தொகுப்பு

Archive for the ‘பகுதி-16 டாக்டரிடம் கேளுங்கள்’ Category

பகுதி-16 டாக்டரிடம் கேளுங்கள் -[கர்ப்பப்பை கட்டிகள், குளியல் மயக்கம்]


“கர்ப்பப்பையை கலங்கடிக்கும் கட்டிகள்… கரையுமா?”

“என் மருமகளுக்கு கர்ப்பப் பையில் ஃபைப்ராய்டு (Fibroid) கட்டிகள் இருப்பதாகவும், இதனால் கருவுறுதல் பதிப்புக்குள்ளாகும் என்றும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றாவிட்டால், கர்ப்பப்பையையே அகற்ற வேண்டியிருக்கும் என்றும் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இந்த விஷயத்தில் சமயோசிதமாக நாங்கள் செய்யவேண்டியது என்ன?”

டாக்டர் சாமுவேல் தேவகுமார், பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர், பெரம்பலூர்:

“பெரியளவுக்குப் பிரச்னை தராத சாதாரண கட்டிகள், கேன்சர் போன்ற அசாதாரண கட்டிகள் என்று கட்டிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஃபைப்ராய்டு கட்டிகள், இதில் முதல் ரகத்தில் அடங்கும்.

வயது வந்த எந்தப் பெண்ணும் இந்தக் கட்டிகளுக்கு இலக்காக நேரிடலாம். அதிகப்படியான அடிவயிற்று வலி, மிகையான மாதப்போக்கு, அதிக நாட்களுக்கு மாதவிடாய் நீடிப்பது போன்றவை ஃபைப்ராய்டு கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள். ஸ்கேன் மூலம் இவை உறுதிபடுத்தப்படும்.

கர்ப்பப்பையை பொறுத்தவரை பொதுவாக மூன்று இடங்களில் இந்தக் கட்டிகள் தோன்றலாம். முதலாவதாக, கர்ப்பப்பை வெளி சுவரில் தோன்றும். இவை வளரும்போது கருவுறுதலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. இரண்டாவதாக, கருப்பைக்குள்ளிருக்கும் ‘எண்டோமீட்ரியம்’ (Endometrium) உறைக்கும், கருப்பை உள்சுவருக்கும் இடையே இந்தக் கட்டிகள் தோன்றும். கட்டியின் வடிவத்தைப் பொறுத்து, கருவளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடும். மூன்றாவதாக, ‘எண்டோமீட்ரிய’ உறைக்குள் இவை தோன்றும். இவை, அளவில் பெரிதாகும்போது கருவளர்ச்சியை ஒரு கட்டத்துக்கு மேல் வளரவிடாமல் தடுத்து, அபார்ஷன்கூட ஏற்படலாம்.

எனவே கட்டியின் அளவு, வளர்ச்சி, கருவளர்ச்சிக்கு இவை இடைஞ்சலாக இருப்பது போன்ற எல்லா விஷயங்களையும் அலசி, அவற்றை அகற்ற வேண்டியதன் அவசியத்தை மருத்துவர் முடிவு செய்வார். இந்த ஆபரேஷனும் தற்போது லேப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படுவதால் கர்ப்பப்பைக்கோ, கருவுறுதலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. கருப்பையே தாங்காத அளவுக்கு அதிகப்படியாக இதன் வளர்ச்சி அமைந்தால் மட்டுமே கருப்பை அகற்றம் செய்யலாம். அரிதாக மட்டுமே இந்தக் கருப்பை அகற்றம் பரிசீலிக்கப்படுகிறது.

எனவே, உங்கள் மருமகளின் கர்ப்பப்பைக்கு எந்த இடையூறுமின்றி லேப்ராஸ்கோப்பி மூலம் ஃபைப்ராய்டு கட்டிகளை நீக்கி, கருவளர்ச்சிக்கான தடைகளை களையலாம்… கவலை வேண்டாம்!”

“எட்டு வயதாகியும் என் மகன் குளியல் என்றாலே அழுது அழிச்சாட்டியம் செய் கிறான். அதிலும் சமீபகாலமாக தலையில் தண்ணீர் ஊற்றினாலே ஓரிருமுறை மயக்கம் வந்து விழுந்துவிட்டான். அதிலிருந்து அவனை குளிப்பாட்டுவது என்றாலே பயமாக இருக்கிறது. இதற்கு எப்படித் தீர்வு காண்பது?”

டாக்டர் சுரேஷ் செல்லையா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:

“உங்களின் மகனின் குளியல் மயக்கம், பெரும்பாலான குழந்தைகளிடம் அடையாளம் காணப்படுவது தான். குழந்தைக்கு குளியலை குதூகலமூட்டுவதாகவும், சௌகரியமானதாகவும் பழக்க வேண்டும். ஆனால், குழந்தை பொறுக்க முடியாத சூட்டில் வெந்நீரை ஊற்றுவது, வாய்க்குள் கைவிட்டு கோழை எடுப்பது, மூக்கு, கண்களை சுத்தம் செய்கிறோம் என்று விபரீதத்தில் இறங்குவது, குளிப்பாட்டும்போது தாறுமாறாக அழுத்திப் பிடிப்பது போன்றவை தவறானவை.

அதேபோல, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைக்கும்போது, எண்ணெய்த் திவலைகள் மூச்சில் கலந்துவிடும் ஆபத்துக்கு வாய்ப்புஇருக்கிறது. குளிப்பாட்டியபின் சாம்பிராணி போடுகிறேன் என்று புகை மண்டலத்துக்குள் சின்ன நுரையீரலை திணறவைப்பதும் கூடாது. இந்த சித்ரவதைப் படலங்களால் குழந்தைகள் பிஞ்சு பருவத்திலேயே குளியலை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒழுங்காக பழக்கிவிட்டால் ஐந்து, ஆறு வயதுக்கு மேல் குழந்தை சுயமாக குளியலை மேற்கொள்ள தயாராகிவிடுவார்கள். அப்போது மேற்பார்வையை மட்டும் தந்தால் போதும்.

இதையெல்லாம் தாண்டியும் குழந்தை குளிப்பதற்கு அடம் பிடிக்கிறது என்றால், ‘ரிஃப்ளெக்ஸ் எபிலெப்ஸி’ (Reflex Epilepsy) வகையைச் சார்ந்த வலிப்பு நோய்கூட காரணமாக இருக்கலாம். உடனடியாக குழந்தை நல மருத்துவர் அல்லது மூளை மற்றும் நரம்பியல் மருத்துவரை அணுகுங்கள். மூளையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று ஸ்கேன் மற்றும் இ.சி.ஜி மூலம் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அதிலெல்லாம் பிரச்னையில்லை என்று தெரிந்தால், கவலையை விட்டுத்தள்ளலாம்.”
நன்றி:- டாக்டர் சாமுவேல் தேவகுமார், பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர், பெரம்பலூர்:

நன்றி:- டாக்டர் சுரேஷ் செல்லையா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்