பார்த்து, நடக்கின்ற வழக்கில் நாம் என்ன தீர்ப்புச் சொல்வது என்று கேட்பது போல இருந்தது அவரது பார்வை. மந்திரிப்பிரதானிகளோ, இது அவர்களது உள்நாட்டுப் பிரச்னை நாம் ஏன் தலையிட வேண்டும், மேலும், குறைஷிகள் தங்களிடம் ஏன் அவர்களை ஒப்படைக்கச் சொல்கின்றோம் என்பதற்கு அவர்கள் கூறிய காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகத் தான் இருக்கின்றது என்றும் அவர்கள் கருத்துக் கூறினார்கள். எனவே, இவர்களை அரசியல் குற்றவாளிகளாகக் கருதி, குறைஷிகளிடமே ஒப்படைத்து விடுவது நல்லது என்று கூறினார்கள்.

மன்னர் நஜ்ஜாஸி அனைவருடைய கருத்தையும் கேட்டுக் கொண்டு, நடுநிலையான, தொலைநோக்குச் சிந்தனை கொண்டு, எதனையும் வெளிப்படையாகப் பேசக் கூடிய அவர், இப்பொழுது தனது கருத்து என்னவென்பதைக் கூற ஆரம்பித்தார்.

தீர்ப்பு என்பது இருபக்கங்களின் விவாதங்களைக் கேட்ட பின்பே வழங்க வேண்டும் என்று முடிவெடுத்த மன்னர் நஜ்ஜாஸி, அகதிகளின் தலைவரை அழைத்து உங்களது பக்க வாதம் என்னவென்பதைக் கூறுமாறு பணித்தார். எனவே, தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக, முஸ்லிம்கள் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களை தலைவராகக் கொண்ட குழுவை அனுப்பி வைத்தார்கள்.

மன்னர் நஜ்ஜாஸியின் அவைக்கு வந்த முஸ்லிம்களின் குழு மன்னருக்கு முகமன் தெரிவித்து விட்டு, தங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டு, தங்களது கருத்துக்களைக் கூற ஆரம்பித்தார்கள்.

பார்த்தீர்களா..! இந்த முஸ்லிம்களை..! இவர்கள் மிகவும் அகம்பாவம் பிடித்தவர்கள் என்று எதையோ குறை கண்டு பிடித்தவர் போலப் பேசிய அம்ரு இப்னுல் ஆஸ் அவர்கள், இந்த அவைக்கென மரியாதை இருக்கின்றது. இவர்கள் இந்த அவைக்குள் நுழைந்தவுடன் மன்னருக்கு சிர வணக்கம் செய்திருக்க வேண்டும் என்று குற்றச்சாட்டாகக் கூறினார்.

இப்பொழுது, மன்னர் முஸ்லிம்களைப் பார்த்துக் கேட்டார். நீங்கள் இந்த அவையின் ஒழுங்குகளை ஏன் பேணவில்லை..!?

நாங்கள் முஸ்லிம்கள்..! படைத்தவனை மட்டுமே வணங்கக் கட்டளையிடப்பட்டிருக்கின்றோமே ஒழிய, அவனது படைப்புகளை வணங்குமாறு எங்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. நாங்கள் படைப்புகளுக்கு சிரம்பணிய மாட்டோம் என்று தனது பக்க நியாயத்தைக் கூறினார், ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள்.

நீங்கள், ஏதோ ஒரு புதிய மார்க்கத்தைக் கண்டுபிடித்து அதனைப் பின்பற்றி வருவதாகக் கேள்விப்பட்டேனே..?! அதுபற்றி என்ன கூறுகின்றீர்கள் என்று கேட்டார் மன்னர் நஜ்ஜாஸி. இப்பொழுது, மீண்டும் தனது பதிலை ஆரம்பித்தார் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள்..!

மேன்மை தங்கிய மன்னர் அவர்களே..! நாங்கள் நாகரீமற்ற மக்களாக சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம், செத்த பிராணிகளைத் தின்று கொண்டிருந்தோம் மற்றும் வடித்தெடுக்கப்பட்ட போதையூட்டும் மது பானங்களையும் அருந்திக் கொண்டிருந்தோம். எங்களுடைய சமூகத்தில் ஒரு குலம் இன்னொரு குலத்தாரை விட உயர்வாக எண்ணிக் கொண்டு, எங்களுக்குள் மாச்சரியங்களை வளர்த்துக் கொண்டு, அதன் காரணமாக நூறாண்டுகளுக்கும் மேலாகக் கூட பகைமையை வளர்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் சொந்த பந்த உறவுகளை என்றுமே எங்களுக்குள் பேணிக் கொண்டதில்லை. எங்களிடம் காட்டுச் சட்டம் தான் மிகைத்திருந்தது. வலிமையுள்ளவன் செய்தது சரி என்ற சட்டமே மேலோங்கி இருந்தது. சுருங்கச் சொன்னால் நாங்கள் மிருகத்தைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

பின் அல்லாஹ் எங்களிடையே ஒரு தூதரை அனுப்பி, எங்களை நேர்வழிப்படுத்தினான். அவர் எங்களில் ஒருவராகத் தான் இருந்து வருகின்றார், இன்னும் அவருடைய குலம் கூட எங்களால் நன்கு அறியப்பட்டது தான். அவரைப் பொறுத்தவரை அவரை நாங்கள் உறவுகளை ஒன்றிணைக்கக் கூடியவராக, மேன்மைக்குரியவராக இன்னும் கண்ணியமிக்கவராகக் காண்கின்றோம். அவர் எங்களை அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், உண்மையையே பேச வேண்டும் என்றும், கொடுக்கல் வாங்கல்களில் நீதத்தைப் பேணுமாறும் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் எங்களுக்கு அவர் அறிவுறுத்துகின்றார். இன்னும் அவர் எது அனுமதிக்கப்பட்டது என்றும், எது தடை செய்யப்பட்டது என்றும் அவர் எங்களுக்கு அறிவுறுத்துகின்றார். அநாதைகள், ஏழைகள், மற்றும் நோயாளிகள், பெண்கள் ஆகிய யாவரும் சம அந்தஸ்துடையவர்களே, நமது சமூகத்தில் அவர்கள் அனைவருக்கு உரிமைகள் உள்ளன என்றும் கூறுகின்றார். இன்னும் அவர்களது உரிமைகளைப் பறிப்பது தவறானது என்றும் கற்றுத் தந்திருக்கின்றார். கற்பையும் மற்றும் மானத்தையும் இன்னும் நல்லொழுக்கத்தையும் பேணிக் கொள்ளுமாறும், குற்றம் பிடிப்பது, கோள் சொல்லுதல் போன்றவற்றிலிருந்து விலகி இருக்குமாறும் அவர் எங்களுக்குப் போதிக்கின்றார். இன்னும் தொழுகையை முறையாகப் பேணுமாறும், இறைவனுக்காக நோன்பு இருப்பதையும், வருமானத்திலிருந்து ஏழைகளுக்கென ஒரு பங்கை ஒதுக்கி ஜகாத்தாக கொடுக்குமாறும் அவர் எங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றார்.

இதனைப் பின்பற்றியே, உங்கள் முன் நாங்கள் இப்பொழுது முஸ்லிம்களாக இருந்து கொண்டிருக்கின்றோம் என்று கூறி விட்டு, சட்டம், ஒழுங்கைப் பேணக் கூடியவர்களாகவும், குற்றங்களிலிருந்தும், ஒழுக்கக் கேடுகளிலிருந்தும் தவிர்ந்து வாழக் கூடியவர்களாகவும், ஜெம்ன விரோதங்கள், பகைகளை மறந்து வாழக் கூடிய மனிதர்களாக நாங்கள் இன்று மாற்றம் பெற்றிருக்கின்றோம். அன்றைக்கு சமூகத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் தான், இன்று சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய மக்களாக மாறி இருக்கின்றோம். தனக்கு எதனை விரும்புகின்றாரோ அதனையே தனது சகோதரனுக்கும் விரும்பக் கூடிய மக்களாகவும் நாங்கள் மாற்றம் பெற்றிருக்கின்றோம்.

இதன் காரணமாக எங்களது சமூகம் எங்கள் மீது வெறுப்புக் கொண்டு, எங்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யாத குறையாக எங்களைத் தொந்தரவு செய்கின்றார்கள். ஆனால் அவர்களின் கொடுமைகளின் காரணமாக நாங்கள் மீண்டும் அந்தப் படுபாதகப் படுகுழியில் விழத் தயாராக இல்லை. எங்களின் மீது சொல்லொண்ணாக் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு அதன் உச்சத்தை அந்தக் கொடுமைகள் தாண்டிய போது தான், நாங்கள் எங்களது வாழ்விடங்களை விட்டு விட்டு, அகதிகளாக உங்களது நாட்டில் வந்து தஞ்சமடைந்திருக்கின்றோம். இன்னும் நீங்கள் நீதமான, நேர்மையான ஆட்சியாளர் என்பதையும், மத சகிப்புத் தன்மை கொண்டவர் என்பதையும், எங்கள் மீது கருணை காட்டக் கூடியவர் இன்னும் நல்லமுறையில் நடத்தக் கூடியவர்கள் என்பதையும் அறிந்த காரணத்தால் தான் இங்கு வந்திருக்கின்றோம்….,

… என்று கூறி முடித்தார் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள்.

ஜாஃபர் (ரழி) அவர்களின் விளக்கத்தைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த மன்னர் நஜ்ஜாஸி அவர்கள்,

உங்களது இறைத்தூதருக்கு இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருவதாக நான் கேள்விப்பட்டேன், அதிலிருந்து சிலவற்றை ஓதிக்காட்டுங்கள், அதனை நான் செவிமடுக்க விரும்புகின்றேன் என்று கூறினார்.

கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஜாஃபர் (ரழி) அவர்கள், அத்தியாயம் மர்யம் லிருந்து சில வசனங்களை கேட்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் அளவுக்கு ஓத ஆரம்பித்தார்கள். திருமறையின் வசனங்களைச் செவிமடுத்த மன்னர் நஜ்ஜாஸியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடி, அவரது தாடியை நனைத்துக் கொண்டிருந்தது. இறுதியாக, சுயநினைவிற்கு வந்த மன்னர், இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் வசனங்களைப் போலவே இருக்கின்றது, இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை தான் என்று கூறினார். இப்பொழுது அவையிலிருந்தோர் என்ன செய்வதென்றே தெரியாது திகைத்தவர்களாக, மக்காவிற்குள் நுழையும் மக்களை எவ்வாறு இவர்கள் மந்திர வித்தை கொண்டு கட்டிப் போடுவதைப் போல கட்டிப் போடுகின்றார்களோ, அதே மாயா ஜால வித்தையை மன்னரிடமும் காட்டி விட்டார்கள் என்றே குறைஷிகள் எண்ணினார்கள்.

இப்பொழுது, மக்காவிலிருந்து வந்திருந்த குறைஷிகளின் பிரதிநிதிகளை நோக்கிய மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், இவர்கள் உயர் பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள், இன்னும் இவர்கள் விரும்பும் காலம் வரைக்கும் இந்த அபீசீனிய மண்ணில் வாழ்ந்து கொள்ளலாம் என்று பதிலளித்தார். இன்னும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வித பாதுகாப்புகளும் கொடுக்கப்படும் என்றும் கூறிய அவர், எனக்கு நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற இந்தப் பரிசுப் பொருட்களையும் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் ஒரு மலையளவு தங்கத்தைக் கொண்டு வந்து கொட்டினாலும், இந்த நேர்வழி பெற்ற மக்களை நான் உங்களது கைகளில் ஒப்படைக்க மாட்டேன் என்று கூறி குறைஷிகளைத் திருப்பி அனுப்பி விட்டார்.

மன்னரின் இந்தப் பதிலைக் கேட்ட அம்ர் இப்னுல் ஆஸ் அவர்களும், அப்துல்லா பின் அபீ ராபிஆ அவர்களும் சிறுமை அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, எந்த முகத்தைக் கொண்டு நாம் மக்காவுக்குத் திரும்புவது, நம்முடைய தலைவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று கேட்டுக் கொள்வது போல அவர்களது பார்வை அமைந்திருந்தது.

அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இரைத்த நீராய் ஆகி விட்டதே..! இன்னும் அவர்கள் முடங்கி விடவில்லை, மக்காவிற்குத் திரும்புவதற்கும் விரும்பவில்லை. மாறாக, அவர்களுக்குள் கூடி ஆலோசனை செய்து, இன்னுமொரு சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்தனர்.

இறுதியாக, ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி அம்ர் அவர்கள், இந்த திட்டத்தின்படி நாம் நடந்தால் உண்மையிலேயே நஜ்ஜாஸி கண்டிப்பாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார். இந்தத் திட்டம் நிச்சயமாக நமக்குத் தோல்வியைத் தராது என்றும் அவர் கூறினார். இதனைக் கேட்ட அப்துல்லா அது என்ன திட்டம் சொல்லுங்கள் என்று கேட்டார்.

அதாவது, முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களை மனிதராகவும், இறைவனுடைய தூதராகவும் தான் நம்பிக்கை கொள்கின்றார்கள், ஆனால் கிறிஸ்தவர்களோ அவரை கடவுளாகக் கருதுகின்றார்கள். முஸ்லிம்களுடைய புதிய வேதமானது, இன்னும் முஸ்லிம்களின் அந்த நம்பிக்கையானது, முஸ்லிம்கள் மீது மன்னர் நஜ்ஜாஸி வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையைத் தகர்த்தெறியக் கூடியதாக இருக்கும். இன்னும் முஸ்லிம்கள் தரக் கூடிய பதிலால் மன்னரது அனைத்துப் பிரதானிகளும் கடுமையாகக் கொதித்தெழுவார்கள் என்றும் கூறினார்.

அடுத்த நாள் காலையில் மன்னரது அவைக்குச் சென்ற குறைஷிகளின் தூதுக் குழுவினர், நேற்றைய தினம் நாங்கள் ஒரு தகவலை உங்கள் முன் கொண்டு வரத் தவறி விட்டோம், அதாவது இந்த முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனது மகனாக ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக, அவரை ஒரு மனிதராகவும் இன்னும் இறைவனது அடிமையாகவும் தான் கருதுகின்றார்கள். எனவே, நீங்கள் அந்த முஸ்லிம்களை மீண்டும் அழைத்து, ஈஸா (அலை) அவர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கை என்னவென்பதைக் கேட்டறிய வேண்டும் என்ற கோரிக்கையை மன்னர் நஜ்ஜாஸி முன் வைத்தனர்.

இப்பொழுது முஸ்லிம்கள் அவைக்கு வரவழைக்கப்பட்டு, ஈஸா (அலை) அவர்கள் பற்றிய உங்களது நம்பிக்கைகள் என்ன என்று கேட்கப்பட்டது. ஜாஃபர் (ரழி) அவர்கள் சத்தியத்தை முழங்கினார்கள். எங்களது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஈஸா (அலை) அவர்கள் பற்றிக் கூறும் போது, அவர் அல்லாஹ்வின் அடியாரும், அவனது திருத்தூதருமாவார்கள், இன்னும் அல்லாஹ்வினுடைய ஆவி (ரூஹ்)யினாலும், இன்னும் அவனது வார்த்தை (கலிமா) யினாலும் வந்துதித்தவராவார் என்றும், தனது பதிலை முடித்தார்.

ஜாஃபர் (ரழி) அவர்களிடமிருந்து, ஈஸா (அலை) பற்றித் தெரிவித்த அந்த முழுமையான கருத்தைச் செவிமடுத்த மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், தனது பாதங்களை தரையில் அடித்துக் கொண்டு, ஆச்சரியத்துடன், ”நான் எதனை உங்களிடமிருந்து கேட்டேனோ அவை அனைத்தும் சத்தியம், ஈஸா (அலை) அவர்கள் தன்னைப்பற்றி என்ன கூறியிருக்கின்றார்களோ, அதிலிருந்து நீங்கள் எதனையும் மாற்றவுமில்லை, சேர்க்கவுமில்லை, மிகச் சரியாகச் சொன்னீர்கள் என்று கூறினார்.

இப்பொழுது முஸ்லிம்களின் பக்கம் திரும்பிய மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், நீங்கள் எனது தேசத்தில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழலாம், உங்களுக்கு எந்த சிறு தொந்தரவுகளும் அணுகாது.

பின்னர் குறைஷிகளின் தூதர்களின் பக்கம் திரும்பிய மன்னர், ”இறைவனுடைய மிகப் பெரும் கருணையால், நாங்கள் எங்களுக்குத் தேவையான பதிலையும், விளக்கத்தையும் பெற்றுக் கொண்டோம்”. நீங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு, உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

மக்காவிலிருந்து சதித் திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்துடன் வந்த அந்தத் தூதுக் குழுவினர், வெறுங்கையுடன் ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார்கள்.

அபீசீனியாவில் நடந்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியை படம் பிடித்தவாறு நம்முடைய நினைவலைகளுக்கு விருந்தாக்கி வைத்திருப்பவர், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள். அவர்கள் இந்த முழு வரலாற்றையும் பதிவு செய்து வைத்து, நமக்கு வரலாற்றுப் பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்கள், அபீசீனியா வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பது பற்றியும், அங்கு அவர்கள் அனுபவித்த அமைதியான வாழ்வு பற்றியும், மன்னர் நஜ்ஜாஸி அவர்களது உயர்ந்த பண்புகள், குணநலன்கள் பற்றியும் விவரித்திருந்தாலும், தமது சொந்த மண்ணைப் பிரிந்து வாழ்ந்த அவர்களது மனங்களில் மக்காவைப் பற்றி நினைவுகள் அடிக்கடி வந்து போய் அவர்களை நோய் பிடித்தவர்கள் போல வாட்டியது. அதுவே ஒரு மனநோயாகவும் மாறியது.

எப்பொழுது மக்காவில் அமைதி திரும்பும், எப்பொழுது நாம் நமது சொந்த மண்ணை மிதிப்போம் என்றே அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருநாள், உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள், இப்பொழுது மக்காவின் நிலைமை முற்றிலும் மாற்றம் பெற்று விட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டார்கள். உமர்(ரழி) அவர்கள் இஸ்லாத்தினைத் தழுவியதன் காரணமாக, அவர்களது தலையீட்டின் காரணமாக மக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இந்தச் செய்தியைக் கேட்ட அபீசீனியாவில் இருந்த முஸ்லிம்கள் மிகவும் சந்தோசமடைந்தார்கள். இன்னும் தங்களது நாட்டிற்குத் திரும்பவும் முடிவெடுத்தார்கள். அவர்களுடன் உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களும் தனது குடும்பத்துடன் மக்காவுக்கு திரும்பத் தீர்மானித்தார்கள். ஆனால் அவர்கள் மக்காவை அடைந்த போது தான், இது வெறும் புரளி என்பதையும், மக்காவில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை, கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் அறிந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் அறிந்து கொண்ட செய்தி அவர்களுக்கு எந்தப் பலனும் அளிக்கவில்லை.

ஒரு நபிமொழி அறிவிப்பின்படி, கீழ்க்கண்ட சம்பவத்தின் பின்னணி தான் அபீசீனியாவிலிருந்து மக்காவிற்கு அவர்களைத் திரும்பத் தூண்டியது. ஒருமுறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்த பொழுது, அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இறைநிராகரிப்பாளர்கள் அனைவரும் தங்களையறியாமலேயே, நிலத்தில் சிரம் தாழ்த்தினார் (சுஜுது செய்தார்)கள். இந்தச் சம்பவம் தான் பெரிதாக்கப்பட்டு, புரளியாக அபீசீனியாவிற்குச் சென்று, குறைஷிகள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள் என்ற செய்தியாகப் போய்ச் சேர்ந்தது. இந்தச் செய்தியை உண்மை என நம்பித்தான் அவர்கள் நாடு திரும்பினார்கள்.

முஸ்லிம்களுக்கெதிரான குறைஷிகளின் கொடுமைகள் குறையவில்லையாதலால், முஸ்லிம்கள் மீண்டும் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முடிவெடுத்தனர். அதேகால கட்டத்தில் முஸ்லிம்கள் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்வதை நிறுத்தி விட்டு, மதீனாவிற்குச் செல்லுமாறு பணித்தார்கள். அகபாவில் உடன்படிக்கை எடுத்துக் கொண்ட மதீனத்து முஸ்லிம்கள், இப்பொழுது மக்காவில் உள்ள முஸ்லிம்களை ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருமாறு அழைத்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, அபீசீனியாவை விடுத்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு பணித்தார்கள். இன்னும் ஹிஜ்ரத் (இடம் பெயர்ந்து) வருகின்ற முஸ்லிம்களை தங்களது சொந்த சகோதரர்கள் போல கவனித்துக் கொள்வதாகவும் அன்ஸார்கள் (மதீனத்து முஸ்லிம்கள்) வாக்குறுதி அளித்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) குடும்பத்தினரின் ஹிஜ்ரத்

அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது குடும்பத்தாருடன் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஒட்டகத்தில் ஏறி பயணமாகத் தொடங்கினார். இதனை அறிந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களது குடும்பத்தார் ஓட்டகத்தை மறித்து, ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு,

அபூ ஸலமாவே..! நீங்கள் எங்கு விரும்புகின்றீர்களோ.. அங்கு நீங்கள் போய்க் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனால் உங்கள் மனைவியோ எங்களைச் சேர்ந்தவள், எனவே, அவரை நீங்கள் விட்டு விட்டுத் தான் போக வேண்டும்.

நேற்றைக்கு அபிசீனியாவிற்கு கூட்டிக் கொண்டு போனீர்..! இன்றைக்கு மதீனாவிற்குக் கூட்டிக் கொண்டு போகின்றீர், அவளை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்தத் தெரியாத உமக்கு எதற்கு மனைவி என்று அவர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்களது குடும்பத்தினர் நடந்து கொண்ட விதத்தைக் கேள்விப்பட்ட அபூ ஸலமா குடும்பத்தினர் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் வந்து, நீ பெற்றிருக்கின்ற பிள்ளைகள் எங்களது இரத்த வழி வாரிசுகள், அதனை உன்னுடைய வளர்ப்பில் நாங்கள் விட முடியாது, அவர்கள் எங்களது இரத்தமும், சதையும் ஆவார்கள், எனவே அவர்களை நாங்கள் எடுத்துச் சென்று வளர்த்துக் கொள்கின்றோம் என்று கூறி, பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டார்கள்.

சற்று முன் மதீனாவை நோக்கிய பயணத்தில் இருந்து கொண்டிருந்த ஒட்டு மொத்த குடும்பமும் இப்பொழுது, தனித்தனியாக மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த பொழுது, அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது மனைவியை விட்டு விட்டு தன்னந்தனியாக மதீனாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார், உம்மு ஸலமா (ரழி) அவர்களை அவர்களது உறவுக்காரர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள், உம்மு ஸலமாவின் பிள்ளைகளை அபூ ஸலமா (ரழி) அவர்களின் குடும்பத்தவர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள்.

ஆக, மொத்த குடும்பமே இப்பொழுது முற்றிலும் பிரிந்து போய் நிற்க, நடப்பது அத்தனையும் நிஜமா..! என்று கண் கலங்கிய உம்மு ஸலமா (ரழி) அவர்கள், பிரிவுத் துயரால் வாடி நின்றார்கள். ஒவ்வொரு நாளும் தனது கணவரையும், பிள்ளைகளையும் பிரிந்த அந்த இடத்திற்கு வந்து அந்த சோக நினைவுகளில், தன்னை இழந்து அழுது கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் அந்த வழியே போய்க் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அந்த இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, உம்மு ஸலமாவே..! உமக்கு என்ன நேர்ந்தது, ஏன் இப்படி அழுது கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டார். நடந்த அந்தத் துயர நிகழ்வுகளை அவரிடம் சொன்னார். அந்த மனிதர் உம்மு ஸலமா (ரழி) மற்றும் அபூ ஸலமா (ரழி) ஆகியோர்களின் உறவினர்களிடம் போய், இந்த பெண்ணை ஏன் நீங்கள் இப்படி சித்தரவதை செய்கின்றீர்கள். நீங்கள் இந்தப் பெண்ணை இப்படி குழந்தைகளைப் பிரித்து வைத்து அழகு பார்ப்பது முறையா? என்று அவர்களது தவறை தெளிவான முறையில் எடுத்துச் சொன்னதன் பின்பு, அவர்கள் தங்களது தவறை உணர்ந்து, குழந்தைகளை திருப்பிக் கொண்டு வந்து உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள். அத்துடன் மதீனாவுக்குச் செல்வதற்கும் அவர்கள் அனுமதி தந்தார்கள்.

ஆனால் எப்படி அவரால் தன்னந்தனியாக மதீனாவுக்குச் செல்ல முடியும்? அவருடன் மதீனா வருவதற்கு யாரும் தயாராக இல்லை. இறுதியாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்ட உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தன்னந்தனியாகவே தனது பிள்ளைகளுடன் ஒட்டகத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். தன்ஈம் என்ற இடத்திற்கு அருகே செல்லும் போது, அந்த வழியே வந்து கொண்டிருந்த உதுமான் பின் தல்ஹா அவர்களை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் சந்தித்தார்கள். இந்த உதுமான் பின் தல்ஹா அவர்கள் அப்பொழுது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.

உம்மு ஸலமா (ரழி) அவர்களைப் பார்த்த உதுமான் பின் தல்ஹா அவர்கள், உம்மு ஸலமா அவர்களே..! தன்னந்தனியாக நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார். உம்முடன் வருவதற்கு உமது குடும்பத்தில் எவருமா கிடைக்கவில்லை? என்று வினா எழுப்பிய அவருக்கு, நான் எனது இறைவனை முழுமையாகச் சார்ந்து இந்தப் பயணத்தைத் துவங்கினேன், அவனே எனது பாதுகாவலன், அவனே எதிரிகளிடமிருந்து என்னைச் சூழ்ந்து காக்கிறவன், அவனால் மட்டுமே என்னைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் பயணத்தைத் தொடங்கிவிட்டேன் என்று கூறினார்.

உதுமான் பின் தல்ஹா அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு துணைக்காக மதீனா வரை வரச் சம்மதித்தவராக, ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் உதுமான் பின் தல்ஹா அவர்களது இந்த உதவியைப் பின்னாளில் இவ்வாறு நினைவு கூரக் கூடியவராக இருந்தார். அந்த அறியாமைக்காலத்திலும் இப்படியும் ஒரு மனிதரா! இவரைப் போல நல்ல எண்ணம் கொண்ட மனிதரை நான் பார்த்ததே இல்லை, அவர் எனக்கு எந்தக் கெடுதலும் நினைக்கவில்லை, எந்த தொந்தரவும் செய்யவில்லை. எப்பொழுதெல்லாம் ஓய்வெடுக்க ஒட்டகத்தை நிறுத்தினாலும், ஒட்டகத்தைக் கட்டிப் போட்டு விட்டு, அவர் எங்களை விட்டு தூரப் போய் விடுவார். அதன் மூலம் எனக்கு அவர் சங்கோஜமும், சங்கடமும் ஏற்படுவதிலிருந்து என்னைப் பாதுகாத்தார். பின்பு பயணத்தைத் துவங்கும் போது, நானும் எனது பிள்ளைகளும் ஒட்டகத்தில் ஏறி உட்காரும் வரைக்கும் தூர நின்று கொண்டு விட்டு, நாங்கள் ஏறி முடித்ததும், ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விடுவார்.

சில நாட்கள் கழித்து மதீனாவின் வெளிப்புறப் பகுதியில் அமைந்த இடமான கூபாவிற்கு உம்மு ஸலமா (ரழி) அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கு பனூ அம்ர் பின் அவ்ஃப் கோத்திரத்தார்கள் அந்த இடத்தில் தான் குடியிருந்தார்கள். எனவே, அபூ ஸலமா (ரழி) அவர்களும் கூட இங்கு தான் இருக்க வேண்டும், நீங்கள் அவருடன் போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள் நான் திரும்பிப் போகின்றேன் என்று கூறி உதுமான் பின் தல்ஹா அவர்கள் திரும்பிப் போய் விட்டார்கள்.

உதுமான் பின் தல்ஹா அவர்கள் செய்த, இந்த காலம் அறிந்து செய்த உதவியானது மறக்கக் கூடியதல்ல, அவரது நற்பண்பு என்னை மிகவும் பாதித்து விட்டது என்று கூறுக் கூடியவர்களாக உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இருந்தார்கள்.

இறுதியாக, உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தனது கணவருடன் சேர்ந்து கொண்டார்கள், அளவில்லா சந்தோஷமடைந்தார்கள். இப்பொழுது உடைந்து சிதறிப் போன அபூ ஸலமா (ரழி) அவர்களின் குடும்பத்தவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தார்கள், குழந்தைகளும் தங்களது பெற்றோர்களின் கண்காணிப்பில் சந்தோஷமடைந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) ஏற்கனவே பத்ருப் போரில் கலந்து கொண்டு, சிறப்புப் பெற்றிருந்தார்கள், அதனைப் போலவே உஹதுப் போரிலும் கலந்து கொண்ட சிறப்புக்குரியவராகத் திகழ்ந்தார். உஹதுப்; போரில் அபூ உஸமா ஜஸ்மி என்பவர் எறிந்த கத்தி ஒன்று மிக ஆழமான காயத்தை அபூ ஸலமா (ரழி) அவர்களுக்கு ஏற்படுத்தியது, அதன் மூலம் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். மாதக் கணக்கில் அதற்கான மருத்துவம் செய்தும் பலனளிக்கவில்லை. மேற்புறத்தில் ஆறிய புண், உள்பகுதியில் சீழ் வைத்து அதிக ரணத்தைத் தந்து கொண்டிருந்தது.

உஹதுப் போர் முடிந்து சற்று இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், பனூ அஸத் குலத்தவர்கள் முஸ்லிம்களைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பனூ அஸத் குலத்தவர்களை எதிராகப் போர் செய்வதற்குத் தயாராகும்படியும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பனூ அஸத் குலத்தவர்களுக்கு எதிராகப் புறப்பட்ட படைக்குத் தலைமைத் தளபதியாக அபூ ஸலமா (ரழி) அவர்களைத் தான், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். இந்தப் படையில் மிகப் பெரும் படைத்தளபதிகளாக விளங்கிய அபூ உபைதா அல் ஜர்ராஹ் (ரழி) மற்றும் சஅத் பின் அபீவக்காஸ் (ரழி) போன்ற மிகச் சிறப்புப் பெற்ற தளபதிகளும் இடம் பெற்றிருந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) அவர்களிடம் இஸ்லாமியக் கொடியைக் கொடுத்து விட்டு, போர் உத்திகளை எவ்வாறு வகுத்துச் செயல்பட வேண்டும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.

பனூ அஸத் குலத்தவர்கள் வசிக்கக் கூடிய பகுதியின் எல்லைக் கோட்டுக்கருகே நமது படைகளை நிறுத்துங்கள். அவர்கள் வந்து தாக்குதவற்கு முன்பாக நீங்கள் அவர்களை தாக்க ஆரம்பித்து விடுங்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் அளித்து விடாதீர்கள் என்று கட்டளையிட்டார்கள்.

இப்பொழுது, அபூ ஸலமா (ரழி) அவர்களது தலைமையில் 150 பேர் கொண்ட இஸ்லாமியப் படை கிளம்பியது. பனூ அஸத் குலத்தவர்களது எல்லைக் கோட்டுக்கருகே வந்த இஸ்லாமியப் படை சற்றும் தாமதிக்காது தங்களது தாக்குதலைத் தொடுத்தார்கள். உஹதுப் போரின் வெற்றிக்குப் பின், நடந்த இப்போரில் முஸ்லிம்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. ஏனெனில் சுற்றி உள்ள யூத மற்றும் எதிரிகளுக்கு இதன் மூலம் சிறந்த பாடத்தையும், முஸ்லிம்களைப் பற்றிய அச்ச உணர்வையும் ஊட்ட வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இருந்த காரணத்தால், தங்களது முழு பலத்தையும் பிரயோகித்து, வெற்றி அல்லது வீர மரணம் என்ற உயர்ந்த நோக்கத்தில் போரை, வெற்றியை நோக்கிக் கொண்டு சென்ற முஸ்லிம்கள், இறுதியில் பனூ அஸத் கோத்திரத்தாரை வேரறுத்து வெற்றி வாகை சூடினார்கள்.

இந்தப் போரில் தனக்கு ஏற்பட்ட காயத்தையும் மறந்து தன் மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்காகவும், இறைத்திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் அபூ ஸலமா (ரழி) அவர்கள் போரிட்டார்கள். அவர்களது வாள் அனைத்துப் பக்கமும் சுழன்று, எதிரிகளை நிலைகுலைய வைத்தது. இறுதியில், முஸ்லிம்களின் வீரத்திற்கு முன்னால் மண்டியிட்டு, தோற்று ஓடினார்கள் பனூ அஸத் குலத்தவர்கள்.

இப்பொழுது ஏற்கனவே காயம் பட்ட இடத்தில் இருந்து ரணம், வலியாக மாறி, அந்த இடத்தில் இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. முஸ்லிம்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அதிகமான கனீமத் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மதீனாவை விட்டுக் கிளம்பி 29 நாட்கள் கழித்து மீண்டும் ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் 8 ம் தேதியன்று முஸ்லிம்கள் மீண்டும் மதீனாவிற்குள் நுழைந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) அவர்களின் காயத்தைப் பார்த்த உம்மு ஸலமா (ரழி) மிகுந்த மன வேதனை அடைந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) மரணம்

அபூ ஸலமா (ரழி) அவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் படுக்கையில் கிடக்கும் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ ஸலமாவைப் பார்க்க வீட்டிற்கு வந்தார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்களுக்கு மரணம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபூ ஸலமா (ரழி) அவர்களின் மீது கையை வைத்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ ஸலமா (ரழி) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள், இன்னும் அபூ ஸலமா (ரழி) அவர்களும் இறைவனிடம் பிரார்தித்தார்கள், இறைவா! என்னைப் போலவே என்னுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கவனித்துக் கொள்கின்ற ஒருவரை, துணைவராக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள். இன்னும் உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு கவலையையும், கடினமான வாழ்வையும் தராத ஒருவரை அவருக்கு துணைவராக ஆக்கி வைப்பாயாக..! என்றும் தனது மனைவிக்காகப் பிரார்த்தித்தார்கள்.

இந்தப் பிரார்த்தனைக்குப் பின்பு, அபூ ஸலமா (ரழி) அவர்களை மரணம் வந்தடைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கரங்களால் அபூ ஸலமா (ரழி) அவர்களின் கண்களை மூடினார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனக்காகப் பிரார்த்தித்ததை அறிந்த உம்மு ஸலமா (ரழி) அவர்கள், அபூ ஸலமாவை விட மிகச் சிறந்த கணவர் யார்? என்று ஆச்சரியப்பட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நான் எனக்காக இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கேட்டார்கள்.

நீங்கள் உங்களுடைய மற்றும் அபூ ஸலமா (ரழி) அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காக இறைவனிடம் துஆச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும்படி இறைவனிடம் முறையீடு செய்து கொள்ளுங்கள் என்ற பிரார்த்தனையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவாறு நான் பிரார்த்தித்தேன், இறைவன் என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். கணவர் இறந்ததன் பின்பு முஸ்லிம் பெண்கள் அனுஷ்டிக்கக் கூடிய அந்த இத்தா என்ற காத்திருப்புக் காலம் முடிவடைந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் திருமணம்

இப்பொழுது இறைவன் உம்மு ஸலமா (ரழி) அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டதற்கிணங்க, முதலில் அபுபக்கர் (ரழி) அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் ஒரு தூதுவரை அனுப்பி, அவர்களை மணந்து கொள்ளத் தயாராகக் இருப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அபுபக்கர் (ரழி) அவர்களை மணந்து கொள்ள மறுத்து விடுகின்றார்கள்.

பின்பு உமர் (ரழி) அவர்கள் மணந்து கொள்ளத் தயாராக இருந்தும், அதனையும் மறுத்து விடுகின்றார்கள்.

பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தான் மணக்கத் தயாராக இருப்பதாகச் செய்தி சொல்லி அனுப்பி விடுகின்றார்கள்.

இப்பொழுது உம்மு ஸலமா (ரழி) அவர்களை மணந்து கொள்ள மூன்று நபர்கள் காத்திருக்கின்றார்கள். தலை வெடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு..! அதற்குக் காரணமும் இருந்தது.

முதலாவதாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளை நான் உதாசிணம் செய்தால், நான் செய்து வைத்திருக்கின்ற நற்செயல்கள் அழியக் காரணமாகி விடுமே..!

இரண்டாவதாக, நானோ வயதான பெண்.

மூன்றாவதாக, எனக்கோ அதிகமான பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் நான் எந்த முடிவை எடுப்பது என்று திணறிக் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஆலோசனை கூறினார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்களே..! நீங்கள் அவசரப்பட வேண்டாம். இறைவனிடம் முறையிட்டு, இதற்கு சரியான தீர்வை வழங்குமாறு அவனிடமே உதவி கோருங்கள், நானும் உங்களுக்காக துஆச் செய்கின்றேன் என்று கூறி அவர்களது மன உலைச்சலுக்கு தீர்வு சொன்னார்கள்.

இன்னும் உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) இவ்வாறு பதில் கூறினார்கள். நீங்கள் வயதான பெண்மணி என்றால் நானும் வயதானவன் தான், பிள்ளைகளைப் பொறுத்தவரை நீங்கள் கவலைப்பட வேண்டாம், அவர்களுக்கு நான் பாதுகாவலனாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கவும் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்று வாக்குறுதியளித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த பதிலால், மனம் மகிழ்ந்த உம்மு ஸலமா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணக்கச் சம்மதித்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார்களுடன் இணைவதை மிகப் பெரும் பாக்கியமாகக் கருதினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்டதன் மூலம் அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது மனைவிக்குச் செய்த பிரார்த்தனைகள் நிறைவேறியது. ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும், உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கும் திருமணம் நடந்தது.

அன்னையின் சிறப்புக்கள்

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் அறிவிப்பின்படி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளின் அஸர் தொழுகையின் பின்பு தனது மனைவிமார்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களின் நலம் மற்றும் தேவைகள் குறித்து விசாரித்து வரக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் மனைவிமார்களின் வீடுகளுக்குப் புறப்படும் பொழுது, எங்களில் மூத்தவரான உம்மு ஸலமா (ரழி) அவர்ளின் வீட்டிலிருந்து ஆரம்பித்து, இறுதியில் எனது (ஆயிஷா (ரழி)) வீட்டோடு முடித்துக் கொள்வார்கள்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் அழகு, கல்வி மற்றும் ஞானத்தின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் சிறந்த இடத்தினை வகித்தார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, தங்களுடன் கொண்டு வந்திருக்கும் பலிப் பிராணிகளைக் அறுத்துப் பலியிட்டு விட்டு, தங்களது தலைமுடியை சிரைத்துக் கொள்ளும்படி தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை உடனே செயல்படுத்துவதில் தோழர்கள் சற்று ஆர்வங்குன்றி இருந்தார்கள் என்பதோடு, யாரும் பலிப்பிராணிகளை அறுக்காமல் தாமதித்துக் கொண்டிருந்தார்கள்.

நிலைமையைப் புரிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் இந்தப் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசனை கலந்த பொழுது அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்,

நீங்கள் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம். முதலில் நீங்கள் சென்று உங்களது பலிப்பிராணிகளை நீங்கள் அறுத்துப் பலியிடுங்கள். நீங்கள் அதனைச் செய்த பின்பு, உங்களது தோழர்கள் உங்களுக்குக் கட்டுபட வேண்டியது அவசியமாகி விடும் பொழுது, அவர்கள் தானாகவே வந்து அவரவர் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட்டு விட்டு, முடிகளை சிரைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் என்று ஆலோசனை கூறினார்கள்.

அதன்படியே நடந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கொடுத்த ஆலோசனை நன்கு வேலை செய்வதைப் பார்த்தார்கள். தனது தோழர்களும் இப்பொழுது தங்கள் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட ஆரம்பித்து விட்டதுடன், அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் அவர்கள் கல்வியறிவு பெற்றிருந்ததுடன், ஏழைகளுக்கும் இன்னும் தேவையுடையவர்களுக்கும் உதவி செய்யக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலங்களில் பல முறை திருமறையின் வசனங்கள் அருள் செய்யப்பட்டிருக்கின்றன. சூரா அஹ்ஸாப் ன் இந்த வசனங்கள் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;. முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான
். (33:33)

இன்னும் சூரா அத் தவ்பா வின் பல வசனங்கள் அன்னையவர்களின் இல்லத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.

வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்ட காரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்
. (9:102)

இன்னும் இந்த வசனமும்,

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது – அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் – ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான
். (9:118)

மேலே உள்ள இறைவசனங்கள், கஅப் இப்னு மாலிக் (ரழி), ஹிலால் பின் உமைய்யா (ரழி), மராரா பின் அர்ராபிஆ (ரழி) ஆகியோர்கள், இறைவனிடம் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து கொண்டதன் பின்பு, அதன் பலனாக அவர்களை மன்னித்து மேற்கண்ட வசனத்தை இறக்கியருளினான். மேலே உள்ள மூன்று தோழர்களும், எந்தவித நியாயமான காரணமுமின்றி தபூக் யுத்தத்திற்குச் செல்லாமல் மதினாவிலேயே தங்கி விட்டார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி, இந்த மூன்று நபர்களுடன் யாரும் எந்தவித உறவும், கொடுக்கல் வாங்கல், பேச்சு வார்த்தை எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மதீனத்து முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மூன்று பேரும், இறைவனிடம் மன்றாடி முறையிட்டு பாவ மன்னிப்புத் தேடியதன் பின்பு, இறைவன் இந்த மூன்று பேர்களையும் மன்னித்துத் தான் மேற்கண்ட வசனத்தை இறக்கியருளினான்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களது இல்லத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பொழுது தான், மேற்கண்ட வசனம் அருள் செய்யப்பட்டது. இரவின் இறுதிப் பகுதியில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்த மூன்று நபர்களின் பாவ மன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொண்டான் என்று அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

இதனைக் கேட்ட அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இந்த நற்செய்தியை அவர்களிடம் தெரிவிக்கச் சொல்வோமா? என்று கேட்டார்கள். இந்த அகால நேரத்தில் அவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம். காலை பஜ்ருத் தொழுகைக்குப் பின்பு யாரிடமாவது சொல்லி அனுப்பி, அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வோம் என்று கூறினார்கள். இந்த செய்தியைக் கேட்ட அந்த மூன்று பேரும் மகிழ்ச்சி அடைந்தார்கள், இன்னும் அனைத்து நபித்தோழர்களும் சந்தோஷமடைந்தார்கள்.

இன்னும் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பல போர்களுக்குச் சென்றுள்ளார்கள். பனீ முஸ்தலக் போர், தாயிஃப் போர், கைபர், ஹுனைன் மற்றும் மக்கா வெற்றியின் பொழுதும் அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பொழுதும் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் பைத்அத்தும் செய்து கொண்டார்கள்.

சல்மான் அல் ஃபார்ஸி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உரையாடுவதற்காக வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு தஹிய்யா கல்பி (ரழி) என்ற தோழரும், இன்னும் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அங்கிருந்தார்கள். பேசி முடித்த பின், சற்று முன் உரையாடி விட்டுச் சென்ற நபர் யார் என்று தெரியுமாக இருந்தால் கூறுங்கள் என்று கூறினார்கள்.

அவர் உங்களது மதிப்பிற்குரிய தோழர் தஹிய்யா கல்பி (ரழி) அவர்கள் என்று அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள். அதன் பின், இல்லை..! வந்தவர் ஜிப்ரீல் (அலை) அவர்களாவார்கள், அவர் தஹிய்யா கல்பி (ரழி) அவர்களுடைய உருவத்தில் வந்திருந்தார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் மார்க்க விசயங்களில் நல்ல கல்வி ஞானம் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளில் 387 நபிமொழிகளை மனனமிட்டு வைத்திருந்தார்கள். இஸ்லாமிய சட்டங்களில் உறவு முறைகள் குறித்தும், தத்தெடுத்தல் மற்றும் மணவிலக்கு குறித்தும் நுணுக்கமான சட்டங்களை அறிந்து வைத்திருந்தார்கள். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அப்துல்லா பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அன்னையிடம் வந்து கலந்தாலோசனை செய்து விளக்கம் பெற்றுக் கொள்வார்கள்.

இஸ்லாமியச் சட்ட வழங்கல்களில் மற்றும் தீர்ப்பு வழங்குவதில் தனிச்சிறப்புப் பெற்ற நபித்தோழர்கள் பலர் அன்னையின் பெயரால் பல மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். அன்னையின் பெயரால் அறிவிக்கப்படும் பல சட்டத்தீர்ப்புகளைக் கொண்டு, அந்தத் தீர்ப்புகள் செல்லத்தக்கவை என்று அவர்கள் சான்று பகர்ந்திருக்கின்றார்கள்.

நீதித்துறையில் தீர்ப்பு வழங்கும் தகுதி பெற்ற நபித்தோழர்களின் பட்டியலில் அன்னையவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். அவர்களாவன :

1. உம்மு ஸலமா (ரழி)

2. அனஸ் பின் மாலிக் (ரழி)

3. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரழி)

4. அபூ ஹுரைரா (ரழி)

5. உதுமான் பின் அஃப்பான் (ரழி)

6. அப்துல்லா பின் அம்ர் பின் ஆஸ் (ரழி)

7. அப்துல்லா பின் ஜுபைர்(ரழி)

8. அபூ மூஸா அல் அஷ்அரீ (ரழி)

9. ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரழி)

10. ஸல்மான் ஃபார்ஸி(ரழி)

11. ஜாபிர் பின் அப்துல்லா(ரழி)

12. முஆத் பின் ஜபல் (ரழி)

13. அபுபக்கர் சித்தீக் (ரழி)

14. தல்ஹா பின் உபைதுல்லா(ரழி)

15. ஸுபைர் பின் அவ்வாம் (ரழி)

16. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)

17. இம்ரான் பின் ஹுஸைன் (ரழி)

18. உபாதா பின் ஸாமித் (ரழி)

19. முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரழி)

மொழித்துறையிலும் அன்னையவர்கள் சிறந்து விளங்கினார்கள். அவருக்கு நிகராக இருந்தவர்கள் மிகச் சிலரே. அவர்கள் பேசும் பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டே பேசுவார்கள், அவர்களது கருத்துக்கள் தெளிவான உச்சரிப்புடன் வெளிப்படும். இன்னும் அவர்களது எழுத்துக்களும், நல்ல மொழிநடையைக் கொண்டதாக இருக்கும்.

அன்னையவர்கள் தனது 84 ஆம் வயதில் ஹிஜ்ரி 62 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள். நேர்வழி பெற்ற கலீபாக்களின் ஆட்சியை கண்டு களிக்கும் நற்பேறு பெற்றவர்களாக இருந்தார்கள். அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரழி) அவர்கள் அன்னையவர்களில் முதலாவது மரணமடைந்தவர்கள் என்றால், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அன்னையர்களிலேயே இறுதியாக மரணமடைந்தார்கள். யஸீத் பின் முஆவியா அவர்களது ஆட்சியின் பொழுது தான் அன்னையவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் மற்ற தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

(… அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்.
(89:27-30)

நன்றி:- http://www.ottrumai.net/

 • அண்ணல் நபி (ஸல்)
 • அல் குர்ஆன்
 • அல்லாஹ்வின் திருநாமங்கள்
 • அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
 • அஹ்லுல் பைத்
 • இஸ்லாம் இலகுவான மார்க்கம்
 • ஈத் முபாரக்
 • உம்ரா
 • உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்
 • எது முக்கியம்?
 • கடமையான குளிப்பு
 • கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்
 • குழந்தைகள்
 • சோம்பல் இஸ்லாத்தின் பார்வையில்
 • ஜனாஸா (மய்யித்)
 • ஜும்ஆ
 • துஆ
 • தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்
 • தொழுகை
 • நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்
 • நல்லறங்கள்
 • நோன்பு
 • பர்தா
 • பார்வை
 • பிழை பொருத்தருள் யாஅல்லாஹ்
 • பெற்றோர்
 • மனைவி
 • முன்மாதிரி முஸ்லிம்
 • யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?
 • வலிமார்கள்
 • வாழ்வின் முன்னேற்றத்திற்கு
 • விதியின் அமைப்பு
 • ஷிர்க் என்றால் என்ன?
 • ஸலாம் கூறுவதன் சிறப்பு
 • ஸுன்னத் வல் ஜமாஅத்
 • ஹஜ்
 • Sadaqa
 • Sadaqat-Ul-Jariyah
 • பிரிவுகள்:இஸ்லாம், உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,